“லைஃப் ரொம்ப ஃபாஸ்ட்டா மூவ் ஆகுது அருள். வீட்ல மேரேஜ் பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆதர்ஷ் ஓகே தான், ஆனா மனசுல ஏதோ ஒரு லோடிங் எர்ரர். என் இம்பார்ட்டண்ட் டே-ல நீ இல்லாம நான் எதையும் ஸ்டார்ட் பண்ண மாட்டேன். Hope you get the hint. நீ பேசவேண்டாம். இந்த லெட்டருக்குப் பதில் கூட சொல்லவேண்டாம். ப்ளீஸ்! கல்யாணத்துக்கு வாயேன்.”
–வானதியின் கடிதம்…
பனிக்காலத்து மாலை நேரத்தில் ஐவி மேனர் ஃபேரிடேல் கதைகளில் வரும் கோட்டைகளைப் போல அலங்காரமாய்க் காட்சியளித்தது. தர்மலிங்கம் – மெகன் பிரவுனின் வரவேற்புக்கான அலங்காரம் அது. ஆம்! அன்று காலையில்தான் ஒரு பழமையான தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது திருமண வரவேற்பானது ஐவி மேனரின் பிரம்மாண்டமான ஹாலில் ஆடம்பரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
லண்டனின் மேல்தட்டு வர்க்கத்தினரான மருத்துவர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், தர்மலிங்கத்தின் தொழில்முறை நண்பர்கள், மெகனின் உறவுக்காரர்கள் என அனைவரும் மேற்கத்திய உடைகளில் ஆஜராகியிருந்தார்கள்.
ஸ்னோட்ராப்ஸ் மலர்களும் மல்லிகையும் கலந்த அலங்காரத்தில் ஐவி மேனர் நறுமணத்தில் குளித்துக்கொண்டிருக்க, அதை இன்னும் சுகந்தமாக்கும் விதமாய் தர்மலிங்கம் – மெகனின் ஜோடி பொருத்தம் அமைந்திருந்தது. ஆங்காங்கே அழகுற அமைக்கப்பட்ட விளக்கு அலங்காரங்கள் அந்த இடத்தை மாயாஜால உலகமாக மாற்றிக்கொண்டிருந்தன.

மணமக்கள் வரவேற்பின் சம்பிரதாயமாய்க் கேக் வெட்டினார்கள். ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தார்கள். இந்தக் காட்சிகள் அனைத்தையும் உதட்டோரம் இனித்த புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் அருள்மொழி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என் வாழ்க்கையோட இருண்ட காலங்கள்ல எனக்கு ஒளியா இருந்த இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் திருமண பந்தத்துல பிணைக்கப்பட்ட இந்தத் தருணத்தை முழு சந்தோஷத்தோட கொண்டாடலாம்! பெஸ்ட் விஷஸ் மாமா அண்ட் ஆன்ட்டி மெகன்.”

மனதார வாழ்த்தினான் அவன். அவன் சொன்ன வார்த்தைகள் எதுவும் பொய்யில்லை. மெய்யாகவே அவனை அரவணைப்போடு நடத்தியவர் தர்மலிங்கம். மருத்துவ உதவிக்காக வந்தவனை நோயாளி சிறுவனாக நடத்தாமல் அன்பாய்ப் பேசி அவனுக்குள் இருந்த இறுக்கத்தை ஓரளவுக்குப் போக்கடித்தவர் மெகன். அவர்களின் இணைவில் அவனுக்கு ஆனந்தமே!
மெடிவல் ஐரோப்பிய கலாச்சாரத்தில் ‘பொக்கே டாஸ்’ (Bouquet toss) என்று ஒரு பழக்கம் உண்டு. மணமகள் தனது கையிலிருக்கும் பொக்கேயைத் திரும்பி நின்று தூக்கி வீசுவார். அவரது மணமாகாத தோழிகள், உறவுக்காரப் பெண்கள் கூட்டமாக நின்று அதை கேட்ச் பிடிக்க முயலுவார்கள். எந்தப் பெண்ணின் கைகள் பொக்கேயைச் சிறைபிடிக்கிறதோ அந்தப் பெண் இல்லறச்சிறையில் சீக்கிரம் மகிழ்ச்சியாக அடைபடுவார் என்பது ஒரு நம்பிக்கை. தற்போது இந்தச் சம்பிரதாயத்தை மணமகனும் செய்வது வழக்கமாகிவிட்டது.
மெகன் வீசிய பொக்கேயை வந்திருந்த இளம்பெண்களில் ஒருத்தி பிடித்துவிட, பெண்கள் கூட்டத்தில் மகிழ்ச்சி ஆரவாரம். அடுத்து தர்மலிங்கத்தை வீசச் சொன்னார்கள் இளைஞர்கள்.
தர்மலிங்கத்தின் அண்ணன் மகனான அகத்தியனும் அந்தத் திருமணத்துக்கு வருகை தந்திருந்தான். அவன் அருள்மொழியை அந்த இளைஞர் கூட்டத்தோடு அனுப்பிவைத்தான்.
தர்மலிங்கம் பொக்கேயை வீசிய நொடியில் பூச்செண்டானது காற்றில் ஒரு அழகான வளைவை உண்டாக்கிப் பறந்து வர, அதைக் கைப்பற்ற ஆர்வமாய் நின்ற ஆடவர்கள் ஆர்ப்பரித்தார்கள். கைகளை உயர்த்தினார்கள். அருள்மொழிக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்க, உயரமாய் எம்பி தங்களை நோக்கி வந்த பொக்கேயைக் கைப்பற்ற முயன்றான். அவனது முயற்சி வெற்றியடைய பொக்கே அவனது கரத்தைச் சரணடைந்தது.
ஒரே ஆரவாரம் இளசுகள் கூட்டத்தில்! தர்மலிங்கமும் அகத்தியனும் ஓடோடி வந்தார்கள். தர்மலிங்கம் வயதை மறந்து குதூகலத்தோடு அருள்மொழியைத் கட்டியணைத்துக்கொண்டார்

“அடுத்த மாப்பிள்ளை ரெடியாயாச்சு” என்று அவர் குதூகலிக்க, அகத்தியனும் அவரது குதூகலத்தில் இணைந்து அதை இரட்டிப்பாக்க, அருள்மொழிக்கோ இதெல்லாம் விளையாட்டில் கிடைத்த வெற்றி என்ற எண்ணம் மட்டுமே!
அவனது கையிலிருந்த பூச்செண்டில் மல்லிகை, லில்லி, ஊதா நிறத்தில் ஏதோ ஒரு பெரிய மலர் எனக் கூட்டமாக இருந்த மலர்களில் மல்லிகை மட்டும் அவனுக்கு ஒருத்தியை நினைவூட்டியது.
“ம்மா! மல்லிப்பூ வேண்டாம். எனக்குத் தலை வலிக்கும்”
போனிடெயிலில் மல்லிகைச்சரத்தை வைக்கப்போன அன்னையைத் தடுத்து முகத்தைச் சுளிக்கும் பன்னிரண்டு வயது வானதி தான் அவள். அந்தப் பூச்செண்டால் தனது தலையில் அடித்துக்கொண்டான்.
“என்னடா தம்பி? மனசுல யாரையும் வச்சிருக்கியா?”
அகத்தியன் விளையாட்டாக வினவியதும் மறுப்பாய்த் தலையசைத்தான் அருள்மொழி. வரவேற்பு முடிந்து இரவு விருந்தும் நிறைவுற்றது.
“உன்கிட்ட நிறைய பேசணும் அருள். நீ சொன்ன விவகாரத்தையும் சேர்த்து”
பீடிகையோடு வந்த அகத்தியனுடன் கணப்பின் அருகே அமர்ந்து பேச ஆரம்பித்தான் அருள்மொழி.
“நீ சொன்ன மாதிரி தலைவரோட மகன் கூட அந்தப் பொண்ணு ரொம்ப நெருக்கமா இருக்குறதா அவரோட பிரண்ட்ஸ் பேசிக்குறாங்க. அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்கச் சொல்லிருக்கேன். ஒருவேளை அவங்களுக்கு இடையில வேற விதமான உறவு இருந்தா கட்சிக்கு அது பெரிய தலைவலி.”
அருள்மொழி மோவாயை வருடிக்கொண்டான்.
“ஆதித்யனோட சொந்த வாழ்க்கை கட்சிக்குத் தலைவலியா மாறுதுனா அந்தத் தலைவலியத் தூக்கி எறியுறதுதானே சிறந்த தீர்வா இருக்க முடியும்?” என நிதானமாக வினவினான் அவன். அகத்தியன் சட்டெனப் பதிலளிக்க முடியாமல் தடுமாறினான்.
“என்ன இருந்தாலும் தலைவரோட மகனாச்சே!”
“கட்சியும் கட்சித்தலைமையும் ஜெயசந்திரன் வீட்டுச் சொத்தா என்ன?” அருள்மொழி அதிரடியாகக் கேட்க, மீண்டும் திணறல் அகத்தியனிடம்.
கோணலாய்ச் சிரித்த அருள்மொழி குரலைத் தணித்துக்கொண்டான்.
“கட்சி எல்லாருக்குமானது. அந்தக் கட்சில இருக்குற ஒவ்வொரு தொண்டனுக்கும் அதுல உரிமை இருக்கு. அந்தக் கட்சியை வளர்க்க ஜெயசந்திரன் மட்டும்தான் போராடுனாரா? அவர் கூட எங்கப்பா நிக்கல? உங்கப்பா நிக்கல? உங்க சித்தப்பா நிக்கல? ஏன் ஜெயசந்திரன் இத்தனை பேர் போராட்டத்தோட பலனைத் தனியாளா அனுபவிக்குறார்? உங்களைத் தலைமைக்கு எதிரா தூண்டுறதா நினைக்காதிங்கண்ணா. ஜெயசந்திரன் தலைமைக்குத் தகுதியான அரசியல்வாதி. ஆனா அவரோட மகன்? அரசியல்ல அவனுக்கு என்ன தெரியும்? உங்க வயசுதான் அவனுக்கும். ஆனா அரசியல்ல நீங்க கத்துகிட்டதுல ஒரு சதவிகிதம் அறிவு அவனுக்கு இருக்குமா? வாரிசுங்கிற ஒரே காரணத்தால அவன் அடுத்த தலைவர் ஆனா அது கட்சிக்கு அசிங்கம்.”
ஆர்தர் சற்று முன்னர் வைத்து விட்டுப் போன காக்டெய்லை அருந்தியபடி சொன்னவன், அகத்தியனின் முகம் மாறுவதைக் கவனித்தான்.

தூண்டிவிட வேண்டியது மட்டும்தான் அவனது வேலை. எரியவேண்டியது அகத்தியனின் மூளை! அது எரியும் என்ற நம்பிக்கையுடன் அன்றைய இரவில் நன்றாக உறங்கினான் அருள்மொழி.
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு முன்னரே அகத்தியன் இந்தியாவுக்குக் கிளம்பிவிட்டான்.
ஐவி மேனரில் மெகன் பிரவுனின் அன்பான ஆதிக்கம் பரவியது. அவருக்கு அங்கிருந்த அனைவரும் பழக்கமானவர்கள் என்பதால் எவ்வித உரசலும் நேரவில்லை. தர்மலிங்கமும் மெகனும் அருள்மொழியை முன்பு போலவே அன்போடு நடத்தினார்கள். சொல்லப்போனால் அந்த கிறிஸ்மஸ் அவனுக்கு வித்தியாசமான கிறிஸ்மஸாகவே இருந்தது.
மறுநாள் இந்தியாவுக்கு விமானம் ஏறவேண்டும். அதிகாலையில் சென்னை விமானநிலையத்தை அடையும் என்பதால் அட்சரனிடம் மட்டும் தனது வருகை பற்றி தெரிவித்திருந்தான் அருள்மொழி.
“நான் வர்றதைப் பத்தி நீ யார் கிட்டவும் சொல்லிக்கவேண்டாம். ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும் எல்லாருக்கும். ஐ ஹேவ் அ பிளான் அச்சு” என்று சொல்லிவிட்டான் அவன்.
தர்மலிங்கத்திடம் கூட புதுடெல்லிக்குச் செல்வதாகத்தான் சொல்லியிருந்தான். அவர் மூலம் நிச்சயம் ஜெயசந்திரனிடம் இந்தச் செய்தி போய் சேருமென்ற நம்பிக்கை. தன்னைத் திடுமென நேரில் பார்த்ததும் அவரது முகத்தில் வரும் அதிர்ச்சியைப் பரிபூரணமாகக் கண்டு ரசிக்கும் ஆர்வம் அவனுக்குள்!
கிளம்புவதற்கு முந்தைய இரவில் தமிழக அரசியல் சூழலை யூடியூப், இதர ஊடகங்கள் மூலமாக அலசிவிட்டான். ஜெயசந்திரனின் ஆட்சிக்கு ஒன்றிய அளவில் அழுத்தம் அதிகமெனப் புரிந்தது. கூடவே ஆதித்யனைக் கட்சிக்குள் கொண்டு வந்த விவகாரத்தில் கட்சிக்குள் இருக்கும் பலருக்கு அதிருப்தி என்பதையும் அறிந்துகொண்டவனுக்கு அவனது இலட்சியம் தெளிவானது.
நம்பிக்கையோடு ஹீத்ருவில் விமானம் ஏறியவன், அலைக்கழிப்பும் அதிர்வுமாகத் தமிழக மண்ணை மிதித்தான் காலையில். அங்கே அவனுக்காகப் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தான் அட்சரன்.
அவன் அட்சரனைப் பார்த்ததும் இருவரும் திகைத்துப் போய் நின்றார்கள். இணையத்தில் பேசி உரையாடிய பொழுதுகளின் பாதிப்பு அது. முதலில் சுதாரித்தவன் அருள்மொழியே!
“ஹேய் அச்சு! லுக்கிங் ஹேண்ட்சம் மேன்” மேலும் கீழுமாக அவனை அளவிட்டபடி சொன்னான் அருள்மொழி. அவனது நண்பன் அட்சரனிடம் அதன் பதிலடியாகச் சிரிக்கிறானா இல்லையா என்று கண்டறிய முடியாதபடிக்குச் சன்னப்புன்னகை.
“சார் மட்டும் என்னவாம்?” என்றவன் மேற்கொண்டு ஏதோ சொல்லும் முன்னர், அவர்களுடைய முதுகுகளுக்குப் பின்னே கேட்டது ஒரு பெண்ணின் குரல்.

“ரொம்ப கொஞ்சாதீங்கடா! பாக்குறவங்க வேற மாதிரி நினைச்சுக்கப் போறாங்க.”
அந்தக் குரல் சொன்னதன் அர்த்தம் புரிந்து சட்டென விலகிய நண்பர்கள், அங்கே அவளைச் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே நின்றவள் வானதி! ஆஃப் ஒயிட் வண்ண குர்தி செட்டில் பொம்மை போல நின்றவளின் முகத்தில் பக்கவாட்டில் மோதி நின்றன அலை அலையாய் வெட்டப்பட்டிருந்த கூந்தல் இழைகள்.
முதல் பார்வையில் புருவச்சுழிப்பும் சின்னத் திகைப்பும் அருள்மொழிக்குள். அவன் அவளையும்தான் இணையத்தில் பார்த்திருக்கிறான். என்ன தான் வானதியை அவன் சமூகவலைதளங்களில் முடக்கியிருந்தாலும் நண்பர்களின் சமூகவலைதளப்பக்கங்களில் அவளுடன் இருக்கும் புகைப்படங்கள் பதிவேற்றப்படுவதைக் கவனித்திருக்கிறான்.
பிம்பத்தை விட பிம்பத்துக்குரியவள் அழகு என்றது அவன் மனம். கண்ணில் காணாதவரைக்கும் அந்த மனதிலிருந்த வைராக்கியமும் புறக்கணிப்பும் இதோ ஒரு நொடியில் உருகுவதாய்! அவள் நின்றுகொண்டிருந்த இடத்தின் பின்னணி மங்கலாகி வானதி மட்டுமே பிரதானமாய்த் தெரிவது போல ஒரு மாயை!
இதெல்லாம் சில நொடிகள் இடைவெளியில் அருள்மொழிக்குள் உருவான ரசாயன மாற்றங்களே! அந்த ஒரு சில நொடிகளில் பன்னிரண்டு ஆண்டுகாலம் வானதியை விட்டு விலகியிருக்க அவன் எடுத்த பிரயத்தனங்கள் யாவும் பொடிபொடியாய் நொறுங்குவதாய்!

‘இவ எப்பிடி இங்க வந்தா? சரி வந்துட்டா! அதுக்கு இப்பிடி உத்துப் பாக்கணுமா?’
மானசீகமாகத் தன்னைத் திட்டியபடி அவளை அலட்சியம் செய்தவனாய் வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் பார்வையை.
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு இருவரையும் முறைத்த வானதியை அட்சரன் சமாதானம் செய்ய முன்வந்தாலும் அருள்மொழி கண்டுகொள்ளாமல் நின்றான். இல்லையில்லை, நிற்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.
“அவன் சர்ப்ரைஸ்னு சொன்னான் நதி.”
“பேசாத நீ! எப்பவுமே உனக்கு அவன்தானே உசத்தி. நேத்து பிரஸ் மீட் முடிஞ்சதும் பேசுனப்ப கூட இவன் வர்றதைப் பத்தி மூச்சு விடல. எவ்ளோ அமுக்குணியா இருந்திருக்க.”
வெடித்த வானதியின் உரத்த குரலில் அருள்மொழி சுண்டுவிரலால் காதைக் குடைய, அந்தச் செய்கையில் அவள் இன்னும் கடுப்பானாள்.
“நான் பேசுறது உனக்குக் கத்துறது மாதிரி இருக்குதாடா?” என அவனிடம் அவள் பாய,
“பிஹேவ் யுவர்செல்ஃப் வானதி” என்றான் அட்சரன் கடினக்குரலில்.
அவள் அமைதியானாள். ஆனால் ஆதங்கம் அடங்கவில்லை.
“நீ என்கிட்ட பேசாத இனிமே”
முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டவள் அவர்களை விட்டு விலகி நடக்க, அருள்மொழி தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.
“இந்தியர்களுக்குச் சிவிக் சென்ஸ் (Civic sense) கிடையாதுனு வெளிநாட்டுக்காரன் கிண்டல் பண்ணுறான். அதுல தப்பே இல்ல. அங்க போறவ அதுக்குச் சரியான உதாரணம்”
விறுவிறுவென அங்கிருந்து செல்லும் வானதியைக் காட்டிச் சொன்னான் அட்சரனிடம். அவனோ நெற்றியில் ஆட்காட்டி விரலால் கீறிக்கொண்டான்.
“நாம யோசிக்குற விதமும் பொண்ணுங்க யோசிக்குற விதமும் ஒத்துப்போகாது அருள். இதுதான் ரிலேஷன்ஷிப்னாலே நான் அலறுறதுக்குக் காரணம்.”
“பொண்ணுங்க கூட மட்டும்தான் ரிலேஷன்ஷிப்ல இருக்கணுமா? காலம் மாறிடுச்சு மேன்” அருள்மொழி கிண்டலாய்ச் சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
“அடேய்! அவ வந்ததும் அதைத்தான் கிண்டலா சொன்னா. நீயுமா? எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே நில்லு. அப்ராட் போனதுல வேண்டாத எல்லாத்தையும் கத்துக்கிட்டு வந்திருக்க போலயே” என்று சொல்லி அவனைத் தள்ளி நிறுத்தினான் அட்சரன்.
பல வருடங்கள் கழித்துச் சந்தித்துக்கொண்ட நண்பர்கள் உற்சாகமாய் ஒருவரை ஒருவர் கலாய்த்தபடி வெளியே வந்து சேர்ந்தார்கள். சரியாக அவர்கள் முன்னே காரைக் கொண்டு வந்து நிறுத்தினாள் வானதி. இரு ஆண்களும் பார்க்கும்போதே முன்பக்கத்துக் கதவைத் திறந்துவிட்டாள். அருள்மொழியிடம் பேசவில்லை அவள்.
“அவனை உக்காரச் சொல்லு அச்சு. எனக்கு டைம் இல்ல. இன்னைக்குச் சென்ட்ரல் மினிஸ்டரை நான் பேட்டி எடுக்கணும்.”
“இவ எப்படா ரிப்போர்ட்டர் வேலையைச் செய்ய ஆரம்பிச்சா? ஜர்னலிஸ்ட்னு தானே சொன்னீங்க? அப்பிடியே பிஸியா போகச் சொல்லுடா. யார் இப்ப இவ கார்ல வர்றதா சொன்னாங்களாம்?”
“ரிப்போர்ட்டருக்கும் ஜர்னலிஸ்டுக்கும் வித்தியாசம் தெரியாதவன் பாரீஸ்டர். கஷ்டகாலமப்பா.”
ஆளுக்கு ஒரு பக்கம் பிகு செய்துகொள்ள அட்சரனின் தலை சூடானது.
“நீ கிளம்பு நதி. நான் அவனை அழைச்சிட்டு வர்றேன்.”
சட்டெனக் கும்பிட்டாள் அவள்.
“ஐயா சாமி! ரத்தக்கொதிப்புக்குப் பிறந்தவனே! எங்கப்பாக்கும் உனக்கும் ஏழாம் பொருத்தம். ஆல்ரெடி நீ அவரோட சுயசரிதைப் புத்தகத்தைப் பதிப்பகத்துக்குப் பரிந்துரை செய்யலனு உன் மேல அவருக்குச் செம கடுப்பு. இவனை வேற அவருக்குப் பிடிக்காது. ஏதாச்சும் அவர் சொல்லி வச்சார்னா வீண் பிரச்சனை. நானே இவனை அழைச்சிட்டுப் போயிடுறேன்.”
அருள்மொழியைப் பார்த்தான் அட்சரன்.
“என்னடா போறியா?” என்று கேட்டான்.
“என்னமோ ஆருயிர்க் காதலர்கள் மாதிரி பிஹேவ் பண்ணாதீங்கடா. உங்க புரோமான்ஸை (bromance) பாக்க கண்றாவியா இருக்கு” – வானதி.
அவ்வளவுதான்! அட்சரன் வேகமாக அருள்மொழியைப் காருக்குள் தள்ளினான். இல்லையில்லை திணித்தான்.
“போய் தொலைங்க ரெண்டு பேரும்.”
அட்சரன் கார்க்கதவை அறைந்து சாத்த காரும் அங்கிருந்து கிளம்பியது. வானதி தனக்குள் இருக்கும் ஆதங்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்.
‘அப்படியென்ன இவனுக்கு நான் துரோகம் செய்துவிட்டேனாம்? அச்சு மட்டும் விமானநிலையத்துக்குச் செல்வது பற்றி அவனது பெற்றோரிடம் பகிராவிட்டால் இந்நொடி வரை அருள்மொழி இங்கே வருவது எனக்குத் தெரியாமலேயே இருந்திருக்கும்.’
காரின் வேகம் குறைவதைக் கண்டுகொண்டவன்
“கார் எங்க போகுது? உங்க வீடு க்ரீன்வேஸ் ரோட் பக்கம்தானே?” என்று தன்னை மீறி அருள்மொழி கேட்க,
“ஓஹ்! அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்குதா?” என்று ஏளமாகக் கேட்டவள் காரின் வேகத்தை இன்னும் குறைத்தாள்.
சரியாக யூ டர்ன் ஒன்று வரும் இடத்தில் மேம்பாலத்தின் அருகே ஒரு பெரிய சிலை ஒன்று காலை நேர வெயிலைத் தன்னில் தாங்கிப் பொன்னாய்ச் ஜொலித்துக்கொண்டிருந்தது.
அதனருகே செல்லச் செல்ல இன்னும் வேகத்தைக் குறைத்தவள் “இது சுந்தர் மாமாவோட சிலை” என்றாள் மென்மையாக.

அருள்மொழி ஒரு கணம் நிதானித்தான். காரை ஓரங்கட்டியவள் அந்தச் சிலையைத் தெளிவாகப் பார்க்க வைத்தாள்.
அது அருள்மொழியின் தந்தை சுந்தரமூர்த்தியின் சிலை. சிலை வைக்குமளவுக்கு அவர் தியாகியா என நீங்கள் கேட்கலாம்! ஒருகாலத்தில் தமிழக முன்னேற்றக் கழகத்தின் இரண்டு தூண்களில் அவரும் ஒருவர். ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவர் தமிழக அரசியலில் ஆற்றிய பங்குக்கு அரசாங்கம் செய்த கைமாறு இந்தச் சிலை.
“அப்பா ரெண்டாவது தடவை முதலமைச்சரா வந்ததும் மாமாக்குச் சிலை வச்சார். இந்தச் சிலையைத் திறந்து வைக்க…”
“காரை எடு வானதி.”
வெறுப்பின் சாயம் பூசிய வார்த்தைகளைத் துப்பினான் அருள்மொழி. வானதிக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தச் சிலையைப் பார்த்தால் அருள்மொழி மகிழ்ச்சியடைவான் என்று எண்ணியவளுக்கு அவனது எதிர்வினை திகைப்பூட்டுவதாய்!
“அருள்… இது…”
“காரை எடுனு சொன்னேன். நான் எதையும் பாக்க விரும்பல”
உறுமியவன் பேனட்டில் கையை ஓங்கி அடிக்கவும் வானதி காரைக் கிளப்பினாள். அருள்மொழிக்கு நெஞ்சு கொதித்தது. எல்லாம் நாடகமாகத் தெரிந்தது அவனது கண்களுக்கு.
‘யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள் இவர்கள்? கொலையும் செய்து சிலையும் வைப்பார்களா?’
மீண்டும் கார் ஓரங்கட்டப்படுவதைக் கவனித்தவன் “இப்ப என்ன? உன்னால என்னை அழைச்சிட்டுப் போகமுடியாதுனா முன்னாடியே சொல்லித் தொலைச்சிருக்கலாமே” என்று வெடித்தான்.
வானதி அவனது கோபத்தைக் கணக்கில் எடுக்காமல் கிண்டி சிறுவர் பூங்காவுக்கு அருகிலிருக்கும் மரங்கள் அடர்ந்த சாலையோரமாகக் காரை நிறுத்தியிருந்தாள்.
“இறங்கு அருள்.”
“எதுக்கு?”
“இறங்கு! சொல்லுறேன்.”
வேண்டாவெறுப்பாக இறங்கினான் அருள்மொழி. காலைநேர வெயில் அந்த இடத்தை பொன்னிறமாக்கியிருந்தது. அது அவனது மனக்கொதிப்பை அடக்கவில்லை. வானதி அவனெதிரே வந்தவள் ஆதங்கமாய் அவனைப் பார்த்தாள்.
‘ஏன் இத்தனை கோபம்? ஏன் இந்த ஒதுக்கம்? இவ்வளவு வெறுப்புக்கு இங்கே என்ன நடந்துவிட்டது?’
அவளது விழிகள் கேட்ட கேள்விகளை அவன் கவனிக்க விரும்பவில்லை. கண்களைச் சந்தித்துவிட்டால் விமானநிலையத்தில் நொடியில் உருகியது போல இப்போதும் மனமுருகிவிடுவோமோ என்று தன் மீதே அவனுக்கு எரிச்சல்.
வானதி அவனது கன்னத்தைப் பற்றித் தன் பக்கம் திருப்பினாள். நெற்றியில் சிறிய கோடாகியிருந்த தழும்பின் மீது அவளது பார்வை பதிந்தது. அருள்மொழி அவளது கரத்தை அகற்றவில்லை. அந்தக் கரத்தின் ஸ்பரிசம் பட்டதும் எரிமலையாய் தகித்துக்கொண்டிருந்த மனம் சாந்தமாவது போல ஒரு பிரமை.

இப்படி உணர்வதே பாவமென்றது அவனது மூளை.
சட்டென அவளது கையைத் தட்டிவிட்டான் அருள்மொழி.
“முதல்ல இப்பிடித் தொட்டுப் பேசாத. உனக்கு என்னை ஞாபகம் இருக்கலாம். எனக்கு உன்னைப் பத்தி எதுவும் ஞாபகமில்ல. நீ என் பிரண்ட்னு டாக்டர் சொன்னாங்க. அது மட்டும்தான் ஞாபகம் இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் அச்சு, இலக்கியா, சஞ்சய் தான் என்னோட பிரண்ட்ஸ். நீ எனக்கு யாரோ ஒருத்தி. நீ தயவுபண்ணி என்னை நெருங்காத”
வானதியின் கண்கள் கலங்கிப்போயின. தைரியமானப் பெண் தான் அவள். ஆனால் அந்தத் தைரியம் எல்லாம் அருள்மொழியின் சுடுசொல்லின் முன்னே எங்கே போனதோ தெரியவில்லை.
“எதுவுமே ஞாபகமில்லையா? நீயும் நானும் பிரணதி சித்தி கூட…”
“வாயை மூடு!”
இம்முறை அதீத கோபம் அவனது முகத்தில். பின்னர் சட்டெனத் தணிந்தான்.
“லிசன்! உன்னை ஹர்ட் பண்ண எனக்கு விருப்பமில்ல. ஒருவேளை நமக்குள்ள நல்ல நட்பு கூட இருந்திருக்கலாம். அந்த நட்புக்கு மரியாதை குடுக்கணும்னு நான் பிரயத்தனப்படுறேன். ப்ளீஸ்! நீ என்னோட மத்த பிரண்ட்ஸ் மாதிரி என் மனசுக்கு நெருக்கமானவனு என் மூளை நம்பல. புரிஞ்சிக்க. காரை எடு.”
மீண்டும் காரில் போய் அமர்ந்துகொண்டான்.
அருள்மொழிக்குத் தன்னை நினைவிருக்கும் என்ற சின்னதாய் ஒரு நம்பிக்கையோடு இருந்த வானதிக்கு, அந்த நம்பிக்கை ஆடிக்காற்றில் அடித்துக்கொண்டு போன இலவம்பஞ்சாய்ப் பறந்துபோனது. கனத்த மனதோடு காரை முகிலகத்துக்குக் கிளப்பினாள் அவள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

