“எந்த ஒரு காரியத்துலயும் நீங்க ஜெயிக்கணும்னா உங்க கவனம் அதுல மட்டுமே இருக்கணும்… இதை சொல்லி தான் எங்கப்பா என்னையும் சந்தீப்பையும் வளர்த்தார்… பொதுவா பிசினஸ் பண்ணுற ஃபேமிலிஸ்ல சின்ன வயசுல இருந்தே பிசினஸ்ல இறங்குறதுக்காக யங்ஸ்டர்ஸை தயார் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க… வேர்ல்ட்லயே பெஸ்ட் பிசினஸ் ஸ்கூல்ஸ்ல படிக்க வைக்குறதுலயே அதுக்கான ட்ரெய்னிங் ஆரம்பிச்சிடும்… மேஜர் ஆனதுக்கு அப்புறம் அவங்க கம்பெனில ஷேர் அலாட் பண்ணுற ஸ்டேஜ்ல திடீர்னு ஒரு பொறுப்பை தூக்கி தலையில வச்ச ஃபீல் வரும்… ரிலாக்சேசன், எண்டர்டெயின்மெண்ட்னு எதுக்கும் நேரம் இருக்காது… பட் இப்பிடி இருக்க எனக்குப் பிடிச்சிருக்கு… Beacause in business, each and every second has the value of money… உலகமே பணத்துக்குப் பின்னாடி ஓடுறப்ப எந்த விசயம் பணத்தைக் குடுக்குதோ அதுக்கு நேரம் ஒதுக்குறது தானே புத்திசாலித்தனம்”
-கிரிஷ்
இரண்டு நாட்கள், வெறும் நாற்பத்தெட்டு மணிநேரம் இத்தனை நீளமாக கடப்பதற்கே அரிதாக இருக்குமா? நித்திலாவுக்கு அப்படி கடந்திருந்தது.
நாற்பத்தெட்டு மணிநேரத்தில் எத்தனை மணித்துளிகள் கலக்கத்திலும் கண்ணீரிலும் கழிந்தன என்பது அவளுக்கே தெரியாது.
“அப்ப எனக்கு தேர்ட்டி பர்சண்டேஜ் சான்ஸ் இருக்குல்ல” என்றவனின் வதனம் வேறு அடிக்கடி திரைப்படம் போல் கண் மூடியதும் வந்து போனது.
முப்பது மட்டுமில்லை முழு வாய்ப்பும் உனக்கு இருக்கிறது கிராதகா என தொண்டை கிழிய கத்திவிடலாமா எனுமளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தாள் நித்திலா.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
விக்ரமும் சாவித்திரியும் அம்ரித்திடம் அவளுக்கு வெறும் கால்வலி என்றே கூறி சமாளித்திருந்தனர்.
கீமோதெரபி குறைந்தது மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குக் கொடுப்பார்கள். அப்போது யார் அம்ரித்தைக் கவனித்துக்கொள்வார்கள் என்ற கேள்வியும் இந்த முறை புற்றுநோய் தன்னை மரணத்தில் ஆழ்த்திவிடுமோ என்ற பயமும் நித்திலாவுக்குள் புயலைப் போல மையம் கொண்டு ஆட்டுவித்தன.
அவள் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தைரியமுற்று இத்தனை ஆண்டுகள் துடிப்போடு வாழ்ந்ததால் சாவை நினைத்து நித்திலாவுக்கு அச்சம் பிறந்தது. அதிலும் அம்ரித் வளர்வதையும், அவன் வாழ்வில் உயர்வதையும் பார்க்காமலேயே உயிர் பிரிந்துவிடுமோ என்று கூட யோசித்து அழுதாள்.
“சரியான நேரத்துல டயக்னைஸ் பண்ணி அதுக்கான ட்ரீட்மெண்ட் பண்ணிட்டோம்னா கேன்சர்ல இருந்து முக்கால்வாசி மீண்டு வாழலாம்டா”
கண்ணீரோடு இருந்த இளம்பெண் ஒருத்தியிடம் என்றோ ஒருநாள் நம்பிக்கையாய் பேசியது எல்லாம் நித்திலாவின் காதில் ஒலிக்காமல் இல்லை. அன்று அவளுக்குக் கொடுத்த நம்பிக்கை இன்று தனக்கு என்றதும் ஏன் ஜகா வாங்குகிறது?
இரண்டு நாட்களில் விக்ரம் தான் அவளை வற்புறுத்தி உண்ண வைத்தான். திக்பிரமை பிடித்தவளைப் போல இருந்தவளை சாவித்திரி கவனித்துக்கொண்டார்.
இந்த இரு நாட்கள் மரணத்தை விட மரணத்தைப் பற்றிய பயம் எவ்வளவு கொடுமையானது என நித்திலாவுக்குப் புரியவைத்துவிட்டன.
அவளுக்கு இருந்த இன்னொரு சவால் நாற்பத்தெட்டு மணிநேரத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அம்ரித் விடாமல் ஜெபித்த ‘டாடி எப்ப வருவார் நித்திம்மா’ என்ற மந்திரம்.
“வருவார்டா அம்ரு”
“டாடி பிசியா இருப்பார்மா”
“இப்ப டாடி இருக்குற கன்ட்ரில நைட் டைம்”
“ஃப்ளைட்டுக்கு லக்கேஜ் பேக் பண்ணுவார்”
இத்தனை சாக்குபோக்குகள் சொல்லி அம்ரித்தைச் சமாளித்தாள். ஆனால் மனமோ என்னைப் பற்றி என் மைந்தன் கவலைகொள்ளவில்லையே என்று தவித்தது.
நித்திலாவுக்கு வந்திருப்பது காய்ச்சல் ஜலதோசம் போல சாதாரண கால்வலி என்ற எண்ணத்தோடு தூரத்தில் இருக்கும் தந்தையை எண்ணி ஏங்கிய அந்தப் பிஞ்சுக்கு அவனது தந்தை அன்னைக்குக் கொடுத்திருக்கும் தற்காலிக தண்டனையைப் பற்றி தெரியுமா என்ன?
ஆசையாய் அவன் கேட்டு வாங்கிய ப்ளேஸ்டேசன் விளையாட ஆளின்றி கிடந்தது.
கீமோதெரபி எடுத்துக்கொள்ளும் போது அவனை யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வி நித்திலாவிற்குள் பூதாகரமாக உருவெடுத்திருந்தது.
விக்ரமும் சாவித்திரியும் கவனித்துக்கொள்வார்கள் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. கிருஷ்ணராஜசாகர் செய்து வைத்துவிட்டுப் போன குழப்பத்திற்கு பிறகு அவர்களிடம் எந்த உரிமையில் உதவி கேட்பது?
மனம் தவித்தது. திருமண ஏற்பாடு நின்று போன வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் சாவித்திரி அவளுக்குத் துணையாய் நிற்பது அவரது பெருந்தன்மை. அதை ஒரேயடியாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நித்திலாவிற்கு மனம் வரவில்லை.
இறுதியாக யோசித்து முந்தைய நாளிரவு அவள் எடுத்த முடிவு அம்ரித்தைக் கிருஷ்ணராஜசாகரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே. அதை விக்ரமிடம் கூறியபோது அவன் ஆட்சேபிக்கவில்லை.
“நல்ல முடிவு தான் நித்திலா… அம்மாவ மாதிரி அன்பு காட்ட அப்பாவால மட்டும் தான் முடியும்”
தென்கொரிய பயணத்தை முடித்துக்கொண்டு எப்போது அவன் இந்தியாவுக்குத் திரும்பினாலும் அம்ரித்தைப் பார்க்க சிம்லாவுக்கு வரும்படி கிருஷ்ணராஜசாகரின் வாட்சப் எண்ணுக்கு அம்ரித்தின் டேபில் இருந்து செய்தி அனுப்பியிருந்தான் விக்ரம்.
அதை இன்னும் கிருஷ்ணராஜசாகர் பார்க்கவில்லை. மைந்தன் அவனைப் பார்க்கத் துடிப்பதில் துளியளவு துடிப்பு கூடவா அவனுக்கு இருக்காது மனம் குமைந்தபடி விடியலில் கண் விழித்தவளுக்கு அன்றைய நாள் அதிர்ச்சியான நாளாக விடிந்தது.
அம்ரித்திற்கு போர்வையைப் போர்த்திவிட்டு முகம் கழுவி பல் துலக்கி காபியோடு நாளை ஆரம்பித்தவள் அந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை.
காரணம் காபி தீர்ந்ததும் கதவைத் திறந்துப் பார்த்தவளின் பார்வை வலைக்குள் சிக்கியவன்! வீட்டு வாயிலில் ஜெர்கின் பாக்கெட்டுகளில் கைவிரல்களைப் புதைத்தபடி ஸ்டைலாக போஸ் கொடுத்தவாறு பைன் மரக்கூட்டங்களை ரசித்துக்கொண்டிருந்த கிருஷ்ணராஜசாகர்!

இவன் தென்கொரியாவிலிருந்து திரும்பிவிட்டானா என ஆச்சரியத்தோடு அவனை நெருங்கியவள் அழைக்கும் முன்னர் “குட்மானிங்” என்றபடி திரும்பினான் அவன்.
நித்திலாவின் சோர்ந்திருந்த முகம் தனது வெற்றியை உறுதிபடுத்துவதை கண்டு மனதுக்குள் கர்வம் கொண்டவன் அவளது விழிகளில் தெரிந்த வெறுமையில் கொஞ்சமே கொஞ்சம் கலங்கிப்போனான்.
இந்த வெறுமைக்குக் காரணமானவன் தான் என்று தெரிந்தாலும் ஏனோ மனம் விக்கித்தது அவளது வெறுமையான விழிகளில்.
அவனறியாமல் “ஆர் யூ ஓ.கே நித்திலா?” என்றான் அக்கறையாக.
கேட்ட பிற்பாடு தான் மானசீகமாக தன்னையே கடிந்துகொண்டான். மனமோ அடிபட்ட பாம்பாக இவளுக்கு இந்த தண்டனை கம்மி தான் என்று சீறியது.
நித்திலா பதில் பேசாமல் வெறுமெனே தலையாட்டினாள். நலமாக இருக்கிறேன் என பொய் சொல்லி சமாளிக்க பிடிக்கவில்லை. நன்றாக இல்லை என்று உண்மையைக் கூறி அவன் குதூகலிப்பதைக் காண சுத்தமாகப் பிடிக்கவில்லை.
இத்தகைய தர்மசங்கடமான சூழ்நிலையில் அமைதியை விட சிறந்த பதில் ஏது? அதையே கையாண்டாள் நித்திலா.
“அம்ரு இன்னும் தூங்குறானா?”
வெறும் தலையசைப்பு மட்டுமே பதிலாக வந்தது.
“நீ கபேக்குக் கிளம்பல?”
“லீவ் எடுத்திருக்கேன்”
சுருக்கமாகப் பதிலளித்தாள்.
“ஏன்? உடம்பு சரியில்லையா?”
ஆதுரத்தில் குளித்த குரலில் வெட்கமே இல்லாமல் கண் கலங்கியது நித்திலாவிற்கு. அது போலியான ஆதுரமடி பெண்ணே என கிருஷ்ணராஜசாகரை முழுவதுமாக அறிந்த மனம் இடித்துரைக்கவும் அவன் கவனிக்காதவாறு திரும்பிக்கொண்டாள்.
“ஆமா! கொஞ்சநாளாவே கால்வலி இருந்துச்சு… அப்புறம் வீக்கம் வந்துச்சு… ஆல்ரெடி சர்ஜரி பண்ணுன கால்ல வலி வந்ததால டாக்டர் கிட்ட செக்கப் பண்ணுனேன்… டியூமர் மாதிரி தெரிஞ்சதால பயாப்சி பண்ணுனாங்க… ரிப்போர்ட்ல கேன்சர் ரெகரன்ஸ்னு வந்திருக்கு”
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கேட்ட கேள்விக்குக் கடகடவென மனப்பாடம் செய்ததை ஒப்பிக்கும் மாணவியைப் போல ஒப்பித்து முடித்தாள் நித்திலா. இதற்காக நேற்றிரவு எத்தனை முறை ஒத்திகை பார்த்திருப்பாள்?
கிருஷ்ணராஜசாகர் அதிர்ச்சியானவனைப் போல காட்டிக்கொண்டான்.
“வாட்? ஹவ் இஸ் இட் பாசிபிள்? ஐ காண்ட் பிலீவ் திஸ் நித்திலா… நீ வேற டாக்டர் கிட்ட செகண்ட் ஒபீனியன் கேட்டியா?”
அவனது இயல்புக்கு மாறான பதற்றமான குரலில் கேட்க நித்திலா அவனை ஊன்றி கவனித்தாள்.
கொஞ்சம் அதிகமாக பதறுவது போல நடித்துவிட்டோமோ? முன்னே பின்னே நடித்து பழக்கமில்லாததால் தன்னை அவள் கண்டுகொண்டாளோ என்ற ஐயத்தில் அமைதியாகிவிட்டான்.
எந்த நேரத்தில் இவன் வாய் வைத்தானோ போனதாக நினைத்த நோய் திரும்ப வந்துவிட்டது என மனதிற்குள் குமைந்தாள் நித்திலா.
“சிம்லால நம்பர் ஒன் ஆங்காலஜிஸ்ட் அவர் தான்”
சொல்லும் போதே காலில் வலி வர முகம் சுளித்தாள்.
“வலிக்குதா?”
மயிலிறகால் வருடுவது போல வலிக்கு அத்துணை இதமாக இருந்தது அவனது அக்கறையான கேள்வி. ஏனோ அந்த அக்கறை பிடித்திருந்தது. இவனை நம்பாதே என மனம் சொன்ன அத்துணை அறிவுரைகளையும் தவிடுபொடியாக்கிவிட்டு “ம்ம்” என்றாள்.
சொல்லும் போதே நாசி விடைத்து கண்கள் கலங்கி குரல் உடைந்தது. உடல் பயத்தில் நடுங்கியது.
தனது சுயமரியாதையை ஒதுக்கிவைத்துவிட்டு கண்ணீர் உகுக்க ஆரம்பித்தாள்.
“எனக்குப் பயமா இருக்கு சாகர்… நான் இல்லனா அம்ருவ யார் பாத்துப்பாங்கனு ஒரு பெரிய பயம் எனக்குள்ள இருந்து குத்தி கிழிக்குது… அவன் என் வயித்துல வந்த நாள்ல இருந்து எனக்கு அவனும் அவனுக்கு நானும் தான் துணையா இருந்திருக்கோம்… எனக்கு அப்புறம் அவன் தனியா நின்னுடக்கூடாது… நெக்ஸ்ட் வீக்ல இருந்து கீமோதெரபி ஆரம்பிச்சிடும்… அதோட பின்விளைவு வேதனைய ஏற்கெனவே அனுபவிச்சவ நான்… நான் படுற வேதனைய அம்ரு பாக்கக்கூடாது… அவனை உங்க கூட கூட்டிட்டுப் போயிடுங்க… உங்க கூட இருக்கிறப்ப அவன் என்னைத் தேடமாட்டான்… அப்பிடி தேடுனாலும் உங்களால அவனைச் சமாளிக்கமுடியும்… சப்போஸ் நான்…”
கரம் கூப்பி அவள் முடிக்கும் முன்னர் உடல் அதிர நித்திலாவை இழுத்து அணைத்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.

அவன் நினைத்தது நடந்தேறிய மகிழ்ச்சியை கொண்டாட வேண்டிய தருணத்தில் தீயிலிடப்பட்ட புழுவாக மனம் துடித்தது. என்ன வார்த்தை சொல்லவிருந்தாய் என அவளைக் கடிந்துகொள்ள எண்ணியவன் அவளுக்குக் கிடைத்திருக்கும் அதிர்ச்சி அவளை அவ்வாறு பேசவைக்கிறது என்பதை புரிந்துகொண்டாலும் இதற்கு சூத்திரதாரி தான் என்பதையே மறந்துபோய்விட்டான்.
“டோண்ட் சே தோஸ் வேர்ட்ஸ்… எதுவும் ஆகாது”
ஆறுதல் கூறிய போதுதான் உண்மை உணர்ந்து அவளை விலக்கி நிறுத்தினான்.
நித்திலாவின் கண்ணிமைகள் சிவந்து தடித்திருக்க அவள் கண்ணீரைத் துடைக்க துடித்த தனது கரத்தை மானசீகமாகச் சபித்தான்.
எப்போதும் இப்படி தான், அவளது கண்ணீருக்கு அவன் கலங்கிவிடுகிறான். இத்தனை பட்டும் திருந்தாத தன்னை எதைக் கொண்டு அடிப்பதென மனதுக்குள் திட்டித் தீர்த்துக்கொண்டான்.
ஜெர்கினுக்குள் இறுகிய கரமே அவனது கடுப்பின் அளவைக் காட்டியது.
நித்திலா கண்ணீரைத் துடைத்துக் கொண்டதும் தன்னை நிதானப்படுத்திக்கொண்டான்.
தொண்டையைச் செருமியவன் “அம்ருவ என் கூட அழைச்சிட்டுப் போறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல… பட் ஒன் கண்டிசன்” என நிறுத்தினான்.
என்ன என்பது போல பார்த்தாள் நித்திலா.
“நீ ஃபுல்லா ரெகவர் ஆகி வருவியாங்கிறது உனக்கே சந்தேகம் தான்… சப்போஸ் நீ குணமாகி வந்தா அம்ருவ என் கிட்ட இருந்து பிரிக்கணும்னு முயற்சி பண்ணக்கூடாது… அவன் என் கூட தான் இருப்பான்”
‘நீ திரும்பி வருவதற்குள் அம்ரு அம்ரித் சாகராக மாறியிருப்பான். என் மாளிகையில் வசித்தவனுக்கு இந்த கான்க்ரீட் வீட்டையும், காபிபொடி நெடி வீசும் உன்னையும் பிடிக்காமல் போகும். சகல வசதியோடு இளவரசனாக வாழ்பவன் உன்னுடன் நாடோடி வாழ்க்கை வாழ சம்மதிக்கமாட்டான்’
இறுமாப்பாக மனதிற்குள் சொல்லிக்கொண்டான். அதீத நம்பிக்கை தான். தன்னால் முடியாதது எதுவுமில்லை என்ற கர்வம்.
“நிஜமாவே அவன் மேல உங்களுக்கு அவ்ளோ அன்பா? இல்ல என் மேல இருக்குற கோவத்தால அவனைப் பிரிக்கணும்னு நினைச்சிங்களா?”
இரண்டு காரணங்களோடு மூன்றாவதாக ஒரு காரணம் இருப்பதை அறியாமல் கேட்டாள் அப்பாவி நித்திலா.
கிருஷ்ணராஜசாகர் உதட்டை ஒரு பக்கமாக இழுத்துப் புன்னகைத்தான்.
“இந்தக் கேள்விய நான் மிஸ்டர் ஜனார்தனன் கிட்ட கேட்டேன்… இப்ப நீ என் கிட்ட கேக்குற”
ஜனார்தனன் என்ற பெயரில் நித்திலாவின் முகம் கலவரம் கொண்டது.
“சாகர்”
“டோண்ட் வொரி… அவர் கிட்ட உன்னைப் பத்தி எதுவும் சொல்லமாட்டேன்”
“தேங்க்யூ”
“இந்த தடவை நீ செஞ்ச ப்ராமிஸை மறக்கமாட்டனு நம்புறேன்”
அழுத்தமாக அவன் சொன்ன விதத்தில் நித்திலாவின் முகம் வாடியது. அவன் சொன்ன சத்தியம் எதுவென அவளுக்கும் நினைவிருக்கிறது. ஆனால் அந்தச் சத்தியத்தை மீறக் காரணமானவன் இவன் தானே!
“எப்பவுமே குடுத்த வாக்கை மீறணும்னு நான் நினைச்சதில்ல சாகர்”
அவன் கன்னத்தின் உட்பக்க சதையை உந்தி சிரித்த விதத்தில் தன்னை நம்பவில்லை என்பதை புரிந்துகொண்டாள் நித்திலா.
இவன் என்றைக்கு என்னையும் என் மனதையும் புரிந்துகொண்டான், இன்று புரிந்துகொள்வதற்கு! சலிப்பு தட்டியது. காலின் வேதனை வேறு இம்சிக்க அவன் கையைப் பிடித்து சத்தியம் செய்தாள்.
“நான் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வந்தாலும் உங்க கிட்ட இருந்து அம்ருவ பிரிக்கமாட்டேன் சாகர்”
கிருஷ்ணராஜசாகர் வெற்றிப்புன்னகை பூத்தான். நினைத்ததை செய்துமுடித்துவிட்டான் இல்லையா!
“சப்போஸ் அம்ரு கூட இருக்கணும்னு நினைச்சனா நீயும் சென்னைக்கு…”
“நான் வரமாட்டேன் சாகர்… தட்ஸ் ஃபைனல்”
தீர்மானமாக உரைத்தாள் நித்திலா. கீமோதெரபி முடிந்தால் எத்தனை ஆண்டுகள் ஆயுள் என்பது இப்போது வரை அறுதியிட்டுச் சொல்லப்படாத நிலையில் இனியும் மகனுக்குக் கிடைக்கவிருக்கிற செழிப்பான வாழ்வுக்கு இடையூறாக இருக்கவிரும்பாமல் கிருஷ்ணராஜசாகர் சொன்ன நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாள்.

“உனக்கு ட்ரீட்மெண்டுக்கு ஆகுற செலவை நான் பாத்துக்குறேன்”
“என் பிள்ளைய நான் உங்க கிட்ட காசுக்கு விக்கல சாகர்… அம்ருவ நல்லா பாத்துக்கங்க… எனக்கு வேணுங்கிறதை செய்யுறதுக்கு என் மேல உண்மையான பாசம் வச்சிருக்கிறவங்க இருக்காங்க”
நிமிர்வாய் அவள் கூறிக்கொண்டிருக்கையில் “நித்தி” என்றபடி வந்தான் விக்ரம். அவனைக் கண்டதும் நித்திலாவின் முகத்தில் நம்பிக்கை ஒளிர கிருஷ்ணராஜசாகரோ “வாட்டெவர்” என்றவாறு அம்ரித்தைக் காண வீட்டை நோக்கி நடந்தான்.
ஆனால் ‘வாட்டெவர்’ என்றவன் மனதிற்குள் விக்ரமைக் காய்ச்சியெடுத்ததை நித்திலா அறியமாட்டாள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

