“பணம் – இன்னைக்கு உலகத்தை இயக்குற மந்திரக்கோல்… அந்த மந்திரக்கோல் தன்னோட கைக்கு வர்றதுக்காக எந்த எல்லைக்கும் போறது என்னை பொறுத்தவரைக்கும் கீழ்த்தரமான விசயம்… உண்மையான உழைப்பைக் கொட்டி அந்த உழைப்பு வீணாகாம சாமர்த்தியமா நடந்துக்கிட்டா பணம்ங்கிற மந்திரக்கோல் நம்ம கைக்கு வர்றதோட நிரந்தரமா நமக்குச் சொந்தமும் ஆகிடும்… அதே மாதிரி புகழ் மோசமான போதைவஸ்து… அந்த போதைய அனுபவிச்சவனுக்கு அது இல்லாம வாழ முடியாது… மறுபடியும் புகழை தனக்குச் சொந்தமாக்கிக்க செய்யக்கூடாத காரியம் எல்லாத்தையும் செய்வான்… அந்த போதையிலிருந்து அவனை மீட்கிறதுக்கு எந்த மறுவாழ்வுமையமும் கிடையாது”
-கிரிஷ்
தி வுட்பெக்கர் கபே, லாங்வுட்…
“மொத்தம் நாப்பத்து நாலு வகை பாஸ்தா உண்டுனு கேள்விப்பட்டிருக்கேன் ரியா… நமக்குத் தெரிஞ்சது ஃபார்ஃபால், மெக்ரோனி, ஸ்பகட்டி, ஃபுசில்லி மட்டும் தான்… அதை தாண்டி நிறைய வெரைட்டீஸ் இருக்கு”
ரியாவிடம் பேசியபடியே காபி மோச்சா தயாரித்துக்கொண்டிருந்தாள் நித்திலா.

கபே திறந்து அரைமணிநேரம் ஆகியிருந்தது. இன்னும் வாடிக்கையாளர்கள் வராத நிலையில் விக்ரம், நித்திலா மற்றும் ரியாவைத் தவிர்த்து கபே ஊழியர்கள் மட்டும் அவரவர் வேலையில் ஆழ்ந்திருந்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
விக்ரமுக்குக் காலையில் காபி மோச்சா குடித்தால் அன்றைய நாள் உற்சாகமாகக் கழியும் என்ற நம்பிக்கை. வழக்கம் போல அதை தயாரித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.
காபி, கோகோ பவுடர் கலவையை வெண்ணீர் ஊற்றி கலந்ததும் சிறிது சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி கண்ணாடி தம்ளரில் நிரப்பி எடுத்துக்கொண்டவள் சாவித்திரியின் அலுவலக அறையை நோக்கி செல்ல விக்ரமோ அம்ரித்தோடு கபேக்கு வெளியே இருக்கும் புல்வெளியின் நடுவே நின்று பேசிக்கொண்டிருந்தான்.
கண்ணாடி தடுப்பின் வழியே அவர்களைப் பார்த்ததும் நித்திலா அங்கே சென்றாள்.
“அப்ப என்னோட டாடி இங்க தான் இருக்காங்களா?”
ஆச்சரியம் கலந்த அம்ரித்தின் குரல் காதில் விழுந்ததும் கதி கலங்க அவர்கள் முன்னே வந்து நின்றவள் என்ன இது என்பதைப் போல விக்ரமைப் பார்த்தாள்.
அவன் வெகு நிதானமாக மோச்சா நிரம்பிய கோப்பையை எடுத்துக்கொண்டான்.
“அவனுக்குத் தெரிஞ்சிக்க உரிமை இருக்கு நித்தி”
மெய் தான்! ஆனால் தெரிந்து மட்டும் என்னவாகப் போகிறது என்பது நித்திலாவின் கேள்வி. கூடவே மகன் மீது உரிமையுணர்வு அதிகம் கொண்டவளுக்கு அவனை யாரிடமும் பகிர்ந்துகொள்ளும் விருப்பமில்லை.
ஒரு மிடறு அருந்திவிட்டு ஏதோ சொல்ல வந்த விக்ரம் பேசாமல் திகைப்போடு நித்திலாவின் பின்னே பார்த்தான்.
அவள் புருவம் சுருக்கியபடி திரும்ப அங்கே கிருஷ்ணராஜசாகர் நின்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் நித்திலா வேகமாக நகர்ந்து அம்ரித்தைத் தனது அணைப்புக்குள் நிறுத்திக்கொண்டாள்.

இதைக் கண்டதும் கிருஷ்ணராஜசாகரின் கண்களில் மெல்லிய எரிச்சல்.
“நித்திலா…”
அவன் ஓரடி முன்னே எடுத்து வைக்க நித்திலா கை நீட்டி அவனைத் தடுத்தாள்.
“என் கிட்ட இருந்து அம்ருவை பிரிக்க பாத்திங்கனா நான் மனுசியா இருக்கமாட்டேன் சாகர்”
மெல்லிய எரிச்சல் தீவிரமாகி “லுக்! உன்னோட சினிமா டயலாக்ஸை நீயே வச்சுக்க… நான் ஒன்னும் உன்னையும் அவனையும் பிரிக்க வரல… அவனுக்கு நான் யார்னு தெரியணும்… நேத்து நான் தான் அவனோட டாடினு சொன்னதுக்கு நீ சொல்லாம என்னை டாடினு கூப்பிடமாட்டேன்னு சொல்லிட்டு ஓடுனான்… அதான் இன்னைக்கு உன்னை வச்சே அவனுக்கு நான் யார்னு சொல்ல வைக்க வந்திருக்கேன்” என்றான்.
நித்திலா முடியாதென்பது போல நிற்க விக்ரம் கண்களால் கிளம்புகிறேன் என்றான்.
போகாதே என கண்களை விரித்து தலையை மறுப்பாக அசைத்தவளின் சைகைமொழியை விக்ரம் கண்டுகொண்டானோ இல்லையோ கிருஷ்ணராஜசாகர் புரிந்துகொண்டான்.
“நாகரிகமான மனுசன்… அதான் சொல்லிட்டுக் கிளம்புறார்… சிலரை மாதிரி சொல்லாம கொள்ளாம ஓடி மறையுற பழக்கம் அவருக்கு இல்ல போல”
குற்றம் சாட்டும் குரலில் அவன் கூறவும் நித்திலா கடுப்பானாள்.
“அடுத்தவங்களைக் குறை சொல்லுறதுக்கு முன்னாடி நம்ம மேல என்ன தப்பிருக்குனு அனலைஸ் பண்ணி பாக்கணும்”
இருவரும் மாறி மாறி சாடிக்கொள்வதை வேடிக்கை பார்க்க விரும்பாதவனாக விக்ரம் மத்தியஸ்தம் பேச வந்தான்.
“நித்தி ப்ளீஸ்! அம்ரு உங்க ரெண்டு பேரையும் பாத்துட்டிருக்கான்… சார் நீங்களும் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்”
“என் பையனுக்கு நான் யார்னு இவ சொல்லட்டும்… அவன் கூட ரெண்டு வார்த்தை பேசிட்டுக் கிளம்பிடுவேன்”
பிடிவாதமாக நின்றான் கிருஷ்ணராஜசாகர்.
நித்திலாவின் அரவணைப்பில் நின்று கொண்டிருந்த அம்ரித் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு விக்ரமை வாடிய முகத்தோடு பார்க்க அவனுக்குப் பகீரென இருந்தது.
பெற்றோர் குழந்தையின் முன்னிலையில் சண்டையிட்டால் அக்குழந்தையின் மனநிலை எந்தளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை புரிந்துகொள்ளாத இருவரையும் விழிகள் இடுங்க பார்த்தவன் நித்திலாவின் அரவணைப்பிலிருந்த அம்ரித்தைத் தன்னிடம் வரும்படி பணித்தான்.
அவளும் போ என்று கண்ணசைக்க அம்ரித் விக்ரமிடம் வந்துவிட்டான்.
அவனைத் தூக்கிக்கொண்டவன் “உனக்கு டாடி வேணும்னு ரொம்ப நாளா கேட்டல்ல அம்ரு, இதோ நிக்கிறாரே இவர் தான் உன் டாடி” என்று கிருஷ்ணராஜசாகரைக் காட்டினான்.
நித்திலாவுக்கு அது பிடிக்கவில்லை தான். ஆனால் உண்மையைக் கூறுகையில் இடையில் புகவேண்டாமென நாகரிகம் கருதி அமைதி காத்தாள்.
கிருஷ்ணராஜசாகரின் முகம் மலர்ந்தது. விக்ரம் கொஞ்சம் நியாயமானவன் தான் என்று சொன்னது அவனது மனம். ஆனால் விக்ரம் கூறியதை அவனது மைந்தன் ஒப்புக்கொள்ள வேண்டுமே!
“நித்திம்மா சொல்லாம நான் டாடினு சொல்லமாட்டேன்”
இப்போது நித்திலாவின் முகத்தில் கர்வம் மின்னியது. நான் சொன்னால் தான் இவனுக்கு நீ தந்தை ஆக முடியுமென்ற கர்வம்.
கன்னத்தில் அறை வாங்கியதை போல உணர்ந்தான் கிருஷ்ணராஜசாகர்.
இம்முறை வேறு வழியே இல்லை. தன்னிடம் இவன் பணிந்து தான் ஆகவேண்டும். மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அலட்சியமாக அவனைப் பார்த்தாள் நித்திலா.
கிருஷ்ணராஜசாகர் எப்படி அவளிடம் வேண்டுகோள் விடுப்பது என தெரியாமல் தடுமாறினான். இதுவரை யாரிடமும் பணிந்து பேசி பழக்கமில்லையே!
விக்ரமுக்கு அவனது நிலமை புரிந்துவிட்டது.
“நித்தி இது தப்பு”
அவனது கடினக்குரல் நித்திலாவை உசுப்பேற்றியது.
“தப்புனு நல்லா தெரியும் விக்கி… ஆனா எப்பவும் தலை மேல ஒரு கிலோ வெயிட் இருக்குற மாதிரி ஹெட்வெயிட்டோட திரிஞ்ச ஒருத்தருக்கு அவரோட ஸ்டைல்ல பதில் சொல்லுறப்ப மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு”
சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தவள் கபேக்குள் போய்விட கிருஷ்ணராஜசாகரின் நிராசை சூழ்ந்த வதனம் அவளது உதாசீனத்தால் இறுகிப்போனது.
விக்ரமின் அரவணைப்பிலிருந்த அம்ரித் தன்னை யாரோ போல பார்ப்பதை அவனால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை. ஆனால் குழந்தையைக் கட்டாயப்படுத்தி எந்த உறவையும் அவன் மனதில் திணிக்க முடியாதே!
சிங்கிள் மதரால் வளர்க்கப்பட்ட அம்ரித் தாய் சொல்லாமல் யாருடனும் பழகமாட்டான். இப்போது அது நன்றாகவே புரிந்துபோனது.
நித்திலாவின் தயவின்றி அவனைத் தன்னோடு அழைத்துச் செல்வது நடக்காத காரியமென புரிந்ததும் தன்னை நிதானப்படுத்திக்கொண்டான்.
விக்ரம் தர்மசங்கடத்தில் இருந்தான். அம்ரித்திடம் “நீ அங்கிள் சொன்னா கேப்பல்ல அம்ரு?” என்று கேட்க ஆமென தலையாட்டினான் அவன்.

“ஹீ இஸ் யுவர் டாடி… நான் பொய் சொல்லலடா”
“அப்ப அம்மா ஏன் ஒன்னுமே சொல்லமாட்றாங்க?”
“அம்மாக்கு அப்பா மேல கொஞ்சம் வருத்தம்… அது சரியானதும் சொல்லுவாங்க”
“அப்ப அது வரைக்கும் நான் இவரை அங்கிள்னு தான் கூப்பிடுவேன்”
விக்ரம் கிருஷ்ணராஜசாகரைப் பார்க்க அவனோ முறுவலித்தான்.
“பையனை நல்லா வளத்திருக்கா உங்க ஃப்ரெண்ட்… அவ கிட்ட ஒரு விசயத்தை மறைக்காம சொல்லுங்க, அம்ரித் இல்லாம நான் திரும்பிப் போகமாட்டேன்”
சொல்லிவிட்டு அவனும் கிளம்பிவிட விக்ரம் யோசனையோடு அங்கேயே நின்றான்.
*******
சாகர் நிவாஸ், போட் க்ளப் சாலை, சென்னை…
பதிமூன்றாயிரத்து ஐநூறு சதுர அடியில் விரிந்து கிடந்து ஆடம்பரம் செல்வச்செழிப்பின் மொத்த உருவம் நான் தான் என கர்வமாகச் சொன்னபடி கம்பீரமாக வீற்றிருந்தது அந்த வீடு.
வெண்மையும் ஆலிவ வண்ணமும் சுவருக்கு வண்ணப்பூச்சுகளாய் அமைந்திருக்க தரைத்தளத்தோடு சேர்த்து கூடுதலாக மூன்று தளங்களை உள்ளடக்கியது
தரைதளத்தில் லிவிங் ரூம், நான்கு மாஸ்டர் பெட்ரூம்கள், சமையலறை, உணவருந்தும் இடம், பூஜையறை அமைந்திருக்க முதல் தளத்தில் இரண்டு மாஸ்டர் பெட்ரூம்களும் வீட்டின் ஆண்கள் தொழில் சம்பந்தமாகப் பேசுவதற்கு அலுவலக அறையும் இருந்தது.
இரண்டாம் தளத்தில் பிரத்தியேக உடற்பயிற்சிக்கூடமும், வீட்டில் இருப்பவர்கள் பொழுது போவதற்காக மினி தியேட்டர் வசதியும் உண்டு.
மூன்றாம் தளத்தில் நூலகமும் யாருடைய தொந்தரவுமின்றி புத்தகங்களை படிக்கும் இடமும் இருந்தது. கூடவே இன்னொரு அறையில் பியானோ மட்டும் வீற்றிருக்கும். வீட்டின் சின்ன எஜமானிக்கு மட்டுமே அந்த அறைக்குள் செல்ல அனுமதி.
வீட்டின் முன்பகுதியில் பதினைந்து கார்கள் நிற்பதற்காக பெரிய தரிப்பிடமும் அதிலிருந்து விரிந்து பின்பக்கத்து தோட்டத்தில் முடியும் பசும்புல்வெளியும் அழகோடு திகழும்.
புல்வெளிக்கிடையே சில தென்னைமரங்களும், அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் கல்வாழைகளும் செழித்து வளர்ந்திருந்தன. மொத்த தோட்டப்பகுதியையும் நிழலில் இருந்து காப்பதாக பொறுப்பேற்று குடை போல விரிந்திருந்தது குல்மொஹர் மரமொன்று. அதன் ஆரஞ்சு வண்ண மலர்கள் புல்வெளியில் எம்ப்ராய்டரிங் போட்டது போல கிடந்தன.
அதன் கிளைகள் பரவாத இடத்தில் மரமல்லி ஓங்கியர்ந்து வளர்ந்து தனக்கு கீழே இருந்த சிறிய குளத்தில் மலர்களை உதிர்த்து சுகந்தத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது.
அந்த மாளிகையின் சமையலறை காலையில் பரபரப்பாக இருந்தது. சமையல் எல்லாம் செஃபின் பொறுப்பு தான். இருப்பினும் நியூட்ரிசனிஷ்ட் கொடுத்த ஷார்ட்படி தான் சமையல் நடந்தேறும்.
அவருக்கு உதவியாக இரண்டு ஜூனியர்கள் மற்றும் காய்கறி வாங்குவது நறுக்குவதற்கென இரு பெண்கள் இருந்தனர். மற்றபடி வீடு சுத்தம், தோட்டப்பராமரிப்பு, இதர வேலைகளுக்கென பணியாட்கள் இருக்கின்றனர்.
வீட்டின் இப்போதைய பரபரப்புக்குக் காரணம் வீட்டின் தலைவரான ஆனந்த் சாகர் இன்னும் சிறிது நேரத்தில் அலுவலகம் கிளம்புவார். அவர் சாப்பிட வருகையில் அனைத்தும் தயாராக இருக்கவேண்டும்.
சாப்பாடு பரிமாறும் போது சமையலறைக்கும் உணவுமேஜைக்கும் இடையே அல்லாடுவது அவருக்குப் பிடிக்காது. எந்த ஒரு வேலையையும் முழுவதுமாக முடிக்காமல் இன்னொரு வேலைக்குத் தாவினால் கோபம் கொள்வார். அவரது கோபத்தைத் தணிக்கவல்ல வீட்டின் எஜமானியோ வட இந்தியாவில் தெய்வீக சுற்றுலாவிற்கு போயிருக்கிறார்.
எனவே அவர் கிளம்புவதற்குள் சமைத்து முடித்துவிடும் அவசரம்.
“புரொக்கலி க்ரீம் சூப் ரெடி சார்”
“டோஃபு ஸ்டர் ஃப்ரை, ஃப்ளாக்ஸ்சீட் சப்பாத்தியும் ரெடி”
“ஃப்ரூட் சாலட் இஸ் ஆல்சோ ரெடி”
ஒவ்வொருவராகப் பதில் சொல்ல செஃப் அனைத்தையும் சோதித்துவிட்டு உணவுமேஜையில் அடுக்கும்படி கட்டளையிட்டார்.
ப்ளூபெர்ரி ஜூஸ் மட்டும் போட்டு எடுத்துக்கொண்டவர் அதை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஆனந்த் சாகரின் வருகைக்காக காத்திருக்க வந்ததோ அவரது தங்கை காவேரியின் கணவர் சிரஞ்சீவி.
தொழில் விசயமாகப் பேசுவதற்காக காலையிலே வந்தவருக்கு நியூட்ரிசனிஸ்ட் பட்டியலிடும் உணவுகள் எல்லாம் அவரது ருசிகண்ட நாவுக்கு சுவைக்காது. எனவே எட்டிப் பார்ப்பதோடு சரி, சாப்பிடுவதெல்லாம் அரிது.
“இன்னைக்கு மானிங் என்ன ப்ரேக்ஃபாஸ்ட்?”
சட்டமாக செஃபிடம் விசாரித்தார்.
“ஃப்ளாக்ஸ்சீட் சப்பாத்தி, டோஃபு ஸ்டர் ஃப்ரை வித் புரொக்கலி க்ரீம் சூப் அண்ட் ஃப்ரூட் சாலட்”
பணிவாகப் பதிலளித்தார் செஃப். உடனே சிரஞ்சீவியின் முகம் அஷ்டகோணலானது.
“வாங்குற சம்பளத்துக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடாம இப்பிடி டயட் சாப்பாடா போட்டு என் மாமாவோட நாக்கை சாகடிச்சிடுவிங்க போல”
எள்ளலாகப் பேசியவருக்குப் பதிலடி கொடுக்க செஃபின் நாவு துடித்த போது சிம்மக்குரலொன்று அந்த வேலையைச் செய்து முடித்தது.
“அவர் வாங்குற சம்பளத்துக்குச் சரியா வேலை செய்யுறதால தான் என் வாழ்நாள் நீடிக்குதுங்கிறத மறந்துட்டிங்க போல”
சிரஞ்சீவி அசடு வழிந்தபடி திரும்பி பார்க்க செஃப் புன்னகைத்தார்.
“குட்மானிங் சார்”
செஃப் கூறிய காலைவணக்கத்துக்குத் தலையசைத்தவாறு, அணிந்திருந்த முழுக்கை சட்டையின் மீது ஃப்ளேசரைப் போட்டுக்கொண்டு உணவுமேஜையில் அமர்ந்தவர் ஆனந்த் சாகர்.

சால்ட் அண்ட் பெப்பராக இருக்கும் சிகை, ஆளை அளவிடும் விழிகளுக்குக் கவசம் போட்டாற்போல தங்க ப்ரேமிட்ட கண்ணாடி என இந்த வயதிலும் பார்ப்பதற்கு கம்பீரமும் ஆளுமையுமாக இருக்கும் பிரபல தொழிலதிபர்.
அமர்ந்தவர் தங்கையின் கணவரின் நக்கலைச் சரி செய்ய செஃபின் சமையலைப் புகழ்ந்தார்.
“குட்மானிங் சுகுமார்… உங்க சூப் ஸ்மெல் என்னை இழுத்துட்டு வந்துடுச்சு”
செஃப் புன்னகையோடு பரிமாற ஆனந்த் சாகரும் சாப்பிட ஆரம்பித்தார். சிரஞ்சீவிக்கு காபி கொண்டு வரும்படி தனது உதவியாளரிடம் செஃப் சுகுமார் கட்டளையிட்டார்.
அவரும் காபி வரும் வரை ஆனந்த் சாகரிடம் பேசலாம் என அவரருகே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
“ஏன் இப்பிடி டயட் ஃபுட் சாப்பிடுறிங்க மாமா? எதுக்குச் சம்பாதிக்கிறோம், வாய்க்கு ருசியா சாப்பிடுறதுக்கு தானே?”
“உங்க அக்காவோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர் இது… ஃபர்ஸ்ட் அட்டாக் வந்ததுல இருந்து சாப்பாட்டு முறைய சுத்தமா மாத்திட்டா நர்மு… நியூட்ரிசனிஸ்ட் போட்டு குடுத்த ஷார்ட்படி தான் சமைக்கணும்னு செஃபுக்கும் ஆர்டர் போட்டுட்டா… வீட்டோட முதலாளியம்மா போட்ட ஆர்டரை நான் மீற முடியுமா?”
நகைச்சுவை போல மனைவிக்குத் தன் மீதுள்ள அன்பை குறிப்புக் காட்டினார் ஆனந்த் சாகர்.
“அக்கா தான் இல்லையே… இப்ப சாப்பிடலாமே மாமா”
“நர்முவோட வார்த்தைய எப்பவுமே நான் மீறுனதில்ல… அவ இருந்தாலும் ஊருக்குப் போனாலும் அவ சொன்னபடி தான் இந்த வீட்டுல எல்லா வேலையும் நடக்கும்”
சிரஞ்சீவி நர்மதாவின் தம்பி தான். ஆனால் நர்மதாவுக்கு இருக்கும் நியாயமான குணம் அவருக்குக் கிடையாது. அதே நேரம் அக்கா குடும்பத்துக்குத் துரோகம் நினைக்கும் கொடும்பாவியும் அல்ல. கொஞ்சம் சின்னபுத்தி உண்டு. சில அற்பத்தனங்களும் அவரிடம் அடக்கம்.
மனைவியின் தம்பி என்பதால் தனது தங்கை காவேரியை சிரஞ்சீவிக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார் ஆனந்த் சாகர். சிரஞ்சீவியும் மனைவியை மதிப்பாய் நடத்துவார். என்னவொன்று, சிரஞ்சீவியோடு வாழ்ந்ததால் அவரைப் போல காவேரிக்கும் கொஞ்சம் சின்னபுத்தியும் சுயநலமும் அதிகம்.
மற்றபடி இருவருமே ஆனந்த் சாகரின் குடும்பத்தின் மீது பேரன்பு கொண்டவர்களே! சாகர் குழுமத்தின் சில்லறை வணிகத்தை நிர்வகிப்பவர் சிரஞ்சீவி தான். தொழிலில் படுசுத்தம்.
சாப்பிட்டு முடித்துவிட்டு ஆனந்த் சாகர் எழுந்திருக்க சிரஞ்சீவியும் காபி குடித்த கையோடு பேச வந்ததை பேச முனைந்தார்.
“இன்னும் எவ்ளோ நாள் கிரிஷ் தனியா இருப்பான் மாமா? அவனுக்குனு ஒரு ஃபேமிலி வேண்டாமா?”
“இதை நாலு வருசமா நீங்களும் சொல்லுறிங்க… அவன் காது குடுத்தானா? இல்லையே! சாருக்குக் குடும்பம் வந்துட்டா பிசினஸ்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியாதாம்… ஃபேமிலி, ரிலேசன்ஷிப், ஹஸ்பெண்ட் – ஒய்ப் பாண்டிங் இது எதுக்கும் வேல்யூ தெரியாம இருக்கான்… இவனுக்குச் சந்தீப் பரவால்ல சிரஞ்சீவி”
சிரஞ்சீவி அதிர்ந்து விழித்தார்.
“என்ன மாமா சந்தீப் தொழில்ல எடுத்த தப்பான முடிவுக்கு அப்புறமும் அவனுக்குச் சப்போர்ட் பண்ணுறிங்க? அதை விடுங்க… முழுநேர பொண்டாட்டிதாசனாவே மாறிட்டான்… அந்தப் பொண்ணு நிஹாரிகா அவனை ஆட்டி வைக்கிறா”
“அவன் பொண்டாட்டி மேல பாசம் வச்சிருக்கான்… அந்த விசயத்துல சந்தீப் என்னை மாதிரி… நிஹாரிகா அவனோட பாசத்தைப் பகடைக்காயா பயன்படுத்திக்கிறத அவன் புரிஞ்சிக்கிற காலம் வரும் சிரஞ்சீவி… இப்ப ட்ரீட்மெண்டுக்காக அமெரிக்கா போறேன்ங்கிற பேர்ல அவ அமெரிக்காக்கு வேற ஏதோ ப்ளானோட போனது எனக்குத் தெரியாதா என்ன? அப்பிடி இருந்தும் ஏன் ஒத்துக்கிட்டேன், அவ சந்தோசமா இருந்தா சந்தீப் சந்தோசப்படுவான்ங்கிற ஒரே காரணத்துக்காக தான்”
“இருந்தாலும் அந்தப் பொண்ணு ஓவரா ஆடுறா மாமா… அவளை கண்ட்ரோல் பண்ணலனா அது நம்ம குடும்பத்தை பாதிக்கும்”
“அப்பிடி ஒரு நிலமை நான் உயிரோட இருக்குறவரைக்கும் நடக்காது”
தீர்மானமாக உரைத்தபடி கை கழுவிய ஆனந்த் சாகர் தொழில் தொழில் என அதிலேயே மூழ்கி குடும்பத்தைக் கவனிக்காமல் இருக்கும் ரகமல்ல. தொழில் முக்கியம் தான். ஆனால் குடும்பமும் உறவுகளும் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் வரம். அவற்றை எக்காரணத்தைக் கொண்டும் இழந்துவிடக்கூடாதென்ற கொள்கை கொண்டவர்.
அந்தக் கொள்கையில் அவரிடமிருந்து வேறுபட்டவன் கிருஷ்ணராஜசாகர். சேம்பர் ஆப் காமர்ஸ் மீட்டிங் முடிந்து இந்நேரம் சென்னை மண்ணை அவன் மிதித்திருக்க வேண்டும். இன்னும் வராமல் இருக்கிறான். நர்மதாவும் ஒவ்வொரு முறை மொபைலில் பேசிய போதும் என்னென்னவோ காரணங்களைச் சொல்லி சமாளித்தார்.
அன்னையும் மகனும் என்னிடமிருந்து எதையோ மறைக்கிறார்கள். எவ்வளவு நாளைக்கு என்று நானும் பார்க்கிறேன் என மனதிற்குள் எண்ணியவாறு சிரஞ்சீவியுடன் ‘சாகர் குழுமத்தின்’ தலைமை அலுவலகத்திற்கு செல்ல கிளம்பினார் ஆனந்த் சாகர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

