ஆன்டி-டிப்ரசண்டுகள் உடலில் செயல்பட ஆரம்பிக்க நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அந்த நான்கு முதல் எட்டு வாரங்களில் தூக்கம், பசியுணர்வு, உற்சாகம் மற்றும் கவனம் போன்றவை இயல்புக்கு வர ஆரம்பிக்கும். ஒரு மருந்துக்கு செயல்படுவதற்கான கால அவகாசத்தைக் கொடுப்பது என்பது அது நமக்குச் சரியான மருந்தா என்று தீர்மானிப்பதை விட முக்கியமானது. இந்த ஆன்டி-டிப்ரசண்டுகள் பொதுவான பக்க விளைவுகளான வயிற்று உபாதை, தலைவலி மற்றும் பாலியல் உணர்வுகள் மரத்துப் போதல் போன்றவற்றை உருவாக்கும். இந்த பக்கவிளைவுகள் மிகவும் குறைந்தளவில் இருக்கும். காலப்போக்கில் இவை மறைந்தும் விடும். சிலருக்குத் தீவிரமான பக்கவிளைவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் முதலில் குறைவான டோஸேஜ் கொடுத்து படிப்படியாக டோஸேஜின் அளவு அதிகரிக்கப்படும். கூடவே அவர்கள் எப்போது இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் மருத்துவர்களே தீர்மானிப்பார்கள்.
-From the website of National Institute of Mental Health
முருகையாவின் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து சற்று தொலைவில் தெரியும் காடு மற்றும் அசையும் மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் இதன்யா. அவள் உள்ளங்கையில் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது பெண்கள் அணியக்கூடிய விலைமதிப்புள்ள மோதிரம் ஒன்று.
ரசூல் பாயின் வீட்டிலிருந்த அவளது உடைமைகள் இங்கே இடம்பெயர்ந்து அன்றோடு இரண்டு நாட்கள் ஆகியிருந்தன.
அவள் முருகையாவின் வீட்டின் தங்கிக்கொள்வதாகச் சொன்னதும் ரசூல் பாயும் அவரது குடும்பத்தினரும் சம்மதிக்கவே இல்லை.
“இப்ப என்ன ஆகிடுச்சுனு இந்த முடிவுக்கு வந்திருக்கிங்க மேடம்? எனக்குத் தான் உடம்பு சரியாகிடுச்சே?” என்றவரிடம்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சப்போஸ் உங்க உயிருக்கு வந்த ஆபத்து இன்னும் தீவிரமானதா இருந்திருந்தா காலம் முழுக்க அந்தக் குற்றவுணர்ச்சிலயே நான் வாழ்ந்திருப்பேன் பாய்…. இந்த ஏற்பாடு தான் என் வேலைக்குச் சரியா வரும்னு தோணுது… நான் ஒன்னும் வெளியூர் போகப்போறதில்ல… இதே ஊருல தான் இருக்கப்போறேன்… அது மட்டுமில்ல எப்பவும் போல நானே முபீனாவ கம்ப்யூட்டர் க்ளாசுக்கு அழைச்சுப் போவேன்… அதுல எந்த சேஞ்சும் வராது” என்று சொல்லி சமாளித்து இந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தாள் இதன்யா.
அஸ்மத்துக்கும் முபீனாவுக்கும் அவளைத் தனியே அங்கே தங்கவிட விருப்பமேயில்லை.
“காட்டுக்கு ரொம்ப பக்கத்துல இருக்குற வீடு… பகல்லயே அங்க அனிமல்ஸ் வரும் அக்கா” என்ற முபீனாவின் கவலையையும்
“இப்ப தான் ஏகலைவன் கிட்ட பிரச்சனை பண்ணிட்டு வந்திருக்கிங்க…. இந்த நேரத்துல நீங்க தனியா தங்குனா உங்களுக்கு என்னாச்சோ ஏதாச்சோனு நாங்க பதறிக்கிட்டே இருப்போம்” என்ற அஸ்மத்தின் வருத்தத்தையும் தனது லைசென்ஸ்ட் துப்பாக்கியைக் காட்டிப் போக்கினாள் இதன்யா.
இந்த இரண்டு நாட்களும் காலையுணவை ரசூல் பாயின் வீட்டிலிருந்து முபீனா கொண்டு வருவாள். சாப்பிட்டுவிட்டு அவளைத் திருநெல்வேலிக்கு கணினி பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் செல்வாள் இதன்யா.
பின்னர் கிடைக்கும் இடைவெளியில் இனியா மற்றும் முருகையாவின் இறந்த சடலங்கள் கிடைத்த இடம், காட்டுக்குள் செல்லும் இரகசியப்பாதை, தேவாலயம், பாதிரியார் பவுலின் வீடு என சந்தேகத்துக்குரிய எல்லா இடங்களையும் வலம் வந்தவளுக்கு கடைசியில் முருகையாவின் வீட்டிலேயே ஒரு ஆதாரம் கிடைத்தது.
அது தான் அவள் உள்ளங்கையில் பொதிந்திருந்த விலைமதிப்புமிக்க மோதிரம். பெண்கள் அணியக்கூடியது. தூசியாய் இருந்த வீட்டை ஒட்டடை அடித்துச் சுத்தம் செய்து பீரோவின் அடியில் பெருக்கியபோது எதுவோ உருண்டு வந்து காலடியில் கிடப்பதைப் பார்த்து எடுத்த இதன்யா அது பெண்கள் அணியக்கூடிய மோதிரம் என்றதும் யோசனையில் ஆழ்ந்தாள்.
முருகையாவின் வீட்டில் இந்த மோதிரத்தை அணியக்கூடிய பெண் யாருமில்லை. இங்கே வேறு எந்தப் பெண்ணும் வந்திருக்கவும் வாய்ப்பில்லை. அக்கம்பக்கத்து ஆட்கள் சொன்னதை வைத்துப் பார்த்தால் பூட்டிவைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு முருகையாவே அடிக்கடி வந்ததில்லை. அப்படி என்றால் இந்த மோதிரம் யாருடையதாக இருந்திருக்கக்கூடும்?
யோசித்தபடியே அமர்ந்தவளுக்கு இந்த மோதிரத்துக்கும் முருகையாவின் மரணத்துக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோ என்ற ஐயம் உதயமானது.
மோதிரம் – படப்பிடிப்பு தளத்திலிருந்த கேரவனிலிருந்து விலைமதிப்புள்ள மோதிரத்தைத் திருடினான் என்று காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட முத்து அவளது நினைவுக்கு வருவதை இதன்யாவால் தடுக்கவே முடியவில்லை.
அவன் இந்த வீட்டுக்குள் எதற்காக வந்திருக்கக்கூடும்? ஜானும் அவனும் பேசியதைக் கேட்டு முருகையா வெளியே வந்து அவர்களை மிரட்டியபோது தானே இருவருமாகச் சேர்ந்து பெரியவரைத் தாக்கி குகைக்கு தூக்கிச் சென்றதாக முத்துவும் ஜானும் வாக்குமூலம் கொடுத்தபோது சொல்லியிருந்தார்கள்.
ஒருவேளை அவர்கள் பாதி உண்மையை மறைத்திருந்தால்?
அப்படியும் இருக்கலாம். ஆனால் எதையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது அல்லவா!
இந்த மோதிரத்தின் வடிவமைப்பு வித்தியாசமாக உள்ளது. இதை வைத்து நகைக்கடைக்காரர்களிடம் விசாரித்தால் ஓரளவுக்கு நடந்தது என்னவென ஊகிக்க வசதியாக இருக்கும்.
தாமதிக்காமல் பொன்மலை காவல் நிலையத்துக்கு வந்தவள் அங்கே மகேந்திரன் யாரிடமோ வாக்குமூலம் வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி மார்த்தாண்டனிடம் வந்து நின்றாள்.
அவரது மேஜையில் மோதிரத்தை வைத்தவள் “இது வீட்டைக் க்ளீன் பண்ணுறப்ப கிடைச்சுது சார்… லேடீஸ் போடக்கூடிய ரிங் இது… எனக்கு என்னமோ முத்து திருடுன ரிங்கா இருக்குமோனு சந்தேகமா இருக்கு மார்த்தாண்டன் சார்” என்றாள்.
மார்த்தாண்டன் மோதிரத்தை எடுத்துப் பார்த்தவர் “நம்ம ஊர் சைடுல போடுற ரிங் மாதிரி இல்லையே… நீங்க நகைக்காரர் கிட்ட விசாரிச்சு பாருங்க மேடம்… அப்புறம் ஏகலைவன் கட்டளை அன்னைக்கே அவரோட அன்னதான சாப்பாட்டுல விஷம் வைக்குற அளவுக்கு அந்தாளு முட்டாள் இல்லனு தோணுது… நான் விசாரிச்ச வரை ரசூல் பாய் வீட்டுக்குச் சாப்பாட்டு எடுத்து வச்சவன் நிஷாந்த்… உங்களுக்கும் ஏகலைவனுக்கும் சண்டை மூட்டி விடுறதால அவனுக்கு எந்த லாபமும் இல்ல… இதுக்கு இடையில ப்ளே பண்ணுனவங்க யாருனு நிஷாந்துக்கும் ஐடியா இல்லையாம்” என்றார்.
இதன்யாவின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தன.
“ஏகலைவனை நீங்க குறைச்சு எடை போடுறிங்க மார்த்தாண்டன் சார்… அந்தாளு அவரோட திமிரை என் கிட்ட காட்டுறதுக்காக வேணும்னு பண்ணுன காரியம் இது… அஸ் யூஸ்வல் இதுக்கும் சாட்சி ஆதாரம்னு எதுவும் இல்ல”
“ஏகலைவன் செஞ்சிருந்தா ஆமா நான் தான் செஞ்சேன்னு சொல்லுற டைப்… எனக்கு இதுல மூனாவதா யாரோ சம்பந்தப்பட்டிருப்பாங்கனு தோணுது” என்றார் மார்த்தாண்டன்.
“அந்த மூனாவது நபர் யாருனு எனக்கு எந்த ஐடியாவும் இல்ல” இதன்யா தோளைக் குலுக்கினாள்.
கூடவே “நான் முபீனாவை கம்ப்யூட்டர் க்ளாஸ்ல இருந்து அழைச்சிட்டு வரப்போறேன்… அப்பிடியே டவுன் ரதவீதில உள்ள நகைக்கடைகள்ல இந்த மோதிரம் என்ன மாதிரி டிசைன்னு விசாரிச்சிட்டு வர்றேன்… எனக்கு கலிங்கராஜனோட பாளையங்கோட்டை வீட்டு அட்ரஸ் வேணும்” என்றாள்.
“அது எதுக்கு மேடம்?”
“நவநீதத்தோட நடவடிக்கை எல்லாம் சந்தேகத்தைக் கிளப்புது… குமாரி கிட்ட விசாரிச்சா அவளைப் பத்தி எதுவும் டீடெய்ல்ஸ் கிடைக்கும்ல… அதான் அட்ரஸ் கேக்குறேன்”
“நான் உங்களுக்கு வாட்சப் பண்ணிடுறேன் மேடம்… அப்புறம் உங்க பேங்க் அக்கவுண்ட் விவகாரம் என்னாச்சு?”
“மேனேஜர் கிட்ட இருந்து எந்தத் தகவலும் வரல… வந்ததும் சென்னைக்குக் கிளம்பணும்… இது பேங்க் சர்வர் ஹேக்கிங்கா இருந்தா அவங்க சைபர் க்ரைம்ல கம்ப்ளைண்ட் பண்ணுவாங்க… நான் போய் ப்ரஷர் குடுத்தா தான் இது யாரோட வேலைனு சீக்கிரம் கண்டுபிடிப்பாங்க”
மார்த்தாண்டனிடம் சொல்லிவிட்டு விடைபெற்றவள் தனது பைக்கைக் கிளப்பிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி பயணமானாள்.
முபீனாவை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி டவுன் ரதவீதிக்குச் சென்றவள் அங்கிருந்த நகைக்கடை ஒன்றில் முருகையாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட மோதிரத்தைக் காட்டி “இது என்ன டிசைன்னு தெரியுமா?” என்று விசாரிக்கவும் நகைக்கடைக்காரர் அதை வாங்கிப் பார்த்தார்.
“இதைப் பாத்தா நம்ம ஊர் டிசைன் மாதிரி இல்ல… எப்பா விமல் இங்க வா” என்று ஒரு வாலிபனை அழைத்தார். அவன் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளி போல.
அவனிடம் மோதிரத்தைக் காட்டி இது என்ன டிசைன் எனத் தெரியுமா என்று வினவினார்.
அவனும் வாங்கி பார்த்துவிட்டு “இது மராத்தி நகை டிசைன் மாலிக்” என்றான். அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு முபீனாவோடு அங்கிருந்து கிளம்பினாள் இதன்யா.
“உனக்கு எதுவும் எமர்ஜென்சி ஒர்க் இல்லனா நம்ம கலிங்கராஜன் சார் வீட்டுக்குப் போயிட்டு வந்துடலாமா?” என்று முபீனாவிடம் விசாரித்தாள்.
“போலாம்கா” என அவள் சொன்னதும் கிளம்பினாள் இதன்யா.
பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியில் அமைதியாய் இருந்தது கலிங்கராஜனின் மினி பங்களா. அங்கே சென்றதும் காவலாளி பொன்மலையில் இதன்யாவைப் பார்த்ததை ஞாபகம் வைத்து உள்ளே அனுமதித்தார்.
முதலாளி இல்லை என்ற தகவலை உபரியாக வழங்கினார்.
முபீனாவும் இதன்யாவும் வருவதை உள்ளே இருந்து கண்ணாடி ஸ்லைடிங் டோர்கள் வழியே கவனித்த குமாரி முகம் மலர இருவரையும் வரவேற்றார்.
“பசங்க கொடைக்கானலுக்குச் சம்மர் கேம்ப் போயிருக்காங்க” என்றவர் இருவருக்கும் பழச்சாறு எடுத்து வந்தார்.
“ரசூல் பாய்க்கு ஆக்சிடெண்ட்னு கலிங்கராஜன் சார் சொன்னாங்க… இப்ப அப்பாக்குத் தேவலையாம்மா?” என முபீனாவிடம் அவளது தந்தையின் நலனை விசாரித்தார்.
“வாப்பாக்கு உடம்பு சரியாகிடுச்சு ஆன்ட்டி.. நேத்து மதுரைக்கு வேலை விசயமா கிளம்பிப் போயிட்டாங்க” என்று பதிலளித்தாள் முபீனா.
“உங்கம்மா பாவம்… பதறிப் போயிருப்பாங்கல்ல… தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுனு நினைச்சுக்க சொல்லு முபீனா” என்றவர் இதன்யாவிடம் என்ன விசயமாக வந்திருக்கிறாள் என விசாரிக்கத் தயங்கினார்.
அதைப் புரிந்துகொண்டவள் “உங்க கிட்ட ஒரு சின்ன டீடெய்ல் கேக்கணும்னு வந்தேன்… நவநீதத்துக்கும் ஏகலைவனுக்கும் இடையில எதாச்சும் டீலிங் இருக்குறதா உங்களுக்கு எப்பவாச்சும் சந்தேகம் வந்திருக்கா?” என்று கேட்டாள்.
நவநீதம் புருவம் சுருக்கினார்.
“நான் பாத்த வரைக்கும் அவளும் ஜானும் யார் கிட்டவும் வெளிப்படையா பழகுனது இல்ல… ஏகலைவன் சார் கிட்ட அவ பேசுனது கூட கிடையாது” என்றார்.
தொடர்ந்து அவர் சொன்ன செய்தி தான் இதன்யாவுக்கு நவநீதம் மீதான சந்தேகம் வலுப்பெற காரணமாக அமைந்தது. கூடவே இன்னொரு நபரையும் அவள் சந்தேகக்கண்ணோடு பார்க்கலாமென்ற அனுமதியையும் வழங்கியது.
“கலிங்கராஜன் சார் பசங்களோட பாளையன்கோட்டை ஷிப்ட் ஆகுறப்ப எல்லா ஸ்டாப்ஸையும் இங்க அழைச்சிட்டு வர்றதா தான் இருந்தாங்க… முக்கியமா கோபாலையும் நவநீதத்தையும் வேலைய விட்டு அனுப்ப அவருக்கு விருப்பமே இல்ல… ஆனா அவங்க ரெண்டு பேரும் தான் பாளையங்கோட்டைக்கு வரமாட்டோம்னு பிடிவாதமா இருந்தாங்க… ஏகலைவன் சார் வீட்டுல வேலை பாத்துக்குறோம், பொன்மலைய விட்டு வேற எங்கயும் வரமாட்டோம்னு சொல்லிட்டாங்க… அதான் கலிங்கராஜன் சார் ரெண்டு பேருக்கும் கணக்கு முடிச்சு அனுப்பிட்டார்… நீங்க வந்திங்கல்ல, அன்னைக்குத் தான் கோபாலோட கணக்கை முடிச்சு செட்டில் பண்ணுனார்… நவநீதம் அன்னைக்கு ஈவ்னிங் சார் கிட்ட அவளோட முடிவைச் சொன்னா… அவளுக்கும் செட்டில் பண்ணி ஏகலைவன் சார் வீட்டுல அவளை சர்வெண்டா சேர்த்து விட்டுட்டாங்க”
“கலிங்கராஜனோட ரெகமண்டேசன்ல தான் நவநீதம் அங்க போய் சேர்ந்தாங்களா?”
“அப்பிடி தான் அவ சொன்னா” என்ற குமாரி இதன்யா இன்னும் பழச்சாறை மிச்சம் வைத்திருக்கவும் “குடிங்க மேடம்… வெயிலுக்கு நல்லது” என்றார்.
இதன்யா டீபாயிலிருந்து பழச்சாறு தம்ளரை எடுக்கவும் அவள் கொண்டு வந்த க்ளட்ச் கீழே விழுந்து அதன் பாதி மூடியிருந்த ஜிப்பின் வழியே உருண்டோடியது முருகையாவின் வீட்டில் அவள் கண்டெடுத்த மோதிரம்.
இதன்யா எழுந்திருக்கப் போக, அவளைக் கையமர்த்திவிட்டு முபீனா அதை எடுத்து வந்தாள்.
குமாரி அவளது கையிலிருந்த மோதிரத்தைக் குறுகுறுவென பார்க்கவும் “என்ன ஆன்ட்டி, டிசைன் நல்லா இருக்குனு யோசிக்குறிங்களா? இது மராத்தி டிசைனாம்” என்றாள் அவள்.
“அதை கொஞ்சம் குடு முபீனா”
குமாரி கேட்கவும் முபீனா இதன்யாவிடம் கொடுக்கவா என்று கண்களால் அனுமதி கேட்டாள். அவள் சரியென்றதும் தன் முன் நீட்டப்பட்ட குமாரியின் உள்ளங்கையில் அந்த மோதிரத்தை வைத்தாள் அவள்.
குமாரி அதை அப்படியும் இப்படியுமாகத் திருப்பிப் பார்த்தவர் “இந்த மோதிரத்தை ஜான் வச்சிருந்ததை நான் பாத்திருக்கேனே” என்றார் யோசனையோடு.
இதன்யா பரபரப்புற்றாள்.
“ஜானா? நல்லா யோசிச்சுப் பாருங்க… நீங்க வேற மோதிரம் எதையும் பாத்திருப்பிங்க” என்றாள் அவள்.
குமாரியோ இல்லவே இல்லை என்றார் விடாப்பிடியாக.
“நான் அவன் கையில பாத்தது இந்த மோதிரத்தை தான்… இதே சிவப்பு ரூபி கல் வச்ச மராத்திக்காரங்க மோதிரத்தை தான் நான் பாத்தேன்… இதை நவநீதம் கிட்ட காட்டி அவனும் அவளும் தோட்டத்துல பேசிக்கிட்டதை கூட நான் பாத்தேன்”
மராத்தியர்கள் அணியும் ஆபரண வடிவமைப்பு என்பதால் ஒருவேளை மும்பையில் நடிகையிடமிருந்து முத்து திருடிய மோதிரம் இதுவாக இருக்குமென ஊர்ஜிதமான நிலையில் குமாரி இந்த மோதிரத்தை ஜான் வைத்திருந்து பார்த்ததாகச் சொல்கிறாரே!
ஜானும் முத்துவும் தன்னைப் பற்றி நீதிமன்றத்தில் பொய்யாகச் சொன்ன தகவல்களையும் மோதிரத்தையும் இணைத்துப் பார்த்தவள் ஏன் அவர்களது வாக்குமூலத்திலும் பொய் கலந்திருக்கக்கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அதே யோசனையோடு நவநீதத்திடம் விடைபெற்றவள் கொடைக்கானலில் இருந்து பிள்ளைகள் வந்ததும் தனக்கு மொபைலில் தகவல் கூறுமாறு சொல்லிவிட்டு முபீனாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

