மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த அந்த வீட்டினுள் கார்கள் வரிசையாக நுழைந்தன. முதல் காரிலிருந்து இறங்கினான் அன்றைய நிகழ்வின் கதாநாயகனான வருண். பொன்னிற ஷெர்வானியில் கம்பீரமாய் காதலியைக் கரம்பிடிக்கும் மகிழ்ச்சி முகத்தில் ஜொலிக்க சகோதரர்களுடன் வந்து நின்றவனைத் தொடர்ந்து வந்தனர் அவனது குடும்பத்தினர்.
பிரியாவும் குணாலும் மகனை மணக்கோலத்தில் கண்ட நெகிழ்ச்சியுடன் நிற்க, சுமித்ராவின் விழிகளில் பேரனின் திருமணத்தைக் காணப்போகும் ஆர்வம் சுடர் விட்டிருந்து. வருணின் தந்தை மற்றும் சித்தப்பாக்களுக்குக் காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது என்ற பிரமிப்பு.
கிஷோர் அமருடன் சேர்ந்து கொண்டு நேகா வருணிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டே செல்ல பிந்து ராகவின் எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்த முயன்று கொண்டிருந்தாள். கிளம்பும் நேரத்தில் ஏதோ அவசரம் என்று குடும்பத்தினரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டவன் தான் திருமணத்துக்கு வரச் சற்று தாமதம் ஆகும் என்று அலைபேசியில் விவரம் தெரிவித்துவிட்டான்.
அவன் அவ்வாறிருக்க வருணுக்கோ தனது தேவதையை எப்போதடா பார்ப்போம் என்ற ஆர்வம். ஆனால் அதற்காக வந்தவுடன் வீட்டுக்குள் செல்ல அனுமதித்துவிடமுடியுமா என்ன? மைதிலி மருமகனுக்கு ஆரத்தி எடுத்ததும் அவரும் ராஜ்வர்தனும் சேர்ந்து வருண் குடும்பத்தாரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அந்த பெரிய பங்களாவின் பரந்து விரிந்த ஹாலின் நடுவே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையும் அதைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த இருக்கைகளும், வீட்டின் உள்ளே மலர்களாலும் விளக்குகளாலும் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களும் கண்ணுக்கு விருந்தாய் அமைந்தது.
வீட்டினுள் வந்தவர்களை கௌசல்யாவும் அவரது குடும்பத்தினரும் வரவேற்க ராதிகா கௌசல்யாவிடம் அவந்திகா எங்கே என்று கேட்டுவைக்க அவரோ
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அவளும் ரித்திமாவும் இப்போ தான் டிரஸ் சேஞ்ச் பண்ணப் போயிருக்காங்க… ராகவ் ஏன் இன்னும் வரலை?” என்று கேட்டுவைக்க
ராதிகாவை முந்திக்கொண்டு “அவனுக்குக் கிளம்புற நேரத்துல ஆபிஸ்ல இருந்து ஒரு எமர்ஜென்சினு போன் வந்துச்சு… இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவான்” என்று சொல்லி சமாளித்தார் வீணா. ஆனால் மனதிற்குள் “இந்தப் பையனுக்கு ஆபிஸ்னு வந்துட்டா வீட்டுல உள்ளவங்க யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க போல” என்று நொடித்துக் கொண்டார்.
அதற்குள் புரோகிதர் சம்பிரதாயங்களை ஆரம்பிக்க குடும்பத்தினரை அழைக்க அனைவரும் ஹாலில் இருந்த மணமேடையை நோக்கிச் சென்றனர்.
அதேநேரம் கல்யாணி தேவி பேத்திக்கு திருஷ்டி கழித்தவர் “நீ நல்லா இருக்கணும்… உன்னோட புகுந்தவீட்டு மனுஷங்க ரொம்ப நல்லவங்கனு அவங்களோட பழகுன ரெண்டு மூனு சந்தர்ப்பத்துல தெரிஞ்சுகிட்டேன்… என்னைக்குமே அவங்க மனசு வருத்தப்படுற மாதிரி நடந்துக்கக் கூடாது… மாமனார் மாமியாரை உன்னோட அம்மா அப்பாவா நினைச்சு மரியாதை குடுக்கணும்.. உனக்கு இதெல்லாம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை… என்னோட பேத்தி உஷாவுக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும்… ஆனா ஒரு பாட்டியா இதை நான் சொல்லணும் தானே” என்று சொன்னபடி அவளது கைகளில் ஒரு ஜோடி தங்கவளையலை மாட்டிவிட்டார்.
“இது பாட்டியோட கல்யாணப்பரிசு… இதைக் குடுத்தப் பாட்டிக்கு நீ சீக்கிரமா ஒரு கொள்ளுப்பேரனையோ, கொள்ளுப்பேத்தியையோ பெத்துக் குடுக்கணும்! சரியா?” என்று கேட்டுவிட்டு பிரதியுஷாவைப் பார்க்க அவள் நாணத்தில் தலை கவிழ்ந்தாள்.
வெளியே யாரோ வரும் அரவம் கேட்க இருவரும் திரும்பினர். அங்கே பட்டுப்புடவையில் எழில்கூடிப் போனவர்களாய் வந்து நின்றனர் ரித்திமாவும் அவந்திகாவும்.
கல்யாணிதேவி இருவருக்கும் திருஷ்டி கழித்தவர் “இன்னைக்கு மூனு பேரும் போட்டி போட்டுக்கிட்டு அழகா இருக்கிங்க… என் கண்ணே பட்டுடும் போல” என்று மனதாற சொல்ல
அவந்திகா “எத்தனை அழகி வந்தாலும் இந்த வீட்டின் பேரழகி தாங்கள் தான் கல்யாணிதேவி அவர்களே” என்று உணர்ச்சிப்பூர்வமாய் பேச அதைக் கேட்டு கல்யாணிதேவியின் கம்பீரமான வதனத்தில் புன்னகை பரவியது.
“வாயாடி! இந்த வாயெல்லாம் ராகவ் வந்ததும் தானா அடங்கிப் போயிடும்” என்றவரின் கேலியில் ரித்திமாவும் பிரதியுஷாவும் கிண்கிணிநாதமாய் சிரிக்க ஆரம்பித்தனர்.
ததாஸ்து தேவதைகள் அப்பேச்சைக் கேட்டுவிட்டன போலும். அவர் சொன்ன நிமிடத்தில் வீட்டின் கார்பார்க்கிங்கில் நின்றது ராகவின் பி.எம்.டபிள்யூ. அதிலிருந்து இறங்கியவனின் விழிகள் வீட்டின் விளக்கு அலங்காரங்களை ரசிக்கத் தொடங்கியது.
அதை ரசித்தபடி வீட்டினுள் வந்தவனின் பார்வை மணமேடையில் புரோகிதர் சொன்ன மந்திரத்தை கர்மசிரத்தையாய் சொல்லிக் கொண்டிருக்கும் வருண் மீது மகிழ்ச்சியுடன் படிந்தது. அவனைக் கண்டதும் நேகாவும் பிந்துவும் உற்சாகமாக கையசைத்து சீக்கிரம் தங்களருகில் வருமாறு சைகை காட்ட அவனும் தங்கைகளை ஏமாற்ற விரும்பாதவனாய் அவர்களிடம் சென்று ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு ரன்வீர், கிஷோர் மற்றும் அமருடன் சேர்ந்து நின்றுகொண்டான்.
அப்போது அவந்திகா மாடிப்படிகளில் இறங்கிவந்தவள் தற்செயலாகத் திரும்பியவனின் பார்வையில் இதமாக விழுந்தாள். பட்டுப்புடவையில் இருந்தவள் அவன் விழியில் விழுந்து மனதில் சென்று ஒட்டிக்கொள்ள அவளிடமிருந்து பார்வையைத் திருப்ப முயன்று தோற்றான் ராகவ்.
அவந்திகா கௌசல்யாவிடம் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேற ராகவும் தன்னருகில் நின்ற இளையவர்களிடம் இப்போது வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு அவள் பின்னே செல்ல இரு குடும்பத்தினரும் அவனது இச்செய்கையைக் கண்டு மனதிற்குள் நகைத்துக் கொண்டனர்.
அவந்திகா தங்களின் வீட்டுக்குள் நுழைந்தவள் பூஜையறையில் இருந்த குங்குமச்சிமிழை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறியவள் எதிரே வந்து நின்றவனைக் கண்டதும் சினேகமாய் புன்னகைத்தாள்.
“ராகவ்… நீ எப்போ வந்த? எங்கேயோ எமர்ஜென்சினு போயிட்டதா ரன்வீர் அண்ணா சொன்னாரே”
“ம்ம்… எமர்ஜென்சி முடிஞ்சதும் ஓடி வந்துட்டேன்… பை த வே உனக்கு காம்ப்லிமெண்ட் குடுக்கணும்னு தான் உன் பின்னாடி வந்தேன்” என்று அவன் சொன்னதும் அவந்திகாவுக்கு தலைக்குள் என்னென்னவோ தோண ஆரம்பித்தது.
“ஐ னோ ராகவ்.. சில்க் ஷேரியில நான் ரொம்ப அழகா இருப்பேனு எனக்குத் தெரியும்… சோ நீ தனியா வேற புகழ்ந்து என்னை வெக்கப்பட வைக்காதே பிளீஸ்” என்றவளின் பேச்சை அவன் ரசித்தாலும் அவனுக்கு இந்த அவந்திகாவை விட கோபத்தில் படபடவென பட்டாசாய் பொரிபவளைத் தான் மிகவும் பிடிக்கும்.
“அஹான்! உனக்கு ரொம்பத் தான் பேராசை ஜான்சி ராணி… நான் ஒன்னும் உன் அழகைப் புகழ வரலை… இன்னைக்குக் கொஞ்சம் பொண்ணு மாதிரி இருக்கேனு சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்… அதுக்குள்ள எவ்ளோ ஓவர் கான்ஃபிடென்ஸ்!” என்று அவளைக் கேலி செய்ய, அவனது கேலியில் அவள் முகம் கோபத்தில் மெதுமெதுவாய்ச் சிவக்கவும் உற்சாகத்தில் விசிலடிக்கத் தொடங்கினான் அவன்.
அதைக் கவனித்த அவந்திகா இப்போது தான் கோபப்பட்டால் இவனுக்கு இன்னும் கொண்டாட்டமாய் போய்விடும் என்று எண்ணியபடி மூச்சை இழுத்துவிட்டுக் கோபத்தைத் தணிக்க முயன்றவாறே “ஓகே ஓகே! நீ என்னை கிண்டல் பண்ணுனதுல நான் ரொம்ப அசிங்கப்பட்டுட்டேன் போதுமா? எனி ஹவ் இன்னைக்கு எனக்குச் சண்டை போடுற மூட் இல்லை… சோ நீ தப்பிச்சிட்ட…. நெக்ஸ்ட் டைம் இன்னும் பெட்டரா டிரை பண்ணு” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தவள் புடவை தடுக்கி விழப் போனாள்.
ராகவ் இருக்க கவலை ஏன்? வழக்கம் போல அவள் விழும் முன்னரே அவளைத் தாங்கிக் கொண்டவன்
“ஜான்சி ராணி முதல்ல ஒரு விஷயத்தை நியாபகம் வச்சுக்கோ… இது ஷேரி… உன்னோட ஜீன்ஸ் இல்லை… சோ கொஞ்சம் பார்த்து மெதுவா நடக்கக் கத்துக்கோ” என்று சொல்லும் போதே அவனது கண்கள் அந்தப் புடவையில் அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்பதை ரசிக்கத் தொடங்கின.
அவனது கண்கள் தன் மீது ரசனையுடன் படிந்த அதே நேரம் அவனது கை அவளது இடையை வளைத்திருந்ததில் விரல்கள் வெற்றிடையில் பதிந்திருக்க, அவந்திகாவுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்யவும் அவனிடமிருந்து வேகமாய் விலக முயன்றாள் அவள்.
ராகவுக்கு எதுவும் வித்தியாசமாகத் தோணவில்லை போலும். அவளை நேராய் நிறுத்தினாலும் அவனது கரங்கள் இன்னும் அவளது இடையை வளைத்தபடி தான் இருந்தது.
அவந்திகா சங்கடத்துடன் “ராகவ் கொஞ்சம் என்னை விடுறியா? நானே நடந்து போய்ப்பேன்” என்று முணுமுணுக்க
“ம்ஹூம்! இப்பிடியே வீடு வரைக்கும் போலாம்… ஐ ஃபீல் பெட்டர்” என்றவனின் விரல்கள் அவள் இடையில் அழுத்தமாய்ப் பதியவும் அவந்திகா பதறி விழித்ததில் அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த குறும்புத்தனம் விழித்துக் கொண்டது.
“அடேய்! கையை எடு” என்று தட்டிவிட்டவள் வேகமாய் முன்னேற முயல்வதற்குள் அவள் கரத்தைப் பற்றியவன்
“நீ ஸ்பீடா போய் அதோ அந்த கேட் கிட்டப் போனதும் விழ ஆரம்பிப்ப… நான் ஒவ்வொரு தடவையும் ஓடி வந்து உன்னைத் தாங்க முடியாது… சோ என் கையைப் பிடிச்சிட்டே நடக்கிற.. சரியா?” என்று கேட்க அவள் முடியாது என்று தலையைச் சிலுப்பினாள்.
“ஓகே! அப்போ நான் முன்ன மாதிரியே…” என்று இழுத்தபடி அவளது இடையை வளைக்க முயலவும் வேகமாய் அவன் கையைத் தடுத்தவள் அதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
“ஆர் யூ ஹேப்பி நவ்?” என்று சொன்னவளிடம் கண்ணை மட்டும் சிமிட்டிய ராகவ் பற்றிய கையை விடாமல் பிரதியுஷாவின் வீடு வரை வந்துவிட்டான். அதன் பின்னரும் கையை விட விருப்பமில்லாதவனை அவந்திகா கண்ணால் கெஞ்ச போனால் போகட்டும் என்று பெருந்தன்மையுடன் கையை விடுவித்தான் அவன்.
அவந்திகா விட்டால் போதுமென்று ஓடியவள் புரோகிதரிடம் குங்குமச்சிமிழைக் கொடுத்துவிட்டு மாடிப்படியில் விறுவிறுவென்று ஓடி மறைந்தாள். ராகவ் அதைக் கண்டு முறுவலித்தபடி மீண்டும் இளையவர்களுடன் சென்று நின்று கொண்டான்.
சில நிமிடங்களில் புரோகிதர் மணப்பெண்ணை வரச்சொல்லவும் அர்ஜூன் மாடிக்குச் சென்று மூவரிடமும் கீழே வருமாறு சொல்லிவிட்டுத் திரும்பவே, சில நிமிடங்களில் மூன்று தேவதைகளும் மாடிப்படியில் ஒன்றாக காட்சி தந்தபடி படியிறங்கினர்.
ராகவ் அவந்திகாவைப் பார்த்துப் புன்னகைக்க, அவனருகில் நின்றிருந்த கிஷோர் முதல் முறையாக ரித்திமாவை பட்டுப்புடவையில் அளவான அணிகலன்களுடன் பார்த்த அக்கணமே அவளது அசரவைக்கும் அழகில் மதிமயங்கிப் போனான். இத்தனை நாள் அவளைக் கண்டதும் எழும் கேலி, கிண்டல் மறந்து போய் இப்போது ஒருவித ரசனையுணர்வு அவனது மனதில் மெதுவாய் எழத் தொடங்கியது.
அவந்திகாவுக்கும் ரித்திமாவுக்கும் நடுநாயகமாய் சிவப்பும் தங்கவண்ணமும் கலந்த லெஹங்காவில் வானத்து வெண்ணிலவு போல மிளிர்ந்த பிரதியுஷாவின் அழகு அவள் அணிந்திருந்த ஆபரணங்களில் உள்ள வைரத்தோடு போட்டி போட்டுக்கொண்டு ஜொலித்தது. வருண் தனது காதலியைக் கண்ணாறக் கண்டு ரசித்தபடி மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருக்க அன்னநடை பயின்று அவனருகில் சென்று அமர்ந்தாள் பிரதியுஷா.
அதன் பின்னர் பிரதியுஷாவின் பெற்றோர் அவளை தாரை வார்த்துக் கொடுத்தனர். பின்னர் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு சப்தபதி எடுத்து வைத்தனர். அவர்களின் குடும்பத்தினர் ஆனந்தத்துடன் அதைப் பார்த்துக் கொண்டிருக்க கல்யாணிதேவியும், சுமித்ராவும் தங்களின் இல்லவாரிசுகளின் திருமணச்சடங்கில் மெய் மறந்து போயிருந்தனர்.
சப்தபதி முடிந்ததும் திருமாங்கல்யம் பூட்டும் சடங்குக்காக தங்கத்தில் கோர்த்த கருகமணி மாலையைப் புரோகிதர் நீட்ட வருண் அதைப் பிரதியுஷாவின் கழுத்தில் பூட்டியவன் இம்மைக்கும் மறுமைக்குமான இல்லறவாழ்வில் தன்னுடன் அவளைப் பிணைத்துக் கொண்டான்.
இருவரையும் அட்சதை தூவி வாழ்த்திய அவர்களின் அன்பான உறவுகள் தங்கள் ஆசிர்வாதத்தையும் வாழ்த்தையும் அதோடு சேர்த்து அவர்கள் மீது தூவினர்.
பிரதியுஷாவும் வருணும் பெரியவர்களிடம் ஆசி வாங்கியவர்கள் சகோதர சகோதரிகளின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டனர். ரித்திமாவும் அவந்திகாவும் அவர்களை வாழ்த்திவிட்டு அவர்களுடன் வளவளக்க ஆரம்பித்தனர்.
ரித்திமாவின் அருகில் வந்த கிஷோர் “உன் கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று சொல்ல அவள் வருணையும் பிரதியுஷாவையும் பார்த்தபடியே உம் கொட்டினாள்.
“ம்ம்.. சொல்லு”
“யூ ஆர் வெரி வெரி கார்ஜியஸ் இன் ஷேரி”
“தேங்க்ஸ்”
“இதுக்கு அப்புறம் நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்”
“என்ன முடிவு?”
“கல்யாணம் பண்ணுனா சில்க் ஷேரி கட்டுற பொண்ணைத் தான் பண்ணனும்னு”
“நல்ல முடிவு… போய் உங்கம்மா கிட்டச் சொல்லு”
“அதுக்கு முன்னாடி அந்தப் பொண்ணு கிட்டச் சொல்லணுமே ரித்தி”
“ஓ! அப்போ போய் அந்தப் பொண்ணு கிட்டச் சொல்லுடா”
“அவ கிட்டத் தான் சொல்லிட்டிருக்கேன்… ஆனா அவ என்னைக் கவனிக்காம அவ ஃப்ரெண்டோட கல்யாணக்கோலத்தை ரசிச்சுட்டிருக்கா” என்றதும் சட்டென்று திரும்பினாள் ரித்திமா.
அவளது அதிர்ந்த முகத்தில் திருப்தியானவன் “யெஸ்! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறேனு நான் உன் கிட்டத் தானே சொல்ல முடியும்… அதுக்கு அப்புறம் வேணும்னா அம்மா கிட்ட மெதுவா சொல்லிக்கலாம்… என்ன சொல்லுற?” என்று அவன் புருவம் உயர்த்திக் கேட்டப் பாணியில் விதிர்விதிர்த்துப் போன ரித்திமா முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று அவசர அவசரமாகச் செல்ல முயல, கிஷோர்
“இப்போ நீ போகலாம் ரித்தி… பட் நான் சொன்னது சொன்னது தான்… சோ கொஞ்சம் சீக்கிரமா என் பிரபோசலைக் கன்சிடர் பண்ணு” என்று குறும்பாய்ச் சொல்லிவிட்டு தமையனுக்கு வாழ்த்து சொல்ல சென்றான். பிரதியுஷாவின் திருமணம் நல்ல படியாக முடிந்துவிட, அதே நேரம் ராகவ் என்பவனின் மனம் அவந்திகாவின் பக்கம் முக்கால்வாசி சரிந்துவிட, கிஷோர் தனக்கு ரித்திமாவின் மீது உள்ள உணர்வின் பெயர் காதல் என்று அறிந்து கொண்டு அதை அவளிடமும் மறைக்காமல் உணர்த்திவிட்டான். மொத்தத்தில் அன்றைய நாள் மூவரின் வாழ்விலும் முக்கியமான நாளாகப் போய்விட்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


