“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா”
தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா.
முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் பெயரைச் சொல்லி அழைக்ககூடாதென்ற காரணத்தாலேயே மூத்தவன் முன்னாவாகவும் இளையவன் சின்னாவாகவும் பெயர்ச்சுருக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
குட்டிமாவின் விசயத்திலும் அவ்வாறே! ஜானகிதேவி என்பது செண்பகத்தின் மாமியார் பெயர். அந்தப் பெண்மணியின் சாமர்த்தியமும் சாதுரியமும் இளைய பேத்திக்கு வேண்டுமென அந்தப் பெயரை வைத்துவிட்டாலும் மாமியாரின் பெயரைச் சொல்லக்கூடாதென அவளைச் செல்லமாக குட்டிமா என அவர் அழைக்க பின்னாட்களில் அதுவே அனைவரும் அழைக்கும் பெயராகி விட்டது.
முகுந்தும் கார்த்திகாவும் புதுடெல்லியில் கல்லூரி பேராசிரியர்கள். அவர்களது தம்பி தங்கையைப் போலவே அவர்களுக்கும் ஆச்சி வீடென்றால் பிரியம் தான். இப்போது தங்களை மட்டும் விட்டுவிட்டு அவர்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டதாக சந்திரகலாவிடம் சோகப்பாட்டு பாடினர் இருவரும்.
“உங்களுக்கு எப்போவும் குட்டிமா தான் செல்லம் அத்தை… என் மேல உங்களுக்குப் பாசமே இல்ல” என்று பரிதாபமாக கூறிய கார்த்திகாவைச் சமாளிக்க முடியாது “அப்பிடி இல்லடா கார்த்தி…” என கான்பரன்ஸ் காலில் சந்திரகலா திணற
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“யார் கிட்ட பேசுறீங்க கலா மதினி?” என்றபடி வந்தார் பூரணி.
“முன்னா தான் லைன்ல இருக்கான்… அவனை கூப்பிடாம நம்ம மட்டும் ஆச்சி வீட்டுக்கு வந்துட்டோமாம்… அவனுக்கும் கார்த்திக்கும் நம்ம மேல கோவம்”
பரிதாபமாக கூறியவரிடமிருந்து போனை வாங்கி முகுந்தையும் அவன் மனைவியும் தன் தமக்கையுமான கார்த்திகாதேவியையும் சமாதானம் செய்த அன்னையைப் பார்த்தபடி செண்பகம் ஊட்டிய சாதத்தை வாங்கிக் கொண்டாள் குட்டிமா.
மூத்த மருமகனையும் மகளையும் எப்படியோ சமாளித்து முடித்து வந்த பூரணி அவளிடம் “சின்னா எங்க இன்னும் ஆளை காணும்?” என்று வினவ
“அவர் பார்டர் வரைக்கும் போயிருக்கார்மா” என்றாள் குட்டிமா.
அவள் சொன்னதும் விசயம் புரிந்துவிட “அப்போ அவனை குளிச்சுட்டு வீட்டுக்குள்ள வரச் சொல்லிடு குட்டிமா… இங்க வந்துட்டா போதும், இந்தப் பையனுக்கு பார்டர் புரோட்டாவ சாப்பிடாம இருக்க முடியாதே” என்று குறைபட்டார் சந்திரகலா.
புஷ்பம்மா நமட்டுச்சிரிப்புடன் “சாப்பாடு விசயத்துல பசங்களை கட்டுப்படுத்துறது நல்லது இல்லயே கலாம்மா… என்ன சாப்பிடணும் எதை சாப்பிடக்கூடாதுனு அவங்க தான் முடிவு பண்ணணும்… காலம் மாறிப்போச்சுல்ல” என்று சொல்ல செண்பகமும் அதை ஆமோதித்தார்.
குட்டிமாவோ “க்கும்… அவன் சிக்கனும் மட்டனுமா சாப்பிடுறதுக்கு புஷ்பாக்கா சப்போர்ட் வேற… இதை மட்டும் நான் செஞ்சிருக்கணும், பூரணி இந்நேரம் பத்திரகாளி அவதாரம் எடுத்திருக்கும்” என்று மனதுக்குள் நொடித்துக் கொண்டாள்.
இருப்பினும் தனக்காக மேலாண்மை இயக்குனரிடம் பேசி மீண்டும் பணிக்குச் செல்ல ஏற்பாடு செய்தவனின் மீதிருந்த முந்தைய கோபம் முழுவதுமாய் மறைந்து போயிருந்தது.
அப்போது முன்வாயில் கேட் திறக்கும் சத்தம் கேட்கவே “சின்னா தான் வந்திருக்கான் போல… அவனைக் குளிச்சிட்டு வரச் சொல்லுடா” என்று சந்திரகலா மீண்டும் கூற
“ப்ச்! அட விடு கலா… இப்போ குளிச்சு அவன் உடம்புக்கு எதுவும் ஆச்சுனா என்ன பண்ணுறது? குட்டிமா நீ சாப்பிட்டுட்டல்ல… போய் சின்னாக்குச் சாதம் போடு” என்று பேரனுக்கு ஆதரவாகப் பேசிய செண்பகம் பேத்தியை அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைக்க அனுப்ப அதற்குள் அவரது பேரனே அங்கே வந்து நின்றான்.
அவன் கையில் இருக்கும் ப்ளாஸ்டிக் டப்பாவைப் பார்த்ததும் “என்ன சின்னா, பொண்டாட்டிக்கு அல்வாவா?” என்று நமட்டுச்சிரிப்புடன் புஷ்பம்மா கேட்க
“இல்ல சின்னம்மா… என் பொண்டாட்டிக்குத் தான் அல்வா பிடிக்காதே… இது சோன் பப்டி” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினான் சின்னா.
குட்டிமா தலையை நிமிர்த்திப் பார்த்தவள் “கை கழுவிட்டு வாங்க… சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்தாள்.
சின்னா மாலையிலிருந்து மனைவியின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். இங்கே வந்த போது அவளது பார்வையிலிருந்த விலகல் அகன்று அவளது விழிகள் சாந்தமாய் அவனை ஏறிட்டது என்னவோ உண்மை!
ஆனால் திடுதிடுப்பென அவள் அமைதியாகிவிட என்ன காரணம்? நான் இன்னும் அவளது அலுவலக விசயத்தை அவளிடம் சொல்லவில்லையே! பின்னர் என்ன அற்புதம் நிகழ்ந்திருக்கும்?
யோசனையுடன் இரவுணவை காலி செய்தவன் பெண்கள் குழாமுடன் கதை பேச அமர அங்கே குட்டிமா இல்லை. அவனது விழிகள் அவளைத் தேடுவதைக் கண்டுகொண்ட சந்திரகலா அவள் நதிக்கரையை நோக்கி சென்றுவிட்டாள் என்றதும் வேகமாய் எழுந்தான்.
“நைட் நேரம் அங்க போய் ஏன் நிக்குறா? பூச்சி பொட்டு எதாச்சும் கடிச்சு வைச்சா டாக்டரை தேடி ஓடமுடியுமா?”
பூரணி மகளின் செய்கையைக் கடிந்துகொள்ள “இன்னைக்கு பௌர்ணமி தானே அத்தை… நிலா வெளிச்சம் தௌசண்ட் வாட்ச் பல்ப் போல ஊரை ஜொலிக்க வைக்குதே… இது போதாதா?” என்றபடி மனைவிக்கு ஆதரவாகப் பேசியபடி தானும் நதிக்கரையை நோக்கி நடைபோட்டான் சின்னா.
அங்கே படிக்கட்டில் அமர்ந்து ஓடும் நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் அருகே அமர்ந்தான்.
“அப்புறம் குட்டிமா பௌர்ணமி வெளிச்சத்துல இந்த ரிவர் பாக்குறதுக்கு செமய்யா இருக்குல்லடி?” என்று கேட்டவனை வெடுக்கென திரும்பி முறைத்தாள் அவள்.
சின்னாவோ அதை அறியாதவனாக சோன் பப்டி அடங்கிய ப்ளாஸ்டிக் டப்பாவை நீட்ட அதை வாங்கியவள் தூக்கி வீசப் போனாள்.
“ஏய் என்னடி பண்ணுற?” என்று அதை விட வேகமாக அவளிடமிருந்து பறித்துக் கொண்டான் அவன்.
குட்டிமா கண்களில் கோபம் மின்ன அவனை முறைத்தவள் “நானும் பாத்துட்டே இருக்கேன், நீ என்னை குட்டிமா குட்டிமானு கூப்பிட்டு இரிட்டேட் பண்ணுற சின்னா… எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு… நீ அதை க்ராஸ் பண்ணிட்டே இருக்க… எனக்கு வர்ற கடுப்புக்கு…” என்று கரங்களை அவனது கழுத்தை நெறிப்பது போல கொண்டு செல்ல அவை கழுத்தை நெருங்குவதற்குள் பிடித்துக் கொண்டான் சின்னா.
அவனது விழிகளில் இப்போது கோபம் முகிழ்த்திருந்தது.
“கோவம், எரிச்சல், கடுப்புலாம் உன் ஒருத்திக்கு மட்டும் தான் சொந்தமாடி? நான் வெறுமெனே எல்லாரும் கூப்புடுற மாதிரி குட்டிமானு கூப்பிட்டதுக்கே இவ்ளோ இரிட்டேட் ஆகுற… ஆனா நீ என்ன பண்ணுன? ரெசிக்னேசன் லெட்டர் மெயில் பண்ணுன கையோட சொல்லாம கொள்ளாம இங்க புறப்பட்டு வந்தல்ல… நைட் முழுக்க நீ எங்க போனியோ என்ன ஆனியோனு தெரியாம, வீட்டுக்கும் கால் பண்ண முடியாம உன் கொலீக், ஃப்ரெண்ட்ஸ்னு ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போய் பைத்தியக்காரன் மாதிரி விசாரிச்ச நான் அமைதியா இருக்கணும்… அப்பிடி தானே! போடி எதுவும் சொல்லிடப் போறேன்”
சலிப்பாக கையசைத்தபடி ஓடும் நதியை வெறித்தான் அவன். அத்தோடு பேசுவதை நிறுத்தினால் அவன் சின்னா இல்லை! ஏனெனில் இம்மாதிரி சண்டையிடும் தருணங்களில் அவனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வழக்கறிஞன் விழித்துக்கொள்வான்! தன் பக்கத்து நியாயத்தை எடுத்து வைத்துவிட்டு தான் அவன் அடங்குவான்!
“ஆனா மகாராணி பொதிகைல வந்து இறங்கிட்டு, சாவகாசமா காலைல ஃபில்டர் காபி குடிச்சுட்டு, தெம்பா போன் பண்ணி நான் பத்திரமா ஊருக்கு வந்து சேர்ந்துட்டேன் சின்னானு சொன்னீங்க… என்ன சொன்னீங்க? சின்னானு சொன்னீங்க… இப்போ புரியுதா நான் ஏன் குட்டிமா குட்டிமானு அழுத்தி சொல்லுறேன்னு”
அவனது பேச்சில் குட்டிமா தலையைக் குனிந்து கொண்டாள். ஆனால் பதில் பேசாமல் இல்லை.
“அது… நீ என்னை ரிசைன் பண்ண சொன்னல்ல, அந்தக் கோவத்துல… ப்ச்… அதை விடு… நான் கால் பண்ணுனப்ப நீ என் கிட்ட ஒரு வார்த்தை பேசுனியாடா? ஈகோ பிடிச்ச கழுதை” என்று தயக்கத்துடன் ஆரம்பித்து மீண்டும் கோபத்துடன் முடிந்தது அவளது வாதம்.
உடனே திகைப்புடன் திரும்பிய சின்னா “எதே? நான் ஈகோ பிடிச்சவனா? அடியே மனசாட்சி இல்லாம பேசாதடி… நான் ஈகோ பிடிச்சவனா இருந்திருந்தா உன் கிட்ட பேசுன அடுத்த நிமிசம் சூப்பர் மார்க்கெட்ல பாத்தப்ப நம்பர் குடுத்த உன் கொலீக் ரெஜினாக்கு அடிச்சு பிடிச்சு கால் பண்ணி, உன் எம்.டி வீட்டுக்கு நேர்ல போய் பேசி உன்னோட ரெசிக்னேசனை ரிவோக் பண்ணுறதுக்கு ரெக்வஸ்ட் வச்சிருக்க மாட்டேன்… என் பொண்டாட்டி என்னைப் பத்தி மட்டும் தான் நினைக்கணும்னு நான் கொஞ்சம் சுயநலமா யோசிச்சிட்டேன்மா… மன்னிச்சுகோ… ஆனா நீயும் இப்பிடி சொல்லாம கொள்ளாம வயசுப்பையனை தனியா விட்டுட்டு ஆச்சி வீட்டுக்கு வந்துருக்கக்கூடாதுல்ல?” என்று கடைசியில் பந்தை அவளை நோக்கி திருப்பினான்.
குட்டிமாவோ மேலாளரிடம் பேசிய கணத்திலிருந்து கணவன் மீதான கோபத்தைத் துடைத்தெறிந்தவள் தனது தவறு மனதைச் சுட பரிதாபமாக அவனை நோக்கினாள்.
அன்றைய தினம் இரவு நேரத்தில் தன்னைத் தேடி அலைந்தது, வீட்டினரிடம் கேட்கலாமா வேண்டாமா என தவித்தது என அவன் அனுபவித்த பரிதவிப்பை அவன் வாய் வார்த்தையாகவே கேட்டதும் மனம் இளகிப்போனாள்.
கண்கள் கலங்க அவனது கரத்தைப் பற்றிக்கொண்டவள் “ரொம்ப கஷ்டப்பட்டுட்டியா ராம்?” என்று கேட்ட அடுத்த நொடி அவளை அணைத்துக் கொண்டான் சின்னா.
“உனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டாலும் தகும்டி ஜானு” என்று முணுமுணுத்தபடி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் “இனிமே என் கூட சண்டை போட ஆசைப்பட்டா என் பக்கத்துல இருந்து சண்டை போடுடி… அதை விட்டுட்டு இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி வந்து என்னைத் தேடி அலைய வைக்காத… இட்ஸ் ஹர்ட்டிங் ஜானு” என்றவனின் குரல் தளுதளுத்திருந்தது.
“ஐ அம் சாரிடா… இனிமே இப்பிடி பண்ண மாட்டேன்” என்றபடி விலகியவள் யோசனையுடன் “ஆமா! இத்தனை நாளா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுன ராம்?” என்று கேட்க
“மை டியர் ஜானு! எதுக்கு ஸ்விகி ஜொமாட்டோனு கலர் கலரா போன்ல ஆப் வச்சிருக்கோம்? அதுல ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன்” என்றான் அவன்.
“அச்சோ! வீட்டுச்சாப்பாட மிஸ் பண்ணுறியா ராம்?” கனிவு ததும்பும் குரலில் வினவினாள் குட்டிமா.
“ஐயே! ஏதோ கொஞ்சநாள் நல்ல சாப்பாடு சாப்பிட முடிஞ்சுதேனு சந்தோசப்பட்டேன்டி ஜானு” என கேலியாகப் பதிலளித்தான் சின்னா.
அவனது பதிலில் வெகுண்டவள் “அடப்பாவி! அப்போ என்னோட குக்கிங் அவ்ளோ மோசமாவா இருக்கு?” என்று கொந்தளிக்கவும்
“அதை என் வாயால எப்பிடி சொல்லுவேன்?” என்றான் அவன் பரிதாபமாக.
அவனது கேலியில் முகம் சுருக்கி “அஹான்! அப்போ இன்னும் ஒரு மாசம் ஆச்சி கூட இருந்து புஷ்பாக்கா கிட்ட பெர்ஃபெக்டா குக்கிங் கத்துக்கிட்டு நான் சென்னைக்கு வர்றேன்… நீ டூ டேய்சுக்கு அப்புறம் கிளம்புடா ராம்” என்று முறுக்கிக் கொண்டாள் ஜானகிதேவி அலையஸ் ஜானு.
“நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டி… ஆமா நீ ரெஜினா கிட்ட பிரின்ஜி செய்யுறதுக்கு ரெசிபி கேட்டியாமே… உன் கையால செய்யப்போற பிரின்ஜிக்கு நான் வெயிட்டிங் ஜானு” என்று மனைவியிடம் சமயோஜிதமாகப் பேசி தப்பித்தான் சாகேதராமன் அலையஸ் ராம்.
அதற்கு ஆர்வத்துடன் தலையாட்டியவள் சற்று முன்னர் தனக்காக அவன் வாங்கி வந்த சோன் பப்டியைத் தேட எங்கே நதியில் வீசிவிடுவாளோ என அஞ்சி மேல்படிக்கட்டில் வைத்திருந்த ப்ளாஸ்டிக் டப்பாவிலிருந்து ஒரு துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டினான். நாவில் சோன்பப்டியும் இதயத்தில் அவனது காதலும் உண்டாக்கிய தித்திப்பை அனுபவித்தபடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் அவன் மனைவி.
அவர்களிடையே இருந்த கருத்துவேறுபாடு அகன்று அவர்களது வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் தொடர்வதற்காக வெண்ணிலவு தன் பாலொளியைத் தூவி ஆசிர்வதித்தது.
இத்தனை நாட்கள் குட்டிமாவும் சின்னாவுமாய் யாரோ போல பேசி, சீறி சண்டை போட்டவர்கள் இன்று ராம் ஜானுவாய் மாறி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிவிட அதற்கு சாட்சியாய் நகர்ந்தது அந்த குண்டாறு நதி!
இனிதே நிறைவுற்றது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

