“அருள், அம்மா இப்பலாம் அடிக்கடி உன்னைப் பத்தி பேசிட்டிருக்காங்க. நீ அங்க ரொம்ப பிஸியா இருக்கிறதா தர்மா மாமா சொன்னார். எவ்ளோ பெரிய ஆளானாலும், இங்க நாங்க உனக்காகக் காத்திருக்குறோம்ங்கிறதை மறந்துடாத. Don’t behave like a stranger. நாம நல்ல நண்பர்களா இருந்தோம். இப்பவும் இருக்குறதா நானும் நம்புறேன். உனக்கு என்ன தோணுது அருள்?”
–வானதியின் கடிதம்…
க்ரீன்வேஸ் சாலையில் அந்தப் பகுதி மட்டும் இரவில் நிசப்தமாக இருந்தது. சிறிது நேரத்தில் சைரன் ஒலியோடு நீலநிற விளக்குகள் சுழல, முதலமைச்சரின் கார் ‘முகிலகம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட பிரம்மாண்டமான பங்களாவின் உயரமான இரும்புக்கதவைத் தாண்டி உள்ளே போனது.

வீட்டின் பெரிய தரிப்பிடத்தில் கார் நின்றதும் கமாண்டோக்கள் மின்னல் வேகத்தில் இறங்கி அணிவகுத்து நின்றார்கள். பர்சனல் செக்யூரிட்டி ஆபீஸர் கார்க்கதவைத் திறந்துவிட, கம்பீரமாக இறங்கினார் ஜெயசந்திரன். தமிழ்நாட்டின் முதலமைச்சர். தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் கூட. முகத்தில் பதவிக்கான அதிகாரமும், பணிச்சுமை கொடுத்த சோர்வும் கலந்திருந்தது.
உதவியாளர் அவரோடு நடந்து வந்தபடியே அவரிடமிருந்து கோப்புகளை வாங்கிக்கொண்டார். மறுநாள் காலை முக்கியச் சந்திப்புக்கான விவரங்களை உதவியாளர் சொல்ல முற்பட, கையுயர்த்தித் தடுத்தார் ஜெயசந்திரன்.
“காலையில பாத்துக்கலாம். இப்ப போதும்.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“குட் நைட் சார்.”

உதவியாளர் கிளம்பிவிட, ஹாலுக்குள் வந்தவர் சோஃபாவில் அமர்ந்து புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்த வானதியைக் கண்டதும் புன்சிரிப்போடு மகளிடம் வந்தார்.
“இன்னும் ஏன் தூங்கல வானும்மா?” இதமாய்க் கேட்டபடி அவளருகே அமர்ந்தவருக்கு, அன்றைய தினம் ஒன்றிய அரசின் தரப்பிலிருந்து வந்த டெலிபோன் அழைப்புகள் நினைவுக்கு வந்தன.
“தூக்கம் வரலப்பா. அம்மாவும் அண்ணியும் இப்பதான் குட்டி பையனோட தூங்கப் போனாங்க. நான் ஒரு ஆர்ட்டிக்கிளுக்குத் தகவல் வேணும்னு புக் படிச்சிட்டிருந்தேன். நீங்க ஏன் இன்னைக்கு இவ்ளோ லேட்?”
ஜெயசந்திரனின் முகத்தில் இருந்த சோர்வைக் கவனித்தபடி வினவினாள் அவள். அவர் கண்ணாடியைக் கழற்றிவிட்டு சோஃபாவில் சாய்ந்துகொண்டார்.
“ஒரு எமர்ஜென்சி கேபினட் மீட்டிங். அப்புறம் மெட்ரோ புராஜெக்ட் விசிட் இருந்துச்சு. எல்லாம் முடிச்சுட்டு வர்றதுக்கு நேரம் ஓடிருச்சு” என்றவர், “இன்னைக்கு டிவி நியூஸ் பாத்துட்டு என் பி.ஏக்கு நிறைய போன் கால்ஸ். இது தேவையாம்மா?” என்று மெதுவாக வினவினார்.
“ப்பா! என் வேலையில நீங்க தலையிடமாட்டேன்னு பிராமிஸ் பண்ணிருக்கீங்க” என்று நினைவூட்டினாள் வானதி.
ஜெயசந்திரன் சரியென்பது போலத் தலையசைத்தவர், “சரி! அவங்க இதை உடைச்சிடுவாங்க. சகல அரசு மரியாதையோட அவங்க உயிரியல் பூங்காவை நடத்துவாங்க. நீ அதைப் பாப்ப வானும்மா. இது அரசியல்வாதிக்கும் கைதேர்ந்த பிசினஸ்மேனுக்குமான மறைமுக ஒப்பந்தம். அதை எந்தக் கோர்ட்டும் ஊடகமும் தடுத்து நிறுத்திட முடியாது. உனக்கு நிதர்சனம் புரியணும்னு ஆசைப்படுறேன்” என்றார் பொறுமையாய்.
“இருக்கட்டுமேப்பா. அவங்க இதை உடைச்சாலும் அவங்க மேல ஆதாரத்தோட நாங்க வச்ச குற்றச்சாட்டு காலத்துக்கும் நின்னு பேசும். வீ ஆர் விசில் ப்ளோயர்ஸ் (Whistleblowers). எங்க வேலை தப்பு நடந்தா அதை மக்களுக்குச் சொல்லுறது மட்டும்தான். நானும் ஜஸ்டிஸ் டுடேவும் அதை செஞ்சிட்டோம்.”
“உன் பிடிவாதத்தை விடமாட்டியே?”
“நான் உங்க மகளாச்சே!”

ஜெயசந்திரன் கர்வமாகவே சிரித்தார். மகளின் சிகையைக் கோதியவர், “டைம் ஆச்சு! நாளைக்கு ஆர்ட்டிக்கிளுக்குப் படிக்கலாம். போய் தூங்கு” என்றார் ஆதுரமாக.
வானதியும் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்தாள். “குட் நைட்பா” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல, ஜெயசந்திரன் யோசனையோடு தனது நூலக அறைக்குச் சென்றார்.
வீட்டுக்கு வந்ததும் மனைவி கயல்விழியின் கையால் இரவுணவைச் சாப்பிடுகிறாரோ இல்லையோ, நூலக அறைக்குப் போய்க் லண்டனுக்கு ஒருமுறை போன் செய்து பேசிவிடுவார்.
இந்நேரம் லண்டனில் காலை ஆறு மணியைத் தொட்டிருக்கும். தர்மலிங்கத்தின் மொபைலுக்கு அழைத்தார் ஜெயசந்திரன்.
“சொல்லுங்க தலைவரே!” மறுமுனையில் கேட்டது தர்மலிங்கத்தின் உற்சாகக் குரல்.
“என்ன தர்மா? குரல்ல குதூகலம் கொப்புளிக்குது. இதுதான் கல்யாணக்களையா?”
“என்ன தலைவரே கிண்டல் பண்ணுறீங்க?” என்றார் அவர் சிரிப்போடு.
“பின்ன என்னப்பா? காதலிச்சவன் கல்யாணம் பண்ணித்தானே ஆகணும்?” என்று இலகுவாய்ப் பேசியவர் பின்னர் குரலைத் தீவிரத்தொனிக்கு மாற்றினார். “அப்புறம் என்ன பண்ணுறான் சுந்தரமூர்த்தி மகன்?”
“தம்பி பாரீஸ்டர் ஆனதுக்கு அப்புறம் நிறைய கேஸ்ல வாதாடுறாப்ல. இப்ப கூட இந்தியாவோட மான்கடா குரூப் கேஸை எடுத்துக்குறதா சொல்லிருக்கார்.”

ஜெயசந்திரன் ஏளனமாகச் சிரித்தார்.
“நேர்மையின் திருவுருவமான சுந்தரமூர்த்தியோட மகன், சட்டத்துக்குப் புறம்பான வேலையைப் பாக்குற ஒரு கார்ப்பரேட்டுக்கு ஆதரவா ஆஜராகப் போறானா?”
“நேர்மையை வச்சு என்ன தலைவரே செய்யுறது? தம்பி காசுல கெட்டி. ஃபீஸ் வந்தா உங்களுக்குக் கூட வாதாடுவார்” என்றார் தர்மலிங்கம்.
“சுந்தரமூர்த்தியோட மகன் கிட்ட நேர்மையை எதிர்பார்த்தேன். பரவால்ல, பிழைக்கத் தெரிஞ்சவன். அப்புறம் அவனோட நடவடிக்கை..?”
மறுமுனையில் தர்மலிங்கம் குரலைத் தணித்துக்கொண்டார்.
“எதுவும் ஞாபகத்துக்கு வரல தலைவரே! வந்திருந்தா தம்பி இந்நேரம் இங்க அமைதியா இருப்பார்னு நினைக்குறீங்களா? டாக்டர் சொன்ன மாதிரி இது நிரந்தரமான மறதிதான் தலைவரே. பன்னிரண்டு வருஷமா நீங்கதான் தேவையில்லாம அதைப் பத்தி யோசிக்குறீங்க.”
ஜெயசந்திரன் இடைமறித்தார்.
“இத்தனை வருஷமாகியும் அவனுக்கு ஞாபகம் வராததுதான் என் சந்தேகமே தர்மா. அவன் சுந்தரமூர்த்தியோட வாரிசு. அவன் சும்மா இருந்தாலும் சுந்தரமூர்த்தியோட ரத்தம் அவனைச் சும்மா இருக்கவிடாது. அதனாலதான் தினமும் போன் பண்ணிக் கேட்டுக்குறேன். நீ காதல் மயக்கத்துல அவனைக் கண்காணிக்குறதுல கோட்டை விட்டுடாத” என்று எச்சரித்தார் அவர்.
தர்மலிங்கத்தை லண்டனுக்கு அருள்மொழியோடு அனுப்பி வைத்ததே அவனை அவரது கண்காணிப்பில் வைத்திருப்பதற்காகத்தானே! அங்கே தினமும் என்ன நடக்கிறது? மருத்துவச் சந்திப்பில் அவனிடம் ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா? என அடிக்கடி விசாரிப்பார் ஜெயசந்திரன்.
ஆயிற்று பன்னிரண்டு ஆண்டுகள்! இன்னும் ஜெயசந்திரன் சந்தேகித்தது போல அருள்மொழிக்கு நினைவு வரவில்லைதான். ஆனாலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு.
“என் வேலையே அதுதானே தலைவரே? தம்பிக்கு எதுவும் ஞாபகம் வரல. நாம என்ன சொல்லி வச்சோமோ அதைத்தான் இப்ப வரைக்கும் நம்புறார். இப்ப கூட எனக்கும் மெகனுக்கும் கல்யாணம் எப்பங்குற கேள்விலதான் ரொம்ப ஆர்வமா இருக்குறார்.”
“நீ என்ன சொன்னாலும் அவன் என் எதிரியோட மகன். அவனை அவ்ளோ சுலபத்துல நான் நம்பிடமாட்டேன். பாக்கலாம்! அவன் எத்தனை நாள் மறதியில இருக்குறான்னு. சரி தர்மா! நான் தூங்கப்போறேன். நீ உன் வேலையை கவனி. எனக்கு வானதி கல்யாண வேலை நிறைய இருக்கு.”
ஜெயசந்திரன் அழைப்பைத் துண்டித்துவிட்டு உறங்கப் போய்விட, ஹாம்ப்ஸ்டெட் ஐவி மேனரில் தர்மலிங்கம் யோசனையோடு நிற்கையில் அவருக்குக் காலை வணக்கம் சொன்னார் ஆர்தர்.
அவரது கோட் பாக்கெட்டில் ஏதோ கடிதம் இருக்கவும், “அது என்ன லெட்டர்?” என விசாரித்தார் தர்மலிங்கம்.
“அருள் சாருக்கு வந்த பிசினஸ் லெட்டர். உங்களுக்குக் காபி கொண்டு வரட்டுமா?”

“இல்ல வேண்டாம்! கிறிஸ்மஸ் டெக்கரேஷனுக்கான ஆட்கள் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. அவங்க வந்ததும் காபியும் பிரெட் டோஸ்டும் ரெடி பண்ணச் சொல்லிடுங்க.”
“மேடமோட ஆசையா?”
ஆர்தர் புன்சிரிப்புடன் வினவவும், தர்மலிங்கத்தின் முகத்தில் அசட்டுச்சிரிப்பு.
“யாஹ்! இந்தத் தடவை கேக் பிரிப்பரேஷன்ல ஆரம்பிச்சுக் கிறிஸ்மஸ் டெக்கரேஷன் வரை எல்லாமே மெகனோட விருப்பப்படி நடக்கணும்னு ஆசைப்படுறேன்.”
“ஓகே சார்! நான் கிச்சனுக்கு இன்பார்ம் பண்ணிடுறேன்.” தர்மலிங்கம் தலையசைத்துவிட்டு வாயிலருகே சென்றுவிட, ஆர்தர் சமையலறையில் இருக்கும் கதிரவனிடம் தகவல் சொல்லப் போய்விட்டார்.
அதே நேரத்தில் பனிப்படலம் மூடிய ஜன்னல் கண்ணாடியைப் பார்த்தபடி மேல்தளத்தில் இருக்கும் தனது அறையில் நின்றிருந்தான் அருள்மொழி. குளிருக்கு இதமாய்த் தரையிலிருந்து சுவர் வரை உயர்ந்திருந்த கணப்பில் விறகுகள் எரிந்து வரும் வெப்பம் அந்த அறையைச் சூடாக்கிக் கொண்டிருந்தது. நவீன மின்சாரக் கணப்புகள் எல்லாம் வந்தாலும் ஏனோ அருள்மொழிக்கு அந்தப் பழங்கால கணப்பின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு. விறகுகளின் சடசடவென்ற ஓசையும், அவற்றை எரிக்கும் நெருப்பின் செந்நிறமும் வினோதமான வகையில் அவனுக்குப் பிடித்ததாய்!
கதவை மென்மையாய் யாரோ தட்டும் சத்தம் கேட்டு, ஜன்னலிலிருந்து பார்வையைத் கதவுக்குத் திருப்பினான் அருள்மொழி. ஆர்தர்தான்! உள்ளே வர அனுமதி கேட்பதற்கான சமிக்ஞை அது.
“கமின் ஆர்தர்.”
கணீரென்ற குரல் சுவரில் பட்டு எதிரொலிக்கையில், ஆர்தரும் கையில் ஒரு நீலநிற என்வலப் சகிதம் வந்து நின்றார். இந்தியாவிலிருந்து வந்ததன் அடையாளமாய் முத்திரைகளும், அதை அனுப்பியவளின் முத்து போன்ற கையொப்பமும் தெரிந்தன.
“ராயல் மெயில்ல இருந்து வந்து குடுத்தாங்க சார். உங்களுக்கு வழக்கமா வர்ற தபால்.”
ஒரு நொடி அருள்மொழியின் கண்களில் இளக்கம் பரவியது. ஆனால் ஆர்தர் அதைக் கவனிக்கும் முன்னரே மீண்டும் அங்கே இறுக்கம்.
“தேங்க்யூ ஆர்தர். தர்மலிங்கம் மாமா எங்க?”
“ஆட்கள் வந்திருக்காங்க. அவங்க கூடக் கிறிஸ்மஸுக்கான லைட் டெக்கரேஷன் பத்தி பேசிட்டிருக்கார் சார். நான் இந்த லெட்டரைக் கொண்டு வந்ததை அவர் பாக்கல. போஸ்ட் பாக்ஸ்ல இருந்து எடுத்துட்டு வந்தப்ப விசாரிச்சார். பிசினஸ் லெட்டர்னு சொன்னேன். நம்பிட்டார்.”
ஆர்தருக்கும் அருள்மொழிக்குமிடையே ஒரு ரகசியமான புரிந்துணர்வு உண்டு. தர்மலிங்கத்திடம் எதைச் சொல்லவேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதில் மனிதர் மிகத் தெளிவாக இருப்பார். கடிதத்தை அருள்மொழி வாங்கிக்கொண்டதும்,
“ரூம்ல குளிர் கொஞ்சம் அதிகமா தெரியுதே சார். இன்னும் கொஞ்சம் விறகு போடட்டுமா கணப்புல?” என்று கேட்டார்.
“வேண்டாம். நீங்க கிளம்புங்க.”
அவனுக்குத் தலைவணங்கிவிட்டு ஆர்தர் வெளியேறியதும், நீல நிற என்வலப்பைப் பிரித்தான் அருள்மொழி. அதன் மெழுகு முத்திரை உடைய மெல்லிய லேவண்டர் நறுமணம் வீசியது அவனது நாசிக்குள். அவனுக்குப் பிடித்த நறுமணம் என்பதை அறிந்தவள் அவள் – வானதி.
வானதிக்கு ஜர்னல் எழுதுவதில் சிறுவயதிலிருந்தே விருப்பம். அழகாய் வரையவும் செய்வாள். குட்டியாய்க் கடிதத்தின் பார்டர்களில் லேவண்டர் பூக்களை ஸ்கெட்சாய் வரைந்து, அதற்குள் தனது செய்தியையும் முத்துகளாய்க் கொட்டியிருந்தாள். முதலில் நலம் விசாரிப்பு! அடுத்து வந்தது நற்செய்தி ஒன்று. அவளது எழுத்தே அந்தச் செய்தியை எழுதியபோது உற்சாகமாக மாறியது போல ஒரு பிரமை அருள்மொழிக்கு.
“ஹேய் அருள்! எனக்குக் கல்யாணம் ஆகப்போகுது. சௌத் இந்தியாவோட பெரிய மீடியா குரூப்போட வாரிசு ஆதர்ஷ் கூட. அப்பாவோட செலக்சன் அவரு. நான் ரொம்ப லக்கில? நானும் அவரும் ஒரே புரொபஷன். நீ என் கல்யாணத்துக்கு வருவியா? ப்ச்! நீ பதில் சொல்லமாட்டனு தெரியும். என்கூடப் பேசமாட்டனும் தெரியும். நீ வந்தா நானும் அம்மாவும் ரொம்ப சந்தோஷப்படுவோம்டா. என் லைஃபோட அழகான திருப்பம் இது. என்னோட பெஸ்ட் பிரண்ட் என்கூட இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஐ பிராமிஸ், நீ வந்தா நாங்க யாரும் உன்கிட்ட பழசைப் பத்திப் பேசமாட்டோம். நீ வருவதானே?”
கேள்வியாய் முடித்திருந்தாள் வானதி. படிக்கப் படிக்க அருள்மொழியின் முகத்தில் இளக்கமும் இறுக்கமும் மாறி மாறி குடியேறி, இறுதியில் அவனது முகமே கல்லாய்ப் போனது. இப்போது மட்டுமில்லை, ஒவ்வொருமுறை வானதியின் கடிதத்தைப் படித்த பிறகும் அவனுக்குள் உருவாகும் உணர்வுக் கொந்தளிப்பு இதுவே!
எப்போதும் கடிதத்தைப் படித்து முடித்ததும் என்ன செய்வானோ, அதையே இம்முறையும் செய்தான் அருள்மொழி. அந்தக் கடிதத்தைக் கையால் சுருட்டிக் குப்பை போலக் கணப்புக்குள் வீசியெறிந்தான். வீசியபோதுதான் அவனது முகத்தில் அத்துணை குரோதம்!

வானதி வெறும் வானதி இல்லையே! ஜெயசந்திரனின் மகளாயிற்றே! இந்த ஒரு காரணம் போதாதா அவளையும் அவளது கடிதங்களையும் அருள்மொழி துச்சமாக எண்ணி வெறுப்பதற்கு.
அவனும் என்றேனும் ஒரு நாள் அவளே சலிப்புற்று கடிதம் எழுதுவதை நிறுத்திவிடுவாள் என்று காத்திருக்கிறான். அவனது காத்திருப்பும் முற்றுபெறவில்லை. அவளுக்கும் சலிப்பு தட்டவில்லை.
ஒருவேளை அவளுக்கு மெய்யாகவே அவன் மீது நட்பும் அக்கறையும் இருக்கலாம். இருந்தாலும் அதை ஏற்க மனமில்லை அருள்மொழிக்கு. விரோதியின் நிழலும் கூடப் பாவம் இழைக்கத் தயங்காது என்கையில், அந்த விரோதியின் வாரிசு மட்டும் எப்படிப் புனிதமாக இருக்கும்?
சமூகவலைதளங்கள் அனைத்திலும் வானதி தன்னைத் தொடர்புகொள்ளா வண்ணம் முடக்கியிருந்தான் அவளது கணக்குகளை. ஆனாலும் கடிதப் போக்குவரத்து நிற்கவில்லை. எப்படியாவது அவளையும் அவளது நட்பையும் அவனுக்கு நினைவூட்டிவிடும் வெறி வானதிக்கு. ஆனால் அவன்தான் எதையும் மறக்கவேயில்லையே!
கோணல் சிரிப்போடு நெற்றியில் சிகை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்த தழும்பை வருடிக்கொண்டான் அருள்மொழி. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய மருத்துவர்கள் அவனது மறதிக்குக் காரணம் தலையில் பட்ட காயமென அறிக்கை கொடுத்தார்கள். லண்டனின் அனைத்து நிபுணர்களும் அவனுக்கு ஞாபகம் திரும்பாதென அடித்துச் சொல்லிவிட்டார்கள்.
தான் ஒரு திறமையான நடிகன் என அருள்மொழி நம்பினாலும், அவனுக்கு உதவுவதற்கும் ஆட்கள் இருந்தார்கள். லண்டனில் ஆர்தர் என்றால் இந்தியாவில் அகத்தியன். தர்மலிங்கத்தின் அண்ணன் மகன். இப்போது அருள்மொழி மொபைல் அழைப்பு விடுத்தது அகத்தியனுக்குத்தான். அழைப்பு தாமதமின்றி ஏற்கப்பட்டது.
“எப்பிடி இருக்குற அருள்? இந்தியா வர்றதா கேள்விப்பட்டேனே” – விசாரித்தவனின் குரலில் மெய்யான சகோதரப்பாசம்.
“ரொம்ப நல்லா இருக்குறேன்ணா. அப்புறம் நீங்க எப்பிடி இருக்குறீங்க? உங்க தொகுதி, அரசியல் எல்லாம் எப்பிடிப் போகுது? எலக்சன் இன்னும் கொஞ்ச நாள்ல. அந்த வேலையில பிஸியா இருக்குறீங்களா?”
“அதை ஏன்பா கேக்குற? தமிழ்நாட்டு அரசியல் வினோதமானது. ஆனா இப்ப அரசியலே தெரியாதவன் எல்லாம் தலைவன் மாதிரி வந்துடுறானுங்க. ஸ்ட்ராங்கா ஒரு பி.ஆர் டீம் வச்சுக்கிட்டு அடிப்படை அரசியலறிவு இல்லாம இருநூற்று முப்பத்து நாலு தொகுதியும் நாங்கதான்னு ஆன்லைன்ல உதார் வேற விடுறானுங்க. இவனுங்களுக்கு இணையா நாமளும் இந்த ஜிகினா வேலை எல்லாம் செய்யவேண்டியது இருக்கு. நம்ம ஆதியோட தேர்தல் வியூக அமைப்பு நிறுவனம்தான் இப்ப நம்ம கட்சிக்காக ஆன்லைன்ல களமாடுது. இந்தத் தேர்தலும் நமக்குச் சாதகம்தான். உன்னை மாதிரி ஜென் ஜி ஆளுங்க ஓட்டுதான் தலைவரோட டார்கெட்.”
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அகத்தியனின் குரலில் இருந்த அரசியல் பற்றும் கட்சி விசுவாசமும் புரியாமல் இல்லை.
“உங்களுக்கு வரப்போற எலக்சன்ல சீட் இருக்குதா?” என்று விசாரித்தான் மெதுவாக.
“தலைமைக்கு என்ன விருப்பமோ…”

“அப்பிடியெல்லாம் விடாதீங்கண்ணா. யூ டிசர்வ் திஸ். அரசியலோட இன்னொரு கோணத்தை உங்க பேச்சுல நான் பாக்குறேன். தலைமை இந்தத் தடவை மறுத்துச்சுனா நீங்க போராடி வாங்குங்க உங்களுக்கான சீட்டை. அப்புறம் எனக்கு ஒரு உதவி வேணும்.”
“என்னடா பெரிய வார்த்தை எல்லாம் பேசுற?”
“ஆதித்யன்.. அதான் உங்க தலைவரோட மகன் இருக்குறான்ல. ஆறு மாசமா அவனோட இன்ஸ்டாகிராம் போஸ்ட், ரீல்ஸ் எல்லாத்துலயும் புதுசா ஒரு பொண்ணு தலை நீட்டுது. கொஞ்சம் விசாரிங்க.”
“அது எதுக்குடா நமக்கு?” அகத்தியன் ஒதுங்கப் பார்த்தான்.
“அடுத்து அவன் தான் துணை முதலமைச்சர்னு தமிழ் மீடியாஸ் பேசுதுண்ணா. அப்ப நீங்க அவன் விஷயத்துல கண்ணு வச்சுதான் ஆகணும். நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதுல்ல?”
அருள்மொழி நயமாகக் கேட்க, மறுமுனையில் அகத்தியனும் யோசித்தான். பின்னர் செய்வதாக வாக்களித்தான்.
“சித்தப்பா எப்பிடி இருக்குறார்? எனக்குச் சித்தி வரப்போறாங்கனு கேள்விப்பட்டேன்” – அகத்தியன் சொன்னதும் சிரிப்பு வந்துவிட்டது அருள்மொழிக்கு. சரியாக அந்நேரத்தில் ஐவி மேனரின் கீழ்த்தளத்தில் மெகனின் குரலும் கேட்டது.
“Hi guys, please use more warm white fairy lights on the central tree to give it a classic floral vibe. And the ribbons on the banisters should be deep crimson red, just as he said.”
தர்மலிங்கத்தைக் காட்டி அவர் சொல்லும்போதே, அகத்தியனுடனான மொபைல் அழைப்பைப் பேசி முடித்துவிட்டு அருள்மொழி ஹாலுக்கு வந்துவிட்டான். கிறிஸ்மஸ் டெக்கரேஷன் ஏஜென்சி ஆட்கள் மெகன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
“ஹேய் அருள்!”

உற்சாகமாகக் கை நீட்டிய நியூரோ சைக்கியாட்ரிஸ்ட் மெகன் பிரவுனின் வயது நாற்பத்தெட்டு. டயானாவின் முகச்சாயலில் அதே ஹேர்ஸ்டைலில் ஒருவித கம்பீரமான அழகி அவர்.
“ஹலோ ஆன்ட்டி மெகன்” என்றவன் கை குலுக்கினான் மரியாதைப்பூர்வமாக.
“உன் அங்கிள் சின்னப் பசங்க மாதிரி கிறிஸ்மஸ் செலிப்ரேஷனுக்கு ஆசைப்படுறார்.”
“கல்யாணமும் வருதுல்ல. மாமாவுக்குக் கூடுதல் கொண்டாட்டம்.”
இருவரும் கிண்டல் செய்ததில் தர்மலிங்கம் வெட்கப்பட்டார்.
“கிறிஸ்மஸுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிப்பீங்கதானே? ஏன்னா கிறிஸ்மஸ்க்கு அடுத்த நாள் எனக்கு இந்தியாவுக்கு பிளைட்.”
“வீ ஃபிக்ஸ் த டேட் அருள். கமிங் ட்வெல்த் நாங்க கல்யாணம் பண்ணிக்கப்போறோம். ரொம்ப நாள் தள்ளிப்போட விருப்பமில்ல. இந்த கிறிஸ்மஸை நாங்க கபிளா கொண்டாடணும்னு ஆசைப்படுறோம்.”
மெகனின் கண்களில் காதலும் ஆர்வமும் தெரிந்தது அருள்மொழிக்கு. புன்னகையுடன் இருவரையும் வாழ்த்தினான். மெகன் பிரவுன் – தர்மலிங்கம் இருவரையும் ஒருசேரப் பார்த்தவனுக்குக் காதல் தான் எத்துணை விசித்திரமானது என்று தோன்றியது.
இவர்களின் காதலில் பதின்மவயதின் துள்ளல் இருக்காது, இருபதின் வேகம் இருக்காது; வாழ்வின் ஏற்ற இறக்கங்களைக் கண்ட இருவர் ஒருவருக்கொருவர் நிழலாக இருக்கத் தயாராகும் ‘முதிர்ந்த காதல்’ இது. காதலின் தாத்பரியம் புரியாத அருள்மொழியையும் ரசிக்க வைத்துவிட்டதே இவர்களின் காதல்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

