காற்றில் ஆடி உதிர்ந்த இலைகளைப் பற்றி மரங்கள் கவலை கொள்வதில்லை. பலநேரங்களில் ஆத்மார்த்தமான உறவுகளில் நேரும் பிரிவும் கூடக் கவனிக்கப்படாத உதிர்ந்த இலையாக மாறி விடுகின்றது.
-அன்பனின் சிந்தனை சிதறல்கள்
கிழக்கு வானத்தின் இருளைக் கிழித்துக்கொண்டு ஆதவனின் கதிர்கள் ஒளிபரப்பிய நேரத்தில் இரவு முழுவதும் உறங்காமல் அதிகாலையில் கண்ணயர்ந்ததால் எரிந்த விழிகளைக் கசக்கிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தான் அவன்.
உள்ளங்கைகளை உரசி முகத்தில் தேய்த்தவனின் கைகளில் தாடியின் உரோமக்கூட்டங்கள் குத்தவும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாகச் சவரம் செய்யவில்லை என்பது புத்தியில் உறைத்தது.
எழுந்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்தவனுக்கு அன்றைய தினம் சவரம் செய்யலாமா என்ற யோசனை எழுந்தது.

“ஐயா அரசு! இன்னுமா முழிக்கல? இன்னைக்கு உன் மகளுக்குப் பேர் வைக்கப் போறாங்க… அப்பாவா லெட்சணமா நீதான அங்க முதல்ல போய் நிக்கணும்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஹாலிலிருந்து உரத்தக் குரலில் அவனைத் துயிலெழுப்ப முயன்றார் அவனது அன்னை மனோகரி.
கண்ணாடியைப் பார்த்தபடி விரக்தியாய் சிரித்தான் அரசு என அவரால் அழைக்கப்பட்ட அவரது புத்திரச்செல்வங்களுள் ஒருவனான அன்பரசன். அகவை முப்பது. நடுத்தர உயரத்தில் பார்ப்பதற்கு ‘த பாய் ஃப்ரம் நெக்ஸ்ட் டோர்’ போன்ற அலட்டலற்ற இயல்பான தோற்றம்.
மனோகரி சொன்னது போல இன்று அவனுடைய மகளுக்குப் பெயர்ச்சூட்டுவிழா. அவனுக்கும் சந்தோசம்தான். அந்தச் சந்தோசத்தைப் பூரணமாக அனுபவிக்க முடியாமல் இடையில் எதுவோ நிரடியது.
அதைப் பூரணமாக்க வேண்டியவளான அவனுடைய மனைவிக்கும் அவனுக்குமான இடைவெளியே அந்த நிரடலுக்குக் காரணம்.
அந்த இடைவெளியை நினைத்து நொந்துகொள்ள தனக்கு எந்தத் தகுதியும் இல்லையென வழக்கம் போல நினைத்துக்கொண்டான் அன்பரசன். இடைவெளியை உருவாக்கியவனுக்கு அதை எண்ணி வருந்தும் உரிமை இல்லையே!
“அரசு!”
இன்னொரு முறை அன்னை அழைப்பதற்குள் வேகமாகக் குளியலறைக்குள் புகுந்தவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் வேஷ்டி சட்டையில் தயாராகி ஹாலுக்கு வந்தான்.
அங்கே அவனுக்கு முன்னரே தயாராகி அமர்ந்திருந்தார் மார்த்தாண்டன், அன்பரசனின் தந்தை. அவனைக் கண்டதும் புன்னகைக்க முயன்றார்.
“அம்மா எங்கப்பா?”
“பேத்திக்கு வாங்குன செயினை பீரோல இருந்து எடுக்கப் போயிருக்காப்பா”
பீரோவை மூடும் சத்தத்தைத் தொடர்ந்து மனோகரியின் காலடி சத்தம் கேட்டது.
“முகூர்த்தத்துக்கு வாங்குன பட்டு வேஷ்டிய கட்டிட்டு வரலாம்ல அரசு?”
மனத்தாங்கலோடு கேட்டவரிடம் அன்பரசன் எப்படி கூறுவான் அதை அவன் கோபத்தில் கிழித்துவிட்டான் என்பதை.
“தேடிப் பாத்துட்டேன்மா… கிடைக்கல” தற்காலிகமாகப் பொய்யைச் சொல்லிச் சமாளித்தான்.
“உன் பொண்டாட்டி வந்து தேடுனா கிடைக்கும்” நமட்டுச் சிரிப்போடு கூறினார் மனோகரி.
அன்பரசன் தந்தையை அடிபட்ட பார்வை பார்த்தான். அதைப் புரிந்துகொண்ட மார்த்தாண்டன் தொண்டையைச் செருமினார்.
“டைம் ஆகுது மனோ… கிளம்பலாமா?”
“கிளம்பலாங்க… அப்பிடியே கங்காவையும் மாப்பிள்ளையையும் நம்ம கூடவே அழைச்சிட்டுப் போயிடுவோம்”
சற்று முன்னர்தான் அன்பரசனின் தமக்கையும் அவர்களின் மூத்த புதல்வியுமான கங்கா தாங்கள் தயாராய் இருப்பதாகப் போனில் கூறியிருந்தார்.
“ஸ்ருதி வர்றாளா?”
மகள் வயிற்று பேத்தியைப் பற்றி வினவினார் மார்த்தாண்டன்.
“அவ வரலையாம்… ஏதோ ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குனு கங்கா சொன்னா”
“ஞாயித்துக்கிழமை என்ன ஸ்பெஷல் க்ளாசாம்? சரி அதைவிடு… நம்ம அவங்களை அழைச்சுக்கிட்டு கிளம்புவோம்” மார்த்தாண்டன் கூறும் போதே அவரது மொபைல் இசைத்தது.
தொடுதிரையைப் பார்த்தவர் “உன் சின்ன மகன் கூப்பிடுறான்” என்று மனோகரியிடம் சொல்லிவிட்டு “என்னடா அருண்? அங்க எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டியா?” என வினவினார்.
மறுமுனையில் அருண் என்ன சொன்னானோ தெரியவில்லை, மார்த்தாண்டனின் முகம் இருண்டு போனது.
“நீ மருமக கிட்ட போனைக் குடு” என்று சொன்னபடி ஹாலிலிருந்து கிளம்பி வீட்டுவாயிலுக்குச் சென்றுவிட்டார்.
அவர் போனதற்கான காரணத்தை ஓரளவுக்கு ஊகித்துவிட்டான் அன்பரசன்.
மனைவிக்குத் தான் அங்கே வருவதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாமெனத் தோன்றியது.
யோசனை போன திசையில் அன்னையின் முகத்தில் குழப்பரேகைகள் உதிப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டான் அன்பரசன்.
“எதுவும் பிரச்சனையா அரசு?”
கலக்கத்தோடு அவர் வினவவும் இல்லையென அவசரமாக மறுத்தான் அவன்.
“ஐயர் வர்றதுக்குக் கொஞ்சம் லேட் ஆகும்னு அருண் நேத்து ஈவ்னிங் சொன்னான்மா… அதைப் பத்திதான் அப்பா கிட்ட பேசுவான்… நீங்க கிளம்புங்க” என்று அன்னையைக் கிளப்பினான்.
“என்னமோ போ! அம்முக்குட்டி பிறந்ததுல நீயும் ஆருவும் ஒரு மாதிரி வித்தியாசமா நடந்துக்கிறிங்க… நடத்துங்கடா, எத்தனை நாளுக்குனு நானும் பாக்குறேன்”
விளையாட்டாகச் சொல்லிவிட்டு ஹாலிலிருந்து வெளியேறினார் மனோகரி.
அன்பரசனால் அப்போதுதான் நிம்மதியாக மூச்சு விடமுடிந்தது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி பொய் சொல்லிச் சமாளிப்பது என்ற ஆயாசம் அவனுக்குள்.
“அரசு கிளம்புப்பா”
மார்த்தாண்டன் அழைக்கவும் வேகமாக வீட்டை விட்டு வந்தவன் பெற்றோர் காரில் ஏறி அமர்ந்ததும் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரைக் கிளப்பினான்.
நல்லூர் கிராமத்திலிருந்து கிளம்பிய அந்த ரெனால்ட் க்விட் ஆலங்குளத்தில் இருக்கும் கங்காவின் வீட்டின் முன்னே நின்றது.
அங்கே அவர்களுக்காகக் காத்திருந்தார்கள் கங்காவும் பரணிநாதனும்.
“ஏன் இவ்ளோ லேட் அரசு?”
குறைபட்டபடி காரின் பின்னிருக்கையில் அமர்ந்தார் கங்கா.
“மகளைப் பாக்க போற குதூகலத்துல சீக்கிரம் வருவனு பாத்தா நீ அரைமணி நேரம் லேட்டா வர்றியே அரசு?”
அவனைக் கேலி செய்தபடி முன்னிருக்கையில் அவனருகே அமர்ந்தார் பரணிநாதன்.
பெயரளவுக்குச் சிரித்த அன்பரசன் காரைச் செங்கோட்டை நோக்கிச் செல்லும் சாலையில் செலுத்த தொடங்கினான்.
கார் செல்லும்போது இரண்டு மூன்று முறை அவன் தும்மல் போடவும் பின்னிருக்கையிலிருந்து கங்காவும் மனோகரியும் அன்பரசனின் மனைவி அவனை நினைப்பதாகச் சொல்லிச் சிரித்தார்கள்.
“இன்னும் இவன் வரலையேனு என் மருமக காத்திருப்பா” மனோகரியின் குரலில் பெருமை பிடிபடவில்லை.
அன்பரசன் மீண்டும் பெயரளவுக்குச் சிரித்தபடி இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தையைப் பார்க்கப் போன சமயத்தில் மனைவி கூறிய வார்த்தைகளை நினைத்துப் பார்த்தான்.
“என் மக சம்பந்தப்பட்ட எந்த விழாவுலயும் நீங்க இருக்க வேண்டாம்… தயவு பண்ணி பேர் வைக்குற ஃபங்சனுக்கு வந்துடாதிங்க… அதுதான் எனக்குச் சந்தோசம்”
கடினமான வார்த்தைகளின் பாரத்தில் மனம் வலித்தது. இப்படி எல்லாம் பேசக்கூடியவளா அவள்? மென்மை என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடினால் அதற்கு ஆரபி என்று பொருள் கிடைக்குமெனக் கூறுவான் அன்பரசன்.
ஆரபி – அவள் அன்பரசனின் மனைவி. மென்மையும் கனிவுமே உருவாய் இருக்கும் பெண். யாரையும் கடிந்து பேசும் விதமறியாதவள். பொறுமையும் அடக்கமும் அவளது தனிச்சிறப்பான குணங்கள்.
இப்படிப்பட்டவளா கட்டிய கணவனிடம் அத்தகைய கடினமான கட்டளையை விதித்தாளென நீங்கள் ஆச்சரியம் கொள்ளலாம். மென்மையும் பொறுமையும் கொண்டவர்களைக்கூடச் சில அனுபவங்களும், அந்த அனுபவங்களுக்குக் காரணமானவர்களும் இறுகியகுணம் கொண்டவர்களாக மாற்றிவிடுவதுண்டே!
அப்படி மாறிப் போன மனைவியைப்பற்றி அன்பரசன் சிந்தித்தபடி காரை ஓட்டிக்கொண்டிருந்த வேளையில் செங்கோட்டை அம்மன் சன்னதியில் விழாக்கோலம் பூண்டிருந்த அந்தப் பாரம்பரிய வீட்டிலிருந்த அறையில் தன் மகளுக்குப் பசியாற்றிக் கொண்டிருந்தாள் ஆரபி.
இயல்பான அழகோடு தாய்மைக்குரித்தான சௌந்தரியம் மின்னிய வதனத்தில் வாட்டமும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மகவுக்குப் பால் கொடுக்கும்போது எதிர்மறை எண்ணங்களை விலக்கி விடவேண்டுமென எவ்வளவோ முயன்றாலும் மனம் மாறிமாறிக் கணவனிடமே போய் நின்றது.
அவ்வளவு காதலா அவன்மீது? திருமணமான புதிதில் கேட்டிருந்தால் ஆம் என்ற பதிலைச் சொல்லியிருப்பாள். அதன் பின்னர் சில மாதங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்கள் கொடுத்த வேதனையால் மனதில் வற்றாத ஜீவநதியாய் இருந்த காதல் துளிகூட மிச்சமின்றி மறைந்து போய்விட்டதே!
அவன்மீது காதல் கொண்ட மனம் இப்போது வறண்ட பாலையாய் வெடித்துக் கிடக்கிறது.
அன்னையின் மனக்கிலேசத்தை உணர்ந்ததாலோ என்னவோ குழந்தை சிணுங்கியது.
ஆரபி கணவனின் நினைவைத் துரத்திவிட்டு மடியில் முகத்தைச் சுருக்கி கொட்டாவி விட்ட குழந்தையை அன்பு ததும்ப பார்த்தாள்.
சிறிய கண்களைச் சுருக்கி குழந்தை கொட்டாவி விட்ட அழகை ரசித்தாள் அவள்.
“என் அம்முக்குட்டிக்கு அம்மா கண்ணே பட்டுடும் போல”
குழந்தையின் மோவாயைத் தொட்டு முத்தமிட்ட ஆரபிக்கு மைத்துனன் அருண் இன்னும் மாமனாரிடம் பேசிவிட்டுத் திரும்பவில்லையே என்ற யோசனை.
குழந்தையை மெதுவாகத் தொட்டிலில் இட்டவள் அறைக்கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபோது அங்கே வந்து சேர்ந்தான் அருண். அவன் முகத்தில் அதிருப்தி கொட்டிக் கிடந்தது.
“என்னாச்சு அருண்? மாமா என்ன சொன்னார்?”
“அவங்க எல்லாரும் கிளம்பிட்டாங்களாம் மதினி… இன்னும் கொஞ்சநேரத்துல இங்க வந்துடுவாங்களாம்”
ஆரபியின் முகம் இறுகிப்போனது.
“உங்கண்ணனும் வர்றாரா?”
அருண் தயக்கத்துடன் “ஆமா மதினி” என்கவும் ஆரபியின் வதனம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.
அதைக் கட்டுப்படுத்தியவளாக “நீங்க போய் ஆச்சிக்குத் துணையா இருங்க அருண்” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே
“அம்முக்குட்டி தூங்கிட்டாளா ஆரு?” என்று கேட்டவாறு வந்து சேர்ந்தார் சுடர்விழி, ஆரபியின் அன்னை.
“தூங்கிட்டா”
ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவள் இன்னும் ஏன் நிற்கிறாய் என்ற ரீதியில் அன்னையைப் பார்த்தாள்.
“நீ நேத்து நைட் முழுக்க தூங்கலயே ஆரு… ஃபங்சன் ஆரம்பிக்குறதுக்கு இன்னும் நேரம் இருக்கு… நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு”
சுடர்விழியின் அக்கறை ஏனோ ஆரபியின் மனதைத் தொடவில்லை. அருண் அன்னையும் மகளும் பேசிக்கொள்ளட்டுமென அங்கிருந்து சென்றுவிட அவள் சுடர்விழியிடம் சிடுசிடுக்க ஆரம்பித்தாள்.
“என்ன திடீர்னு என் மேல இவ்ளோ அக்கறை?”
“பச்ச உடம்புக்காரி, குழந்தை தூங்குறப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா அவ எழுந்திருச்சதும் பால் குடுக்க வசதியா இருக்குமேனு நினைச்சேன்” தயங்கியபடி சுடர்விழி பதிலளிக்க ஆரபி சத்தமாக நகைத்தாள்.
“ஓ! இப்பவும் என் மேல அக்கறை இல்ல… பேத்தி பசிச்சு அழுவாளேனு கவலை… ஹூம்! எப்பிடியோ நீங்க யாருமே எனக்குக் குடுக்காத மரியாதைய என் மக குடுக்க வச்சிட்டால்ல”
சுடர்விழி மகளைக் கவலையாய் பார்த்தார். மகள் இன்னும் எதையும் மறக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது. வந்த வழியே திரும்பிப் போய்விட்டார் அவர்.
ஆரபி அறைக்குள் வந்தவள் மனம் அனலாய்க் கொதிக்க கட்டிலில் தொப்பென அமர்ந்தாள். என்னென்னவோ எண்ணவோட்டங்கள்! கேட்கப் பிடிக்காத வார்த்தைகள்!

மொத்தமாய் சேர்ந்து அவளை வாட்டி வதைக்க அழலாமா அல்லது கோபத்தில் கத்தி தீர்க்கலாமா என்று புரியாமல் அமர்ந்திருந்தாள் அவள்.
‘போஸ்ட் பார்ட்டம் டிப்ரசன்’ ‘பேபி ப்ளூ’ என மருத்துவ உலகம் பிரசவத்திற்கு பின்னர் கருவுற்ற அன்னைக்கு உண்டாகக் கூடிய உளவியல் ரீதியான அழுத்தத்துக்குப் பெயர் சூட்டியிருக்கிறது. ஆரபியுடைய இந்த அழுத்தம் கருவுறுவதற்கு முன்னர் இருந்தே அவளுடன் இருக்கிறதே!
பெற்ற அன்னையும், கட்டிய கணவனும் இப்போது அவளுக்கு ஒன்று என்றால் துடிக்கிறார்களே, அந்தத் துடிப்பு ஏன் கர்ப்ப காலத்தில் அவர்களிடம் இல்லை என்ற எரிச்சல்.
என்னைப் புறக்கணித்தவர்கள் இன்று குழந்தைக்காக அக்கறை காட்டுகிறார்கள், அப்படி என்றால் அவளைச் சுமந்த நான் இவர்களுக்கு முக்கியமில்லையா?
கண்களை மூடி அமர்ந்திருந்தவள் அப்படியே உறங்கிப்போனாள். குழந்தையின் அழுகுரல் கேட்டுப் பதறியடித்துக்கொண்டு எழுந்தவளுக்கு எவ்வளவு நேரம் கழிந்தது எனத் தெரியவில்லை.
“ஜோ ஜோ ஜோ! அம்முக்குட்டி அழுவுறிங்களா? என் தங்கப்பிள்ளைக்கு என்ன வேணும்?”
கொஞ்சியபடியே குழந்தையைத் தொட்டிலிலிருந்து தூக்கிக்கொண்டவளின் அறைக்கதவு படபடவெனத் தட்டப்பட்டது.
யாராக இருக்கும் என்ற யோசனையோடு கதவைத் திறந்தவள் அங்கே அன்பரசனைக் கண்டதும் முகமெங்கும் கோபத்தைப் பூசிக்கொண்டாள்.
“நல்லா இருக்கியா ஆரு?” குசலம் விசாரித்தவன் அவளது கோபத்தைக் கண்டுகொள்ளாமல் குழந்தையை அவளிடமிருந்து வாங்கினான்.
குழந்தையை வாங்கியபோது அவனது விரல் அவள் கரத்தில் உரசிவிட சட்டெனக் கரத்தை உதறிக்கொண்டாள் ஆரபி. அன்பரசனுக்கு யாரோ சவுக்கினால் இதயத்தில் சுளீரென அடித்தது போல இருந்தது.
அவன் மௌனமாகக் குழந்தையைக் கையில் ஏந்தி உச்சு முகர்வதைக் காண பிடிக்காதவள் அறையை விட்டு வெளியே செல்ல எத்தனித்தாள்.
“நீ உடனே போனா எல்லாருக்கும் சந்தேகம் வரும் ஆரு”
வெடுக்கெனத் திரும்பியவள் “அடுத்தவங்களை பத்தி யோசிச்சு தன்னோட நிம்மதிய தொலைச்ச ஆரபி எப்பவோ செத்துட்டா… இப்ப இருக்கிற ஆரபி அவளுக்காகவும் அவ மகளுக்காகவும் மட்டும் தான் யோசிப்பா… நீங்க இருக்குற ரூம்ல ஒரு நிமிசம் இருந்தா கூட நான் மூச்சு முட்டிப் போய் சேர்ந்துடுவேன்” என்றாள்.
அன்பரசனின் முகம் அறைவாங்கியது போல மாறியது.
“சத்தமா பேசாத ஆரு… உனக்குத் தையல் பிரிச்சு ஒன் வீக் கூட ஆகல”
“அடேங்கப்பா என்ன ஒரு அக்கறை? அதான் பிள்ளை பிறந்துடுச்சுல்ல, இனிமே நான் என்ன ஆனா உங்களுக்கு என்ன? சும்மா அக்கறை இருக்குற மாதிரி நடிக்காதிங்க மிஸ்டர் அன்பரசன்”
மீண்டும் அவள் குரல் உயர அன்பரசனின் தாடை இறுகியது.
“உன்னைக் கத்தாதனு சொன்னேன்… சி செக்சன் செஞ்ச உடம்பு… உன் இஷ்டத்துக்குக் கத்துனா நல்லது கிடையாது” அவனது குரலிலும் இப்போது காட்டம்.
“எனக்கு எது நல்லது எது கெட்டதுனு நீங்க யாரு?”
“உன்னைத் தொட்டுத் தாலி கட்டுன புருசன்… நீ வயித்துல சுமந்த குழந்தைக்கு அப்பன்… உனக்குப் புத்திமதி சொல்ல இந்தக் குவாலிபிகேசன் போதுமா?”
“உலகத்துல இல்லாத புருசன்… பொண்டாட்டி கர்ப்பவதியா இருந்தப்ப அவளைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காத ராட்சசன்… ஊர் உலகத்துக்கு மட்டும் தான் நீ எனக்குப் பொண்டாட்டினு சொல்லி ஒவ்வொரு நாளும் என்னை நோகடிச்ச நல்ல உள்ளம்… இந்தக் குவாலிபிகேசனையும் சேர்த்துக்கோங்க”
அன்பரசனின் முகம் இப்போது இருண்டு போனது. அவன் செய்யாத எதையும் ஆரபி சொல்லிக் காட்டவில்லை. அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவள் இன்று அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பிக் கத்துகிறாள் என்றால் எந்தளவுக்கு அவளது மனதை நோகடித்திருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியால் பீடிக்கப்பட்டவன் குழந்தையை அவளிடம் கொடுத்தான்.
கிளம்புவானென எதிர்பார்த்தவள் அவன் கரம் கூப்பி தலை குனியவும் கொஞ்சம் திகைத்தாள்.
“எல்லாமே என் தப்பு தான் ஆரு… நான் முட்டாள்… கோபத்துல உன்னைக் கண்டபடி பேசிருக்கேன்… உன் லாங்க்வேஜ்ல ராட்சசன்… என்னால நல்ல புருசனா நடந்துக்க முடியல… ஆனா ஒரு நல்ல தகப்பனா நடந்துக்கனும்னு ஆசைப்படுறேன்… ப்ளீஸ்! என் மகளைப் பாக்க, அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ண எனக்கு அனுமதி குடு… அன்பரசனோட பொண்ணா அவ வளர்றதுக்கு கொஞ்சம் மனசு வை… உன் கிட்ட வேற எதையும் நான் எதிர்பாக்கல… அதுக்கான தகுதியும் எனக்கு இல்ல ஆரு… என்னை மன்னிச்சிடு”

அவன் நீளமாகப் பேசி முடித்துவிட்டுக் கிளம்பிவிட ஆரபி விரக்தியாய் சிரித்தாள்.
மன்னிப்பு! என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு இந்த ஒரு வார்த்தையைச் சொன்னால் சமாதானமாகிவிட வேண்டும் போல! ஆரபியின் கண்கள் பழைய சம்பவங்களின் ஞாபகத்தில் கசிய ஆரம்பித்தன. கையில் இருந்த குழந்தையின் பாரத்தை விட அவள் மனதில் பூட்டி வைத்திருக்கும் வேதனைகளின் பாரம் அதிகம்! அந்தப் பாரத்தை எந்நாளும் அன்பரசன் உதிர்த்த மன்னிப்பு என்ற வார்த்தை குறைக்காது என்று எண்ணிக்கொண்டாள் அவனது மனைவி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

