“எதிர்பாக்காத சம்பவங்கள் எதிர்பாரா நேரத்துல நடக்குறப்ப, நமக்கு எப்பிடி ரியாக்ட் பண்ணுறதுனே தெரியாம போயிடும்… ஒரு செகண்ட் மூளை ஸ்தம்பிச்சு யோசிக்க மறந்துடும்… ஆனா அந்த மொமண்டை நம்மளால வாழ்க்கையில எப்பவுமே மறக்க முடியாது… ரொம்ப விலைமதிக்க முடியாத தருணங்கள் எல்லாம் இப்பிடி எதிர்பாராத நேரங்கள்ல தான் அமையும்”
-அனுக்ரஹா
குக்கூ கடிகாரம் எட்டு முறை அடித்து ஓய்ந்ததும் பதறியடித்துக்கொண்டு விழித்தாள் அனுக்ரஹா. அவளருகே படுத்திருந்த பிரபாவதி எப்போதோ விழித்துவிட்டாள் போல.
சிகையை அலைந்தபடி சிறிது நேரம் மெத்தையிலேயே கண் மூடி அமர்ந்துவிட்டாள்.
நள்ளிரவின் முடிவில் ராகவர்தன் பூடகமாகச் சொல்லிவிட்டுப் போன செய்தி அவளது உறக்கத்தை முழுவதுமாகக் கபளீகரம் செய்ய முயன்று பின்னர் பரிதாபப்பட்டு தள்ளுபடியாகச் சில மணி நேரங்களை மட்டும் விழுங்கியதன் பலன், ஆறு மணிக்குத் தான் அவளுக்குக் கண்கள் இலேசாகச் சொக்கியது.
அவள் இரவு முழுவதும் வேலை பார்த்திருப்பாள் என்று எண்ணி பிரபாவதி தொந்தரவு செய்யாமல் விட்டுவிட அனுக்ரஹா இரண்டு மணி நேரம் அனைத்தையும் மறந்து உறங்கியிருந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கூந்தலைக் கோதுவதை நிறுத்தியவள் ராகவர்தன் ஒருவேளை தன்னிடம் விளையாடியிருப்பானோ என ஐயம் கொண்டாள்.
‘இதில் யாராவது விளையாடுவார்களா? அவன் ஒன்றும் பக்கம் பக்கமாக வசனம் பேசும் ரகம் இல்லை தான். எதையும் சுருக்கமாகப் பேசியே பழக்கப்பட்டவன் திருமணம் செய்துகொள்ளலாமா என்ற கேள்வியை மட்டும் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாகக் கேட்டானே! அப்படி என்றால் கட்டாயம் அவன் விளையாடவில்லை’ இது மனசாட்சியின் குரல்.
ஒருவேளை வீட்டினரிடம் பேசியிருப்பானோ?
அந்தக் கேள்வி மண்டையில் உதித்ததும் சுறுசுறுப்பும் பரபரப்பும் அவளைத் தொற்றிக்கொள்ள குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
குளித்து இலகுவான ஆடை அணிந்து அன்னையைத் தேடிச் சென்றவளுக்கு ஏமாற்றம்!
அவர் மெல்டிங் பாட் குழுவினரோடு வீடியோ படப்பிடிப்புக்குப் போய்விட்டதாகச் செய்தி கிடைத்தது தனலெட்சுமியிடமிருந்து.
“அண்ணாவும் அவரும் திடீர்னு இன்கம்டாக்ஸ் ஆபிஸ் வரைக்கும் போயிருக்காங்க… வர்றதுக்கு ஈவ்னிங் ஆகிடும்… வேற என்ன டீடெய்ல் வேணும் மகாராணி?”
அவர் கேட்ட விதத்தில் அனுக்ரஹாவுக்குத் தயக்கம் வந்துவிட்டது.
மகனுக்குத் தப்பாத அன்னை! இருவரும் நாக்கைக் கூர் தீட்டிக்கொண்டே இருப்பார்கள் போல!
“வேற ஒன்னும் வேண்டாம் ஆன்ட்டி”
நல்லப்பிள்ளையாகச் சொல்லிவிட்டு மடிக்கணியை எடுக்கப் போனவளை அவரது குரல் தடுத்து நிறுத்தியது.
“ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு என்ன வேலையா இருந்தாலும் பாரு”
மகனைப் போலவே கட்டளையிடும் தொனி!
‘அட மக்குப்பெண்ணே! இவரைப் போல தான் இவருடைய மைந்தன் இருக்கிறானடி’ என்றது மனசாட்சி.
“அது என்னமோ உண்மை” என்று நொடித்துக்கொண்டவள் தனலெட்சுமி நீட்டிய தட்டிலிருந்த சப்பாத்தியையும் பனீர் பட்டர் மசாலாவையும் மடமடவெனச் சாப்பிட ஆரம்பித்தாள்.
தனலெட்சுமி அவளைப் பார்த்தபடியே உணவுமேஜையினருகே கிடந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தவர் “நேத்து நைட் நீ ரொம்ப நேரம் கண் முழிச்சு வேலை பாத்த போல?” என்று ஆரம்பிக்கவும் அனுக்ரஹாவுக்கு விக்கல் வந்துவிட்டது.
திருதிருவென விழித்தபடி தண்ணீரைக் குடித்தவள் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
“கிச்சன் டஸ்ட்பின்ல முட்டை ஓடு கிடந்துச்சு… பால் கவர் வேற… ஏன் நைட் உனக்குப் பசி எடுத்துச்சா?”
எதுவும் தெரியாதவர் போல தனலெட்சுமி கேட்கவும் அனுக்ரஹா அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“எனக்குப் பசிக்கல ஆன்ட்டி” என்று முடித்துக்கொண்டாள்.
“அப்ப முட்டை தன்னால வந்து டஸ்ட்பின்ல குதிச்சு தற்கொலை பண்ணுச்சா? ஒருவேளை அதுதான் பால் பாக்கெட்டையும் கொலை பண்ணிருக்குமா?”
தீவிரமானக் குரலில் தனலெட்சுமி சந்தேகம் போல கேட்டார்.
“போலீஸ் மகனுக்கு ஏத்த அம்மா” என வாய்க்குள் முணுமுணுத்தவள் “நைட் உங்க மகன் லேட்டா வந்தான்… ரொம்ப பசி போல… அதனால நான் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் போட்டுக் குடுத்தேன்” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு சப்பாத்தியைச் சாப்பிடுவதில் கண்ணானாள்.
“என் மகனுக்குப் பேர் இருக்குடி பொண்ணே”
“உஃப்… ராகவ் வந்தான்… போதுமா?”
“ஓஹ்! அப்ப அவன் பேர் ஹிட்லர் இல்லையா?”
அப்பாவி போல தனலெட்சுமி கேட்டதும் அனுக்ரஹாவிற்கு சப்பாத்தி தொண்டையில் மீண்டும் விக்கத் தொடங்கியது.
“தண்ணி குடி”
அவளது தம்ளரை நிரப்பினார் அவர்.
அனுக்ரஹா தண்ணீர் குடித்து முடித்ததும் நிதானமாக அவளை ஏறிட்டார்.
“அது… உங்க மகன் ஏதாச்சும்…”
“சௌமிக்கும் அவனுக்கும் முடிச்சு போடலாம்னு நினைச்சேன்… அது சரியா வரல… அவன் வேற பொண்ணு பாக்க சொல்லிட்டான்மா”
‘எதே?’
அதிர்ச்சியோடு தனலெட்சுமியைப் பார்த்தாள் அனுக்ரஹா.
“என்னாச்சு?” அக்கறையாக விசாரித்தார் அவர்.
“ஒ… ஒன்னுமில்ல ஆன்ட்டி” என்றவள் மனதுக்குள் ராகவர்தனுக்கு ஏக வசனத்தில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தாள்.
“என் கிட்ட என்னென்னமோ பேசுனான்… ஆன்ட்டி கிட்ட பொண்ணு பாக்க சொல்லிருக்கான்… என்ன தான் நினைச்சிட்டிருக்கான் அந்த ஹிட்லர்?” என்று மனதுக்குள் அவள் கறுவ
“என் மகனை ஹிட்லர்னு மனசுக்குள்ள திட்டுறியோ?” என்று ஐயத்துடன் கேட்டார் தனலெட்சுமி.
இல்லையென மறுத்தவள் எப்படியோ சாப்பிட்டு முடித்தாள்.
மனதுக்குள் மெல்லிய குழப்பம்!
“ராகவ் இந்நேரம் சென்னைக்குக் கிளம்பியிருப்பான்” என்றார் கூடுதல் தகவலாக.
“வாட்? அப்ப அவன் இங்க…”
“அவன் ஒன் ஹவர் தான் தூங்குனானாம்… அப்புறம் எழுந்திருச்சு என் கிட்ட பொண்ணு பாருங்கனு ஆர்டர் போட்டுட்டுக் கிளம்பிட்டான்… நான் அகல் மதினி கிட்ட உங்க சொந்தத்துல எதுவும் நல்ல பொண்ணு இருக்குதானு விசாரிக்கணும்”
அனுக்ரஹாவுக்குள் ஆயிரம் எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.
தன்னிடம் அவ்வளவு பேசினான்! இப்போது ஆளையும் காணோம்! போதாக்குறைக்கு வேறு சம்பந்தம் பார்க்குமாறு அன்னைக்குக் கட்டளை வேறு! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்னைப் பற்றி!
பொருமித் தீர்த்தவள் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை.
சிறிது நேரம் கழித்து பிரபாவதி, ஷாம், வித்யூத்துடன் வந்த அன்னையின் முகத்தில் பழைய சிரிப்பைக் கண்டதும் ராகவர்தன் மீது வந்த கோபம் ஓரமாகப் போய்விட்டது.
அனுக்ரஹா கொஞ்சமே கொஞ்சம் இயல்பாகி விட்ட நிலையில் சென்னைக்குப் பயணமாகிக் கொண்டிருந்தான் ராகவர்தன்.
குற்றவாளியான கண்மணியையும், அவளுக்குத் துணையாக இருந்த ஆடவனையும் எழும்பூர் காவல் ஆய்வாளருடன் இணைந்து ஒரு குழு சென்னைக்கு அழைத்துப் போய்விட ராகவர்தனும் திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளரிடம் பேசிவிட்டு விமானமார்க்கமாகச் சென்னைக்குக் கிளம்பியிருந்தான்.
பயண நேரத்தின் ஆரம்பத்தை வேலை பற்றிய சிந்தனைகள் விழுங்கிக்கொண்டன. அவை கலைந்ததும் காலையில் அன்னையிடம் பேசியது மெதுவாக நினைவில் வந்தது.
“எனக்கு வயசாகிட்டே போகுதுனு கவலைப்பட்டிங்கல்ல… மகிழ் அங்கிள் கிட்ட பேசிடுங்க” என்று மொட்டை கட்டையாகச் சொன்னவனை தனலெட்சுமி குழப்பமாகப் பார்த்தார்.
அன்னையின் குழப்பத்தைப் புரிந்துகொண்டவனாக “ரெண்டு குடும்பமும் பிள்ளைங்க இழுக்குற திசையில ஓடுறிங்க… நாங்க ஒரே திசைல ஓடுனா உங்களோட ஓட்டத்துக்கு ஒரு முடிவு வரும்னு யோசிச்சேன்” என்றான்.
அதன் பின்னர் மெதுவாகத் தெளிந்த தனலெட்சுமியின் முகம் தடுமாற்றம், பூரிப்புக்குத் தாவி இறுதியாக மீண்டும் குழப்பத்தில் வந்து நின்றது.
“என்னாச்சுமா?”
“அனு… அவ இதுக்குச் சம்மதிப்பாளா?”
முந்தைய இரவில் தனது பூடகமானப் பேச்சில் திகைத்து கண்ணிமைக்க மறந்து மலங்க மலங்க விழித்த அனுக்ரஹாவின் நினைவில் முறுவலித்தான் ராகவர்தன்.
“அவ வேண்டாம்னு சொல்லுறதுக்கு எந்தக் காரணமும் இல்லயே”
“நீ அனுவை விரும்புறியா ராகவ்?”
அன்னையின் குரலில் கவலை தெரிந்தது.
ராகவர்தனின் தலை இல்லையென மறுப்பாக அசைந்தது.
“நான் பாத்து வளர்ந்த அனுவுக்கும் நேத்து நைட் நான் பாத்த அனுவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குறதா தோணுச்சு… அந்த வித்தியாசம் எல்லாம் அவளுக்குள்ள வந்திருக்குற ஆரோக்கியமான மாற்றத்துக்கான அடையாளமா நான் பாக்குறேன்… அவ என் லைஃப் பார்ட்னரா வந்தா லைஃப் ரொம்ப சிரமமில்லாம போகும்னு நினைக்குறேன்… அங்கிள் கிட்ட பேசுங்க”
தனலெட்சுமிக்கு மைந்தனின் பேச்சு மனநிறைவைக் கொடுத்தது. ஆனால் அனுக்ரஹா இதற்கு சம்மதிப்பாள் என்று என்ன நிச்சயம்?
“அனுவுக்கு என்னைப் பிடிக்காது… ஆனா அது என் மேல இருக்குற வெறுப்புனால இல்ல… நீங்க அங்கிள் கிட்ட பேசுங்க… அவ சம்மதிப்பா”
அந்நேரத்தில் தனது நம்பிக்கை அன்னைக்கு விசித்திரமாகக் கூட தோன்றியிருக்கலாம். சிரித்துக்கொண்டான் ராகவர்தன்.
தனக்கும் அனுக்ரஹாவுக்குமிடையே இருக்கும் பெயரிடப்படாத உறவும் தாங்கள் உணர்கிற உணர்வும் நிச்சயம் காதல் இல்லை. நட்பு, விரோதம் என்றும் சொல்ல முடியாது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள எல்லா உணர்வுகளும் காதலாகி விடாது.
அது பெரியவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ ராகவர்தனுக்கும் அனுக்ரஹாவுக்கும் நன்றாகவே புரியும்.
அவனது பயணநேரத்தின் முடிவில் மீண்டும் வேலையைப் பற்றிய யோசனைகள் சூழ ஆரம்பிக்க இலஞ்சியும் அனுக்ரஹாவும் அவனுடைய மூளையிலிருந்து விடைபெற்றார்கள்.
சென்னையை அடைந்ததும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான வேலைகளைத் துரிதப்படுத்துவதில் அவன் பிசியாகிவிட்டான்.
இலஞ்சியிலோ மாலையில் வீடு திரும்பிய மகிழ்வண்ணநாதனுக்கும், தியாகராஜனுக்கும் ராகவர்தன் சொன்ன தகவல் பகிரப்பட்டது. இருவருக்கும் வியப்பு.
“இது சரியா வருமாம்மா?”
மகிழ்வண்ணநாதன் கவலையோடு கேட்டுவிட்டார்.
“ஏன் சரியா வராதுனு நினைக்குற மகிழ்? ரெண்டு பேரும் முன்ன மாதிரி சின்னப்பசங்க இல்ல… மெச்சூர்ட் ஆனவங்க” என்றார் தியாகராஜன்.
அவருக்கு அனுக்ரஹாவை மருமகளாக்கிக் கொள்ளும் ஆவல்!
“அப்பிடி இல்ல தியாகு… ராகவ் எப்பவுமே முதிர்ச்சியா தான் நடந்துப்பான்… ஆனா அனு… அவளுக்கு இன்னும் வாழ்க்கைய பத்தி புரிதல் இல்ல”
“நீ ஏன் அப்பிடி யோசிக்கிற? அவ தனியா நாலு வருசம் சென்னைல இருந்து வேலை பாக்குறா… உலகம் தெரிஞ்சிருக்கும்… நல்லது கெட்டது என்னனு புரிஞ்சிருக்கும்… குழந்தைங்க வளந்தாலும் பெத்தவங்களுக்கு அது தெரியாதுடா… திடீர்னு ஒரு நாள் அப்பனுக்குப் பாடம் எடுத்த சுப்பிரமணியன் மாதிரி நமக்கே அட்வைஸ் பண்ணுவாங்க… அப்ப தான் அவங்க வளந்தது நம்ம மண்டைல உறைக்கும்”
மகிழ்வண்ணநாதன் யோசித்தார்.
மானஸை வேண்டாமென மறுத்தபோது அனுக்ரஹா பேசியது நினைவிலாடியது. திருமணச் சம்பந்தத்தை வேண்டாமென மறுக்கும் உரிமை கூட பெண்ணுக்கு இல்லையா என்றாளே!
முன்பே சுதந்திரமனப்பான்மை அதிகமுள்ளவள். இப்போது சொந்தக்காலில் நிற்கும் நிமிர்வும் சேர்ந்து அவளை விசாலமான மனப்போக்கு கொண்ட பெண்ணாக மாற்றியிருக்கும்.
பதின்வயது அனுக்ரஹா இப்போது தனக்கு என்ன வேண்டுமெனத் தீர்மானித்து தேவைக்கு மட்டுமே பேசும் பெண்ணாக மாறியிருக்கிறாள்.
இது நல்ல மாற்றம் தான். கட்டாயம் அவளால் ராகவர்தன் சிரமப்படமாட்டான் என்ற நம்பிக்கை மகிழ்வண்ணநாதனுக்குப் பிறந்தது.
அகல்யாவோடு சேர்ந்து அவரும் ராகவர்தன் – அனுக்ரஹா திருமணத்துக்குச் சம்மதித்துவிட இப்போதைக்கு இத்தகவலை இரகசியமாக வைத்திருக்குமாறு அவர்களிடம் வேண்டிக்கொண்டார் தனலெட்சுமி.
“ஏன்?” மற்ற மூவரும் கோரசாகக் கேட்க
“ராகவ் தான் சொன்னான்… அவன் காரணமில்லாம எதையும் சொல்லமாட்டான்… நானும் அனுவைக் கொஞ்சம் தூண்டி விட்டிருக்கேன்… அவங்க ரெண்டு பேரும் பேசி முடிவுக்கு வந்துடுவாங்க” என்றார் தனலெட்சுமி.
இந்த விவகாரம் எதுவும் அறியாமல் கடுப்பும் எரிச்சலுமாக பவளமல்லி மரத்தின் அடியில் பிரபாவதியோடு அமர்ந்திருந்தாள் அனுக்ரஹா. கூடவே தனக்கும் ராகவர்தனுக்கும் நடந்த உரையாடலையும், தனலெட்சுமியிடம் அவன் பெண் பார்க்குமாறு சொன்னதையும் கூறிக்கொண்டிருந்தாள்.
“வேற பொண்ணு பாக்கச் சொல்லுறவன் ஏன் என் கிட்ட இண்டேரக்டா கல்யாணம் பண்ணிக்கலாமானு கேக்கணும்? என்னைப் பாத்தா அவனுக்கு விளையாட்டு பொம்மை மாதிரி இருக்கு போல”
“அப்ப அவரைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதமா அனு?”
“சம்மதிச்சு என்ன ஆகப்போகுது? அவன் தான் வேற பொண்ணு பாருங்கனு ஆன்ட்டி கிட்ட தெளிவா சொல்லிட்டுப் போயிருக்கானே”
முகத்தை உர்ரென வைத்துக்கொண்டாள் அவள்.
“என் கிட்ட இந்த மாதிரி பேசிட்டு உங்கம்மா கிட்ட ஏன் வேற பொண்ணு பாக்க சொன்னிங்கனு அவருக்கு நீ கால் பண்ணி கேட்டுடு”
“எனக்கு அவன் மொபைல் நம்பர் தெரியாது”
“எதே?” பிரபாவதி திகைத்தாள்.
அனுக்ரஹா உதட்டைச் சுழித்தாள்.
“எனக்கு அவன் எக்மோர் ஏ.சி.பி ஆன வரைக்கும் தான் தெரியும்… அது கூட அஜ்ஜூ ஒருதடவை சொன்னதால தெரிஞ்சுது… மத்தபடி அவனுக்கும் எனக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது… நாங்க முகம் குடுத்துப் பேசி அப்ராக்சிமேட்டா ஃபைவ் இயர்ஸ் இருக்கும்”
பிரபாவதிக்குத் தலை வெடித்துவிடும் போல குழப்பம்!
“ஏய்! ஒழுங்கா சொல்லு… நீயும் அந்த போலிசும் லவ்வர்ஸா? ஃப்ரெண்ட்சா? எனிமீஸா?”
“இதுல எதுவுமில்ல… ஜஸ்ட் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ்”
“நான் இதை நம்பமாட்டேன்… உங்களுக்குள்ள ஏதோ ஒரு ஸ்பார்க் இருக்கு… ஆனா அதை வெளிப்படுத்தாம ஈகோ பிடிச்சு அலையுறிங்க… உருப்படுவிங்களாடி நீங்கல்லாம்?”
“அப்பிடியெல்லாம் எதுவுமில்ல”
அனுக்ரஹா மறுக்க அதை பிரபாவதி ஒத்துக்கொண்டால் தானே!
“அன்னைக்கு ஆபிஸ்ல நீ ஃபைலை பாஸ் பண்ணி விட்டப்ப ‘கால்ல மருதாணி வச்சிருக்கியானு’ ஏ.சி.பி நக்கலா கேட்டாப்ல… அப்பவே எனக்கு இடிச்சுது… முன்ன பின்ன தெரியாத ஆள் கிட்ட இவ்ளோ நக்கலா யாரும் பேசமாட்டாங்கனு ஈவா கூட சொன்னா… அதை விடு… மானஸ் மைதா ரொட்டி வெளிய போனதும் நீ மல்லிப்பூவை அவரைப் பார்த்து தூக்கியெறிஞ்ச மாடுலேசன்ல ஒரு உரிமையானக் கோவமும், ஆற்றாமையும் தெரிஞ்சுது… தயவு பண்ணி சென்னைக்குப் போனதும் ஏ.சி.பி கிட்ட பேசி ஷார்ட் அவுட் பண்ணு… சும்மா எல்லாரையும் குழப்பிக்கிட்டே திரியாதிங்க ரெண்டு பேரும்”
பிரபாவதி கடுப்பாகச் சொன்ன அறிவுரையைக் காதில் போட்டுக்கொண்ட அனுக்ரஹா நகம் கடித்தபடி சொன்னாள்.
“எனக்கு அவன் சென்னையில எங்க தங்கியிருக்கான்னு தெரியாது”
“அட போங்கயா! உங்க ரெண்டு பேரையும் மியூசியத்துல தான் உக்கார வைக்கணும்” என்று சலித்தபடி அவள் எழுந்து போய்விட அனுக்ரஹா ராகவர்தனின் மொபைல் எண்ணை அர்ஜூனிடம் வாங்கும் முடிவுக்கு வந்தாள். இது கூட அவளுக்காகத் தான். அவளுக்குள் இருக்கும் குழப்பமும் தவிப்பும் தீரவேண்டும். நீ என்ன தான் நினைக்கிறாயென்று ராகவர்தனிடம் கேட்டுவிட்டால் அந்தத் தவிப்புக்கும் குழப்பத்துக்கும் ஒரு முடிவு வந்துவிடுமெனத் தீர்க்கமாக நம்பியவள் அர்ஜூனைத் தேடிப் போனாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


