விருப்பமற்ற உறவுகளிடமிருந்து விலகி நிற்பது அவர்களுக்கு நம் மீதும், நமக்கு அவர்கள் மீதும் இருக்கும் வெறுப்பெனும் கசப்பைக் குறைக்கும். ஒருவரின் அருகாமை உங்களுக்கு நல்ல ஞாபகங்களை, இனிய தருணங்களை நினைவூட்டவில்லை என்றால் அந்த இடத்தில் உங்களுக்கும் அந்நபருக்கும் இடையே விலகல் எனும் மெல்லியக் கோடு அத்தியாவசியம் ஆகிறது. ஆனால் இது உறவுகளிடையே இருக்கும் வெறுப்பைப் போக்குவதற்கான முழுமுதற் தீர்வாக அமையுமா என்றால் சந்தேகமே!
-ஆரபியின் சிந்தனை சிதறல்கள்
ஆரபி தனது மடிக்கணினியின் தொடுதிரையில் பங்குவர்த்தக சார்ட்களை பார்த்துக்கொண்டிருந்தாள். ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த பச்சை மற்றும் சிவப்பு வண்ண கேண்டில்களைப் பார்த்தவளுக்கு அன்று பங்குசந்தை ஏறுமுகம் என்பதை அப்போதைய ‘கேண்டில் பேட்டர்ன்’ உணர்த்தவே விற்பதற்கான ஆணை ஒன்றை தட்டி விட்டாள்.
அன்று காலை அவள் வாங்கிய குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் திடுமென ஏற்றம் கண்டிருக்க அவற்றை விற்கத் தீர்மானித்திருந்தாள்.
அன்றைய இலாபம் மட்டும் கணிசமான தொகை என்று மனம் குதூகலித்தது.
அவள் ஒன்னும் சூதாட்டத்திலோ, ரம்மி போன்ற ஆன்லைன் மோசடி விளையாட்டுகளிலோ பணம் ஈட்டவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

பங்குச்சந்தையில் ‘பங்கு வர்த்தகம்’ எனப்படும் ‘ட்ரேடிங்கில்’ ஈடுபட்டுள்ளாள். பங்குச்சந்தை முதலீடு என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நீண்ட காலத்திற்கு அதை வைத்திருந்து அந்தப் பங்குகளுக்கு நிறுமங்கள் வழங்கும் பங்காதாயம் போன்ற பலன்களை அனுபவிப்பது. ஆனால் பங்கு வர்த்தத்தில் ஈடுபடுபவர்கள் வாங்கிய பங்குகளை அன்றைய தினமோ அல்லது குறுகிய காலத்திலோ விலையேற்றத்தின் போது விற்றுவிடுவார்கள். வாங்கி விற்பதில் உள்ள இலாபம் தான் அவர்களின் வருமானம்.
பங்குச்சந்தையைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது தவறு. ஆரபிக்கு அந்த அறிவு வரக் காரணம் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பங்குவர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனமொன்றில் அவள் வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரியாக (Customer Relationship Executive) பணியாற்றியதே!
அவளது வேலையே அந்நிறுவனத்தின் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும், பங்குவர்த்தகத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கும் நல்ல இலாபம் வரக்கூடிய பங்குகளில் முதலீடு செய்து, விற்பனை செய்து கொடுப்பதே!
அவளுக்கு அந்த வேலை மிகவும் பிடித்திருந்தது. சொல்லப்போனால் அந்த வேலையின் பரபரப்பும் பதற்றமும் அவளுக்குள் இருந்த காயத்தை ஆற்றின எனலாம். அதற்காகவே அந்த வேலையை அவ்வளவு நேசித்தாள் எனலாம்.
ஆனால் அன்பரசன் அவள் வாழ்க்கைக்குள் வந்ததும் அந்த நேசமும் ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே நேசிக்கவேண்டுமென்பது பெண்களுக்கு விதிக்கப்பட்ட விதி. அதுவும் மணமாகப் போகிறது என்றால் பெண்ணாகப்பட்டவளின் நேசத்தை முழுவதுமாக அவளுக்குக் கணவனாக வரிக்கப்பட்டவன் குத்தகைக்கு எடுத்துக்கொள்வானே! அன்பரசனும் அதையே செய்தான்.
“ஆப்டர் மேரேஜ் நான் சொந்தமா பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன் ஆரு… அப்புறம் நீ எதுக்கு வேஸ்டா வேலைக்குப் போகணும்? என் பொண்டாட்டி யாரோ ஒருத்தன் சொல்லுற ஆர்டரை கேட்டு அவனுக்கு ஷேர் ட்ரேடிங்ல நஷ்டமாச்சுனா அதை யோசிச்சு ஸ்ட்ரஸ் ஆகுறதுல எனக்கு விருப்பமில்ல… ஓப்பனா சொல்லணும்னா உன் மூளையும் மனசும் என்னைத் தவிர வேற யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் யோசிக்கக்கூடாது… பிகாஸ் யூ ஆர் மைன்”
திருமணத்திற்கு முன்னர் வேலையை ராஜினாமா செய்ய சொல்லி அவன் கூறிய தருணத்தில் உதிர்த்த முத்துக்கள் இவை!
ஆரபி ‘யூ ஆர் மைன்’னில் விழுந்துவிட்டாள்! என்னவனுக்குத் தான் என் மீது எவ்வளவு காதல்! எவ்வளவு உரிமையுணர்வு என பூரித்துப்போனாள்.
சொல்லப்போனால் அப்போது அன்பரசனுக்கும் அவள் மீது அளவுக்கடந்த காதல் தான். அது பொய்யென்று சொன்னால் ஆரபி பொய்காரி ஆகிவிடுவாள்.
அவனது ஒட்டுமொத்த காதலையும் திகட்ட திகட்ட அனுபவித்தவள் அவள். அவளைப் பொன்தட்டில் வைத்து அன்பரசன் தாங்கினான் என்று சொன்னால் கூட அது மிகையாகாது. அத்தகைய ஆழமான காதல் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக உடைந்து போனது. அது உடைந்து போனதை இப்போதும் அவளால் நம்ப முடியவில்லை.
எந்தளவுக்கு அவனது காதல் ஆழமானதோ அதை விட பன்மடங்கு வீரியமானது அன்பரசனின் வெறுப்பு! இன்பதுன்பங்களில் உன்னுடன் பயணிப்பேன் என அக்னிசாட்சியாக வாக்கு கொடுத்தவள் அவனது காதலில் கண்ட இன்பத்தையும் வெறுப்பில் விளைந்த துன்பத்தையும் சரிநிகர் சமானமாக அனுபவித்துவிட்டாள்.
ஆரபியிடமிருந்து நெடிய பெருமூச்சு வந்தபோதே அவளது அன்னை சூடான தேநீரைக் கொண்டு வந்து நீட்டினார்.
“இவ்ளோ நேரம் கம்ப்யூட்டர் பாத்ததுல தலை வலிக்கும்… டீ குடிச்சிட்டு மீதி வேலைய பாரு”
அதற்கு மேல் நின்றால் மகள் குத்தலாக எதுவும் சொல்வாளோ என்ற பயத்தில் விறுவிறுவென வீட்டுக்குள் போய்விட்டார்.
ஆரபி அமர்ந்திருந்தது வீட்டின் தாழ்வாரத்தில் இருக்கும் திண்ணையில். அங்கே கணக்குப்பிள்ளைகள் பயன்படுத்தும் டெஸ்க் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் கணக்குப்பிள்ளையாக இருந்த ஆரபியின் தாத்தா பயன்படுத்திய டெஸ்க் என்று அலமேலு பெருமையாகச் சொல்வார். அதில் தான் தனது மடிக்கணினியை வைத்து வேலை செய்வாள் ஆரபி.
அவள் திண்ணையில் அமர்ந்து வேலை செய்ய இன்னொரு காரணம் வீட்டுக்குள் இணையத்தொடர்பு சரிவரக் கிடைப்பதில்லை என்பதே! தொலைபேசி நிறுவனங்கள் 4G, 5G என வரிசையாக அலைவரிசையை அறிமுகப்படுத்தினாலும் மொபைல் மூலமாக உபயோகிக்கும் இணையச்சேவையின் வேகம் குறைவாகவும் பல நேரங்களில் ஆரபியின் பொறுமையைச் சோதிப்பதாகவும் அமைந்ததன் விளைவு தனது வேலை செய்யுமிடமாகத் திண்ணையைத் தேர்ந்தெடுத்தாள் ஆரபி.
அன்னை கொடுத்த தேநீரை அனுபவித்து அருந்தியவள் வீட்டின் முன்னே கார் ஒன்று வந்து நிற்கவும் யார் வந்திருக்கிறார்கள் என்று அமர்ந்தபடியே பார்த்தாள்.
காரிலிருந்து நிலா இறங்கவும் மெல்லிய ஆச்சரியம் ஆரபியின் வதனத்தில்! கூடவே குமரனும் வரவே மெதுவாக எழ முயன்றவளை “எழுந்திருக்காத ஆரு… கையை ஊனி நீ எழுந்திருக்கக்கூடாது… தையல் பிரிஞ்சிடும்” என்று வாயிலில் நின்றே எச்சரித்த நிலா கணவனிடம் ஊன்றுகோல்களைக் கொடுக்க அவனும் அவற்றை ஊன்றி நடந்து வந்தான்.
“நிலா”
ஆரபி அவள் எதற்காக வந்திருப்பாள் என்று தெரிந்தாலும் தெரியாதது போல காட்டிக்கொண்டாள்.
நிலா ஆரபியின் எதிரே வந்தவள் என்னவென யோசிக்கும் முன்னர் நெடுஞ்சாண்கிடையாக ஆரபியின் காலில் விழுந்தாள்.
“ஏய் நிலா! என்னடி பண்ணுற?” ஆரபி பதற்றத்தில் தையல் போட்டிருப்பதை மறந்து குனியப்போக அந்நேரத்தில் எப்படி வந்தான் என்றே தெரியாமல் வந்த அன்பரசன் மனைவியின் வயிற்றின் குறுக்கே கை வைத்து அவள் குனியாமல் தடுத்தான்.

இவன் எப்போது இங்கே வந்தான், இவனது கார் வந்த சத்தம் கூட கேட்கவில்லையே என அவள் திகைக்கும் போதே “ஃப்ரெண்டை பாத்ததும் சி செக்சன் ஆனது கூட மறந்துடுச்சா?” என்று கேட்டவன் இன்னும் கையை அகற்றவில்லை.
நிலாவிடம் “உன்னையும் உன் புருசனையும் நான் திருநெல்வேலிக்குப் போகச் சொன்னேன்… நான் அவ்ளோ தூரம் சொல்லியும் நீங்க ரெண்டு பேரும் இங்க வந்திருக்கிங்க… ஒரு தடவை போனா போகுதுனு விடுறேன்… இதுக்கு மேல உங்களால நானோ ஆருவோ பாதிக்கப்படக்கூடாதுங்கிறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்… இப்பவே உன் புருசனை கூட்டிக்கிட்டு இங்க இருந்து கிளம்பிடு” என்று எச்சரிக்கை விடுத்தான் அவன்.
“ஏன் அன்பு இவ்ளோ ஹார்ஷா பேசுறிங்க?”
குறுக்கே வந்த மனைவியை அழுத்தமாகப் பார்த்தவன் “எல்லாம் தெரிஞ்சு தான் நான் இங்க வந்திருக்கேன்… இவனுக்குச் செயற்கை கால் பொருத்துறதுக்கு நீ உனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா ஏற்பாடு செஞ்சதும் தெரியும், இன்னும் ரெண்டு நாள்ல இவனுக்கு அந்தக் காலை பொருத்திடுவாங்கனும் தெரியும்… போதும் ஆரு… ஃப்ரெண்ட்ஷிப்பை உயர்வா மதிச்சு நான் முட்டாள்தனமா நடந்துகிட்டதால எவ்ளோ பிரச்சனை வந்துசுனு தெரிஞ்சும் நீ இவங்களை நல்லவிதமா ட்ரீட் பண்ணுறது எனக்கு ஆச்சரியமா இருக்கு” என்றான் அவன்.
“ஏன்னா என்னால உங்களை மாதிரி வச்சா குடுமி சிரைச்சா மொட்டைனு சூழ்நிலை பத்தி யோசிக்காம யாரையும் ஒதுக்கிட முடியாது அன்பு… என் ஃப்ரெண்ட் லைஃப் சரியாக என்னால முடிஞ்சதை நான் செஞ்சேன்… இதுல என்ன தப்பு இருக்கு?”
“இந்த ஃப்ரெண்ட் தான் நம்ம வாழ்க்கைல விரிசல் வர காரணம்… அதை மட்டும் வசதியா மறந்துடு”
இருவரும் சத்தமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டுத் தாழ்வாரத்துக்கு வந்த சுடர்விழி அங்கே நிலாவும் குமரனும் நிற்பதைப் பார்த்தவுடன் கொதித்துப் போய்விட்டார்.
“எந்த முகத்தை வச்சுக்கிட்டு என் மகளைப் பாக்க வந்த நீ? ஃப்ரெண்டு ஃப்ரெண்டுனு கூட இருந்து என் மகளோட வாழ்க்கைய சீரழிக்கப் பாத்தியே, அது பத்தாதா? மரியாதையா உன் புருசனைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பு… நான் பாத்து வளந்த பொண்ணு நீ… உன்னை என் வாயால சபிக்கக்கூடாதுனு நினைக்குறேன்… இடத்தைக் காலி பண்ணு நிலா”
“ம்மா” அன்னையை அடக்கப் பார்த்த ஆரபிதான் சுடர்விழியின் விழி உருட்டலில் அடங்கிப்போனாள்.
“அத்தைய ஒன்னும் சொல்லாத ஆரு…. அவங்க சொல்லுறது உண்மை தானே? உனக்குப் பெரிய மனசுடி… அதான் எங்களை மன்னிச்சு வாழ்க்கைல எங்களுக்கு வழியும் காட்டிருக்க… இனிமே உன்னையும் அண்ணாவையும் நாங்க தொந்தரவு பண்ணமாட்டோம்… இது… இது பாப்பாவுக்காக வாங்குன ட்ரஸ்” என்று நிலா துணிக்கடை பை ஒன்றை நீட்டினாள்.
ஆரபி மறுக்காமல் அதை வாங்கிக்கொண்டாள்.
“நான் கிளம்புறேன் ஆரு… வர்றேன் அத்தை”
குமரனும் அன்பரசனிடம் விடைபெற்றுக்கொண்டான்.
இருவரும் காரிலேறி அமரும்வரை எதுவும் பேசாமல் பொறுமை காத்த ஆரபி அவர்களின் கார் கிளம்பியதும் கணவனையும் அன்னையையும் முறைத்தாள்.
“வீட்டுக்கு வந்தவங்களை வாசல்லயே அவமானப்படுத்தி அனுப்பிட்டிங்கல்ல, இப்ப சந்தோசமா?”
“நீ என்னை என்ன வேணாலும் திட்டு… நான் வாங்கிக்க தயாரா இருக்கேன்… அதுக்காக இவ கூடல்லாம் என்னால உறவு கொண்டாட முடியாது ஆரு” இறுகிய குரலில் சொல்லிவிட்டுச் சுடர்விழி வீட்டுக்குள் போய்விட்டார்.
ஆரபி கணவனை முறைக்க அவனோ “அத்தையோட பதில் தான் என்னோடதும்… நீ என்னைக் கெட்ட வார்த்தைல கூட திட்டிக்க… ஆனா ரூமுக்குள்ள வந்து திட்டு… ஊருக்குள்ள அன்பரசனுக்குனு ஒரு கெத்து இருக்கு” என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டான்.
ஆரபி பற்களைக் கடித்தாள் தாழ்வார திண்ணையை ஒட்டி இருந்த கதவை அடைத்துவிட்டு வீட்டுக்குள் வந்தாள்.
ஹாலில் அலமேலுவிடம் பேசிக்கொண்டிருந்தான் அன்பரசன்.
“ஆருவுக்கே ஆயிரம் டென்சன் ஆச்சி… இதுல அவங்க வேற”
“புரியுதுப்பா… ஆனா நன்றி சொல்ல வந்தவங்களை வாசல்லயே வச்சு அனுப்புனது தப்பு தானே?”
அன்பரசன் அக்கேள்விக்குப் பதிலளிக்காமல் நிற்கையிலேயே அவனை முறைத்தவாறு தனது அறைக்குள் போய்விட்டாள் ஆரபி.
அவளைப் பார்த்துவிட்டவன் “மாப்பிள்ளை டீ சாப்பிடுங்க” என்று சுடர்விழி நீட்டிய தேநீர் கோப்பையோடு மனைவியின் அறைக்குள் நுழைந்தான்.
அவனது விழிகள் தொட்டிலில் உறங்கும் குழந்தையை பார்த்துவிட்டு ஆரபியிடம் திரும்பின.
“எதுக்காக வந்திங்க?” என்று அவள் கேட்டதும்
“நான் வீடியோ கால் பண்ணுனப்ப நீ ஏதோ கோவமா போன மாதிரி தெரிஞ்சுது… அதான் வந்தேன்” என்றான் அவன் தேநீரை நிதானமாகப் பருகியபடி.
“ஓ! எனக்குக் கோவமெல்லாம் இல்ல… நீங்க கிளம்பலாம்”
ஆணையிடுவது போல சொல்லிவிட்டுக் கட்டிலில் ஒருக்கழித்துப் படுத்துக்கொண்டாள் ஆரபி. தூங்குவது போல காட்டிக்கொண்டால் அவன் கிளம்பிவிடுவான் என்ற எண்ணம்.
ஆனால் அன்பரசனோ சுவாதீனமாக மனைவியின் அருகே வந்து அமர்ந்து தேநீரைச் சுவைக்க ஆரம்பித்தான்.
ஆரபியும் அவன் போய்விடுவான் என்று கண்களை மூடியெல்லாம் நடித்துப் பார்த்துவிட்டாள். அவள் கணவன் நகர்வதாகத் தெரியவில்லை என்றதும் எழுந்து அமர்ந்தாள்.
“உங்களுக்கு என்ன தான் வேணும்?” என சிடுசிடுத்தபடி பேச ஆரம்பித்தவள், அன்பரசன் மௌனமாகப் புருவத்தை உயர்த்திக்கொண்டு கூர்மையாகப் பார்த்ததும் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனாள்.
அவர்களுக்குள் இது வாடிக்கை தான்! அன்பழகனின் புருவம் உயர்ந்த பார்வையின் அர்த்தம் ‘இனி நீ பேசாமல் நான் கூறுவதை மட்டும் கேள்’ என்பது என இந்த ஓராண்டு மணவாழ்க்கையில் அவளுக்குத் தெரியாமல் இல்லை.
ஆரபி அமைதியானதும் அன்பரசன் நிலாவையும் குமரனையும் இனி தொடர்பு கொண்டு பேச முயற்சிக்காதே என்று அறிவுரை கூற ஆரம்பித்தான். குழந்தை இடையிடையே சிணுங்கியதால் மிகவும் மெதுவானக் குரலில் அவன் பேசினான்.
ஆரபிக்கு அவனது பேச்சின் சாராம்சத்தில் பிடித்தமில்லை. அதை அவளது முகபாவனை தெள்ளத்தெளிவாகக் காட்டிவிட்டது. அன்பரசனும் அவளது முகத்திலிருந்து மனவுணர்வுகளைப் படிப்பதில் வல்லவன். புரிந்துகொண்டான். புரிந்ததும் கோபம் கொண்டான்.
“நம்ம இன்னைக்கு ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுக்கிட்டு எதிரி மாதிரி இருக்குறதுக்கு அந்த ரெண்டு பேர் தான் காரணம் ஆரு” என்றான் சூடாக, ஆனால் இறங்கிய குரலில்.
ஆரபியின் கண்கள் அவன் சொன்னதைக் கேட்டதும் கோபத்தைப் பூசிக்கொண்டன.
“உங்களோட நம்பிக்கையின்மை… லைஃப் பார்ட்னர் கிட்ட நீங்க வச்ச முட்டாள்தனமான எதிர்பார்ப்பு… லைஃப் பார்ட்னர் பத்தி நீங்க வளத்துக்கிட்ட நிதர்சனத்துக்கு ஒத்துவராத ஃபேண்டசி… உப்புக்குப் பெறாத பிடிவாதமான உங்களோட கொள்கை… இதெல்லாம் தான் நமக்குள்ள வந்த விரிச்சலுக்குக் காரணம்… அவங்க இல்ல” என்றாள் சத்தமாக.
“ங்கா..”
ஆரபியின் குரல் உயர்ந்ததும் ஆரண்யா குட்டி சிணுங்க அன்பரசன் ஓடிச்சென்று தொட்டிலை மெதுவாக ஆட்டிவிட்டான்.
“ஜுஜ்ஜூ! தூங்குங்க குட்டி… அம்மா கத்தி உன் தூக்கத்தைக் கெடுத்துட்டாங்களா? அம்மா வாய்ல ப்ளாஸ்டர் போட்டு ஒட்டிடலாம்” என்று சொன்னபடி அவன் தொட்டிலை ஆட்டுவதைப் பார்த்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தாள் ஆரபி.
ஆரண்யா உறங்கியதும் அன்பரசன் மனைவியின் அருகே வந்து அமர அவளோ “ஆறு மாசம் இருக்குமா நீங்க என் கூட இப்பிடி உக்காந்து பேசி?” என்று எங்கோ பார்த்தபடி கூறினாள்.
சொல்லும்போதே ஆரபியின் குரல் உடைந்து போனது. கண்ணீர் கூட வந்துவிட்டது. மறைக்க முயலவில்லை அவளும்.
ஆரபியின் கோபமும் சுடுசொற்களும் கொடுக்காத வலியை அவளது உடைந்த குரலும், இரண்டு சொட்டு கண்ணீரும் அன்பரசனுக்குக் கொடுத்தன.
“ஆரு” என்றபடி அவளது கண்ணீரைத் துடைக்க வந்தவனிடம் முகம் திருப்பிக்கொண்டு நகர்ந்து அமர்ந்தாள் அவள்.
“இந்த ரெண்டு சொட்டுக்கண்ணீருக்கு இவ்ளோ கலங்குறிங்க… ஆனா எத்தனையோ நாள் உங்களோட அலட்சியமும் பாராமுகமும் குடுத்த வேதனையோட உறங்காம கண்ணீர் விட்டப்ப என்ன செஞ்சிங்க? என் கண்ணீரை நாடகம்னு சொன்னிங்க… உங்க கூட இருந்த ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை நிலைக்குமா இல்லையாங்கிற தவிப்பை எனக்குக் குடுத்துக்கிட்டே இருந்திங்க… எனக்குப் பிறந்தவீடு சரியில்லனு உங்களுக்கு நல்லா தெரியும்… கல்யாணம் பண்ணிக் குடுத்ததோட அவங்க என்னைப் புறக்கணிச்சிட்டாங்க… நீங்க எனக்கு என்ன வாக்கு குடுத்திங்க? உனக்கு அம்மா அப்பாவா நான் இருப்பேன் ஆருனு சொன்னிங்களா இல்லையா? அதை நிறைவேத்துனிங்களா நீங்க? இன்னைக்கு யாரோவா தெரியுற நிலாவும் குமரனும் சொன்ன விசயத்தை வேதவாக்கா எடுத்துக்கிட்டு என்னை நீங்க என்னெல்லாம் பேசுனிங்க? ஒருத்தரை அடிச்சு காயப்படுத்துனா தான் கொடுமைனு இல்லங்க… அவங்களை அலட்சியப்படுத்தி, ஒதுக்கி வச்சு அவங்க மனசை உடைக்குறதும் கொடுமை தான்… இதெல்லாம் செஞ்சது நீங்க… அவங்க என்ன சொல்லியிருந்தாலும் நீங்க என்னை நம்பிருக்கணும்… ஆஃப்டர் ஆல் ஐ அம் யுவர் ஒய்ப் அன்பு… யூ ஷூட் ஹேவ் டூ பிலீவ் மீ… பட் யூ டிண்ட்”
மனைவி பேச பேச அன்பரசனிடம் பதிலே இல்லை. அவன் செய்யாத எதையும் அவள் சொல்லிவிடவில்லை.
பாழாய்ப்போன குமரன் நிலாவின் பேச்சைக் கேட்டு அவன் ஆடிய ஆட்டத்திற்கான தண்டனை இது!
அன்பரசன் மனைவியின் கையைப் பற்ற முயன்றான். அவள் தொடாதே என்பது போல விலக்கிவிட வலுக்கட்டாயமாக அவளது கைகளைப் பற்றியவன் மன்னிப்பு கேட்கும் விதமாக அதில் தலை கவிழ்ந்தான்.
“நான் செஞ்ச தப்பு எதையும் மறுக்கல ஆரு… என் எதிர்பார்ப்பு உடைஞ்ச ஏமாற்றத்துல உன்னை நான் அலட்சியப்படுத்தி, ஒதுக்கி வச்சது சின்ன தப்பு இல்ல… ரொம்ப பெரிய தப்பு… நான் முன்கோவக்காரன் ஆரு… என் கோவத்தால நீ ரொம்ப காயப்பட்டிருக்கனு எனக்குத் தெரியுது… என்னை நீ திட்டுனாலும், வெறுத்தாலும் என் கூடவே இருந்து செய்னு சொல்லுறேன்” கண்ணை மூடி மனைவியின் கைகளைப் பிடிமானமாகக் கொண்டு தலை கவிழ்ந்திருந்தவனின் மனம் மனைவியின் மன்னிப்பை யாசித்தபடியே பழைய அழகிய நாட்களுக்குப் பயணிக்கத் தொடங்கியது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

