“வெயிட் மிஸ்டர் நிலவன். உங்க ஆட்டிட்யூட் எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களோட மன்த்லி சப்ளை கெபாசிட்டி என்ன? அக்ரிமெண்ட் போடுவோம்!” என்றார்.
நிலவனின் முதல் வெற்றி அங்கே பதிவானது. சப்ளை செயின், பேமெண்ட் டெர்ம்ஸ், லாஜிஸ்டிக்ஸ் என அனைத்தையும் ஓர் அனுபவம் வாய்ந்த சி.இ.ஓ போலப் பேசி முடித்தான்.
அங்கிருந்து அவனது பயணம் பேருந்து மூலமாகத் தூத்துக்குடியை நோக்கித் தொடர்ந்தது. தூத்துக்குடியின் பெரிய மளிகை மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நெட்வொர்க்கின் உரிமையாளர் ஜெயபாலனைச் சந்தித்தான். அங்கே பேச்சைவிடச் செயல் முக்கியம் என நினைத்த நிலவன், ஒரு சிறிய எலெக்ட்ரிக் குக்கரில் தன் அரிசியை அங்கேயே சமைத்துக் காட்டினான். அந்தச் சூடான அரிசியில் இருந்து வெளிவந்த அந்தப் பாரம்பரிய கிச்சிலிச் சம்பாவின் நறுமணம், ஜெயபாலனின் ஏ.சி அறையைத் தாண்டி வெளியேயும் மணந்தது.
“அடேங்கப்பா! எங்க அப்பன் காலத்துல சாப்பிட்ட வாசம்ப்பா இது. நான் சப்ளை எடுத்துக்குறேன் தம்பி,” என்று அவர் எந்த மறுப்பும் இன்றி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இறுதியாகக் கன்னியாகுமரி. அங்குள்ள பிரம்மாண்டமான ஹைப்பர் மார்க்கெட் மேலாளரிடம், தனது சப்ளை சங்கிலியை விளக்கினான் நிலவன்.
“எனக்குச் சொந்தமா வாகன வசதிகள் இல்லைனாலும், லோக்கல் டிரான்ஸ்போர்ட் ஏஜென்ஸியோட தெளிவான அக்ரிமெண்ட் போட்டிருக்கேன் சார். அறுவடையான இருபத்தி நாலு மணி நேரத்துல, எந்த டேமேஜும் இல்லாம, ஈரம் படாம உங்க குடோனுக்கு வந்துடும்,” என்று அவன் கொடுத்த வாக்குறுதி, கன்னியாகுமரி மார்க்கெட்டையும் அவனது வசமாக்கியது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மூன்று பெரிய மாவட்டங்கள். மூன்று பிரம்மாண்டமான பிசினஸ் டீல்கள். அவனது இப்போதைய நிலைக்கு இது மாபெரும் வாய்ப்பு!
மாலை சூரியன் கடலில் மூழ்கும் வேளையில், கன்னியாகுமரிக் கடற்கரையின் ஓரமாக அலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றான் நிலவன். அவனது கைகளில் மூன்று பெரிய நிறுவனங்களின் கொள்முதல் ஒப்பந்தங்கள்.
மனநிறைவோடு கன்னியாகுமரியிலிருந்து அம்பாசமுத்திரத்துக்குப் பேருந்து ஏறியவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வீடு கலகலவென இருந்தது.
பிரகாஷ் நிலவனைக் கண்டதும் அன்போடு புன்னகைக்க நிலாவுக்கோ இக்காட்சியில் வாயெல்லாம் பல். கணவனுக்கும் உடன்பிறந்தவனுக்கும் ஒத்துப்போனால் அது பெண்களின் மனதைக் குளிரவைத்துவிடும்.
கூடவே நிலவனின் பார்வை அவனைக் கண்டதும் ஆர்வமாய் எழுந்து நின்ற நியதியிடம் படியவும் கூடுதல் உற்சாகம் நிலாவுக்கு.
“வந்துட்டியா? உன்னைக் காணலனு நியதி இப்பதான் அம்மாகிட்ட சொல்லிட்டிருந்தா நிலவா. போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா?” என வினவினாள்.
சாமர்த்தியமாகச் சகோதரனையும் நியதியையும் கோர்த்துவிட்டாள் அவள்.
“ம்ம்! மூணு பெரிய சூப்பர் மார்க்கெட்ல ஆர்டர் கிடைச்சிருக்கு. இனிமே நமக்கு நல்லகாலம்தான்”
நியதியின் முகம் பிரகாசித்தது. அவனது வளர்ச்சி அவளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“சரி! நீ சாப்பிட்டியா? சாப்பிட்டுட்டு நியதிக்கு நம்ம வயலைச் சுட்டிக்காட்டு. அப்ப இருந்தே பாக்கணும்னு சொல்லிட்டிருந்தா. அப்பாக்கு ஏதோ வேலை, எனக்கும் பிரகாஷுக்கும் செம டயர்டா இருக்கு.” என்று சொல்லிவிட்டு நிலா ஒதுங்கிக்கொள்ள நியதியோ ஆர்வமாய் நிலவனைப் பார்த்தாள்.
நிலவனுக்குச் சங்கடமாய் இருந்தது. ஆனால் நியதிக்கு அப்படியெல்லாம் இல்லை போல.
“அத்தை நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் நிலனுக்குச் சாப்பாடு எடுத்துவைக்குறேன்”
வசந்தா திகைத்துப் பார்க்க நியதியோ யாருடைய அனுமதியும் எதிர்பார்க்காமல் சமையலறைக்குள் போய்விட்டாள்.
“நீங்க ரெஸ்ட் எடுங்கம்மா. நான் சாப்பிட்டுக்குறேன்” என்று சொல்லிவிட்டான் நிலவனும்.
அவன் மனதுக்குள் ஆச்சரியம்! விஜயா எப்படி நியதியைத் தங்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தார் என்ற திகைப்பு. அது அவனது சகோதரியின் திறமையென யார் சொல்லுவது?
கைகழுவிவிட்டுச் சாப்பிட அமர்ந்தவன் தட்டில் சாதமும் குழம்பும் வைக்கப்பட்ட வேகத்தை வைத்து அவளிடம் மெதுவாகப் பேச்சுகொடுத்தான்.
“இங்க போரடிக்கலையா உனக்கு?”
“லைட்டா! ஆனா அத்தைகூட பேசிட்டிருந்தேன். அவங்க நல்லாப் பேசுறாங்க, எங்கம்மா மாதிரி கடுகடுனு இல்ல.”
“ப்ச்! அம்மாவப் பத்தி மத்தவங்ககிட்ட தப்பா சொல்லக் கூடாது”
“ஓஹ்! அப்ப மத்தவங்ககிட்ட பேசுறப்ப இதை ஞாபகம் வச்சுக்குறேன். உங்ககிட்ட சொல்லலாம். தப்பில்ல”
என்ன சொன்னாலும் பதிலடியைக் கச்சிதமாய்க் கொடுத்தவள் அவனைச் சிரிக்கவைத்துவிட்டாள்.
“என்னை வயலுக்கு அழைச்சிட்டுப் போவீங்களா? மதினி உங்க வயலைப் பத்தி அவ்ளோ பில்டப் குடுத்தாங்க நிலன்”
“ம்ம்!”
“பாயாசம் ஊத்தட்டுமா?”
இலையில் பாயாசத்தை ஊற்றி அப்பளத்தை எடுத்துக்கொடுத்தாள் அவனிடம். அவன் பிசைந்து சாப்பிடவும் “எதிர்ல இருக்குற ஆள்கிட்ட வேணுமானு கேக்கமாட்டீங்களா ஃபார்மர்?” எனத் துடுக்காய் வினவினாள்.
நிலவன் ஆச்சரியமாய் அவளைப் பார்த்தான்.
“இது நான் சாப்பிட்ட இலை”
“சோ வாட்? எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல”
அந்தரத்தில் நின்ற அவனது கரத்திலிருந்த பாயாசம் அப்பளக் கலவையை அவளே ஊட்டிக்கொண்டாள் தனக்கு.
“நிதி…” பயத்தில் பெயர் சுருங்கிவிட நியதியின் கண்களில் மெல்லிய ரசனை.
“ஃபைனலி நீங்க என் பேரைச் சுருக்கிக் கூப்பிட்டுட்டீங்க நிலன்”
“விளையாடாத நீ. இதெல்லாம்…”
“ஷப்பா! ஒரு வாய் சாப்பாடு உங்க கையால சாப்பிட்டதுல என்ன தப்பு இருக்கு?”
“இதெல்லாம் புரிஞ்சுதான் செய்யுறியா?”
“புரிஞ்சு உங்களைப் பிடிச்சதாலதான் செய்யுறேன். எனக்கு இருபது வயசாகுது. ஐ அம் நாட் அ ஃபீடிங் பாட்டில் பேபி.”
வாயடைத்துப்போனான் நிலவன்.
“சாப்பிடுங்க! அப்பிடியே உங்களுக்கும் என்னைப் பிடிக்கும்னு சொல்லிடுங்க”
“சொல்லலைனா…”
“அடுத்து தம்ளர்ல பாயாசம் ஊத்தி வச்சிருக்கேன். பிடிக்கும்னு சொல்லலைனா அதுல எலி மருந்தைக் கலந்து குடுத்துடுவேன்”
அவள் மிரட்டவும் சத்தமாக நகைத்துவிட்டான் நிலவன். அவனுக்கா அவளைப் பிடிக்காது? பார்த்த முதல் பார்வையிலேயே அவனது இதயத்துக்குள் குடிபெயர்ந்தவளை அவனுக்கு எப்படிப் பிடிக்காமல் போகும்? ஆனாலும் சின்னதாய் ஒரு தயக்கம். பெரியவீட்டுப் பெண்ணை வலையில் வீழ்த்தினான் என்று யாரும் சொல்லிவிட்டால்?
அப்படியே சொன்னால்தான் என்ன? உலகமா அழிந்துவிடும் என்ற மனநிலை நியதியுடையது.
“ஐயோ! எதையும் அனுபவிக்காம இந்தச் சின்னவயசுலயே சாக பயமா இருக்கு எனக்கு. உன்னைப் பிடிக்கும் தாயே”
கலகலப்போடு சாப்பிட்டு முடித்ததும் நிலா சொன்னபடி நியதியை வயலுக்கு அழைத்துப் போனான் நிலவன்.
முப்பது ஏக்கர் நிலம்! அதில் ஒட்டுரக நெல்லை விதைப்பது எல்லாம் நியதிக்குப் பிரமிப்பாக இருந்தது. வயலும் பசுமையும் வரப்புகளைப் பிரித்துக்கொண்டு பாயும் நீரும் கண்களுக்குக் குளிர்ச்சியாய்! மனதுக்கு இதமாய்!
ஈரமில்லா வரப்பில் அமர்ந்து கால்களை நீரில் அமிழ்த்தியவள் நிலவனையும் தன்னருகே அமரச் சொன்னாள்.
“இவ்ளோ பெரிய வயலை எப்பிடி மேனேஜ் பண்ணுறீங்க?”
“பிடிச்ச வேலை சுமையாத் தெரியாது நிதி”
“ம்ம்! உண்மைதான்”
“அதே மாதிரி பிடிச்சவங்களோட இருக்குற பொழுதுகளும் சுமையாத் தெரியாது போல. முதல் தடவை ஃபீல் பண்ணுறேன்”
அவன் தன்னைக் குறிப்பிடுவதை உற்சாகத்தோடு ரசித்தாள் நியதி. கன்னங்களில் துலிப் பூக்கள் போல வெட்கம் எட்டிப்பார்த்தது.
“பார்றா! வெக்கமெல்லாம் படத் தெரியுமா?”
“நானும் பொண்ணுதான்! எங்களுக்கும் வெக்கம் வரும்”
“வெக்கத்தோட துணிச்சலும் அதிகம். எந்த நாத்தனாரும் அண்ணியோட பிரதர் கூட இவ்ளோ சீக்கிரம் சகஜமாப் பழகிடமாட்டாங்க”
“அண்ணிக்கே அதுல பிரச்சனை இல்லங்கிறதால வந்த துணிச்சலா இருக்கலாம்”
“நிலா? அவ என்ன சொன்னா?”
நியதி காலடியில் பாய்ந்த நீரைப் பார்த்தபடியே சிரித்தாள்.
“அவங்களோட ட்வின் பிரதர் ஒருத்தர் மேல அன்பு வச்சிட்டா அந்த ஒருத்தருக்காக உலகத்தையேகூட எதிர்ப்பாராம். அந்த ஒருத்தரை எந்தக் காலத்துலயும் அனாதரவா விடமாட்டாராம். எடுத்த வேலையக் கச்சிதமா முடிப்பாராம். இவ்ளோ பிளஸ் பாயிண்ட்ஸ் உள்ள ஆளை யாருக்குத்தான் பிடிக்காது?”
தண்ணீரைப் பார்த்தபடி ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து அவள் வெளியிட்ட விதத்தில் நிலவனின் நெஞ்சம் கர்வங்கொள்ள அவனது மனதைப் பிடித்திருந்த தயக்கமும் சங்கடமும் அகன்றன அந்நொடியில்! அவனது முகத்திலும் வாடாப்புன்னகை வாடகைதாரராய்க் குடியேற அந்தத் தருணத்தில் நிலனும் நிதியுமானார்கள் இருவரும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction



