“உங்களுக்குப் பிடிக்காதவங்களை விட பிடிச்சவங்க கிட்ட கொஞ்சம் கவனமா இருங்க… பிகாஸ், பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் நம்மளை அது பாதிக்காது… ரொம்ப ஈசியா அவங்களோட ஆக்சனுக்கு நம்மளால ரியாக்ட் பண்ண முடியும்… ஆனா நமக்குப் பிடிச்சவங்க கொஞ்சம் முன்ன பின்ன நடந்தாலும் நம்ம ஆழமா காயப்பட்டுப்போயிடுவோம்… அந்த காயம் உண்டாக்குற வேதனையால சில நேரம் நம்மளோட மனுசத்தன்மை கூட மரிச்சுப் போயிடும்… ஒருத்தரை நீங்க நேசிக்க ஆரம்பிச்சிட்டிங்கனாலே உங்களைக் காயப்படுத்துறதுக்கான எல்லா ரைட்சையும் நீங்க அவங்களுக்குக் குடுத்துட்டிங்கனு அர்த்தம்… எல்லா நேசமும் என்னைக்காச்சும் ஒரு நாள் நம்மளை காயப்படுத்தி வேடிக்கை பாக்கும்… உங்களால இந்த மாதிரி காயங்களைத் தாங்கிக்க முடியும்னா மட்டும் நேசவளையத்துக்குள்ள போங்க… இதை மட்டும் எப்பவும் மறந்துடாதிங்க”
– கிரிஷ்
ஸ்ரீநயனி தமையனிடம் அம்ரித்தின் மனநிலையைக் கூறிவிட்டாள். கிருஷ்ணராஜசாகரால் முதலில் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“இப்ப நம்ம அம்மாவ யாராச்சும் அழ வச்சாங்க, அவமானப்படுத்துனங்கனா நீ அந்த இடத்துல இருக்க விரும்புவியாண்ணா? மாட்டல்ல, அம்ரு மட்டும் இருக்கணும்னு நீ எப்பிடி எதிர்பாக்குற? பிறந்ததுல இருந்து அண்ணி மட்டும் தான் உலகம்னு வாழ்ந்தவனை என்னென்னமோ ஆசை காட்டி நீ இங்க கூட்டிட்டு வந்த… அந்தக் குழந்தையும் ரொம்ப ஆசையா இங்க வந்தான்… இங்க இருக்குற சூழ்நிலையோட பிரமிப்பு அவனுக்குச் சந்தோசத்தைக் குடுத்திருக்கலாம்… அதனால தான் ஒவ்வொரு தடவை சிம்லாவுக்கு வர்றியானு அண்ணி வீடியோ கால்ல கேட்டப்பவும் நீங்க இங்க வாங்க நித்திம்மானு நம்பிக்கையா கூப்பிட்டான்… அவங்கம்மா இங்க வந்தப்ப சந்தோசப்பட்டான்… ஆனா இப்ப சூழ்நிலை மாறிடுச்சுண்ணா… நீ அவனோட கண்ணெதிர்ல அண்ணிய திட்டுற… போதாக்குறைக்கு யூஸ்லெஸ் நிஹாரிகா அண்ணி கிட்ட சண்டை போட்டிருக்கா… இப்பிடிப்பட்ட சிச்சுவேசன்ல இந்தச் சண்டை சச்சரவு இல்லாத அமைதியான இடத்துக்குப் போகணும்னு அவன் ஆசைப்படுவானா? இல்ல சண்டைக்கு நடுவுல வாழ்ந்தாலும் வசதியான இடத்தை விட்டுப் போகக்கூடாதுனு நினைப்பானா?”
ஸ்ரீநயனி நியாயம் என்னவோ அதை கிருஷ்ணராஜசாகரிடம் கூறிய பிறகு அவனும் யோசனையில் ஆழ்ந்தான்.
இங்கே நிலவும் சூழலை மாற்றியே ஆகவேண்டும். எப்படியும் நிஹாரிகாவும் சந்தீப்பும் இங்கிருந்து சென்றுவிடுவார்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இனி அம்ரித்தின் முன்னிலையில் நித்திலாவைத் திட்டவோ அவளிடம் வாக்குவாதம் செய்யவோ கூடாது. பின்னர் மைந்தனின் மனம் அமைதியுற்று அவன் இங்கேயே இருந்துவிடுவான்.
கிருஷ்ணராஜசாகர் தன் இஷ்டத்திற்கு மனக்கோட்டை கட்டினான். அவனது கணிப்புபடி நிஹாரிகாவும் சந்தீப்பும் ஒரே வாரத்தில் சாகர் நிவாசை விட்டு நீங்கி பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தார்கள்.
அவனும் நித்திலாவை மதிப்போடு நடத்தினான் எனலாம். பிரிவுக்கான காரணம் தெரிந்த பிறகு அவளோடு வாக்குவாதம் கூட செய்வதில்லை.
இதற்கிடையே சிரஞ்சீவி காவேரியின் வருகை வேறு!
நித்திலாவிடம் குசலம் விசாரிக்கிறேன் என்ற பெயரில் பழைய சம்பவங்களைக் கிளறப் பார்த்தார்கள் இருவரும். ஆபத்பாந்தவனாய் கிருஷ்ணராஜசாகர் வந்து அவளைக் காப்பாற்றினான்.
“தேவையில்லாம பழசை பேசுறதை விட்டுட்டு நடக்கப்போறதை கவனிக்கலாமே”
“நடக்கப்போறது என்னனு சொன்னா அதை கவனிக்கலாம் கிரிஷ்”
சிரஞ்சீவி அமர்த்தலாக வினவினார்.
“என் மகனோட பர்த்டே வருதுல்ல மாமா… அதை க்ராண்டா செலிப்ரேட் பண்ணலாம்னு இருக்கேன்”
மூவரையும் அர்த்தபுஷ்டியாகப் பார்த்தபடி தகவலைக் கூறினான் கிருஷ்ணராஜசாகர்.
நித்திலாவுக்கு அவன் கூறிய இத்தகவல் கொஞ்சம் அதிர்ச்சி தான். அவளிடம் மைந்தனின் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி இதுவரை மூச்சு கூட விடவில்லை அவன்.
எப்படி கூறுவான்? பிறந்தநாளை வைத்து தானே அடுத்த திட்டத்தையே போட்டிருந்தான் அவன்.
நித்திலாவுக்கு கிருஷ்ணராஜசாகர் மறைத்ததில் ஏக கடுப்பு.
இருப்பினும் எப்போது நித்திலா வார்த்தைகளை விடுவாள் என்று கழுகு கண்களோடு காத்திருந்த காவேரியையும் சிரஞ்சீவியையும் கருத்தில் கொண்டு வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“பர்த்டே செலிப்ரேசனுக்குச் சந்தீப்பை இன்வைட் பண்ணுவியா மருமகனே?”
கிண்டலாகக் கேட்டார் காவேரி.
“கண்டிப்பா இன்வைட் பண்ணுவேன் அத்தை… என் தம்பி எனக்கு எப்பவும் முக்கியமானவன் தான்”
“தம்பி மட்டும் தானா? இல்ல…”
“அவனை மட்டும் தான் நான் இன்வைட் பண்ணப்போறேன்… மத்தவங்க வந்தாலும் வராம போனாலும் ஐ டோண்ட் கேர்”
அவர்களுக்குப் பதில் அளித்துவிட்டு நித்திலாவைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான்.
அவளோ ஏன் தன்னிடம் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றி கூறவில்லை என வினவினாள்.
“இப்ப சொல்லிட்டேன்ல… இதை ஒரு இஸ்யூவாக்கி சண்டை போடாத ப்ளீஸ்”
சலிப்போடு அவன் சொன்ன விதம் கடந்த சில நாட்களாக அவனது மனதில் நிரம்பியிருக்கும் சஞ்சலத்தை நித்திலாவுக்குக் காட்டிக்கொடுத்து விட்டது.
“ரொம்ப பயந்திருக்கிங்க போல”
நக்கலாக வினவினாள் அவள். இது அவளுக்கான நேரம். அவன் கொடுத்ததை திருப்பிக்கொடுக்க வேண்டுமல்லவா!
கிருஷ்ணராஜசாகர் அவளை ஏறிட்ட நொடியில் சுற்றியுள்ள இடத்தின் வெப்பநிலை அதிகமானதை போல உணர்ந்தாள் நித்திலா. அவ்வளவு அனல் அவனது கோபப்பார்வையில்!

“அம்ரு இப்பலாம் அடிக்கடி சிம்லாவுக்குப் போயிடலாம் நித்திம்மானு சொல்லுறான்… நானும்…”
கேலியாக இழுத்தாள் அவள்.
மகனைப் பிரித்துவிடுவாளோ என கிருஷ்ணராஜசாகர் பதறுவதை அவனது உடல்மொழி காட்டியது.
“உங்களை இப்பிடி பாக்குறப்ப சந்தோசமா இருக்கு சாகர்… நான் சொன்னேன்ல, என்னை மாதிரியே நீங்களும் துடிச்சுப் போவிங்கனு… பை த வே, இவ்ளோ பயம் எனக்குப் போதல… ஐ வாண்ட் மோர் எமோசன்ஸ்”
கிருஷ்ணராஜசாகர் “ஏய்” என கோபத்தோடு அவளை நெருங்கும் போதே “நித்திம்மா” என்று அழைத்தவாறு ஓடி வந்தான் அம்ரித்.

மைந்தன் முன்னிலையில் அவளிடம் சண்டை போட்டால் சிம்லாவுக்குச் செல்லவேண்டுமென்ற அவனது எண்ணம் இன்னும் அழுத்தமாகிவிடும்.
எனவே புன்னகையை வருவித்துக்கொண்டான்.
“நித்திம்மா தாத்தாவ பாக்கணும்”
ஜனார்தனனைப் பார்க்க வேண்டுமென்றான் அம்ரித்.
“நம்ம தாத்தா வீட்டுக்குப் போகலாமா அம்ரு குட்டி?”
“வேண்டாம்”
இடையில் வந்தது கிருஷ்ணராஜசாகரின் குரல்.
ஏன் என்பது போல மனைவியும் மைந்தனும் பார்க்க “அங்க உன் தாத்தா மட்டுமா இருக்கார்? இன்னொரு லேடியும் இருக்காங்கல்ல, அவங்களுக்கு உன் நித்திம்மாவ சுத்தமா பிடிக்காது அம்ரு… இப்ப அங்க போனிங்கனா அவங்க நித்திம்மாவ திட்டி அழவைப்பாங்கடா” என்றான் அவன்.
“அப்ப போகல டாடி”
வேகமாக மறுத்தான் அம்ரித். இருப்பினும் தாத்தாவைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை நிராசையான சோகம் அவன் முகத்தில்.
அதை பொறுக்க முடியவில்லை கிருஷ்ணராஜசாகரால்.
“இப்ப அம்ரு குட்டி தாத்தாவ பாக்கணும், அவ்ளோ தானே? நான் டிரைவர் அனுப்பி தாத்தாவ இங்க அழைச்சிட்டு வரச் சொல்லுறேன்… நீ ஜாலியா தாத்தா கூட இங்கயே விளையாடலாம்… இப்ப போய் ரஜீஷா ஆன்ட்டி கூட விளையாடு போ”
அம்ரித்தை ரஜீஷாவிடம் அனுப்பி வைத்தான் அவன்.
“சித்தி என்னை திட்டி என் மனசு கஷ்டப்படக்கூடாதுனு எவ்ளோ மெனக்கிடுறிங்க சாகர்!”
நித்திலாவின் போலி மெச்சுதலை அவனால் காது கொடுத்து கேட்க முடியவில்லை.
“உன்னை யாரும் எதுவும் சொல்லிட்டாங்கனா அம்ரு ஹர்ட் ஆகுறான்… எனக்கு என் மகன் வருத்தப்படுறதுல உடன்பாடு இல்ல”
முடிந்தவரை கம்பீரமாகச் சொல்லி முடித்தான். என்ன தான் அவன் கம்பீரமாக காட்டிக்கொண்டாலும் அதன் அடிப்படை என்னவோ மைந்தன் தன்னை விட்டுப் போய்விடக்கூடாதென்ற பயம் மட்டுமே!
“ரொம்ப பயமா இருக்கா சாகர்? த்சூ! என் பிள்ளைய என் கிட்ட இருந்து பிரிக்க நீங்க எத்தனை ட்ராமா போட்டிங்க… அப்பலாம் என் மனசும் இப்பிடி தான் பயந்துச்சு… கடைசில எனக்குக் கேன்சர்னு பயாப்சி ரிப்போர்ட்ல வச்சிங்களே ஒரு ஆப்பு… ப்பா, மரணபயத்தை எனக்குக் காட்டிங்க… அந்தப் பயத்தை மட்டும் உங்க கண்ணுல நான் பாத்துட்டேன்னா ஐ ஃபீல் வெரி ஹேப்பி”
தலை சாய்த்து நித்திலா சொன்ன விதம் சுருக்கென்று வலித்தது கிருஷ்ணராஜசாகருக்கு. இவ்வளவு குரூரமாகச் சிந்திப்பவளில்லை நித்திலா. நியாயம் அநியாயம் பற்றி யோசிக்காமல் இரக்கமின்றி தான் போட்ட திட்டம் அவளையும் கல்லாக்கிவிட்டதோ?
அம்ரித் தன்னிடம் வந்துவிட்டால் போதுமென நினைத்தவனுக்கு நிரந்தரமாக அவனைத் தன்னோடு பிணைத்து வைக்கும் வழிமுறையைப் பற்றி யோசிக்கவேயில்லை.
இப்போது கூட அம்ரித்தின் பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாட எண்ணுகிறான். அந்த கொண்டாட்டத்தின் சந்தோசத்தில் மயங்கி மைந்தன் தன்னோடு இருந்துவிடுவான் என்ற நம்பிக்கை.
குழந்தைகளுக்கு இம்மாதிரி கொண்டாட்டங்கள் கொடுக்கும் சந்தோசம் தற்காலிகமானதே என யார் கிருஷ்ணராஜசாகருக்குப் புரியவைப்பது?
“இன்னும் கொஞ்சநேரத்துல உங்கப்பா வந்துடுவார்… இப்ராஹிம் என் கிட்ட இம்பார்டெண்ட் மேட்டர் பேசணும்னு சொன்னான்… நான் கிளம்புறேன்” என்று கிளம்ப எத்தனித்தவன் ஏதோ யோசனையோடு நின்றான்.
“செக்யூரிட்டிய டைட் பண்ணுனதுக்கு ஒரு காரணம் இருக்கு நித்திலா… உன் இஷ்டத்துக்கு ஊர் சுத்தப் போயிடாத… உனக்கு எதுவும் ஆபத்து வந்துச்சுனா அதால அம்ருக்குத் தான் கஷ்டம்”
இதோடு இரண்டாம் முறையாகப் பாதுகாப்பு பற்றி கிருஷ்ணராஜசாகர் எச்சரிக்கவும் நித்திலா குழம்பிப்போனாள்.
ஒருவேளை தன் வீட்டைத் தவிர வேறு எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்க நினைக்கிறானோ என அப்போதும் அவன் மீது சந்தேகமே எழுந்தது.
அம்ரித்துக்கு இங்கே தான் பாதுகாப்பு கிடைக்குமென தன்னையே சொல்ல வைப்பதற்கான நாடகமாகக் கூட இருக்கலாம் என கிருஷ்ணராஜசாகரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தாள் நித்திலா.
ஆனால் கிருஷ்ணராஜசாகரின் எச்சரிக்கைக்கு அவசியம் வருவதற்கான திட்டமொன்று பெங்களூருவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான பீன்யாவில் இருக்கும் ‘ஆயுஷ்வேத் காஸ்மெட்டிக்ஸ் ப்ரைவேட் லிமிட்டடின்’ தொழிற்சாலை அலுவலகத்தில் தீட்டப்பட்டது.
ஆம்! இப்ராஹிமின் முன்னெச்சரிக்கைக்குக் காரணமானவர்கள் ராந்த்வாவின் தொழில்முறை போட்டி நிறுவனமான ‘ஆயுஷ்வேத் காஸ்மெட்டிக்ஸ்’சின் சேர்மன் ஆயுஷ் பர்மானும், அவரது மைந்தன் திலீப் பர்மானும் தான் அத்திட்டத்தின் சூத்திரதாரிகள்.
காரணம் – வெறும் நான்காண்டுகளில் ராந்த்வா ஸ்கின்கேர் அடைந்த வளர்ச்சி.
மாபெரும் கொரியன் சருமப்பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடுமளவுக்கு வளர்ந்த கடுப்பு.
அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு தொழிலில் முடிசூடா மன்னனாக இருந்த ஆயுஷ்வேத், ராந்த்வாவின் வருகைக்குப் பிறகு மாபெரும் அடியைச் சந்தித்தது.
ஆயுர்வேதம் தான் அழகுக்கு அடிப்படை, இதர அழகு சாதன நிறுவனங்களின் பொருட்கள் யாவும் கெமிக்கல்களால் நிரம்பியவை என்று சொல்லி சொல்லி விளம்பரம் செய்தவர்களை சரும பாதுகாப்பு நிபுணர்களை வைத்தே அடித்திருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
“நம்ம குடிக்கிற தண்ணில, சுவாசிக்கிற காத்துல ஆக்சிஜன்ங்கிற கெமிக்கல் இருக்கு… மனுச உடம்பு எத்தனை வகையான கெமிக்கலால ஆனதுனு சயின்ஸ் படிச்சவங்களுக்கு நல்லா தெரியும்… கெமிக்கல்னாலே விஷம்னு ரொம்ப நாளைக்கு மக்களை ஏமாத்த முடியாது… டாக்சிக் கெமிக்கல்ஸ் மட்டும் தான் தடைசெய்யப்பட்ட பொருட்களே தவிர எல்லா கெமிக்கலும் மோசம்னு சொல்லுறது ஆயுர்வேதம்ங்கிற பேர்ல வியாபாரத்தை பெருக்கிக்க உருவாக்கப்பட்ட ஒரு யுக்தி மட்டுமே”
இந்தியாவின் தலை சிறந்த சரும பாதுகாப்பு நிபுணர் ராந்த்வாவுக்காக பேசிய முதல் விளம்பர காட்சியிலேயே ஆயுஷ்வேத்தை மறைமுகமாக தாக்கியிருந்தார்.
படிப்படியாக ராந்த்வா வளர ஆயுஷ்வேத்தின் வளர்ச்சி மட்டுப்பட்டது.
இந்த தொழில் விரோதத்தால் சட்டப்படி ஏகப்பட்ட இடைஞ்சல்களை ஆயுஷ்வேத் நிறுவனத்தினர் கிருஷ்ணராஜசாகருக்குக் கொடுத்தார்கள். அனைத்தையும் தலைசிறந்த சட்ட ஆலோசனை நிபுணர்கள் கொண்ட குழுவின் உதவியால் தவிடுபொடியாக்கி மேலும் மேலும் வளர்ந்துவிட்டான் அவன்.
ஆயுஷ்வேத் நஷ்டத்தில் தள்ளப்படவில்லை என்றாலும் அழகு சாதனப்பொருட்களின் மன்னனாக இருந்த நிறுவனம் இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.
சந்தையில் ராந்த்வாவுக்குக் கிடைக்கும் வரவேற்பு ஆயுஷ் பர்மானையும் திலீப் பர்மானையும் கடுப்பில் ஆழ்த்தியது.
ஒரேயடியாக கிருஷ்ணராஜசாகரை இத்தொழிலை விட்டு விரட்ட கொடூர திட்டமொன்றை தீட்டியிருந்தார்கள் தகப்பனும் மகனும்.
“உன் பி.ஏ சொன்ன ஆள் கச்சிதமா வேலைய முடிச்சிடுவான்ல?”
மைந்தனிடம் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டார் ஆயுஷ் பர்மான். அறுபத்தைந்து வயது மூளையில் உதித்த கொடூரமான திட்டத்தை சில வாரங்களுக்கு முன்னரே மைந்தனின் உதவியாளன் மூலம் செயல்படுத்தும்படி ஆணையிட்டிருந்தார்.
“முடிச்சுடுவான்பா… தொழில்ல எத்தனை தடவை அடிச்சாலும் மீண்டு வர்றவனை சொந்த வாழ்க்கைல தான் அடிக்கணும்னு நீங்க சொன்னப்ப நான் யோசிச்சேன்… பட் இப்ப திட்டம் கரெக்டா முடிஞ்சிடும்னு நம்பிக்கை வந்திருக்கு” என்றான் முப்பத்தைந்து வயது திலீப் பர்மான்.
அவனது உதவியாளன் கூலிக்குக் கொலை செய்பவர்களை டார்க் வெப் மூலம் தேடிப் பிடித்திருந்தான். அதில் ஒருவனின் மனைவியை ஏற்கெனவே கவர்னெஸ் என்ற பெயரில் சாகர் நிவாசுக்குள் அனுப்பியிருந்தார்கள்.
ஆம்! ரஜீஷாவின் கணவன் தான் திலீப் பர்மான் தேர்ந்தெடுத்திருக்கும் கொலைகாரன். அனைத்து டீலிங்குகளும் டார்க்வெப்பில் முடிந்திருந்ததால் பின்னாட்களில் போலீஸ் விசாரணையில் கூட மாட்டிக்கொள்ள மாட்டார்கள் அல்லவா!
ஆயுஷ் பர்மான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை கிருஷ்ணராஜசாகருக்கு நெருக்கமான ஒருவரைக் கொலை செய்யவேண்டும். அந்நபர் கிருஷ்ணராஜசாகரின் பலவீனமாக இருக்கவேண்டும். அந்த வகையில் அவர்கள் தேர்வு செய்தது அம்ரித்தை.
ரஜீஷாவின் உதவியால் இத்திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார்கள்.
அம்ரித்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் வரப்போகிறது அல்லவா! அந்நாளில் கொடூரத்தை நிகழ்த்த காத்திருந்தார்கள். ஆனால் சாகர் நிவாசில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருப்பதை அறிந்ததும் கொஞ்சம் சுணங்கிப்போனார்கள்.
அதை போக்கும்படி திலீப் பர்மான் சொன்ன விசயம் ஆயுஷ் பர்மானுக்கு இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது.
“அந்தப் பாதுகாப்பை தாண்டி உள்ள போறதுக்கு சந்தீப்போட ஒய்ப் நிஹாரிகா நம்ம ஏற்பாடு பண்ணுன ஆளுக்கு உதவி பண்ணுவாப்பா”
“வாட்? ஹவ் இஸ் இட் பாசிபிள்?”
“அண்ணனும் தம்பியும் பிரிஞ்சிட்டாங்கப்பா… இப்ப சந்தீப்பை விட அவனோட ஒய்புக்கு கிருஷ்ணராஜசாகர் மேல பயங்கர வெறுப்பு… லாஸ்ட் வீக் சவிதாவும் அவளும் ஒரு ஸ்பால மீட் பண்ணுனப்ப அந்தப் பொண்ணு சொல்லிருக்கா… அவளை நேத்து நம்ம வீட்டுல நடந்த பார்ட்டிக்கு இன்வைட் பண்ணிருந்தா சவிதா… அங்க அவ கிட்ட நான் பேச்சு குடுத்தேன்… கிருஷ்ணராஜசாகர் மேல கொலைவெறில இருக்கா… வாய்ப்பு கிடைச்சா அவனைக் கொல்லவும் தயங்கமாட்டேன்னு என் கிட்ட சொன்னா… அவளை நம்ம திட்டத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம்”
“ஐ டோண்ட் திங் சோ திலீப்… அவ எதையும் உளறி வச்சிட்டானா என்ன பண்ணுறது?”
“அப்பவும் அவ தான் மாட்டிப்பா… குடும்ப பகையில அவளும் சந்தீப்பும் தான் கொலைகாரனை ஏற்பாடு பண்ணுனாங்கனு ப்ளாட்டை அவங்களுக்கு எதிரா திருப்பிடலாம்”
நிஹாரிகாவின் பொறாமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திகொண்டு கிருஷ்ணராஜசாகரைப் பழிவாங்க அந்த தொழில் மூளைகள் போட்ட திட்டம் நிறைவேறுமா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

