“விவேகானந்தர் ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’னு சொல்லிருக்கார்… எவ்ளோ பெரிய உண்மை! பல நேரங்கள்ல நம்ம எண்ணங்கள் நம்மளோட குணாதிசயத்துல சேஞ்சை கொண்டு வரும்… அதுக்கு நானே லிவிங் எக்சாம்பிள் ஆவேன்னு கனவுல கூட நினைச்சதில்ல… சாகருக்கும் எனக்கும் இருந்த பிரச்சனையில நான் இன்னைக்கு அவரோட மேள் வெர்சனா மாறி நிக்குறேன்… அம்ருவையும் என்னையும் காப்பாத்த போய் கன்ஷாட் வாங்குனவர் கிட்ட என்னால ஏன் வெளிப்படையா அனுசரணை காட்ட முடியல? அவர் சீக்கிரம் ரெகவர் ஆகணும்னு மனசு நினைக்குறதை ஏன் என்னால சொல்ல முடியல? ஒருவேளை அவர் மேல காட்ட வேண்டிய அக்கறைய விட அவரைப் பழி வாங்கணும்ங்கிற எண்ணம் அதிகமாகி நானும் அவரை மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சிட்டேனா? என்னோட இந்த மாற்றத்தை என்னால ஏத்துக்க முடியல… சாகர் மனசு நொந்து என்னையும் அம்ருவையும் சிம்லாவுக்குப் போங்கனு சொன்னப்ப மனசாற சந்தோசப்படவும் முடியல… சாகர் கிட்ட போட்ட சவால்ல நான் ஜெயிச்சிட்டேன்… ஆனா என்னோட இயல்பை இழந்து நிக்குறேன்”
-நித்திலா
க்ளீன் ஈகில்ஸ் மருத்துவமனை…
இளக்கமின்றி படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த கிருஷ்ணராஜசாகரைத் தவிப்போடு ஏறிட்டான் சந்தீப். சில நிமிடங்களுக்கு முன்னர் தான் அவனது வாழ்க்கையைப் புரட்டிப் போடும் நிபந்தனை ஒன்றை விதித்திருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
எவ்வளவு பெரிய காரியத்தை இத்துணை எளிதாக செய்யச் சொல்கிறானே என சந்தீப் அதிர்ந்ததையும் அங்கலாய்த்ததையும் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.
அவன் மனமெங்கும் தன் மகனை கொலை செய்யப் பார்த்தவர்களை இல்லாமல் ஆக்கும் வெறி மட்டுமே நிறைந்திருந்தது. இனி பர்மான் குடும்பத்தையும் நிஹாரிகாவையும் அவன் விட்டுவைப்பதாக இல்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர்களைப் போலவே சாம, தான, பேத தண்டங்களை உபயோகித்து கிருஷ்ணராஜசாகரின் மகனைத் தொட்டால் என்னவாகுமென்பதை செயலில் காட்ட விரும்பினான்.
நியாய, அநியாயங்களைத் தூக்கிப்போட்டுவிட்டு சந்தீப்பிடம் நிபந்தனை ஒன்றை விதித்தான்.
“இன்ஸ்பெக்டர் கிட்ட நான் தான் ஃப்ளாரண்ட்டா நடிச்ச கில்லரை பாக்க அவசரப்பட்டேன்னு நிஹாரிகா பொய் சொல்லிருக்கா… அவனை குளத்துக்குக் கூட்டிட்டுப் போய் என் பிள்ளைய கொலை பண்ண ப்ளான் போட்டதை சாமர்த்தியமா மறைச்சிருக்கா உன் பொண்டாட்டி… அவ பொய் சொல்லுறானு இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லுறதுக்கு எனக்கு ஒரு செகண்ட் கூட ஆகாது சந்தீப்… அப்பிடி சொன்னா அவ ஜெயிலுக்குப் போயிடுவானே வச்சிப்போம்… உடனே நீ என்ன பண்ணுவ? அவளை வெளிய கொண்டு வர்றதுக்கு சட்டத்தோட ஓட்டைய யூஸ் பண்ணுவ… அவளும் கொஞ்சநாள் ஜெயில்ல கழிச்சிட்டு வெளிய வந்து மறுபடி உன்னோட வீக்னெஸ்சை யூஸ் பண்ணி இந்தக் குடும்பத்தை நாசம் பண்ணுவா… அப்பிடி நடக்குறதுல எனக்கு இஷ்டமில்ல… அவ ஜெயிலுக்குப் போகக்கூடாது… ஆனா ஜெயிலோட தனிமைய இனி வாழப்போற ஒவ்வொரு நாளும் அனுபவிக்கணும்… அதுக்கு நீ நிஹாரிகாவ டிவோர்ஸ் பண்ணணும்”
“அண்ணா…..”
அவ்வளவு தான் சந்தீப் பேசியது. அதற்கு மேல் எப்படி பேசுவதென்றே புரியாமல் அதிர்ந்து போயல்லவா இருக்கிறான்!
கிருஷ்ணராஜசாகர் அதிக நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவனுக்கு நிஹாரிகாவைப் பழி வாங்க வேண்டும். கூடவே அவளிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சந்தீப்பைக் காக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இந்தப் பொன்னான வாய்ப்பை அவன் இழக்க விரும்பவில்லை.
பொதுவாக கிருஷ்ணராஜசாகர் தனக்கு வேண்டியதை திட்டம் தீட்டி நடத்துக்கொள்வதில் வல்லவன். அதைவிட சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்கி காரியம் சாதிப்பதில் அதிவல்லவன்!
நித்திலாவின் பயாப்சி ரிப்போர்ட்டை எப்படி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டானோ அதே போல இப்போது நிஹாரிகா சொன்ன பொய்யையும் பயன்படுத்திக்கொள்ள திட்டம் தீட்டிவிட்டான்.
சந்தீப்பிற்குள் இருந்த காதல் உடனடியாக அவனைச் சம்மதிக்க வைக்காது. அவனைச் சம்மதிக்க வைக்க கொஞ்சம் மிரட்டியும் ஆகவேண்டும்.
“நீ யோசிக்கிறதை பாத்தா நான் சொன்னதை கேக்க மாட்ட போல, சரி விடு.. உன் பொண்டாட்டிய ஜெயிலுக்கு அனுப்புறதுல நீயே இவ்ளோ ஆர்வமா இருக்கிறப்ப நான் மட்டும் என்ன செய்ய முடியும்?”
சந்தீப்பின் கண்கள் அவனது மிரட்டலில் கலங்கியது.
“ஏன் இப்பிடி பண்ணுறண்ணா? டிவோர்ஸ்லாம் ரொம்ப பெரிய தண்டனை”
“வாயை மூடுடா… என் பிள்ளைய கொல்ல பாத்திருக்காடா அவ… அம்ரு அவளை என்ன செஞ்சான்? எனக்குப் பிள்ளையா பிறந்ததை விட அவன் என்ன பாவம் பண்ணுனான்னு சொல்லு… அம்ரு இடத்துல உன் பிள்ளை இருந்து அவனை நித்திலா கொலை பண்ண திட்டம் போட்டிருந்தா நீ என்ன பண்ணிருப்ப? அவளை கொலை கூட பண்ணிருப்பல்ல… நிஹாரிகாவ கொன்னு என் கையை அழுக்காக்க எனக்கு விருப்பமில்ல… நான் அடிக்கப்போற அடி அவ மனசை உடைக்கணும்… என்ன செஞ்சாலும் சந்தீப் காப்பாத்திடுவான்ங்கிற எண்ணத்துல தானே ஒவ்வொரு தடவையும் தப்பு பண்ணுறா… உன்னை அவ கிட்ட இருந்து விலக்குனா போதும், அவ நொடிஞ்சிடுவா… எனக்கு அது தான் வேணும் சந்தீப்… இன்னைக்கு நான் இப்பிடி இருக்குறதுக்கு நீயும் ஒரு காரணம்டா… அவ தப்பு பண்ணுறப்பலாம் நீ அவளுக்குத் துணையா நின்னது தான் இந்த எல்லைக்கு நிஹாரிகாவை கொண்டு வந்திருக்கு… உன் காதல் உண்மையா இருந்திருந்தா அவ தப்பு பண்ணுறப்ப நீ கண்டிச்சிருப்படா… இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல, நீ அவளை டிவோர்ஸ் பண்ணுனா அவ சுதந்திரமா வெளிய இருப்பா… இல்லனா பைத்தியக்காரி மாதிரி ஜெயில்ல வாழ்க்கை முழுக்க கழிப்பா… தி பால் இஸ் இன் யுவர் கோர்ட்”
தனது முடிவை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துவிட்டு கிருஷ்ணராஜசாகர் கண்களை மூடிக்கொண்டான்.
சந்தீப்புக்கு அவனது வார்த்தைகள் உண்டாக்கிய குற்றவுணர்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. தனது காதல் தான் இன்று நிஹாரிகாவை குற்றவாளியாக்கி விட்டதோ!
நிஹாரிகாவிடம் கடுமையாக நடந்துகொள்ள மட்டும் ஏனோ அவனால் முடியவில்லை. அவளை ஒதுக்கி வைப்பது அவனது தேகத்தின் ஒரு பகுதியை வெட்டி எறிவது போல வேதனையை உண்டாக்கும்.
அவனது கண் முன்னே அரிசிப்பற்கள் மின்ன சிரித்தபடி அம்ரித் வந்து போனான். குழந்தை அவன். அவனைக் கொல்லுமளவுக்கு நிஹாரிகா சென்றுவிட்டாளே! இனியும் அவளது கொடுஞ்செயல்களுக்கு ஆதரவாக இருந்தால் சந்தீப் மனிதத்தன்மையற்ற மிருகமாகிவிடுவான்.
வேறு வழியில்லை! கிருஷ்ணராஜசாகரின் நிபந்தனைக்குச் சம்மதித்தான் அவன்.
“நான் நிஹாரிகாவ டிவோர்ஸ் பண்ணிடுறேன்ணா… பட் எனக்குக் கொஞ்சம் டைம் குடு, ப்ளீஸ்”
கிருஷ்ணராஜசாகர் கண்களைத் திறந்தான். அவனது இதழில் கோணல் சிரிப்பு!
“ரொம்ப நேரம் இல்ல சந்தீப்… சீக்கிரமா லீகல் புரொசிஜரை ஆரம்பி… ஒருவேளை நீ என்னை சீட் பண்ணலாம்னு நினைச்சனா, தம்பினு கூட பாக்கமாட்டேன், நீயும் இந்த மர்டர் அட்டெம்ப்ட்ல நிஹாரிகாவுக்குத் துணையா இருந்திருக்கனு உன்னையும் அவ கூட ஜோடியா உள்ள அனுப்பி வைச்சிடுவேன்… குடும்பத்துக்கு எதிரா சதி பண்ணுற ஒருத்திக்குத் துணையா நிக்குற உன்னை மாதிரி ஒருத்தன் எங்க இருந்தா எனக்கு என்ன?”
அவனிடமிருந்து இரக்கமின்றி வார்த்தைகள் வந்தன. சந்தீப்பால் கிருஷ்ணராஜசாகரின் வெறுப்பு உமிழும் வார்த்தைகளை சீரணிக்க முடியவில்லை.
உடன் பிறந்தவனின் மனவுணர்வுகளைக் கிருஷ்ணராஜசாகரால் புரிந்துகொள்ள முடிந்தது.
“ரொம்ப வேதனையா இருக்குல்ல, நேசிக்குறவங்க நம்ம கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு காயப்படுத்துனா இப்பிடி தான் வலிக்கும்… இப்பவே சுதாரிக்கலனா நீயும் அந்த வேதனைய அனுபவிப்ப”
அதற்கு மேல் சந்தீப் அங்கே இருக்கவில்லை. வீட்டுக்குக் கிளம்பிவிட்டான்.
வீட்டில் ஆழ்ந்த அமைதி.
நித்திலா அன்று மாலை சிம்லாவுக்கு விமானம் ஏறுகிறாள் அல்லவா!
ஞாபகம் வந்ததும் அம்ரித்திடம் பேசிவிட்டு வரலாமென தோன்றியது.
கிருஷ்ணராஜசாகரின் அறைக்குச் சென்றான் சந்தீப்.
அங்கே லக்கேஜை அடுக்கி முடித்திருந்தாள் நித்திலா.
அம்ரித் அவளிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
“டாடி ஏன் இன்னும் வீட்டுக்கு வரல?’
“டாடிக்கு நிறைய ஒர்க்ஸ் இருக்குதாம் அம்ரு… நம்ம சிம்லாக்குப் போனதும் டாடி அங்க வந்து உன்னை பாப்பார்”
“நம்ம கூடவே டாடியையும் கூட்டிட்டுப் போவோம் நித்திம்மா”
“டாடி பிக் பாய் தானே அம்ரு… அவரே சிம்லாவுக்கு வந்துடுவார்… அவருக்கு வழி தெரியும்”
இயல்பாய் காட்டிக்கொண்டாலும் நித்திலாவின் வாடிய வதனம் அவளுக்குக் கிருஷ்ணராஜசாகரின் உடல்நிலையைப் பற்றி இருக்கும் கவலையைச் சொல்லாமல் சொன்னது.
அறை வாயிலில் நின்ற சந்தீப் தொண்டையைச் செருமவும் பேச்சை நிறுத்தியவள் “வாங்க சந்தீப்… சாகரைப் பாத்திங்களா?” என்று விசாரித்தாள்.
“பாத்தேன் அண்ணி”
அம்ரித் சந்தீப்பைக் கண்டதும் ஓடி வந்தான்.
“நாங்க சிம்லாக்குப் போறோம் சித்தப்பா… நீயும் வர்றியா? அங்க ஜாலியா இருக்கும்”
அவனைத் தூக்கிக்கொண்டவன் நித்திலாவிடம் பேச ஆரம்பித்தான்.
“நீங்க கட்டாயம் போய் தான் ஆகணுமா?”
“என் பிள்ளையோட உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத இடத்துல என்னால இருக்கமுடியாது சந்தீப்”

அவனைப் பார்க்காமல் பதிலளிக்க முயன்றாள் நித்திலா.
“நீங்க கிளம்பிட்டிங்கனா அண்ணா நிலமை இன்னும் மோசமாகிடும்”
“மோசம்னு நீங்க எதை மீன் பண்ணுறிங்க சந்தீப்? எனக்குப் புரியல”
“கிரிஷ் அண்ணா பத்தி எனக்கு நல்லா தெரியும்… அவன் கொஞ்சம் ரக்கட் தான்… பட் திஸ் க்ரூயல்டி, இது எல்லாம் நீங்க அவனை விட்டுட்டுப் போனதுக்கு அப்புறமா அவனுக்குள்ள வந்தது… இப்ப மறுபடியும் நீங்க போனிங்கனா அவன் இன்னும் மோசமா மாறிடுவான் அண்ணி”
நித்திலா எதுவும் பேசாமல் அமைதி காத்தாள்.
உன் அண்ணனின் குரூரத்தை அனுபவித்து மரணவேதனையிலிருந்து மீண்டவள் நான் என அவனிடம் சொன்னால் நாகரிகமாக இருக்காதே!
சந்தீப்பும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை. அம்ரித்தின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
“கொஞ்சநாள் கழிச்சு சித்தப்பா அங்க வர்றேன்”
“ப்ராமிஸ்?”
சிறு கையை நீட்டி சத்தியம் கேட்டான் அம்ரித்.
“ப்ராமிஸ் அம்ரு குட்டி”
“நீ அங்க வந்தனா உனக்கு என்னோட க்ளைடர் ஸ்கூட்டரை விளையாட தருவேன் சித்தப்பா… இங்க மாதிரியே அங்கயும் ப்ளேஸ்டேசன் இருக்கு… டாடி எனக்கு வாங்கி குடுத்தார்… அதுல பெப்பா பிக்கி விளையாடலாம்”
திருத்தமாக அவன் பேசியதை கேட்க கேட்க அவனைப் பெற்றவன் உதிர்த்த வார்த்தைகளின் வீரியம் இறங்கியது.
அம்ரித் அவனிடம் ஏதோ சொல்ல வருகையில் “சந்தீப்” என கண்டனமாக ஒலித்தது நிஹாரிகாவின் குரல்.
இவள் எப்போது வந்தாள் என்றபடி சந்தீப் திரும்பினான். கண்களில் துவேசம் மின்ன நின்று கொண்டிருந்த நிஹாரிகாவின் விழிகள் அவனை அல்ல, நித்திலாவைப் பார்த்துக் கொண்டிருந்தன.
போகிற நேரத்தில் இவளது சாக்கடை பேச்சை கேட்க வேண்டுமா என நித்திலா மானசீகமாக நொந்துகொள்வதை கவனித்த சந்தீப் அம்ரித்தை கீழே இறக்கிவிட்டான்.
கிட்டத்தட்ட சந்தீப்பின் எண்ணமும் அது தான். ஏற்கெனவே தன்னையும் நித்திலாவையும் இணைத்து கேவலமாகப் பேசியவளிடம் வேறென்ன எதிர்பார்ப்பான் அவன்?
ஆனால் நிஹாரிகாவோ இருவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அம்ரித்திடம் அன்பொழுக பேசினாள்.
“அம்ரு குட்டி சிம்லாக்குப் போறிங்களா? த்சூ! இனிமே நீ எப்பிடி டாடி கூட இருப்ப?”
விளையாட்டு போல கேட்டாலும் அதில் ஒளிந்திருந்த கொடூரத்தை சந்தீப்பாலும் நித்திலாவாலும் உணர முடிந்தது. அம்ரித் குழந்தை அல்லவா! அவனால் சித்தியின் கபட நாடக பேச்சைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
“டாடிய நான் சிம்லாக்குக் கூட்டிட்டுப் போயிடுவேன்”
“ஓ! உன் டாடி அங்கல்லாம் வரமாட்டார்டா குட்டி.. அவருக்குப் பிசினஸ் தான் முக்கியம்”
நிஹாரிகா சொன்ன விதத்தில் அம்ரித்தின் கண்களில் கவலை குடிகொள்ள நித்திலா அதை பொறுக்க முடியாமல் மைந்தனை தூக்கிக்கொண்டாள்.
“ப்ச்! உன் வாழ்க்கை இப்பிடி ஆகிடுச்சே நித்திலா… கடவுள் உன் உடம்புல குறை வச்சதோட வாழ்க்கையிலயும் குறை வச்சிட்டாரே… இனிமே என்ன பண்ணப்போற? மறுபடியும் அஞ்ஞாதவாசமா?”
கிண்டலும் கேலியுமாக அவள் பேசியதை ஏனோ சந்தீப்பால் ரசிக்க முடியவில்லை. இந்தச் சமயத்தில் கூட குழந்தையிடம் மனம் நோகும்படி பேசுகிறாள், அண்ணியைச் சீண்டுகிறாள்! இவளையா காதலித்தோம்? சீ!
மனம் வெறுப்பில் உழல நித்திலாவை அவள் அவமானப்படுத்தும் முன்னர் “நிஹி நம்ம லைஃப் பத்தி ஒரு முடிவு எடுக்கணும்… வா” என்று கரம் பற்றி அழைத்துப்போனான் சந்தீப்.
அவர்கள் இடத்தைக் காலி செய்ததும் மைந்தனை விமான பயணத்திற்கு தயாராக்கினாள் நித்திலா.
கிளம்பும் நேரம் வந்த போது சாகர்நிவாஸ்வாசிகளோடு சேர்ந்து ஜனார்தனனும் வருந்தினார்.
“அம்ருவோட பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம்” என அவரிடமும் அழுத்தமாகக் கூறிய நித்திலா மாமனார் மாமியாரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.
ஸ்ரீநயனி கண்கள் பனிக்க அவளை அணைத்துக்கொண்டாள்.
“நம்ம ப்ளான்படி இந்த நாள் வரும்னு எனக்குத் தெரியும் அண்ணி… ஆனா என்னால இதை ஏத்துக்க முடியல”
“உடனே வீட்டை விட்டு அமெரிக்காக்கு ஓடிப்போயிடக் கூடாது… உனக்குனு கம்பெனில ஒரு பொசிசன் இருக்கு… அதை பொறுப்பா கவனிச்சிக்க… டைம் கிடைக்குறப்ப சிம்லாக்கு வா… நாங்க உனக்காக வெயிட் பண்ணுவோம்… அடிக்கடி அப்பாவ போய் பாரு… எனக்கு அந்தம்மா மேல நம்பிக்கை இல்ல”
“கண்டிப்பா அண்ணி… நான் சிம்லாக்கு வர்றப்ப அங்கிளையும் அழைச்சிட்டு வருவேன்”
ஆனந்த்சாகரும் நர்மதாவும் என்ன பேசுவார்கள்? இப்பேர்ப்பட்ட அனர்த்தம் தங்கள் வீட்டில் நடந்தேறிய பிற்பாடு பேரனை இங்கேயே தங்க சொல்லும் அருகதை தங்களுக்கு இல்லையென எண்ணி மருமகளுக்கும் பேரனுக்கும் மௌனமாய் விடை கொடுத்து அனுப்பினார்கள்.
ஸ்ரீநயனி விமானநிலையம் வரை உடன் வந்தாள். விக்ரமிடம் அண்ணியையும் அம்ரித்தையும் நன்றாக பார்த்துக்கொள்ளுபடி கூறினாள்.
“நீங்களும் எங்க கூட வருவிங்கனு நினைச்சேன்”
விக்ரம் கூறவும் ஸ்ரீநயனியின் புருவம் ஏன் என்பது போல வளைந்தது.
“இந்த மாதிரி சிச்சுவேசன்ல நித்திலாக்கு உங்க துணை வேணும்னு நினைச்சேன்ங்க… வேற ஒன்னுமில்ல… நீங்க வேற விவகாரமா எதையும் நினைச்சுக்காதிங்க”
“அரெஸ்ட் ஆகுறதுக்கு முன்னாடி ஜாக்கிரதையா முன்-ஜாமீன் எடுத்து வச்சிப்பாங்கல்ல, அதே மாதிரி இருக்கு உங்க பேச்சு… எதையும் டேரக்டா சொல்ல மாட்டிங்க… போயிட்டு வாங்க அலர்ட் ஆறுமுகம்”
விக்ரமோடு அண்ணியும் அம்ரித்தும் செக்கிங் முடிந்து செல்வதை பார்த்தவள் கனத்த மனதோடு சாகர் நிவாசுக்குத் திரும்பினாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

