“உன் பிடிவாதத்தால் நீ கட்டிய கோட்டையை உடைத்து வா, என் காதலுக்காக உன் ஈகோவைத் தாண்டி ஒரு சிறு சமரசம் செய்து வா. நீ எனக்காக உன் எல்லையைத் தாண்டி ஓரடி எடுத்து வைத்தால், உனக்காக என் உயிரையும் விலையாகத் தர நான் தயார்!”
-நிலவன்
அம்பாசமுத்திரத்தில் நிலவனின் வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த வண்ணமயமான ரங்கோலி கோலம் அந்த வீட்டின் மகிழ்ச்சியைப் பறைசாற்றியது காலையிலேயே!
இன்று நிலாவுக்கும் பிரகாஷுக்கும் மறுவீட்டுச் சடங்கு. கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் சென்ற பெண், முதன்முறையாகத் தன் கணவனோடு பிறந்த வீட்டிற்கு வரும் அந்தச் சடங்கு, ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணம்.
வீட்டின் சமையலறையில் அதிகாலை நான்கு மணிக்கே வசந்தாவின் பரபரப்பு தொடங்கிவிட்டது. ஒருபுறம் வெண்கலப் பானையில் பால் பொங்கும் சத்தம், மறுபுறம் நெய்யில் வறுக்கப்படும் முந்திரி, திராட்சையின் வாசம் என வீடே கமகமத்தது. மகளுக்கும் மருமகனுக்கும் பிடித்தமான உணவுகளை எல்லாம் அன்போடு சமைத்திருந்தார் வசந்தா. காலை உணவாகப் பஞ்சு போன்ற மல்லிகைப்பூ இட்லி, நெய் வடியும் வெண்பொங்கல், மொறுமொறுப்பான உளுந்து வடை, சுடச்சுடச் சாம்பார் மற்றும் மூன்று வகையான சட்னிகள் தயாராகியிருந்தன.
மதிய விருந்துக்காக, தலைவாழை இலை போட்டுப் பரிமாற, பருப்புப் பாயசம், முருங்கைக்காய் சாம்பார், கல்யாண ரசம், உருளைக்கிழங்கு வறுவல், அவியல் என ஒரு பெரிய மெனுவுக்கான முன்னேற்பாடுகள் அடுப்பங்கரையில் நடந்தேறிக்கொண்டிருந்தன. கூடவே பெண்வீட்டுச் சீராய் மணமக்கள் கிளம்பும்போது கொடுத்தனுப்பச் சீடை, முறுக்கு, அதிரசம், லட்டு எனப் பலகாரங்கள் தயாராய் இருந்தன.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வீட்டின் கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார் வைத்தியலிங்கம். மருமகன் முதன்முறையாக வீட்டிற்கு வரும்போது எந்தக் குறையும் இருந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்.
அதே நேரத்தில் மாடியறையில் தயாராகிக்கொண்டிருந்தான் நிலவன். உடன்பிறந்தவள் மறுவீட்டுக்கு வரும்போது வரவேற்பதற்காக அவன் தயாராகவில்லை. மாறாய் இன்று அவன் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் உள்ள முன்னணி சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களின் உரிமையாளர்களைச் சந்திப்பதற்காகத் திட்டமிட்டிருந்தான்.
விவசாயம் செய்வது எவ்வளவு முக்கியமோ, விளைபொருட்களைச் சரியான விலைக்குச் சந்தைப்படுத்துவது அதைவிட முக்கியம் என்பதை நிலவன் ஆழமாக நம்பினான். இடைத்தரகர்களிடம் தன் உழைப்பை அடிமாட்டு விலைக்குக் கொடுத்துவிட்டுப் பெருமூச்சு விடும் சாதாரண விவசாயியாக இருக்க அவன் விரும்பவில்லை. எனவேதான் நேரடியாக வணிகர்களிடம் பேசும் முடிவை எடுத்திருந்தான்.
நேர்த்தியாக அயர்ன் செய்யப்பட்ட க்ரீம் வண்ண காட்டன் பேண்ட், கருப்பு வண்ண முழுக்கைச் சட்டை, முழங்கை வரை சுருட்டிவிடப்பட்ட ஸ்லீவ்ஸ், முறுக்கேறிய கைகளில் ஒரு கிளாசிக் லெதர் வாட்ச் என ஒரு கச்சிதமாகத் தயாராகிப் படியிறங்கினான் அவன்.
அவனது தோளில் இருந்த பெரிய ட்ராவல் பேக்கில் அழகிய சிறு சணல் பைகளில் அடைக்கப்பட்ட நெல் மற்றும் அரிசி சாம்பிள்கள் சிந்தாதவண்ணம் கட்டிவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பையின் மீதும் ‘வி.வி பிரீமியம் ரைஸ் – இயற்கையின் கொடை’ என்று பச்சை நிறத்தில் நேர்த்தியாக லோகோ அச்சிடப்பட்டிருந்தது.
படியிறங்கி வந்த மைந்தனைப் பார்த்ததும் வசந்தாவின் கண்கள் பளிச்சிட்டன. உழைப்பும் கம்பீரமும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவனை மைந்தனாகப் பெற்றவராயிற்றே! பெருமைக்கு என்ன குறைவாம்!
“மா! நிலாவும் பிரகாஷும் இன்னைக்கு வந்துட்டு நாளைக்கு மதியம்தானே கிளம்புவாங்க? எனக்கு இன்னைக்கு முழுக்க அலைச்சல் இருக்கும். அவங்க வர்ற நேரம் நான் போயிருக்கேன்னு தப்பா நினைச்சுக்காம நல்லாக் கவனிங்க”
“சரி நிலவா! கொஞ்சம் இரு” என்று சொல்லிவிட்டுப் போனவர் திரும்பி வந்தபோது அவரது கைகளில் திருநீற்று மரவை இருந்தது.
“திருச்செந்தூர் முருகன் அருளால என் பிள்ளை போற காரியம் நல்லபடியா முடியணும்”
செந்திலாண்டவனை வேண்டிக்கொண்டு மைந்தனின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டார் அந்த அன்னை.
நிலவனும் அவரிடமும் வைத்தியநாதனிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், அத்தனை வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு, முந்தானையில் கைகளைத் துடைத்தபடியே ஓடிவந்தார் வசந்தா. வைத்தியலிங்கத்தின் முகமும் பிரகாசமானது.
காரின் கதவு திறக்கப்பட்டு, பட்டுப்புடவையில், கழுத்து நிறைய நகைகளும், வகிட்டில் செக்கச்செவேலெனக் குங்குமமும், தலையில் மல்லிகைச்சரமுமாய் முகத்தில் வெட்கப் புன்னகையோடு இறங்கினாள் நிலா. அவளைத் தொடர்ந்து, பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமாக இறங்கினான் பிரகாஷ்.
தன் மகளைப் பார்த்த வசந்தாவுக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் தோன்றினாலும், ஆரத்தி எடுப்பதற்காகத் தட்டில் சுண்ணமும் மஞ்சளும் கரைத்த நீரோடு வாசலில் நின்றார்.
அப்போது, காரின் மறுபக்கக் கதவு திறக்கப்பட்டது. அங்கிருந்து, ஒரு மெல்லிய வசந்தகாலத் தென்றலைப் போலக் காலடி எடுத்துவைத்து இறங்கினாள் நியதி. ஆகாயநீல வண்ணத்தில் அடர்நீல நிற ஜரிகை பார்டர் வைத்த காட்டன் சில்க் புடவையைப் பாந்தமாக அணிந்துகாற்றில் பறந்த அடர்ந்த கருங்கூந்தலுமாய் அழகாக வந்து நின்றாள். அவளது கயல்வடிவக் கண்களில் எந்த மிரட்சியும் இல்லை. நிலவனின் வீட்டைச் சுற்றிப் பார்க்கும் ஆர்வமும் அவனது பெற்றோருடன் நேரம் செலவழிக்கும் ஆசையும் அதீதமாய்த் தெரிந்தது அந்த விழிகளில்.
வசந்தாவுக்கும் வைத்தியலிங்கத்திற்கும் ஒரு கணம் ஆச்சரியம்.
அவர்களின் பார்வையைப் புரிந்துகொண்ட நிலா, “அத்தையும் மாமாவும் இன்னைக்கு ஒரு கல்யாணவீட்டுக்குப் போறாங்க. அதான் நான் நியதியை எங்ககூட அழைச்சிட்டு வந்துட்டேன். அவளுக்கும் நம்ம வீட்டைப் பாக்கணும்னு ஆசையா இருக்குதாம்” என்றாள் சிரித்தபடியே.
அதுவரை எந்தச் சலனமும் இல்லாமல் நின்றுகொண்டிருந்த நியதி, வேகமாக முன்வந்து வசந்தாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
“எப்படி இருக்கீங்க அத்தை? கல்யாண வேலைங்க எல்லாம் முடிஞ்சு இப்பதான் நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சப்ப மறுவீட்டை அரேஞ்ச் பண்ணிட்டாங்களா எங்க வீட்டுல?” என்று உரிமையோடும், அன்போடும் கேட்டாள்.
அவள் உரிமையாய் ‘அத்தை’ என அழைத்தது வசந்தாவை நெகிழவைத்தது. ஒரு பெரிய வீட்டுப் பெண், அதுவும் சம்பந்தியின் மகள், இத்தனை எளிமையாகவும் அன்பாகவும் பேசுவாள் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“அதெல்லாம் இல்ல தங்கம். நீ வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்,” என்று நெகிழ்ந்துபோய் ஆரத்தி எடுத்தார்.
மூவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். வைத்தியலிங்கம் மருமகனையும், நிலாவையும் வரவேற்று உபசரித்துக்கொண்டிருக்க, நியதி நேராக வசந்தாவோடு சமையலறைப் பக்கம் சென்றாள்.
அங்கே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பலகாரங்களையும், உணவு வகைகளையும் பார்த்தவள் ஆச்சரியத்தில் கண்கள் விரிய வசந்தாவைத் திரும்பப் பார்த்தாள்.
“அத்தை, இதெல்லாம் நீங்க மட்டுமே தனியாளா செஞ்சீங்களா?”
“பலகாரம் மட்டும்தான கூடுதல் வேலை, அதை வெளிய ஆர்டர் குடுக்கப் பிடிக்கலம்மா. அதான் நானே பண்ணிட்டேன்” என்றார் வசந்தா அலட்டிக்கொள்ளாமல்.
அதுவே நியதிக்குப் பெரும் ஆச்சரியம். அவர்கள் வீட்டில் தீபாவளிக்கு வடை, முறுக்கு செய்ய அவ்வளவு அலுத்துக்கொள்வார் விஜயா. கடையில் வாங்கிக்கொள்ளலாமே என்று சொன்னாலும் பாரம்பரியம் பழக்கவழக்கமென லெக்சர் அடிப்பார். விஜயாவைப் பார்த்து வளர்ந்தவளுக்கு வசந்தா உலக அதிசயமாய்த் தெரிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதானே!
“நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?”
“அடடா… நீ ஏன்மா இதெல்லாம் செய்ற? நீ போய் ஹால்ல உக்காரு, நான் கொண்டுவர்றேன்”
“சும்மா இருங்க அத்தை. நான் ஒண்ணும் கெஸ்ட் கிடையாது, உங்க வீட்டுப் பொண்ணு மாதிரி. எனக்கு இந்த மாதிரி சமையல் வேலைங்க செய்யுறது ரொம்பப் பிடிக்கும். நான் மதினியவிட நல்லா சமைப்பேன். மதினியே இதைச் சொல்லிச்சும் தெரியுமா?” என்று குறும்பாகக் கண்சிமிட்டியபடி, சட்னிக் கிண்ணங்களை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளை நோக்கி நடந்தாள்.
அவளது அந்த எதார்த்தமான பேச்சும், பந்தா இல்லாத சுபாவமும் வசந்தாவின் மனதை முழுவதுமாகக் கொள்ளையடித்தது. ‘பணக்கார வீட்டுப் பொண்ணு, துளியும் கர்வம் இல்லாம எப்படி நம்ம வீட்ல ஒருத்தியா வேலை செய்றா’ என்று கனிவாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
காலை விருந்து இனிதே அங்கே நடந்தேற நிலவனோ அம்பாசமுத்திரத்தில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியிருந்தான்.
திருநெல்வேலியில் பிரதான சாலையில் அமைந்திருந்த பெரிய மல்டி-ஸ்டோர் சூப்பர் மார்க்கெட்டின் தலைமையகத்தை நடந்தே அடைந்தான். கண்ணாடிக் கதவுகளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவனை, அங்கிருந்த குளிரூட்டப்பட்ட காற்றின் நறுமணம் வரவேற்றது. ரிசப்ஷனில் தனது வருகையைப் பதிவு செய்துவிட்டு, பர்ச்சேஸ் அண்ட் சப்ளை செயின் மேலாளரைச் சந்திக்கக் காத்திருந்தான்.
சில நிமிடங்களில் அவனுக்கான அழைப்பு வர, அந்தப் பெரிய கேபினுக்குள் நுழைந்தான் நிலவன். ரவீந்திரன் ஒரு தேர்ந்த கார்ப்பரேட் அதிகாரி. கணினியிலிருந்து பார்வையை விலக்காமல், “உட்காருங்க மிஸ்டர் நிலவன். அம்பாசமுத்திரத்துல இருந்து வர்றீங்க. சொல்லுங்க, என்ன விஷயம்?” என்று கேட்டார்.
நிலவன் எந்தத் தயக்கமும் இன்றி, தன் கையில் இருந்த அந்தச் சிறிய சணல் பையை அவர் மேஜை மீது வைத்தான்.
“நான் விவசாயி சார். இது என் வயல்ல விளைஞ்ச அரிசி. இதை உங்க சூப்பர் மார்க்கெட்ல பிரீமியம் பிராண்டா விக்கலாம்னு ஐடியா. அதுக்காகத்தான் வந்திருக்கேன்,” என்றான் நேரடியான குரலில்.
ரவீந்திரன் லேசாகச் சிரித்தார்.
“தம்பி, இது சூப்பர் மார்க்கெட். இங்க ஏற்கெனவே முப்பதுக்கும் மேற்பட்ட பிராண்டட் அரிசி வகைகள் இருக்கு. ஒரு மாசத்துக்குப் பல டன் மூட்டைகள் இறங்குது. ஒரு சாதாரண விவசாயி கொண்டுவர்ற அரிசியை நாங்க ஏன் வாங்கணும்? பேக்கிங், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சர்டிபிகேட், கன்சிஸ்டன்சி இதெல்லாம் உங்களுக்குச் சாத்தியமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
நிலவனின் உதடுகளில் மெல்லிய, தன்னம்பிக்கை கலந்த புன்னகை விரிந்தது.
“நீங்க சொல்ற அந்த முப்பது பிராண்டுகளும் பாலிஷ் பண்ணப்பட்டு, சத்துக்கள் எல்லாம் நீக்கப்பட்ட வெறும் கார்போஹைட்ரேட் சார். ஆனா என் அரிசி அப்படி இல்ல. இது பாரம்பரியக் ‘கிச்சிலிச் சம்பா’வோட நோய் எதிர்ப்புத் திறனையும், நவீன ‘ஏ.டி.டி43’ ரகத்தோட மகசூல் திறனையும் இணைச்சு, நானே என் வயல்ல க்ராஸ்-ப்ரீட் பண்ணி உருவாக்குன புது ரகம். பக்கா ஆர்கானிக். கூடவே விவசாயக் கல்லூரி பேராசிரியர் ஒருத்தரோட கவனிப்பும் இருக்கு, இதோட கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI) ரொம்பக் கம்மி. சுகர் பேஷண்ட்ஸ்கூடத் தாராளமாச் சாப்பிடலாம். சமைக்கும்போது வீடு முழுக்க அரிசியோட நறுமணம் வீசும்” என்று வேளாண் தொழில்நுட்ப ரீதியாக அவன் விளக்கிய விதம் ரவீந்திரனை நிமிர்ந்து உட்காரவைத்தது.
அவர் அந்தச் சணல் பையைப் பிரித்து, அதிலிருந்த அரிசியைக் கைகளில் எடுத்துப் பார்த்தார். எந்தப் பாலிஷும் இல்லாமல், இயற்கையான நிறத்தில், ஒவ்வொரு அரிசியும் முத்து முத்தாகச் சீராக இருந்தது.
“குவாலிட்டி நல்லாருக்கு. ஆனா, பிரைசிங்? மார்ஜின் என்ன தருவீங்க? கிலோவுக்கு அறுபது ரூபாய்க்குக் கொடுத்தா நாங்க எடுத்துக்குறோம்,” என்று பேரம் பேசத் தொடங்கினார் ரவீந்திரன்.
நிலவன் சட்டென நிமிர்ந்து அமர்ந்தான். அவனது கண்களில் இப்போது ஒரு பிசினஸ்மேனுக்கான கறார்த் தன்மை வந்து அமர்ந்தது.
“சாரி சார். என் அரிசியோட விலை கிலோ எண்பது ரூபாய். அதுல ஒரு பைசாகூடக் குறையாது. விவசாயினு வந்தா அடிமாட்டு விலைக்குக் கேப்பீங்க, அதுவே ஒரு கார்ப்பரேட் கம்பெனி கலர்ஃபுல்லா பிளாஸ்டிக் கவர்ல அடைச்சு வித்தா கேட்டதைக் கொடுப்பீங்க. நான் விவசாயிதான். ஆனா இது என்னோட பிசினஸ். என் குவாலிட்டிக்கு நான் கியாரண்டி. இந்த விலைக்குக் கட்டுப்படியாகலைனா சொல்லுங்க, நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு, சற்றும் தயங்காமல் தன் பையை எடுக்க முற்பட்டான்.
அவனது தெளிவான பேச்சும், தீர்க்கமான முடிவும், பொருளின் மீதிருந்த அசாத்திய நம்பிக்கையும் ரவீந்திரனைக் கவர்ந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


