“சிலரைக் காரணம் இல்லாம நமக்குப் பிடிக்கும், நம்ம அம்மா அப்பாவைப் போல, நம்ம சிப்ளிங் போல, கிட்டத்தட்ட ஒரு அனிச்சை செயல் மாதிரி… அதே பிடித்தத்தை நாம அவங்க கிட்ட எதிர்பாத்து, கிடைக்காம போச்சுனா ஏமாற்றம் வரும்… நாள்பட்ட ஏமாற்றம் விரக்தியாவும் கோபமாவும் உருமாற்றம் அடையும்… அதே நேரத்துல நம்மளால அந்தச் சிலரை வெறுத்து ஒதுக்கவும் முடியாது… அவங்க கிட்ட இலகுவா பழகவும் முடியாது… ரொம்ப வித்தியாசமான வியாதி இது… வராத வரைக்கும் நல்லது… வந்துடுச்சுனா ஆயுள் முழுக்க உங்க கூடவே குடித்தனம் நடத்தும்… இதோட சைட் எஃபெக்ட்ஸ் நம்மளையும் அந்த நபரையும் எலியும் பூனையுமா மாத்திடும்… நம்ம எதிர்பாக்குறது கிடைக்கலங்கிற ஏமாற்றத்துல நாம அவங்களை உருட்டி விளையாட நினைப்போம்… நாம என்ன தான் எதிர்பாக்குறோம்னு புரியாம அவங்க நம்ம கிட்ட இருந்து விலகி ஓடப் பார்ப்பாங்க… சில நேரங்கள்ல சுவாரசியமா இருக்குற விளையாட்டு, சில நேரங்கள்ல இதுவே நிரந்தரமாகிடுமோங்கிற பயத்தை நமக்குள்ள விதைக்கும்”
-ராகவர்தன்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நாகர்கோவில்…
அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பதால் பொதுமக்களில் சிலர் காவல் கண்காணிப்பாளர் சிவனேந்திரனிடம் மனு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொன்றையும் விசாரித்து வாங்கிக்கொண்டவர் அவர்களின் குறை சீக்கிரம் தீர்த்துவைக்கப்படும் என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
முந்தைய தினம் முழுவதும் கொல்லங்கோடு பகுதியில் தனது குழுவினருடன் குற்றவாளியான கண்மணியைத் தேடி தேடுதல் வேட்டை நடத்திவிட்டுப் பலன் இல்லாமல் போனதால் அவரைக் காண வந்திருந்தான் ராகவர்தன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பொதுமக்கள் வெளியேறியதும் அவன் உள்ளே போய் சிவனேந்திரனுக்குச் சல்யூட் வைக்க அவரும் அமரச் சொன்னார்.
“கொல்லங்கோட்டுல சர்ச் பண்ணுனதுல அக்யூஸ்ட் சிக்கல சார்… இப்ப எனக்கு உங்க கிட்ட ஒரு ஹெல்ப் வேணும்”
“சொல்லுங்க ராகவர்தன்”
“சைபர் போலீஸ் மூலமா கண்மணியோட மொபைல் லொகேசனை ட்ராக் பண்ணனும்… சென்னைல இருந்து வந்த ட்ராக் ரிப்போர்ட்படி அக்யூஸ்ட் கொல்லங்கோட்டுல இருக்குறதா தெரிய வந்துச்சு… நேத்து நான் லேட் பண்ணாம போனாலும் அக்யூஸ்டைப் பிடிக்க முடியல… இந்தக் கேஸ்ல அக்யூஸ்டைப் பிடிக்காம நான் சென்னைக்குப் போகப் போறதில்ல”
சிவனேந்திரனிடம் சென்னையிலிருந்து கிடைத்த சைபர் காவல்துறை அனுப்பிய அறிக்கையைக் கொடுத்தான்.
“நான் இப்பவே சைபர் போலீசுக்குத் தகவல் அனுப்பிடுறேன்… அடிஷனல் சூப்பிரிடெண்டண்ட் பிரகாஷும், இன்ஸ்பெக்டர் ஜெயராணியும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க”
“தேங்க்யூ சார்”
சொன்னது போலவே சில மணி நேரங்களில் ஏ.எஸ்.பி பிரகாஷும், சைபர் காவல் ஆய்வாளர் ஜெயராணியும் வந்தார்கள். ராகவர்தன் கொடுத்த அறிக்கையை வாசித்தார்கள்.
“அக்யூஸ்டோட மொபைல் கடைசியா ஸ்விட்ச் ஆப் ஆன இடம் எதுனு அந்த ஏரியா மொபைல் டவர் வச்சு ட்ராக் பண்ணிடலாம் சார்… சென்னைல குடுத்த ரிப்போர்ட் தவறா இருக்க வாய்ப்பில்ல… மே பி அந்த ரிப்போர்ட் வந்ததுக்கு அப்புறம் அக்யூஸ்ட் கொல்லங்கோட்டுல இருந்து வேற இடத்துக்குப் போயிருக்கலாம்… நாங்க முடிஞ்ச வரை சீக்கிரமா அக்யூஸ்டோட லொகேசனை உங்களுக்கு ட்ராக் பண்ணி சொல்லுறோம்”
“தேங்க்யூ” என்று விடைபெற்றவன் நேசமணி நகரில் அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றுவிட்டான். முந்தைய தினம் இலஞ்சியிலிருந்து கிளம்பியவன் ஓய்வொழி்ச்சல் இல்லாமல் அவனுக்குத் துணையாய் வந்த திருநெல்வேலி சரக காவலர்களுடன் கொல்லங்கோடு முழுவதும் அலசி ஆராய்ந்ததில் சரியாகச் சாப்பிடவில்லை.
குறிப்பாக அன்னையிடம் பேசவில்லை.
குளித்து ஆசுவாசமானப் பின்னர் தனலெட்சுமியின் மொபைலுக்கு அழைத்தான்.
“உடனே வர்றேன்னு சொல்லிட்டுப் போனியேடா” என அங்கலாய்த்தவரிடம் இன்னும் குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்பதைக் கூறினான்.
“அக்யூஸ்ட் சிக்கலையே… கண்டிப்பா நான் அங்க வந்துட்டுத் தான் போவேன்” என உறுதியளித்தவன் அனுக்ரஹாவைப் பற்றி விசாரிக்கலாமா என்று கேட்ட மனசாட்சியின் கேள்வியைக் கிடப்பில் போட்டான்.
“சுசீந்திரம் கோவில் பக்கத்துல தானே இருக்கு… போய் சாமியை ஒரு எட்டு பாத்துட்டு வந்துடு ராகவ்” என்ற அன்னையிடம் சரியென்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்கப் போனவன் திடுமென அவர் அனுக்ரஹாவின் பெயரை உச்சரித்ததும் பரபரத்த மனதை அடக்கிக்கொண்டான்.
“அவளுக்கு என்ன?” என்று விட்டேற்றியாக விசாரிப்பது போலக் கேட்டான்.
“அவளுக்கு என்ன? ஒன்னுமில்ல… மாப்பிள்ளைய வேண்டாம்னுட்டா… இனி அவளுக்கு மாப்பிள்ளை பாக்கவே மாட்டேனுட்டார் மகிழ் அண்ணன்… அவளும் அவ ஃப்ரெண்ட்சுங்களும் வயக்காடு, வாய்க்கால் கரைனு போய் சமைக்கச் சொல்லி அகல் மதினியைச் சகஜமான மனநிலைக்குக் கொண்டு வந்துட்டாங்க… ஹூம்! நீயும் சௌமிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேனுட்ட… சொல்லப்போனா ரெண்டு குடும்பத்து பெரியவங்களும் பிள்ளைங்க இழுக்குற திசைல ஓடிட்டிருக்கோம்… அந்தப் பிள்ளைங்க ஒன்னா ஓடுனா சந்தோசம்”
“அதுக்கு வாய்ப்பிருக்குனு தோணுதா?” அன்னையிடம் கேலியாகக் கேட்டான் ராகவர்தன்.
மறுமுனையில் நெடிய பெருமூச்சு பதிலாக வந்தது. அதுவே சொன்னது சாத்தியக்கூறுகள் கம்மி என்பதை.
“எதையும் மைண்ட்ல போட்டுக் குழப்பிக்காதிங்கம்மா”
“டேய் உனக்கு வயசாகிட்டே போகுது… இன்னும் எத்தனை வருசம் தள்ளிப் போடுவ? இப்ப கூட சம்மதிக்குற மாதிரி சம்மதிச்சு கடைசில என்னை ஏமாத்திட்ட… நீ உன் மனசுல எதையோ தீர்மானிச்சிட்டு இப்பிடியெல்லாம் நடந்துக்குறியோனு எனக்குச் சந்தேகம் வருது”
“அட லேடி ஷெர்லாக் ஹோம்ஸ்! அப்பிடி எதுவும் என் மனசுல இல்ல”
“என்னமோ போடா… காக்கி சட்டை காவி வேட்டி ஆகிடுமோனு பயமா இருக்கு… அதுக்குள்ள ஒருத்திய லவ் பண்ணவாச்சும் செய்… புண்ணியமா போகும்”
தனலெட்சுமி சலித்துக்கொள்ளவும் சத்தமாகச் சிரித்துவிட்டான் ராகவர்தன்.
“சிரிக்காத… எனக்கும் பேரன் பேத்திய கொஞ்சணும்னு ஆசை இருக்காதா?”
“விச்சுவோட புள்ளைய கொஞ்சுங்க… என் மனநிலைக்கு என்னால யாரையும் லவ் பண்ண முடியும்னு தோணல… எல்லாம் கூடி வந்தா நானும் கல்யாணம் பண்ணிப்பேன்”
“எப்ப? நாப்பது வயசுலயா?”
“சால்ட் அண்ட் பெப்பர் லுக்ல நான் கல்யாண போட்டோல வரணும்னு விதி இருந்தா என்ன பண்ணுறது?”
“ப்ச்! இந்தப் பேச்சு சாதுரியத்தை என் கிட்ட காட்டு… பேச வேண்டியவங்க கிட்ட இன்ச் டேப் வச்சு அளந்து பேசு… கடைசில உனக்கு ஹிட்லர்ங்கிற பேர் தான் மிச்சம்”
மனத்தாங்கலோடு அழைப்பைத் துண்டித்தார் தனலெட்சுமி.
அவர் மனதில் இன்னும் அந்தச் சம்பவம் வடுவாக இருக்கிறது போல! தலையை உலுக்கிக்கொண்டான் ராகவர்தன்.
ஆனால் அதிகநேரம் அதிலேயே உழலவில்லை.
அன்னை சொன்னது போல மாலையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமியை தரிசித்துவிட்டு வந்தான். வந்ததுமே ஜெயராணியிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது.
“அக்யூஸ்டோட போன் சிக்னல் இப்ப பழுகல் பக்கத்துல இருக்குற டவர்ல கனெக்ட் ஆகிருக்கு சார்… மே பி அந்த லேடி கேரளாக்குத் தப்பிச்சுப் போற ப்ளான்ல இருக்கலாம்… அதுக்கு முன்னாடி அவங்களைப் பிடிச்சிட்டா சிரமம் இருக்காது”
தாமதிக்காமல் தனது பணிக்குரிய உடைமைகளோடு கிளம்பினான் ராகவர்தன்.
அவன் தங்கியிருந்த இடத்திலிருந்து பழுகல் கிட்டத்தட்ட நாப்பது கிலோமீட்டர். அந்த ஊர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு தகவலைச் சொன்னவன் ஊரை அடைந்ததும் இரவாகிவிட்டது.
அது சிறிய ஊர் இல்லை. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட தெருக்களைக் கொண்ட பேரூராட்சி.
காவல்துறையினரின் தேடுதல் வேட்டை குற்றவாளிகளின் காதுக்குப் போகாதபடி இரகசியமாகத் தொடர்வதே சவாலாக இருந்தது.
ஊரில் திடுமென காவல்துறையினரின் பிரசன்னம் காணுமிடங்களில் எல்லாம் இருக்கவும் மக்களுக்கும் பயமே!
ராகவர்தனோடு தேடுதல் குழுவினர் வந்ததும் முன்பை விட அதிக பரபரப்புடன் குற்றவாளிகளைத் தேடத் துவங்கினார்கள்.
“அந்த லேடி கண்மணியோட அத்தை வீடு மொட்டமூடு முத்தாரம்மன் கோவில் கிட்ட இருக்கு சார்” ஒரு கான்ஸ்டபிள் கூறினார்.
“அது எங்க இருக்கு?” – ராகவர்தன்.
“இப்பிடியே இந்த பாறசாலை ரோடு வழிய போனா ரெண்டு நிமிசம் தான்”
நொடி நேரம் கூட தாமதிக்காமல் வேக எட்டுகளுடன் மொட்டமூடு முத்தாரம்மன் கோவிலை நோக்கி விரைந்தான் ராகவர்தன். அவனைத் தொடர்ந்து குழுவினரும் வர அங்கிருந்த வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்மணி பதற்றமும் பயமுமாக வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார்.
கதவைத் திறக்குமாறு சில நிமிடப்போராட்டம் நடந்தேற காவல்துறையினர் வீட்டின் பின் வாயிலையும் சுற்றி வளைத்தார்கள்.
கதவு திறக்க வீட்டுக்குள்ளிருந்து ஓட முயற்சித்த ஆடவன் ஒருவனை வளைத்துப் பிடித்தார்கள் காவல் துறையினர்.
குற்றவாளியான கண்மணி பின்வாயில் வழியே ஓட முயல அவளைப் பிடித்தார்கள் தேடுதல் குழுவோடு வந்த பெண் காவலர்கள்.
வீட்டின் உரிமையாளரான ஆணும் பெண்மணியும் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கையில் குற்றவாளியை விலங்கிட்டு அழைத்துச் சென்றார்கள் காவல்துறையினர்.
சரியாக காவல் வாகனத்தில் ஏறும் போது கண்மணியோடு வந்த ஆடவன் விலங்கு பூட்டிய கரத்தால் அனைவரையும் தாக்க அவனைப் பிடிக்க முயன்ற ராகவர்தனின் புருவத்துக்கு மேலே விலங்கின் பூட்டு முனை இடித்து தோல் கிழிந்தது.
சொட்டு சொட்டாக இரத்தம் கசிய அவனும் தடுமாறினான். அந்த இடைவெளியில் அந்த ஆடவன் தப்பித்து ஓட. தன்னைச் சமாளித்துக் கொண்டு அவனைத் துரத்தினான் ராகவர்தன்.
சில மீட்டர்கள் ஓடியதில் அந்த ஆடவனுக்கு மூச்சு வாங்கியது. அவன் சோர்வுற்ற போது பிடரியில் பலமாகத் தாக்கியது ராகவர்தனின் கரம். அந்த தாக்குதலில் தடுமாறி வேரற்ற மரமாகச் சரிந்தவனைக் கீழே விழாமல் அவனது சட்டையின் காலரைக் கொத்தாகப் பற்றி தடுத்தான்.
தடுமாற்றத்துடன் நின்றவனின் கன்னத்தைப் பதம் பார்த்து தனது முஷ்டியாக மடங்கிய கரத்தைத் தன்னுடைய கன்னத்தில் அழுத்தமாகக் குத்தியபடியே “நடடா” என்று இழுத்துச் சென்றான்.
காவல் வாகனத்தில் அவனைத் தள்ளிக் கதவை அடைத்தவன், அந்த ஆடவனை உக்கிரமாக முறைத்த விதத்திலேயே அவன் நடுங்கி போக “போலீஸ் மேலயே கை வைக்குற… பாத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு தனது பைக்கைக் கிளப்பினான்.
குற்றவாளியையும் அவளுக்குத் துணையாக இருந்தவனையும் காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்னை கிளம்புவதற்கான வேலைகள் ஆரம்பிக்க இரவையும் பொருட்படுத்தாமல் இலஞ்சிக்குக் கிளம்பினான் ராகவர்தன். அடுத்தடுத்த வேலைகள் வந்துவிட்டால் அவனால் இலஞ்சி போக முடியாமல் ஆகலாம். அன்னைக்கு வாக்கு கொடுத்துவிட்டானே!
தோல் கிழிந்த காயத்துக்கு முதலுதவி கூட செய்யாமல் அத்துணை வேகத்தில் பயணித்தவன் இலஞ்சியை அடைந்தபோது நள்ளிரவைத் தாண்டியிருந்தது நேரம்.
இந்நேரத்தில் அழைப்புமணியை அடித்து அன்னையை எழுப்புவது மனிதநேயமற்ற செயலாகத் தோன்றியது ராகவர்தனுக்கு.
விடிவதற்கு இன்னும் சில மணி நேரங்களே மிச்சமிருந்தன. பேசாமல் போர்டிகோவில் இருக்கும் படிகளில் அமர்ந்து கொள்வோம் என்று எண்ணி பைக்கை அதற்குரிய இடத்தில் நிறுத்தி பூட்டினான்.
நெடுந்தூரம் பைக்கில் வந்ததால் வலித்த முதுகையும் தோளையும் அசைத்துக் கொடுத்தபடி படியில் அமர்ந்தவன் மொபைலை எடுத்த போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
இன்னுமா அன்னை தூங்கவில்லை? அல்லது தனது பைக் சத்தம் அவரது உறக்கத்தைக் கலைத்துவிட்டதா?
கழிவிரக்கத்தோடு நிமிர்ந்தவன் ‘பாஸ்டல் க்ரீன்’ வண்ண குர்தாவும், வெண்ணிற ஹராம் பேண்டுமாக வந்து நின்ற அனுக்ரஹாவைச் சத்தியமாக அந்நேரத்தில் எதிர்பார்க்கவில்லை.
ஆச்சரியம் கப்பிய விழிகளுடன் எழுந்தவன் உள்ளே வருவதற்காக ஒரு பக்கமாக அவள் சாய்ந்து நிற்க, ராகவர்தனும் ஹெல்மெட்டும் கையுமாக வீட்டுக்குள் வந்தான்.
அவன் வந்ததும் கதவைப் பூட்டியவள் ராகவர்தன் படியேறுவதைப் பார்த்துவிட்டுத் தோள்களைக் குலுக்கிகொண்டு மீண்டும் ஹால் சோபாவில் அமர்ந்துகொண்டாள்.
‘மெல்டிங் பாட்டின்’ அடுத்தக்கட்ட தயாரிப்பு என்ன என்பது குறித்து இணையத்தில் விபரங்களைத் தேடிக்கொண்டிருந்தாள்.
கூடவே அவளுடைய ‘சாய்சாகச்’ சில உணவுப்பதார்த்தங்களை அட்டவணைப்படுத்தியிருந்தாள். அவற்றை ‘ரெடி டூ ஈட்’ உணவுவகைகளாகத் தயாரிப்பது சாத்தியமா என்பது குறித்தும் இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது ராகவர்தனின் பைக் வரும் சத்தம் கேட்டது.
படியேறி அறைக்குப் போனவன் மீண்டும் கீழே இறங்கிவர அவளும் மடிக்கணினியிலிருந்து பார்வையை உயர்த்தினாள்.
சோர்வாக இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது அவனுடைய முகத்தில். அந்நேரத்தில் அவனது புருவத்துக்கு மேலிருந்த காயம் அவள் கண்ணில் பட்டுவிட்டது.
ராகவர்தன் அவளைப் பார்த்தபடி படியிறங்கியவன் சமையலறை நோக்கி சென்றான்.
இரவு வெகுநேரமானாலும் வயிறு சாப்பாடு வேண்டுமெனக் கூப்பாடு போட்டது. இரவுணவு மிச்சமிருக்காது. ப்ரெட், பால் என ஏதாவது தென்படுகிறதா என ஃப்ரிட்ஜில் அவன் தேடிக்கொண்டிருக்கும் போதே சமையலறை விளக்கு போடப்பட்டது.
திரும்பிப் பார்த்தவன் முதலுதவிப்பெட்டியோடு நின்ற அனுக்ரஹாவைப் பார்த்ததும் கண்களைச் சுருக்கினான். பின்னர் அப்படி ஒருத்தி அங்கே இல்லாதது போல மீண்டும் ஃப்ரிட்ஜில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தான்.
அனுக்ரஹாவுக்கு எரிச்சல் வந்தது.
பேசாமல் கொண்டு போய்விடலாமா என்று கூட யோசித்தாள்.
ஆனால் நின்ற வாக்கில் கையை அவன் சுழற்றி விட்டு தலையை அப்படியும் இப்படியுமாக அசைத்ததைப் பார்த்ததும் அவனது களைப்பின் தீவிரம் புரிந்தது.
பாவம்! பசி வேறு இருக்கும் போல!
அவனிடம் பேசவும் வார்த்தை வரவில்லை.
யோசிக்காமல் ஃப்ரிட்ஜ் அருகே போனவள் முதலுதவிப்பெட்டியை நீட்டினாள்.
ஆராய்ச்சிப்பார்வையோடு அதை வாங்கிக்கொண்டவன் அங்கிருந்து செல்ல அனுக்ரஹா ஃப்ரிட்ஜிலிருந்து ப்ரெட், முட்டை மற்றும் பால் பாக்கெட்டை எடுத்தாள்.
அவள் ப்ரெட் பாக்கெட்டைப் பிரிக்கும் சத்தம் கேட்டதுமே சமையலறை வாயிலில் நின்றவன் திரும்பிப் பார்த்தான்.
அனுக்ரஹா மடமடவெனப் பாத்திரம், ப்ளண்டர், நான்ஸ்டிக் பேனை எடுப்பதைப் பார்த்ததும் வெளியே போகாமல் அங்கிருந்த திண்டில் வசதியாகச் சாய்ந்து நின்றவாறு தனது காயத்துக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தான்.
இடையிடையே விழிகள் தனக்காகச் சமைப்பவளின் பக்கமும் போய் வந்தது. இதழ்களில் அவனை மீறி முறுவல் பூத்தது. நீண்டநாள் புதிருக்கு விடை கிடைத்தது போன்ற உணர்வு அவனுக்கு!
அவன் முதலுதவி செய்து முடிக்கவும் அனுக்ரஹா ‘ஃப்ரெஞ்ச் டோஸ்டுடன்’ அவனிடம் வரவும் சரியாக இருந்தது.
முதலுதவிப்பெட்டிக்காகக் கை நீட்டியவள் அவனிடம் தட்டை நீட்டவும் ராகவர்தன் வாங்கிக்கொண்டான்.
அவள் அங்கிருந்து பேசாமல் வெளியேறிவிட ராகவர்தனும் பின் தொடர்ந்து வந்து உணவு மேஜையில் அமர்ந்தான். அங்கிருந்து பார்த்தால் ஹால் நன்றாகத் தெரியும்.
அனுக்ரஹா ஹால் சோபாவில் அமர்ந்து மடிக்கணினியில் எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தபடியே சாப்பிட்டான்.
அனுக்ரஹாவுக்கு அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தாலும் கண்டுகொள்ளாதவளைப் போல வேலையைக் கவனித்தாள். ஆனால் அவளுக்குள் இருந்த குறுகுறுப்பு குறையவில்லை.
‘சாப்பிடும் நேரத்தில் என்ன பார்வை’ என மனம் சலித்துக்கொண்டது.
இருந்தாலும் அவன் ‘ப்ரெஞ்ச் டோஸ்டுகளைக்’ காலி செய்யும் வரை தொடர்ந்த அந்தக் குறுகுறுப்பும், மனதின் சலிப்பும் தொடர்கதையானது.
ஒரு வழியாகக் கடைசி விள்ளல் டோஸ்டை வாயில் போட்டு அதற்கு ‘முற்றும்’ போட்டுவிட்டு எழுந்தான் ராகவர்தன்.
அவன் சமையலறைக்குள் போனதும் “உஃப்” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் அனுக்ரஹா.
அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அவனது உருவம் நிழலாடவும் அவசரமாகக் கண்களை மடிக்கணினி திரைக்குத் திருப்பினாள்.
ராகவர்தன் அவள் எதிர்பார்த்தது போல மாடிக்குச் செல்லவில்லை. நிதானமாக வந்து அவளெதிரே அமர்ந்தான்.
முன்பை விட அதிகமாக மடிக்கணினி திரைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் அவள்.
“சில கேஸை முடிச்சுட்டு வர இந்த மாதிரி லேட் நைட் ஆகிடும்… நீயும் ‘நைட் அவுல்’ (Night Owl) மாதிரி இருக்குறதால நான் லேட் நைட் வந்தாலும் உனக்குச் சிரமம் இருக்காது தானே?”
அனுக்ரஹாவுக்கு அவனது கேள்வி காதில் விழவும் முதலில் அவன் தன்னிடம் தான் பேசுகிறானா என்ற சந்தேகம். பின்னர் இதை ஏன் தன்னிடம் கேட்கிறான் என்ற சந்தேகம்.
‘ஙே’ என்று விழித்தாள்.
ராகவர்தன் நிதானமாக எழுந்தவன் “டெய்லி இப்பிடி ‘நைட் அவுல்’ அவதாரம் எடுக்காத… நிறைய மேரேஜ் டிவோர்ஸ்ல முடியுறதுக்குப் பார்ட்னரைக் கண்டுக்காம நைட்ல வேலை பாக்குறது தான் காரணம்னு ஒரு சர்வே சொல்லுது… போலீஸ்காரன் டிவோர்ஸுக்காகக் கோர்ட் படியேறுனா நல்லா இருக்காது” என்று அறிவுரை சொல்லவும் அவள் முகத்தில் அலட்சியம்.
அவன் அறிவுரை கூறினால் அவள் முகம் மாறுவது சிறுவயது பழக்கம்.
ராகவர்தன் மர்மப்புன்னகையோடு அங்கிருந்து மாடிப்படிகளில் ஏறியபோதுதான் அவன் சொன்ன வார்த்தைகளுக்கான அர்த்தமே அனுக்ரஹாவின் மண்டையில் உறைத்தது.
“என்ன?” அவளை மீறிக் கேட்டும் விட்டாள்.
அவனா பதில் சொல்வான்? சிரிப்போடு படிகளில் ஏறி மறைந்தான்.
அனுக்ரஹா அவன் சொன்னதையே மீண்டும் மீண்டும் ‘ரீவைண்ட்’ செய்து பார்த்துவிட்டு முடிவில் அதிர்ந்தே போனாள்.
மாடியைப் பார்த்தாள். ராகவர்தன் இல்லை.
“அப்படினா இவன்…” வார்த்தைகளை முடிக்கவில்லை அவள். முடிக்கப் பிரியமில்லை என்று கூட சொல்லலாம்.
‘எரிகிற கொள்ளி’ ‘டேஞ்சர் ஜோன்’ என்றெல்லாம் பூதாகரப்படுத்திப் பார்த்த ஒரு ‘சென்சிடிவான’ விஷயத்தை வெகு இலகுவாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தான் ராகவர்தன். அனுக்ரஹா அன்றிரவு முழுவதும் அதை எண்ணி எண்ணி மலைத்துப்போக உறக்கமோ ‘டாட்டா பை பை’ காட்டிவிட்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


