ஆன்டி – ஆன்சைட்டிக்கான மருந்துகள் ஆன்சைட்டியின் அறிகுறிகளான பேனிக் அட்டாக், அதீத பயம் மற்றும் கவலையைப் போக்க உதவும். மன அழுத்தத்தைக் குணமாக்க நிறைய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில ஆன்சைட்டியையும் குணப்படுத்தும். பேனிக் டிஸ்சார்டர் மற்றும் சோசியல் ஆன்சைட்டி டிஸ்சார்டருக்குச் சிகிச்சையளிக்கையில் மருத்துவர்கள் SSRI மற்றும் இதர ஆன்டி டிப்ரசண்டுகளை வைத்தே சிகிச்சையை ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் மற்ற மருந்துகளோடு ஒப்பிடுகையில் அவற்றிற்கு பக்கவிளைவு குறைவு. பென்ஸோடயாப்சைன்கள் ஆன்டி ஆன்சைட்டிக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளாகும். குறுகிய கால ஆன்ஸைட்டி டிஸ்சார்டரைக் குணப்படுத்த இவை பயன்படும்.
-From the website of National Institute of Mental Health
இதன்யா நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து தன்னெதிரே பதற்றத்தை மறைத்தபடி அமர்ந்திருந்த முத்துவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளைப் பற்றி நீதிமன்றத்தில் பொய்யான குற்றம் சாட்டியவனுக்கு எப்படி இயல்பாக அமர்ந்து அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்க்கும் தைரியம் வரும்!
தலையைக் குனிந்து விரல்களை அதோடு நூறாவது முறை எண்ணியிருப்பான். இதன்யாவுக்காக வைக்கப்பட்டிருந்த மின்விசிறி அவனுக்கும் தன் சேவையைச் செய்து கொண்டிருந்தது. ஆனால் பயன் என்னவோ பூஜ்ஜியம்! வியர்வை மழையில் குளித்துக்கொண்டிருந்தான் முத்து.
செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் சிறை கைதிகளுக்குக் காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கும்போது இவ்வளவு பயம் வராது. அவர்களது உடல்மொழியில் விரக்தி மட்டுமே தென்படும். வெளியுலகைப் பார்க்க முடியவில்லையே என்ற சோகமும் சிலரிடம் காணப்படும். இன்னும் சிலரோ அந்தச் சோகத்தை முரட்டுத்தனம் எனும் முகமூடியைப் போட்டு மறைத்துக்கொண்டு சிறைச்சாலையிலும் அதட்டி உருட்டிக்கொண்டு இருப்பார்கள். இது எதுவும் முத்துவிடம் இல்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வார்டனிடம் அவனைப் பற்றி விசாரித்தவரையில் அவன் அமைதியாக எந்தக் கைதிகளிடமும் பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருப்பதாகக் கூறினார். ஜான் கூட அங்கே தனக்கென சில நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டதாக கூறினார் அவர்.
இதன்யா முத்துவைச் சந்தித்ததும் வார்டனின் சொற்கள் நூறு சதவிகிதம் உண்மை என்பதைக் கண்டுகொண்டாள்.
எவ்வளவு நேரம் ஊமைப்படம் பார்ப்பாள் அவளும்! மெதுவாகத் தொண்டையைச் செருமியவள் கையோடு கொண்டு வந்திருந்த மோதிரத்தை இருவருக்கும் இடையே கிடந்த மேஜையின் மீது வைத்தாள்.
“உனக்கு ஒரு கிப்ட் கொண்டு வந்திருக்கேன் பாரு” இதன்யாவின் குரலால் உசுப்பப்பட்டவன் தலையை உயர்த்தி பார்த்தான்.
மேஜை மீது கிடந்த மோதிரத்தைப் பார்த்ததும் முத்து அரண்டு போனான். அவனது கண்கள் மோதிரத்தின் மீதே நிலைகுத்திப் போய்விட “மே.,..மே…டம்” என வார்த்தைகள் தந்தியடிக்கத் தொடங்கின.
அவனது நடுங்கும் கரத்தின் விரல்கள் மோதிரத்தை நோக்கி அதைத் தீண்டும் முன்னர் வேகமாக எடுத்து தனது கைக்குள் பொதிந்துகொண்டாள் இதன்யா.
அவன் கண்களில் பீதி! சாதாரண பீதி இல்லை! மரண பீதி!
அதை சரியாகப் படித்தன இதன்யாவின் கூர்மையான விழிகள்!
“நான் இப்ப பொன்மலைல தான் வெகேசனை கழிச்சிட்டிருக்கேன்… அந்த வெகேசன் கிடைச்சதே உன்னால தான்… அதுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு அப்பிடியே இந்த மோதிரத்தை உனக்கு கிப்ட் பண்ணலாம்னு வந்தேன்… ஆனா உன் ஃபேஸ் ரியாக்சனைப் பாத்தா நீ ஆல்ரெடி இந்த மோதிரத்தைப் பாத்திருக்க போலயே” என்று கேலியாகப் பேசிவிட்டு மோதிரத்தை ஒரு கையால் தூக்கிப் போட்டபடி பேச ஆரம்பித்தாள் அவள்.
முத்து எச்சிலை விழுங்கினான். கைகளை நெறித்துக்கொண்டான் இயலாமையில்.
“என்ன பேச்சே வரல? இது எங்க கிடைச்சுது கேக்க மாட்டியா?”
“எ…எங்க?”
“முருகையாவோட வீட்டுல”
அவ்வளவு தான்! முத்துவிடம் மீதியிருந்த திடமும் போய்விட அவனது கட்டுமஸ்தான தேகம் பயத்தில் நடுங்க தொடங்கியது.
“நான் இப்ப அங்க தான் தங்கியிருக்கேன்… வீட்டை க்ளீன் பண்ணுனப்ப இந்த மோதிரம் கிடைச்சுது… முருகையாக்கு மோதிரம் போடுற பழக்கம் கிடையாது… அதுவும் லேடீஸ் மோதிரத்தை அவர் ஏன் வச்சிருக்கணும்? அப்ப தான் நீ மும்பைல மோதிரம் திருடி மாட்டிக்கிட்டது ஞாபகம் வந்துச்சு… ஒருவேளை இது உன்னோட மோதிரமா இருந்துச்சுனா..”
இதன்யா இழுக்கும்போதே பயத்துடன் கை கூப்பினான் அவன்.
“இது என்னோடது இல்ல மேடம்… இதை பத்தி யார் கிட்டவும் சொல்லிடாதிங்க… ப்ளீஸ்… சொல்லிடாதிங்க”
“இது உன்னோடது இல்லனா ஏன் இப்பிடி பயப்படுற முத்து? முருகையாவ கொலை பண்ணுற இண்டன்சனோட நீயும் ஜானும் அந்த வீட்டுக்குள்ள போனப்ப தவறவிட்டுட்டியா? த்சூ… பாவம்பா நீ… நல்ல கெட்டி தங்கத்துல செஞ்ச மோதிரம்… ரூபி பதிச்சது வேற… திருடுனப்பவே வித்திருந்தா நல்ல விலைக்குப் போயிருக்கும்… மிஸ் பண்ணிட்டியே”
“மேடம் ப்ளீஸ் மேடம்… இதை நான்… யார் கிட்டவும் சொல்லிடாதிங்க மேடம்”
அவனது குரலில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. செய்த கொலைக்குத் தண்டனை அனுபவிப்பவனுக்கு என்ன பயம்?
“இந்த மோதிரத்தை டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க கிட்ட காட்டலாம்னு இருக்கேன்” என்றவள் எழுந்திருக்கவும் முத்து யோசிக்காமல் இதன்யாவின் காலில் விழுந்து கதறியழ ஆரம்பித்தான்.
“ப்ளீஸ் மேடம்… ஜெயில்ல இருந்தாலும் நான் உயிரோட இருக்கேன்… நீங்க மட்டும் இதை பத்தி வெளிய சொன்னிங்கனா என் உயிர் போயிடும்… சொல்லாதிங்க மேடம்… உங்களை பத்தி கோர்ட்ல பொய் சொன்னதுக்கு மன்னிச்சிடுங்க… உயிர் பயத்துல தான் பொய் சொன்னேன் மேடம்”
இதன்யா நிதானித்தாள். அவனை எழுந்திருக்கும்படி பணித்தாள். முத்து எழுந்து நிற்கவும்
“யார் எனக்கு எதிரா உன்னைப் பேச சொன்னாங்க?” என விசாரித்தாள்.
“ஏ…ஏகலைவன் சார்” என்றவன் “ப்ளீஸ் மேடம், நான் உண்மைய சொன்னதை அவர் கிட்ட சொல்லிடாதிங்க… அவர் என்னைக் கொன்னுடுவார் மேடம்” என்று அழ ஆரம்பித்தான்.
“சரி… மோதிரத்தை பத்தி உண்மை வெளிய தெரிஞ்சா என்ன? நீ தான் முருகையாவ கொலை பண்ணுன கேஸ்ல தண்டனை அனுபவிச்சிட்டிருக்கியே? இங்க வந்து உன்னை யார் என்ன பண்ண முடியும்?” என கேட்பது போல விசாரித்தாள் அவள்.
முத்து அழுவதை நிறுத்தினான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் கண்களில் பயம் உறைந்திருந்தது.
குரலைத் தணித்துக் கொண்டவன் “சாத்தான் என்னைக் கொன்னுடுவார் மேடம்” என்றான் நடுக்கத்தோடு.
“ஏய்” இவ்வளவு நேரமிருந்த இலகுபாவத்தைத் தொலைத்துக் கோபத்தில் கத்திவிட்டாள் இதன்யா. இன்னும் எத்தனை நாட்களுக்கு இல்லாத சாத்தானைக் காரணம் காட்டி இவர்கள் அனைவரும் தப்பிக்கப் போகிறார்கள்? சிறைச்சாலைக்கு வந்த பிறகும் சாத்தான் பெயரின் பின்னே ஏன் ஒளிந்துகொள்ள நினைக்கிறார்கள்?
“இன்னொரு தடவை சாத்தான் அது இதுனு உளறுன, என் மேல என்கொயரி வந்து வேலையே போனாலும் பரவால்லனு நினைச்சு உன்னை நானே கொன்னுடுவேன்… என்னைப் பாத்தா முட்டாள் மாதிரி தெரியுதாடா? முதல்ல சாத்தான்னு ஒன்னு இல்லவேல்ல… அப்பிடியே இருந்தாலும் சாத்தானுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? ஆல்ரெடி நீயும் ஜானும் குடுத்த வாக்குமூலத்துல நிறைய பொய் மறைஞ்சிருக்குனு நான் ஸ்மெல் பண்ணிட்டேன்… இன்னொரு தடவை பொய் சொல்லி தப்பிக்கலாம்னு கனவு கூட காணாத”
“இல்ல மேடம்… நிஜமாவே சாத்தான் இருக்கார்… டெய்லி நான் இருக்குற செல்லுக்குள்ள அவரோட குரல் கேக்குது” என்றான் முத்து நடுக்கம் குறையாமல்.
இதன்யா அவனை ஏறயிறங்க பார்த்துவிட்டு “டாக்டர் உனக்குக் குடுத்த மெடிசின்ஸை கன்டினியூ பண்ணுறியா?” என்று கேட்க
“ஆ… ஆமா மேடம்… டெய்லியும் மாத்திரை போடுறேன்” என்றான் அவன்.
இதன்யா மோதிரத்தை பாக்கெட்டுக்குள் போட்டபடியே “உன்னோட சைக்காலஜிக்கல் டிஸ்சார்டருக்கு நீ சாப்பிடுற மாத்திரை ஹாலூசினேசனை உருவாக்கும்… உன் அடிமனசுல உறைஞ்சு போன சம்பவங்கள் குரலாவும் உருவமாகவும் தெரியலாம்… அதெல்லாம் சாத்தான் இல்ல முத்து…. சப்போஸ் அது தான் சாத்தான்னு நீ நம்புறனா, அந்தச் சாத்தான் வேற எங்கயும் இல்ல, உன் மனசுல தான் இருக்கு… டாக்டர் சொல்லுறபடி ட்ரீட்மெண்டுக்கு கோ-ஆப்ரேட் பண்ணு… சாத்தான் உன் மனசை விட்டுப் போயிடும்… இப்ப நீ கிளம்பு… நான் ஜான் கிட்ட பேசணும்” என்றபடி மீண்டும் நாற்காலியில் அமர்ந்துகொள்ள காவலர் ஒருவர் வந்து அவனை அழைத்துப்போனார்.
அவன் போனதும் ஜான் வருகிற இடைவெளியில் ஏகலைவனை மனதிற்குள் ஆயிரம் முறை என்கவுண்டர் செய்துவிட்டாள் இதன்யா.
ஜான் வந்ததும் சுற்றி வளைக்காமல் மோதிரத்தைக் காட்டி இதை நீ ஏன் வைத்திருந்தாய் என கேட்டாள்.
அவரோ “இப்ப எதுக்கு மேடம் விசாரிக்குறிங்க? அதான் நான் செஞ்ச தப்புக்கு ஜெயில்ல தண்டனை அனுபவிக்குறேன்ல… இப்ப நீங்க வந்து விசாரிச்சா நான் ஏன் உங்களுக்குப் பதில் சொல்லணும்?” என தெனாவட்டாகக் கேட்டார். சிறைச்சாலை நண்பர்களின் சகவாசம் அவரை மாற்றிவிட்டது போல.
இதன்யா ஏளனமாகச் சிரித்தாள்.
பின்னர் “சரி சொல்லவேண்டாம்! நான் சோபியா கிட்ட விசாரிச்சிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்திருக்கப் போனாள் அவள்.
அந்த சில நொடிகளில் ஜானின் முகம் கலவரமானது.
“என் மக கிட்ட நீங்க எதையும் விசாரிக்கக்கூடாது… அவ சின்னப்பொண்ணு… எந்தப் பாவமும் அறியாதவ… அவ அப்பாவி” என்று பதறத் துவங்கினார் ஜான்.
“அப்ப நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லிடுங்க… இல்லனா சோபியா படிக்குற சிஸ்டர்ஸ் கான்வென்டுக்கு நேரா போய் அவ கிட்டவே இந்த மோதிரத்தோட வரலாறு என்னனு கேட்டுருவேன்” என்றவள் தோளை அசட்டையாகக் குலுக்கியபடி அமர்ந்தாள்.
ஜான் பதற்றத்தை மறைத்தபடி “அது… அது எனக்கு முத்து குடுத்த மோதிரம்… அவன் பாம்பேல இருந்து கொண்டு வந்த மோதிரம் தான்… சோபியாக்கு உடம்பு சரியில்லாம போய் ஹாஸ்பிட்டல்ல சேத்தப்ப கிளாராம்மா பணம் தரமுடியாதுனு சொன்னாங்க… அப்ப முத்து இதை வித்து ஹாஸ்பிட்டலுக்குப் பணம் கட்டச் சொன்னான்… ஆனா அதுக்கு முன்னாடி நவநீதம் பணத்தை எடுத்துக் குடுத்துட்டா” என்றார்.
எல்லாம் பழைய தகவல்கள். இடைச்செருகல் மோதிரம் பற்றிய செய்தி மட்டுமே!
“இந்த மோதிரத்தை அவன் கிட்ட குடுத்தப்ப வேண்டாம்னு மறுத்துட்டான்… நான் நவநீதத்துக்குப் பரிசா குடுக்கலாம்னு வச்சிருந்தேன் மேடம்” என்றார் அவர்.
“சரி… இது எப்பிடி முருகையா வீட்டுக்குள்ள வந்துச்சு?” அடுத்த கேள்வியைக் கேட்டாள் இதன்யா.
“அந்த கேஸ் முடிஞ்சுடுச்சுல்ல மேடம்… இப்ப ஏன்…”
“ஷட்டப்… நீயும் முத்துவும் ஜெயிலுக்கு வந்துட்டா கேஸ் முடிஞ்சுதுனு அர்த்தமா? ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்குப் பதிலை சொல்லு… இல்லனா சோபியா கிட்ட விசாரிச்சிக்குறேன்”
ஜான் சில நொடிகள் புருவம் சுருக்கிவிட்டு “நாங்க அன்னைக்குப் பேசுனதை கேட்டுட்டு முருகையா வீட்டுக்குள்ள இருந்து வெளிய வந்து சண்டை போட்டார்னு சொன்னோம்ல, அது உண்மை இல்ல… அவர் வீட்டுக்குள்ள இருந்து தான் கத்துனார்… நாங்க தான் வீடு புகுந்து அவரை அட்டாக் பண்ணிட்டு குகைக்குத் தூக்கிட்டுப் போனோம்” என்றார்.
இதன்யாவுக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லை.
“இதை அப்பவே சொல்லிருக்கலாமே?”
“அது… எங்களை மீறி நடந்த சாவுனு ஜோடிக்க பாத்தோம்… அப்பிடி செஞ்சா தண்டனை குறையும்னு நினைச்சோம்”
உப்புச்சப்பற்ற காரணம். சிறுகுழந்தை கூட இதை நம்பாது. இதன்யா மட்டும் நம்பிவிடுவாளா என்ன? ஆனால் ஜானிடம் தான் நம்பவில்லை என்பதைக் காட்டிக்கொள்ளாது அங்கிருந்து போகலாமென சைகை செய்தாள்.
ஜான் இருக்கையிலிருந்து எழுந்தார். போகும் முன்னர் “என் மக நல்லா இருக்கால்ல மேடம்?” என்று விசாரித்தார்.
“அவ நல்லா இருக்குறதா தான் தோணுது… அவ ஸ்கூல் வாட்ச்மேன் கிட்ட விசாரிச்ச வரைக்கும் நவநீதம் ரெகுலரா போய் சோபியாவ பாத்துக்குறானு தெரிய வந்துச்சு… அவ படிப்புச்செலவை கலிங்கராஜன் பாத்துக்குறார்… சோ நீ அவளைப் பத்தி வொரி பண்ணவேண்டாம்” என்றாள் இதன்யா உணர்ச்சியற்ற குரலில்.
அவளது கண்கள் ஜானின் முகத்தில் நடந்த உணர்வு கலவரத்தைக் கவனித்துக்கொண்டிருந்தன.
சோபியா நலமென அறிந்ததும் நிம்மதி! நவநீதம் பற்றி சொன்னபோது மெல்லிய புன்னகை! கலிங்கராஜனைப் பற்றி சொன்னதும் திடுக்கிட்ட அதிர்ச்சி!
அதில் இதன்யாவை யோசிக்க வைத்தது அதிர்ச்சியே! தொழிலாளி மகளுக்காக முதலாளி செலவு செய்கிறார். இது கொஞ்சம் அதிசயம் தான். ஆனால் கலிங்கராஜனின் குணத்திற்கு அவர் இதை செய்யக்கூடியவர் தான் என்று தனக்கே புரிந்தபோது ஜான் மட்டும் ஏன் அதிரவேண்டும்?
“ஐயாவா? கலிங்கராஜன் ஐயாவா என் மகளைப் படிக்க வைக்குறார்? இது உண்மையா?” என ஜான் தடுமாற்றத்தோடு கேட்டார்.
“அவர் அவ ஸ்கூலுக்கு வந்ததை நானே என் கண்ணால பாத்தேன்… செக்யூரிட்டியும் அதை தான் சொன்னார்” என்றாள் இதன்யா.
ஜானின் கண்களில் கண்ணீர்! கூடவே வதனத்தில் குற்றவுணர்ச்சி வேறு! அதை மறைத்துக்கொண்டு “ஐயா கிட்ட… நான் நன்றி சொன்னதா… இல்ல… மன்னிப்பு கேட்டதா… வேண்டாம் மேடம்” எனத் தடுமாறி உரைத்தவர் அங்கிருந்து சென்றுவிட இதன்யாவும் சிறைச்சாலையிலிருந்து கிளம்ப ஆயத்தமானாள்.
வார்டனிடம் இரு கைதிகளையும் பார்க்க ஏற்பாடு செய்தமைக்கு நன்றி சொன்னவள் அவர்களைப் பார்க்க உறவினர்கள் யாரும் வருவதுண்டா என்று விசாரித்தாள்.
“ஜானைப் பாக்க மட்டும் அவன் ஒய்ப்னு சொல்லிக்கிட்டு ஒரு லேடி வரும் மேடம்.. முத்துவ பாக்க யாரும் வர்றதில்ல”
“வேற யாருமே வந்ததில்லையா?”
“இல்ல மேடம்” என்றார் அவர்.
அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்த இதன்யா அந்த மோதிரத்தைப் பற்றி ஜான் மற்றும் முத்து இருவருமே சொன்ன தகவல்கள் உண்மையில்லை என்பதைப் புரிந்துகொண்டவளாக அங்கிருந்து தனது பைக்கில் கிளம்பினாள். ஜானின் தடுமாற்றம் அவரிடம் இன்னும் இரகசியங்கள் மறைந்திருக்கலாமென்ற எண்ணத்தை உறுதி செய்தது. சோபியாவைக் காரணம் காட்டி அதையும் ஜானிடமிருந்து வாங்கிவிடலாமென்ற நம்பிக்கை அவளுக்கு. செல்லும் வழியிலேயே வங்கி மேலாளரிடமிருந்து அழைப்பு வரவும் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டுப் பேச ஆரம்பித்தாள் இதன்யா, அடுத்ததொரு திருப்பம் அந்த அழைப்பின் வாயிலாக வரப்போவதை அறியாதவளாக.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

