“இப்ப ‘டிக்டாக்’னு ஒரு ஆப் வந்திருக்கு. இலக்கியா அதுல டான்ஸ் ஆடி வீடியோ போடுறா. கண்டிப்பா அந்த வீடியோவ நீ பாத்திருப்ப. உனக்கு ஷேர் பண்ணிருப்பானு தெரியும். நீ மட்டும் இங்க இருந்தா அவளை வச்சு செஞ்சிருப்ப! நீ அவளை ரோஸ்ட் பண்ணுன மொமண்ட்சை எல்லாம் நாங்க ரொம்ப மிஸ் பண்ணுறோம் அருள்.”
-வானதியின் கடிதம்….
தங்களது திருமணத்தில் நடந்த குழப்பத்தில் ‘இன்ஸ்டண்ட் கல்யாணத்தில்’ இணைந்த வேதவதி – அட்சரனைக் காண அட்சரனின் நுங்கம்பாக்கம் வீட்டுக்குச் சென்றிருந்தாள் வானதி. வேதவதி அங்கே ஒரு மூச்சு புலம்ப, அட்சரன் கொதிக்க, இறுதியில் இருவரும் மூடிய அறைக்குள் என்ன பேசினார்களோ தெரியவில்லை. வெளியே வந்தவளின் முகத்தில் தெளிவு.
ஆனாலும் வானதிக்குள் முணுக்கென்ற வலியைக் கொடுத்தது ஊசியாய் அவளுக்குள் குத்திய குற்றவுணர்ச்சி. திருமணம் பற்றிய எதிர்பார்ப்புகள் இருவருக்கும் இருந்திருக்கும். அவை நிறைவேறாமல் போன எரிச்சலும் இருவருக்கும் இருக்கலாம். தன்னால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியாது. ஆனால் அந்த எரிச்சலுணர்வைக் குறைக்கலாமே!
அட்சரனின் அன்னை ராஜேஸ்வரியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு வேதவதியைத் தன்னோடு அழைத்துக்கொண்டு கிளம்பினாள் வானதி. வேதவதி எங்கே போகிறோம் என்று கூடக் கேட்கவில்லை. அவளது அமைதி வானதியை என்னவோ செய்தது.
கல்லூரிக்குச் செல்பவளுக்கு அந்த ஊர் நாகரிகப்படி குர்தி செட்கள், சின்னச் சின்ன அணிகலன்கள் வாங்கலாமென்று தான் தன்னோடு அழைத்து வந்திருந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வேதவதியின் பளீர் சருமத்திற்கு ஏற்ற வண்ணங்களில் விதவிதமாய்க் குர்தி செட்கள், கோ-ஆர்ட் (Co-ord) செட்களை வாங்கினார்கள் இருவரும்.
“ஸ்லீவ்லெஸ் வேண்டாம் வானு. எனக்குப் போட்டுப் பழக்கமில்ல.”
“நானே போடுறேன். நீ என்னை விடச் சின்னப் பொண்ணு. போட்டா என்ன?”
“கூச்சமா இருக்குதே.”
அவளை வற்புறுத்த விரும்பாதவளாய் குட்டைக்கை, முழங்கை அளவு கை வைத்த உடைகளை வாங்கினாள் வானதி.
ஆடைகள் எல்லாம் வாங்கிவிட்டுப் பிரபலமான ஹேர் சலூனில் அமர்ந்திருந்தார்கள் வேதவதியும் வானதியும். இன்னும் வேதவதியின் முறை வராததால் சோஃபாவில் சாய்ந்தபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“அச்சு ரொம்ப ஓவரா போறானா? இல்ல ஓகே தானா?”

வேதவதி கொஞ்சம் தயங்கிவிட்டு, “சிடுமூஞ்சி மாதிரி இருக்கார் வானு. இதெல்லாம் சரியா வருமானு தெரியல. என்னால எதுவுமே பேச முடியல” என்றாள்.
“பேச முடியலையா? அப்பிடியெல்லாம் அவனைப் பேச விட்டு வேடிக்கை பாக்கக்கூடாது. அச்சு ஒரு பிரம்மாண்டமான ஈகோயிஸ்ட். நீ அவன் சொன்னதுக்கெல்லாம் மண்டைய ஆட்டுனனா வாழ்க்கை முழுக்க அது ரொட்டீன் ஆகிடும். அப்பப்ப அவனுக்குப் பதிலடி குடுக்கக் கத்துக்க.”
“எனக்கு அப்பிடிப் பேசி பழக்கமில்லையே வானு.”
“இனி பழகிக்க. திமிர்த்தனமான புருஷன்ஸ் கிட்ட நம்மளோட சாஃப்டான குணத்தைக் காட்டக்கூடாது, அதை அவங்க வீக்னெஸ்னு நினைச்சுப்பாங்க. நம்மளைத் தூக்கியெறிஞ்சு பேசுவாங்க. நீயெல்லாம் ஒரு ஆளே இல்லனு லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணுனா பொட்டிப்பாம்பா அடங்கிடுவாங்க. இதுதான் ரிவர்ஸ் சைக்காலஜி வேதா. இது அச்சு மாதிரி ஈகோயிஸ்ட்டுக்கும் பொருந்தும், அருள் மாதிரி திமிரு பிடிச்ச மலைமாட்டுக்கும் பொருந்தும்.”
வேதவதிக்குப் பாடம் எடுத்தாள் வானதி. அவளும் அப்பாவியாய் வானதி சொல்லும் அனைத்துக்கும் தலையாட்டினாள். வேதவதிக்கு நல்ல அடர்த்தியான இடையளவு கூந்தல். அதன் இயற்கை அழகைக் கெடுக்காத வண்ணம் லேயர்களாக வெட்டச் சொன்னாள் வானதி.
“பட்டர்ஃப்ளை லேயர் இவங்க ஃபேஸுக்கு பொருத்தமா இருக்கும்.”
“அப்பிடியே கட் பண்ணிடுங்க.”
கூந்தலுக்குச் சாயமேற்றுவதில் வேதவதிக்கு விருப்பமில்லை என்பதால் தவிர்க்கச் சொல்லிவிட்டாள்.
அட்சரன் முசுட்டுத்தனமாக இருப்பதாக வேதவதி சொன்னதும், தன் முன்னரே இருவரும் வாதிட்டுக்கொண்டதும் வானதியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
சீராய் லேயர் லேயராய்க் கத்தரிக்கப்பட்ட அடர்ந்த நீண்ட கூந்தலோடு வேதவதி சிரிக்கவும், “ஆசம்” என்றாள் அவள்.
காரிலேறி நுங்கம்பாக்கம் போகையில், “எல்லாம் ஓகே தானே வேதா? அச்சு எதுவும் திட்டுனானா? நீ ஹேர் சலூன்ல சரியா வருமானு சொன்னியே. பிரச்சனை பெருசா?” என வினவ, வேதவதியின் முகத்தில் யோசிக்கும் பாவனை.
“இல்ல வானு” என மறுத்தவள், “சீரியசா யோசிச்சா, அவரும் பாவம்னு தோணுது. ஆம்பளையோ பொம்பளையோ எல்லாருக்குமே அவங்க ஒழுக்கம் கேள்விக்குறியாகுறப்ப கோவம் வரத்தானே செய்யும். என் நிலைமையைச் சொன்னதும் புரிஞ்சிக்கிட்டார். அவர் ஒரு சொல்யூஷன் சொல்லிருக்கார். நான் கொஞ்சம் யோசிக்கணும். பாக்கலாம். என்னை நினைச்சு நீ ஃபீல் பண்ணாத. உனக்கும் எல்லாம் ஓகே தானே?”
வானதியின் இதழில் அனிச்சையாய் அனிச்சம் போல ஒரு புன்னகை.
“ஜெகஜோதியா போகுது எங்க வாழ்க்கை. டெய்லி டிஷ்யூம் டிஷ்யூம் தான்” கண்களை உருட்டி விளையாட்டு போல அவள் சொல்லவும் வேதவதி சிரித்தாள். அவளது சிரிப்பில் குற்றவுணர்ச்சி குறைந்தது வானதிக்கு.
அதே வீட்டுக்கு மறுமுறை செல்ல அழைப்பு வந்தது அட்சரனின் அன்னை ராஜேஸ்வரியிடமிருந்து. மறுவீடாம்! அருள்மொழி மறுவீட்டு அழைப்பு, விருந்தழைப்பு வைத்த அனைவரிடமும் மறுத்திருந்தான். ஆனால் அட்சரனின் அன்னையின் ஆசையான வேண்டுகோளை அவனால் மறுக்க முடியாததால் இருவரும் ஜோடியாய்ச் சென்றார்கள்.
ராஜேஸ்வரியும் வேதவதியும் உபசரித்ததில் வயிறோடு மனமும் நிறைந்து போனது இருவருக்கும். கூடவே அட்சரன் வேதவதியோடு சேர்ந்து உணவைப் பரிமாறியது அருள்மொழிக்கும் இதமாய் இருந்தது.
விருந்தின்போது வானதி பாயாசம் சாப்பிடாமல் போய்விட்டதைக் கவனித்த அருள்மொழி ராஜேஸ்வரியிடம் சொன்னான். அதே நேரம் வேதவதியின் அறையில் அமர்ந்து அவளது அன்னையிடம் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்தார்கள் இரு பெண்களும்.
வானதி பேசிக் கொண்டிருக்கையிலேயே அங்கே வந்த ராஜேஸ்வரி, “பாயாசம் குடிக்காம வந்துட்டியாம். அருள் சொன்னான். இந்தா குடி. நான் கொஞ்சம் சம்பந்தியம்மாகிட்ட பேசணும்” என்று பாயாசம் நிரம்பிய கிண்ணத்தை அவள் கையில் திணித்துவிட்டு மொபைலை வாங்கிக்கொண்டு போய்விட்டார். அவர் போனதும் பாயாசம் சாப்பிட்டபடியே வேதவதியிடம் உரையாட ஆரம்பித்தாள் வானதி.
“நீயும் அச்சுவும் இன்னைக்கு எங்களுக்கு ஒன்னா விருந்து பரிமாறுனீங்கல்ல. என் மனசு குளிர்ந்து போச்சு வேதா. இப்பிடியே எப்பவும் நீங்க ஒன்னா இருக்கணும்.”
வேதவதி பெருமூச்சு விட்டாள். “நாங்க எங்க ரிலேஷன்ஷிப்புக்குக் கூலிங் ஆஃப் பீரியட் குடுத்திருக்கோம்.”

அவள் சொன்னதும் பாயாசத்தோடு வாயில் வைத்தக் கரண்டியை எடுக்காமல் அதிர்ச்சியாய் விழித்தாள் வானதி.
“என்னோட ஸ்டடீஸ் முடியுறதுக்கு இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு. அது முடிஞ்சதும் நாங்க பிரியுறோம்னு பேமிலியில அனௌன்ஸ் பண்ணிடுவோம்.”
வானதியால் இந்த உண்மையைச் சீரணிக்க முடியவில்லை.
“யாருடி இந்த ஐடியாவ குடுத்தது? அச்சுவா?”
“ம்ம்.”
“அவன் சொன்னா நீ தலையாட்டிடுவியா வேதா? ஏன் உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகளை நீ அடுத்தவங்களை எடுக்க விடுற?”
“ஏன்னா எனக்கு என் முடிவுகள் மேல நம்பிக்கை இல்ல.” சுருக்கமாகச் சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள் வேதவதி.
“வேதா என்னடி இது?” – மனம் பொறுக்கவில்லை வானதிக்கு.
அதே நேரம் அட்சரனும் இதே போல அருள்மொழியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கும் அதிர்ச்சி தீரவில்லை.
“எனக்கும் வானதிக்கும் இடையில பெரிய விரிசல் இருக்கு. ஆனா என்னைக்கும் அவ கையை நான் விடமாட்டேன். நமக்கானவங்கனு ஆன அப்புறம் அவங்களை இன்னொருத்தருக்கு விட்டுக்குடுக்குறதெல்லாம் என்னால கற்பனை பண்ணவே முடியல. நீ எப்பிடி இதெல்லாம் சாதாரணமா சொல்லுற? ஷீ இஸ் மிஸஸ் அட்சரன். நாளைக்கு வேற எவனோட பேரோ அவ பேருக்குப் பின்னாடி வந்தா உனக்குக் கஷ்டமா இருக்காது?”
“அவளை நான் லவ் பண்ணல அருள்.”
“நானும் வானதிய லவ்வா பண்ணுனேன்? எங்களோடது அரேஞ்ச்ட் மேரேஜ்தான்.”

“டேய்! அரேஞ்ச்ட் பை யூ. அதுதான் உண்மை. என்கிட்ட உன்னால எதையும் மறைக்க முடியாது.”
“ஏதோ ஒன்னுடா. ஆனா நீ யோசிக்கணும் அச்சு! இது நல்லா இல்ல. ஒன்றரை வருஷத்துல ஒரு நிமிஷம் கூடவா உன்னால அவளை நேசிக்க முடியாதுனு நினைக்குற? லைஃப் இஸ் ஹைலி அன்-பிரடிக்டபிள். நாளைக்கு நடக்குறதையே நம்மளால கணிக்க முடியாதப்ப நீ எப்பிடி ஒன்றரை வருஷத்துல ரெண்டு பேர் மனசும் மாறாதுனு கணிச்ச?”
வானதி வேதவதியிடமும், அருள்மொழி அட்சரனிடமும் எவ்வளவோ பேசியும் இருவரும் கரையவில்லை. அவர்களது மனதை மாற்ற முடியாத ஏமாற்றத்தோடு அருள்மொழி வானதியோடு விடைபெற்றான் அங்கிருந்து. காரிலேறி சிறிது தூரம் போனதும் வானதி உம்மென்று வருவதைக் கண்டு என்னவென வினவினான் அருள்மொழி.
“ஹூம்! அச்சு உன்கிட்ட சொல்லாமலா விட்டிருப்பான்? கூலிங் ஆஃப் பீரியடாம்.”
சோர்வோடு சொன்னவளின் முகமே மாறியிருந்தது. திருமண உறவு நச்சு உறவாக மாறுகையில் அதில் பிரியும் முடிவு சுபமாகவே இருக்கும். ஆனால் என்ன மாதிரியான உறவென அறியும் முன்னரே பிரிவுக்கான சாசனத்தில் கையெழுத்திடுவது எங்ஙனம் சரியாக இருக்கும்?
“அச்சுவோட ஐடியாதான். நீ ரொம்ப யோசிக்காத வானதி” சுருக்கமாகச் சொன்னான் அருள்மொழி.
“யோசிக்காம இருக்க முடியல அருள். இதெல்லாம் யோசிச்சா சில நேரம் மனசு பாரமாகுது” என அவளும் சுருக்கமாகப் பேச, ஒரு கையால் காரை ஓட்டியபடி இன்னொரு கையால் அவளது கரத்தைப் பற்றினான் அவன்.
அவனது கரத்தின் ஆளுமைக்குள் தனது கரம் அடங்கியபோதே அவளது மனதில் பேயாட்டம் போட்ட கலக்கமும் தவிப்பும் அகலுவதாய்! அருள்மொழியிடம் இனி காட்டவே விரும்பாத மென்மையான உணர்வுகளை மொத்தமாய் போட்டுப் பூட்டி வைத்திருந்த தனது மனப்பெட்டகம் திறப்பதற்கு இந்த ஒரு சிறிய செய்கையே போதுமானதாய்!
‘நோ! நோ! வேண்டாம் வானதி! அப்பிடி உருகிப் போய் பாக்காத. அவன் பழைய அருள் இல்ல. இப்ப நீ மெல்ட் ஆனா மறுபடி அழணும். வேதனைப்படணும். ரெடியா நீ?’ மனசாட்சி உலுக்கியதில் அவனது கரத்தை விலக்கிவிட்டாள் அவள்.
என்ன என்பது போலப் பார்த்தவனிடம், “அது… ஐ அம் ஓகே. என்கிட்ட இதமா பேசி உன்னைக் கஷ்டப்படுத்திக்க வேண்டாம்” என்று போராட்டத்துடன் சொல்லிவிட்டாள்.
அருள்மொழியின் கண்கள் அவளது வார்த்தையால் இடுங்கின.
“உன்கிட்ட பேசாம வேற யார் கிட்ட பேசுறது? இதுக்குனு சைட் சிக் (Side chick) வச்சுக்க முடியும்?” என காய்ந்தான் அவன்.

வானதியின் பார்வை முறைப்பாய் மாறியது.
“கட்டுன ஒருத்தியவே நீ அப்பப்ப இரிட்டேட் பண்ணி வேடிக்கை பாக்குற. இதுல சைட் சிக் நினைப்பு வேற.”
“நீ லூசுத்தனமா பேசுனா வேற எப்பிடிப் பதில் சொல்ல முடியும்? நீ என் ஒய்ப். நீ ஒரு விஷயத்துல கண் கலங்குனா எனக்கு அது கஷ்டம்தான். உன்னை நல்லவிதமா ஃபீல் பண்ண வைக்க என்னாலான முயற்சியை நான் பண்ணுவேன். புரியுதா?” காட்டமாய்க் கேட்டவனின் கையில் கார் பறந்தது.
“ஒய்ப்? வாய் தான் அதைச் சொல்லுது. மனசு முழுக்க என் மேல வன்மம் உனக்கு” குத்திக் காட்டினாள் வானதி.
அருள்மொழி காரை வேகமாய் ஓரங்கட்டியதில் சீட் பெல்டையும் தாண்டி முன்னே முட்டிக்கொள்ளப் போனவள் கடைசி நொடியில் சுதாரித்துக் கொண்டாள். கார் நின்றாலும் மூச்சு என்னவோ சீராகவில்லை அவளிடம்.
“நீ என்ன….” என உக்கிரமாய் ஏதோ சொல்ல வந்தவள், அருள்மொழியின் கரம் அவளது மோவாயைப் பற்றியதும் குரல் நாண்கள் செய்த சத்தியாக்கிரகத்தால் மௌனமானாள். அருள்மொழிக்கும் அவளது உளறல்களைக் கேட்பதை விட இந்த மௌனத்தைச் சகிப்பது எளிதாகத் தோன்றியது.

“எனக்கு உன் மேல எக்கச்சக்கமா கோவம் இருந்தது உண்மைதான். இப்பவும் ஆதங்கம் இருக்கு. ஆனா எப்பவும் நீ சந்தோஷமா இருக்கக்கூடாதுனு நான் நினைச்சதில்ல வானதி. நான் உன்னை என்கிட்ட நெருங்கவிடாம செஞ்சதே என் வாய்ல இருந்து வர்ற வார்த்தையால நீ காயப்படக்கூடாதுங்கிற கரிசனம் இருந்ததாலதான். உன்கிட்ட சொல்லாத உண்மைகள் என் மனசுக்குள்ள ஒளிஞ்சிருக்கு. உன் மேல அவ்ளோ வன்மம் இருந்தா அதைச் சொல்லி உன்னை நோகடிக்க எனக்கு ஒரு நிமிஷம் ஆகுமா? எனக்குள்ளவும் கொஞ்சம் போல நியாயவுணர்வு இருக்கு. பன்னிரண்டு வருஷம் உன்னை நான் விஷமா வெறுத்ததுக்கானக் காரணம் தெரிஞ்சப்ப நீ உடைஞ்சு அழுதல்ல. உன்னை நான் நோகடிக்குறதுக்கான கடைசி முறை அதுவாவே இருக்கட்டும்னு நினைச்சுதான் நான் சில உண்மைகளை முழுங்கிட்டிருக்கேன். தொழில்ல நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் தோக்கடிச்சா அது பெரிய வலி இல்ல. ஆனா பெர்சனல் லைஃப்ல இன்னொரு தடவை நான் உன்னைக் காயப்படுத்தக்கூடாதுனு நினைக்கிறேன். அதை நான் தொடர்ந்து ஃபாலோ பண்ண நீயும் கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணு.” எனத் தணிந்த குரலில், ஆனால் ஆக்ரோஷம் குறையாமல் சொன்ன அருள்மொழி அவளுக்கே புதிது.
வானதியின் சிரம் தானாகவே அசைந்தது.
அன்றிலிருந்து இரண்டாம் நாள் டெல்லியில் வானதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நாள். இருவரும் ஒரே விமானத்தில் ஏறி டெல்லியில் இறங்கித் தனித்தனி ஹோட்டல்களில் தங்கிக் கொண்டார்கள்.
தங்களது உறவு அருள்மொழிக்கு இவ்வழக்கில் எந்த வகையிலும் தடையாய் ஆகிவிடக்கூடாதென்ற எண்ணம் வானதிக்கு. கூடவே வேலை விஷயத்தில் அவனை அவளால் நம்ப முடியவில்லை.
நிரஞ்சன் ஷெட்டி அனுப்பிய வீடியோவை அவனைத் தவிர யாரும் திறந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் அவன் மட்டும்தானே அவளுடன் இருந்தான். மின்னஞ்சலைத் திறந்து பார்த்தவன் இன்ன பிற ஆதாரங்களை விட்டுவைப்பானா என்ன?
தனித்தனியே தங்கும் முடிவே சிறந்ததென கறாராகச் சொல்லிவிட்டாள் வானதி. அருள்மொழியும் அதற்கு தலையாட்டிவிட்டான். இந்த வழக்கில் அவள் தோற்றுப்போவாள் என்று அவனுக்கு அழுத்தமான நம்பிக்கை. அதே நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அடைந்தான் மறுநாள் காலையில்.
அடுத்த சில நிமிடங்கள் கழித்துக் காரிலிருந்து இறங்கிய வானதியைச் சவாலானச் சிரிப்புடன் பார்த்தான் அருள்மொழி.
அணிந்திருந்த லினன் புடவையின் தலைப்பை தோளில் வழுவாத வண்ணம் போட்டுக்கொண்டு பிரதான படிக்கட்டுகளை நோக்கி நடந்துவந்தவளின் கையில் ஒரு பழுப்பு வண்ண கோப்பு இருந்தது. அருள்மொழி எதிர்படவும் நின்றாள் அவள். கடுப்பை ஒதுக்கிவிட்டுப் புன்னகைக்க முயன்றாள் அவள்.
“வெல்கம் டு த ரியல் வேர்ல்ட். நூத்தம்பது கோடி அபராதம் கட்டுறதுக்கு ரெடியா இருக்குறியா?”
ஏளனச் சிரிப்போடு வினவியவனை தலை முதல் கால் வரை பார்த்தாள் நிதானமாக.
“அட்வகேட் கவுன்ல பாக்குறதுக்கு ஸ்மார்ட்டா இருக்குற அருள். ஆல் த பெஸ்ட்” என்றவள் முன்னேற எத்தனிக்க அவளது கையைப் பிடித்தான் அருள்மொழி.
“ப்ச்! கோர்ட் அருள்” என்றவள் சுற்றியும் பார்த்தபடி கையை அவனிடமிருந்து உருவ முயல,

“தெரிஞ்சே தான் கையைப் பிடிச்சேன். அதை விடு! இன்னைக்கு ஜட்ஜ்மெண்ட் வந்ததும் தாஜ்மஹாலுக்கு ஒரு விசிட் அடிப்போமா?” என அவன் விஷமமாய் வினவ, வானதியின் கண்களில் அனல்!
“அது எப்பிடி கோர்ட்டுக்கும் இழுத்துட்டு தாஜ்மஹாலுக்கும் போகலாமானு கேக்குற? நீ என்ன மேட்?” எனச் சீறியவளிடம்,
“உனக்கு விருப்பமில்லனா போகவேண்டாம். ஜட்ஜ்மெண்ட் வந்ததும் நீ மனசு உடைஞ்சு அழக்கூடாது, உன்னை ரிலாக்ஸ் ஆக்கலாம்னு யோசிச்சேன். அப்புறம் உன் இஷ்டம்” என்றவன் அவளது கையை விடுவித்தான்.
“தீர்ப்பு உனக்குப் பாதகமா கூட வரலாம்” என்றாள் வானதி சவாலாய்.
“நான் ஒரு கேஸை எடுத்துகிட்டேன்னா அதுல எனக்குச் சாதகமா மட்டும்தான் தீர்ப்பு வரும். என்னோட சக்சஸ் ரேட் என்னனு இன்டர்நெட்ல தேடிப் பாக்கலையா நீ?”
அருள்மொழியின் கர்வமானப் பேச்சில் வானதியின் நம்பிக்கை உடையவில்லை. அவள் பக்கம் இருக்கிற நியாயம் கொடுத்த நம்பிக்கை அது.
“உன் சக்சஸ் ரேட் இந்தக் கேசுக்கு அப்புறம் குறையும். ரெடியா இருந்துக்க.”
“இசிட்? பாக்கலாம்” என்றவன் தலையை ஒரு பக்கமாகச் சரித்துப் பார்த்துக் கண் சிமிட்டிவிட்டு உள்ளே செல்லப்போவதாகக் கை காட்டிவிட்டுச் செல்ல, வானதி இன்னொரு பக்கமாகத் திரும்பி நீதிமன்றத்தை நோக்கி நடந்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

