“ஹேய் அருள்! ஒரு அசைன்மெண்ட்டுக்காக ஊட்டிக்குப் போயிருந்தேன். அப்பிடியே நம்ம ஸ்கூலுக்கும் ஒரு விசிட் அடிச்சேன். நம்ம கேண்டீன் சமோசா டேஸ்ட் இன்னும் மாறலடா. நீ எப்பவும் என் சமோசாவத் திருடுவல்ல. ப்ச்! இந்த ஊட்டி பயணம் எனக்கு ஒரு நாஸ்டால்ஜியா ட்ரிப் அருள். Miss you, loser! சீக்கிரம் வா!”
–வானதியின் கடிதம்…
ஐவி மேனர், ஹாம்ப்ஸ்டெட், லண்டன்…
லண்டனின் டிசம்பர் மாதத்துக் காலை நேரம். ஐவி மேனர் என்ற பிரிட்டிஷ் பாணி மாளிகை, கைதேர்ந்த ஓவியனுடைய ஓவியத்தில் தீட்டப்பட்ட நரைமுடிக்கிழவனைப் போலப் பல ஆண்டுகால வரலாற்றைத் தனது வயதாகச் சுமந்துகொண்டு நின்றது.

சுற்றியும் ஓங்கி வளர்ந்த ஓக் மரங்கள் பாதுகாவல் அரணாய்ச் செழித்திருந்தன. ஓக் மரங்கள் சூழ்ந்த அந்த ஐவி மேனர் மாளிகைக்குள் பனிமூட்டத்தை விலக்கிக்கொண்டு, ஒரு அறையின் சாளரம் வழியே நுழைய முயன்ற சூரிய ஒளி, அந்த அறையில் கிடந்த படுக்கைக்கு அருகே இருந்த டீபாயில் வைக்கப்பட்டிருந்த ஃபோட்டோ ஃபிரேமைக் குளிப்பாட்டியது.
குளிருக்கு இதமாய் எரிந்துகொண்டிருந்த கணப்பில் தீக்கங்குகள் மட்டும் மிச்சமிருந்தன. அவை கொடுத்த கதகதப்பை அனுபவித்தபடி கண் விழித்தான் அருள்மொழி. இருபத்தேழாம் அகவையை இந்தாண்டு தாண்டிவிடுவான். தமிழன்தான் என்றாலும் பன்னிரண்டு ஆண்டுகள் லண்டன்வாசி என்பதால், அந்த ஊரின் சீதோஷ்ணத்தால் நிறம் கூடியிருந்தான். தோற்றத்தில் ஆளுமைக்கும் கம்பீரத்துக்கும் குறைவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மெல்ல மெல்ல நித்திரை விலகி எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தவனின் பார்வை, கதிரவனின் ஊமைக்கதிர்களால் ஒளியூட்டப்பட்ட அந்த ஃபோட்டோ ஃபிரேம் மீது குவிந்தது. பார்த்ததும் அவனது இதழ்களில் முறுவல் பூத்தது. அவனது காலை நேரங்கள் இந்த ஃபோட்டோ ஃபிரேமைப் பார்க்காமல் எப்போதும் விடிந்ததில்லை.

அந்தப் புகைப்படம் அவனது குழந்தைப்பருவத்தின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் குவித்து வைத்திருக்கும் இடம். கள்ளம் கபடமில்லாமல் விளையாட்டும் கேலிப்பேச்சுகளுமாய் நகர்ந்த நாட்களின் வரிவடிவ அடையாளம். இன்று நினைத்தாலும் நெஞ்சில் பசுமையாய் வாசம் வீசும் நட்பின் முழுத்தொகுப்பு அது.
கையில் எடுத்துப் பார்த்தவனின் கண்களில் அந்நாளின் ஞாபகங்கள், காலமெனும் கடற்கரையின் மணலைத் தொட்டுச் செல்லும் கடந்தகால அலைகளாய் அலையடித்தன.
பள்ளிக்காலத்தில் எவ்விதக் கவலையுமில்லாமல் அவனும் அவனது நண்பர் குழாமும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்தப் புகைப்படத்தில் இடது ஓரமாக அவன்! எப்போதும் அவனை ஒட்டிக்கொண்டே திரியும் வானதி! அடுத்து அட்சரன்! ஒரே சிந்தனை கொண்ட இரு ஜீவன்களாய் இலக்கியாவும் சஞ்சயும்!

எத்துணை அழகான நாட்கள் அவை! புகைப்படத்திலிருந்து பதினைந்தும் பன்னிரண்டுமான பதின்வயது தோற்றத்திற்கு மீண்டும் தானும் சென்று நண்பர்களையும் அழைத்துச் செல்லும் அவா அப்போதும் எழுந்தது அவனிடம்! ஃபோட்டோ ஃபிரேமைக் கரங்களால் வருடி காலப்பயணம் செய்யவியலாத தனது ஏக்கத்தைப் போக்கிக்கொண்டான் அருள்மொழி!
அதை அடுத்து இருந்த புகைப்படம் அவனது பெற்றோருடையது. சுந்தரமூர்த்தியும் மீனாட்சியும் சிரித்த முகமாய் இளமை மாறாமல் இருந்தார்கள். மரணதேவன் அவர்களது உயிரைப் பறித்துவிட்டு அவர்கள் மூப்பு எய்தாமல் பார்த்துக்கொண்ட கொடிய தருணம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறியிருந்தது.

சற்று முன்னர் நண்பர் குழாமின் புகைப்படத்தைப் பார்த்தபோது உண்டான இதம் மாறி, இதயத்தில் இறுக்கம் குடியேறியது. இத்துணை பெரிய மாளிகையில் செல்வச்செழிப்புடன் அதிகாரத்துடன் வாழ்ந்தாலும் இன்றைய நிலைக்கு அவன் தாய் தந்தையற்ற அனாதை. ஆதரிக்க ஆயிரம் பேர் இருந்தாலும் அன்பு காட்டப் பெற்றோர் இல்லையென்றால் அது எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் வேதனைதானே!
அந்த வலி எப்போதுமே அருள்மொழிக்கு உண்டு. அது ஒரு வேள்வித்தீயாய் அவனுக்குள் எரிந்துகொண்டே இருக்கிறது. வைராக்கியமாய் வலுப்பெற்றுக்கொண்டே இருக்கிறது.
வெளிப்படையாகச் சொல்லவியலாத பல கொடூர உண்மைகளின் சுமை அவனைப் பன்னிரண்டு ஆண்டுகளாக அழுத்திக்கொண்டிருக்கிறது. இதெல்லாவற்றையும் கடந்து அவனுக்கான ஆசுவாசப்பொழுது என ஒன்று உண்டென்றால், அது நண்பர்களுடன் உரையாடும் பொழுதுகள் மட்டுமே!
அவன் இந்தியாவிலிருந்து லண்டன் வந்தடைந்த சமயத்தில் இந்தியச் சந்தையில் உண்டான டிஜிட்டல் புரட்சியால் எண்ணற்ற செயலிகள் பிறந்துவிட்டன. அனைத்திலும் வீடியோ காலுக்கான வசதி இருந்தது. அவர்களின் முகங்களைக் கண்ணாடி திரையில் காணும்போது தூரம் கூட மறந்து போகும் அருள்மொழிக்கு.
அதிலும் அவன் ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தான். வானதியைத் தவிர மற்ற அனைவரிடமும் அவன் பழைய அருள்மொழியாகப் பேசினான். அவளைப் பார்க்கவோ உரையாடலை வளர்க்கவோ சமயம் வாய்த்தால் தயவு தாட்சண்யமின்றி இணைப்பைத் துண்டித்துவிடுவான்.
இவ்வளவு ஏன்? அவளுடைய அரசியல்வாதி தந்தை ஜெயசந்திரனிடம் அடம்பிடித்து அவள் யூ.கே வெகேஷன் வந்த சமயத்தில், அதே வெகேஷனைக் காரணம் காட்டி அவன் நியூசிலாந்து ஓடிவிட்டான்.
அவனிடம் தப்பிக்கும் நோக்கமில்லை; மாறாகப் புறக்கணிக்கும் எண்ணம் மட்டுமே! எத்துணை தூரம் அவளுடனான நட்பையும் அவள் மீதான அன்பையும் மதித்தானோ, அத்துணை தூரம் அவளைத் தன்னை விட்டு விலக்கி நிறுத்தினான்.
பெருமூச்சுவிட்டபடி படுக்கையை விட்டு எழுந்தவன் சாளரம் அருகே சென்று, வெளியே குளிர்காலத்தின் மீது கொண்ட காதலால் இலைகளைத் தியாகம் செய்து எலும்புக்கூடாக நின்ற மரங்களைப் பார்த்தான். அந்நேரத்தில் அறைக்கதவு மென்மையாகத் தட்டப்பட்டது.

“வாங்க ஆர்தர்.”
அவன் அனுமதி கொடுத்ததும் அறைக்குள் வந்தார் ஆர்தர். ஐம்பத்தைந்து வயது ஆங்கிலேயரான அவர்தான் அந்த மாளிகையின் நிர்வாகி. பன்னிரண்டு வயதில் இங்கே வந்த அருள்மொழிக்கு லண்டனின் உயர்மட்டச் சமூகத்தில் எப்படிப் பழகவேண்டும் என்ற நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர் அவர்.

“குட்மானிங் சார்! யுவர் காபி.”
சூடாய்க் காபியும் அன்றைய ‘டைம்ஸ் நாளிதழும்’ அவனுக்காகக் காத்திருந்தன.
“குட்மானிங் ஆர்தர்! தர்மலிங்கம் மாமா எங்க?” காபியை உறிஞ்சியபடி வினவினான் அருள்மொழி.
“அவர் இன்னும் முழிக்கல சார். இங்கிலாந்து குளிர் இன்னும் அவருக்குச் சவாலாதான் இருக்கு.”
ஆர்தர் சொன்னதும் புன்சிரிப்பு முகிழ்த்தது அருள்மொழியிடம்.

தர்மலிங்கம் – அவனது பாதுகாவலர். அவனால் மாமா என்று அழைக்கப்படும் மரியாதைக்குரியவர். இந்த ஐவி மேனர் மாளிகையின் உரிமையாளரும் கூட. பாசமாய் பழகினாலும் அவர் தன்னைக் கண்காணிக்க வைக்கப்பட்ட மனிதவுருவிலான நடமாடும் சி.சி.டி.வி என்ற எண்ணம் அருள்மொழிக்கு உண்டு.
மாளிகையின் உரிமையாளர் என்பதெல்லாம் கண்துடைப்பு என்பதும் அவனுக்குத் தெரியும். அவனுக்கு இதெல்லாம் தெரிந்ததாலேயே அவனிடம் அவருக்குக் கொஞ்சம் கூடுதல் பணிவும் பாசமும் உண்டு. இத்தனை ஆண்டுகள் தனிக்கட்டையாக வாழ்ந்த மனிதருக்குத் திடுதிடுப்பென ஐம்பத்திரண்டில் காதல் மலர்ந்திருக்கிறதாம்!
அருள்மொழிக்கு அது விசித்திரமாகத் தோன்றவில்லை. அவன் வாழும் நாடு அத்தகையது. இங்கே வயதைக் காரணம் காட்டி யாரும் காதலை நையாண்டி செய்வது இல்லை, உலகுக்கே கலாச்சாரத்தைக் கற்றுக்கொடுத்த அவனது தாயகத்தைப் போல.
தனிமனித உரிமைக்கு மதிப்பளிக்கும் மக்களிடையே வாழ்வது பெரும் சுகம். அதனால்தானோ என்னவோ வெளிநாட்டுக்குப் புலம்பெயரும் இந்தியர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்புவதில்லை போல. பந்த பாசத்தில் கூட அளவு வைத்தே பழகுவார்கள். பாசத்தையும் நேசத்தையும் அளவில்லாமல் வைத்துவிட்டு இந்தியக் குடும்பங்கள் படும் அவதியைப் பற்றி அருள்மொழிக்குத் தெரியாதா என்ன?
அவனுக்கு லண்டனும் இங்கிலாந்தும் கொடுத்த புனர்ஜென்மத்தில் நல்ல கல்வி, சௌகரியமான வாழ்க்கை, கௌரவமான சமூக அந்தஸ்து, அவனது படிப்புக்கேற்ற வேலை என அனைத்தும் நல்லதாகவே கிடைத்தன. ஒருவகையில் அனைத்தும் அவனுக்குக் கிடைக்கக் காரணமானவர் தர்மலிங்கம். அந்த நன்றி அருள்மொழிக்கு என்றுமே உண்டு.
“உங்களுக்குப் பிரேக்பாஸ்ட் தயாராகுது சார். இன்னைக்கும் நீங்க சாப்பிடாம போயிடக்கூடாதுங்கிறது தர்மலிங்கம் சாரோட ஆர்டர்.”
ஆர்தர் சொல்லவும் ஆமோதிப்பாய்த் தலையசைத்தான் அருள்மொழி. கடந்த ஒரு வாரமாக அவன் சரியாகச் சாப்பிடவில்லை.
காரணம் அவன் சட்ட ஆலோசகராகப் பணியாற்றும் மெரீடியன் லீகல் அசோசியேட்சில் அவனுக்கு வந்து சேர்ந்த வழக்கு. அவன் பாரீஸ்டருக்கான தேர்வு எழுதி ஒரு பாரீஸ்டரிடம் பணியாற்றிய அனுபவம் பெற்றவன். சட்ட ஆலோசனைகளைக் கடந்து சில முக்கியமான கார்ப்பரேட் வழக்குகளிலும் வாதாடியிருக்கிறான். அந்த நம்பிக்கையில் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு அது.
மான்கடா குழுமம் – இந்தியாவில் தொலைத்தொடர்பில் ஆரம்பித்து பொழுதுபோக்குத் தொலைக்காட்சி வரை எதையும் விட்டுவைக்காத தொழில் குழுமம் அது. அந்நிறுவனம் தற்போது சர்வதேச நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என ஒரு வழக்கு. அது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஒரு வாரம் கடந்திருந்தது. சாப்பாடும் உறக்கமும் அந்த வழக்குக்கு விலையாகிப் போயின.
குளிருக்கு இதமான வெந்நீர் குளியலுக்குப் பிறகு ஃபார்மல்ஸில் தயாரானவன், ஐவி மேனரின் சமையல் கலைஞர் கதிரவனின் கையால் தயாரான காலையுணவை அனுபவித்துச் சாப்பிட்டான். தர்மலிங்கம் திருநெல்வேலிக்காரர் என்பதால் நெல்லைவாசி ஒருவரைச் சமையலுக்காக அழைத்து வந்துவிட்டார். கதிரவனும் அவரது குடும்பமும் இதே மாளிகையின் அவுட் ஹவுஸில்தான் வசிக்கிறார்கள்.
“இன்னொரு இட்லி வைக்கட்டுங்களா தம்பி?”
“போதும்! இந்தக் குளிர்ல இட்லிமாவை எப்பிடி புளிக்க வைக்குறீங்க? கஷ்டமா இருந்தா பிரேக்பாஸ்ட் ஸ்டைலை மாத்திடுங்க.” இயல்பாய் அவரிடம் உரையாடியபடி சாப்பிட்டு முடித்தான் அருள்மொழி.
“இதுல என்ன கஷ்டமிருக்கு தம்பி? காலையிலயே ஆயில் ஐட்டம் எடுக்கமாட்டிங்க நீங்க. அதுக்காகக் கொஞ்சம் ஸ்ரதை எடுத்துப் பண்ணுறதுல என்ன இருக்கு? அதுதானே என் வேலை” என்றார் அவர் அடக்கமாக.
“அப்புறம் உங்க இஷ்டம். தர்மலிங்கம் மாமா இந்தத் தடவை கிறிஸ்மஸ் செலிப்ரேஷனை கிராண்டா பண்ணனும்னு சொல்லிட்டிருந்தார். பார்ட்டி ஏதாச்சும் வைக்கப்போறாரானு தெரியல. ஆர்தர் கிட்ட கேட்டுக்கோங்க.”
கதிரவனிடம் பேசிவிட்டு லண்டன் மேஃபேரில் இருக்கும் மெரீடியன் லீகல் அசோசியேட்சுக்குக் கிளம்பினான் அருள்மொழி. அவனுக்காகக் காத்திருந்த பெண்ட்லி ஃப்ளையிங் ஸ்பர் கார், தர்மலிங்கம் அவன் பாரீஸ்டர் ஆனதற்காகக் கொடுத்த பரிசு. கார் மேஃபேரில் இருக்கும் பெர்க்லி ஸ்கொயரை நோக்கிச் சீறிப் பாய்ந்தது.

அந்த கட்டிடத்தின் பதினைந்தாவது மாடியில்தான் மெரீடியன் லீகல் அசோசியேட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
உலகின் தலைசிறந்த சட்ட நிறுவனங்கள் இயங்கும் லண்டனின் இதயப்பகுதி அது. பெர்க்லி ஸ்கொயரை அடைந்து மின்தூக்கியில் மிதந்து பதினைந்தாவது தளத்தை அடைந்தவனை மினிமலிசப் பாணியில் வரவேற்றது மெரீடியன் லீகல் அசோசியேட்ஸ் நிறுவனம்.
அங்கே அருள்மொழியைப் போலச் சட்ட ஆலோசகர்கள் வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அருள்மொழி பணியாற்றுவது சர்வதேச வணிகச் சட்டத்தில் உண்டாகும் சிக்கல்களுக்கானப் பிரிவு.
அவனது கேபினுக்குள் நுழையும்போதே இருவர் அமர்ந்திருந்தார்கள். இந்தியாவிலிருந்து வந்திருந்த மான்கடா தொழில் குழுமத்தின் பிரதிநிதிகள் எனத் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள்.
“வெல்கம் டு லண்டன், ஜெண்டில்மென்” என்றபடி குளிருக்காக அணிந்திருந்த ஓவர் கோட்டைக் கழற்றிவிட்டுத் தனது லெதர் சுழல் நாற்காலியில் அமர்ந்தான் அருள்மொழி.
“உங்க தரப்புல சில தகவல்கள் கேட்டிருந்தேனே. ரெடியா?”
வந்திருந்தவர்களில் ஒருவன் எழுந்து மேஜை மீது டேப்லட்டை வைத்தான். அதில் குஜராத்தின் ‘நிர்வான் வனம்’ பகுதியின் வரைபடமும், அதன் நிதியறிக்கைகளும் இருந்தன. கூடவே சில அனுமதிச் சான்றிதழ்களும்.
“இதுதான் எங்களோட நிர்வான் வனம் புராஜெக்ட். உலகத்துல அழிவோட விளிம்புல இருக்குற விலங்கினங்களுக்கான சரணாலயம் இது. ஆப்பிரிக்கால ஆரம்பிச்சு உலகம் முழுக்க இருக்குற காடுகள்ல இருந்து சரியான அனுமதியோட விலங்குகளை இங்க கொண்டு வந்து பராமரிக்குறோம். இதுல சிக்கல் வந்தது போன மாசத்துல இருந்து. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சிலர் விலங்குநல ஆர்வலர்கள்னு சொல்லிக்கிட்டு எங்களோட நடவடிக்கையை அனிமல் டிராஃபிக்கிங்னு இன்டர்நேஷனல் மீடியால கதை கட்டி விடுறாங்க. அப்ப ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் இந்தியால ஜஸ்டிஸ் டுடேங்கிற ஃபேமஸான சௌத் இந்தியன் நியூஸ் சேனல் எங்களுக்குக் குடைச்சல் குடுக்குறாங்க. எங்களோட நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்குறாங்க.”
அவன் மூச்சு வாங்கச் சொல்லவும், அவனது பதற்றத்தைக் கண்டுகொண்டான் அருள்மொழி.

“ரொம்ப டென்ஷன் ஆகுறீங்களே! நான் கேட்டது ஆக்சுவலா அங்க என்ன நடக்குதுங்கிற உண்மைய. டாக்டர் கிட்டவும் லாயர் கிட்டவும் பொய் சொல்லக்கூடாது.”
இப்போது இரண்டாவது நபர் வாயைத் திறந்தான். “சார் இது பில்கேட்ஸ்ஸோட சீட் புராஜெக்ட் மாதிரி. உலகத்துல உணவுப் பஞ்சம் வந்துச்சுனா உணவு உற்பத்திக்காக அவர் சேமிச்சு வச்ச விதைகளை வியாபாரமாக்குவார். அதே மாதிரி நாளைக்கு விலங்குகள் அழிஞ்சுதுனா எங்க கிட்ட இருக்குற விலங்குகளோட டி.என்.ஏக்கள் மூலமா…” என்று சொன்னபடியே உண்மையான நிலவரத்தைச் சொல்லி முடித்தான் அவன்.
அருள்மொழி புருவத்தூக்கலுடன் அனைத்தையும் கேட்டவன் மெச்சுதலாய்ப் பார்த்தான் அவர்களை.
“இந்த புராஜெக்ட்டுக்கு நிர்வான் வனம்னு பேர் வச்சதுக்குப் பதிலா இந்தியன் ஜுராசிக் பார்க்னு வச்சிருக்கலாம்… ரொம்ப சுவாரசியமா இருக்கு. ஓ.கே! நாம இப்ப நம்ம தரப்புல தவறு இல்லங்கிறதுக்காக ஆதாரங்களைப் புரொசீட் பண்ணணும். அந்த நியூஸ் சேனல் மேல டிஃபமேஷன் ஷூட் பைல் பண்ணணும். இதெல்லாம் நான் இந்தியால வந்து செய்யணும்னா தனியா செய்யமுடியாது. ஐ நீட் அன் இந்தியன் அட்வகேட்ஸ் சப்போர்ட். நாங்க சேர்த்துதான் வாதாட முடியும். அதுக்கான அரேஞ்ச்மெண்ட்டைப் பண்ணுங்க.”
அவர்கள் கிளம்பியதும் அடுத்தகட்ட வேலைகளில் ஆழ்ந்தவனின் மொபைலுக்கு மதியவுணவுக்கான நேரத்தில் திடுமென ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. அனுப்பியவன் அட்சரன்.
“வானதிக்குக் கல்யாணம்டா. ஹெர் வெட்டிங் பிரிப்பரேஷன்ஸ் ஆர் அண்டர்வே.”
வாசித்தவனின் புருவங்கள் முடிச்சிட்டன. அப்படியே நாற்காலியில் சாய்ந்துகொண்டு கண்களை மூடினான். கண்களுக்குள் சிறுவயது வானதியும் அவனும் நண்பர்களுடன் சேர்ந்திருந்த தருணங்கள் இரயில்பெட்டியாய் நீண்டன. நீளமான நினைவுச் சங்கிலியின் கடைசி கண்ணியில் துயரமானதொரு சம்பவத்தின் அதிர்வுகள் பரவி அவை காட்சிகளாய் அவனை மருட்ட ஆரம்பித்தன.
எங்கும் நெருப்பு! நெருப்பில் மனித உடல்கள் பொசுங்கும் மோசமான நெடி! அந்த நெருப்புப் பிழம்புகளுக்கிடையே ஒரு பெண்ணின் கரம் பதினைந்து வயது அருள்மொழியை நோக்கி நீண்டது. தலையில் அடிபட்டு கோரமான காட்சிகளின் சாட்சியாய் நகர வழியின்றி கிடந்தவனிடம் இறுதி நம்பிக்கையாய் அந்தக் கரத்தின் தீண்டல்!
“அருள்… அருள்… எழுந்திருடா.”
அவனை எழுப்ப முயன்ற குரல் ஒரு கட்டத்தில் விக்கலுடன் நின்று போக, சம்பவங்களின் சங்கிலி அறுபட்ட வேதனையோடு விழித்துக்கொண்டான் இன்றைய இருபத்தேழு வயது அருள்மொழி. கண்கள் கலங்கி உடல் எல்லாம் நடுங்க, பழிவெறியும் கோபமும் அவனுக்குள் பற்றியெரிய, மொபைலை எடுத்தவன் நடுங்கிய விரல்களால் தட்டச்சு செய்ய ஆரம்பித்தான்.
“நான் இந்தியா வர்றேன் அருள். ஒரு கேஸ் இருக்கு. கூடவே ஐ ஹேவ் அ பிளான். வானதிக்குத் தெரியவேண்டாம்.”

தட்டச்சு செய்து அனுப்பிவைத்தவன் மீண்டும் இருக்கையில் சாய்ந்துகொண்டான். பன்னிரண்டு ஆண்டுகாலமாய் அவன் மனதுக்குள் போட்டு வைத்திருந்த திட்டத்தைச் செயல்படுத்தத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தவனுக்குச் சமீபகாலமாக இந்தியாவிலிருந்து கிடைத்த செய்திகள், அவனுக்கானக் காலம் வந்துவிட்டதென அறிகுறி காட்டிக்கொண்டிருந்தன.
இதோ வானதியின் திருமணம் உறுதியாகிவிட்டது! இதை விட்டால் அவனுக்கு எப்போது சரியான வாய்ப்பு கிட்டும்? வழக்கு விசாரணைக்கு இந்தியா செல்கையில் முழு உத்வேகத்தோடு தனது திட்டத்தையும் செயல்படுத்தும் முடிவுக்கு வந்தான் அருள்மொழி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

