டார்க்வெப்பைப் பயன்படுத்துவதால் உண்டாகும் பொதுவான அபாயங்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். டார்க்வெப்பில் பயனர்களின் சுயவிவரங்கள் திருடப்படுவது அடிக்கடி நடக்கும். உங்களது சுயவிவரங்கள், கடவுச்சொல்லைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் உங்களது சமூக வலைதளங்களைப் பயன்படுத்தலாம். உங்கள் வங்கிக்கணக்கில் குளறுபடி செய்யலாம். நிதி மோசடிகளுக்குப் பெயர் போன இடம் டார்க்வெப். டார்க்வெப்பில் உலவும் சைபர் குற்றவாளிகள் உங்களது கிரெடிட் கார்ட் விவரங்கள், சமூகவலைதள பயனர் விவரங்கள், லாகின் செய்ய தேவையான விவரங்களை வெகு சுலபமாகத் திருடி விடுவார்கள். அடுத்த அபாயம் மால்வேர். பயனர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கணினியில் இந்த மால்வேர்கள் டார்க்வெப் மூலம் புகுந்துவிடும். பின்னர் ஒவ்வொரு முறை இணைய இணைப்போடு அவர்கள் கணினியைப் பயன்படுத்தும்போதும் மால்வேரை அனுப்பியவருக்கு சம்பந்தப்பட்டவரின் கணினியில் என்னென்ன வேலைகள் நடக்கிறது, என்னென்ன விவரங்கள் உள்ளதென்ற தகவலை அனுப்பிக்கொண்டே இருக்கும் அந்த மால்வேர்.
-From Internet
பேராசிரியர் தேவநாதனின் வீட்டில் ஏகலைவனுக்கு விருந்தோம்பல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. திடுமென அவன் தனது வீட்டுக்குள் வந்ததும் தேவநாதன் அரண்டு தான் போனார்.
“சொல்லாம வந்ததுக்கு மன்னிக்கணும் தேவநாதன் சார்… நாளைக்குப் பெங்களூருல டீபோர்ட் மீட்டிங் இருக்கு… ஒருநாள் மட்டும் ஏன் ஹோட்டல்ல தங்கணும்னு யோசிச்சப்ப உங்க வீடு ஞாபகம் வந்துச்சு… நான் வந்ததுல உங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லையே?” என்று கேட்டவனிடம் சிரமம் தான் என்று எப்படி சொல்வார் தேவநாதன்?
மகள் சிங்கப்பூருக்கு விமானம் ஏறி ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. தன்னை ஏமாற்றிப் பணம் பறித்தவள் வெளிநாடு பறந்த தகவலை அறிந்துகொண்டால் இவன் என்ன செய்வானோ என்ற பயம் அவருக்கு..
என்ன தான் அவன் மன்னித்துவிட்டாலும் குற்றமுள்ள நெஞ்சு தேவநாதனுக்கு. அதனால் தான் கொள்ளை கொள்ளையாக குறுகுறுத்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அதுல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சார்… வாங்க” என்று வரவேற்றார் தேவநாதன்.
பின்னர் அவரும் அவரது மனைவியும் நன்றாக உபசரித்தார்கள் எனலாம். அதிலும் தேவநாதனின் மனைவி ரேவதிக்கு மகளும் கணவரும் செய்த தகிடுதத்தங்கள் எதுவும் தெரியாது.
மகள் காவல் நிலையத்துக்குப் போனது கூட அவரது கவனத்திற்கு வராமல் தேவநாதன் பார்த்துக்கொண்டார். மனைவியிடம் மகளைச் சிங்கப்பூர் அனுப்பவும் வேறொரு காரணத்தைத் தான் கூறியிருந்தார்.
ஆனால் சாப்பிடும்போது பிரகதியைப் பற்றி விசாரித்த ஏகலைவனிடம் அவள் தனது சகோதரியைப் பார்க்க கோவைக்குச் சென்றிருப்பதாகப் பொய் சொல்லி சமாளித்தார்.
உன்னிடம் பணம் பறித்த குற்றத்திற்காக காவல்துறையில் சிக்கிக்கொள்ளாமல் என் மகள் தப்பி ஓடினாள் என்றா சொல்லமுடியும் அவரால்?
அவரது மனைவி ரேவதி கணவர் ஏன் பொய் சொல்கிறார் என்று குழப்பமடைந்தார். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “இன்னும் கொஞ்சம் பொரியல் வச்சுக்கோங்க சார்” என்று பொரியலை அள்ளி ஏகலைவனின் தட்டில் வைத்தார்.
“போதும் அக்கா… இப்பவே என் வயிறு நிறைஞ்சிடுச்சு” என்று புன்னகைமுகமாகச் சொன்னபடி சாப்பிட்டான் ஏகலைவன்,.
தேவநாதன் மனைவியின் முகத்தில் உண்டான குழப்பத்தைக் கவனித்துவிட்டார்.
சாப்பிட்ட பிறகு ஏகலைவன் மொபைலோடு ஒதுங்கிக்கொள்ள ரேவதியைத் தனியே அழைத்தவர் அவரது குழப்பத்தைத் தீர்த்து வைத்தார்.
“நம்ம பொண்ணு சிங்கப்பூருக்குப் போனது என் தங்கச்சி மகளுக்குப் பாதுகாப்பா இருக்கனு அவருக்குத் தெரியவேண்டிய அவசியமில்ல ரேவதி… நம்ம வீட்டு விவகாரத்தை அவர் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதே” என்று சொல்லிவிட ரேவதியும் அமைதியானார்.
ஏகலைவன் மொபைலோடு ஒதுங்கியவன் யாரிடமோ பேசிவிட்டு வந்தான்.
தேவநாதனும் ரேவதியும் அவனைப் பார்த்ததும் தங்களின் இரகசிய உரையாடலை நிறுத்திவிட்டு அவனது பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.
“என் ஃப்ரெண்ட் ஒருத்தர் சோழால ரூம் புக் பண்ணிட்டார்.. அவர் கூட தான் இன்னைக்கு நைட் பெங்களூருக்கு ஃப்ளைட்… சோ நான் கிளம்புறேன் தேவநாதன் சார்” என்றவன் ரேவதியிடம் சாப்பாடு நன்றாக இருந்தது என கனிவாகக் கூறினான்.
“என் சாவித்திரிக்கா கையால சாப்பிட்ட ஃபீல்” என்றவன் தனது சூட்கேஸிலிருந்து ஒரு பரிசு பொட்டலத்தை எடுத்து தேவநாதனிடம் கொடுத்தான்.
ரேவதி சமையலறைக்குச் சென்றுவிட அவரிடம் இரகசியக்குரலில் பேச ஆரம்பித்தான் ஏகலைவன்.
“இதை பிரகதி ஊர்ல இருந்து வந்ததும் குடுத்துடுங்க சார்… அவளும் எனக்கு நிஷாந்த் மாதிரி தான்” என்றான் பளீர் புன்னகையோடு.
தேவநாதன் குற்றவுணர்ச்சியில் தடுமாறினார்.
“சார்.. அது வந்து”
“நீங்க ஒன்னும் சொல்லவேண்டாம்… எல்லாம் எனக்குத் தெரியும்… தேவா பேர்ல எத்தனையோ தானதர்மங்களை செஞ்சுட்டு வர்றேன் நான்… பிரகதி என் கிட்ட வாங்குன பணத்தை எல்லாம் அப்பிடி நினைச்சுக்குறேன்… சின்னப்பொண்ணு அவ… கோவப்படாதிங்க.. என் பரிசை அவ கிட்ட குடுத்துடுங்க… நான் கிளம்புறேன்… அக்கா கிட்ட சொல்லிடுங்க” என்று தனது சூட்கேசோடு வெளியேறியவனைப் பார்த்து குற்றவுணர்ச்சியில் குறுகிப்போனார் தேவநாதன்.
ஆனாலும் குடும்பத்தோடு சிங்கப்பூரில் குடியேறும் எண்ணத்தில் கிஞ்சித்தும் மாற்றமில்லை. காரணம் இங்கே இருந்தால் அடிக்கடி ஏகலைவனைப் பார்க்க நேரிடும். அப்போதும் இதே குற்றவுணர்ச்சியை அனுபவிக்க வேண்டும். ஏனோ தேவநாதனுக்கு இதெல்லாம் விருப்பமில்லை.
தவறு செய்த எந்த மனிதன் குற்றவுணர்ச்சியுடனே வாழ்நாட்களைக் கழிப்பான் சொல்லுங்கள்!
இன்று வேண்டுமானால் ஏகலைவன் மகளை மன்னித்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் அவனது இந்த தயாள குணம் மறைந்து மகள் மீது அவனுக்கு விரோதம் முளைக்கலாம். அப்போது துன்பப்படப்போவது பிரகதி தானே! எனவே அவளைப் பாதுகாப்பாகச் சிங்கப்பூர் அனுப்பிய முடிவு தவறானதில்லை என்றே எண்ணிக்கொண்டார்.
பிரகதி தப்பியோடியது, தேவநாதன் மனைவியோடு சிங்கப்பூரில் குடியேறப்போவது குறித்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதென மகளிடம் ஒரு வாரம் போனில் பேசுவதைக் கூட தவிர்த்துவிடும்படி அறிவுறுத்தி தான் அனுப்பியிருந்தார்.
“நீ போனதும் எனக்குக் கால் பண்ணவேண்டாம்… ரெண்டே நாள்ல இந்த வீடு, ரிசார்ட், பேங்க் பேலன்ஸ், என் வேலை சம்பந்தமான எல்லா புரொசிஜரையும் முடிச்சிட்டு நானும் உன் அம்மாவும் அங்க வந்துடுவோம்… நம்ம இருந்து எங்க போனோம்ங்கிறது ஏகலைவனுக்குத் தெரியவே கூடாது”
பிரகதிக்கும் அதுவே சரியென்று படவும் சிங்கப்பூருக்கு அத்தை வீட்டுக்குப் போனால் போதுமென கிளம்பிவிட்டாள். அவளை விமானநிலையத்துக்கு வழியனுப்ப கூட யாரும் வரவேண்டாமென சொல்லிவிட்டாள்.
“நான் சிங்கப்பூர் போறது என்ன புதுசாப்பா? அடிக்கடி வெகேசனுக்குப் போற கன்ட்ரி தானே… ஐ கேன் மேனேஜ்” என்று சொல்லிவிட்டாள்.
மகள் பத்திரமாக வெளிநாடு போய் தங்கையின் வீட்டில் பத்திரமாக இருந்தால் போதுமென்ற எண்ணம் தேவநாதனுக்கு.
இப்போது ஏகலைவனும் கிளம்பிவிடவே அடுத்தடுத்த வேலைகளை செய்துவிட்டு சிங்கப்பூருக்குப் பறக்கத் தயாரானார் மனிதர்.
அதே நேரம் பொன்மலை காவல் நிலையத்தில் இதன்யா மற்றும் முரளிதரனின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியிருந்தனர் நவநீதமும் கோபாலும்.
சாத்தான் வேடமிட்டுத் தங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் யாரென இருவரும் ஒருமித்த குரலில் கூறியது பாதிரியார் பவுலின் பெயரைத் தான்.
முரளிதரனும் இதன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
இதன்யாவுக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. இப்போதுமே இருவரும் எதையோ மறைக்கிறார்கள் என்பதே அவளது அனுமானம்.
“சரி! இப்பிடிலாம் செய்யுறதால அவருக்கு என்ன லாபம்?” என்று மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கேட்டாள்.
நவநீதம் யோசிக்காமல் ரோஷணின் மீது அவருக்குள்ள பாசத்தைக் காரணம் காட்டினாள்.
“அவர் இந்த ஊரைப் பொறுத்தவரைக்கும் ஃபாதரா இருக்கலாம்.. ஆனா அவருக்கு ரோஷண் மேல அதிகமான பாசம்… அவன் சாத்தான் குரூப் ஆரம்பிச்சு எங்களைப் போதைக்கு அடிமையாக்கிச் சம்பாதிச்ச காசு எல்லாம் அவர் கிட்ட தான் இருக்கு… அதை வச்சு அவனையும் ராக்கியையும் நல்லா செட்டில் பண்ண நினைச்சார்… ஆனா ரோஷண் அவசரப்பட்டு இனியா மர்டர்ல மாட்டிக்கிட்டான்… அவனைக் காப்பாத்த எங்களை எல்லாம் இனியா மர்டர்ல மாட்டிவிடுறதா சொல்லி மிரட்டுனார்… நாங்க நம்புற சாத்தானை விட மோசமானவர்னு அவர் அடிக்கடி சொல்லுவார்… நீங்க நம்புனாலும் நம்பலனாலும் அவரை நாங்க சாத்தானாவே நம்ப ஆரம்பிச்சிட்டோம் மேடம்… எங்க குரூப்ல அவரை எதிர்த்துப் பேசுன யாருமே இப்ப நல்லா இல்ல… ஒன்னு அவங்க வாழ்க்கை நாசம் ஆகிடும்… இல்லனா அவங்க உயிரே போயிடும்… என்னால அவரை எதிர்த்து உயிர் போற அளவுக்குப் போராட முடியாது மேடம்… அவர் சொல்லித் தான் கிளாராம்மாவ நான் மாட்டிவிட்டேன்… அவர் சொல்லித் தான் கோபாலும் ஆதாரங்களைப் புதைச்சு வச்சிட்டுப் பொய் சொன்னாரு” என்று ஒரே மூச்சாகச் சொல்லி முடித்தாள்.
கோபாலும் அவள் சொன்னதையே கிளிப்பிள்ளை போல மீண்டும் சொல்ல இதன்யாவும் முரளிதரனும் அவர்கள் சொன்னதை ஒப்புக்கொள்வது போல காட்டிக்கொண்டார்கள்.
விசாரணை அறையை விட்டு வெளியே வந்தவர்களுக்கு முழுதாக நவநீதத்தின் பேச்சில் நம்பிக்கை இல்லை. ஆனாலும் பாதிரியார் பவுலைப் பற்றி அவள் மனதின் ஓரத்திலும் சந்தேகம் இருந்ததால் அவருக்கு எதிராக கைது மற்றும் தேடுதல் ஆணையை உபயோகிக்கும் வாய்ப்பாக நவநீதம் மற்றும் கோபாலின் வாக்குமூலத்தைப் பயன்படுத்திக்கொண்டாள்.
அன்றொரு நாள் அவரது வீட்டிற்கு சென்றபோது ராக்கி சொன்னதை வைத்துப் பார்த்தால் கட்டாயம் நாளை அவர் பொன்மலைக்கு வந்துவிடுவார். வந்ததும் உடனடியாக அவரைக் கைது செய்து அவரது வீட்டைச் சோதனையிட வேண்டுமென நவநீதம் மற்றும் கோபாலின் காதுபடவே பேசினார்கள் விசாரணை குழுவினர்.
சொன்னபடியே மறுநாள் கைதாணையோடு முரளிதரனும் மார்த்தாண்டனும் பாதிரியார் பவுலை அவரது வீட்டில் கைது செய்ய மகேந்திரனும் இதன்யாவும் அவரது வீட்டைச் சோதனையிட ஆரம்பித்தார்கள்.
அங்கே அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்த ராக்கியிடம் பூட்டு தொங்கிய அறையொன்றை காட்டி அதைத் திறக்குமாறு கேட்டாள் இதன்யா.
“அங்க ப்ரேயருக்குத் தேவையான பொருட்கள், பைபிள் எல்லாம் இருக்கும் மேடம்”
“சோ வாட்? ஓப்பன் த டோர்”
ராக்கியும் பயந்தபடியே கதவைத் திறந்தான். மகேந்திரனும் இதன்யாவும் உள்ளே புகுந்து சோதனையிட ஆரம்பித்தார்கள். அவன் சொன்னது போலவே ஒரு பக்க அலமாரியில் ப்ரேயரின் போது அணியும் அங்கி, வேதாகமம் போன்றவை இருந்தன.
இன்னொரு பக்கம் மரத்தினாலான கப்போர்ட் ஒன்று இருக்கவே அதைத் திறக்குமாறு பணித்தாள் இதன்யா. ராக்கி அதையும் திறந்தான்.
அதனுள் பெரிய பிக் ஷாப்பர் ஒன்று இருக்கவே மகேந்திரன் அலுங்காமல் குலுங்காமல் அதை எடுத்தார்.
சற்று கனமாக காணப்பட்ட பிக் ஷாப்பருக்குள் என்ன இருக்கிறதென பார்க்கும் ஆர்வம் இதன்யாவுக்கும் இருந்தது. இருப்பினும் கைரேகை பதிவுகள் குழம்பிவிடக்கூடாதென்பதால் காவல்நிலையத்துக்கு எடுத்து வந்தார்கள்.
அங்கே விசாரணை குழுவின் அலுவலக அறையில் அதை திறந்து பார்த்த பொழுது உள்ளே பழுப்பேறிய சில வெள்ளைத்துணிகள், ஹாக்சா ப்ளேட் துண்டு, கையுறைகள் இவையெல்லாம் இருக்கவே உடனடியாக அவற்றை தடயவியல் லேபுக்கு அனுப்புமாறு மகேந்திரனிடம் கூறினாள் இதன்யா.
முரளிதரன் பாதிரியார் பவுலை விசாரிக்க விசாரணை அறைக்குள் சென்றபோது நவநீதம் மற்றும் கோபால் இருவரின் கண்களிலும் கள்ளத்தனம் தெரிந்ததை இதன்யா கவனித்துவிட்டாள்.
சாத்தான் என்ற பெயரில் பவுல் இவர்களை வைத்து ரோஷண் பெயரில் களங்கம் வராமலிருக்க இதையெல்லாம் செய்திருந்தார் என முன்னரே கூறியிருந்தால் கூட நம்பிருப்பாள். முன்பே நவநீதம் விசாரணையில் இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாமே! அப்போது மறைத்தவள், கிளாராவைத் திட்டம் போட்டு மாட்டிவிட்டவள் இப்போது மட்டும் உண்மையைச் சொல்கிறாள் என்பதை எப்படி நம்புவது?
நிச்சயமாக இனியாவின் மரணத்தில் பாதிரியாரின் பங்கு நேரடியாகவோ மறைமுகமாவோ இருக்கும். ஆனால் இவள் சொல்லும் சாத்தான் நபர் பாதிரியாராக இருக்க வாய்ப்பில்லை. மீண்டும் ஒரு முறை நவநீதம் தங்கள் அனைவரையும் திசை திருப்பி வழக்கின் போக்கை மாற்ற ஏதோ தகிடுதத்தம் செய்கிறாள். இம்முறை அவளது ஜாலங்கள் தங்களிடம் பலிக்கப்போவதில்லை என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள் இதன்யா.
பாதிரியாரிடம் நான்கு மணி நேரங்களாக முரளிதரன் விசாரணை மேற்கொண்டிருக்க தடயவியல் லேபிலிருந்து பொன்மலை காவல் நிலையத்துக்கு அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றவர் மார்த்தாண்டன்.
“ஹலோ சொல்லுங்க” என்றவரிடம்
“அந்த பிக் ஷாப்பர்ல இருந்த ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் ஃபாதரோட ஃபிங்கர் ப்ரிண்ட்சோட ஒத்துப்போகுது சார்… மத்த பொருட்கள் எல்லாம் மர்டர் ஸ்பாட்ல யூஸ் பண்ணுன வெப்பன்ஸா இருக்கலாம்… பிகாஸ் க்ளாத்ல இருந்த ப்ளட் இனியாவோட ப்ளட் சாம்பிள்ஸ் கூட மேட்ச் ஆகுது… அந்த ஹாக்சா ப்ளேடை ப்ளான் பண்ணி கழுவி வச்சிருக்கான் கில்லர்… ஆனாலும் அவன் புத்திசாலித்தனத்தை சயின்ஸ் தோற்கடிச்சிடுச்சு… அந்த ஹாக்சா ப்ளேடை வச்சு தான் இனியாவ அவன் குத்திருக்கணும்… அவ ஃபேஸ்ல இருந்த ஸ்கின்னை உறிச்சிருக்கணும்… இனியாவோட செகண்ட் பி.எம் ரிப்போர்ட்ல ஒரு பாயிண்ட் இருக்கு… அவ ஃபேஸ்ல இருக்குற ஸ்கின்னை உறிக்கிற அவசரத்துல கில்லர் மண்டை ஓட்டோட முன் நெத்தி பகுதில சில இடத்துல ஹாக்சா ப்ளேடால அழுத்தமா கீறியிருக்கான்… அதுல எலும்புத்துகள் சின்னதா உடைஞ்சு உதிர்ந்திருக்க வாய்ப்பு இருக்குனு போஸ்ட்மார்ட்டம் செஞ்ச டீம் சொல்லிருக்காங்க… போன் ரெசிடியூ ஒரு கேஸ்ல ரொம்ப பெரிய ஆதாரமா இருக்கும் சார்… ஏன் தெரியுமா? தண்ணி ஊத்தி கழுவுனா ரத்தம் போயிடும்… ஆனா போன் ரெசிடியூ என்ன செஞ்சாலும் வெப்பனை விட்டுப் போகாது… அந்த ஹாக்சா ப்ளேடுல கிடைச்ச போன் ரெசிடியூ இனியாவோட மண்டை ஓட்டுல இருந்து உதிர்ந்த எலும்புத்துகள்கள் தான்… க்ளவுசஸ் ரெண்டு இருந்துச்சுல்ல, அதுல ரெண்டு விதமான ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கிடைச்சிருக்கு… அதுல ஒன்னு ரோஷணோடது… இன்னொன்னு…”
மறுமுனையில் தடயவியல் சோதனை ஆய்வாளர் சொன்ன பெயரைக் கேட்டதும் மார்த்தாண்டன் அதிர்ந்தார்.
“தேங்க்யூ சார்” என்று அழைப்பைத் துண்டித்தவர் உடனடியாக இதன்யாவிடம் இத்தகவலைத் தெரிவிக்க ஓடினார். அங்கேயோ அவள் இல்லை.
கான்ஸ்டபிளிடம் “இதன்யா மேடம் எங்கய்யா?” என்று கேட்டவரிடம்
“மேடம் அப்பவே போலீஸ் குவார்ட்டர்சுக்குப் போயிட்டாங்க” என்ற பதில் வந்தது. பாதிரியாரிடம் விசாரணை முடியவில்லை. தடயவியல் சோதனை முடிவுகளோ இவ்வாறு வந்திருக்கின்றன. இந்நிலையில் இதன்யா ஏன் போலீஸ் குவார்ட்டர்சுக்குப் போயிருக்கிறாள்? மார்த்தாண்டன் குழம்பி போனார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

