மனம் கவர்ந்தவர்கள் நமக்கு உரிமையானவர்கள் ஆகும் தருணம் எத்துணை அற்புதமானது தெரியுமா? ஒரு ஆணாக நான் அனுபவித்த அலாதியான தருணம் அது. இத்தனை நாட்கள் எனக்கு நானே ராஜா என்ற ரீதியில் யாருக்கும் நான் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை என்று நிமிர்வாகச் சுற்றினேன். இப்போது என்னைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தோடு ஒருத்தி என் வாழ்க்கைகுள் நுழையப்போகிறாள்! எனக்கான சந்தோசங்களையும் துக்கங்களையும் பகிர அன்னைமடியோடு சேர்த்து இன்னொரு தோளும் கிடைக்கப்போகிறது. எந்த நேரத்தில் நான் தடுமாறினாலும் என்னை விழாமல் தாங்கி பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுக்க இன்னொரு ஜோடி கரங்கள் வரப்போகின்றன. இளமையின் பளபளப்போடு இருக்கும் அந்தக் கரங்களைத் தான் நரை கூடி தோல் சுருங்கி மூப்படையும் காலம் வரை நான் பற்றியிருக்கப்போகிறேன். இப்படி தான் ஒவ்வொரு ஆணும் உணர்வானா என்ன?
– அன்பனின் சிந்தனை சிதறல்கள்
நாட்கள் பறந்தோட அன்பரசன் – ஆரபியின் நிச்சயதார்த்தம் ஆலங்குளத்திலுள்ள பெரிய மண்டபம் ஒன்றில் வெகு விமரிசையாக நடந்தேறியது.
ஆரபிக்கு நகைகள், பாத்திர பண்டங்கள், சீர்வரிசை என அனைத்தும் ஏற்பாடானதும் சுடர்விழி செய்த முதல் காரியமே மகளோடு அன்னை அலமேலுவின் வீட்டுக்குக் கிளம்பியது தான்.
பேத்தியின் திருமண வைபங்களைக் கண்டுகளிக்க கிடைத்த சாக்காக அலமேலுவும் மறுத்துப் பேசவில்லை.
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எதுக்கெடுத்தாலும் திருநெல்வேலி தாண்டி எங்க ஊரு வரைக்கும் வர வேண்டியதா இருக்கும்மா… நாங்க செங்கோட்டைல இருந்துட்டோம்னா அவங்களுக்கும் நல்லூர்ல இருந்து இங்க வர ஈசியா இருக்கும்ல?” என்று பேசி அன்னையின் மனதில் இதுதான் காரணமென பதியவைத்தும் விட்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கனிமொழியின் கணவர் ஆத்மநாதனுக்குப் பூர்வீகம் சங்கரன்கோவில். ஆனால் வயோதிகத்தில் அன்னையைக் கவனிக்கவேண்டுமென கணவரையும் மகனையும் அழைத்துக்கொண்டு அலமேலுவின் வீட்டில் அவர் குடியேறி ஏழாண்டுகள் ஆகிறது. ஆத்மநாதனின் காலஞ்சென்ற தந்தைக்கு அலமேலு உடன்பிறந்த தங்கை என்பதால் அவருக்கும் மாமியார் வீட்டில் தங்குகிறோமே என்ற எண்ணம் எழவில்லை.
இப்போது இளைய மகள், இளைய மருமகன், பேத்தி என அனைவரும் தன் இல்லத்தில் இருக்கவும் அந்த மூதாட்டிக்கும் சந்தோசம்! பெரியவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் ஒற்றுமையும் அன்பாக வாழ்வதைப் பார்ப்பதைவிட வேறென்ன பெரிய சந்தோசம் வேண்டும் சொல்லுங்கள்!
அலமேலுவின் சந்தோசத்தை இன்னும் அதிகரித்தவன் அன்பரசன். அவனது ஆச்சியும் தாத்தாவும் இளம்வயதிலேயே மறைந்துவிட்டதால் ஆரபி அவ்வபோது மொபைலில் தனது இளம்வயதில் விடுமுறைக்கு ஆச்சி வீட்டுக்குச் செல்லும்போது நடந்ததாகச் சொல்லும் அனுபவங்களை எல்லாம் கேட்டு ரசிப்பான். அவனுக்கு அவை வித்தியாசமான உணர்வைக் கொடுக்கும். இந்த அனுபவங்களுக்கு எல்லாம் தனக்கு கொடுத்து வைக்கவில்லை என்று பெருமூச்சு விடுவான்.
அதைத் தீர்த்துக்கொள்ள கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஐந்தாறு முறையாவது செங்கோட்டைக்கு வந்திருப்பான் அவன்.
இதோ இன்னும் இரண்டே நாட்களில் திருமணம். ஆரபி எப்படி உணர்ந்தாளோ தெரியாது, அன்பரசனுக்குள் ஒருவித பரபரப்பும் எதிர்பார்ப்பும் அவ்வபோது எழுந்து அடங்கின.
இனி நண்பர்களோடு ஊர் சுற்றுகிறேன் என இஷ்டத்துக்குப் போய்விட்டு நடு இரவில் வீட்டுக்கு வருவது, அரைகுறை சாப்பாட்டில் பட்டினியோடு படுப்பது இதெல்லாம் சாத்தியமில்லையாம்! அவனது அன்னை நகைச்சுவையாகக் கூறினார்.
“மதினி வந்ததும் உன் கோவத்தைக் குறைக்க ஏதாச்சும் ட்ரீட்மெண்ட் பாக்க சொல்லுறேன்ணா” என்றான் அருண். வெளியிடங்களில் அண்ணனை பன்மையில் விளிப்பவனுக்கு வீட்டுக்குள் வந்ததும் ஒருமை ஒட்டிக்கொள்ளும்.
அதற்கே சில நேரங்களில் அன்பரசனிடம் முறைப்பை வாங்கி கட்டிக்கொள்பவன் இப்போது அண்ணி வரப்போகிறாள் என்றதும் கூடுதல் சுதந்திரத்தோடு அண்ணனிடம் வம்பிழுத்துப் பார்த்தான்.
அவன் மட்டுமா? “அரசு மாமானா எனக்குப் பயம்” என்று முட்டைக்கண்களை விரித்துச் சொல்லும் ஸ்ருதி கூட “அத்தைய பாத்துட்டு வந்ததும் மாமாவோட தலைக்குப் பின்னாடி ஒரு ஒளிவட்டம் தெரியுதுல்ல ஆச்சி” என்று மனோகரியிடம் சொல்லி கிண்டல் செய்கிறாள்.
ஆரபி என்ற ஒருத்தியின் வருகை தன் வாழ்க்கையையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் எவ்விதமாக மாற்றியிருக்கிறது என்பதை எண்ணி அன்பரசனும் சிரித்துக்கொள்வான்.
திருமணத்திற்கு ஒரே ஒரு நாள் மிச்சமிருக்கையில் நள்ளிரவில் ஆரபிக்கு அன்பரசனிடமிருந்து அழைப்பு வந்தது.
இவ்வளவு நேரம் அவனிடம் பேசிவிட்டு அரைமணி நேரம் முன்னதாகத் தான் கண்ணயர்ந்திருந்தாள் அவள். மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு வரவும் பயந்து போய் அழைப்பை ஏற்றவள் “ஹலோ அன்பு! உங்களுக்கு ஒன்னுமில்லையே?” என்று பதற்றத்தோடு விசாரித்தாள்.
“த்சூ! சத்தமா பேசாத ஆரு… எனக்கு ஒன்னுமில்ல… நான் இப்ப உன் ரூமுக்கு வெளிய இருக்குற வராண்டால நிக்குறேன்” மறுமுனையில் அன்பரசன் சொல்லவும் அவள் மயங்கி விழாத குறை.
“என்னது? இந்நேரத்துல இங்க ஏன் வந்திங்க? எனக்கு அடுத்த ரூம்ல மகேஷ் இருக்கான்.. அவன் மட்டும் உங்களைப் பாத்தான்னா..”
“ப்ச்! அவன் தான் உன் ரூமை எனக்குக் காட்டுனான்”
இப்போது வாயடைத்துப் போனது ஆரபி தான்.
“கதவைத் திற ஆரு” கெஞ்சலாக ஒலித்தது அன்பரசனின் குரல்.
ஆரபி யாரும் பார்ப்பதற்குள் அன்பரசனைத் தனது அறைக்குள் அழைக்கும் முடிவோடு கதவைத் திறந்தாள்.
கதவைத் திறந்ததும் “டடண்” என்று அவள் கண் முன்னே எவர்சில்வர் டிபன் பாக்சை நீட்டினான் அன்பரசன்.
ஆரபி கழுத்தை மட்டும் வெளியே நீட்டி யாராவது வருகிறார்களா என்று பார்த்துவிட்டு அவனது கரத்தைப் பற்றி உள்ளே இழுத்துக்கொண்டாள்.
அன்பரசன் அந்த அறையைச் சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டிருக்க ஆரபியோ “இந்த நேரத்துல ஏன் வந்திங்க அன்பு? எங்கம்மா பாத்தாங்கனா அவ்ளோ தான்” என்று பதறினாள்.
அன்பரசன் சாவகாசமாக அங்கே கிடந்த படுக்கையில் அமர்ந்தவன் “நீயும் உக்காரு ஆரு” என்று தன் அருகே தட்டிக்காட்டினான்.
ஆரபி அமராமல் முறைக்கவும் “அட உக்காரு பொண்டாட்டி” என்று கையைப் பிடித்து இழுத்துத் தன்னருகே அமர வைத்தவன் எவர்சில்வர் டிபன் பாக்சிலிருந்து இனிப்பு ஒன்றை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.
அவசரமாக அவன் ஊட்டியதை உண்டவள் நாவின் சுவைமொட்டுகள் அது இன்னதென அறிந்ததும் கண்கள் பிரகாசிக்க நாவைச் சுழற்றி “திருபாகம்… செம டேஸ்ட் அன்பு” என்றாள்.

“எங்கம்மா செஞ்சதுல்ல… டேஸ்டா இல்லாம போகுமா? இது எல்லாமே உனக்குத் தான் சாப்பிடு” என்று சொல்லி எவர்சில்வர் டிபன் பாக்சை அவளிடம் கொடுத்தான் அன்பரசன்.
ஆரபி குழந்தையின் குதூகலத்தோடு அதை வாங்கிக்கொண்டாள்.
“நிஜமாவே நானே எல்லாத்தையும் சாப்பிடவா?” என்றவளிடம் சாப்பிடு என சைகை காட்டினான் அவன்.
ஆரபி அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே “எனக்குத் திருபாகம் பிடிக்கும்னு உங்களுக்கு எப்பிடி தெரியும்? நான் உங்க கிட்ட சொல்லவேல்லயே?” என்று வினவினாள்.
“நேத்து ஆச்சிக்காக அம்மா முடக்கத்தான் கீரை குடுத்து விட்டாங்கல்ல… அதை குடுக்க வந்தப்ப கொஞ்சநேரம் அவங்க கிட்ட பேசிட்டிருந்தேன்… அப்ப எதேச்சையா உனக்குத் திருபாகம்னா உயிர்னு சொன்னாங்க”
“ஆச்சி கையால செஞ்சா சோறு தண்ணி கூட இல்லாம இதையே சாப்பிடுவேன் அன்பு… நான் லீவுக்கு வர்றப்ப ஆச்சி எனக்குனு ஸ்பெஷலா பண்ணுவாங்க… அம்மாக்கு இதுல்லாம் செய்யத் தெரியாது”
அன்பரசனோடு பேசியபடி முழுவதையும் காலி செய்தவள் அவன் தன்னையே குறுகுறுவென பார்க்கவும் கடைசி துண்டை அவன் வாயில் திணித்தாள்.
அவனும் மறுக்காமல் உண்ண “நம்ம அரேஞ்ச் மேரேஜ் பண்ணப்போறோம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க” என்றாள் கேலியாக.
அன்பரசன் புருவத்தை உயர்த்திப் பார்த்தவன் “லவ் மேரேஜோ அரேஞ்ச் மேரேஜோ கணவன் மனைவிக்குள்ள நேசம் இருக்கணும் ஆரு… எனக்கு லவ் மேரேஜ் கூட அரேஞ்ச் மேரேஜை கம்பேர் பண்ணி மட்டம் தட்டுறதுல உடன்பாடு கிடையாது … லவ் பண்ணுறவங்க அவங்களே எங்கயோ பாத்து ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு வாழ்க்கைல இணையுறாங்க… அரேஞ்ச் மேரேஜ் பண்ணுறவங்க பேரண்ட்ஸ் மூலமா பாத்து கிடைக்குற இடைவெளில ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு கல்யாண வாழ்க்கைல இணையுறாங்க… அவங்க ஒன்னா செலவிடுற நேரத்துல பெருசா அவங்க ஒருத்தரை ஒருத்தர் முழுசா புரிஞ்சிப்பாங்கனு தோணுதா? இப்ப நம்மளும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டோம்னு நான் சொல்ல மாட்டேன்… பட் அந்தப் புரிதல் வர்றதுக்கு முன்னாடி ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு நல்ல அபிப்ராயம் வரணும்ல… அதுக்கு என்னாலான முயற்சிய நான் பண்ணுறேன்” என்றான் கனிவானக் குரலில்.
ஆரபிக்கு அவனைப் போல பக்கம் பக்கமாக எல்லாம் பேசவராது. ஆனால் அவளுக்குமே அவனையொத்த கருத்து தான். சரியென தலையாட்டியவள் “இதுக்கு மேல நீங்க இங்க இருந்திங்கனா யாராச்சும் வர வாய்ப்பிருக்கு” என்று சொல்லி அவன் கையில் காலி டிபன் பாக்சை திணித்தாள்.
“இப்பவே போகணுமா ஆரு?” என அன்பரசன் அப்பாவி போல கேட்க
“போயே ஆகணும்… இன்னும் கொஞ்சநேரம் என் ரூம்ல லைட் எரிஞ்சா அம்மா சந்தேகப்பட்டு மேல வந்துடுவாங்க” என்றாள் ஆரபி.
“அப்ப லைட்டை ஆப் பண்ணிடலாம்” என்று சுவிட்சை தட்டப்போனவனின் கையை வேகமாகப் பற்றினாள் அவள்.
“விளையாடுனது போதும் அன்பு… கிளம்புங்க”
அவனைத் தள்ளிக்கொண்டே கதவு வரை சென்றவள் கதவைத் திறந்து வெளியே தள்ளினாள்.
“யூ ஆர் சோ ரூட் ஆரு” குறைபட்டபடியே கிளம்பியவனைப் புன்சிரிப்புடன் பார்த்தபடி நின்றாள் அவள்.
மறுநாளும் வேகமாக ஓடிவிட திருமண நாளன்று அதிகாலை கண்விழிப்பே அன்பரசனின் மொபைல் அழைப்பில் தான் ஆரம்பித்தது ஆரபிக்கு.
கழுநீர்க்குளத்தில் இருக்கும் பெரிய மண்டபம் ஒன்றில் திருமணம். மணப்பெண் வீட்டாரை பெண்ணழைத்து வந்த வாகனம் நிற்கும் இடத்திலிருந்து மண்டபத்தின் நுழைவுவாயில் வரை நெருக்கமான பந்தல் போடப்பட்டு விளக்குகளால் வளைவுகள் வைக்கப்பட்டிருந்தன. அதனிடையே ஆரபியை அழைத்து வந்ததை மண்டபத்தில் மேல்தளத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அன்பரசனுக்கு விடிந்தும் விடியாத அதிகாலையில் விளக்கு கூட்டத்தின் நடுவே பட்டாடை அணிந்த பட்டாம்பூச்சி போல நடந்து சென்றவள் மனதில் நிறைந்து போனாள்.
பெண்ணின் தாய்மாமா முறைக்குச் சுடர்விழியின் தூரத்து உறவுக்கார அண்ணன் ஒருவர் மணமேடையில் ஆரபிக்குக் கூரைப்புடவையை தாம்பளத்தில் வைத்து அளித்தார்.
அவளை உறவுக்காரப்பெண்டிர் கூட்டத்தோடு மணமகள் அறைக்கு அழைத்துச் சென்றாள் ராகப்ரியா. அங்கே காத்திருந்த ‘மேக்கப் ஆர்ட்டிஸ்ட்’டிடம் தோழியை ஒப்படைத்தாள்.
அவருடன் வந்திருந்த பெண் மணப்பெண்களுக்கு நேர்த்தியாகச் சேலை அணிவித்துவிடுவாளாம். இப்போதெல்லாம் மணமகள் அலங்காரம் என ‘மேக்கப் ஆர்ட்டிஸ்டிடம்’ பேசும் போதே “இந்த பேக்கேஜ்ல ப்ரைடல் மேக்கப் ப்ளஸ் ஷேரி ராப்பிங் சேர்ந்து வரும்” என்று சொல்லிவிடுகிறார்களே!
வந்திருந்த பெண் வெகு கச்சிதமாக மடிப்பெடுத்து ஆரபிக்குப் புடவை அணிவித்துவிட்டாள். அடுத்து ஒப்பனை ஆரம்பித்தது.
சிவப்பும் அடர்ரோஜாவண்ணமும் கலந்த பட்டுப்புடவையில் ஆரபி ஒரு ரோஜாப்பூவுக்கு அலங்காரம் செய்தது போல மிளிர்ந்தாள். ‘மேக்கப் ஆர்ட்டிஸ்ட்’ சின்ன சின்ன திருத்தங்களைச் செய்து கொண்டிருந்த சமயத்தில் மருமகளைக் காண வந்தார் மனோகரி. அவரோடு வந்த ஸ்ருதியின் கரத்தில் ட்ரே ஒன்று இருந்தது.
“எல்லாரும் காபி குடிச்சிட்டு அப்புறமா வேலைய பாக்கணுமாம்… இது அரசு மாமாவோட ஆர்டர்” புன்னகைத்தபடியே காபியை வினியோகம் செய்தாள் அவள்.
ஆரபிக்கு அன்பரசனின் பெயரைக் கேட்டதும் புன்னகையும் நாணமும் பூக்க அன்னையோடு வந்த கங்கா அதைக் கவனித்து நாத்தனாருக்கு திருஷ்டி கழித்தார்.
“எங்க கண்ணே உனக்குப் பட்டுடும் போல… இந்த சேலை உனக்கு நல்லா இருக்கும்னு அடம்பிடிச்சு அரசு வாங்குனான்… சும்மா சொல்லக்கூடாது, இது உனக்கே உனக்குனு நெய்த சேலை மாதிரி இருக்கு ஆரு”
யார் சொன்னது வயதில் மூத்த நாத்தனார்கள் எல்லாம் பொறாமையின் திருவுரு என்று? கங்காவைப் போல சகோதரன் மனைவியை அன்பாகக் கவனித்துக்கொள்ளும் நாத்தனார்களும் உள்ளார்களே!
ஆரபி காபி குடித்தபோது தமக்கையின் எண்ணுக்கு அழைத்தான் அன்பரசன்.
“என்னடா அரசு?” என்றவரிடம்
“ஆருக்கு காபி குடுத்தாச்சா?” என கர்மசிரத்தையாக விசாரித்தான் அவன்.
“அதெல்லாம் குடுத்தாச்சுப்பா”
“அப்பிடியே ஃப்ரூட்ஸ் எதாச்சும் இருந்தா கட் பண்ணி குடுக்கா… ஆரு பசி தாங்கமாட்டா”
கங்காவுக்கோ பெருமை தாங்கவில்லை. இருப்பினும் தம்பியைக் கேலி செய்யும் விதமாக “போதும்டாப்பா… உன் பொண்டாட்டிய யாரும் இங்க பட்டினியா விடமாட்டோம்” என்று அவர் சொல்லவும் ஆரபிக்கு நாணத்தில் முகம் சிவந்து போனது.
அவர்கள் பேசும்போது அன்பரசன் அடிக்கடி ‘பொண்டாட்டி’ என்று விளிப்பது உண்டு. அப்போதெல்லாம் இறகின்றி பறப்பது போல உணர்வாள் அவள். அது ஒருவித இனம்புரியாத சந்தோசத்தின் வெளிப்பாடு.
ஆனால் இன்னும் சில மணிநேரங்களில் அவள் மெய்யாகவே திருமதி அன்பரசன் ஆகப்போகிறாள் என்கையில் அதே வார்த்தையை அவனது தமக்கை சொல்லி கேட்கையில் மனம் பூரிப்பில் பொங்கியது ஆரபிக்கு.
மனோகரியும் ஸ்ருதியும் கங்காவுடன் கிளம்பிய சில நிமிடங்களில் பரபரப்போடு அந்த அறைக்குள் வந்தார்கள் ஞானசேகரனும் சுடர்விழியும்.
அவர்களைக் கண்டதும் ஆரபி எழுந்து நிற்க ஞானசேகரன் மகளை ஆனந்தக்கண்ணீரோடு அணைத்துக்கொண்டார்.
“இப்ப தான் பச்சைக்குழந்தையா உன்னைக் கையில ஏந்துனது மாதிரி இருந்துச்சு… அதுக்குள்ள நீ வளர்ந்து இன்னொரு வீட்டுக்கும் போகப்போற… மனசு நிறைஞ்சு போச்சு ஆரும்மா… எனக்கு இதைத் தவிர வேற என்ன வேணும் சொல்லு” என்றவரின் கண்கள் கசிந்தன.
எத்தனை இரவுகள் மகளின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தோடு உறங்காமலே கழித்திருப்பார்! எத்தனை பேர் அவரது அருமை மகளை அவர் காதுபடவே எள்ளி நகையாடியதை மனவேதனையோடு கேட்டிருப்பார்!
அப்போதெல்லாம் ஞானசேகரன் தன்னைப் படைத்த இறைவனிடம் அழுது முறையிடுவார். அவரது வேண்டுதலுக்கு ஈசன் கண் திறந்து மகளுக்கு ஒரு வழியைக் காட்டிவிட்டார் அல்லவா!
அவரருகே நின்ற சுடர்விழியோ ராகப்ரியாவிடம் “நீ இவங்க எல்லாரையும் சாப்பிட அழைச்சிட்டுப் போ ப்ரியா… நான் ஆருக்குச் சில புத்திமதி சொல்ல வேண்டியது இருக்கு” என்று சொல்லி மேக்கப் ஆர்ட்டிஸ்ட், புடவை கட்டிய பெண் மற்றும் இதர உறவுக்கார பெண்களை அவளோடு அனுப்பி வைத்தார்.
அனைவரும் போனதும் கதவை அடைத்தவர் மகளிடம் வந்தார்.
அழத் துடித்த விழிகளை அடக்கிக்கொண்டவர் “எங்க கடமைய நாங்க சரியா செஞ்சிட்டோம் ஆரு… உன்னை அன்பா பாத்துக்குற நல்ல குடும்பத்து பையன் உனக்குப் புருசனா வரப்போறான்… சம்பந்தினு சொல்லாதிங்க அண்ணன், மதினினு சொல்லுங்கனு அவ்ளோ அன்பா பதவிசா நடந்துக்குறாங்க உன் மாமனார் மாமியார்… இவ்ளோ நல்ல குடும்பம் உனக்கு வாய்ச்சது உங்கப்பா கும்புட்ட சாமியோட அருள்… கிடைச்ச நல்ல வாழ்க்கைய நீ தக்க வச்சிக்கணும்… மாப்பிள்ளை கொஞ்சம் பிடிவாதக்காரர் … ஆனா மோசமானவர் இல்ல.. அவரோட மனசுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்க… உன் மாமனார் மாமியாரை நல்லா கவனிச்சுக்க… உன் மேல அவங்க எந்தக் குறையும் சொல்லிடக்கூடாது… முக்கியமா உனக்கு வாழ்க்கைல எந்தப் பிரச்சனை வந்தாலும் நீ அங்க இருந்து தான் சமாளிக்கணும்… பிறந்தவீட்டுக்குப் பெட்டியைத் தூக்கிட்டு வர்றது, புருசன் கூட மனஸ்தாபம்னு அவனைப் பிரிஞ்சிருக்குறது இதெல்லாம் கனவுல கூட நினைச்சுப் பாக்காத… ஊர்ல சிலர் உன் கல்யாண வாழ்க்கைல பிரச்சனை வராதா அதை பத்தி புறணி பேசி சிரிக்கமாட்டோமானு காத்திருக்காங்க… இன்னொரு தடவை அவங்க வாய்க்கு எங்களை அவலாக்கிடாதம்மா.. ஒரு தடவை பட்டது போதும்… என் புருசனால இன்னொரு அவமானத்தைத் தாங்கிக்க முடியாது” என்று சொல்லி கைகூப்பி நின்றார்.
எந்த ஒரு பெண்ணும் திருமணநாளன்று கேட்க கூடாத பேச்சு அது! பார்க்கக் கூடாத கோலம் அது! அன்பனின் வரவுக்குப் பின்னே தன் வாழ்வில் துன்பத்திற்கு இடமில்லை என இறுமாந்திருந்த ஆரபி தனது வாழ்க்கையுடைய கடைசி துன்ப துணுக்காக இச்சம்பவத்தை எண்ணிக்கொண்டாள்.
சுடர்விழியின் கரத்தைப் பற்றியவள் “என்னால இனிமே உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதும்மா… என் வாழ்க்கையில என்ன பிரச்சனை வந்தாலும் நான் நம்ம… ப்ச்… உங்க வீட்டுக்கு வரமாட்டேன்” என்று சொல்ல அக்கணம் சுடர்விழியின் கண்களும் கலங்கின.
அதைக் காட்டிக்கொள்ளாமல் மகளின் வதனத்தை ஆசை தீரப் பார்த்துவிட்டு “மணமேடைல ஐயர் என்னவோ கேட்டார்னு கனியக்கா சொன்னா… நான் போய் என்னனு கேட்டுட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார் அவர்.
போகிறவரைப் பார்த்தவாறு நின்ற ஞானசேகரன் மகளின் தலையில் ஆசிர்வதிப்பது போல கரம் வைத்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.
இருவரும் சென்ற பின்னரும் அன்னையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆரபியின் இதயத்தை ரம்பத்தால் அறுப்பது போன்ற வேதனையை அளித்தன. அவளுக்குத் தன்மீது தான் வருத்தம். பெற்றோரை இக்கதிக்கு ஆளாக்கினோமே என என்றோ செய்த தவறுக்கு கடைசியாக ஒருமுறை சுயக்குற்றம்சாட்டலில் ஈடுபட்டாள்.
அதை அதிகநேரம் நீடிக்க விடாமல் பழச்சாறு தம்ளரோடு வந்தார் கனிமொழி.
“எவ்ளோ அழகா இருக்கா பாருங்க” என்று ஆத்மநாதனிடம் கூற அவரும் முறுவலித்தார்.
ஆரபி இருவரின் காலிலும் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டாள்.
கனிமொழி வாஞ்சையாக அவளது கரத்தைத் தட்டிக்கொடுத்தவர் “உன் அம்மா என்ன சொல்லிருப்பானு எனக்குத் தெரியும்… அவ சொன்னதை மனசுல வச்சுக்காத” என்றார்.
“நமக்கு யாருமில்லனு நினைச்சுடக்கூடாது ஆரும்மா… பெரியம்மா பெரியப்பா என்னைக்கும் உனக்குத் துணையா இருப்போம்” என்றார் ஆத்மநாதன்.
ஆரபிக்கு அவர்களின் கனிவிலும் சுயகழிவிரக்கத்திலும் அழுகை பீறிட்டு வர நாசி விடைத்தது.
கனிமொழி அவசரமாக அவள் முன்னே பழச்சாறு தம்ளரை நீட்டினார்.
“அழாம இதைக் குடிச்சிடு… உனக்காக வீட்டுல இருந்து வர்றப்பவே அன்னாச்சி ஜூஸ் போட்டு எடுத்துட்டு வந்தேன்”
ஆரபியும் அழுகையை மறந்து அன்னாசிச்சாறைப் பருக ஆரம்பித்தாள். முகூர்த்தத்திற்கு இன்னும் அரைமணி நேரமே பாக்கி.
காலி தம்ளரை அவள் கனிமொழியிடம் நீட்டியபோது மகேஷ் வியர்க்க விறுவிறுக்க ஓடோடி அந்த அறைக்குள் வந்தான்.
“ம்மா! அன்பு மாமா…” என்றவனுக்கு மூச்சு வாங்கியது.
அவனது பரபரப்பு அங்கிருந்தவர்களைப் பதற்றத்திற்குள்ளாக்கியது.
“என்னாச்சுடா? எதுவா இருந்தாலும் முழுசா சொல்லு” என ஆத்மநாதன் அதட்டினார்.
குனிந்து கைகளை முட்டியில் தாங்கி மூச்சை விட்டுக்கொண்டவன் நிமிர்ந்தான்.
“அன்பு மாமாக்கு ஒரு கால் வந்துச்சு… என்ன ஏதுனு சொல்லாம வேஷ்டி சட்டையோட கிளம்பிப் போயிட்டார்” என்றான் அவன். அவன் சொன்ன செய்தியில் கனிமொழி ஆத்மநாதனோடு ஆரபியும் அதிர்ந்து போய் செய்வதறியாது நின்றாள்.

இன்னும் அரைமணி நேரத்தில் முகூர்த்தத்தை வைத்துக்கொண்டு எங்கே போனான் அன்பரசன்? அதிர்ந்த ஆரபியின் மனம் பயத்தில் என்னென்னவோ கற்பனைகளில் ஆழ்ந்துவிட மணக்கோலத்திலிருந்தவள் துடித்துப் போனாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

