அட்சரன் தனது அன்னைக்கு வீடியோ கால் செய்தான். “ம்மா! இங்க பாருங்க. இதுதான் திருமலைக்கோவில்.” மலையையும் உச்சியில் இருக்கும் கோவிலையும் படிகளையும் காட்டினான் அவரிடம்.

“சம்பந்தி கிட்ட குடு அச்சு” ராஜேஸ்வரி சொல்லவும், மொபைல் கஜேந்திரன் கனகவல்லியிடம் தாவியது. நலம் விசாரிப்பு, இலகுவான பேச்சில் சம்பந்திகள் கலந்துகொள்ள, இறுதியாக மொபைல் வந்தது வேதவதியின் கரங்களுக்கு.
“வேதா! இந்தப் புடவை ரொம்ப நல்லா இருக்குடா உனக்கு.”
“தேங்க்ஸ் அத்தை.”
“எதுவும் பிரச்சனை இல்லையே?”
வேதவதி அட்சரனைப் பார்க்க, அவன் அவளது தோளை அணைத்துக்கொண்டு “ஒரு பிரச்சனையும் இல்லம்மா” என்றான் அழுத்தமாய்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வீடியோ அழைப்பு முடிந்ததும் மீண்டும் படியேறும் படலம்.
“நமக்குள்ள இன்னும் எதுவும் சரியாகல” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தாள் வேதவதி.
“என் கையை விட்டுட்டு அதைச் சொன்னா நம்புவேன்” என்றவனின் பார்வை, அவனது கரத்தோடு கரம் கோர்த்திருந்தவளைக் கிண்டலாய்ப் பார்க்கவும், வேகமாகக் கையை விலக்கிக்கொண்டாள்.
ஒருவழியாக மலையேறி திருமண வீட்டு ஆட்களோடு கலந்துவிட்டார்கள் நால்வரும். முகூர்த்தத்துக்கு இன்னும் நேரமிருந்ததால் மக்கள் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களது பேச்சின் கருப்பொருள் வேதவதியும் அட்சரனும்தான்.
“பாரேன்! தாலி கட்டமாட்டேன்னு அந்த ஆட்டம் போட்டான் இந்தப் பையன். இப்ப ஒட்டி உரசி நிக்குதுங்க.”
“சுதாராணிக்கா மவளுக்கு முப்பத்தைஞ்சு பவுன் போட்டு ரொக்கம் எழுபதாயிரம் குடுத்திருக்கு. இதெல்லாம் கனகுக்கு மிச்சம் தானே?”
“அதானே? பொடுபொடுனு பேசுறவங்களைக் கூட நம்பலாம். இந்த வேதா மாதிரி ஊமைக்கோட்டானை நம்பவே கூடாது. நோட்டம் விட்டு வசதியானவன்னு தெரிஞ்சு பழகி அவன் கையால தாலியும் கட்டிக்கிட்டா பாருங்க. முதலமைச்சர் மகள் கல்யாணத்துல இலவசமா விளம்பரமும் தேடியாச்சு.”
அவர்களின் கெட்டநேரமோ என்னவோ, இவை அனைத்தும் வேதவதி – அட்சரனின் காதில் ஸ்பஷ்டமாக விழுந்தன. விழவேண்டும் என்றுதான் அவர்களும் பேசினார்களோ என்னவோ! அட்சரனுக்குக் கேட்டதும் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.
“இவங்களை…” என முன்னேறப்போனவனின் கையைப் பற்றித் தடுத்தாள் வேதவதி. கண்கள் எல்லாம் கலங்கி முகம் கறுத்து நின்றவளைப் பார்த்ததும் அவனது கோபம் மட்டுப்படாமல் அதீதமாய் வெடித்தது.

“ஐ அம் ரியலி சாரி வேதா. இந்தக் கேவலமான பேச்சைக் கேக்கணும்னு நமக்குத் தலைவிதி இல்ல.”
அமைதியாக அவளது கையை விலக்கியவன் அந்தப் பெண்களிடம் போனான். அவனைக் கண்டதும் கண்களில் போலியான அன்போடு விசாரித்தார்கள்.
“ப்ச்! உங்க யார்கிட்டவும் கொஞ்சி விளையாட நான் வரல. கல்யாண வீட்டுக்குத்தானே வந்திருக்கீங்க? வந்த இடத்துல புறணி பேச வெக்கமா இல்ல? அதுவும் உள்ள சாமியை வச்சுக்கிட்டு. சீ! என்ன பொம்பளைங்க நீங்க எல்லாம்?”
அவனது சத்தம் கேட்டு இதர ஆட்கள் வந்துவிட்டார்கள்.
“என்ன தம்பி? எதுவும் பிரச்சனையா?”
“எப்பா பொம்பளைங்க கிட்ட சண்டைக்குப் போறியே? இது நல்லாவா இருக்கு? கஜேந்திரா, உன் மருமகனைக் கொஞ்சம் சொல்லிவைப்பா.”
கஜேந்திரன் சங்கடமாக விழிக்கும்போதே வேதவதி மீண்டும் வந்து அட்சரனின் கையைப் பிடித்தாள்.
“பேசுனா பேசிட்டுப் போகட்டும். நமக்கென்ன?”
“ஏய்! கைய விடுடி!” அவன் சீறியதில் அவள் அரண்டு போய் விலகி நின்றாள்.
அட்சரன் இடுப்பில் கையூன்றியே வந்திருந்த அனைவரையும் கூரிய விழிகளால் துளைத்தெடுத்தான்.
“வேதா நீங்க எல்லாரும் பாக்க வளர்ந்தவ தானே? இவ அப்பா அம்மாவைப் பாத்தா பணக்கார ஆம்பளையை வளைக்கப் பொண்ணை ஏவி விடுறவங்க மாதிரியா இருக்கு? ஒரே ஊருல தானே இருக்குறீங்க? யார் என்ன மாதிரி வேலை செய்வாங்கனு அறிவு வேண்டாம்? இதே மாதிரிதான் வானதி கல்யாணத்துலயும் உங்க ஊராளுங்க பேசுனாங்க. வேதா ஒன்னும் என்னைத் தேடித் தேடி வந்து பேசல. நான்தான் பேசுனேன். எனக்கு அவளைப் பிடிச்சிருந்துச்சு, பேசுனேன்! எனக்கு அவ மேல விருப்பமிருந்ததால அவ கூட நான் பழகுனேன். அது உங்க எல்லார் பார்வைக்கும் தப்பா தெரிஞ்சா நானா பொறுப்பு? ஆண் பெண் நட்பு காதல் எல்லாம் சர்வசாதாரணமாக எடுத்துக்குற ஊர்ல இருக்குறவன் நான். உங்களோட குறுகலான புத்தியைப் பாத்தா எனக்குச் சிரிப்பு வருது. நல்லா கேட்டுக்கோங்க. அன்னைக்கு அந்தச் சாந்தா பொம்பளை சொன்னதுல வேதாவோட தப்பு எதுவும் இல்ல. எல்லாம் என் தப்புதான். என் தப்பை அந்தப் பொம்பளை கண்டுபிடிச்சதால கோவம் வந்துச்சு. வேற வழியில்லாமதான் இவளும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சா. தப்பு எல்லாம் என் மேலதான். இன்னொரு தடவை வேதாவைப் பத்தி, அவ பேரண்ட்ஸைப் பத்தி யாரும் கேவலமா பேசுனீங்கனா நல்லா இருக்காது, சொல்லிட்டேன்.”
சீற்றத்தோடு சொல்லி முடித்தவன் வேதவதியின் கையைப் பற்றிக்கொண்டான். “இதுக்கு மேல இங்க இருக்கணுமா மாமா?” என்று கேட்டவனிடம் கஜேந்திரன் சமாதானம் பேசினார்.
“மாமா! உங்க ஊரை நீங்கதான் மெச்சிக்கணும். என்ன பேசுனாங்கனு உங்க காதால நீங்க கேக்கல. நல்லவேளை கேக்கல. கேட்டிருந்தா நீங்களும் எங்களோட கிளம்பிருப்பீங்க.”
அவன் கொதித்துக்கொண்டிருக்க, சுதாராணியே வந்து அமைதியாகும்படி கேட்டுக்கொண்டார் அவனிடம்.
“என் மக கல்யாணத்துல சண்டை வேண்டாம் தம்பி. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இப்பவே முகம் தூக்க ஆரம்பிச்சிட்டாங்க.”
“அதை அந்தப் புறணி குரூப் கிட்ட சொல்லுங்க. சீரியல்ல வர்ற வில்லிங்க மாதிரி இடம் பொருள் ஏவல் தெரியாம அடுத்தவங்களை அசிங்கமா பேசுறாங்க. அவங்க ஒரு வார்த்தை பேசுனா நான் ஆயிரம் வார்த்தை பேசுவேன்.”
கனகவல்லியும் கஜேந்திரனும் வேதவதியை பாவமாய்ப் பார்க்க, அவளோ அட்சரனை ஏறிட்டாள்.
“கோவப்படாதிங்க ப்ளீஸ். இன்னும் பத்து நிமிஷத்துல முகூர்த்தம், முடிஞ்சதும் கிளம்பிடலாம்” என்று அமைதிப்படுத்தினாள் அவனை. அட்சரன் கோபப்பெருமூச்சோடு பின்னந்தலைச் சிகையைக் கோதிக்கொண்டான்.
“இருந்து தொலைக்குறேன்.”
முகூர்த்த நேரம் வந்து மாங்கல்யதாரணம் முடிந்ததும் அட்சதையைத் தரையில் வீசிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து கிளம்பினான்.
“அட்சதை ஒரு கேடு!”
வேதவதி அவனைத் தொடர்ந்து வந்தவள் “மெதுவா போங்க” என்க,
“எனக்குத் தெரியும்டி” என்றவன் சீற்றமாய் மூச்சு விட்டவாறு நின்றான்.
“அந்தப் பொம்பளைங்க அவ்ளோ பேசுது. ஒரு வார்த்தை பேசுனியா நீ? நீ மாறிட்டனு எல்லாரும் நினைக்குறாங்க. இன்னும் அந்தப் பழைய பயந்தாங்கொள்ளிதான் நீ. எப்பவும் உனக்கு ஒரு மவுத் பீஸ் வேணும்ல. ஏன் வேதா இப்பிடி இருக்குற?”
“அட்சரன்…”
“மண்ணாங்கட்டி! இந்த வாய் எல்லாம் என்கிட்ட மட்டும்தான். மத்தபடி உன்னைக் கன்னாபின்னானு பேசுறவங்க முன்னாடி கண்ணீர் மட்டும்தான் பேசும்.”

அவன் கடுகடுக்கும்போதே அவளது விழிகள் கலங்கின. அட்சரன் சாந்தமாக முயன்றவனாய், “ப்ச்! உடனே அழாத. இனிமே புறணி பேசுனா கூட என்னைப் பத்திதான் பேசுவாங்க. உன்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க. விடு” என்றான் அரைகுறை கோபத்தோடு.
வேதவதியின் கண்கள் இன்னும் அதிகமாய்க் கலங்கியது அங்கேதான்.
“உன் மௌனத்தால இன்னைக்கு நான் கறைபட்டு நிக்கிறேன். இந்த வீண்பழியை உன்னால எப்பவுமே துடைக்க முடியாதுடி” என்று ஒரு காலத்தில் வெறுப்பை உமிழ்ந்தவன், இன்று அவனே அவனைக் கறைபடுத்திக்கொண்டான் என்றுதான் சொல்லவேண்டும். இன்றும் அவன் மீது சுமத்திக்கொண்ட பழி வீண்பழிதான். அதுவே வேதவதியைக் கலங்க வைத்தது.
“ஏன் பொய் சொன்னீங்க?”
அட்சரன் தோள்களைக் குலுக்கியவன், “எனக்கு அது புதுசில்லையே” என்க,
“இப்பவும் உங்க மேல பொம்பளைப் பொறுக்கிங்கிற எண்ணம்தான் தோணிருக்கும்” என்றாள் அவள்.
“எவ என்ன நினைச்சா எனக்கென்ன? அந்த இடத்துல அவங்க உன்னைப் பேசுனப்ப கோவம் வந்துச்சு. நான் பழிய என் மேல போட்டுக்கிட்டேன். நான் எப்பிடிப்பட்டவன்னு உனக்குத் தெரியும்ல, அது போதும். வேற யாரும் எனக்குச் சர்டிபிகேட் குடுக்கவேண்டாம்” என்றவன்,
“இப்பிடியே இங்க நின்னு பேசிட்டிருந்தா என் கோவம் இன்னும்தான் அதிகமாகும் வேதா. நான் காருக்குப் போறேன். நீ அத்தை மாமாவை அழைச்சிட்டு வா” என்று சொல்லிவிட்டு வேகமாகப் படியிறங்கிப் போய்விட்டான்.
பத்து நிமிட இடைவெளியில் மணமக்களை வாழ்த்திவிட்டு, கஜேந்திரனும் கனகவல்லியும் திரும்பி வந்தார்கள்.
“அன்னைக்கு மாப்பிள்ளை உன்னைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு கோவப்பட்டப்ப அவர் கண்ணுல உண்மை இருந்துச்சு. இன்னைக்கு அவரோட கண்ணுல உன்னை யாரும் தப்பா பேசிடக்கூடாதுங்கிற ஆதங்கம் மட்டும்தான் எனக்குத் தெரிஞ்சுது. தப்பான ஒருத்தன்கிட்ட உன்னை நாங்க ஒப்படைக்கல வேதா” என்றார் கனகவல்லி.
படியிறங்கி அவர்களுக்காகக் காத்திருந்த அட்சரனின் காரிலேறி வீடு வந்து சேர்ந்த பிறகும் கனத்த மௌனம் நிலவியது அவர்களிடையே. அத்துணை எளிதில் மறக்கக்கூடிய நிகழ்வு இல்லையே! கஜேந்திரன் மருமகனைத் தன்னோடு நூலகத்துக்கு அழைத்துப்போய்விட்டார். சிறிது நேரத்தில் விஷயமறிந்து வந்த யாழினி, ஊர்க்காரப் பெண்களைச் சபிக்காத குறை.
“உனக்காக அண்ணா பேசுனாராமே! ஆச்சி சொல்லிச்சு. என்னவோ நினைச்சேன். நல்ல மனுஷன் தான் வேதா. மனுஷங்கனா நிறைகுறைகள் இருக்கத்தானே செய்யும். கொஞ்சம் கோவம் அதிகமா வரும் போல. அது பிரச்சனை இல்ல. உன்னை மாதிரி ஒருத்தி பக்கத்துல இருந்தா எரிமலை பனிமலையா மாறிடும்.”
அன்றைய இரவில் அட்சரன் வழக்கம் போல உறங்கிவிட்டான். ஆனால் வேதவதிக்கு உறக்கமில்லை. தன்னருகே படுத்திருந்தவனை ஜன்னல் வழியே வந்த நிலவொளியின் உதவியால் பார்த்தபடி படுத்துக் கிடந்தாள். அவனது ஈகோவால் காயப்பட்ட மனம், இன்று தனக்காக அவன் போட்டுக்கொண்ட பழியைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தது.

‘நிறைகுறைகள் இல்லாத மனிதர்களே இல்லை’ என்று யாழினி அவளது காதில் சொல்லிவிட்டுப் போனாள்.
அலைபாய்ந்த மனதோடு உறங்கிப்போனவள் காலையில் கண் விழித்தாள். குற்றாலம் நூலகத்தில் புத்தகம் கொடுக்க ஆயத்தமானாள்.
“கார்ல போயிடலாமா?” என்று கேட்டபடி வந்த அட்சரனிடம்,
“இல்ல! இன்னைக்குப் பஸ்ல போகலாம்” என்றாள் அவள் அமைதியாக. அட்சரனுக்கு அவளது பேச்சுத் தொனி மாறியதே ஆச்சரியமாய்.
குற்றாலம் செல்ல பேருந்து வந்ததும் ஏறி ஜன்னலோரம் அமர்ந்தவன், வேதவதியை அமருமாறு கண்களைக் காட்டினான். அவளும் அமர்ந்தாள். வழக்கமாய் அவனருகே அவள் வந்துவிட்டாலே அவனது கரம் அவளது தோளை அணைத்துக்கொள்ளும். ‘மசில் மெமரி’ என்பார்களே அது போல!
தோளை அணைத்தபடி கைகளைப் போட்டவனை வேதவதி திட்டவில்லை.
அட்சரன் அவளைப் பார்த்தான். கண்களில் எதிர்பார்ப்பும் ஆவலுமாய்.
“டோண்ட் டச் மீனு சொல்லுவனு எதிர்பார்த்தேன்.”
அவள் பதில் பேசவில்லை. மாறாய் அவளது முகம் கனிந்திருந்தது. கேட்காத கேள்விகளுக்கும், பூர்த்தியடையாத எதிர்பார்ப்புகளுக்கும் விடையாய் அந்தக் கனிந்த முகம் அமைந்துவிட, அட்சரனின் மனதில் பெரும் நிம்மதி. ஆனால் அவன் எதிர்பார்த்த உறுதி கிடைக்கவில்லை.
“இன்னைக்கு ஈவினிங் நான் சென்னைக்குக் கிளம்புறேன் வேதா.”
“வந்த வேலை முடிஞ்சதால கிளம்புறீங்களா?” சட்டெனக் கேட்டுவிட்டாள் அவள்.
சின்னதாய்ப் புருவத் தூக்கலோடு சிரித்தவன், “எனக்கு நான் வந்த வேலை முடிஞ்சதா தோணல. நீ வாய் திறந்து சொல்லாதவரைக்கும் நான் எந்த ஊகத்துலயும் வாழ விரும்பல. இங்க வந்தா உன் மனசு மாறும்னு நினைச்சு வரல வேதா. முயற்சியே பண்ணாம இருந்துட வேண்டாமேனு தோணுச்சு. வந்தேன்! இப்ப கிளம்பலாம்னு நினைக்குறேன்” என்றான் சுருக்கமாக.
‘முயற்சியே செய்யாமல் இருந்துவிட வேண்டாமே’
தேன்மலையிலிருந்து அட்சரனின் தாலியைச் சுமந்துகொண்டு போகும் முன்னர் கஜேந்திரன் வேதவதிக்குச் சொன்ன அறிவுரை அது. அட்சரனும் அதையே சொல்லவும் சிந்தனைவயப்பட்டவள், அன்றைய தினம் மாலையில் அட்சரனும் அவனது கருப்பு ரேஞ்சு ரோவரும் தேன்மலையை விட்டுக் கிளம்பியதும் வெறுமையாய் உணர்ந்தது என்னவோ உண்மை.
“இன்னும் ரெண்டு நாள்ல நீயும் சென்னைக்குக் கிளம்பிடுவ. நம்ம வீடு மறுபடியும் அமைதியாகிடும்” என்று பெருமூச்சுவிட்டார் கனகவல்லி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

