‘Cognitive therapy என்பது நோயாளிகள் என்ன செய்கிறார்கள் என்பதை விட அவர்கள் என்ன மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தும் தெரபி ஆகும். தவறான சிந்தனைகள் தான் தவறான செயல்களுக்கு வழிவகுக்குமென இந்த தெரபிஷ்ட்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே அவர்களது சிந்தனையை நேர்வழிப்படுத்துவதன் மூலம் அவர்களது உணர்வுகளையும் செயல்களையும் நேர்வழிப்படுத்தமுடியும் என்பதே இந்த தெரபியின் சாராம்சம். இந்த தெரபியை உருவாக்கியதில் ஆல்பர்ட் எல்லிஸ் மற்றும் ஆரோன் பெக் என்ற இருவரின் பங்கு அளப்பரியது.
-American Psychological assoiciation
கான்வென்ட் பள்ளியில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மார்த்தாண்டனிடம் மறைக்காமல் சொல்லிவிட்டாள் இதன்யா. நவநீதம் மற்றும் கலிங்கராஜன் இருவரது நடவடிக்கையும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலிருப்பதை அவரும் ஒப்புக்கொண்டார்.
கூடவே இனியா சொன்ன இன்னொரு செய்தி அவரை தீவிர யோசனையில் ஆழ்த்தியது.
“நான் பூங்குன்றத்துல இருக்குற கோவிலுக்குப் போற சாக்குல ஒரு விசிட் அடிச்சேன் மார்த்தாண்டன் சார்… அங்க முத்துவையும் ஜானையும் பத்தி விசாரிச்ச வரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் பாக்குறதுக்கு அடிக்கடி ஃபார்மல்ஸ் போட்ட ஒரு ஆள் வந்துட்டுப் போனதா பக்கத்துவீட்டுக்காரங்க சொன்னாங்க.. அந்த ஆள் ஆப்பிள் ரெட் கலர் இசுஸூ கார்ல வந்ததா அங்க உள்ள யூத் சொன்னாங்க… யூ நோ ஒன்திங்? ஒரு தடவை ஏகலைவன் ஏர்போர்ட் போறதுக்காக எனக்கு லிஃப்ட் குடுத்தான்… அந்தக் கார் ஆப்பிள் ரெட் இசுஸூ MU-X”
மார்த்தாண்டன் குழம்பிப்போனார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“மேடம் ஒருவேளை நம்ம கிளாரா கொலைகாரினு தப்பா நினைச்சுட்டோமோ?” தயக்கமாகக் கேள்வியொன்று பிறந்தது அவரிடமிருந்து.
“என்னால எந்த முடிவுக்கும் வர முடியல மார்த்தாண்டன் சார்… கிளாரா இந்தக் கொலைய பண்ணுனாங்களா இல்ல கிளாராவை இந்தக் கொலைல இழுத்துவிட்டாங்களானு தெரிஞ்சிக்கிறதை விட ஏன் இனியா மர்டர்ல இன்வால்வ் ஆன ஒவ்வொருத்தர் கூடவும் ஏகலைவனுக்கு லிங் இருக்குனு தான் நான் யோசிக்குறேன்… அந்தாளு ரொம்ப திறமையா கேம் விளையாடிருக்கான்… அவனும் அவனோட மருமகனும் செஞ்ச ஏதோ ஒரு தப்பு இனியாக்குத் தெரிஞ்சதால ரெண்டு பேரும் ப்ளான் பண்ணி அவளை நம்ப வச்சு கொன்னுட்டாங்களோனு சந்தேகம் வருது… நிஷாந்த் சென்னைல இருந்ததா புரொபசர் தேவநாதன் குடுத்த சாட்சியும், அவனோட ஃபேஸ்புக் வீடியோவும் தான் அவன் கொலைகாரனா இருக்க வாய்ப்பில்லயோனு தோண வைக்குது… எதுவோ நடந்திருக்கு சார்… என்னனு புரியல… பட் சீக்கிரம் கண்டுபிடிக்கணும்”
“கலிங்கராஜனோட நடவடிக்கையும் புதிரா தானே இருக்கு மேடம்… இன்னைக்கு பாளையங்கோட்டை ஜெயில்ல கிளாராவை பசங்களோட சேர்ந்து போய் பாக்க பெர்மிசன் வாங்கிருந்தாரு… ஆனா அவரோ பசங்களோ இப்ப வரைக்கும் அங்க போகல… திடீர்னு அவரோட ரெசிடென்சை மாத்திருக்காரு”
“ஸ்கூல் வாசல்ல என் கிட்ட பேசுனப்ப யாரோ அவரை வாட்ச் பண்ணுன மாதிரி ரொம்ப டென்சனா சுத்தி முத்தி பாத்துட்டிருந்தாரு… எதையோ மறைக்குறாரு… நவநீதத்தைக் கண்காணிக்க ஏதாச்சும் பண்ண முடியுமா சார்?”
“ஏகலைவன் வீட்டு முன்னாடி அடிக்கடி நம்ம கான்ஸ்டபிள்ஸ் போறதும் வர்றதுமா இருக்காங்க… அவளோட நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமா மாறுச்சுனா கட்டாயம் அவளை விசாரிச்சிடலாம் மேடம்”
இதன்யா மார்த்தாண்டனிடம் பேசி முடித்துவிட்டு ரசூல் பாயின் வீட்டுக்குப் போகிற வழியில் சாவித்ரியோடு நடந்து வந்து கொண்டிருந்த நிஷாந்தைப் பார்க்க நேரிட்டது.
அவனைப் பார்த்ததும் அருவருப்பு எழுந்தது இதன்யாவுக்குள். சென்னையில் காதலியைக் கொஞ்சிவிட்டுத் திரும்பிவிட்டானா இந்தக் காதல் மன்னன் என்று கறுவிக்கொண்டு தன்னருகில் வந்தவர்களிடம் போலிப்புன்னகையை ஈந்தாள்.
சாவித்ரி மரியாதைநிமித்தம் புன்னகைத்ததோடு நின்று பேசவும் செய்ய, சுடுமணலில் நிற்பவன் காலை மாற்றி மாற்றி வைத்து ஆடுவானே அந்த நிலையில் நின்று கொண்டிருந்தான் நிஷாந்த்.
“எப்பிடி இருக்க நிஷாந்த்? நான் இங்க வந்ததுல இருந்து உன்னைப் பாக்கவேல்லயே?” என நைச்சியமாக விசாரித்தாள் இதன்யா.
அவனது விழிகளில் தோன்றிய கலவரம் கணப்பொழுதில் சிரிப்பாக உருமாறியது. திறமைசாலி தான்! சடுதியில் உணர்வுகளை மாற்ற மாமனிடம் கற்றுக்கொண்டான் போல என்று ஏளனமாக நினைத்தாள் இதன்யா.
“மதுரைல இண்டர்நேஷ்னல் புக்ஃபேர் நடந்துச்சு மேடம்… எனக்கு ஸ்டடீசுக்குத் தேவையான புக்ஸ் சிலது அங்க கம்மியான ரேட்ல கிடைக்கும்னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க… அதான் மதுரைக்குப் போயிருந்தேன்” என்றான் அவன்.
பொய்யன்! எப்படி வாய் கூசாமல் பொய் கூறுகிறான்!
“ஓஹ்! என்ன புக்ஸ்? உனக்கு யூ.ஜி முடிஞ்சுதுல்ல? பி.ஜிக்கான புக்ஸா?” என விசாரித்தாள் இதன்யா.
“சி.ஏ ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன் மேடம்… அதுக்கான புக்ஸை வாங்க போயிருந்தேன்… ஃபாரீன் ஆத்தர்ஸ் புக்ஸ்லாம் ரொம்ப காஸ்ட்லி மேடம்” என்றான் பொறுப்பானவனாகத் தன்னைக் காட்டிக்கொண்டவனாக.
அவனது பொறுப்பான பேச்சில் சாவித்ரியின் முகத்தில் சிறு பூரிப்பு! மைந்தனின் சுயரூபம் வெளிப்பட்டால் முதலில் உடைவது இந்தப் பூரிப்பாகத்தான் இருக்கும். சாவித்ரி மீது பரிதாபம் பிறந்தது இதன்யாவுக்கு.
“சி.ஏ கோர்ஸ் ஜாயின் பண்ணியாச்சா?” என்றவளிடம் நிஷாந்துக்கு முன்னர் சாவித்ரி பதிலளித்தார்.
“இல்ல மேடம்… முருகன் கோவில் திருவிழா முடிஞ்சதும் தான் ஜாயின் பண்ணப்போறான்… அதுக்குள்ள இந்தக் கேசும் ஒரு முடிவுக்கு வந்துடும்னு தம்பி சொல்லிருக்கான்… முருகன் மேல பாரத்தைப் போட்டுட்டு என் பிள்ளை அவனோட கனவை நோக்கி ஓடுறான்” என்றார் அப்பெண்மணி.
அவன் ஓடுவது கனவை நோக்கியல்ல! படுகேவலமான அவனது காதலியை நோக்கி! மனதிற்குள் சொல்லிக்கொண்ட இதன்யாவால் வெளிப்படையாகச் சொல்ல முடியாத சூழ்நிலை.
இருவரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டவள் பின்வந்த நாட்களில் பொன்மலைவாசிகள் ஒவ்வொருவரோடும் வெகு கவனமாகப் பழகினாள். நவநீதத்தையும் கண்காணித்தாள்.
ஒரு ஞாயிறன்று திருப்பலி முடிவடைந்ததும் அமைதியாகக் காணப்பட்ட தேவாலயத்திற்குள் சென்று சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு வருவோமென கிளம்பினாள்.
மதங்கள் தான் வேறு! இறைவன் ஒருவனே! அவன் உறையுமிடம் எதுவாயினும் அங்கே அமைதி அள்ள அள்ள குறைவில்லாது கிடைக்கும்,. அது கோவிலோ தேவாலயமோ, அங்கே நுழைந்தால் கிடைக்கும் அமைதிக்கு முன்னே மதவேறுபாடு எல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றாது, மனிதம் நிறைந்த மக்களுக்கு. மனிதம் துறந்து மதத்தைத் தூக்கிவைத்து ஆடும் வெறிபிடித்த மாக்களுக்கு இறைவனும் அமைதியும் இரண்டாம்பட்சமே! வழிபடுமிடத்தின் புனிதமெல்லாம் அவர்களின் மதவெறி ஏறிய மண்டைகளில் புகுவதற்கு வாய்ப்பில்லை.
வாசுதேவன் மகளுக்கு இதைச் சொல்லி வளர்த்ததாலேயே இதன்யாவின் மனதிலும் அக்கருத்து ஆழமாய் வேரூன்றிவிட்டது.
பொன்மலையிலுள்ள தேவாலயத்தின் வரலாறை பாதிரியார் பவுலின் வாயால் கேட்டிருந்தாள் அல்லவா! எனவே அங்கே போனவள் பெஞ்சில் அமைதியாக அமர்ந்தாள்.
கொலைவழக்கு, விசாரணை, தீர்ப்பு, சந்தேகப்பட்டியல் இதையெல்லாம் தாண்டி தன்னையும் பேணியாக வேண்டிய கட்டாயத்தை அவள் உணர்ந்திருந்தாள். மருத்துவமனை படுக்கையில் கிடந்த சமயத்தில் எல்லாம் தன் பாதுகாப்பைப் பற்றிய அக்கறையில்லாமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிந்தது அவளுக்கு. கூடவே வேலை வேலை என எந்தளவுக்கு எந்திரமாகியிருந்தாள் என்பதை அன்னையின் கையால் ரசம் சாதம் சாப்பிட்ட தருணத்தில் புரிந்துகொண்டாள்.
இனி தன்னைப் பேணவும், குடும்பத்தினருடன் செலவிடவும் நேரம் ஒதுக்க வேண்டும் என தீர்மானித்தாள்.
இப்போது தேவாலயத்தில் அமர்ந்திருப்பது அந்த சுயப்பேணலின் காரணமாக தான்.
அமைதியாக அமர்ந்து சிலுவையில் உதிரம் சிந்தி காட்சியளித்த இயேசுநாதரை அவள் கண்கள் அகற்றாமல் அவள் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் “ஃபாதர்” என உரக்க அழைத்தபடி உள்ளே வந்தான் ராக்கி.
அவனது கரத்தில் ஒரு பிக் ஷாப்பர் இருந்தது. யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் முன்னேறியவன் கழுத்தோடு நின்ற கூந்தலைக் கண்டதும் சுதாரித்து விட்டு நடப்பதை நிறுத்தினான்.
இதன்யாவும் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“ராக்கி” என்றபடி எழுந்து அவனருகே வந்தாள்.
அவளைப் பார்த்ததும் ராக்கியின் உடல் நடுக்கம் கண்டது. விஸ்தாரமான தேவாலயத்தில் வீசிய குளிர் தென்றல் காற்றினால் கூட அவனது வியர்வை உற்பத்தியை நிறுத்த முடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
இதன்யா வியர்த்து வழிந்தவனை வினோதமாகப் பார்த்துவிட்டு “ஏன் உனக்கு ஷிவரிங் அண்ட் ஸ்வெட்டிங் ஆகுது? நான் மனுசி தான், உன் அண்ணன் கும்பிட்ட சாத்தான் இல்ல” என்று அதட்டவும்
“அதில்ல… மேடம்.. எனக்கு உங்களைப் பாத்தா… பய…மா” என திக்கித் திணறியவன் அரும்பாடு பட்டதென்னவோ தனது கையில் வைத்திருந்த பிக் ஷாப்பரை இதன்யா பார்த்துவிடாமல் தவிர்ப்பதில் தான்.
ஆனால் வெகு கவனமாக இதன்யாவின் பார்வை அங்கே தான் நிலைத்திருந்தது. என்ன இருக்கிறது அந்த பிக் ஷாப்பரில் என்று யோசிக்கத் துவங்கியது அவளது மூளை.
அதை பின்னே மறைத்தவன் “நான் ஃபாதரை பாத்துட்டு வந்துடுறேன்” என்று அங்கிருந்து ஓட்டமெடுத்தான்.
“ஏய் நில்லு” என்றபடி அவனைத் தொடர்ந்து வந்த இதன்யா பாதிரியார் பவுல் தங்கும் வீடு வந்ததும் நின்றாள்.
ராக்கி ஓடிவர அவனைப் பின்தொடர்ந்து வந்த இதன்யாவைக் கண்டதும் பாதிரியாரின் வதனத்திலும் பதற்றம் ஒட்டிக்கொண்டது.
“என்னாச்சு ராக்கி? ஏன் ஓடி வர்ற?” என்று வாய் கேட்டாலும் கைகள் அனிச்சையாக அவனிடமிருந்து பிக் ஷாப்பரை வாங்கிக்கொண்டன.
“ஃபாதர் அந்த பிக் ஷாப்பர்…” என இதன்யா ஆரம்பிக்கும்போதே சன்டே க்ளாஸ் வர்ற கஷ்டப்படுற குழந்தைங்களுக்குக் குடுக்குறதுக்காக ட்ரஸ் வாங்கிட்டு வரச் சொல்லிருந்தேன்… வேற ஒன்னுமில்ல” என்று சொல்லிச் சமாளித்தார் பாதிரியார் பவுல்.
இதன்யாவால் அதை நம்ப முடியவில்லை. இருப்பினும் சரியெனத் தலையசைத்துவிட்டு அங்கிருந்து மீண்டும் தேவாலயத்திற்கு சென்றுவிட்டாள்.
அன்று முழுவதும் அவளுக்கு பாதிரியார் பவுல் மறைத்த பிக் ஷாப்பர் பற்றிய எண்ணம் தான்.
இரவில் உறக்கம் வரவில்லை. காலாற நடப்போமென நடந்தவள் முருகன் கோவிலருகே போனாள். மலைமீதிருக்கும் முருகன் கோவிலுக்கு ஒரு தனியழகு உண்டு.
இரவில் கோபுர உச்சியில் கண் சிமிட்டும் விளக்கோடு பால்நிலாவின் ஒளியில் வரிவடிவமாகத் தெரிந்த கோவிலைப் பார்த்தபடி நடந்தவள் திடுமென நின்றாள்.
காரணம் கோவிலின் அருகே நின்று ஒரு ஆடவனுடன் பேசிக்கொண்டிருந்தவர் பாதிரியார் பவுல்.
அவரது கையில் ராக்கி கொடுத்தானே அந்த பிக் ஷாப்பர் இருந்தது.
இதை ஏன் இங்கே கொண்டு வந்திருக்கிறார் என்று யோசிக்கையிலேயே அதை அந்த ஆடவரிடம் கொடுத்தார் பாதிரியார்.
இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள். பின்னர் அந்த ஆடவன் அவர் கொடுத்த பிக் ஷாப்பரை கோவிலின் பக்கவாட்டு சுவர் கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மணலுக்குள் புதைத்தான். புதைத்த இடத்துக்கு அடையாளமாக செங்கல் ஒன்றை எடுத்துவைத்தவன் பாதிரியாரிடம் ஏதோ சொல்லவும் அவர் தலையாட்டிவிட்டு அங்கே இருந்து கிளம்பினார்.
அந்த ஆடவனும் அங்கிருந்து சென்றுவிட யாருமற்ற இடத்தை நோக்கி விரைந்தாள் இதன்யா.
மணல் குவியலில் இருந்த செங்கல்லை எடுத்துவிட்டு மணலைத் தோண்டினாள். அதனுள் இருந்த பிக் ஷாப்பரை எடுத்துக்கொண்டவள் மீண்டும் மணலை உள்ளே தள்ளி செங்கல்லை அதன் மீது வைத்தாள்.
அந்த ஆடவன் வரும் அரவம் கேட்கவும் அங்கிருந்து வேகமாக மறைந்து மறைந்து ரசூல் பாய் வீட்டுக்குச் செல்லும் பாதைக்கு வந்துவிட்டாள்.
மணலின் ஈரம் படிந்த பிக் ஷாப்பரோடு ரசூல் பாய் வீட்டுக்கு வந்தவள் அவர்களிடம் என்னவென சொல்லிக்கொள்ளவில்லை.
தனது அறையில் கொண்டு போய் வைத்துவிட்டுப் படுத்துக்கொண்டவள் மறுநாள் விடிந்ததும் அன்றாட கடமையான முபீனாவை கணினி வகுப்புக்கு அழைத்துச் செல்லும் கடமையை முடித்துவிட்டு அந்த பிக் ஷாப்பரோடு பொன்மலை காவல் நிலையத்துக்கு விரைந்தாள்.
அங்கே மார்த்தாண்டன் இன்னும் வந்திருக்கவில்லை. மகேந்திரன் இருந்தார். அவரிடம் பாதிரியார் பவுல் மற்றும் ராக்கி இந்த பிக் ஷாப்பரை மறைக்க முயன்றது, பாதிரியார் பவுல் அதை ஆடவரிடம் ஒப்படைத்தது என அனைத்தையும் கூறினாள்.
“இன்னும் ஓப்பன் பண்ணி பாக்கலையா மேடம்?”
“ரசூல் பாய் வீட்டுல இதை வச்சு விரும்பத்தகாத சூழல் வர்றதை நான் விரும்பல மகேந்திரன்,… ஸ்டேசனுக்கு வந்து பாத்துக்கலாம்னு அமைதியா இருந்துட்டேன்”
இருவரும் சேர்ந்து பிக் ஷாப்பருக்குள் இருந்த ப்ளாஸ்டிக் கவரை எடுத்தார்கள். திருநெல்வேலியில் இருக்கும் பிரபல ஜவுளி நிறுவனத்தின் கவர் அது. அதனுள் ஒரு சட்டை மடித்து வைக்கப்பட்டிருந்தது.
அதை வெளியே எடுத்தார் மகேந்திரன். உடனே நாசியில் முடை நாற்றம் ஏறியது. நாசியை நிமிண்டியபடி லத்தியால் அதை விரித்துப் பார்த்தபோது வெண்ணிற சட்டையில் பெரிய பழுப்பு வண்ண கறைகள்! துணியில் இரத்தம் பட்டு காய்ந்து நீண்டநாட்கள் ஆகிவிட்டால் இருக்குமே அதே பழுப்பு நிறத்தில் கறைகள்! இருவரும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

