சைக்கோபாத்கள் பலவிதமான காரணங்களால் உணர்வுரீதியான வேதனைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கும் தன்னை அன்பு செலுத்தவும் அக்கறை காட்டவும் நபர்கள் வேண்டுமென்ற ஆழமான ஆசை இருக்கும். அந்த ஆசை நிறைவேறாமல் போவதே அவர்களின் மனப்பிறழ்வுக்குறைபாடு தீவிரமாகக் காரணமாக அமைகிறது. எது எப்படியோ, இம்மாதிரியான கொடுமையான மனப்பாங்கு கொண்ட சைக்கோபாத்களுடன் சுமூகமான உறவைப் பேணுவது யாருக்கும் கடினமே. இத்தகைய சைக்கோபாத்கள் அவ்வபோது தங்களது குணங்களால் மற்றவர்கள், குறிப்பாக நேசிப்பவர்கள் காயமடைவதைப் பற்றி யோசித்து வருத்தத்துக்கு ஆளாவார்கள். பெரும்பாலான சைக்கோபாத்களின் வாழ்க்கையில் நிலையான உறவுகளும், சமுதாயத்துடனான பிணைப்பும் அறவே இருப்பதில்லை.
-From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens
பாதிரியார் பவுலும், சாவித்ரியும் வழக்கறிஞர் ஒருவரோடு வந்திருந்தார்கள். மூவரையும் விசாரணை குழுவுவின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றாள் இதன்யா.
அங்கே போனதும் நடந்து முடிந்த விசாரணையில் ராக்கி மற்றும் நிஷாந்த் இனியாவைக் கொலை செய்யவில்லை என்பது ஓரளவுக்கு ஊர்ஜிதமானதைக் குறிப்பிட்டவள்
“பட் இன்னும் அது ஹன்ட்ரெட் பர்செண்ட் உறுதியாகல… ராக்கியும் நிஷாந்தும் மர்டர் ஸ்பாட்ல இல்லங்கிறதுக்கு அலிபி ஸ்ட்ராங்கா இருந்தா மட்டுமே அவங்களால கோர்ட்ல தப்பிக்க முடியும்… சொல்லுங்க லாயர் சார்… உங்களால கொண்டு வரமுடியுமா?”
வழக்கறிஞர் இதன்யாவின் முன்னிலையில் ராக்கியிடமும் நிஷாந்திடமும் பேச விரும்பினார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
விசாரணை அறைக்கு இருவரும் அழைத்து வரப்பட்டார்கள். பத்தொன்பது வயது இளைஞர்கள் காவல்துறை விசாரணையில் சோர்ந்து போயிருந்தார்கள். அவர்கள் வயதுக்குச் செய்த காரியங்கள் அதிகம் தான் என்றாலும் செய்யாத குற்றத்திற்கு தண்டனை கிடைத்துவிடுமோ என்ற பயம் இருவருக்கும் இருந்தது.
வழக்கறிஞர் செவ்வாய்கிழமை புதன்கிழமையில் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை ஒன்றுவிடாமல் சொல்லச் சொன்னார்.
நிஷாந்த் செய்த காரியத்தை வாயெழாமல் அமைதியாக இருக்கவும் ராக்கி தனது தரப்பு உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
“செவ்வாய்கிழமை அண்ணாவைச் சென்னைக்கு வரச் சொல்லி ஒரு பிசினஸ்மேன் கால் பண்ணுனார்… அதனால அவனுக்குப் பதிலா நான் சி.சி.டி.வி கண்ட்ரோல் ரூம்ல வேலை செய்ய வேண்டிய சிச்சுவேசன் லாயர் சார்… அன்னைக்குப் பகல் முழுக்க நான் காலேஜ்ல இருந்தேன்… காலேஜ் முடிஞ்சு வந்ததும் சக்கரவர்த்தி எஸ்டேட் ஆபிசுக்குக் கிளம்பிட்டேன் சார்… புதன்கிழமை மானிங் வரைக்கும் நான் அங்க தான் இருந்தேன்”
“நீ அங்க இருந்ததை யாராச்சும் பாத்தாங்களா?”
“அன்னைக்கு நைட் முழுக்க நானும் மேனேஜர் சாரும் சி.சி.டி.வி கண்ட்ரோல் ரூம்ல தான் இருந்தோம்… ரெண்டு பேருக்கும் டீ போட்டுக் குடுத்த சூப்பர்வைசருக்கு நான் அங்க இருந்தது தெரியும்… மேனேஜர் சாரும் எனக்காகச் சாட்சி சொல்லுவார் சார்”
வழக்கறிஞர் நிஷாந்திடம் கேட்க அவனோ இதன்யாவை அவஸ்தையாய் பார்த்தான்.
இதன்யா எந்த உணர்ச்சியையும் காட்டாமல் ராக்கியிடம் “இப்ப வரைக்கும் எதுக்காக சி.சி.டி.வி ஃபூட்டேஜை டெலீட் பண்ணுனனு சொல்லல” எனக் கேட்கவும் அவன் பரிதவித்துப்போனான்.
“நிஜமா நான் டெலீட் பண்ணல மேடம்”
“அப்ப யார் டெலீட் பண்ணுனது? செத்துப்போன இனியா பேயா வந்து டெலீட் பண்ணுனாளா? நீ சொல்லுற ஒரு பொய்யால பெரிய பெரிய உண்மைய கூட சந்தேகப்படுற நிலமை வந்துடும் ராக்கி”
இதன்யா அவனை அதட்ட வழக்கறிஞர் இப்போது என்ன செய்வதென அங்கலாய்த்தார்.
அப்போது “செவ்வாய்கிழமைஃபூட்டேஜை டெலீட் பண்ணுனது அவன் இல்ல” என குறுக்கிட்டது நிஷாந்தின் குரல்.

பின்னர் யார் என்பது போல இதன்யா அவனைப் பார்க்கவும் “ஏகலைவன் மாமா” என்றான் நிஷாந்த்.
இதன்யாவின் புருவங்கள் உயர்ந்த விதமும் அவளது முகம் மாறிய விதமும் இது அவள் எதிர்பார்த்த தகவல் தான் என்பதைச் சொல்லின.
“எதுக்கு டெலீட் பண்ணுனார்?” என வினவினாள் அவள்.
“என்னை இந்தக் கேஸ்ல இருந்து காப்பாத்துறதுக்காக டெலீட் பண்ணுனார் மேடம்… ஆனா புதன்கிழமை ஃபூட்டேஜ் எப்பிடி டெலீட் ஆச்சுங்கிறது அவருக்கே தெரியாது”
நிஷாந்த் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வதென இதன்யாவுக்குப் புரியவில்லை. இவன் சொல்வதில் எத்தனை சதவிகிதம் பொய் கலந்திருக்குமோ என்ற எண்ணம் தான் அவளுக்கு.
இப்போது வழக்கறிஞர் நிஷாந்திடம் நடந்ததை வினவ அவனும் வேறு வழியின்றி சொல்லிவிட்டான். அவருக்கே நிஷாந்த் செய்து முடித்த காரியம் அதிர்ச்சியைக் கொடுக்க நெற்றியை ஆட்காட்டிவிரலால் கீறியவர்
“அந்தப் பொண்ணு காணாம போனப்ப நீ சென்னைக்குக் கிளம்புனதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? நீ வாய் வார்த்தையா சொன்ன எதையும் கோர்ட்ல ஆதாரமா காட்ட முடியாது… அதை நம்ப மாட்டாங்க நிஷாந்த்” என்றார்.
நிஷாந்தும் யோசித்துவிட்டு “ஒரு எவிடென்ஸ் இருக்கு சார்… நான் சென்னைக்குக் கிளம்ப பஸ் ஏறுனேன்ல, அப்ப எஃப்.பில லைவ் போட்டேன்… அந்த லைவ் என் ஃபேஸ்புக் வால்ல இருக்கும்… நான் சென்னைக்குப் போய் சேர்ந்ததும் அங்க வச்சும் ஒரு லைவ் போட்டேன்” என்றான்.
வழக்கறிஞரின் முகத்தில் இப்போது நம்பிக்கை மீண்டு வந்தது.
“புதன்கிழமை நீ சென்னைல தான் இருந்தியா?”
“ஆமா சார்…. எங்க ஊர்க்காரர் தேவநாதன் சார் சென்னைல ஒரு ஃபேமஸ் காலேஜ்ல புரொபசரா இருக்கார்… அவர் எங்க முருகன் கோவில் மாசி திருவிழாக்கு டொனேசன் குடுக்க என்னைக் கூப்பிட்டார்… வெறும் டொனேசனா இருந்தா ஜி.பே பண்ணிருப்பார்… அவர் முருகனுக்கு தங்கத்துல வேல் வாங்கி வைக்குறதா வேண்டுதல் வச்சிருந்தார்… நான் கோவிலுக்கு அடிக்கடி வேலை செய்வேன்… அதனால என்னை வச்சு வேல் செலக்ட் பண்ணலாம்னு கூப்பிட்டார்… நான் சென்னைல அவர் வீட்டுல தான் தங்குனேன்… அவரோட காலேஜ்ல கல்சுரல்ஸ் நடந்தப்ப அங்க நானும் இருந்தேன்… அந்த கல்சுரல்ஸ் லைவ் சாரோட எஃப்.பில இருக்கும்”
“நீ சொல்லுறதுலாம் சரிதான்பா… நீ அங்க தான் இருந்தியானு அலிபி செக் பண்ண கால் பண்ணுனா அவர் எடுப்பாரா? உனக்காக அவர் சாட்சி சொல்லுவாரா?”
“கண்டிப்பா சொல்லுவார் சார்”
வழக்கறிஞர் இதன்யாவிடம் அலிபியை உறுதிச் செய்துவிட்டு நீதிமன்றத்தில் சந்திப்போமெனச் சொல்லிவிட்டு எழுந்தார்.
“சார்…”
நிஷாந்த் தயக்கமாக அழைக்கவும் “என்னப்பா?” என திரும்பினார் அவர்.
“அம்மாக்கு இந்த விசயம் எதுவும் தெரியவேண்டாம்” என திக்கித்திணறி தனது விவகாரம் பற்றி மறைமுகமாக நிஷாந்த் பேசவும் வழக்கறிஞரிடமிருந்து அதிருப்தி வெளிப்பட்டது.
“பத்தொன்பது வயசுல எதைச் செய்யணும் செய்யக்கூடாதுனு ஒரு வரைமுறை இருக்குப்பா… அதை தாண்டுனது உன்னோட தப்பு… யாருக்குத் தெரியும், கொலை பண்ணுனவன் நீங்க ஒன்னா இருக்குறதை பாத்துட்டு அந்தப் பொண்ணை வேற மாதிரியான பொண்ணுனு நினைச்சுக் கூட வன்புணர்வு செஞ்சு கொன்னிருக்கலாம்… அவளுக்கு நடந்த அநியாயத்துக்கு மறைமுகமா உன்னோட செயலும் ஒரு காரணம்பா… நான் இதை சொல்லலைனாலும் உங்கம்மாக்கு விவரம் தெரிய தான் போகுது… இன்னும் ரெண்டு நாள்ல உன்னையும் இவனையும் கோர்ட்ல ஆஜர் படுத்தணும்… அந்த நேரத்துல பத்திரிக்கைக்காரங்க முன்னாடி இந்த விவகாரத்தை வெளிய சொல்லித் தான் ஆகணும்… உன் கூட சேர்ந்து அந்தப் பொண்ணு பேரும் கெட்டுப் போகும்”
“அதுக்குத் தான் சார் நான் உண்மைய மறைச்சேன்” என்று நிஷாந்த் கண் கலங்கவும் வழக்கறிஞரை அழைத்துக்கொண்டு வெளியேறினாள் இதன்யா.
அவளிடம் “உங்களுக்கு அந்தப் பையன் கொலை பண்ணிருக்கமாட்டான்னு தோணுதுல்ல மேடம்” என்று அவர் கேட்க
“இன்னும் என்னால உறுதியா எதையும் சொல்ல முடியல சார்… கோர்ட்ல மீட் பண்ணலாம்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தாள் இதன்யா.
விசாரணைக்குழுவின் அலுவலக அறையில் பாதிரியாரும் சாவித்ரியும் தவிப்போடு அமர்ந்திருந்தார்கள்.
இதன்யாவைக் கண்டதும் எழுந்தார்கள் அவர்கள்.
“லாயர் சார் எல்லாத்தையும் பேசிட்டார்… அவங்க ரெண்டு பேரையும் கோர்ட்ல ஆஜர் பண்ணப்போறோம்” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் இதன்யா.
இரு நாட்கள் கடந்தன. வழக்கறிஞர் சொன்னபடியே குற்றவியல் நீதிமன்றத்தில் ராக்கியும் நிஷாந்தும் ஆஜர்படுத்தப்பட்ட போது அங்கே பத்திரிக்கையாளர்கள் குவிந்துவிட்டார்கள்.
இதன்யாவும் முரளிதரனும் வெகு சிரமத்தோடு இரு இளைஞர்களையும் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் சென்றார்கள்.
காவல்துறை தரப்பில் இருவரும் அளித்த வாக்குமூலம் மற்றும் விசாரணைக்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. அரசு தரப்பு வழக்கறிஞரும் ராக்கி மற்றும் நிஷாந்துக்காக ஏகலைவன் ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞரும் அவரவர் தரப்பு நியாயங்களைப் பேசினார்கள்.
ஆனால் கொலை நடந்ததாகச் சொல்லப்பட்ட நேரத்தில் ராக்கியும் நிஷாந்தும் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லாததற்கான அலிபி நிரூபிக்கப்பட்டுவிடவே அவர்களை இதற்கு மேல் விசாரிப்பதில் அர்த்தமில்லை என்பதால் இருவரும் இனியாவின் படுகொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
ஆனால் இனியாவின் வழக்கு விசாரணையில் நிஷாந்தும் அவளும் உறவு வைத்துக்கொண்டது வெளிவந்ததால் பதினெட்டு வயது நிரம்பாத பெண்ணுடன் சம்மதத்தோடு உறவு வைத்தாலும் அது சட்டத்தின் பார்வையில் வன்புணர்வாகவே கருதப்படும் என்ற நீதிபதி அந்த வழக்கைத் தனி வழக்காக கருதி விசாரிக்க காவல்துறைக்கு ஆணையிட்டார்.
கூடவே நிஷாந்தை இனியா படுகொலை வழக்கிலிருந்து தப்புவிக்க சி.சி.டி.வி ஆதாரத்தை அழித்த ஏகலைவன் மீது தவறு இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அவனையும் விசாரிக்க ஆணை பிறப்பித்தது நீதிமன்றம்.
இருவரும் நிம்மதியாக வெளியேறியபோது பத்திரிக்கையாளர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்ள சாவித்ரி மகனைத் தன்னோடு அணைத்துக்கொண்டு சென்றுவிட பாதிரியாரும் ராக்கியைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.
இப்போது பத்திரிக்கையாளர்கள் இதன்யாவைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அதற்குள் வழக்கில் உண்டான திருப்பம் பற்றிய செய்திகள் அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.
அவர்களுக்குச் சரியான விளக்கத்தைக் கொடுக்கவேண்டிய கடமை இதன்யாவுக்கு இருக்கிறதே!
“விக்டிமுக்கும் சஸ்பெக்டுக்கும் இடையில தப்பான உறவு இருந்தது உண்மையா மேடம்?”
“உங்களுக்கு எங்க தரப்புல இருந்து அதிகாரப்பூர்வமான விளக்கம் வரும்… அதுவரைக்கும் இல்லாத விசயத்தை கற்பனை பண்ணி பேசாதிங்க ப்ளீஸ்… எதுவா இருந்தாலும் கமிஷ்னர் ஆபிஸ்ல வச்சு பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு இதன்யா கிளம்பிவிட்டாள்.
ஆனால் உடனடியாக ‘சென்சேஷனல் நியூஸ்’ வேண்டுமென ஆளாய் பறக்கும் மூன்றாந்தர பத்திரிக்கைகளும் செய்தி சேனல்களும் இருக்கின்றனவே. காவல்துறையிலும் நீதித்துறையிலும் பணியாற்றும் சில ஊழியர்களிடமிருந்து அரைகுறை தகவலைக் கறந்து அதை உடனடி செய்தியாகத் தொலைகாட்சியில் ஒளிபரப்பின அவை.
இவை அனைத்தும் சில மணி நேரங்களிலேயே வேகமாக நடந்தேற அதன் விளைவாக மொத்த சமூகவலைதள ஊடகமும் ஆள்மன வக்கிரங்களை வெளிப்படுத்தும் டிஜிட்டல் குப்பைத்தொட்டியாய் மாறிப்போனது.
“பொன்மலையில் கொடூரமாக வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட பெண் முன்னரே ஒரு இளைஞனைக் காதலித்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணை இருவர் வன்புணர்வு செய்தது இரண்டாம் கட்ட பிரேத பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு பொன்மலையைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளைஞருடன் ஏற்கெனவே காதல் இருந்துள்ளது. இருவரது காதல் எல்லை கடந்து போய் இருவரும் காட்டுக்குள் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படி ஒருமுறை உல்லாசமாக இருந்துவிட்டுக் காதலன் சென்ற பிறகு கொலையாளியிடம் அப்பெண் சிக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை வேகமெடுத்துள்ளது”
“கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கெனவே காதல் இருந்த நிலையில் அவரது சம்மதத்துடனே உறவு நடந்துள்ளதென விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவர் மெய்யாகவே வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது”
இம்மாதிரி செய்திகள் பரவிய நிலையில் பெண்களின் நடத்தையைக் கேலிகூத்தாக்கும் சில யூடியூப் சேனல்கள் காவல்துறை தரப்பு விளக்கம் வருவதற்குள் முந்திக்கொண்டு இனியாவையும் நிஷாந்தையும் இணைத்து கன்னாபின்னாவென வீடியோக்கள் போட்டு தங்கள் கண்டண்ட் பசியைப் போக்கிக்கொண்டன.
“பதினேழு வயசுலயே அப்பிடி என்ன உடம்பு அரிக்குது? இப்பிடி தரங்கெட்டு போனா கொல்லத் தான் செய்வானுங்க”
“இதுக்குத் தான் பொம்பளைப்புள்ளைங்க கையில போன் குடுக்கக்கூடாது… ஒரே நேரத்துல லவ்வருக்கும் கொலைகாரனுக்கும் லைன் ஓட்டிருப்பா… அதான் கொலைகாரன் காண்டாகி கொன்னுட்டான்”
“ஆல்ரெடி அவ ஐட்டம் தானடா… அவளைப் போய் இன்னொருத்தன் ரேப் பண்ணிருக்கான் பாரேன்… என்ன டேஸ்டு அந்த கொலைகாரனுக்கு?”
“தெரிஞ்சு ரெண்டு பேரு, தெரியாம எத்தனை பேரு கூட இருந்தாளோ? இவளை மாதிரி ஆளுங்களுக்குச் சாவு தான் சரியான தண்டனை”
இவை எல்லாம் யாரோ நேரில் பேசிய வசைமொழிகள் இல்லை. இவை யாவும் சமூக வலைதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் சில வக்கிரம் பிடித்த ஆண் மிருகங்கள் பதிவிட்ட கமெண்ட்களே.
ஒரு பெண்ணிற்கு நடந்த வன்கொடுமையை அவள் காதலனுடன் இருந்ததைக் காரணம் காட்டி நியாயப்படுத்தும் இம்மாதிரியான மனநிலை, அவளைக் கொலை செய்த கொலைகாரனின் மனநிலைக்குச் சற்றும் குறைந்ததில்லை என கோபம் கொண்ட இதன்யா கொந்தளித்த இதயத்தோடு பத்திரிக்கையாளர் சந்திப்புக்குச் சென்றாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

