“இது விளம்பர உலகம். பிசினஸ்ல நீங்க ஜெயிக்கணும்னா உங்க ப்ராடக்டை குவாலிட்டியா குடுக்குறிங்களோ இல்லையோ, உங்க ப்ராடக்டை பத்தி பேசுறதுக்கு ஒரு கூட்டத்தை ரெடி பண்ணி வைக்குறது முக்கியம். ஒன்னுமே இல்லாத மட்டமான ப்ராடக்டை கூட ஆஹா ஓஹோனு வர்ற விளம்பரங்களை நம்பி வாங்குறவங்க இருக்காங்க. எப்பிடி விளம்பரம் முக்கியமோ அதே மாதிரி விமர்சனமும் முக்கியம். அந்த விமர்சனம் நம்ம ப்ராடக்டோட சேல்ஸை பாதிக்காதபடி பாத்துக்க வேண்டிய சாமர்த்தியம் இருக்கணும். பாசிட்டிவான விமர்சனம் ஒருவகையில நமக்கு விளம்பரம் மாதிரி தான். But negative criticism is a poison to our product’s life. சோ நெகடிவ் விமர்சனத்தையும் அதை குடுக்குறவங்களையும் எப்பிடி அடக்கணுமோ அப்பிடி அடக்குறதுக்கும் அந்த விமர்சனம் பரவாம தடுக்குறதுக்கும் ஒரு பிசினஸ்மேன் கத்துக்கணும். Because negative criticism spreads easily by word by mouth”
-கிரிஷ்
இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் கூட்டம்…
முன்னே இருந்த ஸ்க்ரீனைப் பார்த்து தனது தொழிலனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
இந்தியாவின் இளம் தொழில்முனைவோர்கள் பங்கு பெறும் வெப்பைனார் அது.
“தொழில்ல இறங்குனதும் லாபம் வரும்னு எதிர்பாக்குறது விதைச்சதும் அமோக விளைச்சலை அறுவடை பண்ணணும்னு நினைக்குற மாதிரி இம்மெச்சூர்ட் ஆக்டிவிட்டி… அனுபவம் வாய்ந்த தொழிலதிபர்கள் புது தொழில்ல இறங்குனா எடுத்ததும் லாபத்தை எதிர்பாக்கமாட்டாங்க… ஏன்னா லாபம் வர்றதுக்குக் கொஞ்சம் காலம் எடுக்கும்னு அவங்களுக்குத் தெரியும்… நம்மள்ல பலருக்கு அது புரியாததால லாபம் வரலனு ஆரம்பிச்ச தொழிலை பாதியில விட்டுடுறோம்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

கிட்டத்தட்ட அரைமணிநேரம் தொடர்ந்த அந்த வெப்பைனார் முடிவுக்கு வந்ததும் தொண்டை வறண்டிருந்தது கிருஷ்ணராஜசாகருக்கு.
இப்ராஹிம் தண்ணீர் பாட்டிலை நீட்டியதும் மடமடவென அருந்தி பாட்டிலைக் காலி செய்தான்.
“நித்திலா மேம் அந்த கபேல ஃபோர் இயர்ஸா வொர்க் பண்ணுறாங்களாம் சார்… கபேல ஜாயின் பண்ணுனப்ப அவங்க ப்ரெக்னெண்டா இருந்திருக்காங்க… கபே ஓனரோட சன்னுக்கும் அவங்களுக்கும் நெக்ஸ்ட் வீக் மேரேஜ் ஆகப்போகுது… கபேக்கு பக்கத்துல இருக்குற சின்ன கெஸ்ட் ஹவுஸ்ல நித்திலா மேமும் அவங்க சன்னும் இருக்காங்க”
வெப்பைனார் ஆரம்பிக்கும் முன்னர் இப்ராஹிமிடம் நித்திலாவைப் பற்றிய தகவல்களைத் திரட்ட சொல்லியிருந்தான். அவனும் சுற்றுவட்டாரத்தில் விசாரித்த வரை அனைத்தையும் ஒரு வரி விடாமல் கிருஷ்ணராஜசாகரிடம் கூறிவிட்டான்.
அதை கேட்டவன் “ம்ம்… இன்ட்ரஸ்டிங்க்” என்று சொல்லிவிட்டு இப்ராஹிமோடு வெப்பைனார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து வெளியேறினான்.
இப்ராஹிம் காரைக் கிளப்பியதும் தனது ப்ளேசரைக் கழற்றி அவனிடம் கொடுத்தான்.
“கார்ல கிப்ட் ராப் பண்ணுன பாக்ஸ் ஒன்னு இருக்கும்… அதை குடு”
இப்ராஹிம் பரிசுப்பெட்டியைக் கொடுத்துவிட்டு குழப்பமாய் அவனைப் பார்த்தான்.
“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு… நீ ரிசார்ட்டுக்குப் போய் அம்மாக்குத் துணையா இரு… இல்லனா அவங்க ஓவர் திங்கிங்ல டைம் வேஸ்ட் பண்ணுவாங்க” என்றபடி சட்டையின் ஸ்லீவை முழங்கை வரை மடித்தவன் தனது மொபைலில் கேப் புக் செய்தான்.
இப்ராஹிம் தயக்கத்தோடு காரைக் கிளப்பிக்கொண்டு போகவும் கிருஷ்ணராஜசாகர் புக் செய்த கேப் வந்து நின்றது.
அதில் ஏறியவன் “லாங்வுட் ரோட் போக எவ்ளோ நேரம் ஆகும்?” என்று கேட்க இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாமென கியரைப் போட்டு காரைக் கிளப்பினார் ஓட்டுனர்.
கார் மெதுவாக சிம்லா ரோடுகளைக் கடந்து மலைப்பாதையில் ஏறத் துவங்கியது.
கிருஷ்ணராஜசாகரின் காதுகளில் முந்தைய தினத்திலிருந்து “டாடி” என்ற அம்ரித் சாகரின் குரலே ஒலித்துக் கொண்டிருந்தது. என்ன செய்தாலும் அந்த குரல் நின்ற பாடில்லை.
நர்மதாவோ கபேயிலிருந்து ரிசார்ட்டுக்குத் திரும்பியதிலிருந்து ஆரம்பித்த புலம்பலை நிறுத்தவேயில்லை.
“அம்ரித் சாகர்னு அழகா பேர் வச்சிருக்கா… அவனைப் பாக்கிறப்ப உன்னைப் பாக்குற மாதிரியே இருக்கு கிரிஷ்”
“சப்போஸ் அவன் நித்திலாவுக்கும் அவளோட லவ்வருக்கும் பிறந்த பையனா இருந்தா என்ன செய்வீங்கம்மா?”
தனது மனம் அப்படியிருக்காது என்று கூறினாலும் அன்னையிடம் சும்மா கேட்டு வைத்தான் அவன்.
“அப்பிடி இன்னொருத்தனுக்குப் பிறந்த பையனுக்கு ஏன்டா சாகர்னு நம்ம குடும்பம் வழிவழியா வைக்கிற பேரை அவ வைக்கப் போறா? நீ அவளை அலட்சியப்படுத்துற… அப்பிடி ஒருத்தி இருந்ததையே மறந்த மாதிரி நடந்துக்குற… உன்னால மட்டும் தான்டா எதுவுமே நடக்காத மாதிரி இருக்க முடியும்… எனக்கு வயிறு எரியுது”
அம்ரித் சாகர் என்ற பெயரைக் கேட்டதிலிருந்து கிருஷ்ணராஜசாகரின் மனம் நிலைகொள்ளாமல் தவித்ததை அவன் மட்டுமே அறிவான். தனக்கென ஒரு வாழ்க்கையோ குடும்பமோ வாரிசோ இருப்பதில் அக்கறை காட்டாதவன் என இத்தனை நாட்கள் தன்னைப் பற்றி அவன் உருவாக்கி வைத்திருந்த தோற்றத்தைக் கடந்த இருபத்துநான்கு மணிநேரம் கட்டிக் காப்பாற்ற எவ்வளவு பிரயத்தனம் செய்திருப்பான்?
எந்நேரமும் தொழிலில் அடுத்தென்ன அடுத்தென்ன என பரபரவென இயங்குபவனின் மூளை நித்திலாவைச் சந்தித்ததிலிருந்து திடீர் ஓய்வுக்குப் போயிருந்தது.
காலையில் சுறுசுறுப்பானவன் அடுத்து என்ன செய்வது என தீர்மானித்தான். வெப்பைனாரில் பேசிவிட்டு இதோ தீர்மானித்ததை நிறைவேற்றப் போகிறான்.
ஒன்றரைமணிநேர பயணத்தில் கபே வந்ததும் இறங்கிக்கொண்டவன் வழக்கமான கம்பீரத்தோடு அதற்குள் பிரவேசித்தான்.
முந்தைய நாள் போல அதே மத்தியில் கிடந்த மேஜையில் அமர்ந்தவன் அர்னவ் வந்து ஆர்டர் கேட்கவும் ஃபில்டர் காபி வேண்டும் என்றான்.
“எங்க கபேல ஃபில்டர் காபி கிடைக்காது சார்”
பணிவாய் பதிலளித்தான் அர்னவ்.
“உங்க பாரிஸ்டாக்கு ஃபில்டர் காபி தான் பிடிக்கும்… அவங்களைப் போட சொல்லி கொண்டு வாங்க மிஸ்டர்….” என நிறுத்தி அவனது பெயர்பட்டியைப் பார்த்தவன் “மிஸ்டர் அர்னவ்” என்று முடித்தான்.
அர்னவ் என்ன செய்வதென புரியாமல் விழித்தபடி சமையலறைக்குள் சென்றவன் நித்திலாவை அனுப்பி வைத்தான்.
“வேர் இஸ் மை ஃபில்டர் காபி?”
அசராமல் அவளிடம் கேட்டான் கிருஷ்ணராஜசாகர்.

நித்திலா இழுத்து பிடித்த உதடுகளை புன்னகைப்பது போல் வைத்துக்கொண்டாள்.
“எங்க கபே மெனுல இல்லாத எதையும் நாங்க செஞ்சு குடுக்க முடியாது சார்”
“ஓ.கே ஃபைன்… நெக்ஸ்ட் வீக் வரைக்கும் எங்கம்மா இங்க தான் இருப்பாங்க… அவங்களுக்கு ஊர் சுத்தி காட்ட முடியுமா?”
“சாரி… நெக்ஸ்ட் வீக் எனக்கு மேரேஜ்… என்னால எங்கயும் வர முடியாது”
நித்திலா போலிப்பணிவு காட்டி மறுக்கவும் உதட்டை ஒரு பக்கமாக இழுத்து கோணல்சிரிப்பொன்றை உதிர்த்தான் கிருஷ்ணராஜசாகர். அவள் வாயிலிருந்து திருமணச்செய்தியைக் கேட்கவேண்டுமென தானே இவ்வளவு பீடிகை!
போலி ஆச்சரியமும் சந்தோசமும் மின்னியது கிருஷ்ணராஜசாகரின் விழிகளில்.
“வாவ்… எவ்ளோ பெரிய குட் நியூஸ் சொல்லிருக்க? உன் மேரேஜுக்கு ஏதாச்சும் கிப்ட் குடுக்கணுமே நித்திலா”
தாடையில் அழுத்தம் கொடுத்து உதட்டைக் குவித்து யோசித்தான். இது அவனது மேனரிசம். ஆழ்ந்த யோசனைக்குப் போனால் இவ்வாறு செய்வது வழக்கம்.
யோசிப்பது போல இப்போது நடிக்கத் தானே செய்கிறான்? ஆனால் நடிப்பென அவள் அறிந்துவிடக்கூடாதல்லவா?
கையோடு கொண்டு வந்த பரிசுப்பெட்டியை நித்திலாவிடம் நீட்டினான்.
“என்ன இது?”
“ரொம்ப நாள் கழிச்சு உன்னை மீட் பண்ணுன சந்தோசத்துல கிப்ட் ஒன்னு குடுக்கலாம்னு ஆசைப்பட்டேன்… பட் யுவர் குட் டைம், அது மேரேஜ் கிப்டா போயிடுச்சு பாரேன்… வாங்கிக்க நித்திலா”
நித்திலா வாங்க தயங்கினாள்.
“இதுல பாம் செட் பண்ணி கொண்டு வரல… கிப்ட் தான்… வாங்கி பிரிச்சுப் பாரு”
தயக்கத்தை ஒதுக்கி அவன் நீட்டிய பரிசுப்பெட்டியை வாங்கியவள் அதன் அலங்கார ரிப்பனை அவிழ்த்தாள்.
பின்னர் ஒவ்வொரு செல்லோடேப்பாக பொறுமையாகப் பிரித்து பளபளப்பான காகிதத்தை பத்திரப்படுத்தினாள். யாரேனும் பரிசுப்பொருள் கொடுத்தால் கிப்ட் ராப் செய்திருந்த காகிதத்தை ரிப்பனோடு பத்திரப்படுத்தி வைப்பது நித்திலாவுக்கு இருக்கும் விசித்திரமான பழக்கம்.
பெரிய அட்டைப்பெட்டியைத் திறந்தவள் அதனுள் இருந்த காகிதங்களை அதிர்ச்சியோடு பார்த்தாள்.
‘மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசன்’ மெதுவாக உச்சரித்தாள் அவள்.
அதில் ‘பெட்டிசனர் நம்பர் ஒன்’ என்று குறிப்பிடப்பட்ட கணவனுக்குரிய இடத்தில் கிருஷ்ணராஜசாகரின் பெயரும், ‘பெட்டிசனர் நம்பர் டூ’ என்று குறிப்பிட்டப்பட்ட மனைவியின் இடத்தில் நித்திலா கிருஷ்ணராஜசாகர் என்ற பெயரும் இருந்தது.
நான்காண்டுகளுக்கு முன்னர் அனைத்தையும் முடித்துவிட்டோமென நிம்மதியாய் இருந்தவளின் வாழ்க்கையில் அணுகுண்டாக வந்து விழுந்தது அந்தக் காகிதம்.
கிருஷ்ணராஜசாகர் அவளின் அதிர்ச்சியை அணுவணுவாக ரசித்தான்.
“ம்ம்… முழுசா படிச்சுப் பாரு”
அவன் ஊக்கியதும் எடுத்துப் பார்த்தவளின் கண்களில் நீர் நிரம்பியது.
“இ… இ… இது”
வார்த்தைகள் வெளிவர போராட தலை கிறுகிறுத்தது. அப்படியே சரியப்போனவள் சமாளித்து அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
“என்னாச்சு நித்தி?”
குழைவாக ஒலித்தது அவனது குரல். அது அக்கறையால் உண்டான குழைவா என்பது ஐயமாக இருந்தது நித்திலாவுக்கு.
அவன் முன்னிலையில் தன்னை பலவீனமாக காட்டிக்கொள்ள விரும்பாமல் கண்களில் நிரம்பிய கண்ணீரைக் காஜலை சரி செய்வது போல கைக்குட்டையால் ஒற்றியெடுத்தாள்.
“மானிங் சாப்பிடல… அதான் தலை சுத்திடுச்சு”
சமாளித்தவள் அந்தக் காகிதங்களை அவன் முன்னே வைத்தாள்.
“இதை எதுக்கு என் கிட்ட காட்டுறிங்க?” முடிந்தவரை அமைதியான குரலில் கேட்டாள்.
“நீ மேரேஜ் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்க… நல்ல விசயம் தான்… பட் லீகலா அது பாசிபிள் இல்லனு உனக்குத் தெரியணும்ல”
“இப்ப இந்தப் பேப்பர்சை என் கிட்ட காட்ட வேண்டிய அவசியம் என்ன? இது மூலமா நீங்க என்ன சொல்ல வர்றீங்க சாகர்?”
கிருஷ்ணராஜசாகர் அந்த காகிதங்களை எடுத்துக் கொண்டான்.
“நாலு வருசத்துக்கு முன்னாடி நம்ம ஃபைல் பண்ணுன மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசனை ஜட்ஜ் ரிஜெக்ட் பண்ணிட்டார்… ஏன்னா ஆறு மாசத்துக்கு அப்புறம் வந்த ஹியரிங்குக்கு நீ அப்பியர் ஆகல… சோ, இப்பவும் நீ மிசஸ் கிருஷ்ணராஜசாகர் தான்.. அப்பிடி இருக்கிறப்ப நீ இன்னொருத்தரை எப்பிடி மேரேஜ் பண்ணிக்க முடியும்?”
மிகவும் இலகுவாக கேட்டபடி நாற்காலியில் சாய்ந்து கால் மீது கால் போட்டுக்கொண்டான். நித்திலா என்ற ஒருத்தியைக் கண்டுகொள்ளாமல் மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.

நித்திலா கைகளால் தலையைத் தாங்கியபடி அமர்ந்தாள்.
அடுத்த திங்களன்று அவளும் விக்ரமும் மணமுடிக்கவிருக்கின்றனர். இந்த நேரத்தில் அவள் இன்னும் திருமதி கிருஷ்ணராஜசாகர் என்கிறான் இவன்.
என்னை ஏன் இத்தகைய இக்கட்டில் மாட்டிவிட்டு ரசிக்கிறாய் ஆண்டவா?
மெதுவாக தலையை உயர்த்தியவள் “இத்தனை வருசம் இல்லாம இப்ப இதை என் கண்ணுல காட்டுறதுக்கு என்ன காரணம் சாகர்?” என்று கேட்டாள்.
மொபைலில் இருந்து கவனத்தை அவள் புறம் திருப்பினான்.
“நீ இப்பிடி தவிப்பா சாகர்னு சொல்லுறப்ப உள்ளுக்குள்ள என்னமோ உருகுது… இன்னொருத்தன் பொண்டாட்டியா ஆகிட்டனா இந்த உருகல் மறுகலை எல்லாம் ரசிக்க முடியாதுல்ல”
நித்திலாவுக்குள் சுருசுருவென கோபம் மூண்டது. சீற்றத்துடன் அவனை ஏறிட்டாள்.
அவனோ உனது கோபமெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை எனும் பாவனையோடு அமர்ந்திருந்தான் சற்று திமிராக.
“விளையாடாதிங்க சாகர்… பி சீரியஸ்”
பட்டென மொபைலை மேஜை மீது விட்டெறிந்தவன் இவ்வளவு நேரமிருந்த இலகுத்தன்மையை தொலைத்து சினமேற அவளை நோக்கினான்.

“நான் உயிரோட இருக்கிறப்ப என் புள்ளை எவனோ ஒருத்தனை டாடினு சொல்லுறான்… இதை விட அசிங்கம் எனக்கு வேற எதுவுமில்ல”
உரத்தக் குரல் எழுப்பாமல் முகத்தைச் சுளிக்காமல் கோபத்தை எப்படி வெளிக்காட்டலாமென அவனைப் பார்த்தால் கற்றுக்கொள்ளலாம். குரலின் உஷ்ணம் விழிகளிலும் ஏறியிருந்தது. கோபத்தில் நாசி நுனி சிவந்திருந்தது.
“குழந்தைனு ஒன்னு நமக்குள்ள வரவே கூடாது… சப்போஸ் அப்பிடி வந்துச்சுனா அதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல… அதை சாக்கா வச்சு நீ என் கிட்ட வந்து ஒட்டிக்கக்கூடாது… நீ அப்பிடி ஒட்டிக்கிற டைப் இல்லனு தெரியும்… ஏன்னா, உன்னோட செல்ஃப் ரெஸ்பெக்ட் உன்னை என் கிட்ட வரவிடாது”
என்றோ ஒரு நாள் அவன் கூறியதை நினைவு கூர்ந்தாள் நித்திலா. அப்போது அவளுக்கும் அந்த ஏற்பாட்டில் சம்மதம் தான். அவன் கூறிய சந்தர்ப்பம் வந்த போது கூட சொன்ன வார்த்தையை மீறாமல் அவனைத் தொந்தரவு செய்யாமல் விலகினாள். விலகிய சமயத்தில் அவன் மீது வருத்தமோ கோபமோ இல்லை.
வாழ்நாள் நிச்சயம் இல்லை எனும் நிலையில் என்றோ ஒரு நாள் பிரிவோம் என்ற நம்பிக்கையோடு ஜெண்டில்மென் அக்ரிமெண்ட் போட்டு ஆரம்பித்த உறவில் குற்றம் சொல்லவோ கோபம் கொள்ளவோ எந்தக் காரணமும் இல்லை என இந்நிமிடத்திலும் நித்திலாவுக்குத் தோன்றியது.
இப்போதும் அவன் அவளை வாழ்த்திவிட்டுச் சென்றிருந்தால் மகிழ்ந்திருப்பாள். அவனது இயல்புக்கு அவன் அப்படி தான் நடந்திருக்க வேண்டும். இது என்ன புதிதாக எனது பிள்ளை என உரிமைப்போராட்டம்? சென்டிமெண்டுக்கும் எனக்கும் வெகுதூரம் என்பானே!
“என் மேல கோவம் வருதா நித்திலா?”
சட்டென சிரித்தாள் அவள்.
“உங்க மேல எனக்குக் கோவமில்ல சாகர்… அம்ருனு ஒருத்தன் பிறக்கலனா இந்த மாதிரி சந்தர்ப்பத்துல என்னைச் சந்திச்சிருந்தா நீங்க பத்து பைசாக்குக் கூட மதிச்சிருக்க மாட்டிங்க… யாரோ ஒருத்தி மாதிரி ஹாய் ஹலோனு பேசிட்டு நாகரிகமா கடந்து போயிருப்பிங்க… உங்களை பத்தி எனக்குத் தெரியும்… நான் கோவப்படுறது என் மேல… மனவுறுதி அதிகம்னு கர்வமா இருந்ததை மறந்து உங்க கிட்ட சலனப்பட்ட என்னை நினைச்சா தான் எனக்குக் கோவம் வருது… நான் திடமனசா இருந்திருந்தேன்னா இப்பிடி ஒரு சூழல் வந்திருக்காதுல்ல”
முகம் கசங்க உரைத்தவளை விசித்திரமாக நோக்கின கிருஷ்ணராஜசாகரின் விழிகள்.
அர்த்தமற்ற கழிவிரக்கத்தால் அவள் பீடிக்கப்படுவதை துடிக்கும் உதடுகள் அவனுக்குச் சொல்லாமல் சொன்னது. தாழ்ந்திருந்த இமைகள் கண்களைப் பார்க்கவிடாது தடுத்தாலும் இமை தாண்டி உருண்டோடிய கண்ணீர்த்துளிகள் அவளுடைய சுயபச்சாதாபத்தைப் பறைசாற்றியது.
என்ன தோன்றியதோ, எதை பற்றியும் யோசிக்காது சட்டென எழுந்து தனது விரலால் அவளது கண்ணீரைத் துடைத்தான் கிருஷ்ணராஜசாகர். நித்திலா பதறி பின்னே சாய எத்தனிக்கவும் கையை விலக்கிக்கொண்டான்.
இவன் முன்னால் அழுதோமே என அவமானக்குன்றலுடன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள் மீண்டும் மனோதிடமுள்ள நித்திலாவாய் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.
“முடிவா நீங்க என்ன சொல்லுறிங்க?”
“நான் சொல்லுறதுக்கு எதுவும் இல்ல… என்னை டிவோர்ஸ் பண்ணாம நீ இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க முடியாது… எனக்கு அம்ரித் வேணும்”
“அம்ரித் ஒன்னும் பொம்மை இல்ல, நீங்க கேட்டதும் தூக்கிக் குடுக்குறதுக்கு… உங்க யாரோட துணையும் இல்லாம ஊரார் பேசுன பழிச்சொல்லை தாங்கி எத்தனை கஷ்டத்துக்கு மத்தியில அவனைப் பெத்துக்கிட்டேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… இவர் வந்து கேப்பாராம், நாங்க தூக்கிக் குடுத்துடணுமாம்… புல்ஷிட்”
பொறுமை பறந்தோட கோபத்தில் வெடித்தாள் நித்திலா.
“ஓ! நீ அப்பிடி வர்றியா? ஏதோ கஷ்டப்பட்டு அவனைப் பெத்தேன்னு சொன்னியே, அந்தக் கஷ்டத்துக்குலாம் க்ரெடிட் குடுக்குற மாதிரி அவனோட நீயும் வந்துடு”
“சாரி! உங்க கூட எனக்கு வர இஷ்டமில்ல”
தனது முடிவைச் சொல்லிவிட்டு எழுந்தவள் “நீங்க சொன்ன லீகல் பாயிண்ட்ஸ் சரி தான்… விக்கிய நான் மேரேஜ் பண்ணிக்கப்போறதில்ல… அதுக்காக உங்க கூட வரணும்னு எந்த அவசியமும் இல்லையே… பிள்ளைய சாக்கா வச்சு நீங்க போடுற பரிதாப பிச்சைல வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்ல சாகர்… ஒரு காலத்துல நீங்க நினைச்ச மாதிரி, சப்போஸ் என் ஆயுள் முடிஞ்சுதுனா நீங்க தாராளமா அம்ருவ உங்களோட அழைச்சிட்டுப் போங்க… ஆனா என்னோட கடைசிமூச்சு உள்ள வரைக்கும் அவன் என் கூட மட்டும் தான் இருப்பான்” என்று தெளிவாக உரைத்துவிட்டு அவ்விடம் விட்டு விலகி தனது வேலையைத் தொடரப் போய்விட்டாள்.
கிருஷ்ணராஜசாகர் புருவம் சுருக்கி அவள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தவன் எரிச்சலுடன் விவாகரத்து பேப்பர்களை எடுத்துக்கொண்டு எழுந்து வேகமாக நடந்தான்.
நடந்த வேகத்தில் எதிரில் ஓடி வந்த அம்ரித் அவன் மீது மோதி விழப்போக வெகு லாவகமாக விழாமல் பிடித்தவன் குழந்தையைத் தூக்கிக்கொண்டான்.
க்ஷண நேரத்தில் தரையை முத்தமிடப் போன தன்னைத் தூக்கி வைத்துக்கொண்ட உயரமான மனிதனை அம்ரித் வியப்பாகப் பார்த்தான்.
கிருஷ்ணராஜசாகர் வெகு அருகில் அவனைப் பார்த்த போது தான் அன்னை கூறியது எத்துணை உண்மை என்பதை புரிந்துகொண்டான்.
அவனது சிறுவயது புகைப்படங்களில் இருப்பதை போல அம்ரித் தோற்றமளித்ததை தான் அன்னை கூறியிருக்கிறார்.
“தேங்க்யூ அங்கிள்… நீங்க தூக்கலனா நான் தரையில திஸ்யூம்னு மோதிருப்பேன்”
கைகள் இரண்டையும் முட்டிக் காட்டி நன்றி கூறினான் அம்ரித்.
கிருஷ்ணராஜசாகரின் மனம் இவனுக்கு நான் அங்கிளா என்று கொந்தளித்தது. குழந்தையிடம் அந்தக் கொந்தளிப்பைக் காட்ட மனமில்லை.
சிரித்த முகத்தினனாக “நான் அங்கிள் இல்லடா அம்ரு… என்னை அப்பானு கூப்பிடணும்… சரியா?” என்று திருத்தினான்.
அம்ரித்தோ பெரிய மனித தோரணையில் அவனைப் பார்த்துவிட்டு முடியாதென மறுப்பாய் தலையசைத்தான்.
“நித்திம்மா சொல்லாம நான் யாரையும் அப்பானு கூப்பிட மாட்டேன்”

பிடிவாதமாகக் கூறும் போது அவனது உருண்டை முகத்தின் மோவாய் இறுகுவதை வைத்து தன்னைப் போல பிடிவாதமென எண்ணி மனதிற்குள் நகைத்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
“உங்கம்மா கிட்ட கேட்டுட்டு அவங்க பெர்மிசன் குடுத்தா என்னை அப்பானு கூப்பிடு… டீல் ஓ.கேவா?”
“சரி… இப்ப என்னை இறக்கி விடுங்க… நான் நித்திம்மா கிட்ட போகணும்”
கிருஷ்ணராசாகர் அவனை இறக்கிவிடவும் நிற்காமல் ஓடிப்போனான் அவன்.
புதியவர்களிடம் நெருங்கக்கூடாதென சொல்லி வளர்த்திருப்பாள் போல. அந்நேரத்தில் நித்திலாவின் வளர்ப்பின் மீது மரியாதை கூடிப்போக அவளது பேச்சு உண்டாக்கிய எரிச்சல் அடங்கி தங்கியிருந்த ரிசார்ட்டுக்குச் செல்ல கேப் புக் செய்தபடி கிளம்பினான் கிருஷ்ணராஜசாகர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

