“நம்ம ஆசைப்படுறது நடக்கணும்னு சண்டை போடுறதுக்கு எப்பவும் தயங்கக்கூடாது… சண்டை சச்சரவால கொஞ்சம் மனநிம்மதி கெட்டுப்போகும்… என்னடா லைஃப் போராட்டமா இருக்குனு சலிப்பு வரும்… பட் இந்த நிலமை டெம்பரரி தான்… இதுக்குப் பயந்து நமக்கு வேணுங்கிற ஏதோ ஒன்னை நாம விட்டுக்குடுத்தோம்னா லைஃப் லாங், நம்ம இழந்ததை நினைச்சு நமக்குள்ள வருமே ஒரு மனவுளைச்சல், அது நிரந்தரமா நமக்குள்ள தங்கிடும்… உலக வரலாறுல கூட சண்டை போடாம, போராடாம நல்ல காரியம் எதுவும் நடந்திருக்காது… ஃபார் எக்சாம்பிள் ஃப்ரெஞ்ச் ரெவால்யூஷன்”
-கிரிஷ்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்…
தனது மேலாண்மை படிப்பை முடித்துவிட்டு புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வத்துடன் நண்பன் ராகுலோடு தொழிற்சந்தையைப் பற்றிய தரவுகளைக் கிருஷ்ணராஜசாகர் சேகரித்து முடித்திருந்த சமயம் அது.
அவனுக்குக் கிடைத்த தரவுகளின்படி அழகு சாதனப்பொருட்கள் மற்றும் சரும பாதுகாப்பு பொருட்களுக்கான சந்தை வருங்காலத்தில் வளர்ச்சியை நோக்கி செல்லும் என்பதால் அதில் இறங்கி தொழில் செய்ய முடிவெடுத்தான்.
அதற்கு முதலீடு செய்ய ஆனந்த்சாகரிடம் தான் பேசியாக வேண்டும். அவருக்கோ சாகர் குழுமத்தின் மீடியா மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களை அவனது மேற்பார்வையில் விட்டுவிடும் எண்ணம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஏன் தனியே தொழில் ஆரம்பித்து ரிஸ்க் எடுக்கவேண்டுமென யோசித்தார்.
ஆனால் கிருஷ்ணராஜசாகருக்குத் தந்தையின் மேலாண்மைக்குக் கீழே பணியாற்ற விருப்பமில்லை.
அவனது குணாதிசயத்திற்கும், சுதந்திர மனப்பான்மைக்கும் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிவதும் சரிபடாதென வாதிட்டான். கூடவே தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் வெறி அவனுக்குள்.
சாகர் குழுமத்தின் இயக்குனர் போர்டில் உறுப்பினராக இருந்தாலும் அதன் மேலாண்மையில் கிருஷ்ணராஜசாகர் தலையிடுவதில்லை என்ற வருத்தம் ஆனந்த்சாகருக்கு இருந்தது. கூடவே எளிதாக மேலாண்மை செய்யக்கூடிய தொழில்களை மைந்தனிடம் ஒப்படைக்கிறார் என சிரஞ்சீவிக்கு அவர் மீது மனவருத்தம் இருந்தது.
அவரிடம் ஒப்படைக்கப்பட்ட சில்லறை வணிகம் தொடர்பான தொழிலில் நெருக்கடி வந்த சமயம் அது.
சில கட்சிகளும் பொது அமைப்புகளும் சிறு மற்றும் குறு வணிகர்களை ஊக்குவிப்பதற்காக பல்பொருள் அங்காடி மற்றும் பேரங்காடிகளைப் புறக்கணிக்க சொன்ன சமயத்தில் சாகர் குழுமம் நிறைய அதிருப்தியைச் சம்பாதித்திருந்தது.
அந்த அதிருப்தி ஒவ்வொரு காலாண்டு இலாபத்தையும் கபளீகரம் செய்து கொண்டிருக்க சிரஞ்சீவியின் கவனம் தொலை தொடர்பு மற்றும் மீடியா நிறுவனங்களின் பக்கம் திரும்பியது.
அவற்றை தான் ஆனந்த்சாகர் கிருஷ்ணராஜசாகரிடம் ஒப்படைக்கப்போகிறாரே என்ற கடுப்பு!
கிருஷ்ணராஜசாகரும் தந்தையிடமிருந்து தனது தொழிலுக்கான முதலீட்டை எதிர்பார்த்தானே தவிர சாகர் குழும நிறுவனங்களின் மேலாண்மையை அல்ல.
அன்றைய தினம் சாகர் குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விவாதமும் அதை பற்றியதே!
“காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரில இன்வெஸ்ட் பண்ணுறது ரொம்ப ரிஸ்கானது கிரிஷ்… நீ கொஞ்சம் அவசரப்படுறீயோனு தோணுது”
கவலையாய் கூறிய தந்தை ஆனந்த்சாகரிடம் மறுப்பாய் தலையசைத்தான் கிருஷ்ணராஜசாகர்.
“இல்லப்பா…. நான் நல்லா யோசிச்சு தான் காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரிய செலக்ட் பண்ணுனேன்… இன்னைக்கு ஸ்கின்கேர் ப்ராடக்ட்ஸ் தமிழ்நாட்டோட குக்கிராமம் வரைக்கும் போய் சேர்ந்திருக்கு… இந்த ஃபீல்ட்ல நம்ம இன்வெஸ்ட் பண்ணுனோம்னா நல்ல ரிட்டர்ன் கிடைக்கும்னு நம்புறேன்… மார்க்கெட்டை ஸ்டடி பண்ணிட்டுத் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்பா… சாகர் க்ரூப் ஆப் கம்பெனிஸை ஆரம்பிச்சது உங்கப்பா, அதை வளர்த்தது நீங்க… அதை தாண்டி எனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்புறேன்பா” என்றான் அவன்.
ஆனந்த்சாகருக்கு இதில் பெரிதாகப் பிடித்தமில்லை. ஆனால் மைந்தனும் ராகுலும் கைவசம் வைத்திருந்த தரவுகள் கட்டாயம் அந்தத் துறையில் அவர்களுக்கு இலாபம் வருமென்பதை ஊர்ஜிதம் செய்தன.
அவரும் இன்றைய தலைமுறை அழகுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கிறாரே! அத்தோடு முதலீடு பற்றி கிருஷ்ணராஜசாகர் அடிக்கடி கோரிக்கை விடுப்பது சொந்த மகனையே கெஞ்ச வைத்து வேடிக்கை பார்க்கிறோமோ என்ற குற்றவுணர்ச்சியைக் கிளற ஆனந்த்சாகரும் அவனது புதிய தொழிலுக்கு முதலீடு வழங்க ஒப்புக்கொண்டார். மைந்தனின் விருப்பத்திற்காக சம்மதம் தெரிவித்தார்.
அவர் ஒப்புதல் அளித்ததும் உற்சாகமாக அவரை அணைத்துக்கொண்ட கிருஷ்ணராஜசாகர்
“தேங்க்யூ சோ மச்… என்னோட முயற்சிக்குச் சம்மதம் சொன்னதுக்காக நீங்க வருத்தப்படுற மாதிரியான சிச்சுவேசன் வராம நான் பார்த்துப்பேன்பா… இட்ஸ் மை ப்ராமிஸ்” என்றான் மகிழ்ச்சி பொங்க.
தந்தையும் மகனும் உரையாடும் இக்காட்சியை அசூயையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் சிரஞ்சீவி.
மனதிற்குள்ளோ “இவன் தலையில ரீடெய்ல் பிசினஸை கட்டலாம்னு பாத்தா, பையன் சொந்த தொழில் செய்யுறதுக்கு மாமா கிட்ட சம்மதம் வாங்கிட்டானே! இனிமே என்ன சொல்லி நஷ்டத்துக்குச் சால்ஜாப்பு சொல்லுறது?” என நொந்து கொண்டார்.
ஆனந்த்சாகர் சொன்னபடி முதலீடு அளிக்க ‘ராந்த்வா காஸ்மெட்டிக்ஸ் அண்ட் ஸ்கின்கேர் ப்ரைவேட் லிமிட்டடின்’ தொழிற்சாலையும், அலுவலகமும் இனிதே உதயமானது.
மற்ற அழகு சாதன நிறுவனங்களை போல சின்ன சின்ன நிறுவனங்களிடமிருந்து அழகு சாதனப் பொருட்களை வாங்கி அதை ராந்த்வா பெயரில் சந்தைப்படுத்தும் எண்ணம் கிருஷ்ணராஜசாகருக்கு இல்லை.
அவன் சொந்தமாக அனைத்தையும் தயாரிக்க விரும்பினான். அதற்கெல்லாம் அதிகச் செலவாகும் என்பதால் தான் வங்கிக்கடனை நாடாது தந்தையிடம் வந்து நின்றான்.
அவனது விருப்பப்படி தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் இரண்டையும் செய்யுமளவுக்குத் தயாரான போது கிருஷ்ணராஜசாகர் பெரிதும் நம்பியது ஆன்லைன் வணிகத்தையே.
ஈ-காமர்ஸ் தளங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட், அழகுசாதனப்பொருட்களுக்கான பிரத்தியேக தளங்களான நைகா, பர்பிள் போன்றவற்றில் ராந்த்வாவின் தயாரிப்புகள் கிடைக்கும்படி செய்தான்.
கூடவே டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் புதிய வடிவமான ‘இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்கை’யும் அவன் விட்டுவைக்கவில்லை.
சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் இன்ஃப்ளூயன்சர்களை வைத்து தனது நிறுவன தயாரிப்புகளுக்கு விளம்பரம் செய்வதற்கான முடிவை எடுத்து அதை மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்டின் பொறுப்பென சொல்லியும் விட்டான்.
இதனால் ராந்த்வாவின் தயாரிப்புகள் வெகு சீக்கிரத்தில் இளம்பெண்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கின.
தங்கள் தயாரிப்புகளை வாங்குபவர்கள் வெள்ளையாவார்கள் என்று பொய்யான நம்பிக்கையை அளிக்காமல் சருமப்பாதுகாப்பை முன்வைத்து ஒவ்வொரு பொருளையும் விளம்பரம் செய்த யுக்தி நன்றாக வேலை செய்தது.
எல்லாம் சரியாகப் போய் அவனது நிறுவனம் ‘ப்ரேக் – ஈவன்’ நிலையில் இருந்த சமயத்தில் தான் அவர்கள் சமீபத்தில் சந்தைக்கு அறிமுகப்படுத்திய மாய்சுரைசர் மற்றும் சீரம் பற்றி ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் அளித்த எதிர்மறை விமர்சனம் தீயாய் பரவியது.
எதிர்மறை சங்கதிகள் வெகு சுலபமாக பரவிவிடுமே! எனவே தமிழில் வெளியான அந்த யூடியூப் வீடியோ அவனது போட்டி நிறுவனமான ஆயுஷ்வேத் அளித்த நிதியுதவியால் வடமாநில இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் தேசியளவில் பரவியது.
அனைவரும் ராந்த்வாவை விமர்சனம் செய்ய ஆரம்பிக்க ப்ரேக் ஈவனிலிருந்து நிறுவனம் சரியத் தொடங்கியது.
தொழிலில் அடியெடுத்து வைத்ததிலிருந்து கிருஷ்ணராஜசாகர் சந்திக்கும் முதல் சறுக்கல் இது! எப்போதுமே முதல் தோல்வி நம்மை மூர்க்கத்தனமாகச் சிந்திக்க வைக்கும்.
அதற்கு கிருஷ்ணராஜசாகரும் விதிவிலக்கல்ல!
தேசியளவில் தங்களை தலைகுனிய வைத்த சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் யாரென இப்ராஹிம் மூலமாக மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்டை விசாரிக்க வைத்தான்.
மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்டின் தலைமை அதிகாரியை சாகர் நிவாசுக்கே வரவழைத்திருந்தான். அலுவலகச்சூழலில் அவரை விசாரிக்க விருப்பமில்லை. அந்த அதிகாரியும் அவன் முன்னே தலையைக் குனிந்து அமர்ந்திருந்தார்.
“அந்த வீடியோவோட சம்மரிய மட்டும் தான் நான் கேட்டேன்… டீடெய்ல்ஸ் ப்ளீஸ்”
“நம்ம ரெகுலரா கான்டாக்ட் பண்ணுற இன்ஃப்ளூயன்சர் தான் சார்… அந்தப் பொண்ணோட ரிவியூ எப்பவுமே கரெக்டா நியூட்ரலா இருக்கும்… நம்ம பி.ஆர் டீம் அவங்களை கான்டாக்ட் பண்ணி இது வரைக்கும் ஏகப்பட்ட ப்ராடக்ட்ஸை ரிவியூ பண்ண சொல்லிருக்காங்க… இந்த ஃபைல்ல அந்த லிஸ்ட் இருக்கு”
கிருஷ்ணராஜசாகருக்கு இருக்கிற கோபத்தில் அந்தக் கோப்பினை புரட்டவா நேரம் இருக்கும்?
அதை அவன் கண்ணால் சீண்டிக்கூட பார்க்கவில்லை.
“ரீசண்டா நம்மளோட விண்டர் சேல்ல இண்ட்ரடியூஸ் பண்ணுன ஸ்கின் கரெக்ட் சீரம், மாய்சுரைசர் தான் டிபேட்டபிள் இன்சிடென்டா ஆகிருக்கு”
“இந்த மாதிரி விவகாரம் பிடிச்ச இன்ஃப்ளூயன்சர்ஸ் கிட்ட ஏன் பி.ஆர் டீம் காண்டாக்ட் பண்ணுறாங்க? வேற ஆளா இல்ல?”
“சார் நம்ம பி.ஆர் டீம் ஒரு இண்ஃப்ளூயன்சர்ஸால நமக்கு லாபம் வருமா இல்லையானு யோசிச்சு தான் செலக்ட் பண்ணுவாங்க… இந்தப் பொண்ணோட ரிவியூ ரொம்ப நியாயமா இருக்கும்… ஆடட் அட்வான்டேஜ் என்னனா இந்தப் பொண்ணு ஒரு கேன்சர் சர்வைவர்… அந்த சிம்பதியால இவங்க என்ன சொன்னாலும் சப்ஸ்கிரைபர்ஸ் நம்புறாங்க”
கிருஷ்ணராஜசாகர் அவரைத் தீர்க்கமாகப் பார்த்தான்.
“எவ்ளோ சப்ஸ்க்ரைபர்ஸ்?”
“ஃபிப்டி தவுசண்ட்ஸ் சார்… நான் சொன்ன டீடெய்ல்ஸ் எல்லாமே அந்த ஃபைல்ல இருக்கு… மத்தபடி அந்தப் பொண்ணு மாதிரி சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களோட பெர்ஷனல் டீடெய்ல்ஸ் அடங்குன டேட்டாவ மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்ட்ல ஸ்டோர் பண்ணிருக்கோம்”
ஐம்பதாயிரம் சப்ஸ்கிரைபர்க என்றதுமே அவனது பொறுமை காற்றில் பறந்துவிட்டது. வீடியோ வைரல் ஆன வேகத்தைக் கண்டு அவனும் மில்லியன் கணக்கில் சப்ஸ்க்ரைபர்கள் வைத்திருக்கும் இன்ஃப்ளூயன்சர் போல என தவறாக எண்ணிவிட்டான்.
“ஆஃப்டர் ஆல் ஃபிப்டி தவுசண்ட் சப்ஸ்கிரைபர்ஸ் வச்சிருக்குற ஒரு யூடியூபரால என்னோட நியூ ப்ராடக்ட்ஸ் தோல்வியடைஞ்சுதுனு சொன்னா அது எனக்கு எவ்ளோ பெரிய அசிங்கம்… மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்ட்னு ஒன்னு எதுக்காக இருக்கு? எவ்ளோ க்ராண்டான லான்ச், அட்வர்டைசிங் ஸ்ட்ராடஜி எல்லாமே செஞ்சும் இன்னைக்கு எங்க திரும்புனாலும் ராந்த்வா காஸ்மெட்டிக்ஸ் அண்ட் ஸ்கின் கேரை பத்தி மோசமான நியூஸ் வருது… இதுக்குலாம் காரணமானவளை சும்மா விட்டா அது எனக்குத் தான் அசிங்கம்… அந்தப் பொண்ணைப் பத்தி ஃபுல் டீடெய்ல்ஸ் இன்னைக்கு ஈவினிங் எனக்கு வந்தாகணும்”
கோபத்தில் குமுறியபடியே ஆணையிட்டான் கிருஷ்ணராஜசாகர். அவனது புதிய தொழில் முயற்சியின் ஆரம்பத்தில் விழுந்த அடி அவனை பெருங்கோபத்தில் ஆழ்த்திவிட்டது. அதன் விளைவு அதற்கு காரணமானவளைக் கண்டறிந்து களை எடுக்கும் முயற்சியை ஆரம்பித்து விட்டான்.
எதேச்சையாக வீட்டுக்கு வந்த சிரஞ்சீவியின் கண்ணில் இக்காட்சி பட்டுவிட அவரது உள்ளம் குதூகலித்தது.
“கோவப்படுறியாடா கண்ணா? இது தான் எனக்கு வேணும்… நீ கோவப்பட்டு சம்பந்தப்பட்ட பொண்ணை ஏதாச்சும் பண்ணணும்… அதை வச்சு உன் பேரை நான் டேமேஜ் பண்ணி இன்னைக்கு உனக்குக் குடுக்குறதா இருந்த தொழிலை மாமா கிட்ட இருந்து நான் வாங்கணும்… நீ பழையபடி சாகர் க்ரூப்போட ரீடெய்ல் தொழிலை கவனிக்கிற வெறும் எம்.டியா முடங்கி கிடக்கணும்… இது நடக்கும்டா மருமகனே” என்று மனதிற்குள் வன்மத்துடன் உரைத்தார் அந்த மனிதர்.
இதெல்லாம் கிருஷ்ணராஜசாகருக்குத் தெரியாது. அவன் கோபத்தில் கொந்தளித்துவிட்டு மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்டின் அதிகாரியை அனுப்பிவைத்த போது ஸ்ரீநயனி கல்லூரியிலிருந்து திரும்பியிருந்தாள்.
தமையனின் கோபத்திற்கு என்ன காரணமென ஊகித்தவள் அவனிடம் தயக்கத்தோடு ஒரு கோரிக்கையை வைத்தாள்.
சம்பந்தப்பட்ட சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரை எதுவும் செய்யக்கூடாதென்பதே அவள் வைத்த கோரிக்கை.
கிருஷ்ணராஜசாகர் அதற்கு செவிமடுப்பானா என்ன? உடனே மறுப்பு கூறினால் தங்கையின் மனம் வாடிவிடும் என்பதால் என்ன விவகாரமென விசாரித்தான்.
“உங்க ப்ராடக்ட்சுக்கு நெகடிவ் ரிவியூ குடுத்தாங்கல்ல, அந்த இன்ஃப்ளூயன்சர் என்னோட க்ளாஸ்மேட் தான் அண்ணா”
“சோ?”
“அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்… அவங்க ரிவியூஸ் எல்லாமே ஹானஸ்டா ஜெனியூனா இருக்கும்ணா”

“அப்ப என் கம்பெனியோட ப்ராடக்ட்ஸ் மட்டம்னு சொல்லுற?”
“இருக்கலாம்ணா… அங்க இருக்குற ஒவ்வொர் ப்ராடக்டுக்கும் நீ குவாலிட்டி செக்கப் பண்ணுறதில்லையே! சம்பந்தப்பட்ட டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களை தான் நீ விசாரிக்கணுமே தவிர நித்திலா சிஸ் மேல கோவப்படாத”
“நித்திலா சிஸ்ஸா?”
“ஹான், அது அவங்க நேம்… எங்க க்ளாஸ் தான்… பட் எங்க எல்லாரை விடவும் எல்டர்… பாவம், கேன்சர் ட்ரீட்மெண்ட்ல த்ரீ இயர்ஸ் இருந்ததால அவங்க ஹையர் செகண்ட்ரி முடிக்க லேட் ஆகிடுச்சாம்… எங்க க்ளாஸ்ல இருக்குற எல்லாருக்கும் அவங்க ரோல் மாடல்ணா… ப்ளீஸ் அவங்களை ஒன்னும் பண்ணக்கூடாது”
கிருஷ்ணராஜசாகர் ஒரு முடிவுக்கு வந்தான். தங்கையின் மனதை வருத்தாமல் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினான்.
“ஓ.கே நயனி… அப்ப நான் சொல்லுறதை செய்வியா?”
“என்ன?”
“உன்னோட ரோல் மாடலை நான் மீட் பண்ணணும்… அபிஷியல் மீட்டிங் இல்ல… வேற எங்கயாச்சும் வரச் சொல்லு.. இந்த ப்ராப்ளம் சால்வ் ஆகுறதுக்கு என்ன செய்யணும்னு நானும் அதுக்குள்ள யோசிக்குறேன்”
அவன் சொல்லவும் ஸ்ரீநயனி தயங்குவது தெரிந்தது.
“என்னாச்சு? ரோல் மாடல்னு சொன்ன? அவ கிட்ட பேசுறதுக்கு ஏன் தயங்குற?”
“அதில்லண்ணா… நான் இது வரைக்கும் அவங்க கூட பேசுனதே இல்ல”
ஸ்ரீநயனி இழுக்கவும் சிரித்தான் கிருஷ்ணராஜசாகர்.
“நீ கூட்டிட்டு வந்தனா ப்ராப்ளம் ஸ்மூத்தா சால்வ் ஆகும்… அதுவே என்னோட ஸ்டைல்ல டீல் பண்ணுனேன்னா கொஞ்சம் ஹார்ஷா மூவ் பண்ணவேண்டியதா இருக்கும் நயனி”
எச்சரித்ததோடு என் கடமை முடிந்ததென கிருஷ்ணராஜசாகர் அவனது அறைக்குச் சென்றுவிட மருமகள் யோசனையோடு அங்கேயே நிற்பதை பார்த்துவிட்டு சிரஞ்சீவியும் ஆனந்த்சாகரின் அறைக்குச் சென்றார் ராந்த்வாவின் பிரச்சனை தீவிரமானதை அவரது காதில் போடுவதற்காக.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

