“இத்தனை வருசம் பிசினஸ் வேர்ல்ட் எனக்குக் கத்துக் குடுத்தது ஒன்னே ஒன்னு தான்… பிசினஸ்ல ஜெயிச்சு நம்பர் ஒன் இடத்துல நிக்குறதை விட பிசினஸ்ல வர்ற மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி நம்மளை அப்கிரேட் பண்ணிட்டு சர்வைவ் ஆகிறது தான் புத்திசாலித்தனம்… நம்ம இலக்கை அடையுறதுக்காக நியாயம் தர்மத்தை ஒரு பக்கமா வச்சிடணும்… செண்டிமெண்ட் பாக்கக்கூடாது… முக்கியமா எந்த செண்டிமெண்ட்லயும் நம்மளை இன்வால்வ் பண்ணிக்கக்கூடாது”
-கிரிஷ்
லாங்வுட், சிம்லா…
பேபி பிங்க் வண்ண க்ளைடர் ஸ்கூட்டரை அதற்குரிய பெட்டியிலிருந்து எடுத்து கவரைப் பிரித்துக்கொண்டிருந்தாள் நித்திலா.

அம்ரித்தின் தோழன் இந்த க்ளைடர் ஸ்கூட்டர் வைத்திருக்கிறான் என்று சொல்லி வாங்கி தருமாறு கேட்டுக்கொண்டே இருந்தான். நித்திலாவும் சம்பளம் வாங்கியதும் கட்டாயம் வாங்கித் தருவேன் என வாக்களித்திருந்தாள். அன்று வங்கி கணக்கில் சம்பளம் ஏறியதும் முதல் வேலையாக விக்ரமோடு கடைக்குச் சென்று நல்ல ப்ராண்டாக பார்த்து வாங்கிவிட்டாள்.
மூன்றாயிரம் ரூபாய்! கிட்டத்தட்ட அவளது சம்பளத்தில் பத்து சதவிகிதம்! பிள்ளையின் சந்தோசத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த சதவிகிதமெல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவன் ப்ளேஸ்டேசன் வேண்டுமென கேட்டதற்கு மறுத்தவள் இதை வாங்கித் தர காரணமுள்ளது.
ப்ளேஸ்டேசன்கள் பிள்ளைகளை சோம்பேறியாக்க வல்லவை. இருந்த இடத்தை விட்டு நகராமல் கண்களைக் கெடுத்துக்கொள்வதற்கு ஏன் அதை வாங்கித் தரவேண்டுமென்பது நித்திலாவின் வாதம்.
அதே போல மொபைலில் அதிகநேரம் செலவளித்தால் குழந்தையின் கண்களுக்குப் பாதிப்பு நேருமென்பதால் ‘கிட்ஸ் யூடியூப்’ பார்க்கக்கூட அம்ரித்திடம் மொபைலைக் கொடுக்க மாட்டாள் அவள்.
சில பிள்ளைகளைப் போல மொபைல் கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என அடம்பிடிக்கும் ரகமல்ல அம்ரித். அவன் குழந்தையாக இருக்கும் போது வெளியே வேடிக்கை காட்டி விளையாட்டு காட்டி சாப்பாடு ஊட்டுவாளே தவிர மொபைல் போனை கொடுக்கமாட்டாள் நித்திலா.
க்ளைடர் ஸ்கூட்டரில் அங்குமிங்கும் போவது அவனுக்குப் பொழுதும் போகும், வியர்க்க விறுவிறுக்க விளையாடியது போலவும் ஆயிற்று!
அதில் விளையாடும் போது விழுந்து விட்டால் தலையில் காயம் படாமல் இருக்க குழந்தைகளுக்கான ஹெல்மெட் இருந்தது. அதை அணிவித்துவிட்டால் நாள் முழுவதும் அவன் க்ளைடர் ஸ்கூட்டர் ஓட்டினாலும் நித்திலா கவலைப்படவேண்டாம்.
இப்படி எண்ணற்ற சிந்தனைகளோடு காத்திருந்தவளின் செவியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் அம்ரித் வந்துவிட்டானென உற்சாகமாக வீட்டின் வாயிலுக்கு ஓடினாள் நித்திலா.
காரிலிருந்து அம்ரித்தோடு கிருஷ்ணராஜசாகரும் இறங்கினான். அவனைச் சத்தியமாக அவள் எதிர்பார்க்கவில்லை. உதவியாளனோடு பிள்ளையை அனுப்பி வைப்பான் என்று நினைத்திருந்தாள்.
ஆனால் அவனே வரவும் கொஞ்சம் அதிர்ச்சி தான்!
“அம்ரு”
சிரித்தபடியே ஓடியவள் அவனிடம் கை நீட்டவும் அம்ரித் நித்திலாவிடம் வந்தான்.
“பாட்டிய பாத்தியாடா?”
“ஆமா! பாட்டி அழகா இருந்தாங்க… எனக்கு லஞ்ச் ஊட்டிவிட்டாங்க நித்திம்மா”
அன்னையும் மகனும் கதை பேசுவதை அசுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணராஜசாகர் பைக்கில் இன்னும் இரண்டு இளைஞர்கள் வரவும் காரின் மறுபக்கம் நின்று கொண்டிருந்த இப்ராஹிமை அழைத்தான்.
“நீ இவங்க கூட போய் இன்ஸ்டலேசனை கவனி இப்ராஹிம்”
என்ன இன்ஸ்டலேசன் என புரியாமல் நித்திலா திகைக்கும் போதே அவளிடமிருந்து அம்ரித்தை வாங்கி இறக்கிவிட்டான்.
“நீ இப்ராஹிம் அங்கிள் கூட போ… எல்லாம் முடிஞ்சதும் அங்கிள் உனக்கு எப்பிடி கேம் விளையாடணும்னு சொல்லி தருவார்”
“சரி டாடி… லவ் யூ”
தன் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிய மைந்தனை பெருமிதத்துடன் பார்த்தபடி நிமிர்ந்த கிருஷ்ணராஜசாகர் குழப்பம் சூழ்ந்த நித்திலாவின் வதனத்தைப் பார்த்ததும் இவளுக்கு வேறு விளக்கவேண்டுமா என சலித்துக்கொண்டான் மனதிற்குள்.
பைக்கில் வந்த இளைஞர்கள் அவனது காரிலிருந்து பெட்டிகளை இறக்க நித்திலாவின் குழப்பம் இன்னும் அதிகரித்தது.
“இதுல்லாம் என்ன சாகர்?”
குழப்பத்துடன் கேட்டாள் அவள்.
“அந்த பெரிய பாக்ஸ்ல கேமிங் மானிட்டர் இருக்கு… வயர்லெஸ் கண்ட்ரோலர், ஹெட்செட், வெர்சுவல் ரியாலிட்டிக்கு வி.ஆர் அசஷரிஸ் எல்லாமே இருக்கு… இது ஃபோல்டபிள் டேபிள்… மானிட்டரை வால்ல ஃபிக்ஸ் பண்ண வேண்டாம்னு இப்ராஹிம் சொன்னான்”
“ப்ளேஸ்டேசன் வாங்குனிங்களா?”
குற்றம் சாட்டும் குரலில் வினவினாள் நித்திலா. ஆமாம் என்பது போல தலையசைத்தான் கிருஷ்ணராஜசாகர்.
“யாரை கேட்டு வாங்குனிங்க?”
“என் மகனுக்குப் பிடிச்சதை வாங்கிக் குடுக்க யாரை கேக்கணும்?”
“என் கிட்ட கேக்கணும்… கொஞ்சம் கூட கர்டசி இல்லாம என் வீட்டுக்குள்ள அதை அனுப்பி வைச்சிருக்கிங்க… இப்பவே அதை தூக்கி வெளியே கடாசுறேன்”
கோபாவேசத்துடன் அவள் செல்ல கிருஷ்ணராஜசாகர் அவளது கால்களைப் பார்த்தான்.
கொஞ்சம் நிதானம் தவறினாலும் செருப்புகளின் உயரவேறுபாட்டால் விழுந்துவிடுவாள்.
“ஏய் நித்தி” என்றபடி அவனும் பின்னே சென்றான்.
அவன் வாங்கிக்கொடுத்த ப்ளேஸ்டேசனை தூக்கி எறியும் வெறியோடு உள்ளே வந்தவள் இன்ஸ்டலேசனை மகன் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதையும் அவனுக்காக அவள் வாங்கியிருந்த க்ளைடர் ஸ்கூட்டர் அம்ரித்தின் காலடியில் கேட்பாரின்றி கிடப்பதையும் வேதனையோடும் அதிர்ச்சியோடும் பார்த்தாள்.
நடுங்கும் உதடுகளை கட்டுப்படுத்தியபடி குனிந்து க்ளைடர் ஸ்கூட்டரை அவள் எடுத்த போது கூட அம்ரித்தின் விழிகள் கேமிங் மானிட்டரை விட்டு அகலவில்லை.

கண்ணீர் முட்டியது அவளுக்கு. அம்ரித் க்ளைடர் ஸ்கூட்டரைக் கண்டுகொள்ளாதது என்னவோ அவளையே புறக்கணித்தது போல இருந்தது.
நித்திம்மா நித்திம்மா என தனது காலைச் சுற்றி வரும் மகனை இந்தளவுக்கு மாற்றியவன் மீது கடுங்கோபம் வந்தது.
“நித்தி”
பின்னே இருந்து அழைத்தவனின் சட்டை காலரைப் பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு அவளுக்குள் வெறி. ஆனால் மூன்றாம் நபர்கள் முன்னிலையில் அநாகரிகமாக நடந்துகொள்ள விரும்பாமல் விருட்டென திரும்பினாள்.
வெகு கவனமாக அவன் மீது இடிக்காமல் வெளியே வந்தவளின் மனதில் மாபெரும் பயம். பிள்ளை கையை விட்டுப் போய்விடுவானோ என்ற அச்சம்!
கிருஷ்ணராஜசாகர் அவள் பின்னே வந்தவன்
“பிள்ளை ஆசைப்படுறான்னதும் தூக்கிப் போட மனசு வரலல்ல?” என்று கேட்க நித்திலா கடுஞ்சினத்தோடு அவனை திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள்.
“உங்க கிரிமினல் புத்தி எப்பிடிப்பட்டதுனு தெரிஞ்சும் என் பிள்ளைய அனுப்பி வச்சது என்னோட தப்பு தான்… உங்களைக் கையெடுத்து கும்பிட்டுக் கேக்குறேன், தயவு பண்ணி போயிடுங்க சாகர்… என் உலகத்துல நானும் அம்ருவும் ரொம்ப சந்தோசமா இருக்கோம்… இடையில புகுந்து ஏன் குட்டைய குழப்புறிங்க?”
அவளது கோபத்திற்கு எதிர்வினையாற்றாமல் வெளியே கிடந்த கல் ஒன்றை துடைத்துவிட்டு அமர்ந்தான்.
“உன்னால அஃபோர்ட் பண்ண முடியாததை நான் வாங்கி குடுத்தேன்… இதுல என்ன தப்புனு எனக்குச் சீரியஸா புரியல”
“உங்களுக்கு எல்லாமே புரியும்… எல்லாமே தெரியும்.. நடிக்காதிங்க… என்ன ப்ளான் வச்சிருக்கிங்க நீங்க?”
பதில் சொல்லாமல் புதிராய் சிரித்தான் கிருஷ்ணராஜசாகர்.
“எனக்கு அம்ரு என் கூடவே இருக்கணும்”
அவன் சொல்லி முடித்ததும் “தட்ஸ் நாட் பாசிபிள்” என நிர்தாட்சணியமாக மறுத்தாள் நித்திலா.
“ஓ.கே! அப்ப இங்க இருந்து போறவரைக்கும் என் பையனுக்கு வேண்டியதை செய்யவிடு”
“இதுவரைக்கும் செஞ்சதே போதும்… இனிமே என் பையன் இருக்குற பக்கம் உங்க பார்வை திரும்புச்சுனா கூட நல்லா இருக்காது”
எரிமலையாய் வெடித்துவிட்டு சட்டென திரும்பியவள் தரையில் கிடந்த பாலீதீன் கவரை கவனிக்கவில்லை. ப்ளேஸ்டேசன் பொருட்களை எடுத்துச் சென்ற போது விழுந்திருக்க வேண்டும்.
“ஏய் நித்திலா” கவனமென அவன் எச்சரிப்பதற்குள் அவள் கவரை மிதித்துவிட்டாள்.
அதன் வழவழப்பில் பதிந்த பாதணிகள் வழுக்கிவிட நித்திலா சரிந்து விழப்போக ஒரு செருப்பு மட்டும் காலில் இருந்து கழன்றது.
செருப்பு இல்லாமல் அவளால் சமாளித்து நிற்க முடியாது என்பதை அறிந்து கிருஷ்ணராஜசாகர் எழுந்திருப்பதற்குள் நித்திலா விழுந்திருந்தாள்.
புல்தரை என்பதால் அடி எதுவும் படவில்லை. தானாகவே எழுந்து கால்களின் உயரவேறுபாட்டைச் சமாளித்து சாய்ந்து நடக்க முயலுகையில் கிருஷ்ணராஜசாகர் அவள் கையைப் பிடித்திருந்தான்.
என்னவென்பது போல பார்த்தவளை பக்கவாட்டில் பிடித்தபடி அழைத்துச்சென்று அவன் அமர்ந்திருந்த கல்லில் அமர வைத்துவிட்டு அந்தச் செருப்பை எடுத்து வந்தான்.
உயரம் குறைவான பாதத்தில் அணிய வேண்டிய செருப்பை தரையில் வைத்தவன் முழங்காலிட்டு அமர்ந்து நித்திலாவின் காலில் போட்டுவிட்டான்.

முன்பொரு முறை இதே போல சம்பவம் நடந்தேறிய தருணம் அவளுக்கு ஞாபகம் வந்தது.
அப்போதும் இப்படி தான் எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது காலைத் தொட்டு செருப்பை அணிவித்தான். அந்த நேரத்தில் என்னவெல்லாம் கற்பனை ஓடியது? கால் நுனியில் ஆரம்பித்து உச்சந்தலை வரை அதிர்வலையாகப் பரவிய சிலிர்ப்பை மறக்க முடியுமா?
முழுதாய் ஒரு நிமிடம் கூட இல்லாத தீண்டல் அது. அதிலேயே நித்திலாவின் புத்தி பிசகியது. எந்த ஒரு ஆண் ஈகோ இல்லாமல் பெண்ணின் காலை தொடுகிறானோ அவனை விட சிறந்த துணை அவளுக்கு யாராக இருக்க முடியுமென பைத்தியக்காரத்தனமாக நினைத்தவள் நித்திலாவே தான்.
அவன் காட்டியது இரக்கம் மட்டுமே என்பது கூட புரியாமல் அதையும் காதல் என நினைத்து ‘ரொமாண்டிசைஷ்’ செய்து குதூகலித்த தனது முட்டாள்தனத்தை இப்போது நினைத்தாலும் அவமானமாக உணர்ந்தாள் அவள்.
அதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தம்! இவனுக்கு ஈகோ வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கர்வம் டன் கணக்கில் இருக்கிறது.
வெடுக்கென காலை எடுக்க முயன்றவளைச் சமாளித்து செருப்பை மாட்டிய பிறகு விடுவித்தான் கிருஷ்ணராஜசாகர்.
நன்றி என வாய் வரை வந்துவிட்ட வார்த்தையை விழுங்கியவள் “உங்க இரக்கம் எனக்குத் தேவையில்ல” என முகத்திலடித்தாற்போல சொல்லிவிட்டு வீட்டுக்குள் செல்ல முற்பட்டவளை அவன் தடுத்தான்.
வெறும் இரக்கத்தால் மட்டுமே அவளது செருப்பை கையால் எடுத்து மாட்டிவிட்டதாக எண்ணிவிட்டாளா?
அவள் சாய்ந்து நடந்து செருப்பை எடுக்க சிரமப்படுவாளே என்ற அக்கறையில் அவன் செய்த செயலுக்கு இரக்கம் எனும் வண்ணம் பூசி அழகு பார்க்கிறாள். சற்று எரிச்சலாக இருந்தது கிருஷ்ணராஜசாகருக்கு.
சுயமரியாதை என்பது அவளது பிறந்தவீட்டுச்சீதனம் என்ற எண்ணம் போல. அவனுக்கும் கோபம் வந்தது. அதை அப்படியே வார்த்தைகளில் காட்டாமல் வெகு நிதானமாக கேட்டான்.
“நீ என் கிட்ட கபேல பேசுனது ஞாபகம் இருக்கா? உன்னோட காலத்துக்கு அப்புறம் நான் அவனைப் பாத்துக்கலாம்னு சொன்னல்ல… அப்ப திடீர்னு என் கூட வந்தா அம்ரு மிரண்டு போயிடுவான்… சோ இப்பவே அவனை லேவிஷ் லைஃப் ஸ்டைலுக்குப் பழக்குறேன்… உன் மெடிக்கல் ஹிஸ்டரிபடி பாத்தா என்ன வேணும்னாலும் நடக்கலாம் தானே?”
மிகவும் குரூரமான கேள்வி. ஒரு தாய் உயிருடன் இருக்கையில் அவளது வாழ்நாளின் முடிவைக் குறிப்பு காட்டி காரியம் சாதிக்க நினைப்பது அவனது அகராதியில் ராஜதந்திரமாக இருக்கலாம், ஆனால் உலகத்தாரின் பார்வையில் அது குரூரம் தான்.
நித்திலா விரக்தியாகச் சிரித்தாள்.
“அவ்ளோ சீக்கிரம் நான் போய் சேர்ந்துடமாட்டேன் சாகர்… எழுபது சதவிகிதம் நான் உயிர் வாழுறதுக்கான சான்ஸ் இருக்குனு உங்களுக்கும் தெரியுமே… அதுக்குள்ள என் ஆயுளுக்குக் கணக்கு போடுறிங்க… அவ்ளோ அவசரமா?”
குத்தலாகப் பேசினால் அவன் குற்றவுணர்ச்சியில் தலைகுனிவான் என்று எண்ணினாள். ஆனால் எதிரில் நிற்பவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை.
அலட்சியமாகத் தோளைக் குலுக்கிவிட்டு “அப்ப எனக்கு தேர்ட்டி பர்சண்டேஜ் சான்ஸ் இருக்குல்ல” என்று நம்பிக்கையோடு உரைத்துவிட்டு காரை நோக்கி சென்றான்.
அவனைத் தாக்குவதற்காக அவள் கூறிய வார்த்தைகளை வைத்தே அவளை வேதனைக்குள்ளாக்கிவிட்டு காரைத் திறந்து அமர்ந்துகொண்டான்.
நித்திலாவுக்குத் தான் மனம் பதபதைத்தது. இவன் சொன்ன வார்த்தையில் எதுவும் பலித்துவிடக்கூடாதென மலை மீதிருக்கும் அனுமனை வேண்டிகொண்டு வீட்டுக்குள் சென்றாள். அங்கே ப்ளேஸ்டேசனுக்கான மானிட்டரை டேபிள் மீது வைத்து அதை இன்ஸ்டால் செய்து முடித்திருந்தார்கள்.
அம்ரித்திடம் அதை எப்படி விளையாட வேண்டும், உபகரணங்களை எப்படி பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டுமென அனைத்தையும் விளக்கிக்கொண்டிருந்த இப்ராஹிம் நித்திலா உள்ளே வந்ததும் குரலைத் தணித்துக்கொண்டான்.
அவள் அவர்களைக் கவனிக்காமல் க்ளைடர் ஸ்கூட்டரை மட்டும் எடுத்துக்கொண்டு அவளது அறைக்குள் போய் கதவை அடைத்துக்கொண்டாள்.
மெதுவாக காலில் அணிந்திருந்த செருப்புகளை அகற்றிவிட்டு அணிந்திருந்த லெகின்ஸை முட்டி வரை உயர்த்தி பார்த்த போது கால்முட்டிக்குச் சற்று கீழே வலதுபக்கவாட்டில் சிறு வீக்கம் தெரிந்தது.
கடந்த இரண்டு மாதங்களாவே வலிக்கிறது. சாதாரண மூட்டுவலி என அலட்சியம் செய்தவளுக்கு அந்த இடம் வீங்கவும் பயம். நாட்கள் ஆனாலும் வீக்கம் குறைந்தபாடில்லை. சந்தேகப்பட்டு மருத்துவரிடம் போய் பயாப்சி செய்து பத்து நாட்கள் ஆகிறது. இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை.
இருப்பினும் நித்திலாவுக்குள் ஏதேதோ பயங்கள் பூதாகரமாக எழுந்ததால் அவசரமாக விக்ரமை மணந்துகொள்ள சொல்லி கேட்டாள். கூடவே அம்ரித்தின் அப்பா யார் என்ற நச்சரிப்பு அதிகரித்ததும் திருமணத்திற்கான இன்னொரு அவசரக்காரணம்.
இந்த பயத்திற்கு அடிப்படை பதினைந்து வயதில் அவள் அனுபவித்த வலி. அதற்கான தீர்வு பதினெட்டு வயதில் கிடைத்தது. மீண்டும் அதே வலியை அனுபவிப்பதில் அவளுக்குப் பயமொன்றும் இல்லை. அன்று போல இன்றும் அவளைச் சார்ந்து யாருமில்லை என்றால்.
ஆனால் அம்ரித் இருக்கிறானே! அவள் போய்விட்டால் அவனை யார் பார்த்துக்கொள்வார்கள்? அந்நிலையில் விக்ரம் ஆபத்பாந்தவனாய் நினைவுக்கு வந்தான். நிலமையைப் புரிந்துகொண்டான். சாவித்திரியும் சம்மதிக்க திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நேரத்தில் கிருஷ்ணராஜசாகர் குட்டையைக் குழப்பிவிட்டான்.
வலித்த வீக்கத்தை மீண்டும் லெகின்சால் மூடியவள் மீண்டும் செருப்பை அணிந்துகொண்டாள். வெளியே ப்ளேஸ்டேசனின் அம்ரித் கேம் விளையாடும் சத்தம் கேட்டது.
“சூப்பரா இருக்கு டாடி… நீங்களும் இங்கயே இருங்க ப்ளீஸ்”
“இல்லடா குட்டி… அப்பாக்கு நிறைய வேலை இருக்கு”
என்ன வேலை? என்னை குழி தோண்டி புதைக்க ஏதாவது யோசிக்கும் வேலையாக இருக்குமென குதர்க்கமாக கறுவிக்கொண்டாள் நித்திலா.
“குட் பாயா விளையாடு… டாடி கிளம்புறேன்… உங்கம்மா கிட்ட சொல்லிடு… இப்ப டாடிக்கு உம்மா குடு பாப்போம்”
அம்ரித் முத்தமிட்டிருப்பான் போல.
“ஹவ் ஸ்வீட் யூ ஆர்”
கிருஷ்ணராஜசாகர் மைந்தனைக் கொஞ்சியது நித்திலாவுக்குக் கேட்டது.
இவனுக்குக் கொஞ்சக்கூட தெரியுமா? ஆச்சரியக்கேள்வி ஒன்று எழுந்தது அவளுக்குள். அவனோடு வாழ்ந்த நாட்களில் ஒருமுறை கூட இப்படியெல்லாம் அவளை கிருஷ்ணராஜசாகர் கொஞ்சியதில்லை. கிண்டலும் கேலியுமாக தானே அவர்களின் உறவு கடந்து போனது.
“பை டாடி”
ஷூ கால்களின் தட் தட் சத்தம் வெளியே செல்வது கேட்டது. நித்திலா மெதுவாக கதவைத் திறந்தாள். ப்ளேஸ்டேசனில் விளையாடும் மும்முரத்தில் அம்ரித் அவளை மறந்துவிட்டான்.
நித்திலாவின் தாய்மனதினால் அதை தாங்க முடியவில்லை. அவனருகே சென்று அமர்ந்தவள் “அம்ரு சாப்பிடுறியா?” என்று கேட்கவும் கேமிங் கண்ட்ரோலரை வைத்துவிட்டு அன்னையை அணைத்துக்கொண்டான்.
“டாடி எனக்குனு எவ்ளோ வாங்கிக் குடுத்திருக்காங்க பாருங்க” என பெருமிதமாக அனைத்தையும் காட்டினான்.
“நல்லா இருக்குடா… இப்ப விளையாடுனது போதும்… சாப்பிட்டுட்டு தூங்கணும்ல”
“சரி நித்திம்மா”
ஒரேயடியாக கிருஷ்ணராஜசாகரின் மந்திரத்தில் மகன் மயங்கிவிடவில்லை என்ற நிம்மதியோடு அனைத்தையும் ஆப் செய்தவள் தான் வாங்கிய க்ளைடர் ஸ்கூட்டரை அவனிடம் காட்டினாள்.
ப்ளேஸ்டேசனை பார்த்த போது உண்டான அதே சந்தோசம் இப்போதும் அம்ரித்தின் முகத்தில் தோன்றியது.
“எனக்குப் பிடிச்ச பேபி பிங் கலர்”
க்ளைடர் ஸ்கூட்டரை வாங்கிக்கொண்டான் அம்ரித். ஹெல்மெட்டை அணிந்துகொண்டு அங்குமிங்கும் அதை ஓட்டி விளையாட ஆரம்பித்தான். குழந்தைகளுக்கு விலைச்சீட்டு பற்றியெல்லாம் அக்கறை கிடையாது என்பதை அப்போது புரிந்துகொண்டாள் நித்திலா. அவ்வளவு நேரம் இருந்த பதபதைப்பு அடங்கி நிம்மதி பரவியது அவளது மனதில்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

