“சுயமரியாதைக்காகக் கட்டியெழுப்பிய என் வைராக்கியக் கோட்டையில், நானே என்னைச் சிறைவைத்துக்கொண்டது யாருக்கும் தெரியாது. என் சுதந்திரத்தை நான் கொண்டாடியதாக ஊரே நினைத்திருக்க, உன் நினைவுகள் மட்டுமே அங்கு என் கண்ணீரைக் குடித்துக்கொண்டிருந்தன!”
-நியதி
“எனக்குப் புரியுது ப்ரீ. நான் விட்டுட்டு வந்தது ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டியைத்தான். ஆனா இதே மாதிரி கோல்டன் ஆப்பர்சூனிட்டி எனக்கு வாழ்க்கை முழுக்க வரும். நிலன்கூட சேர்ந்து வாழுற வாய்ப்பு வராதுல்ல. நான்தான் அவரை விட்டுட்டு வந்தேன். காதலை நிரூபினு அவர் சொன்ன அப்புறமும் நான் என்னோட கெரியர்லயே கண்ணா இருந்தா அது பெரிய அநியாயம்.”
குளித்து ஈரம் உலர்த்தாத சிகையை முன்பக்கம் வழிய விட்டுக்கொண்டு தோளுக்கும் காதுக்கும் இடையே மொபைலை வைத்தபடி பேசிக்கொண்டிருந்தாள் நியதி. ப்ரீத்தியிடம்தான்!
முந்தைய நாள் வரை கோவை வருவதாகச் சொன்னவள், பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் மூலமாக அனுப்பிவைத்த பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் விலக்கி வைத்த ஒருவனையே தேடிச் செல்லப்போவதாகச் சொல்லவும் முதலில் ப்ரீத்திக்கு வந்தது சந்தோஷம்தான்.
ஆனால் அங்கே அவளை ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகமும் ப்ரீத்திக்கு இருக்கவே கொஞ்சம் யோசிக்குமாறு கேட்டுக்கொண்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இல்ல ப்ரீ! நான் ஃபைனல் படிக்கணும்னாலும் திருநெல்வேலி சேப்டர் இருக்கே. அங்க போய் ரிஜிஸ்டர் பண்ணிப் படிச்சுப்பேன். என் படிப்பையும் பெர்சனல் லைஃபையும் இனியாச்சும் நான் பேலன்ஸ் பண்ணணும். அதைவிட முக்கியம் – என்னால நிலன் ரொம்ப ஹர்ட் ஆகிருக்கார். இத்தனை நாள் பாக்காம பேசாம இருந்தப்ப அவரோட பெயின் எனக்குப் புரியல. எல்லாருமா சேர்ந்து என்னை ஒதுக்கிவச்சி அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்கனுகூடத் தோணுச்சு. ஆனா நேர்ல வந்து நின்னு அவர் பேசுன ஒவ்வொரு வார்த்தையும் என்னை ரொம்ப யோசிக்க வச்சிடுச்சு. எப்பவுமே நான் என்னோட முடிவுல ஸ்ட்ராங்கா இருப்பேன். அது சரியோ தப்போ அதைப் பத்தி நான் கவலைப்பட்டதில்ல. இப்பவும் நான் கவலைப்படல ப்ரீ. இந்த வேலை போனா என்னால இன்னொரு வேலையைத் தேடிக்க முடியும். ஆனா நிலனை இன்னொரு தடவை இழந்துட்டா ரொம்ப கஷ்டம்”
பேசிக்கொண்டே இருந்தவள் பின்னே காலடிச் சத்தம் கேட்டதும் திரும்பினாள். அங்கே நின்றவன் நிலவன்.
அவனைப் பார்த்தபடியே “நான் அப்புறமா கால் பண்ணுறேன் ப்ரீ. இன்டர்வியூவை நல்லபடியா பண்ணு” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
நிலவனும் உடை மாற்றியிருந்தான்! அவனது கருஞ்சிகை ஒழுங்கின்றி குறைந்தபட்ச ஈரத்தோடு கிடந்ததை வைத்துக் குளித்திருப்பான் என ஊகித்தவள் பளிச்செனப் புன்னகைக்க அவனது முகத்திலோ அதற்கு எதிர்வினையே இல்லை.
“வேலையைகூட விட்டுட்டு வந்திருக்க போல?” என்று கூர்மையாய்ப் பார்த்தபடி வினவினான்.
நியதி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆம் எனத் தலையசைத்தபடியே கையிலிருந்த டவலால் கூந்தலை உலர்த்தினாள்.
“இப்ப நான் என்ன பண்ணணும்னு நினைக்குற?” நேரடியாகவே கேட்டுவிட்டான்.
“எனக்குத் தெரியல. நீங்க அதைச் செய்யணும் இதைச் செய்யணும்னு எதிர்பார்த்து நான் இங்க வரல.”
“நீ இங்க இருந்து போனதுக்கு ஒரு நோக்கம் இருந்துச்சு. இப்ப திரும்பி வந்ததுக்கு…”
“நீங்க மட்டும்தான் காரணம். போதுமே? மறுபடி மறுபடி விளக்கம் குடுத்து போரடிக்குது எனக்கு. பயங்கரமா பசிக்குது. அத்தை என்ன ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணிருக்காங்க?”
கூந்தலைப் பின்னே தூக்கிப் போட்டபடி அவள் வினவ ஆயாசமாக வந்தது என்னவோ நிலவனுக்குத்தான். அந்தக் கேள்வி ஆயாசத்திற்கான காரணமல்ல!
அதற்கு முக்கியக் காரணம் அவளது புடவை அவதாரம். ஈரம் சொட்டிய கூந்தல் அவளது இடையை மீட்டிச் சென்றதில் இடைவளைவில் சொட்டிய நீர்த்துளிகள் அவனது மூளையைத் தறிகெட்டுப் போகச் செய்தால் அவனும் பாவம்தானே!
கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பின்னே அவனது அறையில் பெண்வாசனை கமழ்கிறது! நியதியின் டவ் பாடிவாஷின் நறுமணம் மட்டுமே தன்னைச் சுற்றி வியாபித்து நிற்பது போல அவனுக்கு ஒரு மாயை.
மூளையும் கண்களும் ஒரேயடியாய் வெட்கம் கெட்டுப்போவதற்குள் சுதாரிக்க நினைத்தால் இந்தச் சதிகாரி வேண்டுமென்றே அவனது கண்களை ஈர்க்க என்னென்னவோ செய்கிறாள்! தலையை உலுக்கி நடப்புப் பிரச்னைக்கு வந்தான் அவன்.
எதுவுமே நடக்காதது போலத் தனது பெற்றோரிடம் நியதியால் இருக்க முடியும். ஆனால் அவனது அன்னை வசந்தாவுக்கு வருத்தம் இருக்குமே! அதைப் பற்றி இவளுக்குக் கவலையே இல்லை.
“சரி வா!”
பெருமூச்சோடு அவளைக் கீழ்த்தளத்துக்கு அழைத்துச் சென்றவன் அங்கே வைத்தியநாதன் வசந்தாவிடம் தணிந்த குரலில் கண்டனம் தொனிக்கப் பேசுவதைக் கேட்க நேரிட்டது.
“இப்பவே எதுக்கு நிலாகிட்ட சொன்ன வசந்தா? அவ உடனே இங்க வந்து நிப்பா. மருமக வந்து முழுசா ஒரு மணி நேரம் ஆகல. நிலா இங்க வந்தா இப்ப என்ன நடக்கும்னு தெரிஞ்சும் ஏன் சொல்லுற?”
“நான் வேணும்னு சொல்லலைங்க. மருமக குளிக்குறதுக்காக மோட்டார் போடச் சொன்னது நிலாக்குப் போன் பேசுறப்ப அவ காதுல விழுந்துடுச்சுங்க.”
“கொஞ்சம் கவனமா இருக்கக்கூடாதா வசந்தா?”
மாமனார் மாமியாரிடம் வருத்தப்படுவது அவசியமற்ற ஒன்று என்றே தோன்றியது நியதிக்கு. வேகமாக அவர்களை நோக்கி நடந்தவளைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி உணவு மேஜையில் அமர்ந்தான் நிலவன்.
திடுதிடுப்பென மருமகள் வந்து நிற்கவும் இருவரும் திகைத்துப்போனார்கள். என்ன பேசுவதென்றே தெரியாமல் திகைத்தார்கள். நியதியின் முறுவல் அவர்களது பதற்றத்தைக் குறைத்ததேயன்றி அவர்களின் நாவின் கட்டை நீக்கவில்லை. எனவே அவளே பேச்சைத் தொடங்கினாள்.
“அத்தை அவங்க மகள்கிட்ட சொன்னாலுமே தப்பு என்ன இருக்கு மாமா? அவங்க வரட்டும். வந்து என்னைத் திட்டுவாங்களா? திட்டட்டும். ஆனா பதிலுக்கு நானும் கூடக்குறையப் பேசுவேன். ஏன்னா நடந்த நிறையப் பிரச்சனைகள் அவங்க அவசரக்குடுக்கைத்தனத்தால நடந்ததுதான். பொறுமையா நடக்க வேண்டிய எங்க கல்யாணம் அவசரகதியில நடக்க அவங்கதானே காரணம்? என் பக்கமும் சில விஷயங்கள்ல நியாயம் இருக்கு. இதை நாங்க ரெண்டு பேரும் பாத்துக்குறோம். நீங்க டென்ஷன் ஆகாதீங்க மாமா” என்று வைத்தியநாதனிடம் சொன்னவள் வசந்தாவிடம் திரும்பினாள்.
“வாஞ்சி மணியாச்சி பக்கத்துல டீ குடிச்சது அத்தை. ரொம்ப பசிக்குது”
வசந்தாவுக்கு யாரேனும் பசி என்று சொல்லிவிட்டால் மனம் உருகிவிடும். விரோதியே வந்து பசிக்கிறது என்று சொன்னால் மறுயோசனையின்றி வீட்டுக்குள் அழைத்துச் சாப்பாடு போட்டுவிடுவார். மருமகள் சொன்னால் முகம் சுளிக்கவா போகிறார்?
“வாம்மா! சாப்பிடுற நேரம்தான்”
மூவரும் உணவு மேஜைக்கு வரவும் நியதியை நிலவன் கேள்வியாய் நோக்கவும் சரியாக இருந்தது. அவனருகே அமர்ந்தவள் “என்ன லுக்கு?” என்று சரிந்து அவன் காதோரம் பேச
“நீ நிலாவை எதுவும் பேசக்கூடாது” என்றான் அவன் கறாராக.
உடனே நியதியின் முகம் மாறிப்போனது.
“ஓஹ்! அப்ப அவங்க என்னைத் திட்டலாமா?”
“அதுக்கு நான் விடமாட்டேன். என் பேச்சை மதிச்சா நீ அமைதியா இரு”
“ஷப்பா! செக் வைக்குறதுல உங்களை மிஞ்ச முடியுமா? ஐ அக்ரி. பட் அவங்க லிமிட் க்ராஸ் பண்ணுனா நானும் பண்ணுவேன். என்னை ஒரு வார்த்தை சொன்னா நான் பத்து வார்த்தை பதிலடி குடுப்பேன். அப்புறம் வலிக்குதுனு உங்க தங்கச்சி அழக்கூடாது. சொல்லிட்டேன்”
அதற்கு மேல் அவளைப் பேசவிடாமல் வசந்தாவின் இட்லி கவர்ந்துவிட்டது. அதில் கவனமானவள் கணவனைக்கூடக் கண்டுகொள்ளவில்லை. பசி என்று வந்துவிட்டால் அவள் யாரையும் கவனிக்கமாட்டாள். சாப்பாடு விஷயத்தில் நாடகத்தனமான நாசூக்குகள் அவளுக்குப் பிடிக்கவும் செய்யாது.
வேண்டும் என்பதைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவாள். ஒருவேளை இதற்கெல்லாம் பிறந்தவீட்டில் இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கலாமென யூகிப்பான் நிலவன். அதுதான் என்று ஒரு முறை சொல்லவும் செய்திருக்கிறாள்.
அதனாலேயே அவள் சாப்பாடு என்று கேட்டுவிட்டால் வசந்தா சுணங்காமல் செய்துகொடுப்பார் முன்பும், இப்போதும், இனியும்.
திருப்தியாகச் சாப்பிட்ட பிறகு “சாம்பார் சூப்பரா இருந்துச்சு அத்தை. உங்களுக்கு மதியம் குக்கிங்குக்கு ஹெல்ப் வேணும்னா கூப்பிடுங்க.” என்க
“உனக்கு… நீ படிக்கணும்ல?” என்று தயக்கத்தோடு அவர் பேச
“நான் படிச்சு முடிச்சிட்டேன் அத்தை. அதுக்கு சர்டிஃபிகேட்கூட வந்தாச்சு. இனிமே ஃபைனலுக்கு படிக்க நாள் இருக்கு. அதுவரை உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன்” என்றாள் அவள்.
“சரிம்மா! உன் சௌகரியத்தைப் பாத்துக்க. நீ செய்யணும்னு கட்டாயமில்ல. சுப்பு வருவா. அவளும் நானுமா சேர்ந்தே எல்லா வேலையையும் முடிச்சிடுவோம்”
வசந்தாவின் பெருந்தன்மையை மெச்சிக்கொண்டவள் நிலவனின் கையைப் பிடித்துத் தன்னோடு தங்களது அறைக்கு அழைத்துப் போய்விட்டாள்.
உள்ளே வந்ததும் கதவை மூடியவன் வேகமாக அவளது கையை விலக்கியும்விடச் சின்னதாய் ஒரு வலி அவளிடம்.
“யூ டிசர்வ் திஸ் ரிஜக்ஷன் நியதி” என்று மனசாட்சி வேறு நேரம் கெட்ட நேரத்தில் நியாயவாதியாய் மாறித்தொலைத்தது.
மௌனமாய்ச் சென்று தனது பேக்கிலிருந்து தனது சான்றிதழ்களை எடுத்துவந்து நிலவனிடம் காட்டினாள்.
சி.ஏ இன்டர்மீடியட் முடித்ததற்கான சான்றிதழ் அது. அதைக் கையில் வாங்கியபோது மெய்யாகவே நிலவனுக்குப் பிரமிப்பாகத்தான் இருந்தது, ஏனெனில் சுலபத்தில் தேர்ச்சியடையக் கூடிய படிப்பு அல்லவே அது. அதில் அவனது மனைவி பாதிக்கிணறு தாண்டியதும் சாதனைதானே!
சான்றிதழைப் பார்த்தவன் “ரொம்ப சந்தோஷம்! வாழ்த்துகள்” என்றான். மெய்யாகவே அவனது மனம் நிறைந்துதான் வாழ்த்தினான்.
நியதியின் முகமும் அந்த வாழ்த்தை ஏற்றதன் அறிகுறியாய்ப் பூரித்துப்போனது. அதே நேரம் கண்களும் கலங்கின.
“எங்க ஆடிட்டர் சொல்லுவாரு, ஒரு பொருளை அதோட அருமை தெரிஞ்ச ஆள்கிட்டதான் குடுக்கணும். அவங்களால மட்டும்தான் அதை முழுமையா ஆகர்ஷிக்க முடியும்னு. என்னோட இந்த சர்டிஃபிகேட்டைக் காட்டுறதுக்கு ஃபேமிலினு யாரும் இல்ல சென்னைல. இப்ப உங்ககிட்ட காட்டுறப்ப சந்தோஷமா இருக்கு நிலன். சரியோ தப்போ இது என் ரெண்டு வருஷப் போராட்டத்தோட பலன். இதை நினைச்சு நான் எப்பவும் பெருமைப்படுவேன். பெருமைப்படலாம்தானே?”
நிலவனுக்கு என்ன பதில் சொல்லவெனத் தெரியவில்லை. வெறுமெனே தலையசைத்தான்.
“இதேமாதிரி ஃபைனல் முடிச்சிட்டு உங்க கையில என் சர்டிஃபிகேட்டைக் குடுப்பேன். அப்ப நமக்குள்ள இருக்குற இந்த இடைவெளி முழுசா சரியாகியிருக்கும். நீங்க வேணும்னா பாருங்க”
“உன் நம்பிக்கை பலிச்சா எனக்கும் சந்தோஷம்தான்.”
சான்றிதழை மீண்டும் ஒரு முறை பெருமிதமாகப் பார்த்தவன் அவள் பார்ப்பதற்குள் முகபாவனையை மாற்றி அதை அவளிடமே திருப்பிக் கொடுத்தான். நியதியும் வாங்கிப் பத்திரப்படுத்தினாள் அவளது பையில்.
“அந்த கபோர்ட்ல வை”
அவனது குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை.
“உங்க கபோர்ட்ல எனக்கு ஸ்பேஸ் குடுக்குறீங்களா?”
“அப்பிடித்தானே சொன்னேன்? காதுல விழலையா? இல்ல தமிழ் புரியலையா?”
“விழுந்துச்சு நிலன். நான் இப்பவே அடுக்கி வச்சிடுறேன்”
நாம் விரும்பும் நபர்கள் நாம் எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்துவிட்டால் நமக்குள் ஒரு சந்தோஷம் பிரளயமாய் வெடிக்கும். அதை எப்படிச் சமாளிப்பதெனத் தெரியாமல் நாம் திணறிப்போவோம். அந்த நிலையில்தான் நியதி இருந்தாள்.
நிலவன் அவனுடைய கபோர்டில் பாதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவளுக்குக் கொடுத்தது என்னவோ அவனது சரிபாதியாக அவளை அவன் அங்கீகரித்த உணர்வைக் கொடுத்துவிட்டது.
வேகமாய்த் தனது பொருட்களை அடுக்கி வைத்தவள் மடிக்கணினி, மொபைல், ஏர்பாட்ஸ் என அனைத்தையும் மேஜை மீது வைத்தாள்.
இதையெல்லாம் நிலவன் நின்று பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அடுக்கி வைத்ததும் மெதுவாகத் தொண்டையைச் செருமினான்.
“சென்னைல உன் ரூம் வித்தியாசமா செடி கொடியோட இருந்துச்சு, லைட் எல்லாம் தொங்கவிட்டிருந்த. விருப்பம் இருந்தா இங்கயும் அதைச் செஞ்சுக்க.”
“நீங்க எனக்காக யோசிக்குறீங்களா நிலன்?”
ஆவலில் பளபளத்தன நியதியின் விழிகள்.
“ஒரு சின்ன வசதிக்குறைவு வந்தாலும் அதைச் சாக்கா வச்சிட்டு நீ மறுபடி சென்னைக்குப் போயிடுவியே. உன்னை நம்ப முடியாது. செலவோட செலவா எல்லாத்தையும் செஞ்சிடலாம்னு நினைச்சேன்”
என்ன பேசினாலும் அங்கே சுற்றி இங்கே சுற்றி அது அவர்களின் பிரிவையும் சென்னை மாநகரத்தையும் தொட்டு நின்றது. இப்போது நியதிக்கு அயர்ச்சி வந்துவிட்டது.
உதட்டைச் சுழித்தவள் “அப்ப நான் லிஸ்ட் தர்றேன். அதெல்லாம் வாங்கிட்டு வருவீங்களா?” என்று கேட்க
“போகமாட்டேன்னு சொல்லுறாளா பாரு” என்று வாய்க்குள் முணுமுணுத்தான் நிலவன்.
அது நியதியின் காதுக்குக் கேட்காமலா போகும்? திவ்வியமாக விழுந்தது அவளது செவிகளில்.
“நான் போகமாட்டேன் நிலன். எத்தனை தடவை சொன்னா நீங்க நம்புவீங்க?”
“என் மனசு உன்னை நம்ப மறுக்குது. நீ ஸ்ரீராமஜெயம் மாதிரி ஆயிரம் தடவை ‘உன்னைப் பிரிய மாட்டேன் நிலன்’னு சொல்லணும்னு அது பைத்தியக்காரத்தனமா எதிர்பாக்குது. இங்க நீ கொடுமைக்காரியா நான் கொடுமைக்காரனானு நானே குழம்பிப் போயிடுறேன்”
சொல்லும்போதே நிலவனின் குரல் உள்ளே போய்விட்டது. அவன் நல்லவன்! புடம்போட்டத் தங்கம் போல அவனது நற்குணமும் ஆண்டாக ஆக மிளிரத்தான் செய்கிறது. நல்லவர்கள் எப்போதும் தங்களை நல்லவர்கள் எனத் தம்பட்டம் அடிப்பதில்லை. அதே நேரம் தங்களது செயலால் அடுத்தவர் மனவருத்தப்படக்கூடாதென யோசித்துக்கொண்டே இருப்பார்கள். அதுதான் நிலவன் போன்ற நபர்களுக்கு வரமும் சாபமும்.
நியதிக்கு அவனைப் பற்றி நன்றாகவே தெரியும். ஓடோடிப் போய் அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். நிலவன் விலக முயற்சிக்கவும் “ஓவரா பண்ணாதீங்க! அப்பிடி கற்பைக் காப்பாத்தி என்ன பண்ணப்போறீங்க? என்கிட்டதானே ஒப்படைக்கப்போறீங்க?” என்று விஷமமாய்ப் பேசவும்
“இதைத்தான் சென்னைல போய் கத்துக்கிட்டியாடி?” எனச் சூடாய்க் கேள்வி பிறந்தது அவனிடம். இன்னும் நியதியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து அவனால் விலகமுடியவில்லை என்பது தனிக்கதை.
“நீங்க அமைதியா நின்னீங்கனா ஹக்கோட நிறுத்திப்பேன். ஓவரா பண்ணுனீங்கனா ஃப்ரெஞ்ச் கிஸ்தான்” என்று சொன்னவள் மிரட்டும் பாவனையோடு தனது கால்களை எக்கி அவனது உதடுகளைச் சிறை செய்யப்போக நிலவன் அசையாமல் நின்றான்.
“குட் பாய்!” என அவனது கன்னத்தில் தட்டியவள் “நம்ம விஷயத்துல நீங்க பெருந்தன்மையோட மறுவுருவமா நடந்துக்குறீங்க. இதுல கொடுமைக்காரி நான்தான். எனக்குச் சுயநலம் அதிகம்தான். பிடிவாதமும் வைராக்கியமும் அதிகம்தான். ஓரளவுக்கு மேல அடுத்தவங்களைப் பத்தி நான் யோசிக்கமாட்டேன். இதெல்லாம் உங்களுக்கும் தெரியும். நீங்க நல்லவரா இருக்கப் போய்தான் என்னை மாதிரி ஒருத்தியால இத்தனை நடந்தும் உங்ககிட்ட இவ்ளோ குளோஸா நின்னு உரிமையா பேச முடியுது நிலன். யூ ஆர் அ ஜெம் ஆஃப் பெர்சன்.” என்று கண்களில் கண்ணீர் ததும்பச் சொன்னாள்.
நிலவனின் கண்களும் கலங்கிப்போயின. அதிகம் யோசிக்காமல் அவளை இறுக அணைத்துக்கொண்டான் அவன். அவனது பெரிய இரு கரத்தில் ஒன்று அவளது இடையையும் இன்னொரு கரம் அவளது முதுகிலிருந்து தலையையும் தாங்கித் தன்னோடு ஒட்டவைத்துக்கொண்டன.
நியதி கொஞ்சம் விலக எத்தனிக்க “ஷ்ஷ்! அசையாம இரு. இதுலயாச்சும் எனக்கு அநியாயம் பண்ணாத நிதி” என்று அவன் சொல்ல இதுவரை கேலியும் கிண்டலும் குத்தலும் நையாண்டியுமாக மட்டுமே பேசியவள் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
விசும்பல் அழுகையாக மாறியதும் நிலவனே அவளை விலக்கினான்.
“அழாத நியதி” கரகரத்தது அவனது குரல்.
“அழாம இருக்க முடியல. ஏன் நீங்க இவ்ளோ நல்லவரா இருக்குறீங்க?”
“புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருல யாராவது ஒருத்தராச்சும் நல்லவங்களா இருக்கணும்னு கேள்விப்பட்டிருக்கேன்”
அவன் அவளைச் சீண்டி இயல்பாக்கச் சொன்ன வரிகள் மெய்யாகவே அவளது அழுகையை நிறுத்தியது.
“இதெல்லாம் சும்மாதானே? இன்னும் கோவம் இருக்கு” என்றாள் அவனது கண்களைப் பார்த்தபடி.
“இல்லாம போகுமா? ரெண்டு வருஷம்டி. ரெண்டு வருஷ இழப்பு. அவ்ளோ ஈஸியா தூக்கிப் போட முடியாது. அதே நேரம் என்னால உன்னை வெறுக்கவும் முடியாது நியதி. நான் காதல்ல மரணக்காயத்துக்கு ஆளானவன், அது ஆறுறதுக்கான கால அவகாசத்தை நீ எனக்குக் குடுக்கணும்”
“ம்ம் சரி! ஆனா அதுக்காக ஒரேயடியா விலகி நிக்காதீங்க.”
விலகப்போனவனின் சட்டை காலரைப் பிடித்து இழுத்து அவனைத் தனது நெற்றியில் நெற்றி முட்டவைத்துச் சொன்னாள் நியதி.
அவனது சுட்டெரிக்கும் விழிகளைப் பார்க்கும் திராணி அவளது விழிகளுக்கு இல்லை! சட்டென அவை மூடிக்கொண்டன. காலரிலிருந்த கரம் மெதுவாக உயர்ந்து அவனது இரு பக்கத்துக் கன்னங்களையும் அழுத்தமாய்ப் பற்றிக்கொள்ள கண் மூடி நின்ற பொழுது ஏகாந்தமாய் மாறிப்போனது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


