“மனுசங்க பேசுற வார்த்தைக்கு பவர் இருக்குங்கிறதை நான் அனுபவத்துல புரிஞ்சிக்கிட்டேன்… நாம ரொம்ப உயர்வா நினைச்ச ஒருத்தர் நம்மளை இளக்காரமா பேசுறப்ப அந்த வார்த்தை உருவாக்குற நெகட்டிவிட்டி நம்ம பிசிக்கல் ஹெல்தை மட்டுமில்ல மென்டல் ஹெல்தையும் மொத்தமா அழிக்கக்கூடிய அளவுக்கு பண்டில் ஆப் நெகட்டிவிட்டியா மாறும்… ஒவ்வொரு தடவை அந்த வார்த்தைய யோசிக்கிறப்பவும் நமக்குள்ள அந்த நெகட்டிவிட்டி பரவும்… அதோட விளைவு டிப்ரசன், ஆன்சைட்டினு விஸ்வரூபம் எடுக்க கூட வாய்ப்பு இருக்கு… இது உங்களுக்கு ஓவர்-ரியாக்சனா கூட தெரியலாம்… அப்பிடி தெரிஞ்சா யூ ஆர் வெரி வெரி லக்கி… ஏன்னா இது வரைக்கும் நீங்க நேசிக்கிறவங்க உங்களை மதிப்பா நினைக்குறாங்கனு அதுக்கு அர்த்தம்… யார் ஒருத்தர் நேசிக்கிறவங்களால காயப்பட்டிருக்காங்களோ அவங்களுக்கு மட்டும் தான் நான் சொல்ல வர்ற பாயிண்ட் எவ்ளோ நிதர்சனம்னு புரியும்”
-நித்திலா
சாகர் நிவாஸ்…
அம்ரித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அந்தப் பங்களா சந்தோசத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.
அம்ரித்துக்கு பெப்பா பிக் பிடிக்கும் என்பதால் ஈவென்ட் ப்ளானிங் நிறுவனத்தினர் அந்த தீமில் வீட்டை அலங்கரித்திருந்தனர்.

வந்திருந்த விருந்தினர்களின் குழந்தைகளுக்காக கேன்டி ஷாப், சாக்லேட் ஃபவுண்டென், முன்னூற்று அறுபது டிகிரி போட்டோ பூத், மேஜிக் என விதவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஐந்தடுக்கு ஃபாண்டண்ட் கேக் பெப்பா பிக் உருவத்துடன் சிரித்தது.
கேக் மேஜையருகே மிண்ட் மற்றும் பேபி பிங் வண்ணத்தில் சிறு கப் கேக்குகள் இன்னொரு மேஜையில் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் இருவண்ண மேக்ரோன்கள்!
அம்ரித்தின் புகைப்படங்களோடு ஆகாய நீலவண்ணத்தில் ஃபேரி பல்புகள் அவனது பெயரை ஆங்கிலத்தில் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருந்தன.
அழகான மினி ப்ளேசர் சூட்டில் அம்ரித் அவன் தந்தையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தான்.
தந்தையும் மகனும் ஒரே மாதிரி உடையில் நிற்பதை நித்திலா பொருமலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் பார்வையில் விரைப்புடன் நடமாடிக்கொண்டிருந்த பாதுகாவலர்களும் விழுந்தார்கள்.
“ஒவ்வொருத்தரும் மினி சல்மான்கான் ரேஞ்சுக்கு இருக்காங்க… இவங்களை மீறி யார் வரப்போறாங்க?” என ஸ்ரீநயனியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் அவள்.
“அண்ணாக்கு எல்லார் மேலயும் சந்தேகம் அண்ணி… ரஜீஷா வேற ஒன்வீக்கா வரல… அவங்க நம்பருக்குக் கால் போகலையாம்… இது பிசினஸ் ரைவல்ரியால வந்த பிரச்சனை… ஆல்ரெடி அண்ணா அனுபவப்பட்டதால கொஞ்சம் அலர்ட்டா இருக்கார்”
ஸ்ரீநயனி சொன்ன காரணங்கள் எதுவும் நித்திலாவுக்குப் பெரிதாக தோன்றவில்லை.
வந்திருந்தவர்கள் அனைவரும் தொழில் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் நலம்விரும்பிகள்.
உறவுக்காரர்களில் சிலரும் வருகை தந்திருந்தனர். அவர்கள் வாய்க்கு நித்திலா அவலாக மாறாமல் நர்மதாவும் ஆனந்த்சாகரும் காப்பாற்றினார்கள்.
நர்மதா விடுத்த அழைப்பை ஏற்று சந்தீப்பும் நிஹாரிகாவை அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.
வந்தவன் அன்னையைத் தவிர வேறு யாரிடமும் பேசவில்லை. நிஹாரிகாவைத் தன்னுடன் இழுத்துச் சென்று வழக்கம் போல இரகசியம் பேசிக்கொண்டிருந்த சைலேந்திரியை முகச்சுளிப்புடன் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜனார்தனன்.
சிரஞ்சீவியும் காவேரியும் அவரது வாயைப் பிடுங்க பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கையில் விக்ரமோடு சாவித்திரியும் தேவராஜனும் வந்து சேர்ந்தனர்.
நித்திலாவும் ஸ்ரீநயனியும் அவர்களைப் புன்னகையோடு வரவேற்று ஆனந்த்சாகரிடம் அறிமுகப்படுத்தினர். கிருஷ்ணராஜசாகர் மரியாதைநிமித்தம் அவர்களை வரவேற்றுவிட்டு சைந்தவிக்காகவும் ராகுலுக்காகவும் காத்திருந்தான்.
அவர்கள் மட்டும் வந்துவிட்டால் கேக் வெட்டிவிடலாம்.
ஆனால் அம்ரித்தோ ரஜீஷா எப்போது வருவார் என தந்தையிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
“ரஜீஷா ஆன்ட்டிக்கு இன்னும் ஃபீவர் சரியாகல அம்ரு குட்டி… அவங்க இன்னைக்கும் வரமாட்டாங்க”
“அப்ப அவங்களுக்குக் கேக் குடுக்க முடியாதா டாடி?”
“டுமாரோ மானிங் நம்ம அவங்க வீட்டுக்குப் போய் கேக் குடுத்துட்டு வருவோம்… இப்ப டாடியும் அம்ருவும் போட்டோ பூத்துக்குப் போவோமா?”
முன்னூற்று அறுபது டிகிரியில் சுற்றி புகைப்படம் எடுக்கும்படி ரிங் லைட்டுடன் கேமரா பொருத்தப்பட்ட வட்ட வடிவ தாங்கி மீது அம்ரித்துடன் ஏறி நின்றவன் அவனை போஸ் கொடுக்கும்படி சொல்ல ரிங்லைட்டோடு சேர்ந்து கேமரா இணைக்கப்பட்ட தாங்கி அவர்களை சுற்றி வட்டமிட்டு புகைப்படங்களை எடுத்து தள்ளியது.
“ஐய் டாடி! சூப்பரா இருக்கு”
அம்ரித் குதூகலிக்க கிருஷ்ணராஜசாகரின் மனம் குளிர்ந்து போனது. அவனுக்காக தானே இத்தனை ஏற்பாடுகளும்! இவ்வளவு பிரம்மாண்டமான கொண்டாட்டமும்!
மகனுடன் சந்தோசமாக புகைப்படம் எடுத்தவனை இரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன. அதில் ஒன்று இப்ராஹிமின் கண்கள். மற்றொன்று நிஹாரிகாவின் கண்கள்!
நிஹாரிகாவின் கண்களில் பழிவெறி மட்டும் தான் நிரம்பியிருந்தது என்பதை தனியாகச் சொல்ல தேவையில்லை.
ஆனால் இப்ராஹிமின் கண்களோ பதற்றத்தை அணிந்தபடி வலம் வந்தன.
காரணம் திடீரென மாயமான ரஜீஷாவும் அவரது மைந்தன் முரளியும்.
ரஜீஷாவைப் பற்றி விசாரிக்க சென்ற இடத்தில் அவரும் அவரது மகன் முரளியும் வீட்டைக் காலி செய்துவிட்டுப் போன தகவல் கிடைக்க அவரை அனுப்பிவைத்த மேன் பவர் ஏஜென்சியிடம் விசாரித்தான் இப்ராஹிம்.
அவர்களுக்கு தற்போதைய முகவரியைத் தவிர வேறு எந்த விவரமும் ரஜீஷாவைப் பற்றி தெரியவில்லை.
ஏதோ இடித்தது. எனவே கிருஷ்ணராஜசாகரிடம் நடந்ததை கூறி வீட்டின் பாதுகாப்பை இன்னும் அதிகரிக்க செய்தான்.
சுற்றி வயர்லெஸ் வாக்கி டாக்கிகளும் ப்ளூடூத்களுமாக வலம் வந்த பாதுகாவலர்களைத் தாண்டி யார் அத்துமீறி உள்ளே வரமுடியுமென்ற நம்பிக்கை!
நல்லதோ கெட்டதோ ஒரு சம்பவம் நடக்கவேண்டுமென விதி இருந்தால் எப்பேர்ப்பட்ட பாதுகாப்பையும் தாண்டி அது நடந்தே தீரும் என்பதை போல திலீப் பர்மான் ஏற்பாடு செய்த ஆளும் வந்து சேர்ந்தான்.
வந்தவன் நிஹாரிகாவின் எண்ணுக்கு அழைத்தான்.
“இங்க கார்ட்ஸ் இருக்காங்க… என் கிட்ட ஐடென்டி கார்ட், கான்டாக்ட் டீடெய்ல்ஸ் கேக்குறாங்க… அதை நான் குடுத்துடுவேன்… பட் என்னை செக் பண்ணுறப்ப வெப்பனை கவனிச்சிடுவாங்க… நீங்க வந்திங்கனா நல்லா இருக்கும் மேடம்”
அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் கட்டைக்குரலில் பேசியவன் ரஜீஷாவின் கணவனும் கூலிக்குக் கொலை செய்பவனுமான தீக்ஷித். அவனது டீலிங் எல்லாமே டார்க்நெட்டில் மட்டும் தான் நடக்கும்.
ஒவ்வொரு குற்றம் செய்யும் போதும் அதற்காக போலி அடையாளச் சான்றுகளை பக்காவாக தயாரித்துக்கொள்வான்.
முடிந்தவரை முகத்தைக் காட்டாமல் வேலையைச் செய்து முடிக்க பார்ப்பான். முகத்தைக் காட்டியே தீரவேண்டிய சூழல் வருமாயின் அவனுக்குள் ஒளிந்திருக்கும் ஒப்பனை கலைஞனுக்கு வேலை வந்துவிடும்.
இப்போது கூட தனது ஒப்பனை திறமையால் ஏதோ வெளிநாட்டினனைப் போல மாறி வந்து நிற்கிறான்.
அவன் கொஞ்சம் சறுக்கியது மனைவியின் விசயத்தில் மட்டுமே. ரஜீஷா, முரளி என்ற போலி அடையாளங்களை மனைவிக்கும் மகனுக்கும் உருவாக்கி கிருஷ்ணராஜசாகர் போல மல்டி மில்லியனர்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் பிரபல மேன்-பவர் ஏஜென்சியையே அவன் திறமையாக ஏமாற்றிவிட்டான். ஆனால் அவனது மனைவியோ தாய்மையுணர்வால் தடுமாறிவிட்டாள்.
அம்ரித்தைக் கணவன் கொலை செய்யப்போவதை பற்றி அறிந்ததும் அவனிடம் சண்டை போட்டு கூட பார்த்தாள். அவன் கேட்காமல் அடித்து நொறுக்கியதும் மகனை அழைத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாள்.
போனவள் அப்படியே போனாளோ அல்லது கிருஷ்ணராஜசாகருக்குத் தன்னைப் பற்றி துப்பு கொடுத்துவிட்டுப் போனாளோ என்பது புரியாமல் திகைத்த அந்த தொழில்நுட்ப கொலைகாரனுக்கு நிஹாரிகாவின் உதவி தான் தற்சமயம் இருக்கும் ஒரே ஆறுதல்.
ஆனால் தொழில் தர்மப்படி நிஹாரிகாவிடம் கூட தனது உண்மையான பெயரை கூறவில்லை.
இப்போது அவன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் ‘ஃப்ளாரண்ட் டி க்ரூஸ்’.
கோவாலில் இருக்கும் கிருஷ்ணராஜசாகரின் ஃப்ரெஞ்சுக்கார நண்பர் ஒருவரின் காரியதரிசி எனும் பெயரில் அவரைப் போலவே ஒப்பனை உதவியால் உருமாறி அங்கே வந்து சேர்ந்திருக்கிறான்.
அவன் பாகங்களாகப் பிரித்துக் கொண்டு வந்திருக்கும் நவீன ரக பிஸ்டலை ஒன்று சேர்க்க அவனுக்கு அவகாசம் தேவை. அவற்றை ஒளித்து வைத்திருக்கும் மேற்சட்டையின் பக்கவாட்டு பைகளை பாதுகாவலர்கள் பரிசோதித்தால் கட்டாயம் அகப்பட்டுக்கொள்வான்.
எனவே தான் நிஹாரிகாவை அழைத்தான். அவளும் வந்து சேர்ந்தாள்.
நிஹாரிகா சுற்றும் முற்றும் பார்த்தவள் அவனிடம் வந்தாள்.
தனது அடையாளத்திற்கான சான்றை பாதுகாவலர் வசம் காண்பித்துக் கொண்டிருந்தவனைக் கண்டதும் பரபரப்போடு
“சீக்கிரமா இவரை அனுப்பி வைங்க… கிரிஷ் மாமா இவர் கிட்ட அர்ஜெண்டா ஏதோ பேசணும்னு சொன்னார்” என்றாள் பாதுகாவலரிடம்.
அவர் உடனே கிருஷ்ணராஜசாகரின் எண்ணுக்கு அழைக்கப் போக வேகமாகத் தடுத்தாள்.
“நான் சொன்னா கூட நம்ப மாட்டிங்களா?” என கடினக்குரலில் வினவி அவரை வாயடைக்க வைத்தவள் “வெல்கம் மிஸ்டர் ஃப்ளாரண்ட்!” என்று தீக்ஷித்தை தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டாள்.
அவனை யாருமறியாவண்ணம் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றவள் “எவ்ளோ சீக்கிரம் வேலைய முடிப்பிங்களோ அவ்ளோ சீக்கிரம் நீங்க தப்பிக்கிறது ஈசியா இருக்கும்… நேரம் ஆக ஆக எல்லா கெஸ்டும் வந்துடுவாங்க” என அவனை அவசரப்படுத்தினாள்.
தீக்ஷித்தோ மறைந்து நின்று பிஸ்டலை ஒருங்கிணைக்கும் வேலையைத் தொடங்கியிருந்தான். சி.சி.டிவியின் கண்களுக்குப் புலப்படாத இடமாக இருக்கவேண்டுமே என யோசித்தவனுக்கு தோட்டத்தின் ஒரு பக்கத்தில் நிச்சலனமாக விரிந்து கிடந்த குளம் கண்ணில் பட்டது.
வேகமாக பிஸ்டலில் சைலன்சரைப் பொருத்தியவன் நிஹாரிகாவிடம் பேசத் துவங்கினான்.
“என்னால முழுசா ஃபைவ் மினிட்ஸ் தண்ணிக்குள்ள மூச்சு விடாம பதுங்கியிருக்க முடியும்… அதுக்குள்ள அம்ரித் சாகரை நீங்க இங்க அழைச்சிட்டு வாங்க”
“அம்ரித்தா? அவன் எதுக்கு?”
நிஹாரிகா சந்தேகமாக இழுத்தாள்.
“மிஸ்டர் கிருஷ்ணராஜசாகர் நீங்க கூப்பிட்டா வரமாட்டார்… அவரோட மகனை நீங்க கூப்பிட்டிங்கனா சந்தேகப்பட்டு வருவார்… அந்த கேப்ல நான் தண்ணில இருந்து எழுந்திருச்சு அவரை சூட் பண்ணிடுவேன்… விளக்கம் போதுமா?”
ஃப்ளாரண்ட் டி க்ரூசாய் நின்ற தீக்ஷித் படபடக்கவும் உதட்டைச் சுழித்துவிட்டு வீட்டுக்குள் போனாள் நித்திலா.
தீக்ஷித்தும் அவள் சென்றதும் குளத்தில் குதித்தவன் மூச்சை அடக்கி உள்ளே இருந்தான்.
நிஹாரிகா போட்டோ பூத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்ரித்திடம் வந்தாள்.
“அம்ரு என்ன பண்ணுற குட்டி?”
தேனொழுக பேசினாள் அவனிடம்.
அம்ரித் நிஹாரிகாவின் இனிமையான பேச்சில் முகம் மலர்ந்தான்.

“போட்டோ பாத்துட்டிருக்கேன்”
“கார்டன்ல ஒரு பாண்ட் இருக்குல்ல… அங்க வர்றியா? நிறைய லோட்டஸ் பூத்திருக்கு அங்க”
கண்கள் விரிய அவனுக்கு ஆசை காட்டினாள். அவள் அம்ரித்திடம் பேசுவதை மூவர் கவனித்தனர்.
நிஹாரிகாவின் கணவன் சந்தீப், கிருஷ்ணராஜசாகர் மற்றும் நித்திலா, இவர்களே அந்த மூவர்.
மூவருக்குமே அவளின் இந்த நடவடிக்கையில் அதிர்ச்சியே. கிருஷ்ணராஜசாகருக்குப் போனசாக எரிச்சலும் எழுந்தது.
ஆனால் அம்ரித் அவளிடம் இன்முகத்தோடு பேசுவதால் பொறுமையாய் வேடிக்கை பார்த்தபடி தனது தொழில்முறை நண்பர் ஒருவரின் குடும்பத்திடம் நித்திலாவை அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்தான்.
பேச்சினிடையே கணவன் மனைவி இருவரது பார்வைகளும் நிஹாரிகாவிடம் உரையாடிக்கொண்டிருந்த மைந்தனை கவனித்துக்கொண்டிருந்தன.
“அந்த லோட்டஸ் எல்லாம் நானும் நர்மு பாட்டியும் வச்சது… நானும் நித்திம்மாவும் சிம்லாக்குப் போனதுக்கு அப்புறம் நர்மு பாட்டி அதை பாத்துக்குறேன்னு சொன்னாங்க”
வந்திருப்பவளின் நோக்கமறியாது சிறுவன் அப்பாவியாய் பேசிக்கொண்டிருந்தான்.
“அச்சோ! அம்ரு குட்டி சிம்லாவுக்குப் போய்டுவியா? அதுக்கு முன்னாடி சித்திக்கு அங்க இருக்குற எல்லா லோட்டஸையும் இண்ட்ரோ குடுக்கிறியா?”
“ம்ம்… வாங்க சித்தி”
அம்ரித்தைத் தன்னோடு அழைத்துக்கொண்டு தோட்டத்தை நோக்கி நிஹாரிகா நகர ஏதோ தவறாக உணர்ந்த கிருஷ்ணராஜசாகர் அவளைப் பின் தொடர எத்தனித்தான்.
தொழில்முறை நண்பர் பேச்சை விடுவதாக இல்லை. நித்திலா அவரைத் தன் பக்கம் திருப்பியதும் நழுவியவன் தோட்டத்தை அடைந்த போது அங்கே நிஹாரிகா இல்லை.
அதே நேரத்தில் நிஹாரிகா மீண்டும் ஹாலுக்கு வந்துவிட, அவளோடு மைந்தன் சென்று முழுதாய் தொண்ணூறு வினாடிகள் கூட ஆகாத நிலையில் நித்திலாவும் சந்தேகத்தோடு தோட்டத்திற்கு ஓடினாள்.
அங்கே குளத்தின் கரையில் முழங்காலிட்டு அம்ரித் தாமரையைப் பறிக்க முயல அவனிடமிருந்து இரண்டடிகள் தொலைவில் நின்ற கிருஷ்ணராஜசாகர் “அம்ரு” என்று கத்தியபடி அவனை நோக்கி ஓடினான்.
குளத்தின் நடுவே பிஸ்டலோடு வெளிநாட்டினன் வேடத்தில் நின்ற தீக்ஷித் கொஞ்சமும் தாமதிக்காமல் பிஸ்டலை அழுத்தினான்.
அதற்குள் கிருஷ்ணராஜசாகர் வேகமாகப் பாய்ந்து வந்து மைந்தனை தூக்கிக்கொள்ள தீக்ஷித்தின் பிஸ்டல் பிரசவித்த தோட்டா கிருஷ்ணராஜசாகரின் புஜத்தில் பாய்ந்தது. அவனது முகம் வலியில் சுருங்கியது.
அந்நேரத்தில் என்னவோ ஏதோ என நித்திலா அங்கே தடதடவென ஓடி வர அவளிடம் மைந்தனைத் தள்ளிவிட்டவன் “இங்க இருந்து போ” என கத்த அப்போது தான் அவனது புஜத்திலிருந்து இரத்தம் வழிவதை நித்திலா கவனித்தாள்.
கூடவே குளத்தின் நடுவே துப்பாக்கியுடன் நின்றவனையும் தான். அவன் தன் மகனைக் குறி வைத்திருக்கவேண்டும். அம்ரித்தைக் காக்க கிருஷ்ணராஜசாகர் குறுக்கே பாய்ந்திருக்கிறான் என்பது புரிந்தது.
“சாகர்… உங்களுக்கு ரத்தம்… இங்க வந்துடுங்க”
மைந்தனைத் தன் பின்னே ஒளித்தவண்ணம் அவள் கத்தியபடி கணவனை அழைத்த அதே நொடி தீக்ஷித்தின் கவனம் அவள் பக்கம் திரும்பியது.
அவனது பிஸ்டலில் இருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு வந்த இரண்டாவது தோட்டா அவளது உடலைத் துளைத்து குருதியைச் சுவைக்க வேகமாக வந்தது. அதன் வேகத்தை முந்தி அவளுக்கு முன்னே வந்து நின்றான் கிருஷ்ணராஜசாகர்.
பெண்ணவளின் பூவுடலுக்கு அரணாய் நின்றவனின் வலிய தேகத்திற்குள் நுழைந்தது அந்த தோட்டா.
அவனது வயிற்றில் பாய்ந்த தோட்டாவைத் தாங்கியவன் நிற்க முடியாமல் சரிய நித்திலா அவனை விழாமல் மடியில் தாங்கிக்கொண்டாள்.
நிஹாரிகா, கிருஷ்ணராஜசாகர், நித்திலா மூவரும் ஒரே இடத்தில் இருப்பதை எண்ணி மனம் உறுத்தியதால் அங்கே வந்த சந்தீப் இக்காட்சியைக் கண்டதும் “ஏய்” என கோபத்தோடு கத்த குளத்தின் நடுவே சைலன்சர் பொருத்திய துப்பாக்கியோடு நின்ற தீக்ஷித் சுதாரித்து அங்கிருந்து வெளியேறி வீட்டின் முன்பக்கத்தை நோக்கி ஓடினான்.
அவனைத் துரத்தும் முடிவை விடுத்து இரத்தவெள்ளத்தில் இருந்த கிருஷ்ணராஜசாகரைக் காக்க இப்ராஹிமை அழைத்தான் சந்தீப்.
வீட்டின் முன்பக்கம் இருந்த பாதுகாவலர்கள் தீக்ஷித்தைப் பிடிக்க ஓடினர். வீட்டுக்குள்ளும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
நித்திலாவின் பிடியில் இருந்த கிருஷ்ணராஜசாகருக்குத் தோட்டாக்கள் உண்டாக்கிய காயத்தின் வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
யாரோ ஓடி வந்தார்கள். நித்திலாவின் பிடியிலிருந்தவனைத் தூக்கிக்கொண்டார்கள்
“சாகர்” என தேம்பிய நித்திலாவின் குரல் எங்கோ கிணற்றுக்குள் ஒலிப்பதை போல இருந்தது.
“காரை ஸ்டார்ட் பண்ணுங்க இப்ராஹிம்”
இரத்தத்தின் பிசுபிசுப்பையும் மீறி சந்தீப்பின் ஸ்பரிசத்தை உணர்ந்தது கிருஷ்ணராஜசாகரின் தேகம்.
“டாடி என்னைப் பாருங்க”
அம்ரித்தின் அழுகுரல்! எதையும் உணரும் நிலையில் இல்லாத நிலை! கிருஷ்ணராஜசாகருக்குப் பார்வை மங்கியது.
இனி அம்ரித்தின் குரலை கேட்க முடியுமா? இப்படியே உயிர் போய்விடுமா? வேதனையின் நடுவே கண்டபடி யோசித்தவனுக்கு அக்கணம் புரிந்தது, மரணத்தை விட கோரமானது மரண பயம் என்பது. ஒரு காலத்தில் அதை யாருக்கு அளித்தானோ அந்த நித்திலா அவனது கண்கள் மூடியதைக் கண்டு அழுது அரற்றிய குரல் கடைசியாய் காதில் ஒலிக்க நினைவு தப்பியது கிருஷ்ணராஜசாகருக்கு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

