“அன்புங்கிறது மனசுக்குள்ள பூட்டி வைக்க வேண்டிய இரகசியமில்ல. அதை மௌனமா வெளிப்படுத்துனா யாருக்குப் புரியும்? ஒருத்தரோட அன்பு கூண்டுப்பறவையா மனசுக்குள்ள பதுங்கியிருக்குறதைவிட சிறகடிச்சு வானத்துல பறக்குற சுதந்திரப் பறவையா வெளிப்படையா தெரியுறப்ப தான் அதுக்கான வலிமை அதிகமாகுது”
-ஈஸ்வரி
முற்பகல் பதினோரு மணி வெயில், அந்தப் பழைய ஓட்டு வீட்டின் திண்ணையில் தங்கத்தைப் பூசியது போலப் படர்ந்திருந்தது. மக்கள் எல்லம் அவரவர் அலுவலைக் கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஊரே நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க, அந்த வீட்டின் பின்வாசலில் இருந்த கொய்யா மரத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கத்தவும் அழகான அமைதி கலைந்து போனது.
குருவியின் சத்தம் கேட்டதுமே பதறியடித்துக்கொண்டு வீட்டு அடுக்களையிலிருந்து பின்வாயிலுக்கு வந்தார் இளவரசி. அந்த இல்லத்தின் அரசிக்குப் பொருத்தமானப் பெயர்தானே!
ஒரு வெண்ணிற பருத்தி வேஷ்டியில் கொள்ளு பருப்பைக் காயப்போட்டிருந்தவர் அதைத்தான் குருவி தின்று தீர்த்துவிட்டதோ எனப் பதறியடித்து ஓடிவந்திருந்தார்.
இதைக் காவல் காத்துக் கொண்டிருந்தால் மதிய சாப்பாடு சமைப்பது சிக்கலாகிவிடும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அங்கே நின்றபடியே “ஏலா ஈஸ்வரி! பொழுதன்னைக்கும் அந்தப் போனை நோண்டுறதை விட்டுட்டு இங்க வந்து கொள்ளு பருப்பைக் குருவி, கோழி எதுவும் கொத்தித் திங்காம பாத்துக்க. பக்கத்து வீட்டு சேவல் இங்கயே கண்ணா சுத்துது” என்று கத்த அடுத்த பத்தாவது வினாடியில் அந்த வீட்டின் பின்வாயில் திண்ணைக்கு வந்து சேர்ந்தாள் ஈஸ்வரி.
முதுகலை வணிகவியல் தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள் கடந்த ஒரு மாதமாக.
இருபத்திரண்டு முடிந்து இன்னும் சில மாதங்களில் இருபத்து மூன்றுக்குத் தாவுவதற்கு அவளது அகவை தயாராக இருக்கிறது.
மாநிறமும் ஆலிவ் வண்ணமும் கலந்த நிறத்தில் முட்டை கண்களோடு திருத்தமான முகம்! பூசினாற்போல உடல்வாகு! அடர்த்தியான நீண்ட கூந்தல்! கோவில் சிலையைப் போல அழகி என்று அவளது தோழி மலர்விழி அடிக்கடி புகழுவதுண்டு.
“நீ போய் சமையலைக் கவனிம்மா. நான் இதைப் பாத்துக்குறேன்” என்றவள் திண்ணையின் தூணில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்துகொண்டாள்.

இளவரசி மகளை நோட்டமிட்டபடியே வீட்டுக்குள் வந்தவர் “ரங்கநல்லூர்ல கே.பி.என் காம்ப்ளக்சுல தையல் க்ளாஸ் சொல்லிக் குடுக்காவளாம். அங்க போய் தையலு கத்துக்கலாம். ஒரு மிஷினை வாங்கி போட்டு வாரம் நாலு ஜாக்கெட் தைச்சா கூட நல்ல வரும்படி.” என்று பேசிக்கொண்டே சமைக்க ஆரம்பித்தார்.
ஈஸ்வரி அலட்சியமாய் உச்சு கொட்டியபடி மொபைல் போனில் வாட்சப் அரட்டையில் ஆழ்ந்திருந்தாள் மலர்விழியோடு.
“மகனை ஆதியக்கா கூட அனுப்பிட்டு நீ ஜாலியா இருக்குறியா மலரு?”
“அவன் அவங்க கூட தான் போவேன்னு ஒரே அடம். கதிருக்குக் கார்ல ஊர் சுத்த அவ்ளோ பிடிச்சிருக்கு ஈசு. அதை விடு! ஜங்சன்ல ஒரு ஆடிட்டர் ஆபிஸ்ல இண்டர்வியூ அட்டென்ட் பண்ணுனல்ல. என்ன சொன்னாங்க?”
“அவுங்க என்ன சொல்லுறது? நான் அந்த வேலைக்குப் போகமாட்டேன்”
“ஏன்டி?”
“பின்ன? ஆறாயிரத்து ஐநூறு எல்லாம் ஒரு சம்பளமா? நான் ஒரு கிராஜுவேட். அவங்க கிட்ட வேலை பாக்குறவங்க எல்லாம் சி.ஏ, சி.எம்.ஏ படிக்குறவங்களாம். அந்தக் குவாலிபிகேசன் இருந்தாதான் சம்பளம் பத்தாயிரம் வருமாம். க்கும்! அதுக்குனு நான் சி.ஏ படிக்கவா முடியும்? நம்ம மண்டைல என்ன ஏறுதோ அதைத்தான் படிக்க முடியும்”
நீளமாக அவள் தட்டச்சு செய்து அனுப்ப மறுமுனையில் மலர்விழி அவளுக்கு ஒரு உபாயம் சொன்னாள்.
“நம்ம காலேஜ் ஆபிஸ்ல வேலை இருக்கானு மகிழ் மாமா கிட்ட கேட்டுப் பாக்கவா?”
“அடப்போடி! அங்க மனுசி வேலை பாப்பாளா? படிச்சு முடிச்சுக் காலேஜை விட்டு வந்தவளை மறுபடியும் அங்க அனுப்பி வைக்கப் பாக்குறியே மலரு”
ஈஸ்வரிக்கு இருக்கும் ஒரே ஒரு தோழி மலர்விழி மட்டும்தான். மலர்விழி அமைதியானப் பெண். கொஞ்சம் பயந்த சுபாவமும் கூட. அவளுக்குக் காவல் அரணாக இருந்தவள் ஈஸ்வரி. இப்போது அந்த வேலையை மகிழ்மாறன் பார்த்தாலும் மலர்விழிக்கு ஈஸ்வரி என்றால் தனிப்பிரியம்தான்.
அதோடு ஒரே ஊர், பக்கத்து வீடுகள் என்பதால் இரு குடும்பத்துக்கும் நல்ல பழக்கமும் கூட.
“அச்சச்சோ”
அடுக்களையில் இளவரசி கவலையோடு பேசவும் “என்னம்மா? இப்ப என்ன காலி ஆச்சு? கடுகா? சீரகமா?” என்று வினவினாள் திண்ணையில் அமர்ந்தபடியே.
இளவரசி கைகளைப் பிசைந்தபடி வந்தவர் “ஏட்டி உங்கய்யாவுக்காகச் காத்தால பருப்பு குழம்பு செய்ய மும்முரமா இருந்ததுல துவரம் பருப்பு காலியானதை மறந்துட்டேன். இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் சாம்பாருக்குக் காயெல்லாம் வெட்டியாச்சு. பருப்பு காலியானதைக் கவனிக்காம அயித்துப் போனேன். நீ போய் குழலி மதினி கிட்ட ஒரு தம்ளர் பருப்பு வாங்கிட்டு வா. உங்கய்யா வாங்கிட்டு வந்ததும் தந்துடுவேன்னு சொல்லு” என்றபடி எவர்சில்வர் தம்ளரைக் கொடுத்தார் அவளிடம்.
ஈஸ்வரியும் அதை வாங்கிக்கொண்டு மலர்விழியின் வீட்டுக்கு நடந்தாள். அதிகத் தொலைவு எல்லாம் கிடையாது. ஒருவர் வீட்டிலிருந்து இன்னொருவர் வீட்டைப் பார்த்துவிடலாம்.
மலர்விழியின் வீட்டு முன்வாயிலில் ஒரு வேப்பமரம் உண்டு. ஈஸ்வரி வீட்டை நெருங்கியதுமே வேப்பம்பூவின் மணம் நாசியிலேறியது அவளுக்கு.
அவளுக்கு வேப்பம்பூ ரசமென்றால் அத்துணை இஷ்டம்.
“அத்தை கிட்ட வேப்பம்பூ பொறுக்கி வைக்கச் சொல்லணும்” என்று தனக்குத்தானே பேசியபடி வீட்டுக்குள் பிரவேசித்தாள் அவள்.
மலர்விழியின் அன்னை குழலியும் சமையலில் மும்முரமாகியிருந்தார். இப்போது ஆரம்பித்தால்தான் பன்னிரண்டு மணிக்கு சிகாமணி தோட்டத்திலிருந்து திரும்பும்போது சாப்பாடு சுடச்சுடத் தயாராய் இருக்கும்.
ஈஸ்வரியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவர் அவள் கேட்டபடி தம்ளர் நிறைய துவரம் பருப்பை நிரப்பிக் கொடுத்தார்.
“எப்ப இருந்து வேலைக்குப் போகப் போற?” என விசாரித்தார்.
“நானும் தேடுறேன் அத்தை. எனக்கு ஏத்த மாதிரி ஒரு வேலையும் இல்ல”
“அட! உனக்கு விசயம் தெரியாதால? பவி கிட்ட மூர்த்தி அண்ணன் இன்னைக்குக் காத்தால பேசிட்டார். அவன் ஆபிசுக்கு உன்னை வரச் சொல்லிட்டானே. மலர் அப்பாக்குப் போன் பண்ணி அப்பயே அண்ணன் விவரத்தைச் சொல்லிட்டாரு.”
ஈஸ்வரி திகைத்து விழித்தாள் ஒரு நொடி. பின்னர் சங்கடமாய் புன்னகைத்தாள்.
“உன் மவன் எப்பிடி அத்தை? ரொம்ப கோவப்படுவாரோ?” என விசாரித்தாள்.
“ஏட்டி நீ என்ன அவனைக் கட்டிக்கவா போற?” குழலி கிண்டல் செய்ய
“க்கும்! கட்டிக்கிட்டாலும்? யாராச்சும் பேயும் பிசாசும் சூனியக்காரியும் இருக்குற வீட்டுக்கு வாக்கப்படணும்னு ஆசைப்படுவாங்களா? வேலை விவகாரத்துல உம்ம மவன் எப்பிடினு கேட்டேன்.” என்றாள் அவள்.
அவள் பேசிய விதத்தில் சிரித்துவிட்டார் குழலி.
“பவி வேலை விசயத்துல ரொம்ப பொறுமையானவன்னு உன் மாமா சொல்லிருக்காவ. பயப்படாத! நாளைக்கே உன்னை வேலைக்கு வரச் சொல்லிட்டானாம்!”
“எனக்கென்ன பயம்? நான் அவங்க சுபாவத்தைத் தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்”
சமாளித்தவள் மறக்காமல் தனக்காக வேப்பம்பூவைச் சேகரித்து வைக்குமாறு சொல்லிவிட்டுப் பின்வாயில் வழியே வெளியேறினாள். அங்கே ஒரு எலுமிச்சை மரம் உண்டு.
அதைப் பார்த்ததும் ஒரு ஞாபகம் அவளது மனதில் மயிலிறகின் மென்மையோடு தீண்டியது.

அது கடந்த ஆண்டு கோவில் கொடை சமயத்தில் நடந்த நிகழ்வு.
அச்சமயத்தில் கொடைக்காக இங்கே வந்திருந்த மலர்விழியின் கணவன் மகிழ்மாறனும், பவிதரனும் இதே எலுமிச்சை மரத்தடியில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
பவிதரனின் கையிலிருந்த கோப்பில் இருந்து ஒரு ரசீது பறந்து வந்து ஈஸ்வரியின் அருகே விழுந்தது. அவள் கொடைக்காக தாவணி உடுத்தி தயாராகியிருந்தாள்.
பனையோலை வெட்டுவதற்கு அரிவாள் வாங்க அங்கே வந்திருந்தாள். தன்னருகே கிடந்த ரசீதை எடுத்தவள் அதைப் பவிதரனிடம் நீட்டினாள்.
பவிதரன் ரசீதை வாங்காமல் தன்னையே பார்க்கவும் அவளுக்குள் மெல்லிய பரபரப்பு.
‘இப்ப எதுக்கு இப்பிடி பாத்து வைக்காங்களாம்?’
மனதில் என்னென்னமோ உணர்வுக்குழப்பங்கள்! ஒரு பெண் தனது மனதில் நினைப்பதை எல்லாம் வாயால் சொல்வதில்லை. ஈஸ்வரியும் முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டாள்.
“என்னத்துக்கு இப்பிடி மண்ணாந்தை மாதிரி நிக்குறிங்க? ரசீதை வாங்கிக்கோங்க.”
“திடீர்னு என் கண்ணுக்கு நீ பொண்ணு மாதிரி தெரியுற. அதான் ஈஸ்வரியா வேற யாராவதானு கூர்ந்து பாத்துக்கிட்டேன்”
கேலியாகப் பேசியபடி கோப்பில் அந்த ரசீதைப் பத்திரப்படுத்தினான் பவிதரன்.
“அப்ப இத்தனை நாளு உங்க கண்ணுக்கு நான் எப்பிடி தெரிஞ்சேனாம்?”
“அடாவடியா பேசுற பையன் யாரோ சுடிதார் போட்டு மாறுவேசத்துல உலாவுற மாதிரி தெரிஞ்ச.”
“உங்க கண்ணுக்குப் பொண்ணா தெரியணும்ங்கிறதுக்காகவெல்லாம் இந்த மாதிரி தாவணி கட்டிக்கிட்டுத் திரிய முடியாது. நானே இது அன்கம்ஃபர்டபிளா இருக்குனு எரிச்சல்ல இருக்கேன். வாங்கி கட்டிக்காம நகருங்க. அரிவாளை எடுக்கணும்”
“யாரை வெட்டப் போற?” என அவன் கிண்டலாகக் கேட்க
“இப்பிடியே பேசுனா உங்க வாய்லதான் வெட்டு விழும். நகருங்க”
அவனிடம் அத்துணை வாய்த்துடுக்காகப் பேசியபோதும் ஒருமுறை கூட பவிதரனின் முகம் மாறவில்லை. அதற்கு முன்னரும் அதற்கு பிறகும் எண்ணற்ற முறைகள் மலர்விழியின் வீட்டில் அவனைச் சந்தித்திருக்கிறாள்.
மலர்விழியின் குடும்பத்துக்குச் சேரவேண்டிய சொத்துகளை மாணிக்கவேலுவிடமிருந்து பவிதரன் மீட்டுக்கொடுத்த கதை கூட அவளுக்குத் தெரியும்.
அதன் பிறகும் மதுமதியால் மலர்விழியின் ஓரக்கத்தியும் புவனேந்திரனின் மனைவியுமான ஆதிராவின் வாழ்க்கையில் வந்த குழப்பத்துக்கு அவன் தீர்வு கண்டதையும் அறிவாள்.
பணமே பிரதானமென நினைக்கும் தந்தை! பணத்திமிரில் தலைகால் புரியாமல் ஆடும் அன்னை! சுயநலமே பெரிதென அடுத்தவர் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கித் தனது வாழ்க்கையையும் கெடுத்துக்கொண்ட தங்கை!
இத்தனை சிக்கலானக் குடும்பத்தில் அவன் மட்டும் நியாயவானாய் இருப்பது எத்துணை பெரிய சிரமம்? சொல்லப்போனால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பொறுப்பேற்று அதற்கு தீர்வும் கண்டறிவதற்குள் அவன் எத்தனைய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டிருப்பான்?
அவ்வபோது பவிதரன் மீது ஈஸ்வரிக்குப் பரிதாபம் வருவதுண்டு.
எதேச்சையாக அவனது கார் விருட்டென்று சாலையில் கடக்கும்போது கூட ஒரு நிமிடம் நின்று “கடவுளே! இவங்க நல்ல மனுசனா இருக்காங்க. ரொம்ப சோதிக்காம அமைதியான வாழ்க்கைய குடு” என அவள் வேண்டியதும் உண்டு.
ஆம்புலன்ஸ் கடக்கையில் நாம் வேண்டுவோமே கடவுளை நோக்கி, அது போலதொரு வேண்டுதல்தான் ஈஸ்வரியுடையதும்.
இக்கட்டில் சிக்கிய உயிருக்கு மட்டுமில்லை மனதுக்கும் ஆண்டவன் தானே தீர்வாக இருப்பான்.
பவிதரனிடம் வேலை பார்ப்பதில் அவளுக்குப் பெரிதாகத் தயக்கமில்லைதான். ஆனால் வேலை விசயத்தில் அவன் எப்படியென அவளுக்குத் தெரியாதே!
அதனால்தான் குழலியிடம் விசாரித்தாள். அவரும் பொறுமையானவன் என்றதும் சின்னதொரு நிம்மதி ஈஸ்வரியின் மனதில்.
“ஏட்டி! ஏன் எலுமிச்சை மரத்தடில காவல் காத்து நிக்குற?”
திண்ணையில் நின்று குழலி கேட்கவும் சுதாரித்தவள் தன் நாக்கைக் கடித்து அசட்டுச்சிரிப்பை உதிர்த்தாள். நான் கற்பனையில் ஆழ்ந்திருந்தேன் என்றா அவரிடம் சொல்லமுடியும்? சமாளிக்க முடிவு செய்தாள்.
“அது… எனக்கு ரெண்டு பழம் குடு அத்தை. ஜூஸ் குடிக்க ஆசையா இருக்கு”
பொய்தான்! ஆனால் யாருக்கும் பாதிப்பு வராத வகையில் சொல்லப்பட்ட பொய்!
குழலி கொடுத்த எலுமிச்சை பழங்களின் சிட்ரஸ் நறுமணத்தை நுகர்ந்தபடி வீடு வந்து சேர்ந்தவள் அன்னையிடம் பருப்போடு பழங்களையும் கொடுத்தாள்.
“எலுமிச்சை எதுக்குல?”
“நாளைக்கு நான் ஆபிஸ் போகணும்ல. எனக்கு லெமன் சாதம் பண்ணுறதுக்கு”
மகள் அமர்த்தலாகப் பதிலளிக்கவும் இளவரசிக்குப் புரியவில்லை.
“என்னல சொல்லுத?”
“மலரோட அண்ணன் இருக்காங்கல்ல, அவங்க ஆபிஸ்ல அப்பா எனக்கு வேலைக்குக் கேட்டுதாம். குழலி அத்தை சொல்லிச்சு. அவங்க என்னை நாளைக்கே வேலைக்கு வரச் சொல்லிட்டாங்களாம்”
மகளின் முகத்திலிருந்த மலர்ச்சி இளவரசியின் இதயத்தைக் குளிர்வித்தது.
ஒரே ஒரு பெண்பிள்ளை! சீராட்டி வளர்த்து, நல்லதொரு கல்வியைக் கொடுத்தாயிற்று! இனி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டால் நிம்மதி!
ஆனால் ஈஸ்வரிக்கு வேலைக்குச் சென்றே ஆகவேண்டுமென்ற பிடிவாதம். இந்தப் பிடிவாதம் இல்லையென்றால் அம்பாசமுத்திரத்து வரனானக் கர்ணனையே பேசி முடித்திருக்கலாம்.
அப்போது கல்லூரிப்படிப்பினிடையே திருமணம் செய்துகொள்ளும் எண்ணமேயில்லை என்று ஈஸ்வரியும் சொல்லிவிட்டாள். கூடவே அவர்கள் பெரிய இடம் என்ற தயக்கம் இளவரசிக்கும் தட்சிணாமூர்த்திக்கும்.
அந்தச் சம்பந்தம் கைகூடவில்லை. கர்ணனுக்கும் அவனுக்கேற்ற பெண்ணுடன் திருமணமாகிவிட்டது. யாருக்கு யாரென இறைவன் பிறக்கும்போதே தீர்மானித்துவிடுவான். ஈஸ்வரிக்குக் கர்ணன் இல்லையென இறைவனே தீர்மானித்த பிறகு யார் என்ன செய்தாலும் உறவு நிச்சயமாகாது அல்லவா!
பெருமூச்சொன்று கிளம்பியது இளவரசியிடம்.
“உனக்கு வேலை கிடைச்சது நிம்மதியா இருக்கு. ரெண்டு வருசம் உன் சம்பளத்தைச் சேர்த்து வச்சிட்டா கல்யாணச்செலவுக்குத் திணறவேண்டாம் பாரு”
அன்னையின் முகத்தில் இருந்த நிம்மதி அவளுக்கும் இதத்தைக் கொடுப்பதாய்!
சொல்லப்போனால் இதற்காகதான் அவள் வேலைக்குச் செல்லவேண்டுமெனப் பிடிவாதம் பிடித்ததே!
அவளுக்காக அன்னையும் தந்தையும் சில பவுன்களைச் சேர்த்து வைத்திருப்பது தெரியும். ஆனால் நகையோடு திருமணச்செலவு முடிவதில்லையே.
துணிமணி, பண்ட பாத்திரங்கள், மண்டபச்செலவு, சாப்பாடு என ஒரு பெரிய தொகையை விழுங்கும் நிகழ்வுதானே திருமணம். சொல்லப்போனால் வாழ்க்கையில் அடிபட்டு மிதிபட்டுச் சம்பாதித்த அனைத்தையும் விழுங்கி ஏப்பமிட்டுச் செரித்துவிடும் நிகழ்வும் கூட.
தனியொருவராய் தந்தையால் இத்தனை செலவையும் சமாளிக்க முடியாது. அதனாலேயே வேலைக்குச் செல்லும் முடிவில் ஸ்திரமாய் இருந்தாள் ஈஸ்வரி.
இதோ நேர்க்காணல் எதுவுமின்றி வேலையும் கிடைத்துவிட்டது சிகாமணியின் உதவியால்.
தனது படிப்பின் அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் கணக்குவழக்கு சம்பந்தப்பட்ட வேலையைத்தான் தனக்குக் கொடுப்பார்கள் என்று நம்பி குதூகலித்தாள் ஈஸ்வரி.
மாலையில் வீடு திரும்பிய தட்சிணாமூர்த்தி தனது மொபைல் போன் பேட்டரி பழுதாகிவிட்டதால் போன் செய்து தகவலைத் தெரிவிக்க முடியவில்லை என்றார்.
“நான் வேற எங்கயும் வேலை இருந்தா சொல்லுங்கனுதான் அந்தத் தம்பி கிட்ட கேட்டேன். நம்ம நிலமைய புரிஞ்சிக்கிட்டு அவரோட ஆபிசுலயே வேலை இருக்குனு சொல்லி உன்னைச் சேர்த்துக்குறதா சொல்லிட்டாரு”
தட்சிணாமூர்த்தி பவிதரனின் அலுவலகத்தில் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னதும் ஈஸ்வரியின் மனம் நன்றியோடு அவனை நினைத்துக்கொண்டது. சம்பளம் பற்றியும் குறிப்பிட்டிருந்தானாம். ஒன்பதாயிரம் என்றார் தட்சிணாமூர்த்தி.
திருநெல்வேலியில் வேலையில் எந்த முன் அனுபவமுமற்ற ஒரு பட்டதாரிக்கு இந்தச் சம்பளம் அதிகம்தான் என்பதால் அவளும் சுணங்கவில்லை.
“என்ன வேலைனு கேட்டியாப்பா?” ஈஸ்வரி கண்களில் ஆசை மின்ன வினவ
“அதைக் கேக்கலயே. பவி தம்பி சொன்னாலும் எனக்குப் புரியாதுல. எல்லாம் உன் படிப்புக்கேத்த வேலையா தான் இருக்கும்” என்றார் தட்சிணாமூர்த்தி.
இரவெல்லாம் கணினி முன்னே அமர்ந்து பரபரப்பாய் வேலை செய்வது போல கனவு வந்தது ஈஸ்வரிக்கு.
அந்தக் கனவு கொடுத்த இனிமையோடு பாளை பேருந்து நிலையம் அருகே அமைந்திருந்த பவிதரனின் அலுவலகத்துக்குப் போனவளிடம் அவன் ஒப்படைத்த வேலை மாபெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
“எதே? இந்த வேலையா?”
திகைத்து விழிகளை மூடாமல் நின்றவளின் அதிர்ச்சி பவிதரனின் கறார்ப்பேச்சில் இன்னும் அதிகரிப்பதாய்! அப்படி என்ன வேலையைக் கொடுத்திருப்பான் அவன்?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

