“மெஜாரிட்டி பீபிள், எல்லாரும் போற வழில நானும் போறேன்னு சேஃப் ஜோன்ல வாழுறவங்க… ரிஸ்க் எடுக்குறதுக்கு, புதுசா எதையும் யோசிக்கிறதுக்கு நம்ம மக்களுக்குப் பயம்… சாதிக்கணும்னு ஆசைப்படுறவங்க கூட புதுசா எதையும் முயற்சி பண்ணாம இதுக்கு முன்னாடி யாரோ போட்ட கோடு மேல புதுசா ரோடு போடுறாங்களே தவிர, பழைய கோட்டை சின்னதா மாத்துறதுக்கு பெரிய கோடு ஒன்னை போடுறதுக்கு தயங்குவாங்க… எங்க இருக்குறதையும் இழந்துடுவோமோங்கிற பயம்… சேஃப் ஜோன்ல ட்ராவல் பண்ண ஆசைப்பட்டிங்கனா உங்களால நிறைய புது விசயங்களை எக்ஸ்ப்ளோர் பண்ண முடியாது… நம்ம லைஃப், நம்ம புரொபசன் செக்யூர்ட்னு நீங்க நினைக்கலாம்… ஆனா உங்களுக்கு இல்லாத துணிச்சலோட ஒருத்தர் திடீர்னு வந்து நீங்க செக்யூர்ட்னு நினைக்குற வழிக்கு மாற்றுவழி கண்டுபிடிப்பாங்க… அப்ப உங்களோட சேஃப் ஜோன் ஆட்டம் கண்டுடும்… அந்த சேஃப் ஜோன்ல செம்மறியாட்டு புத்தியோட உங்களை ஆஹா ஓஹோனு புகழ்ந்தவங்களுக்கு நியூ எக்ஸ்பரிமெண்ட் பிடிச்சுப் போச்சுனா, யூ வில் லூஸ் யுவர் டார்க்கெட்டட் குரூப்… இது தொழில், வாழ்க்கை, கனவு எல்லாத்துக்குமே பொருந்துற ரூல்… ரிஸ்க் எடுங்க, நிறைய புது விசயங்களை எக்ஸ்ப்ளோர் பண்ணி உங்க திறமைய காட்டுங்க… எல்லா இடத்துலயும் உங்க நேம் நிலைச்சு நிக்கும்… அதை விட்டுட்டு அடுத்தவங்க க்ரியேட் பண்ணி வச்சதை கையில எடுத்திங்கனா ஒரு கட்டத்துல உங்களை உயரத்துல தூக்கி வச்சவங்களுக்கு உங்க மேல சலிப்பு வந்துடும்”
-கிரிஷ்
ஆர்.எஸ். டவர்ஸ், ராஜா அண்ணாமலைபுரம்….
ராந்த்வா காஸ்மெட்டிக்ஸ் அண்ட் ஸ்கின்கேர் ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் சமீபத்திய ஆன்லைன் சர்வேயின் முடிவுகள் கான்பரன்ஸ் அறையின் மத்தியில் இருந்த பெரிய எல்.ஈ.டி ஸ்கீரினில் ஓடிக்கொண்டிருந்தன.
சரும பாதுகாப்பு மற்றும் அழகு சாதனப்பொருட்களின் சந்தை அடிக்கடி ட்ரெண்டுக்குத் தகுந்தபடி மாற்றங்களைச் சந்திக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களை வைத்தே இம்மாற்றங்கள் செய்யப்படும்.
அதில் ஒன்று தான் இப்போது ராந்த்வாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சமீபத்திய சர்வே முடிவுகள் சன் ஸ்க்ரீன் பற்றியது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இந்தியா மாதிரி வெப்ப நாடுகளில் வாழும் மக்களுக்கு சன் ஸ்க்ரீன் உபயோகிப்பதன் கட்டாயம் சமீப காலங்களில் தானே தெரிகிறது.
நம் மக்கள் சன் ஸ்க்ரீன் உபயோகிக்கத் தயங்குவதற்காக காரணங்களில் முக்கியமானது சன் ஸ்க்ரீன் போட்டதற்கு பின்னர் முகம் சுண்ணாம்பினால் வெள்ளை அடித்தது போல மாறுவதும், சில மணி நேரங்களில் முகத்தில் எண்ணெய் வடிய செய்வதும் தான். அடிக்கடி வியர்த்து வழியும் போது முகமும் எண்ணெய்யாக இருப்பதை யார் விரும்புவார்? கூடவே போகுமிடமெல்லாம் சன் ஸ்கீரின் அடங்கிய டப்பாவைத் தூக்கிச் செல்ல சோம்பல் படுவோரும் உண்டு.
ராந்த்வாவின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறை சன் ஸ்க்ரீனில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர விரும்பியது. அதில் ஒன்று கைக்கடக்கமாக உபயோகிக்க எளிதாக சன் ஸ்கீரின் கொள்கலன் ஒன்றை வடிவமைப்பது, எண்ணெய் வழியச் செய்யாத ‘மேட் ஃபினிஷ்’ கொடுக்கும் சன் ஸ்க்ரீனை தயாரிப்பது இரண்டாவது மாற்றம்.
அது குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஆன்லைன் சர்வே முடிவுகளில் நிறுவனத்துக்குச் சாதகமான தரவுகள் வந்திருக்கவே கிருஷ்ணராஜசாகர் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையின் பரிந்துரைகளை ஏற்றான்.
கைக்கடக்கமாக லிப்-பாம் ஸ்டிக் போல சன் ஸ்க்ரீன் ஸ்டிக்குகளை வடிவமைப்பது. அவற்றை டியோடரண்ட் போல போகும் இடத்துக்கெல்லாம் எடுத்துச் செல்லலாம்.
அடுத்தது பவுடர் சன்ஸ்க்ரீன். வழக்கமான சன் ஸ்க்ரீன் முகத்தில் எண்ணெய் வழிய செய்யும் போது இந்த பவுடர் சன் ஸ்க்ரீனை உபயோகித்தால் முகம் பொளிவாக காட்சியளிக்கும் என்றனர் ஆர் அண்ட் டி துறையினர்.
பவுடர் சன் ஸ்க்ரீன் அடங்கிய நீள் உருவை வடிவ கொள்கலனின் முன்பக்கத்தில் ப்ரஷ் ஒன்றை இணைக்கும்படி வடிவமைத்த கிராபிக்ஸ் வடிவத்தை காட்டினார்கள்.
இரண்டு பொருட்களின் வடிவமைப்பும் பயன்பாடும் கிருஷ்ணராஜசாகருக்குத் திருப்தியளிக்க அடுத்த கட்ட தயாரிப்பு வேலைகளில் இறங்கும்படி உத்தரவிட்டான் அவன்.
அத்தோடு அந்த கூட்டம் முடிவடைந்தது.
ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையைச் சேர்ந்தவர்கள் வெளியேறியதும் இப்ராஹிமோடு அமர்ந்திருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
கையில் குடியிருந்த ஆர்ம் ஸ்லிங் கழற்றப்பட்டிருந்தது. வயிற்றில் பட்டிருந்த காயமும் ஆறிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கண் மூடி திறப்பதற்குள் ஓடிப்போயிருந்தது.
இந்த ஒரு மாத காலத்தில் ஆர்.ஜே பியூட்டியின் தயாரிப்புகள் சந்தையில் நற்பெயரையும் இலாபத்தையும் ஈட்டித் தந்திருந்தன. இன்னும் அதில் என்னென்ன புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாமென ஜேஜூஷாப்பின் சி.ஈ.ஓவுடன் கலந்தாலோசனை செய்து அதற்கான ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் வேலைகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தன.
தனக்கு நேர்ந்த விபத்தினால் தொழிலில் சின்ன பாதிப்பு கூட வந்துவிடக்கூடாதென கிருஷ்ணராஜசாகர் கவனமாக இருந்தான். அதே நேரத்தில் அம்ரித்தைக் கொல்ல நடந்த முயற்சிக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கவும் அவன் மறக்கவில்லை.
நிஹாரிகாவை விவாகரத்து செய்யும்படி சந்தீப்பிடம் கூறியிருந்தான். அவனுமே தனது இத்தனை ஆண்டுகால காதலை நிஹாரிகா அவளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதை புரிந்துகொண்டு விவாகரத்துக்கு முறைப்படி விண்ணப்பித்திருந்தான்.
அவனது முடிவால் நிஹாரிகா மனதளவில் நொறுங்கி போயிருந்தாள். நர்மதாவிடம் கூட கண்ணீர் விட்டாளாம். சைலேந்திரியும் சந்தீப்பின் கோரமங்களா வீட்டுக்கு நடையாய் நடந்து சந்தீப்பின் மனதை மாற்ற முயன்றதாக ஜனார்தனன் அவனிடம் தெரிவித்திருந்தார்.
“உங்களுக்கு இதுல வருத்தமில்லையா மாமா?” என அவரிடம் கேட்டான் கிருஷ்ணராஜசாகர்.
“இல்ல மாப்பிள்ளை… இப்ப இருக்கிறவ என் மகள்னு நான் நினைச்சு பாசம் காட்டுன நிஹாரிகா இல்ல… குழந்தைய கொலை பண்ண நினைச்ச அரக்கி… அவளை ஜெயிலுக்கு அனுப்பாம காப்பாத்துனது உங்க குடும்பத்தோட நல்ல மனசை காட்டுது… இதுக்கு மேல அவளை உங்க குடும்பத்துல வச்சிருந்திங்கனா அவ உங்க குடும்பத்தைக் கூண்டோட அழிச்சிடுவா… சின்ன மருமகன் என்ன செஞ்சாலும் எனக்குச் சம்மதம் தான்”
அப்போது தான் பேச்சுவாக்கில் சைலேந்திரி சந்தீப்பை சந்தித்ததையும் கூறினார் ஜனார்தனன்.
அவரது மனம் நோகவில்லை என்றதும் கிருஷ்ணராஜசாகருக்குப் பெரிதாகக் குற்றவுணர்ச்சி இல்லை.
ஒரு மாத காலத்தில் அவர் அவனிடம் வேண்டியது எல்லாம் நித்திலாவைச் சந்தியுங்கள் என்பது மட்டுமே!
தன் மகள் அவனை நேசித்தது தெரியுமென அவர் சொன்னபோது கிருஷ்ணராஜசாகரால் ஏனோ முழு மனதாக அதை நம்ப முடியவில்லை.
மெய்யாகவே நேசித்திருந்தால் அவள் தன்னை விட்டு விலகிப்போயிருக்க மாட்டாள் என்ற எண்ணம் அவனுக்கு.
எனவே பர்மான் குடும்பத்தினர் மீதும் அவர்களின் தொழில் மீதும் கவனத்தைத் திருப்பினான்.
மருத்துவமனையிலிருந்து திரும்பிய தினத்திலிருந்து ஏதோ ஒரு விதத்தில் ஆயுஷ்வேத் நிறுவனத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரச்சனைகளைக் கொடுக்க ஆரம்பித்தான்.
ஆயுஷ்வேத்தின் சரும பாதுகாப்பு பொருட்களில் தடை செய்யப்பட்ட டாக்சிக் கெமிக்கல்கள் கலந்துள்ளதாக அதிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரி ஒருவரை பேச வைத்தான். ஆயுர்வேதப்பொருட்கள் என்ற பெயரை பயன்படுத்தி அவர்கள் அழகு சாதன பொருட்களை விற்பதாக பொதுநல வழக்கு ஒன்றை தொடர வைத்தான்.
ஆயுஷ்வேத்தின் அழகு சாதனப்பொருட்கள் பயன்படுத்தியவர்களுக்கு சருமத்தில் ஒவ்வாமை வருவதாக சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களை வைத்தே எதிர்மறை விமர்சனம் கொடுக்க வைத்தான்.
அவர்கள் புதிதாக தொடங்கவிருந்த ப்ளாண்டுக்கான நிலத்தைத் தங்களை மிரட்டி வாங்கியதாக நில உரிமையாளரை வழக்கு போட வைத்தான்.
இனி தன்னைப் பற்றி சிந்திக்கக்கூட நேரமில்லாமல் வழக்குகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கித் தவிக்க வைத்தான். அவன் கொடுக்கிற குடைச்சல் தாங்காமல் அப்பனும் மகனும் திவாலாகி ஓடவேண்டுமென இப்ராஹிமிடம் அடிக்கடி வெஞ்சினத்தோடு உரைப்பான் கிருஷ்ணராஜசாகர்.
இதோ இப்போதும் அதை தான் கூறிக்கொண்டிருந்தான். ஆனால் இப்ராஹிமோ வேறு யோசனையில் இருந்தான்.
“இப்ராஹிம்! நான் உன் கிட்ட தான் பேசிட்டிருக்கேன்”
இரண்டு மூன்று முறைகள் கிருஷ்ணராஜசாகர் அவனை உலுக்கிய பிறகு சிந்தனையிலிருந்து மீண்டான்.
“என்னப்பா யோசிக்கிற நீ?”
“உங்க மகனை கொல்ல வந்தவங்களை பழி வாங்கணும்னு இவ்ளோ பிரயத்தனப்படுறிங்க… அந்த மகன் வரக் காரணமா இருந்த நித்திலா மேடமை மட்டும் ஏன் சார் புரிஞ்சிக்க நீங்க ட்ரை பண்ணல?”
சாதாரண கேள்வி தான். என்னிடம் கேள்வி கேட்கும் அதிகாரம் உனக்கு இல்லை என்று சொல்லி இப்ராஹிமை அடக்க அதிக நேரம் எடுக்காது கிருஷ்ணராஜசாகருக்கு. ஆனால் அவன் சொல்வது உண்மை என கூவும் மனசாட்சியை எப்படி அடக்குவான்?
“நீங்க கன்ஷாட்ல அட்டாக் ஆகி விழுந்தப்ப அவங்க எவ்ளோ கதறுனாங்கனு எனக்கும் சந்தீப் சாருக்கும் மட்டும் தான் தெரியும்… அந்த நேரத்துல அம்ருவ கூட அவங்க கவனிக்கல… அவங்க சாகர் சாகர்னு உங்களை மட்டும் தான் பாத்து அழுதிட்டிருந்தாங்க… உங்களுக்கு சர்ஜரி முடியுற வரைக்கும் ஹாஸ்பிட்டல்ல உடைஞ்சு போய் உக்காந்திருந்தாங்க”
கிருஷ்ணராஜசாகரின் அழுத்தமான பார்வையில் இப்ராஹிமின் பேச்சு பாதியில் நின்றுவிட்டது.
“ஏன் நிறுத்திட்ட? மேல சொல்லு… உனக்குத் தெரியாததை நான் சொல்லட்டுமா? எனக்குக் கான்சியஸ் திரும்புனதும் நான் அவளைப் பாக்க ஆசைப்பட்டேன்… அம்ருவ அவளே வச்சிக்கட்டும், ஆனா எனக்காக ஏன் கண்ணீர் விட்டானு கேக்க நினைச்சேன்… ஆனா அவ என்ன சொன்னா தெரியுமா? அவ எதிர்பார்த்த மரண பயத்தை என் கண்ணுல பாத்துட்டாளாம்… அந்த நிலமையிலயும் அம்ருவையும் அவளையும் நான் தொந்தரவு பண்ணக்கூடாதுனு என் கிட்ட கண்டிசன் போட்டா… அவளை ஏன் நான் புரிஞ்சிக்கணும்? சொல்லு”
“நீங்க புரிஞ்சிக்க ட்ரை பண்ணி தான் ஆகணும் சார்… இது வரைக்கும் உங்க பிசினஸ் லைஃப்ல எந்த பிரச்சனை வந்தாலும் புத்திசாலித்தனமா ஹேண்டில் பண்ணி அதுல ஜெயிச்ச உங்களால ஏன் சொந்த வாழ்க்கையில மட்டும் சரியான முடிவை எடுக்க முடியல? அதுக்குக் காரணம் உங்களோட ஈகோ”
“இப்ராஹிம்…”
அதட்டியவனை தீர்க்கமாகப் பார்த்த இப்ராஹிம் மனதில் பட்டதை உரைக்க ஆரம்பித்தான்.
“நீங்க கோவப்பட்டாலும் எனக்குக் கவலை இல்ல சார்… நீங்க ஒரு ஈகோயிஸ்ட்… பிசினஸ் மாதிரியே ரிலேசன்ஷிப்பையும் நீங்க ட்ரீட் பண்ணுறது சரியில்ல… பிசினஸ்ல ஏதோ ஒரு இடத்துல நீங்க சருக்குனிங்கனா அதுல ஜெயிக்கிற வரைக்கும் ஓய்ஞ்சதில்ல… அப்பிடி இருக்கிறப்ப ஃபேமிலில மட்டும் ஏன் சார் சருக்குன இடத்துலயே பிடிவாதமா நிக்குறிங்க?”
“என்னை வேண்டாம்னு ஒதுக்கிட்டுப் போனவ பின்னாடி லோலோனு அலைய சொல்லுறியா? அவளுக்கு இவ்ளோ ஈகோ இருக்குனா எனக்கு எவ்ளோ இருக்கும்?”
“அவங்களோட ஈகோவால அவங்க யாரையும் இழக்கல சார்… முக்கியமா அம்ருவ… பட் உங்க ஈகோவால அம்ருவ இழந்து நிக்குறிங்க… உங்களோட சோ கால்ட் ஈகோ உங்களை லூசர் ஆக்கி நிக்க வச்சு வேடிக்கை பாக்குது”
“ஏய்”
கிருஷ்ணராஜசாகரின் குரலில் அந்த அறையே அதிர்ந்தது. இப்ராஹிம் அதற்கெல்லாம் அஞ்சவில்லை. அவனது சட்டையைப் பிடித்தவன் “ஐ அம் நாட் அ லூசர்… ஐ வாஸ் பார்ன் டு வின்” என்றான் கோபத்தோடு.
“தென் ட்ரை டு வின் யுவர் லவ்”
இப்ராஹிமின் சட்டையை விட்டான் கிருஷ்ணராஜசாகர். அவனது முகத்தில் அக்கணம் வெளிப்படையாகத் தெரிந்த வேதனைக்குக் காரணம் காதல் என்பதை அறியாமலா இத்தனை ஆண்டுகள் உதவியாளனாக இருக்கிறான் இப்ராஹிம்?
“நீங்க நித்திலா மேமை லவ் பண்ணுனதை மத்தவங்க கிட்ட மறைக்கலாம்… நயனி மேம்காக கல்யாணம் பண்ணுனோம்னு உங்க ஃபேமிலிய நித்திலா மேமை கூட நீங்க ஏமாத்தலாம்… உங்க நிழல் மாதிரி இருக்குற என்னை உங்களால ஏமாத்தவே முடியாது சார்… நீங்க நித்திலா மேமை பாத்த நிமிசத்துல இருந்து லவ் பண்ணுனிங்க… அது எனக்கும் ராகுல் சாருக்கும் மட்டும் தான் தெரியும்… அதை வெளிய நாங்க சொல்லாம இருக்குறதுக்குக் காரணம் நீங்க மட்டும் தான்… ப்ளீஸ் சார்! உங்க பிசினஸ்ல நீங்க தான் இப்போதைக்கு ராஜா… கொஞ்சம் உங்களோட பெர்ஷனல் லைஃப்லயும் கான்சென்ட்ரேட் பண்ணுங்க… யூ டிசர்வ் அ பியூட்டிபுல் அண்ட் பீச்ஃபுல் லைஃப்”
அதற்கு மேல் பேச எதுவுமில்லை என்பது போல இப்ராஹிம் அந்த அறையிலிருந்து கிளம்பிவிட்டான்.
கிருஷ்ணராஜசாகர் அங்கேயே சிலையாய் சமைந்து நின்று கொண்டிருந்தான்.
ஈகோவால் தன்னைப் பிரிந்தாள் என நித்திலா மீது அவன் கொண்ட கோபம் அவனுக்குள் பிரம்ம ராட்சசனாக வளர்ந்து நின்ற அவனுடைய ஈகோவை மறக்கடித்துவிட்டது. அவனது மனதில் நித்திலா மீது இருந்த காதலையும் மிஞ்சி விஷம் போல பரவியிருந்த ஈகோவை அவனைத் தவிர அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.
இப்ராஹிம் சொன்னது போல அவன் ‘லூசர்’ ஆகிவிட்டானா? ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறியபடி இருக்கையில் சாய்ந்தான் கிருஷ்ணராஜசாகர்.
அம்ரித்தோடு பேசி முப்பது நாட்கள் ஆகிவிட்டது. இந்த முப்பது நாட்களில் நித்திலாவுமே அவனது எண்ணுக்கு அழைத்துப் பேசவில்லை.
ஒவ்வொரு நாளும் விடியலில் அவள் தன்னருகே இல்லை என்பதை சீரணிக்கவே அவனுக்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறதென்பதை அவன் மட்டுமே அறிவான்!
ஒவ்வொரு முறை விலகும் போதும் இத்தகைய சிக்கலை தனக்கு உண்டாக்குபவள் மீது கோபம் கொள்வதா? அல்லது இப்ராஹிம் சொல்வதைப் போல அவளைத் தேடிச் செல்வதா?
யோசனையில் ஆழ்ந்தவனின் மனம் அம்ரித்தைப் பார்க்கவேண்டுமென ஏங்கியது!
*****
கோரமங்களா…
சமையல்காரப்பெண்மணி உதவியோடு நிஹாரிகா சமைத்து வைத்த உணவு சீண்டுவாரின்றி ஆறிக்கொண்டிருந்தது. அவள் சோர்ந்த முகத்தோடு இன்னும் வீடு திரும்பாத சந்தீப்புக்காக காத்திருந்தாள்.
இதோ ஒன்னும் ஒரு மாதத்தில் அவர்கள் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். எப்படி தன்னை விவாகரத்து செய்யுமளவுக்குச் சந்தீப்பின் மனம் கல்லானது?
யோசித்து யோசித்து மாய்ந்து போனாள் நிஹாரிகா. அப்போது கூட செய்த தவறு அவளது புத்தியில் உறைக்கவில்லை.
சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் நித்திலா சிம்லாவுக்குக் கிளம்பிய தினத்தில் இருவரும் பிரிந்துவிடலாம் என்றான் அவன்.
நிஹாரிகா அதிர்ந்தாள். அழுதாள். கதறினாள். கெஞ்சிக் கூட பார்த்தாள். ஆனால் சந்தீப் தன் முடிவில் பிடிவாதமாக இருந்தான்.
அதற்கு அவன் சொன்ன காரணம் நிஹாரிகாவை இன்னும் புண்படுத்திவிட்டது.
“என் அண்ணன் அண்ணிய பழிவாங்க அம்ருவ கொல்ல பாத்தவ, என் மேல உள்ள கோவத்துல என்னையும் கொல்ல மாட்டனு என்ன நிச்சயம்?”
அம்ரித்தைக் கொலை செய்யவேண்டுமென அவள் எப்போதுமே நினைத்ததில்லை. சிறு குழந்தையிடம் தனது வஞ்சத்தைக் காட்டுமளவுக்கு அவள் இரக்கமில்லாத இராட்சசியா என்ன?
அவள் அப்படிப்பட்டவள் தான் என சந்தீப் அடித்துப் பேசினான். அது நிஹாரிகாவின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டது.
“நான் ஒன்னும் அம்ருவ கொலை பண்ண நினைக்கல… உன் அண்ணன் சாகணும்னு தான் நான் ஆசைப்பட்டேன்”
அடுத்த நொடி பளாரென அறைந்த சந்தீப் பின்னர் அவளிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. இதற்கெல்லாம் காரணம் பர்மான் குடும்பத்தினர் என்று உண்மையை உடைத்துப் பேச நாக்கு துடித்தது.
எதிரியோடு கூட்டு சேர்ந்தாயா என சந்தீப் அதற்கும் வெறுப்பை உமிழ்வானே! அவனது இப்போதைய வெறுப்பில் அவளுக்கு மூச்சு முட்டிவிடும் போல!
விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முரண்டு பிடித்தவளிடம் கிருஷ்ணராஜசாகர் அவனுக்கு அளித்த மிரட்டல் வைத்தியத்தைப் பயன்படுத்தினான் சந்தீப்.

“எனக்கு டிவோர்ஸ் குடுத்தனா நீ கௌரவமா பிரிஞ்சு வாழலாம்… இல்லனா ஜெயில்ல போய் களி தான் திங்கணும்”
அப்போதிருந்த மனநிலையில் நிஹாரிகா அரண்டுவிட்டாள். பரஸ்பர விவாகரத்துக்குச் சம்மதித்தாள்.
பின்னர் மனம் நோக அன்னையிடம் அழுதாள். சைலேந்திரி என்னென்னவோ செய்து பார்த்தும், கெஞ்சி பார்த்தும் சந்தீப்பின் மனம் மாறவில்லை.
விவாகரத்து முடிவில் அவன் பிடிவாதமாக இருந்தான்.
அப்போதிலிருந்து நிஹாரிகாவிடம் சரியாகப் பேசுவதில்லை. ஒரே வீட்டில் இருவரும் வெவ்வேறு அறைகளில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையை நிஹாரிகா நினைத்தால் மாற்றிவிடலாமென சைலேந்திரியும் சொல்லாத ஆறுதல் இல்லை.
அவ்வபோது “உனக்கும் ஒரு பிள்ளை இருந்திருச்சுனா இந்த நிலமை வந்திருக்காதுடி” என்பார் ஆற்றாமையோடு.
சமீப நாட்களில் அதே எண்ணம் நிஹாரிகாவுக்கும் வந்தது. தனித்தனி அறையில் வசிக்கும் முடிவுக்கு வந்தவனிடம் ஏன் தனக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கக்கூடாதென கேட்டும் பார்த்துவிட்டாள். பதில் கிடைக்கவில்லை!
சந்தீப் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்தது. அவனிடம் பேசுவது அரிதானது. அவன் வீடு திரும்பும் நேரங்களில் பெரும்பாலும் நிஹாரிகா உறங்கிவிடுவாள்.
காலையில் தாமதமாக எழுந்திருப்பவளுக்குச் சந்தீப்பைச் சந்திக்கும் வாய்ப்பே கிடைக்காது.
இதற்கிடையே சவிதா பர்மான் மூலமாக திலீப் பர்மானை மீண்டும் சந்தித்தாள் அவள்.
அவர்களால் தானே தனக்கு இந்நிலை என குற்றம் சாட்டியவளிடம் முன்பு போல கனிவாகப் பேசவில்லை அவன்.
“நாங்க அரேஞ்ச் பண்ணுன கில்லர் அவ்ளோ சீக்கிரம் போலீஸ் கிட்ட சிக்க மாட்டான்… நீ போலீஸ் கிட்ட எங்களை மாட்டிவிட பாத்தாலும் நோ யூஸ்… உன் கிட்ட எங்களுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்ல… நீ ஆதாரத்தை கலெக்ட் பண்ண நினைச்சா கூட உனக்குக் கிடைக்காது… எங்க கூட கூட்டு சேர்ந்து கொலைத்திட்டத்தை போட்டனு சொன்னா உன் புருசனே உன்னைக் கொன்னுடுவான்… கிருஷ்ணராஜசாகர் இந்த கேஸ்ல உன் மேல சந்தேகமில்லனு சொன்னானேனு சந்தோசப்படு… டிவோர்சியா வாழுறத விட ஜெயிலுக்குப் போறது கேவலம்”
மிரட்டலும் அலட்சியமுமாகப் பேசியவனிடம் பழைய நிஹாரிகாவாக அவளால் சவால்விட முடியாதே! அப்போது கணவன் துணை இருந்தது. இப்போது அவன் அவளை ஒரேயடியாக தலை முழுகிவிட்டான். இனி தான் ஒரு பல் பிடுங்கிய பாம்பு என்பதை உணர்ந்து அமைதியாக பர்மான் இல்லத்திலிருந்து கிளம்பியவள் பின்னர் திலீப் பர்மானைச் சந்திக்கவில்லை.
இப்படியே நாட்கள் கழிந்து கொண்டிருக்க, அன்று அவர்களின் திருமண நாள் என்பதால் சிரத்தையுடன் சந்தீப்புக்காக சமைத்திருந்தாள் நிஹாரிகா.
பன்னிரண்டாகியும் அவன் வரவில்லை. சரி தூங்குவோமென எழுந்தவளின் செவியில் அவனது கார் வரும் ஓசை கேட்டது. ஆவலோடு காத்திருந்தவள் சில நொடிகளில் தடுமாற்றத்துடன் வந்த சந்தீப்பைக் கண்டதும் அதிர்ந்தாள்.
அவனிடம் வீசிய மதுநெடியில் முகம் சுளித்தவளை கேலியாகப் பார்த்தபடி வந்தவன் “ஹேப்பி ஆனிவர்சரி பொண்டாட்டி” என்றான் குழறலாக.
நிஹாரிகாவின் கண்கள் கலங்கியது.
“சந்தீப்”
அவனை நெருங்கப் போனவளை கை நீட்டி தடுத்தான்.
“எவ்ளோ காதலிச்சேன் உன்னை? இப்பிடி ஏமாத்திட்டியே? ஏன் இவ்ளோ கொடூரமா மாறுன நிஹி?”
மீண்டும் குழறல்.
“அடுத்த ஆனிவர்சரிய நம்ம பேபியோட கொண்டாடலாம்னு கனவு கண்டேனே… எல்லாம் போச்சு… நாசமாக்கிட்டியேடி”
கோபத்தோடு கத்தினான் சந்தீப். அவளது கெட்டநேரம் அவளை வழி தவற வைத்துவிட்டது. இனி கத்தியோ கதறியோ என்ன புண்ணியம்! கண்களை இறுக மூடி திறந்தவள் குழந்தையைப் பற்றிய ஏக்கத்தை வெளிப்படுத்தியவனை நிதானமாகப் பார்த்தாள்.
குழந்தை! அது மட்டும் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதே!
எப்போதும் குறுக்குவழியில் யோசித்தே பழகியவளுக்கு இப்போதும் மூளை குறுக்குவழியில் வேலை செய்தது.
புன்னகையோடு கணவனை நெருங்கினாள். அவன் எவ்வளவோ தடுத்தும் இறுக்கமாக அணைத்துக்கொண்டவள் சந்தீப்பின் கோபத்தைக் கண்டுகொள்ளவில்லை.
மனைவியின் அருகாமை! அதுவும் வெகுநாட்களுக்குப் பிறகு! சந்தீப்பின் பிடிவாதம் கரைந்தது. போதையிலிருந்தவனின் தடுமாற்றம் அவளை முத்தமிட வைத்தது. அணைத்துக்கொண்டு முத்த மழையில் மூழ்கடிக்க வைத்தது.
பெண்ணவளின் ஸ்பரிசம் இன்னும் வேண்டுமென உடல் ஏங்க இது நாள் வரை தனித்தனி அறையில் வாசம் செய்தவர்களை உள்வாங்கிக்கொண்டது நிஹாரிகாவின் அறையிலிருந்த ஃபோம் மெத்தை.
பின்னர் நடந்த எதற்கும் நிஹாரிகா பொறுப்பில்லை! ஆனால் அந்தக் கூடலில் காதலை விட சந்தீப்பைப் பிரியாமல் இருப்பதற்கான காரணமே மேலோங்க அவனை விட்டு விலகாமல் ஒன்றாய் இணைந்தாள் அவள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

