எங்கே நீ தவறினாய் என்று ஆதங்கப்படாத நாட்கள் மிகவும் குறைவு. அன்னியோன்யமும் காதலும் இருந்தும் என் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள தவறிய அலட்சியத்தை எப்போது இருந்து நீ தத்தெடுத்தாய் என்பதும் தெரியவில்லை. ஒருவேளை காதலியாக இருந்தவரை கண்ணில் வைத்து காத்துவிட்டு மனைவியானப் பிறகு அலட்சியம் செய்து சராசரி ஆண்களில் ஒருவனாகிப் போனாயோ நீ?
-வான்மதி
முத்தரசி இல்லத்தில் பூபாலனுக்கும் வான்மதிக்கும் நல்ல கவனிப்பு. நரேந்திரனும் மகேந்திரனும் வீட்டின் மூத்த மருமகனின் மனம் கோணாமல் இருக்கவேண்டும் என்ற பரபரப்பில் இருந்தார்கள்.
“ரிலாக்ஸ் மாமா! நான் என்ன வேத்து மனுசனா?” என்று பூபாலன் சொன்னதும் வான்மதிக்குப் பெருமை அடங்கவில்லை.
“இருந்தாலும் மரியாதைனு ஒன்னு இருக்குதே மாப்பிள்ளை”
பகவதி அவர்களை வரவேற்பதிலோ உபசரிப்பதிலோ எந்தக் குறையும் வைக்கவில்லை. மகளும் மருமகனும் திரும்பிப் போகிறபோது கொடுப்பதற்காக பக்ஷணங்கள் வீட்டில் அவரது மேற்பார்வையில் தயாராகிக் கொண்டிருந்தன.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மதியவிருந்தும் தடபுடல் தான்.
அப்போதுதான் மிருதுளா ஆர்வத்தோடு ஒரு வேண்டுகோள் வைத்தார்.
“இன்னைக்குத் தங்கிட்டு நாளைக்கு நல்ல நேரத்துல வீட்டுக்குக் கிளம்பலாமே மாப்பிள்ளை”
பூபாலனுக்கோ தர்மசங்கடம். சும்மாவே தந்தை இந்தக் குடும்பத்தோடு போய்விடுவேனோ என்று எண்ணி குமைவார். இதில் ஒரு நாள் தங்கினால் கேட்கவே வேண்டாம்.
“இல்லத்தை! கொஞ்சம் வேலை இருக்கு” என்றான் தயக்கத்தோடு. பொய் தான்! அது தெரிந்ததாலோ என்னவோ வான்மதியின் முறைப்பை வாங்கிக் கட்டிக்கொண்டான்.
“என்ன வேலை? எனக்குத் தெரியாம?” என்று அவள் முகம் சுருக்கிக் கேட்டதும் பதில் சொல்ல முடியாமல் திணறிப்போனான்.
“அது… ஸ்டூடியோ விசயமா…” என அவன் இழுக்கவும்
“ஸ்டூடியோ ஓப்பன் பண்ண இன்னும் ரெண்டு வாரம் இருக்குனு இப்பதானே அப்பா கிட்ட சொன்னிங்க” என இரகசியக்குரலில் சந்தேகமாக வினவினாள் வான்மதி.

இதற்கு மேல் அவனால் பொய் சொல்ல முடியவில்லை.
“சரி! நாம நாளைக்குக் காத்தால கிளம்பலாம்”
அவன் சரணடைந்ததும் பூமிகாவிடம் ஹைஃபை கொடுத்துக்கொண்டாள் வான்மதி. மனைவியின் முகம் மலர்வதை ரசித்தவனுக்கு அவளுக்காக ஒரு நாள் இங்கே இருந்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற எண்ணம் வந்துவிட்டது.
மாலையில் குணசேகரன் ஆறு அடித்ததும் அவனது எண்ணுக்கு அழைப்பு விடுத்தார்.
“அப்பா நல்ல நேரத்துலதான் வீட்டுல இருந்து கிளம்பணும்னு சொல்லுறாங்க. நான் நாளைக்குக் காலையில வந்துடுறேன்”
மறுமுனையில் வெறுமென உம் கொட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அந்தப் பெரிய மனிதர்.
அதன் பின்னர் தந்தையைப் பற்றி யோசிக்கக் கூட அவனுக்கு நேரமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
திருமணத்திற்காக பெங்களூருவிலிருந்து பொன்விளைக்கு வந்த நேசமித்ரனின் குடும்பம் இன்னும் அங்கேதான் இருந்தார்கள். சமிக்ஷாவிடம் விளையாடுவது அவனுக்குப் பிடித்திருந்தது.
இரவுணவுக்குப் பிறகு மாமா கூடவே தூங்குவேன் என்று அடம்பிடித்த சமிக்ஷாவைச் சாத்விகா அழைத்துப் போய்விட முந்தைய இரவின் தனிமையை வீணாக்கிய இருவரும் மாடி வராண்டாவில் அமர்ந்திருந்தார்கள்.
இவ்வளவு அமைதியாய், இத்தனை நிமிடங்கள் அவர்கள் இருவரும் இருந்ததாகச் சரித்திரமில்லை. யாரோ ஒருவர் எதையோ சொல்ல இன்னொருவர் வாதாடவென நேரம் அத்துணை வேகமாகப் பறந்துவிடும். இவ்வளவு ஏன்? முந்தைய நாளான முதலிரவில் எப்படி இருந்தார்களாம்? எந்தத் தம்பதியாக இருந்தாலும் கூச்சம் காரணமாகச் சில நிமிடங்களேனும் அமைதியைக் கடைபிடிப்பார்கள்.
அந்த நிதர்சனத்தை உடைத்து வாதாடியே இரவை வீணாக்கியவர்களுக்குத்தான் இப்போது தமிழே மறந்து போன நிலை.
“இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே உக்காந்திருக்குறது?” அமைதியை உடைத்தவன் பூபாலனே!
“தூக்கம் வர்ற வரைக்கும்” சீண்டலாக ஒலித்தது வான்மதியின் குரல்.
அதில் ‘ஐயோடா’ என அலறாதக் குறையாக அவளைப் பார்த்தான் அவன்.
“என்ன மூஞ்சி மாறுது?” அவனது முகவடிவைத் தனது ஆட்காட்டிவிரலால் காற்றில் வட்டம் போட்டுக் காட்டிக் கேட்டாள் வான்மதி.
“இன்னைக்கும் தூங்கணுமா? மனசாட்சி இருக்குதாடி உனக்கு? நாம லவ்வர்ஸா இருந்து ஹஸ்பென்ட் அண்ட் ஒய்பா புரமோட் ஆயாச்சு”
“ஓ! இதெல்லாம் நேத்து நைட் என் கிட்ட எகிறி எகிறி பேசுனப்ப மறந்துடுச்சா?”
“அது ஒரு ஆதங்கத்துல…”
“எனக்கு இப்ப ஆதங்கமா இருக்கு”
நமட்டுச்சிரிப்பை உதட்டுக்குள் ஒளித்துவைத்தபடி கறாராகப் பேசியவளின் தோளை அணைத்தான் பூபாலன்.
“என்னைப் பாத்தா உனக்குப் பரிதாபமா இல்லையா?”
“சுத்தமா இல்ல”
“இரக்கமில்லாதவ நீ”
“இருந்துட்டுப் போறேன்”
அவளது முகத்தை ஆராய்ந்தான் பூபாலன்.
“எதுக்கு இப்பிடி பாக்குறிங்க?”
“பாக்கவும் கூடாதா? அநியாயம் பண்ணுறடி. இதுல்லாம் பெரிய பாவம்”
இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பு அவளை மீறி வந்துவிட வான்மதி சத்தமாகவே நகைத்துவிட்டாள். இப்போது ‘ஙே’ என்று விழித்தவன் பூபாலனே!
“எதுக்கு மோகினி பிசாசு மாதிரி சிரிக்குற?” என்று அதட்டலாகக் கேட்டுவிட்டு “இன்னைக்குனு பாத்து மோகினி போல அழகாவும் தெரியுறா” என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டான்.
“நான் எப்பவுமே அழகுதான்” அமர்த்தலாகச் சொன்னவள் முகத்தை உர்ரென வைத்திருந்தவனின் சட்டை காலரைப் பற்றி தனது முகத்தருகே இழுத்தாள்.

“ப்ச்! என்னைப் பாக்காம வானத்துல எதைப் பாக்குறிங்க?”
“இந்த மதி என் ஆசைய நிராசை ஆக்கிட்டானு அந்த மதி கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டிருக்கேன்”
“சத்தமே கேக்கல”
“நாம் மனசுல நினைச்சாலே என் நிலாக்குப் புரியும்”
“ஓஹ்! டெலிபதியா?” என்றவள் கண்களைச் சுருக்கி “நீங்க மனசுல நினைக்குறது இந்த நிலாவுக்கும் புரியும்” என்றாள் கள்ளச்சிரிப்போடு.
ஆவலோடு திரும்பியவனின் காலரை இன்னும் வேகமாகப் பற்றியிழுத்தவள் அழுத்தமாக அவனது கன்னத்தில் முத்தமிட்டு முகவுரையை ஆரம்பித்தாள்.
அதன் தாக்கத்தில் நெக்குருகிப் போனவன் தாமதிக்காமல் வான்மதியை அள்ளிக்கொண்டான்.
நாணப்பூக்கள் பூத்தக் கன்னங்களுடன் அவனது கழுத்தில் முகம் புதைத்தவள் விலகியபோது இருவரும் அறைக்குள் இருந்தார்கள். அதைவிட முக்கியமாக இருவருக்குமிடையே காற்றுக் கூட புகமுடியாத அளவு நெருக்கம்.
வான்மதியின் சிகையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் பூபாலனைச் சோதிக்க, மலரோடு சேர்த்து மங்கையையும் தனது ஆலிங்கனத்தில் இழுத்துக்கொண்டான்.
முத்தாய்ப்பாக வைக்கப்பட்ட முத்தங்களும், இதமாக இனித்த இதழணைப்புகளும் மோனநிலையை உருவாக்க, கொலுசொலி நாதமாய் மீட்ட, கரை புரண்டோடும் காமமும் கடலளவு காதலும் கலந்து ஒருவரோடு ஒருவர் இணைய அழகாய் நடந்தேறியது அவர்களின் ஆனந்தச் சங்கமம்.
களைப்பின் மிகுதியில் கண்ணுறங்கி, விடியலில் ஒருவர் முகத்தை மற்றொருவர் ஆராய, தொடர்ச்சியாய் நீண்ட சிற்சில காதல் விளையாட்டுகளுடன் புதுமணத்தம்பதிகளின் மறுவீடு முடிந்து போனது.
தனது பிறந்த வீட்டாரிடம் விடை பெற்று பூபாலனின் இல்லத்துக்கு வந்து சேர்ந்த வான்மதிக்கு அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் அற்புதம்தான்.
அன்பான மாமியார், தன்னையே சுற்றி வரும் கணவன், அவ்வபோது மொபைலில் கேட்கும் அக்கறையான அன்னையின் விசாரிப்புகளில் அவள் வாழ்க்கை இவ்வளவு அழகானதா என்று பாடாதக் குறைதான்.
தீர்மானித்தபடியே இரண்டாம் வாரயிறுதியில் பூபாலனின் ‘க்ளிக்வெர்ஸ் ஸ்டூடியோ’ ஹரிஹரனால் திறந்து வைக்கப்பட்டது.
அதற்கு அடுத்தநாள் தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவத்துக்காக முத்தரசி இல்லத்தினர் அனைவரும் பூபாலனின் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
அந்த வைபவமும் எவ்விதக் குறையுமில்லாமல் நடந்தேறியது. எல்லாம் பகவதியிடம் பேசிக்கொண்டிருந்த வான்மதியைத் தன்னோடு சேர்ந்து உறவினர்களுக்கு விருந்து பரிமாற வருமாறு பூபாலன் அழைக்கும் வரை.
மகள் அவனோடு போய் ஒவ்வொருவர் இலையிலும் பரிமாறுவதைப் பார்த்த பகவதிக்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை.

‘எங்கள் வீட்டு இளவரசி இவர்களுக்குச் சாப்பாடு பரிமாறுபவளா?’ என்று கொதித்துப்போனார். அதைவிட அதிகமாக மகளை ‘அதைச் செய், இதைச் செய்’ என்று வேலை ஏவிய குணசேகரனின் கட்டளைகளில்தான் உச்சபட்ச கடுப்புக்கு ஆளானார்.
அவர் அறிந்தவரை குணசேகரனும் சங்கரியும் ப்ரீத்தியை ஒரு தம்ளர் தண்ணீர் கூட யாருக்கும் கொடுக்கவிடவில்லை.
‘அவள் மட்டும் மகாராணி. என் மகள் மட்டும் இவர்களுக்குப் பந்தி பரிமாறி ஊழியம் பார்க்கவேண்டுமா?’ என்று கொந்தளித்த மனதுடன் இருந்தவருக்கு விருந்து சாப்பாடு ருசிக்கவில்லை.
“ப்ரீத்திக்கு இந்த டீயைக் குடுத்துடு வானும்மா. தலை வலிக்குதுனு சொன்னா” என்று உரிமையாய் மகளை வேலை செய்ய சொன்ன சங்கரியின் மீது ஒட்டுமொத்தக் கோபமும் இடம் மாறியது.

இதையெல்லாம் விட மருமகன் என்பவன் தன் மகளை இப்படி வேலை செய்யச் சொல்லி வேடிக்கை பார்க்கிறானே என்ற கோபம்.
‘இவனது உறவினர்களுக்கு இவன் பரிமாறட்டும். தொண்டூழியம் பார்க்கட்டும். என் மகளுக்கு இந்த வேலை எல்லாம் செய்யவேண்டுமென என்ன தலையெழுத்து?’
அவர் யோசிக்கும்போதே சாதம் பரிமாறும் பெரிய கரண்டி வான்மதியின் காலில் விழுந்து வைத்தது. அது சற்று கனமானக் கரண்டி என்பதால் அவளது கால் விரலில் பட்ட நொடியில் வலி உச்சந்தலையைத் தாக்க, ‘அம்மா’ என அலறியவள் வலியில் துடித்துப் போய்விட்டாள்.

பகவதி ஓடோடிச் சென்று மகளை எழுப்பியவர் பூபாலன் அவளது கரத்தைத் தொட வரும்போது “நீங்க உங்க ஆளுங்களைக் கவனிங்க. என் மகளை நான் பாத்துக்குறேன்” என்று கோபத்தோடு சொல்லிவிட்டு அவர்களின் அறைக்கு அவளை அழைத்துச் சென்றுவிட்டார்.
பூபாலனுக்கு மாமியாரின் குற்றம் சாட்டும் குரலில் அதிர்ச்சி! என்னமோ அவனே கரண்டியை எடுத்து வான்மதியின் காலில் போட்டது போல இருந்தது அவர் பேசிய தொனி.
நரேந்திரன் அவசரமாக அவனிடம் மன்னிப்பு கேட்க விளைய “அவங்க மகளுக்கு அடிப்பட்ட பதற்றம் மாமா. இதுக்கு ஏன் மன்னிப்பு அது இதுனு பெரிய வார்த்தை பேசுறிங்க?” என்று சொல்லிவிட்டான்.
ஆனால் குணசேகரனுக்கு மனம் ஆறவில்லை. எந்தக் காலத்தில் மாமியார் மருமகனின் எதிரே நின்று இவ்வாறு உரத்தக் குரலில் பேசியிருக்கிறார்? பணக்காரச் சம்பந்தியம்மாள் திமிரைக் காட்டுகிறார் என்ற அவர் எண்ணிக்கொண்டார்.
அறைக்குள் சென்றதும் மகளைக் கடிந்துகொள்ளத் தவறவில்லை பகவதி.
“இப்பிடி ஊராருக்கு எல்லாம் பந்தி பரிமாறவா உன்னை நாங்க கல்யாணம் பண்ணி வச்சோம்?” என எடுத்ததும் வெடித்த அன்னையை எப்படி சமாளிப்பதெனத் தெரியாமல் திகைத்தாள் அவள்.
“எங்கயாச்சும் புதுப்பொண்ணைப் பரிமாற வச்சிட்டு மூத்த மருமகளுக்குப் பணிவிடை நடக்குமா? உன் சித்தி நம்ம வீட்டுக்கு வந்தப்ப அவ வயித்துல பூமி வர்ற வரைக்கும் நான் அவளை ஒரு வேலை பாக்க விட்டதில்ல. இங்க மூத்த மருகளுக்கு டீ கொண்டு போய்க் குடு, சாம்பாரை ஊத்து, கூட்டு வைனு என் மகளை பந்தி பரிமாற வச்சிட்டாங்களே!”
பகவதி மெய்யாகவே மனம் வருந்தி அழுதுவிட்டார். அவர்களின் குடும்பத்தில் இந்தக் காட்சி எல்லாம் அரிது என்று சொல்லமாட்டார். வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பது மருமகளின் கடமை. ஆனால் சாப்பாடு பரிமாறும் வேலை எல்லாம் பணியாட்கள் செய்வார்கள். அதனால்தானோ என்னவோ வான்மதியைப் பூபாலனும் அவன் வீட்டாரும் மரியாதைக்குறைவாக நடத்துவதாக அவரது மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
“ம்மா! ஏன் அழுறிங்க? இப்ப என்னாச்சு? பாலாவோட ரிலேட்டிவ்ஸ் எனக்கும் ரிலேட்டிவ்ஸ்தானே? அவரும் என் கூடச் சேர்ந்து பரிமாறுனார். என்னை மட்டும் வேலை செய்னு இழுத்துவிடலையே!” எனக் கணவன் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கூறினாள்.
“அப்ப உன் ஓரகத்திக்கும் அவங்க ரிலேட்டிவ்ஸ்தானே? வந்ததுல இருந்து ஒரு துரும்பை அசைச்சிருப்பாளா அவ? ஜூஸ், டீனு அவளுக்குக் கொண்டு போய் குடுக்கவா உன்னைக் காதலிச்சு கல்யாணம் பண்ணுனார் உன் புருசன்?”
“ப்ச்! விடுங்கம்மா! பாலாவும் அத்தையும் என்னைப் பாத்துக்குற விதத்துக்கு இந்த வேலை எல்லாம் ஒன்னுமே இல்ல”
“உன் புருசனும் உன் மாமியாருமா? உன்னை அவங்க பாத்துக்கிட்ட விதத்தைத்தான் வந்ததுல இருந்தே பாக்குறேனே! உன் புருசன் காதல் காதல்னு உன் தலைய தடவி வேலை பாக்க வைக்குறார். அந்தம்மா பாக்க சாதுவா இருந்துக்கிட்டு உன் தலையில வேலைய கட்டுது. எழுதி வச்சுக்க, இந்த ரெண்டு பேரும் உன் மாமனாரை விட ஜெகஜால கில்லாடிங்க”
அன்னை சொல்லிக்கொண்டே போக வான்மதிக்கோ வலித்தக் காலின் வேதனை இன்னும் அதிகமான உணர்வு.

“உன் புருசன் ஸ்டூடியோ ஓப்பன் பண்ணுனார்ல, அப்ப நாங்க எல்லாரும் வந்தோம். எங்களை வாங்கனு ஒரு வார்த்தை கூப்பிடல அவர். அதை விடு. இன்னைக்கு உனக்காகத்தானே நாங்க இங்க வந்திருக்கோம். எங்க கிட்ட ஒரு ரெண்டு நிமிசம் நின்னு பேசிருப்பாரா? அவங்க ஆளுங்களை மட்டும் ஓடி ஓடி கவனிக்குறார். மணி மருமகன்தான் எங்களை வாங்கனு கேட்டார். எங்களுக்கு மரியாதையும் குடுத்தார். சொந்த மருமகன் யாரோ எவரோ போல போய் அவங்கப்பா கிட்ட நின்னாச்சு. உன் மாமனார் கீ குடுக்க, அவர் ஆடுறார். ரொம்ப நல்லாருக்கு வானும்மா. எங்களையும் மதிக்கல, உன்னையும் மதிப்பா வாழ வைக்கல. நல்ல மனுசனைக் கட்டிக்கிட்ட நீ”
எறும்பு ஊரக் கல்லும் தேயுமாம்! பகவதி ஒன்றும் இட்டுக் கட்டிச் சொல்லவில்லை. தந்தையின் முன்னே வான்மதியின் குடும்பத்தோடு இழைய வேண்டாமென ஒதுங்கி நின்றான் பூபாலன். அது பகவதியின் கண்ணை உறுத்திவிட்டது. அவருக்கு நரேந்திரனின் மரியாதை மிகவும் முக்கியம்.
ஊரே பார்த்து மெச்சும் அவரை அவருடைய மருமகன் கண்டுகொள்ளவேயில்லை. அதுவும் ஒரு முறை அல்ல! இன்றோடு இரண்டாம் முறை! ஒவ்வொரு முறை நரேந்திரன் ‘மாப்பிள்ளை’ என்று அன்பாய் அழைத்துப் பேச முயன்றபோதும் நழுவிக்கொண்டே இருந்தான் அவன்.
அதெல்லாம் எங்கே வான்மதியின் கண்களில் பட்டது? அன்றைய விழா நாயகி என்பதால் குதூகலத்தில் இருந்தவளுக்கு இப்போதுதானே தகவல் தெரிகிறது.
“என் புருசன், என் மாமியார், என் சொந்தம்னு நீ மட்டும்தான் வானும்மா நினைக்குற. இந்த வீட்டுல இருக்குற யாரும் உன்னையோ எங்களையோ மதிக்கல. இந்த உண்மை ஒரு நாள் உனக்குப் புரியும். முக்கியமா உன் புருசனுக்கு நாங்க யாரோ மாதிரி ஆகிட்டோம். என்னை விடு. உன் அப்பா அவரை நேசன் மாதிரிதானே நினைக்குறார்? என்னமோ போ! நீ இப்ப மயக்கத்துல இருக்குற. உனக்கு நான் சொல்லுறது புரியாது. உன் கண்ணைத் திறந்து நீ பாக்குற நாள் வரும். அப்ப இவங்களோட சுயநலத்தை நீ புரிஞ்சிப்ப”
பகவதி புலம்பிவிட்டுப் போய்விட்டார். அன்றைய தினம் வான்மதியின் மனம்தான் குழம்பிப் போய்விட்டது.
அன்றிலிருந்து அவளும் சிலவற்றை உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள்.
அவள் சங்கரிக்குச் சமையலில் உதவிவிட்டு வேலையைப் பார்க்க மடிக்கணினியைத் திறந்ததும் குணசேகரனுக்கு மூக்கு வேர்த்து விடும். அது இதுவெனக் கேட்டுத் தொந்தரவு செய்வார். சில நேரங்களில் சத்தமாகப் பேசுவார். இதனால் வேலையைச் செய்ய இடைஞ்சலாக உள்ளதெனப் பூபாலனிடம் கூறினாலும் வயதானவர் என்றால் அப்படித்தான் இருப்பாரென அவன் கூறிவிடுவான்.
அவளது முதல் மாதச்சம்பளத்தில் குணசேகரனுக்கு வாங்கிய ஈசி சேரால் தனது சுயமரியாதை அடிபட்ட தினத்திலிருந்து வான்மதியின் வேலை குறித்து எதுவும் கேட்பதில்லை பூபாலன். ‘உன் வேலை, உன் சம்பளம் இதெல்லாம் உன் பொறுப்பு. நான் சொல்ல என்ன இருக்கிறது?’ என ஒதுங்கிக்கொண்டான்.
வாரயிறுதியில் அத்திப்பூத்தாற்போல ஏதாவது சமைத்து எடுத்துக்கொண்டு அங்கே வரும் ப்ரீத்தி ஏதோ விருந்தாளி போல சங்கரியால் உபசரிக்கப்படுவாள். அதே கவனிப்பு நாள்தோறும் தனக்கும் வாய்க்கிறது என்பதை அந்தோ பரிதாபம் வான்மதி மறந்து போனாள்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவளது கணவன், அவள் என்ன சொன்னாலும் அதைப் பெரிதாகக் கருதுவதில்லை. முக்கியமாக அவனுடைய தந்தையின் விவகாரம் என்றால் ‘என் காது கேட்காது’ என்பது போலவே கடப்பான். இத்தனைக்கும் சங்கரியைக் குணசேகரன் நடத்தும் முறை பற்றிதான் அவள் குரல் எழுப்புவாள். அந்தக் குரலைக் கேட்க பூபாலனின் காதுகள் தயாராக இல்லாததால் எந்தச் செவிகள் தயாராக இருக்கிறதோ அங்கே தனது மனதில் இருப்பதைக் கொட்டத் தொடங்கினாள் வான்மதி. அந்தச் செவிகளுக்குச் சொந்தக்காரராகப் பகவதி இருந்ததுதான் அவளுக்கும் பூபாலனுக்குமான வாழ்க்கையில் பல குளறுபடிகள் உருவாகக் காரணமாக அமைந்தது.
ஏற்கெனவே வான்மதியின் புகுந்தவீட்டார் மீது வருத்தத்திலிருந்த பகவதிக்கு மகள் சொல்லும் செய்திகள் இன்னுமே அதிருப்தியளிக்க அவருமே தேவையற்ற போதனைகளை வான்மதிக்குச் செய்யலானார்.
திருமணமானப் புதிதில் மனைவியின் நியாயமான வேண்டுகோள்களுக்குக் கூட செவி கொடுக்க மறுக்கும் கணவன், தன் மனைவி அவளது வருத்தங்களைக் கொட்டுமிடமாக அவளுடைய புகுந்தவீட்டாரைத் தேர்வு செய்தால் கட்டாயம் அதிர்வான். அந்த அதிர்ச்சியால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஏனெனில் ‘இவன் நான் என்ன சொன்னாலும் பெரிதாகக் கருதமாட்டான்’ என்ற எண்ணத்தைத் தன் மனைவியின் மனதில் அந்தக் கணவன் பதியவைத்துவிட்டானே!
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!