பெண் சைக்கோபாத்களுக்குத் தங்கள்மீது எந்த நல்லெண்ணமும் இருக்காது. அதற்காக அவர்கள் வருத்தப்படவும் மாட்டார்கள். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தாலும் அதற்கான நன்றிக்கடனை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் விரும்பிய அனைத்தையும் அடைந்தே தீரவேண்டுமென்ற வெறியோடு செயல்படுவார்கள். அவர்களை வாழ்க்கை ஏமாற்றிவிட்டதாகக் கருதுவார்கள் இந்தப் பெண் சைக்கோபாத்கள். இத்தனைக்கும் அவர்கள் ஆசைப்படும் அனைத்துமே எளிதில் கிட்டாதவை, நடக்கக்கூடாதவையாகவே இருக்கும். அவர்களை யாராலும் திருப்திப்படுத்தவே முடியாது. இம்மாதிரி பெண் சைக்கோபாத் ஒருவர் உங்களிடம் ஏதோ ஒரு ரகசியம் அல்லது புறணியைச் சொல்கிறார் என்றால் கவனமாக இருங்கள். ஏனெனில் இதே போல தான் உங்களது இரகசியங்களையும் உங்களைப் பற்றிய புறணிகளையும் பிறரிடம் கூறுவார்.
– An article from Psychology today
மறுநாள் காவல் நிலையத்துக்குக் கிளம்பிய இதன்யாவை மாவட்ட காவல்துறையின் சைபர் பிரிவிலிருந்து வந்த அழைப்பு அங்கே போகவிடாமல் தடுத்தது.
சைபர் பிரிவு அதிகாரி சொன்ன தகவல் அத்தகையது.
“உடனே வர்றேன் சார்… நோ இஸ்யூஸ்” என்றவள் உடனடியாக முரளிதரனின் மொபைலுக்கு அழைத்தாள்.
அவரும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நம்ம ரெண்டு பேரும் உடனே திருநெல்வேலிக்குக் கிளம்பணும்… சைபர் போலீஸ் ஸ்டேசன்ல இருந்து நேத்து குடுத்த லேப்டாப் மொபைல் பத்தி டெக்னிக்கல் இன்ஸ்பெக்டர் கால் பண்ணி சில டீடெய்ல்ஸ் சொன்னார்… இந்தக் கேஸ் இனியா மர்டரோட கனெக்ட் ஆகுறதுக்கான முடிச்சு ரோஷண் டெத்னு நம்ம நினைச்சது தப்புனு அங்க போனா புரியும்”
தமிழ்நாட்டில் 2019ல் இருந்து சைபர் காவல் நிலையங்களும், சைபர் லேப்களும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் குற்றங்கள் பற்றிய புகார்களும், ஆன்லைன் மோசடி பற்றிய புகார்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் வரும். இதர குற்றவியல் வழக்குகளுக்குத் தேவையான சைபர் உதவிகளையும் இவர்கள் செய்வார்கள்.
முரளிதரனும் கிளம்பி வர இருவரும் பொன்மலை காவல் நிலையத்திலுள்ள காவல் வாகனம் மூலமாகவே அங்கிருந்து சைபர் காவல் நிலையத்துக்குக் கிளம்பினார்கள்.
அங்கே டெக்னிக்கல் உதவி ஆய்வாளர் அவர்களிடம் சொன்ன விவரங்கள் இருவரையும் திகைப்பில் ஆழ்த்தின. அதே டெக்னிக்கல் உதவி ஆணையரிடம் தான் இனியாவின் மொபைலும், மடிக்கணினியும் சோதனைக்காக கொடுக்கப்பட்டன. அவர் தான் இனியாவுக்கு ஈ.டி.எஸ் என்ற ஐடியிலிருந்து சாட்கள் வந்த விவரத்தைக் கூறியவர். நிஷாந்தின் அழிக்கப்பட்ட சேட்களையும் மீட்டுக்கொடுத்தவர்.
இப்போது அவர் அழைத்ததும் ‘ஈ.டி.எஸ்’ என்ற அடையாளங்காண முடியாத நபரின் முகநூல் கணக்கு பற்றி பேசுவதற்காக தான். முத்துவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மடிக்கணினியிலுள்ள டார்க்வெப் இணைய உலவியின் மூலம் தான் ‘ஈ.டி.எஸ்’ என்ற முகப்புத்தக ஐடி இனியாவோடு பேசியிருக்கிறது. அதோடு அவன் வீட்டில் கிடைத்த மொபைலில் தான் அந்த ஐ.டி உருவாக்கப்பட்டிருக்கிறது.
“இனியாவோட மொபைல் அண்ட் லேப்டாப்பை வச்சு இந்த டீடெய்ல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ண முடியல… பட் சம்பந்தப்பட்டவங்களோட மொபைலையும் லேப்டாப்பையும் சைபர் லேபுக்கு அனுப்பி டெஸ்ட் பண்ணுனதுல இந்த மொபைல்ல டார்க்வெப் ப்ரவுசர் மூலமா கிரியேட் பண்ணப்பட்ட ஐ.டி தான் ‘ஈ.டி.எஸ்’… மொபைல்ல சில நாட்கள் மட்டும் யூஸ் பண்ணிட்டு விட்டுட்டாங்க… அதுக்கு அப்புறம் இருந்து இந்த லேப்டாப்ல உள்ள டார்க்வெப் ப்ரவுசரை வச்சு இந்த ஐடியை யூஸ் பண்ணிருக்காங்க… டார்க்வெப்ல யூஸ் பண்ணுனதால இந்த ஐ.டியை நம்மளால சரிவர ட்ராக் பண்ண முடியல” என்றார் டெக்னிக்கல் உதவி ஆய்வாளர்.
கூடவே மொபைலில் சிம் கார்ட் இல்லாவிட்டாலும் இறுதியாக எந்தப் பகுதியில் அந்த மொபைலுக்குச் சிக்னல் கிடைத்ததென அறிய ஐ.எம்.ஈ.ஐ எண்ணை வைத்து சோதனை செய்து கொண்டிருப்பதாகக் கூறினார் அவர். அதோடு மடிக்கணினியின் சீரியல் எண்ணை வைத்து அது எங்கே வாங்கப்பட்டது, யாருடைய மின்னஞ்சலை வைத்து பதிவு செய்யப்பட்டதெனத் தெரிந்துகொள்ளலாமென்றார்.
அவரிடம் நன்றி சொல்லிவிட்டு மடிக்கணினி மற்றும் மொபைலோடு அவர் கொடுத்த அறிக்கையையும் வாங்கிக்கொண்டு பொன்மலைக்குக் கிளம்பினர் இதன்யாவும் முரளிதரனும்.
இதன்யாவின் மூளையெங்கும் எண்ணற்ற கேள்விகள். காவல் நிலையத்தை அடைந்ததும் வேகமாக உள்ளே வந்தவள் மகேந்திரனையும் மார்த்தாண்டனையும் விசாரணைக்குழு அறைக்குள் அழைத்தாள்.
அவர்கள் வந்ததும் சைபர் காவல் நிலையத்தில் நடந்ததைச் சொல்லி அறிக்கையையோடு சேர்த்து முத்துவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மடிக்கணினி மற்றும் மொபைலை அங்கிருந்த மேஜை மீது வைத்தாள் இதன்யா.
“ஈ.டி.எஸ்ங்கிற பேருல முத்து தான் இனியா கிட்ட பேசிருக்கணும்னு தோணுது மேடம்” என்றார் மார்த்தாண்டன்.
“எனக்கும் அப்பிடி தான் தோணுது… லேப்டாப், மொபைல்ல இருந்த ஃபிங்கர் பிரிண்ட்ஸ் அப்பிடியே முத்துவோட ஃபிங்கர் பிரிண்ட்சோட ஒத்துப் போகுது மேடம்” என்றார் மகேந்திரன்.
முரளிதரன் எதுவும் பேசாமலிருக்கவும் அவரிடம் பார்வையைத் திருப்பினாள் இதன்யா.
அவர் அந்தப் பார்வையில் மௌனம் கலைந்தார்.
“முத்து டேரக்டா இனியாவோட கொலைல இன்வால்வ் ஆகிருப்பான்னு எனக்குத் தோணல மேடம்” என்றார் அவர்.
“ஏன் அப்பிடி சொல்லுறிங்க? அவன் சப்ஸ்டேன்ஸ் அப்யூஸால பாதிக்கப்பட்டிருப்பானோனு எனக்குச் சந்தேகம்… காதலிச்ச பொண்ணை வேற ஒருத்தன் கூட பாத்த கோவத்துல அவளை அவன் கொன்னுருக்க ஏகப்பட்ட சான்ஸ் இருக்கு முரளிதரன்”
இனியா தனது கோணத்தைக் கூறினாள்.
“தனக்குப் பிடிக்காதவங்களைப் போலீசோட சந்தேகவட்டத்துக்குள்ள கொண்டு வரணும்னு அவன் ரொம்ப பிரயத்தனப்பட்டிருக்கான்… அதனால அவன் இனியாவ கொன்னதுக்கான வாய்ப்பு அதிகம்னு தான் எனக்கும் தோணுது” இது மார்த்தாண்டனின் வாதம்.
“இனியா முருகையா ரெண்டு பேரும் இறந்து போன விதம் சிமிலரா இருக்குதே… அதை வச்சே முத்துவை நம்மளால குற்றவாளினு நிரூபிக்க முடியும்” என்றார் மகேந்திரன்.
இப்போதும் முரளிதரனின் முகத்தில் மறுப்பின் சாயல் தான்.
“இனியாவை தடயம் இல்லாம கொன்னவனால ஏன் முருகையாவோட மரணத்தைத் தடயமில்லாம ஆக்க முடியல? முத்து மூர்க்கன்… ஜான் முட்டாள்… அவங்க ரெண்டு பேருக்கும் இனியாவோட மரணத்துல பங்கு இருக்கலாம்… ஆனா அவங்க கொலைகாரங்க இல்ல… கொலைகாரன் ரொம்ப ஸ்மார்ட்… கொலைகாரன் எப்பிடிப்பட்டவனா இருக்கலாம்னு இதன்யா மேடம் ஒரு சார்ட்லிஸ்ட் வச்சிருந்தாங்க…. அதுல சில பாயிண்ட்ஸ் முத்துவுக்கு மேட்ச் ஆகலாம்… அதுக்காக அவனைக் கொலைகாரன்னு தீர்மானிச்சிட முடியாது… லேப்டாப் அண்ட் மொபைல் அவன் வீட்டுல இருந்ததால அவன் தான் ஓனர்னு சொல்ல முடியாதே… சைபர் போலீஸ் ஸ்டேசன்ல இருந்து அடுத்த ரிப்போர்ட் வர்ற வரைக்கும் நம்மளால எதையும் கன்ஃபார்மா சொல்ல முடியாது”
இதன்யா பல கோணங்களில் யோசித்து ‘மல்டி – டாஸ்கிங்கில்’ கில்லாடி என்றால், முரளிதரன் வழக்கின் போக்கையும், சந்தேகப்பட்டியலில் இருப்போரின் குணாதிசயத்தையும் ஒப்பிட்டுத் தர்க்கரீதியாக வழக்கைக் கையாளுவதில் வல்லவர்.
எனவே அவர் சொன்ன தர்க்கரீதியான காரணங்களும் குறித்துவைக்கப்பட்டன.
“இப்ப முத்து கிட்ட இதை பத்தி என்கொயரி பண்ணுனா அவனோட சாட்சியம் மாறும்னு தோணுதா முரளி சார்?” என இதன்யா கேட்க
“அவன் சொன்ன வாக்குமூலத்துல இருந்து பிறழுவான்னு தோணல… தாராளமா இதை பத்தி நம்ம விசாரிக்கலாம்.. ஆனா லேப்டாப் பத்தி அவன் உண்மைய சொல்லமாட்டான்… நான் உறுதியா சொல்லுவேன்” என்றார் அவர்.
“எப்பிடி சொல்லுறிங்க சார்?”
“இது கட்டாயம் அவனோடதா இல்லாத பட்சத்துல ஈ.டி.எஸ்ங்கிற மர்மநபருக்குத் தெரியாம அவன் வீட்டுக்கு வந்திருக்க வாய்ப்பில்ல… முத்துவுக்கு நல்லா தெரிஞ்ச நபரா அந்த ஈ.டி.எஸ் இருந்தா மட்டுமே இந்த மொபைலையும் லேப்டாப்பையும் அவன் வீட்டுல வைக்க முத்து சம்மதிச்சிருப்பான்… அவ்ளோ நெருங்குன ஒருத்தனா ஈ.டி.எஸ் இருந்தாலோ அல்லது முத்துவே அந்த ஈ.டி.எஸ்சா இருந்தாலோ அவன் எப்பிடி உண்மைய சொல்லுவான்? எப்பிடி பிடிக்காதவங்களை பழி தீர்க்கணும்னு அவன் நினைக்கானோ அதே போல பிடிச்சவங்களை விட்டுக்குடுக்கக் கூடாதுனும் நினைக்குறவன் அவன்… ஜானோட மக ஆபரேஷனுக்காக காரை விக்கவானு அவன் கேட்டது அதுக்கு ஆதாரம்.. இப்ப நீங்க ஒன்னு செய்யலாம்… அப்பிடி செஞ்சா அவனுக்கு ஈ.டி.எஸ்கு என்னாகுமோங்கிற கவலை வரும்… சப்போஸ் அவனே ஈ.டி.எஸ்சா இருந்தா ஒன்னுக்கு ரெண்டு கொலைக்கான தண்டனை கிடைக்குமோங்கிற பயம் வரும்… அதோட விளைவா அவனுக்கு நம்ம கிட்ட உண்மைய சொல்லுறதை தவிர வேற வழியிருக்காது”
அவர் சொன்ன உபாயப்படி முத்துவிடம் மடிக்கணினி மற்றும் மொபைல் குறித்த விசாரணையை ஆரம்பித்தாள் இதன்யா.
அனைத்தையும் சொல்லிவிட்டேனே இன்னும் என்ன என்ற ரீதியில் பார்த்தவன் அவள் கேட்ட ஒரே கேள்வியில் கதிகலங்கிப்போனான்.
“இனியா கூட ‘ஈ.டி.எஸ்’ங்கிற பேரை பயன்படுத்தி பொய்யான ஃபேஸ்புக் அக்கவுண்ட் மூலமா ஃப்ரெண்டா இருந்ததை ஏன் மறைச்ச?”
“நானா? நான் இனியாவ இன்ஸ்டாக்ராம்ல ஃபாலோ பண்ணுனதோட சரி மேடம்… ஃபேஸ்புக்ல எந்த அக்கவுண்டும் எனக்குக் கிடையாது” என பதறிப்போய் மறுத்தான்.
“உன்னை எப்பிடி நம்புறதுப்பா? சொசைட்டில சாத்தானிஷ்ட்ங்கிற முத்திரையோட நடமாட பிடிக்காம வேசம் போட்டுத் திரிஞ்சவன் நீ… அதே நேரம் சாத்தானுக்கு ஒரு மனுசனைப் பலி குடுக்கவும் செஞ்சிருக்க… உன்னை மாதிரி ரெட்டைவேசதாரிகளை நான் நம்பவே மாட்டேன்… ஈ.டி.எஸ்ங்கிற பேருக்குப் பின்னாடி இருக்குற வரலாறை நீ சொல்லுறியா? இல்ல நானே கிண்டிக் கிளறி கண்டுபிடிக்கட்டுமா?”
“அந்த ஐ.டிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது மேடம்… இனியாவும் நிஷாந்தும் காதலிக்க ஆரம்பிச்சதும் எனக்கு அவ மேல கோவம் வந்துச்சு… ஆனா கையாலாகாதவனோட கோவத்துக்கு என்ன வலிமை இருக்கு சொல்லுங்க” என்று வேதனையோடு முணுமுணுத்தான் அவன்.
இதன்யாவின் புருவங்கள் நெற்றியில் ஏறியிறங்கின அவனது பேச்சை அவள் நம்பவில்லை என்பதற்கு அடையாளமாக.
“கொடூரமா ஒரு கொலைய பண்ணி தலைமறைவா ஓடுற திறமையுள்ளவன் நீ… உன்னால முடியாததுனு எதுவும் இல்ல முத்து… உனக்கும் அந்த லேப்டாப் மொபைலுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தமில்லனா அது ஏன் உன் வீட்டுல இருந்துச்சு?”
“அது… என்னோடது இல்ல மேடம்”
“அதுனு சொல்லி ஏன் ஒரு கேப் விட்ட?”
வார்த்தைகளுக்கு இடையே எதிராளியின் மனதைப் படிப்பது ஒரு கலை. அது காவல்துறை அதிகாரிகளுக்கு அத்துப்படி. நொடிக்கும் குறைவான இடைவெளியை இதன்யா கண்டுகொண்டதும் முத்துவின் பதற்றம் அதிகரித்தது.
“ம்ம்.மேடம்…”
திணறலாய் அவன் விழிக்கும்போதே முரளிதரன் உள்ளே வந்தார் .
“இதன்யா மேடம்.. ஒரு நிமிசம் வாங்க”
மறுபேச்சின்றி வெளியேறினாள் அவள். விசாரணை அறைக்குள் இருந்த முத்துவோ பயத்தில் தத்தளிக்கத் தொடங்கினான். குற்றவாளிகளை அடித்து துன்புறுத்தி உண்மையைக் கொண்டு வருவதை விட இது போன்ற உளவியல் அழுத்தங்களை உண்டாக்கி அதன் மூலமாக உண்மையை வெளிக்கொணர்வதும் விசாரணையின் ஒரு முறையே!
பாதியில் விட்டுவிட்டால் அடுத்து என்னாகுமோ என குற்றவாளி நிச்சயம் பதறுவான். பதறிய காரியம் சிதறும் என்பார்கள், அதே போல பதறிய மனிதனின் சிந்தனையும் சிதறும். மனம் தடுமாறும். என்ன செய்வதென புரியாமல் அலைபாயும். இறுதியில் ஓய்ந்து போய் உண்மையை ஒப்புக்கொள்ளும். முத்துவின் சிந்தனை இப்போது தான் சிதறத் துவங்கியிருக்கிறது. இதன் முடிவு கட்டாயம் தனக்குச் சாதகமாக அமையுமென்ற நம்பிக்கையோடு தான் இதன்யா வெளியேறியிருந்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

