“எனக்கானவங்கனு நான் சிலரை மட்டும் என் மனசுல ஸ்பெஷலான ப்ளேஸ்ல வச்சிருக்கேன்… அவங்க கிட்ட நான் எப்பவும் ஈகோவ காட்டுறதில்ல… என்னோட உண்மையான சுபாவத்தையும் அவங்க கிட்ட மறைக்குறதில்ல… அவங்க கிட்ட நடிக்கவோ போலியா பழகவோ எனக்குப் பிடிக்காது… அதையே அவங்களும் செய்யணும்னு நான் எதிர்பார்ப்பேன்… நான் ஒரு டாமினேட்டிங் கேரக்டர்னு எனக்கே நல்லா தெரியும்… என்னோட இந்தக் குணத்தை எனக்கான மனுசங்க கிட்ட நான் மறைச்சதில்ல… அவங்க அதுக்காக என் மேல வருத்தப்பட்டாலும் பெருசா எடுத்துக்க மாட்டேன்… என்னோட டாமினேண்ட் பிஹேவியர் காரணம் இல்லாம வெளிப்படாதுங்கிற நம்பிக்கை எனக்கு”
-ராகவர்தன்
“இவங்களோட டார்கெட் பெரிய பெரிய ஹோட்டல்ஸ், பப் மட்டும் கிடையாது… சாமானிய மக்களுக்கு நெருக்கமான நிறைய இடங்கள்ல இவங்க போதைப்பொருளை விற்பனை பண்ணுறதா நம்பத்தகுந்த சோர்ஸ் ஒன்னுல இருந்து தகவல் கிடைச்சிருக்கு”
ANIUவின் மூத்த அதிகாரி சொன்ன தகவல் இது.
இதன் தொடர்ச்சியாக அவர் சொன்ன செய்தி தான் ராகவர்தனோடு சேர்ந்து மற்ற அதிகாரிகளையும் உச்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளாக்கியது எனலாம்.
“இந்த ட்ரக் பெட்லர்ஸ் போதைப்பொருள் சப்ளை பண்ணுறதுக்கு நிறைய புது டெக்னிக்கை யூஸ் பண்ணுறாங்க… டேட்டிங் ஆப்ஸ் மூலமா தகவல் குடுத்து, ஸ்விகி, ஜொமேட்டோ மாதிரி ஃபுட் டெலிவரி ஆப்ஸ் மூலமா சாப்பாடு டெலிவரி பண்ணுற மாதிரி போதைப்பொருளை சப்ளை பண்ணிடுறாங்க… அது மட்டுமில்ல, ரோட் ஓரத்துல மலிவான விலையில ட்ரஸ், ஷூஸ், பொம்மை விக்கிற மாதிரி கடை போட்டு அவங்க கிட்ட ட்ரக் வாங்குறவங்களுக்குத் தகவல் குடுத்து அந்தப் பொருட்களுக்குள்ள ட்ரக்கை மறைச்சு வச்சு அனுப்பிடுறாங்க… எல்.எஸ்.டி ஸ்டாம்ப், எக்ஸ்டசி டேப்ளட்னு எல்லாமே இந்த மாதிரி தான் சப்ளை பண்ணுறாங்க”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
டெலிவரி எக்சிகியூட்டிவைத் தேடி படிகளில் தடதடவென இறங்குகையில் ராகவர்தனின் மூளைக்குள் இவை அனைத்தும் ஓடின.
அவர் சொன்னதைக் கண்கூடாகப் பார்த்த பிறகு சம்பந்தப்பட்டவனைத் தவறவிட முடியுமா?
ஷூ கால்கள் ஓசை எழுப்ப வேகமாக ஒவ்வொரு தளங்களையும் கடந்தவன் கீழே வந்ததும் திடுமென தன் மீது மோதிய டெலிவரி எக்சிகியூட்டிவின் சட்டையை இறுக்கமாகப் பற்றி அவனை விழாமல் நிறுத்தினான்.
அவனது முகமெங்கும் வியர்வை ஊற்றாகப் பரவியிருந்தது.
“சா… சார்… ஆர்டரை மாத்திக் குடுத்துட்டேன்” என்று அவன் தவிக்க
“இதையா?” என்று ராகவர்தன் அந்தத் தபால் தலைகளை எடுத்துக் காட்டியதும் பயத்தில் எச்சில் விழுங்கினான்.
சுற்றும் முற்றும் பார்த்தவன் ராகவர்தனிடமிருந்து தப்பிக்க தனது முஷ்டியால் அவனது முகத்தைத் தாக்க எத்தனிக்க, அதை முன்னரே உணர்ந்தவனாக அவனது கரத்தை முறுக்கி முதுகின் பின் கொண்டு வந்த ராகவர்தன் சற்றும் தாமதிக்காமல் அவனது ஆடுகால் தசையில் மிதிக்க வலியோடு மடங்கி அமர்ந்தான் அந்த டெலிவரி எக்சிகியூட்டிவ்.
ஒரு கரத்தால் அவனைப் பிடித்தபடி இன்னொரு கரத்தால் மொபைலை அவன் எடுக்க இக்காட்சியைத் தனது வீட்டிலிருந்து பார்த்த அனுக்ரஹாவுக்குக் குழப்பமும் பயமும் அடிவயிற்றைப் பிரட்டியது.
அவளுக்குள் எதுவோ ஒன்று “சும்மா வேடிக்கை பாத்துட்டு நிக்காத… அவன் தனியாளா எவ்ளோ நேரம் சமாளிப்பான்?” என்று தூண்டவும் வேகமாகத் தனது வீட்டை அடைத்துவிட்டு மின்தூக்கியை நோக்கி ஓடினாள் அனுக்ரஹா.
அதே நேரத்தில் தரிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்த ராகவர்தன் தனது மொபைலில் எழும்பூர் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு தகவலைக் கூற அவர்கள் அத்தகவலை பல்லாவரம் காவல் நிலையத்துக்குத் தெரிவித்தார்கள்.
இன்னும் சிறிது நேரத்தில் காவல்துறையினர் உதவிக்கு வந்துவிடுவார்கள் என்றாலும் பயமும் கோபமுமாகத் திமிறிக் கொண்டிருந்த எக்சிகியூட்டிவைத் தனியொருவனாகச் சமாளிக்க ராகவர்தன் ஒன்றும் சினிமா போலீஸ் இல்லையே!
அவனை நோக்கி ஓடிவந்த அனுக்ரஹா மூச்சு வாங்க நிற்க திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் கோபம் மின்னியது.
“உன்னை யாரு இங்க வரச் சொன்னது?” என்று சீறினான்.
“உ… உன்னால தனியா… இதைப் பிடி” என்று தனது துப்பட்டாவை அவனிடம் நீட்டினாள்.
ராகவர்தன் தாமதிக்காமல் வாங்கிக்கொண்டு டெலிவரி எக்சிகியூட்டிவின் இரு கரங்களையும் பின் பக்கம் சேர்த்து வைத்துக் கட்டினான்.
அதன் இன்னொரு நுனியைப் பிடித்து இழுத்துக் கால்களையும் அவன் கட்டிப்போட அனுக்ரஹா அனைத்தையும் பயத்துடனே பார்த்துக்கொண்டிருந்தாள்.
கிடைத்த இடைவெளியில் டெலிவரி எக்சிகியூட்டிவின் முகத்தையும் பார்த்தாள் அவள்.
அங்கே பயமும் கோபமும் மட்டுமே மிஞ்சியிருந்தது.
“எப்பிடி தனியா ஸ்டேசனுக்குக் கொண்டு போவ?” என்று அவனைக் கை காட்டிக் கேட்டவளிடம்
“இன்னும் கொஞ்சநேரத்துல பல்லாவரம் போலீஸ் வந்துடுவாங்க” என்றவன் டெலிவரி எக்சிகியூட்டிவின் மொபைலை அவனது பேண்ட் பாக்கெட்டில் தேடினான்.
அது கிடைத்ததும் அனுக்ரஹாவிடம் “அந்த பைக்கை லாக் பண்ணி சாவிய கொண்டு வா” என்று கட்டளையிட்டான்.
அவளும் அவன் சொன்னபடியே செய்து சாவியைக் கொண்டு வந்து அனுக்ரஹா கொடுக்கவும், காவல் வாகனத்தின் ஓசை கேட்டது.
அப்பார்ட்மெண்டுக்குள் நுழையும் முன்னர் இருக்கும் காவலாளியிடம் எதையோ வாகனத்திற்குள் இருப்பவர் சொல்ல அவரும் அனுமதித்தார்.
காவல் வாகனத்தின் சைரன் அந்த ஒட்டுமொத்த வசிப்பிடத்தையும் விழிக்க வைத்தது.
அதிலிருந்து இறங்கி அவனை நோக்கி வந்த காவல் ஆய்வாளர் ராகவர்தனுக்குச் சல்யூட் வைக்க அவனும் நடந்ததை சொன்னான்.
“ஆர்டர் போட்ட ஆள் இந்த அப்பார்ட்மெண்டோட ‘ஈ’ ப்ளாக்ல இருக்கான்… நேம் பிரகாஷ்” என்றவன் “அனு! அப்பார்ட்மெண்ட் செகரட்டரிய அழைச்சிட்டு வா” என்க அவளும் ஓடினாள்.
அவள் செகரட்டரியுடன் திரும்பி வருகையில் டெலிவரி எக்சிகியூட்டிவைக் கைவிலங்கு பூட்டி காவல் வாகனத்தில் ஏற்றியிருந்தார்கள்.
அனுக்ரஹாவிடம் சிடுசிடுத்தபடி வந்த செகரட்டரி ராகவர்தனின் கூரிய பார்வையைச் சந்தித்ததும் பவ்வியமானார்.
“என்ன சார் பிரச்சனை?”
“லிப்ட்டை டெம்பரரியா ஆப் பண்ணச் சொல்லுங்க… இவங்களுக்கு ஒவ்வொரு ப்ளாக்கும் க்ரவுண்ட் ஃப்ளோர்ல கனெக்ட் ஆகுற இடத்தைக் காட்டுங்க… இன்ஸ்பெக்டர் என் கூட நீங்க வாங்க”
செகரட்டரி அவன் சொன்ன யாவற்றையும் செய்ய ‘ஈ’ ப்ளாக்கின் இருபத்திரண்டாம் எண் வீட்டை நோக்கி படிகளில் ஏறினார்கள் ராகவர்தனும் பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளரும்.
இரண்டாம் தளத்தில் அமைந்திருந்த வீட்டின் அழைப்புமணியை அவன் அழுத்தினாலும் கதவு திறக்கவில்லை.
ராகவர்தன் பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை.
காவல் ஆணையரின் துப்பாக்கியை எடுத்து கதவின் தாழ்ப்பாளை நோக்கிச் சுட ‘படீர்’ என்ற சத்தத்துடன் அந்த இடம் சிதறிப்போனது.
“டிப்பார்ட்மெண்ட்ல நீங்க பதில் சொல்லிப்பிங்க தானே?” என்று கேட்டபடியே கதவை உதைத்தவன் அது பெரும் திணறலோடு திறந்துகொள்ளவும் துப்பாக்கியைப் பிடித்தபடியே உள்ளே நுழைந்தான்.
“ஒழுங்கா நீயா வந்துடு பிரகாஷ்” என்று காவல் ஆய்வாளர் கத்த அந்நபரும் வெளிறிய முகத்தோடு வந்தான்.
துப்பாக்கி முனையில் அவனைப் பிடித்தார்கள் ராகவர்தனும் காவல் ஆய்வாளரும்.
ஒருவழியாக அவர்கள் கீழே வந்த போது அங்கே அப்பார்ட்மெண்ட்வாசிகள் கூடியிருந்தார்கள்.
அவர்களிடையே சலசலப்பு எழும்போதே பிரகாஷும் காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டான்.
இப்போதும் செகரட்டரியின் கடுகடு முகம் ராகவர்தனை உறுத்தியது.
காவல் ஆய்வாளரும் இதர காவலர்களும் அவனுக்குச் சல்யூட் வைத்துவிட்டுக் காவல் வாகனத்தைக் கிளப்பி அங்கிருந்து வெளியேறியதும் அப்பார்ட்மெண்ட்வாசிகளிடம் அனுக்ரஹாவைக் காட்டி எதையோ சொல்லிக்கொண்டிருந்த செகரட்டரியை நோக்கி வேக எட்டுகளுடன் வந்தான் ராகவர்தன்.
கலங்கி நின்ற அனுக்ரஹாவின் கரத்தைப் பற்றி தன்னருகே இழுத்து நிறுத்தியவன் “மிஸ்டர் செகரட்டரி” என்று கைவிரலைச் சொடுக்கி அழைக்க அவரும் திரும்பினார்.
ராகவர்தனின் கரம் அனுக்ரஹாவின் தோளை அணைத்திருப்பதைப் பார்த்ததும் “சா…சார்” என்றவர் அமைதியாக எஞ்சியிருந்த அப்பார்ட்மெண்ட்வாசிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
“அனு என்னோட ஃபியான்சி… அவளுக்கும் நடந்த சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல… நான் எதேச்சையா வந்த இடத்துல இப்பிடி ஒரு இன்சிடென்ட் நடந்து போச்சு… இதைக் காரணமா வச்சு யாரும் அனுவ தொந்தரவு பண்ணக்கூடாது… முக்கியமா நீங்க”
விரல் சுட்டி அவன் பேசியதும் மொத்தக் கூட்டமும் அமைதியாகிப்போனது.
அனுக்ரஹாவின் முகத்தில் கலக்கம் கலைய ஆரம்பித்தது. அவனது அறிவிப்பும் அணைப்பும் அவள் மனதைக் குழப்பிய கேள்விக்குப் பதிலாக அமைந்தது எனலாம்.
“எல்லாரும் போகலாம்”
தலை மேல் கையுயர்த்திப் போகுமாறு அவன் சொன்னதும் அனைவரும் பேசியபடியே அங்கிருந்து போய்விட்டார்கள்.
கூட்டம் போனதும் அனுக்ரஹாவிடம் “நான் கிளம்புறேன் அனு” என்றவன் கிளம்ப எத்தனிக்க அனுக்ரஹாவோ அவனது கரத்திலிருந்த வெள்ளிக்காப்பைத் தனது இரு விரல்களால் பிடித்து நிறுத்தவும் என்னவென்பது போல பார்த்தான்.
அவள் பதில் பேசவில்லை. அவளது விரல்கள் காப்பைத் திருகுவதையும் நிறுத்தவில்லை.
தலைகுனிந்து நின்றவளிடம் “உன்னைக் கல்யாணம் பண்ணுறதுக்கும் யாரோ ஒருத்திய கல்யாணம் பண்ணுறதுக்கும் வித்தியாசம் இருக்கு… அதனால தான் ஊர்ல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி அம்மா கிட்ட நம்ம மேரேஜ் பத்தி அங்கிள் கிட்ட பேசச் சொல்லிட்டு வந்தேன்” என்றான் அவன்.
அனுக்ரஹாவின் விழிகள் சட்டென உயர்ந்தன.
“ராகன்”
கண்களும் உணர்ச்சிப்பிழம்பாக அவனுக்கான பிரத்தியேக பெயரை உச்சரித்தாள் அனுக்ரஹா.
ராகவர்தனின் முகம் அந்த அழைப்பில் கனிந்தது.
“ரொம்ப வருசம் ஆச்சு… நீ என்னை ராகன்னு கூப்பிட்டு”
அவனது குரலில் இருந்தது என்ன? ஏக்கம்? ஆதங்கம்? இயலாமை? இன்னதென இனம் பிரித்தறிய இயலாது திணறினாள் அனுக்ரஹா.
அந்தத் திணறலைத் தனக்குக் கிடைத்த வாய்ப்பாகப் பற்றிகொண்டு முகபாவத்தைப் பழையபடி மாறிக்கொண்டான் ராகவர்தன்.
சிரிப்பை விழுங்கிக்கொண்டு சொன்னவன் “இன்னும் கொஞ்சநாளுக்கு என்னால வேற எதுலயும் கான்சென்ட்ரேட் பண்ண முடியாது… ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் திஸ்” என்றதும் அனுக்ரஹாவின் தலை சம்மதமாக அசைந்தது.
“நீ போ”
“நீ சாப்பிட்டுட்டுப் போகலாமே?”
“நான் இப்பவே ஸ்டேசனுக்குப் போகணும்”
இதற்கு மேல் வற்புறுத்தவில்லை அனுக்ரஹா.
ராகவர்தனின் ராயல் என்ஃபீல்ட் ஒலிம்பியா க்ராண்டே ரெசிடென்சியை விட்டு வெளியேறுவதைப் பார்த்தபடி நின்றவள் பின்னர் மின்தூக்கி இயங்குகிறதா என பார்த்துவிட்டு அதில் ஏறினாள்.
வீட்டுக்கு வந்து சேர்ந்தவளுக்கு உறக்கம் வரவில்லை.
“அனு என்னோட ஃபியான்சி” என்று சொன்ன ராகவர்தனே கண்ணுக்குள் வந்து போனான்.
இத்தனை நாட்கள் இருந்த குழப்பம் தீர்ந்து புதுவித அலைக்கழிப்பொன்று அவளை ஆட்கொண்டது.
சற்று முன்னர் ராகவர்தன் தீண்டிய தோள்களில் மெல்லிய குறுகுறுப்பும், அவனது வெள்ளி காப்பைப் பற்றியிருந்த விரல்களில் ஒரு விதிர்விதிர்ப்பும் பரவுவது போன்ற பிரமை.
அந்த வெள்ளி காப்பை இன்னும் அணிகிறானா?
ஆச்சரியம் தான்!
மெத்தையில் விழுந்தவள் உறக்கமில்லாததால் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தாள்.
‘கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே’ என பாடும் நிலா அவள் செவிக்குள் உருகிக்கொண்டிருக்க வான் நிலாவோ மேகத்துக்குள் மறைய ஆரம்பித்தது.
“சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!”
கண்களை மூடி பாடலில் கரையத் தொடங்கியவளுக்கு அலைக்கழிப்பு எல்லாம் மாயமாய் மறைந்த உணர்வு!
“நல்ல மனையாளின் நேசமொரு கோடி
செஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோச சாம்ராஜ்ஜியமே!”
இசையானது அலைக்கழிப்பைப் போக்கி அமைதியை விதைக்கவல்லது. அதன் மகிமையால் உறங்கியும் போனாள்.
மறுநாள் விடியலில் எழுந்தவளுக்கு ஏர் பாட்சுடன் உறங்கியதில் செவி மடல்கள் வலியெடுக்கவும் அவற்றைக் கழற்றி விட்டு அலுவலகம் செல்லத் தயாரானாள்.
காலையுணவைச் சாப்பிடவே தோன்றவில்லை. பிரபாவதி இல்லாமல் தனியே சாப்பிட இஷ்டமில்லை.
அவர்களின் அலுவலகத்தில் சிறிய மாடுலார் கிச்சன் உண்டு. அதில் எதையாவது சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுடன் மெல்டிங் பாட் அலுவலகத்துக்குக் கிளம்பினாள்.
அங்கே நுழைந்ததும் பசியில் வயிறு காந்தியது.
மாடுலார் கிச்சனின் ஃப்ரிட்ஜில் காய்கறிகள் இருந்தன. பன்சி ரவை பாக்கெட்டைப் பார்த்ததும் சிம்பிளாக உப்புமா செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
அதற்குள் தருணும் வேதிகாவும் வந்த அரவம் கேட்டது.
உப்புமாவுக்காக பெரிய வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை எல்லாம் தேங்காய் எண்ணெய்யில் வறுபடும் மணம் அவர்களையும் கிச்சனுக்குள் வர வைத்தது.
“காலையிலயே சமையலா? நான் கூட கீதாக்கா தான் நமக்கு டீ போடுறாங்கனு நினைச்சேன்” என்றபடி அனுக்ரஹா நறுக்கி வைத்திருந்த கேரட் துண்டுகளில் சிலவற்றை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டான் தருண்.
“டேய் நானே கொஞ்சமா தான்டா கட் பண்ணுனேன்” என அவனது கரத்தில் அடித்த அனுக்ரஹா காய்கறிகளை வதக்கத் தொடங்கினாள்.
“உப்புமா கூட காபி குடிச்சா செமய்யா இருக்கும் அனு” என்ற வேதிகாவிடம் உப்புமாவுக்கு தண்ணீர் கொதித்ததும் காபி போடுமாறு சொன்னவள் முந்தைய தினம் ஏதோ ஒரு வலைதளத்தில் பார்த்த கிராபிக்ஸ் வடிவமைப்பு பற்றி பேச ஆரம்பித்தாள்.
பேச்சு சுவாரசியத்தில் உப்புமாவும் காபியும் தயாரானது. மூவரும் சாப்பிட்டபடியே பேசியபோது திடுமென தருண் யூடியூபைக் காண்பித்தான்.
“ஹேய் அனு! உன்னோட ஏ.சி.பி”
அனுக்ரஹா அவசரமாக அவனது மொபைலை வாங்கி தொடுதிரையைப் பார்த்தாள்.
ராகவர்தன் செய்தி தொலைகாட்சிகளுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தான்.
புத்தாண்டுக்காக பெருநகர காவல்துறை எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவரித்தவன் “இந்த நியூ இயர் அசம்பாவிதம் எதுவுமில்லாத, முக்கியமா போதைப்பொருட்களோட ஆதிக்கம் இல்லாத நியூ இயரா இருக்கணும்னு நாங்க விரும்புறோம்… பொதுமக்களோட ஒத்துழைப்பை எதிர்பாக்குறோம்” என்றான்.
‘ஏன் முந்தைய இரவில் அப்பார்ட்மெண்டில் நடந்த சம்பவம் பற்றி எந்தச் செய்தியிலும் வரவில்லை’ என்ற ஆச்சரியம் அனுக்ரஹாவிற்கு.
அதன் பின்னர் அன்றைய அலுவல்களில் பொழுது வேகமாகக் கழிய ரீவாவும் பிரபாவதியும் அன்றைய தினம் மட்டும் ஐந்து சூப்பர் மார்க்கெட்களில் ஒப்பந்தம் பேசிவிட்டுத் திரும்பினார்கள்.
பிரபாவதியுடன் வீட்டுக்குத் திரும்பியவள் அப்பார்ட்மெண்ட்வாசிகள் தங்களை ஒரு மாதிரி பார்ப்பது ஏன் எனக் கேட்ட தோழியிடம் முந்தைய தினம் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னாள்.
பிரபாவதி அனைத்தையும் கேட்டவள் “என்னடி இவ்ளோ நடந்திருக்கு? இதுக்கு இடையில செகரட்டரி ஒட்டகத்துக்கு டோசும் குடுத்திருக்கார் உன் ஏ.சி.பி… எல்லாத்தையும் விட ஃபைனலி அவர் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறார்னு தெரிஞ்சுடுச்சு… இனிமேலாச்சும் குழம்பாம ரிலாக்சா இரு” என்றாள்.
“ஹூம்”
பெருமூச்சுடன் வீட்டுக்குள் நுழைந்தவள் இரவு பிரபாவதி உறங்கியதும் ஜன்னலருகே அமர்ந்து வேடிக்கை பார்ப்பது போல பழைய நினைவுகள் பின்னிய இழைகளினூடே பயணிக்க ஆரம்பித்தாள். அனுக்ரஹாவுக்கு மட்டும் ‘ராகனாக’ இருந்த ராகவர்தன் ‘ஹிட்லர்’ ஆன வரலாறு அந்த நினைவுகளில் தானே பொதிந்திருக்கிறது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


