சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் ஆக்ரோசத்தையும் முரட்டுத்தனத்தையும் கையாளுவதற்கு தேவையான ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ அளிக்கப்படுகிறது,. என்ன தான் மருந்துகள் அளிக்கப்பட்டாலும் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபியே முதன்மையானது. சைக்கோபதி என்பது குழைந்தைகளின் மென்மையையும் பச்சாதாபத்தையும் இல்லாமல் செய்துவிடும். இதனால் அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இது அவர்களைச் சுற்றியுள்ள மற்ற குழந்தைகளுக்குப் பாதிப்பை உண்டாக்கும்.
-From the therapyroute.com
காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன்யாவோடு சேர்த்து சிறப்பு விசாரணை குழுவிலிருந்த மற்ற மூவரும் இனியாவின் வழக்கு பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தனர்.
“இந்தக் கேஸ்ல சஸ்பெக்டா இருந்த ரோஷண் லாக்கப்ல சூசைட் பண்ணுறதுக்கு முன்னாடி அவருக்கு லை டிடெக்டிங் டெஸ்ட் எடுத்தாங்க… அதுல அவர் இனியாவ கொலை பண்ணலனு சொன்னார்… லை டிடெக்டிங் டெஸ்டுல குளறுபடி எதுவும் நடந்துச்சா சார்?”
அச்சமயத்தில் இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த மார்த்தாண்டன் மற்றும் மகேந்திரனிடம் இக்கேள்வி கேட்கப்பட்டது.
மார்த்தாண்டன் ஏற்கெனவே தடயவியல் அறிவியல் துறை வல்லுனர்களிடம் இது குறித்து கேட்டிருந்த விளக்கத்தை பத்திரிக்கையாளர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“லை டிடெக்டிங் டெஸ்ட்னு சொல்லப்படுற பாலிகிராஃபி டெஸ்டோட ரிசல்ட்ஸ் நூறு சதவிகிதம் சரியா இருக்கும்னு சொல்ல முடியாது… இது ஃபாரன்சிக் சயின்ஸ் எக்ஸ்பர்ட்டோட ஒபீனியன்… ரோஷணுக்கு நடந்த டெஸ்டுல கிடைச்ச ரிசல்ட்ல எண்பதுல இருந்து தொண்ணூறு சதவிகிதம் உண்மைகளைத் தெரிஞ்சிக்கிட்டோம்… மிச்சமீதி சம்பவங்கள் பொய்யா இருக்கலாம்… பொய்ங்கிறதுக்கு ப்ரூஃப் தான் ஆசிட் பாட்டில்ல இருந்த அவனோட ஃபிங்கர் பிரிண்ட்ஸ்”
“விக்டிமோட சித்தி கிட்ட முன்னாடியே விசாரிச்சிருந்தா இந்தக் கேஸ் இவ்ளோ நாள் இழுத்தடிச்சிருக்காதுல்ல சார்… ஏன் போலீஸ் டிப்பார்ட்மெண்டும் உங்க என்கொயரி டீமும் அவங்களை சரிவர விசாரிக்கல?”
இது நால்வருக்குமான கேள்வி.
இதற்கு பதிலளிக்க முன்வந்தார் முரளிதரன்,.
“அவங்க எங்களோட ப்ரைமரி சஸ்பெக்டா இருந்தாங்க… எல்லா நேரத்துலயும் சஸ்பெக்டை டேரக்டா விசாரிச்சு தான் உண்மைய வரவழைக்கணும்னு அவசியமில்ல… சுத்தியுள்ளவங்களை விசாரிக்கிறப்ப தப்பு செஞ்ச சஸ்பெக்ட் பதற்றத்துல ஏதாச்சும் செஞ்சு அவங்களே வந்து மாட்டுவாங்க… எங்களோட விசாரணை முறைல இதுவும் ஒன்னு”
அடுத்தக் கேள்வி இதன்யாவுக்கானது.
“கேஸை சீக்கிரம் முடிக்கணும்னு நீங்க தொழிலதிபர் ஏகலைவன் சக்கரவர்த்திய இந்தக் கேஸ்ல இழுத்துவிட்டதா பேசிக்கிறாங்களே… அது உண்மையா மேடம்?”
“நீங்க ஏகலைவனோட போட்டி நிறுவனங்கள் கிட்ட பணம் வாங்குனது உண்மையா? சமீபத்துல நீங்க உங்க கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததா சொல்லப்படுது… பணக்கார வாழ்க்கைக்காக இப்பிடி செஞ்சிங்களா?”
முகம் மாறாமல் இருக்க வெகு கஷ்டப்பட்டுப் போனாள் அவள். மற்ற மூவருக்கும் சங்கடமான சூழல் இது. அவளுடன் பணியாற்றியவர்களுக்கு இதன்யா எப்படிப்பட்டவள் என்று ஓரளவுக்குத் தெரியும். அவள் இத்தகைய இழிசெயலை கனவிலும் கூட செய்ய நினைக்கமாட்டாள். ஆனால் பத்திரிக்கையாளர்களுக்கு அதை யார் விளக்குவது?
இதன்யா தொண்டையைச் செருமிக்கொண்டாள்.
“என் பெர்ஷனல் லைஃப் பத்தி கேட்ட எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்லப்போறதில்ல… பட் என் அக்கவுண்டுக்கு சில கம்பெனிகளோட கரெண்ட் அக்கவுண்ட்ல இருந்து பணம் வந்தது உண்மை… அதுவும் கோடிக்கணக்குல… ஆனா நான் அந்தப் பணத்தை லஞ்சமா வாங்கல… அது டெக்னிக்கல் எரரால நடந்த ஃபால்ட் ட்ரான்சாக்சன்… இது சம்பந்தமா நான் பேங்க் மேனேஜர் கிட்ட பேசுனேன்… அந்த ஆடியோ ஆதாரம் என் கிட்ட இருக்கு… பை த வே, மிஸ்டர் ஏகலைவன் மேல எனக்கு எந்த பெர்ஷனல் வெஞ்சன்சும் இல்ல… இனியா மர்டர் கேஸ் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆதாரத்தை அவர் அழிச்சதால கோர்ட் முன்வந்து அவரைச் சஸ்பெக்ட் லிஸ்டுல ப்ரைமரி சஸ்பெக்டா ஆட் பண்ணி விசாரிக்கச் சொன்னதால மட்டும் தான் நான் விசாரிச்சேன்… ஆதாரத்தை அழிச்சதுக்கு அவர் சொன்ன காரணத்துல இப்ப வரைக்கும் எனக்கு உடன்பாடு இல்ல”
தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்தாள் இதன்யா.
இன்னும் சில பல கேள்விகளோடு பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிவுற்றது.
இதன்யாவோடு மற்ற மூவரும் காவல் ஆணையரின் அறைக்கு வந்தார்கள். வழக்கில் தீவிரமாகப் பணியாற்றி குற்றவாளியைக் கண்டுபிடித்ததற்கு அவர்களைப் பாராட்டிய காவல் ஆணையர் இதன்யாவிடம் துறைரீதியான விசாரணையை எப்படி அவள் எதிர்கொள்ளப்போகிறாள் என கேட்டார்.
“என்னால இந்தப் பிரச்சனைய மேனேஜ் பண்ணிக்க முடியும் சார்”
“உங்களை மாதிரி ட்யூட்டி கான்சியசான ஆபிசர்சுக்குத்தான் இந்த மாதிரி தடங்கல் வருது”
“இதுவும் கடந்து போயிடும் சார்”
அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தவர்களை உதவி ஆணையர் கமலேஷ் வழிமறித்து சில நிமிடங்கள் உரையாடிவிட்டு அனுப்பிவைத்தார்.
“இந்த சண்டே கண்டிப்பா நீ லஞ்சுக்கு வரணுமாம்… என் வீட்டம்மா ஆர்டர்” என்று சொல்ல இதன்யாவும் வருவதாக வாக்களித்தாள்.
துறைரீதியான விசாரணைக்காக அதிகாரிகள் பொன்மலைக்கே வருவதால் அதுவரை இதன்யா பொன்மலையை விட்டு வெளியேற முடியாது.
சென்னைக்கு வந்ததும் விசாரணையை வைத்துக்கொள்ளலாமா என வினவியவளுக்கு மறுப்பே பதிலாக வந்தது மேலிடத்திலிருந்து.
விசாரணை அதிகாரிகள் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அதுவரை குவார்ட்டர்சிலிருக்கும் தனது ஃப்ளாட்டில் வெட்டியாக நேரத்தைக் கழிக்கவேண்டுமே என எரிச்சல்பட்டாள் இதன்யா. தன் மீது தவறில்லை என்று நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தை விட இந்த வெட்டிப்பொழுது ஒன்றும் கொடுமையானதில்லை எனத் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு குவார்ட்டர்சுக்குக் கிளம்பினாள்.
ஃப்ளாட்டின் பால்கனியில் நின்றபடி தன் முன்னே தெரிந்த பொன்மலை கிராமத்தைக் கண்ணிமைக்காமல் பார்க்க ஆரம்பித்தாள். நேரம் போகவேண்டுமே! பொன்மலை வெளிப்பார்வைக்கு அமைதியான அழகான மலைக்கிராமமாகத் தெரிந்தாலும் இந்த ஊருக்குள் தான் எத்தனை ரகசியங்கள் புதைந்திருந்தன! கிராமத்தினர் என்றாலே வெள்ளந்தி மனிதர்கள் என தமிழ் சினிமா நம் தலையில் புகுத்தியிருந்த ‘ஸ்டீரியோடைப்பிங் இமேஜை’ உடைத்து வக்கிர மனங்கள் கிராமத்திலும் உண்டு என புரிய வைத்த ஊராயிற்றே இது!
ஃப்ளாட்டில் நின்று பார்த்தபோதே பெரிய விருட்சங்கள் குடையாய் நிற்க தனித்துத் தெரிந்தது சாந்திவனம். அதைப் பார்த்ததும் மிச்செல்லின் நினைவு வந்தது.
பாவம் அந்தச் சிறுபெண்! கொலைகாரியின் மகள் என்ற பட்டத்தோடு இனி சமுதாயம் விதவிதமான சோதனைகளை அவளுக்குப் பரிசளிக்கும். அதைவிட பரிதாபத்திற்குரியவர் கலிங்கராஜன்.
மகளை இழந்து மனைவியின் துரோகத்தால் மனம் நொந்து போயிருப்பார்.
ஏன் இப்போது அவர்களைப் பற்றி யோசிக்கவேண்டும்? மார்த்தாண்டனிடம் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காதீர்கள் என பக்கம் பக்கமாக வசனம் பேசியவளின் மனம் ஏனோ மிச்செல்லின் நிலையை எண்ணி வருந்தியது.
பெண் குழந்தைகளுக்குக் கல்வியைப் போல மனோதிடமும் அவசியம். அவர்கள் குழந்தைப்பருவத்தில் படிக்கும் ‘ஃபேரிடேல்களில்’ வரும் அழகான ‘ஃபேண்டசி உலகம்’ அல்ல நாம் வாழும் இவ்வுலகம். அங்கே இளவரசியின் கரம் பற்றவும் அவளைத் தீமைகளிலிருந்து காக்கவும் இளவரசன் ஒருவன் இருப்பான். ஆனால் நிஜவுலகிலோ அப்படிப்பட்ட இளவரசர்களை விட அசுரர்களும், ராட்சசர்களுமான ஆண்கள் தானே அதிகம். அவர்களை எதிர்கொள்வதற்கான மனோதிடத்தை ஒரு பெண் குழந்தைக்கு அவளது அன்னையை விட வேறு யாரால் போதித்துவிடமுடியும்!
அந்தப் பெண்ணுக்கோ அன்னை இல்லை. இருந்திருந்தாலும் நெறி தவறி யோசிப்பவள் எங்ஙனம் தன் பெண்ணுக்கு நல்ல அன்னையாக இருப்பாள்?
கொஞ்சம் அதிகமாகத் தான் இதன்யாவின் மனம் மிச்செல்லைப் பற்றி யோசித்தது.
எனவே அன்று மாலையே சாந்திவனத்துக்குப் போனவள் தன்னைக் கண்டதும் பதுங்கிக்கொண்ட நவநீதம், எச்சில் விழுங்கிய குமாரியை விடுத்து சுரத்தின்றி நடமாடிய குழந்தைகளைத் தன்னிடம் அழைத்தாள்.
இதன்யாவைக் கண்டதும் மிச்செல்லின் முகத்தின் சினேகப்புன்னகை.
கலிங்கராஜன் வீட்டில் இல்லை போல.
குழந்தைகளுடன் தோட்டத்துக்கு வந்தவளுக்குச் சலாம் போட்டுவிட்டு நகர்ந்தார் தோட்டப்பராமரிப்பு ஊழியரான கோபால்.
மிச்செல், ஜென்னி, நித்திலன் மூவரில் மிச்செல் மட்டும் கொஞ்சம் தைரியமாகக் காணப்பட்டாள். மற்ற இரு குழந்தைகளின் கண்களிலும் அன்னையைக் காணாத தேடல் அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஹவ் ஆர் யூ மிச்செல்? ஆர் யூ ஆல்ரைட்?” இதமாக விசாரித்தாள் இதன்யா.
ஒளிக்கீற்றாய் பற்கள் தெரிய ஜீவனின்றி புன்னகைத்தாள் அச்சிறுபெண்.
“ஐ’ம் லேர்னிங் டு லிவ் வித்தவுட் மை மாம்” என்றாள் துளி நம்பிக்கையோடு.
இதன்யா ஆறுதலாய் அவளது சிகையைக் கோதிவிட்டாள்.
“யூ ஹேவ் டூ… உன்னை நம்பி ரெண்டு பேர் இருக்காங்க… இவங்களுக்கு நீ தான் அக்கா, அம்மா, வழிகாட்டி எல்லாமே… புரியுதா?”
“ம்ம்” என்றவள் “தேங்க்யூ மேம்” என்றாள் தொண்டை கட்ட.
“எதுக்கு?” என்றவளை இடையோடு அணைத்துக்கொண்டு விசித்து அழத் துவங்கினாள்.
என்னவாயிற்று இவளுக்கு என இதன்யா அதிரும்போதே கலிங்கராஜனின் கார் சாந்திவனத்துக்குள் பிரவேசித்து தரிப்பிடத்தில் போய் நின்றது.
தந்தை வருகிறார் என்றதும் வேகமாகக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள் மிச்செல்.
ஆனால் கலிங்கராஜனோ இதன்யாவோடு நின்று கொண்டிருந்த குழந்தைகளை நிதானமாகப் பார்த்துவிட்டு “மேடம் கிட்ட பேசுறிங்களா? பேசிட்டு வாங்க… அவசரமில்ல” என்று சொன்னதோடு வீட்டுக்குள் போய்விட்டார்.
அவர் போனதும் ஏன் அழுதாய் என மிச்செல்லிடம் விசாரித்தாள் இதன்யா.
கண்கள் எங்கும் ஆதங்கத்தோடு “இப்ப வரைக்கும் நாங்க என்ன மாதிரி ஃபீல் பண்ணுறோம்னு யாருமே கேக்கல மேடம்… அப்பா ஆபிசுக்குப் போனாங்கனா நைட் தான் வருவாங்க… அக்கா இல்ல, இப்ப அம்மாவும் இல்ல… வீ ஃபீல் லோன்லி” என்றாள்.
பெற்றவள் சிறையில்! அவள் இங்கே அரசியாய் கோலோச்சியபோது தாதிப்பெண் போல கூடவே இருந்த குமாரி எப்படி குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டார்?
எதையோ தீர்மானித்தவளாக இதன்யா அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். ஹால் சோஃபாவில் சோகமே உருவாகச் சாய்ந்திருந்த கலிங்கராஜன் இதன்யாவைக் கண்டதும் நேராக அமர்ந்தார்.
“எனக்குக் கேஸ் சம்பந்தப்பட்ட ஆளுங்க கிட்ட எமோஷனலா இன்வால்வ் ஆகுறதுல அவ்ளோவோ உடன்பாடு கிடையாது சார்… பட் நான் இது வரைக்கும் ஹேண்டில் பண்ணுன கேஸ் எல்லாம் பெரியவங்க சம்பந்தப்பட்டது… ஃபர்ஸ்ட் டைம் குழந்தைங்களும் ஃபேமிலியும் இன்வால்வ் ஆனது இந்தக் கேஸ்ல தான்… உங்க குழந்தைங்களோட வெல்விசரா ஒன்னு சொல்லுறேன்… தே ஆர் லாங்கிங் ஃபார் மதர்லி லவ்… உங்களைத் தவிர வேற யாராலையும் அதைக் குடுக்க முடியாது… நீங்க குழந்தைங்களை இக்னோர் பண்ணுனிங்கனா அது அவங்களுக்குள்ள சைக்கலாஜிக்கலா பாதிப்பை உண்டாக்கும்… புரிஞ்சு நடந்துக்கோங்க”
சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொன்னவள் “உன் கிட்ட என் நம்பர் இருக்குல்ல மிச்செல்.. என்ன உதவி வேணும்னாலும் நீ தயங்காம எனக்குக் கால் பண்ணலாம்… இது மார்த்தாண்டன் சாரோட நம்பர்… நான் இன்னும் டூ டேய்ஸ்ல இங்க இருந்து சென்னைக்குப் போயிடுவேன்… சப்போஸ் நான் உனக்கு உதவி பண்ணுற சூழ்நிலைல இல்லனா நீ தாராளமா மார்த்தாண்டனை காண்டாக்ட் பண்ணலாம்… இப்ப நான் கிளம்புறேன்… டேக் கேர் ஆப் யூ அண்ட் யுவர் சிப்ளிங்ஸ்” என்று மூவரின் சிகையையும் ஆதுரமாகக் கோதி கொடுத்துவிட்டுக் கிளம்பினாள் இதன்யா.
இரண்டு நாட்கள் கழித்து விசாரணை செய்ய அதிகாரிகள் வந்தார்கள். வந்தவர்கள் சென்னையிலிருந்து கிளம்பியபோதே இதன்யாவை சஸ்பெண்ட் செய்யவேண்டுமென வன்மம் வைத்துக்கொண்டு வந்ததைப் போலவே விசாரணையின்போது நடந்து கொண்டார்கள்.
அவள் சொன்ன விளக்கங்களையும், மேலாளரிடம் பேசிய ஆதாரங்களையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
“ஜி.எஸ் குரூப் ஆப் கம்பெனிஸ்ல இருந்து உங்க அக்கவுண்டுக்கு பதினஞ்சு கோடி வந்திருக்கு… அடுத்து இந்த பத்து கோடி… இப்பிடி லிஸ்ட் போட்டா உங்க கணக்குக்கு வந்த பணம் மட்டுமே கிட்டத்தட்ட முப்பது கோடி… டெக்னிக்கல் எரர்னு இதை அலட்சியப்படுத்த முடியாது” எனக் கறாராகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.
அவர்கள் கிளம்பியதுமே இதன்யாவுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.
விசாரணைக்குழுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அலுவலக அறை மீண்டும் சாதாரண அறையாக மாறியிருந்தது பொன்மலை காவல் நிலையத்தில். அங்கே நின்று கொண்டிருந்தவளுக்கு ஆறுதல் கூறினார் முரளிதரன்.
“இதுக்குலாம் பின்னாடி ஏகலைவனோட தலையீடு இருக்குமோனு சந்தேகமா இருக்கு இதன்யா மேடம்”
இதன்யா பளீரெனப் புன்னகைத்தாள்.
“சந்தேகமே வேண்டாம்… அந்தாளோட தலையீடு தான் இவங்களை ஆட்டி வைக்குது”
“அவர் விவகாரத்துல நீங்க கொஞ்சம் பொறுமையா செயல்பட்டிருக்கலாம் மேடம்… அவங்க அரசாங்கத்தையே ஆட்டி வைக்குற அதிகார வர்க்கம்… அவங்க நினைச்சா நம்மளை பொம்மலாட்ட பொம்மை போல ஆட்டிவச்சு வேடிக்கை பாக்க முடியும்” என்றார் முரளிதரன் மனத்தாங்கலோடு.
“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்… பட் இப்பவும் எனக்கு அந்த ஆள் மேல வந்த உறுத்தல் மறையல… ஹீ இஸ் ஹைடிங் சம்திங்… சட்டத்துக்கும் நமக்கும் தேவை ஆதாரம் தானே தவிர ஊகங்களும் அனுமானங்களும் இல்லையே! கிடைச்ச ஆதாரம் எல்லாம் ரோஷணுக்கும் கிளாராவுக்கும் எதிரா இருந்துச்சு… அவங்க மாட்டிக்கிட்டாங்க… ஏகலைவனுக்கு எதிரா இருந்தா ஒரே ஆதாரம் ‘ஈ.டி.எஸ்’ ஐடி… அதை டெக்னிக்கலா ஒன்னுமே இல்லாம ஆக்கிட்டான் அந்தாளு… ரொம்ப திறமையா தன்னோட பணபலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி இந்தக் கேஸ்ல இருந்து தப்பிச்சதோட அவனைப் பத்தி ஸ்மெல் பண்ணுன என்னை சாமர்த்தியமா செய்யாத தப்புல மாட்டிவிட்டான் பாருங்க… அவனை நான் குறைச்சு எடை போட்டுட்டேன்… எனி ஹவ், இதுக்கு மேல யோசிச்சு என்ன ஆகப்போகுது? மிஞ்சி மிஞ்சி போனா சஸ்பென்சன் ஆர்டர் வரும்.. நான் சென்னைக்குப் போய் பேங்க் மேனேஜரை மீட் பண்ணி பணப்பரிவர்த்தனை பத்தி பேசி ஒரு முடிவுக்கு வரணும்… என் மேல தப்பில்லனு ப்ரூவ் பண்ணிடுவேன் முரளி சார்” என்றவள் அவரிடம் சினேகமாகக் கை நீட்டினாள்.
அவரும் கை கொடுக்கவே “உங்களை மாதிரி டெடிகேட்டட் ஆபிசர் கூட ஒர்க் பண்ணுனதுல எனக்கு ரொம்ப சந்தோசம்” என்று சொல்லிவிடைபெற்றாள் அவரிடமிருந்து.
அந்த அறையிலிருந்து வெளியே வந்தவள் மார்த்தாண்டன் மற்றும் மகேந்திரனிடமும் விடைபெற்றாள், ஒரு வேண்டுகோளோடு.
“மிச்செலுக்கு எதுவும் பிரச்சனைனா உங்களைக் காண்டாக்ட் பண்ணச் சொல்லிருக்கேன் மார்த்தாண்டன்”
“நான் பாத்துக்குறேன் மேடம்” என அவரும் உறுதியளித்தார்.
பொன்மலை காவல்நிலையத்திலிருந்து கிளம்பியவளுக்கு எதிர்பார்த்தபடியே பணியிடைநீக்க ஆணை வந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை.
பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு தனது பைக்கிலேயே பொன்மலையிலிருந்து ஜாகையைக் கிளப்பிக்கொண்டு சென்றாள் இதன்யா. திருநெல்வேலியிலிருந்து அவளது பைக்கை பேருந்தில் அனுப்பிவைக்க எப்போதோ அங்கே போய்விட்டார் மார்த்தாண்டன். பைக்கை அனுப்பிய கையோடு தூத்துக்குடி விமானநிலையத்திலிருந்து சென்னைக்கு விமானப்பயணம். இதுதான் அவளது பயணத்திட்டம்.
பொன்மலையிலிருந்து வளைந்து கீழிறங்கி செல்லும் சாலையில் காற்றைக் கிழித்துக்கொண்டு பைக் விரைந்தது.
அவளது பைக் எப்போதுமே இதன்யாவின் பேச்சைக் கேட்கும் பிள்ளை. இலாவகமாகக் கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தவளுக்குச் சோதனையாக எமன் லாரி ரூபத்தில் வந்து சேர்ந்தான்.
கட்டுப்பாடின்றி வந்த லாரி இதன்யா சுதாரிக்கும் முன்னர் அவளது பைக்கில் அரக்கத்தனமான வேகத்துடன் மோத பைக்கோடு சாலையோரச் சரிவில் தூக்கி வீசப்பட்டாள் இதன்யா.
தலைக்குள் பெரும் வேதனை மையம் கொள்ள கண்களுக்குள் திடுமென சிவப்பாய் கருப்பாய் நீலமாய் வட்டங்கள் தெரிய மெதுமெதுவாக நினைவிழக்கத் துவங்கினாள் அவள்.
தாறுமாறாக ஓடிய லாரியோ இப்போது நின்றது. இதன்யா பைக்கோடு உருண்டு கிடந்ததைப் பார்த்துவிட்டு நிதானமாக மலை மேல் ஏறிப்போய்விட்டது அந்த லாரி.
இதெல்லாம் நடந்த சில நிமிட இடைவெளிக்குப் பிறகு அந்தச் சாலையில் வந்தது ஒரு கார். சாலையில் இதன்யாவின் உடைமைகள் தூக்கிவீசப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டுக் காரிலிருந்து இறங்கினார் ஒரு மனிதர், அவர் ரசூல் பாய்.
“யா அல்லாஹ்! என்ன நடந்திருக்கு இங்க?” என பதறிப்போய் கண்களை அலைபாயவிட்டவர் சரிவிலிருந்த சிறு பாறையில் முட்டிக்கொண்டு கிடந்த இதன்யாவைப் பார்த்துவிட்டார்.
“மேடம்” என உரக்க அழைத்தவர் ஏதோ விபரீதம் என உணர்ந்து ஆம்புலன்சுக்கு அழைக்க ஆரம்பித்தார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

