பிஹேவியர் தெரபி என்பது ஒரு சைக்கோபாத்தின் சாதாரண மற்றும் அசாதாரண நடத்தைகளைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றை சரிசெய்யும் தெரபியாகும். இந்த தெரபி முறையில் இவான் பவ்லோவ் என்பவரின் பங்கு அதிகம். நோயாளி விரும்பத்தக்க சூழல்களை உருவாக்கிக்கொடுத்து அதன் மூலம் அவர்களை சரிபடுத்த முயற்சிப்பார்கள். அடுத்த முறை அவர்களுக்குப் பிடிக்காத அல்லது விரும்பத்தகாத சூழலை உருவாக்கி, அதன் மூலம் அவர்கள் எந்தளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை மதிப்பிடுவார்கள். அடுத்த முறையை ‘Operant conditioning’ என்பார்கள். அந்த முறை மூலம் நோயாளிகள் நல்ல நடத்தைகளுக்குப் பரிசும், மோசமான நடத்தைகளுக்குச் சிறுதண்டனையும் கொடுக்கப்படும். 1950களில் பிஹேவியர் தெரபிக்கான அவசரத்தேவை அதிகரித்தது. அதனால் அந்த தெரபியில் சிற்சில மாறுதல்களும் நேர்ந்து கொண்டே இருந்தன. மிகவும் முக்கியமான மாறுதலில் ஒன்றான ‘Cognitive Behavioral therapy’ நடத்தையோடு சேர்ந்து நோயாளியின் சிந்தனைகளையும் நேர்வழிப்படுத்தும்
-American Psychological assoiciation
முபீனாவை அழைத்துக்கொண்டு கணினி பயிற்சி வகுப்புக்காக திருநெல்வேலி சந்திப்புக்கு வந்திருந்தாள் இதன்யா. அன்று ஏதோ காரணத்துக்காக வகுப்புக்கு விடுமுறை என வெளியே அறிவிப்பு பலகையில் எழுத்துகள் ஓடிக்கொண்டிருந்தன. என்ன காரணம்? எதுவாக இருந்தாலும் மொபைலுக்குச் செய்தி வந்துவிடும். இன்று ஏன் செய்தி அனுப்பவில்லை?
யோசனையுடன் பயிற்சி வகுப்பு ஆசிரியை ஒருவரின் மொபைலுக்கு அழைத்துப் பேசினாள் முபீனா.
“ஹலோ மேம், நான் முபீனா பேசுறேன்… இன்னைக்கு ஏன் மேம் சென்டருக்கு லீவ் விட்டிருக்காங்க? வழக்கமா இந்த மாதிரி திடீர் லீவ்வுனா சென்டர் நம்பர்ல இருந்து வாட்சப்ல மெசேஜ் வரும்… இன்னைக்கு அதுவும் வரல”
“நம்ம மேனேஜர் சாரோட அம்மா தவறிட்டாங்கடா… திடீர்னு மானிங் தான் எங்களுக்கு நியூஸ் வந்துச்சு… ஸ்டூடண்ட்சுக்கு மெசேஜ் அனுப்புற நிலமைல சார் இல்ல… நம்ம சென்டர் குரூப்ல சொல்லிருந்தோமே… நீ பாக்கலையாடா?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அச்சோ நான் தான் கவனிக்கல மேம்… சாரி”
“நோ இஸ்யூஸ்… உன் அக்கா இருக்காங்களா இல்ல உன்னை ட்ராப் பண்ணிட்டுக் கிளம்பிட்டாங்களா? நான் வேணும்னா ஜங்சன் வந்து பொன்மலை பஸ்ல உன்னை ஏத்திவிடட்டுமா? நீ தனியா போயிடுவியா?”
“அக்கா என் கூட இருக்காங்க மேம்… நான் அவங்க பைக்ல போயிடுவேன்… தேங்க்ஸ் ஃபார் ஆஸ்கிங் மேம்”
“ஓ.கேடா… ரொம்ப நேரம் இங்க வேஸ்ட் பண்ணாம வீட்டுக்குக் கிளம்பு… எலக்சன் நேரம்ல”
“சரி மேம்”
ஆசிரியையிடம் பேசிவிட்டு வாட்சப் குழுவை ஆராய்ந்த போது விடுமுறை செய்தியை முன்னரே பதிவிட்டிருந்தது தெரியவந்தது முபீனாவுக்கு. இதன்யாவிடம் விவரத்தைக் கூறியவள் “அக்கா இப்பவே வீட்டுக்குப் போகணுமா?” என அலுப்பாகக் கேட்க
“உனக்கு எங்க போகணும்னு சொல்லு… கூட்டிட்டுப் போறேன்… பட் அஸ்மத் கேட்டாங்கனா நான் பொய் சொல்லமாட்டேன்… டீலா நோ டீலா?” என்று கேட்டாள் இதன்யா.
“டீல்” என்ற முபீனா பெரிதாக ஒன்றும் கேட்டிடவில்லை. ஜங்சனில் இருக்கும் அரசன் பேக்கரியில் மகாராஜா ஃபலூடா சாப்பிடவேண்டும் என்பது அவளது நீண்டநாள் ஆசையாம். அங்கே தான் அழைத்தாள் இதன்யாவை.
“சரி வா” என்று பைக்கைக் கிளப்பியவள் அரசன் பேக்கரிக்குள் நுழைந்து ஒரு நாற்காலில் அமர்ந்தாள்.
“ஒரு மகாராஜா ஃபலூடா, ஒரு வாட்டர்மெலன் ஜூஸ் கொண்டு வாங்க… அப்புறம் மூனு எக் பஃப்ஸ் பார்சல் பண்ணிடுங்க” என்று ஆர்டர் கொடுத்தவள் முபீனாவிடம் வேறு ஏதாவது வேண்டுமா என கேட்க
“ஃபர்ஸ்ட் ஃபலூடா… மீதி அப்புறமா பாத்துக்கலாம்” என்றாள் அவள்.
அவள் ஆசைப்பட்ட மகாராஜா ஃபலூடா வந்தது. பெரிய கண்ணாடி தம்ளரில் பழத்துண்டுகள், சேமியா கலவை, ஐஸ்க்ரீமோடு பார்க்கும்போதே நாவூறியது முபீனாவுக்கு. தனக்கு ஆர்டர் செய்த தர்பூசணி பழச்சாறை ரசித்து அருந்திய இதன்யா, ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் + பழக்கலவை + சேமியாவை முபீனா ஊட்ட வரவும் வேண்டாமென மறுத்தாள்.
“ஏன்கா நான் ஊட்டுனா சாப்பிடமாட்டிங்களா?” முபீனாவின் முகம் ஏமாற்றத்தில் வாடியது.
“உடனே ஃபேஸை அப்பிடி வச்சுக்காத… குடு சாப்பிடுறேன்” என்றாள் அவள்.
முபீனா முப்பதிரண்டு பற்களும் மின்ன ஃபலூடாவை ஊட்டிவிட்டதும் “நல்லா இருக்கு” என்று சுவைத்தவளுக்கு இதயத்தில் ஒரு ஓரத்தில் புகைமுட்டமாக ஒருவனின் நினைவு.
“சே! எதுக்கு அவனை பத்தி யோசிக்குற? இன்னும் ஒரு ஹியரிங்குல நீங்க பிரியப்போறிங்க… இன்னும் என்ன அவன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் உனக்கு?” மனசாட்சி வகைதொகையில்லாமல் கழுவி ஊற்றியதும் அந்நினைவைத் தொலைத்தாள்.
முபீனா ஃபலூடாவைச் சுவைத்தபடி பேசிக்கொண்டிருந்தாள்.
“எனக்கு இனியாவ தவிர ஃப்ரெண்ட்ஸ்னு யாருமே கிடையாதுக்கா… அவ ரொம்ப ஸ்வீட் அண்ட் போல்ட்… நாங்க ரெண்டு பேரும் பி,ஜிய பாளையங்கோட்டைல ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணி படிக்கலாம்னு ப்ளான் போட்டிருந்தோம்.. இந்த ஃபலூடா அவளோட ஃபேவரைட்…. ஒருதடவை மேத்ஸ்ல டவுட் கேக்க அவங்க வீட்டுக்குப் போனப்ப எனக்காக வாங்கிட்டு வந்ததா சொல்லி தந்தா… ஐஸ்க்ரீம் எல்லாம் மெல்ட் ஆகிடுச்சு.. ஆனா டேஸ்ட் என் மனசை விட்டுப் போகல, இனியாவோட ஃப்ரெண்ட்ஷிப் மாதிரியே…. அவளுக்கு அடுத்து நீங்க தான் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் அக்கா”
“அப்பிடியா?” இதன்யா கண்களை விரித்துக் கேட்கவும்
“ஆமா! அதனால தான் நான் உரிமையா உங்க கிட்ட அதை வாங்கி தாங்க இதை வாங்கி தாங்கனு கேக்குறேன்… நீங்களும் இனியா மாதிரியே ஸ்வீட் அண்ட் போல்ட்” என்றாள் அவள்.
இதன்யாவுக்குக் கள்ளம் கபடமின்றி படபடவென மனதிலுள்ளதை அவள் பேசுவதைக் கேட்பது மிகவும் பிடிக்கும். அந்தப் பேச்சு சுவாரசியத்தில் இரு முறை மலையில் இருந்து ஏறியிறங்குவதெல்லாம் ஒரு சுமையாகவே தெரியாது அவளுக்கு.
இருவரும் சாப்பிட்டதும் முபீனாவுக்கு சமோசா ஒன்றை வாங்கி கொடுத்தவள் மறக்காமல் முட்டை பஃப்களை வாங்கிக்கொண்டு வெளியேறினாள்.
பைக்கில் அமர்ந்த இருவரும் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் கட்டுமானப்பணி நடப்பதை பார்த்தபடி அதன் பக்கவாட்டில் பைக்கில் சென்றபோது தான் அவளைப் பார்க்க நேர்ந்தது.
அந்த அவள் ‘நவநீதம்’.
“நவனிக்கா மாதிரி இல்ல?” என்று முபீனா தான் முதலில் அவளைக் காட்டினாள் இதன்யாவிடம்.
உடனே இதன்யாவும் அவளைப் பார்த்துவிட்டாள். உடனே பைக்கை நிறுத்தினாள்.
ஆகாயநீலநிறத்தில் வெள்ளை நிறத்தில் பெரிய பூக்கள் போட்ட ஃபுல்வாயில் சேலையில் அவளது அக்மார்க் கொண்டையோடு விறுவிறுவென ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி நடந்து போனவள் நவநீதமே தான்.
“இவங்க இங்க என்ன பண்ணுறாங்க?” என்று முபீனா யோசித்தபோதே நவநீதம் ஏறிய ஆட்டோ ஸ்டார்ட் ஆனது.
இதன்யா பைக்கை உதைத்துக் கிளப்பியவள் “முபீ நான் இப்ப செய்யப்போற வேலைய யார் கிட்டவும் சொல்லக்கூடாது” என்று சத்தியம் வாங்கியபடி தங்களைக் கடந்து போன ஆட்டோவைத் தொடர ஆரம்பித்தாள்.
எதற்காக அவள் நவநீதத்தைப் பின்தொடருகிறாள் என்பது புரியாமல் நடப்பதைச் சுவாரசியமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் முபீனா.
நவநீதம் போன ஆட்டோ முருகன்குறிச்சியில் இரண்டாகப் பிரியும் சாலையில் ஒன்றான பாளை மார்க்கெட் நோக்கி செல்லும் சாலையில் பயணிக்க இதன்யாவும் அதைத் தொடர்ந்தாள்.
ஆட்டோ அப்படியே பயணித்து பாளையங்கோட்டையில் இருக்கும் கிறிஸ்தவ கான்வெண்ட் பள்ளி ஒன்றின் முன்னே நின்றது.
அங்கே இறங்கிய நவநீதம் பள்ளி நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த காவலாளியிடம் ஏதோ கூறவும் அவரும் அவளை உள்ளே அனுமதித்தார்.
இதன்யாவும் பைக்கை அங்கே நிறுத்தினாள்.
முபீனாவோடு சேர்ந்து அவரிடம் வந்து நின்றவள் “இப்ப ஒரு அம்மா உள்ள போனாங்களே, அவங்க யாரை பாக்க வந்திருக்காங்க?” என விசாரிக்க
“அதை நீங்க ஏன்மா கேக்குறிங்க?” என சந்தேகமாகப் பார்த்தார்.
இதன்யா பணியிடைநீக்கத்தில் இருப்பதால் தனது வேலையைக் காரணம் காட்டி எந்த அதிகாரத்தையும் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இப்போது வேறு வழியில்லையே!
தனது சட்டை பாக்கெட்டில் தூங்கிக்கொண்டிருந்த பணி அடையாள அட்டையை எடுத்து அவரிடம் காட்டினாள்.
“இதன்யா வாசுதேவன் ஃப்ரம் க்ரைம் ப்ராஞ்ச்”
இனி காவலாளி ஏன் சந்தேகப்படப்போகிறார்?
“அந்தம்மாவோட பொண்ணு இங்க தான் படிக்குது… அதை பாக்க வந்திருக்கு”
“பொண்ணா? அந்தம்மா மகளோட நேம் என்ன?”
“சோபியா… நல்லா படிக்குற பொண்ணு…. இந்த வருசம் டென்த் படிக்குது… மரியாதையான பொண்ணு அது”
காவலாளி இவ்வாறு சொன்னதும் இதன்யாவின் மோவாயும் தாடையும் இறுகின.
“நான் எப்பிடி அந்தப் பொண்ணை போய் பாக்குறது? அவ அப்பனைக் கட்டுனவளா இருந்தா உரிமையோட ஹாஸ்டல்ல போய் பார்ப்பேன்… அவ பாளையங்கோட்டைல சிஸ்டர்ஸ் கான்வெண்ட் ஸ்கூல்ல படிக்குறா… என்னை எல்லாம் அங்க உள்ள விடமாட்டாங்க” என்று சொன்னவள் இங்கே சோபியாவின் தாய் என பொய் சொல்லியிருக்கிறாள்.
சோபியாவைக் கலிங்கராஜன் படிக்க வைக்கிறாரா என கேட்டதற்கு இல்லை என்று சொல்லவந்து பின்னர் ஆம் என்றாள். அதுவாவது உண்மையா பொய்யா எனத் தெரிந்துகொள்ள காவலாளியிடமே சோபியா குறித்து விசாரித்தாள்.
“அந்தப் பொண்ணோட அப்பா இங்க வருவாரா?”
“இல்ல மேடம்… அந்தாளு கொலை பண்ணிட்டு பாளையங்கோட்டை ஜெயில்ல தண்டனை அனுபவிக்குறான்… இந்தம்மா தனிமனுசியா பிள்ளைய வளக்குது… படிப்புச்செலவு எல்லாம் அவங்க முதலாளி பாத்துக்குறாரு… அவரும் விசிட்டர் டே அன்னைக்கு இந்தப் பொண்ணுக்கு வேண்டியதுலாம் வாங்கிட்டு வந்து குடுப்பாரு… அப்பன் தான் சரியில்லாம போயிட்டான்”
முதலாளி என்றால் கலிங்கராஜனாகத் தான் இருக்கவேண்டும். சோபியாவின் படிப்புச்செலவை அவர் ஏற்றதில் இதன்யாவுக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. அவர் நினைத்தால் உதவியாளரிடம் சொல்லி சோபியாவுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுக்கலாமே! அவரே நேரில் வந்து பார்க்கிறார் என்றால் அது தான் கொஞ்சம் இடித்தது.
“அதோ அவங்க முதலாளியே வந்துட்டார்” என காவலாளி சொல்லும்போதே கலிங்கராஜனின் கார் பள்ளியின் முன்னே நின்றது. காரின் முன்பக்க கதவைத் திறந்துகொண்டு இறங்கினார் கலிங்கராஜன்.
பள்ளி வாயிலில் நின்று கொண்டிருந்த இதன்யாவைப் பார்த்ததும் மனிதரின் முகமெங்கும் வியர்வை முத்துகள்! இதன்யாவுக்கு அவரது உடல்மொழியே சந்தேகத்தைக் கிளப்பியது.
ஐயத்தை மறைத்தபடி “ஹலோ கலிங்கராஜன் சார்! ஹவ் ஆர் யூ? நீங்க இங்க என்ன பண்ணுறிங்க?” என ஆச்சரியமாகக் கேட்பது போல நடித்தாள் இதன்யா.

கலிங்கராஜன் தனது பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் சமாளித்தவர் “ஜானோட மக இங்க தான் படிக்குறா… அவளைப் பாத்துட்டுப் போகலாம்னு..” என்று இழுத்தடித்து முடித்தார்.
உடனே இதன்யாவின் முகத்தில் மெச்சுதல் பாவனை!
“உங்க ஸ்டாஃபோட பொண்ணுக்காக நீங்களே நேர்ல வர்றிங்க பாருங்க.. யூ ஆர் ரியலி க்ரேட் சார்” என்று அவரது பெரிய மனதைப் பாராட்டினாள்.
“தே…தேங்க்ஸ் மேடம்”
ஏன் இவரது குரலில் இவ்வளவு பதற்றம்? தன்னிடம் பேசும்போது இவரது கண்கள் ஏன் அக்கம் பக்கமெங்கும் துலாவுகிறது?
இதன்யாவின் கழுகுப்பார்வையிலிருந்து கலிங்கராஜனின் எந்த செய்கையும் தப்பிக்கவில்லை. அவரோ திருடனுக்குத் தேள் கொட்டியது போலல்லவா விழித்தார்.
“ஆர் யூ ஆல்ரைட்?” என்று அவள் வினவியதும் அவரது உடல்மொழியில் சிறுமாற்றம்.
“ஐ அம் ஆல்ரைட் மேடம்… ஏன் திடீர்னு கேக்குறிங்க? நீங்க இங்க என்ன பண்ணுறிங்க?” என அவளிடமே கேள்வி கேட்டார் கலிங்கராஜன்.
காவலாளி எதுவோ சொல்லப்போக அவரைப் பார்வையால் அடக்கியவள் “முபீயோட ஃப்ரெண்ட் பார்ட் டைமா இந்த ஸ்கூல் ஆபிஸ்ல வேலை பாக்குறா… இவளுக்கு இன்னைக்குக் கம்ப்யூட்டர் க்ளாஸ் கிடையாது… அதான் அந்தப் பொண்ணை பாத்துட்டுப் போகலாம்னு வந்தோம்… ஜெனி, மிச்செல், நித்திலன் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என சமாளித்தாள்.
குழந்தைகள் மீது மெய்யாகவே அவளுக்கு அக்கறை உண்டு. அது கலிங்கராஜனுக்கும் தெரியும். ஆனால் இதன்யாவிடம் பேசினால் அந்த மர்ம ஆசாமி இரகசியத்தைக் காவல்துறையிடம் கூறிவிடுவானே!
எனவே அவளிடமிருந்து கழண்டு கொள்வதிலேயே குறியாய் இருந்தார் மனிதர். இதன்யாவும் அதைப் புரிந்துகொண்டு விலகவும் பள்ளிக்குள் சென்றுவிட்டார் அவர்.
அவர் போனதும் சில நிமிடங்களில் தலையில் முக்காடு போட்டபடி ஓடி வந்தாள் நவநீதம். வந்த அவசரத்தில் இதன்யாவை இடித்தவள் “சாரிம்மா” என்று திரும்பியபோது அவளைத் தீயாய் முறைத்தாள் இதன்யா.
நவநீதத்தின் கருவிழிகள் தெறித்துக் கீழே விழுந்துவிடுமோ என்று ஐயங்கொள்ளுமளவுக்கு அகன்று விரிந்தன அவளது கண்கள்.
இதன்யா நக்கலாகச் சிரித்தவள் “சோபியாவ பாக்க உனக்கு பெர்மிசன் கிடைக்காது… ஹான்” என்றதும் மாட்டிக்கொண்டோமே என்று பதற ஆரம்பித்தாள் அவள்.
“அதில்லங்க மேடம்… கல்யாணம் ஆகாம அந்தாளு மகளை நான்….” என என்னவோ உளறத் துவங்கியவளை அமைதியாகும்படி பணித்தாள் இதன்யா.
“எனக்கு உன் நிலமை புரியுது நவநீதம்… நம்ம சமுதாயம் உன்னையும் ஜானையும் தப்பா பேசும்னு தெரிஞ்சு தான் நீ பொய் சொல்லிருக்க… பரவால்ல, நீ கிளம்பு” என்றாள் அவள்.
நவநீதத்தால் அவளது பேச்சை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இங்கேயே நின்றால் இவள் தன்னை சந்தேகப்பட்டு கேள்வி கேட்டுக் குடைவாளே என்ற பயத்தில் “சரி மேடம்,.. போயிட்டு வர்றேன்” என்று வேகமாக அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக இடத்தைக் காலி செய்தாள்.
இதன்யாவுக்கு அவள் மீது அழுத்தமாகச் சந்தேகம் உண்டாகிவிட்டது. இவளுக்கும் சோபியாவுக்குமிடையே எதுவோ நடக்கிறது. அதைக் கண்டறியவேண்டுமென தீர்மானித்தவளாக முபீனாவை அழைத்துக்கொண்டு கிளம்பியவள் கலிங்கராஜனையும் தனது சந்தேகப்பட்டியலில் சேர்த்துக்கொண்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

