“என் மௌனத்தைத் திமிரென்றும், விலகலைக் கல்நெஞ்சமென்றும் நினைத்துக்கொள்; என்னைச் சுற்றியுள்ளவர்களின் விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் அன்புக்குரியவர்களின் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும், இந்த உலகத்தையே தீயிட்டுக் கொளுத்தவும் நான் தயங்கமாட்டேன்!”
–நிலவன்
அம்பாசமுத்திரம் – சேரன்மகாதேவி நெடுஞ்சாலையில் பரந்து விரிந்து கிடந்தது அந்த முப்பத்திரண்டு ஏக்கர் பரப்பளவிலான விவசாயப் பண்ணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னணியில் விரிந்து கிடந்த அந்த விவசாயப் பண்ணை சகதியோ, வரப்புகளோ, தேங்கி நிற்கும் தண்ணீரோ இல்லாத ஒரு நவீன விவசாய சாம்ராஜ்ஜியம்.
‘வி.வி. அக்ரோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற பெயர்ப்பலகை ஒரு மரப்பலகையில் செதுக்கப்பட்டு கூடவே அழகான லோகோவுடன் சிரித்தது அந்த விவசாயப் பண்ணையின் பெயர்ப்பலகை.
அந்த முப்பது ஏக்கர் நிலப்பரப்பின் நடுவே அமைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட பேக்கிங் யூனிட்டிற்கு வெளியே நின்றான் அவன்.
உழைத்து உரமேறிய வாட்டசாட்டமான கட்டுக்கோப்பான உடலமைப்பு. அவனது தோற்றத்தில் மண்ணின் மைந்தனுக்கான கம்பீரம் தனியாய்த் தெரிந்தது. அவனது அடர்த்தியான, கருஞ்சிகைக் கேசம் நேர்த்தியாக வெட்டப்பட்டு இவ்வளவு நேர உழைப்பின் காரணமாய்க் கலைந்து ஒருபுறமாகச் சரிந்து நெற்றியில் விழுந்திருந்த அந்த அலைபாயும் முடிகள், அவனது தோற்றத்திற்கு ஒருவித முரட்டுத்தனமான அழகைக் கொடுத்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நேர்த்தியாக ட்ரிம் செய்யப்பட்ட அடர்ந்த தாடியும் அவனது கூர்மையான முகவெட்டிற்குக் கச்சிதமாகப் பொருந்தியது. எதையும் ஊடுருவிப் பார்க்கும் அந்த ஆழமான, தீவிரமான பார்வை இப்போது காய்கறிகள் பேக் செய்யப்பட்டு கண்டெய்னர்களில் ஏற்றிச் செல்லத் தயாராகிக்கொண்டிருப்பதை நோட்டமிட்டது.
அவன் நிலவன்! இருபத்தெட்டு வயதில் குடும்ப வருமானத்தின் மூலதனமான பதினைந்து ஏக்கர் நிலத்தை முப்பதாக்கிப் பாரம்பரிய விவசாயத்திலிருந்து நவீன விவசாயத்துக்குத் தாவி இன்று அதை ஓர் இலாபகரமான தொழிலாக மாற்றிச் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவன்.
விவசாயம் என்றால் ஏதோ விதையைத் தூவிவிட்டு மழைக்காகக் காத்திருக்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது என்பதை நிரூபிக்கும் வகையில், முழுக்க முழுக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்தான் நிலவன். தினசரி அறுவடை, தினசரி சப்ளை என்பதுதான் அவனது பிசினஸ் மாடல். இதைச் சாத்தியமாக்க ‘சுழற்சி முறை நடவு’ என்னும் உத்தியைக் கையாண்டான். அதாவது, எல்லா விதைகளையும் ஒரே நாளில் விதைக்காமல், சில நாட்களுக்கு ஒருமுறை எனப் பிரித்து விதைப்பான். இதனால் வருடம் முழுவதும் அவனது பண்ணையில் அறுவடை நடந்துகொண்டே இருக்கும். சொட்டுநீர்ப் பாசனத்துடன், உரங்களையும் தண்ணீரிலேயே கலந்து செடிகளுக்குக் கொடுக்கும் ‘ஃபெர்டிகேஷன்’ முறையைப் பயன்படுத்தினான். தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்த ஆட்டோமேட்டட் சென்சார்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதை எல்லாம் கேட்ட பிறகு அவனை விவசாய விஞ்ஞானி அளவுக்கு நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம் நிலவன் படித்தது பன்னிரண்டாம் வகுப்புவரை மட்டுமே! பள்ளிப் படிப்போடு ‘படிக்கப் பிடிக்கவில்லை’ என நிலத்தின் பக்கம் ஒதுங்கியவனுக்கு அந்த நிலம் வாரிக்கொடுக்கும் வள்ளலானது. அவன் கைவைத்த மண் பொன்னாய் மாறிப்போனது. அதன் பலன்தான் இந்த வி.வி அக்ரோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் எனும் விவசாயப் பண்ணை.
முழங்கை வரை ஏற்றிவிடப்பட்ட நேவி ப்ளூ வண்ணக் காட்டன் சட்டையும் வெள்ளைக் காட்டன் வேஷ்டியுமாக அத்துணைக் கம்பீரமாய் நிமிர்வாய் நின்றவன் தோற்றத்தைப் போலவே குணத்திலும் அழகன்! சொல்லப்போனால் குணத்தில் பேரழகன் எனலாம்!
ஆள் பார்ப்பதற்கு முரட்டுத் தோற்றத்தோடு இருந்தாலும், பேச்சில் எப்போதுமே கறார்த் தொனி ஒலித்தாலும் மனம் என்னவோ இளகியதுதான். அதை அவனிடம் பணியாற்றும் பணியாட்களே ஒப்புக்கொள்வார்கள்!
வெளியே வெளிச்சம் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பண்ணையின் அறுபது ஊழியர்களும் எறும்பின் ஒற்றுமையோடும் தேனீயின் சுறுசுறுப்போடும் உழைத்துக்கொண்டிருந்தார்கள்.
அவனைப் பார்த்ததும் புன்னகையோடு வணக்கம் வைக்க நிலவனும் தலைசாய்த்துப் புன்னகையோடு அந்த வணக்கங்களை ஏற்றுக்கொண்டான்.
பத்து ஏக்கரில் பாலி ஹவுஸ்களும், இன்னும் பத்து ஏக்கரில் ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ பாணிக் குழாய்களும், இன்னும் பத்து ஏக்கரில் பாரம்பரிய முறை விவசாயமும் என மூன்று விதமாய் அங்கே விளைவிக்கப்பட்டவை அனைத்தும் காய்கறிகள்!
‘எக்ஸாட்டிக் வெஜிடபிள்ஸ்’ எனப்படும் வெளிநாட்டுக் காய்கறிகள்! பாக் சோய், சிவப்பு முள்ளங்கி, பச்சை மற்றும் மஞ்சள் சுரைக்காய், ஐஸ்பெர்க், செர்ரி தக்காளி, ப்ராக்கோலி, மற்றும் பல வண்ணக் குடைமிளகாய்கள்… இந்த வெளிநாட்டுக் காய்கறிகள் இப்போது நமக்கும் பழக்கமாகிவிட்டனவே!
அவற்றை உற்பத்தி செய்து ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ, ப்ளிங்கிட் போன்ற செயலிகளுக்கும், டிமார்ட், ஸ்மார்ட் பஜார் போன்ற பெரிய கடைகளுக்கும் மொத்த விலைக்கு விற்பனை செய்வதுதான் அந்தப் பண்ணையில் அன்றாடம் நடந்தேறும் வேலை.
பண்ணையின் எந்த மூலையிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் வாய்க்கால்களைக் காண முடியாது. ஒவ்வொரு செடியின் வேருக்கும் நேரடியாகச் செல்லும் மெல்லிய சொட்டுநீர்க் குழாய்கள், அந்த நிலத்தின் ரத்த நாளங்கள் போல் பின்னிப் பிணைந்திருந்தன. கட்டுப்பாட்டு அறையின் கம்ப்யூட்டரிலிருந்து உரம் கலந்த தண்ணீர், சென்சார்கள் மூலமாகச் செடிகளுக்குத் தேவையான அளவை மட்டும் துளித்துளியாக ஊட்டி வளர்த்தது.
பூச்சிகளைக் கட்டுப்படுத்த அங்கே ரசாயன நெடிகள் ஏதுமில்லை. மாறாக, வயல் நெடுகிலும் நடப்பட்டிருந்த கம்புகளில் மஞ்சள் மற்றும் நீல நிற அட்டைகள் காற்றில் அசைந்தாடி, தீமை செய்யும் பூச்சிகளைத் தன்பால் ஈர்த்து ஒட்டவைத்துக்கொண்டிருந்தன.
அலுவலகத்தின் பின்புறமாக இணைக்கப்பட்டிருந்த அந்த ராட்சச இரும்பு ஷெட் எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கும். அதுதான் ‘பேக்கிங் மற்றும் ப்ரீ-கூலிங் யூனிட்’. பறிக்கப்படும் காய்கறிகளின் சூட்டைத் தணிக்கப் பத்து டிகிரி செல்சியஸ் குளிரில் இயங்கும் அறை, அதைத் தரம் பிரித்து ‘வி.வி அக்ரோ’ பிராண்ட் லேபிள் ஒட்டும் பேக்கிங் டேபிள்கள் என ஒரு நேர்த்தியான தொழிற்சாலையாகவே அது இயங்கியது. அதன் வெளிப்பக்க மேடையில், தயாரான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பெருநகரங்களுக்குப் பறக்கத் துடிக்கும் ஏசி வசதி கொண்ட ‘ரீஃபர் வாகனங்கள்’ வரிசைகட்டி நின்றன.
அதைத்தான் நிலவன் இப்போது மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தான். அப்போது அவனை நோக்கி வந்தார்கள் இரு இளைஞர்கள். நிலவனைவிட ஒரு வயது, இரண்டு வயது குறைந்தவர்கள்.
முதலாமவன் அக்ரோனமிஸ்ட் கார்த்திக். கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரியில் முதுகலை அக்ரோனமி படித்த கையோடு நிலவனிடம் வேலைக்கு வந்தவன். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பது கூடுதல் தகவல். அடுத்து வந்த ரமேஷ் க்யூ.சி எனப்படும் தரப்பரிசோதனைக்கான இன்சார்ஜ். அவனும் நிலவனின் ஊர்க்காரனே! இந்த மண்ணையும் மக்களையும் புரிந்துகொண்டவர்கள் உடன் இருப்பதால்தான் நிலவனின் விவசாயப் பண்ணை தங்குதடையின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது.
“குட் மார்னிங்ணா” என்றார்கள் இருவரும் ஒரே குரலில்.
“மார்னிங்டா ரமேஷ்! மார்னிங் கார்த்தி. கார்த்தி! மூணாவது பாலிஹவுஸ்ல இன்னைக்குச் சிவப்பு முள்ளங்கியும், ப்ராக்கோலியும் அறுவடைக்கு ரெடியா இருக்கணும். நம்ம ‘சுழற்சி முறை நடவு’படி, முதல் பாலிஹவுஸ்ல விதைச்சது முடிஞ்சதும், கேப் விடாம மூணாவது பாலிஹவுஸ்ல அறுவடை ஆரம்பிக்கணும். அப்பதான் வருஷம் முழுக்க நமக்குத் தடையில்லாம காய்கறி கிடைக்கும். நம்ம ஆளுங்க இறங்கிட்டாங்களாடா?” என்று கேட்டான் நிலவன்.
“இறங்கிட்டாங்கண்ணா. அப்புறம், அஞ்சாவது யூனிட்ல இருக்குற ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ சிஸ்டம்ல பி.வி.சி பைப்புகள்ல ஓடுற தண்ணியில நியூட்ரியண்ட்ஸ் அளவு கரெக்டா இருக்கான்னு செக் பண்ணிட்டேன். லெட்டூஸ் இலைங்க ரொம்ப ஃப்ரெஷ்ஷா வந்திருக்கு. ஒரு துளி மண்கூட இல்லாம பளபளன்னு இருக்கு. இன்னொண்ணு நம்ம கோகோபீட் க்ரோ பேக்ஸ்ல இருக்குற செர்ரி தக்காளிக்கும் ஆட்டோமேட்டட் சொட்டுநீர்ப் பாசன சிஸ்டம் மூலமா சென்சார் கரெக்டா தண்ணியையும் உரத்தையும் வேருக்கே கொடுக்குது. எந்தப் பிரச்சனையும் இல்ல பாஸ்” என்று அப்டேட் செய்தான் கார்த்தி.
“ரமேஷ், எக்ஸாட்டிக் காய்கறிகளைப் பறிக்கும்போது ரொம்ப மென்மையா ஹேண்டில் பண்ணனும்னு லேபர்கள்கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லுடா. பறிச்ச காய்கறிகள்ல இயற்கையாவே இருக்குற சூட்டை, உடனே நம்ம ‘ப்ரீ-கூலிங்’ அறையில வைக்கச் சொல்லு. டிமார்ட், ஸ்மார்ட் பஜார்க்குப் போற காய்கறிகள்ல ஒரு சின்ன டேமேஜ்கூட இருக்கக் கூடாது.”
“சரிண்ணா!”
காலை நான்கு மணிக்கே அறுவடை தொடங்கிவிடும். பறிக்கப்பட்ட காய்கறிகள் அடுத்த ஒரு மணி நேரத்தில் பேக்கிங் யூனிட்டிற்கு வந்து, தரம் பிரிக்கப்பட்டு, ஃப்ரீஸர் வசதி கொண்ட ட்ரக்குகளில் ஏற்றப்படும். திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற சுற்றியிருக்கும் தென்மாவட்டங்களுக்கு அவை பறக்கும். ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ, ப்ளிங்கிட் போன்ற குயிக் காமர்ஸ் செயலிகளுக்கும், டிமார்ட், ஸ்மார்ட் பஜார் போன்ற பெரிய சூப்பர் மார்க்கெட் செயின்களுக்கும் செல்லவேண்டிய ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் அவற்றுக்குரிய கொள்கலன்களில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டுவிட்டன.
கார்த்திக், ரமேஷ் இருவரையும் அவரவர் வேலையைப் பார்க்குமாறு சொல்லிவிட்டு நிலவன் ட்ரக்குகளை நோக்கி நகர்ந்தான்.
அங்கே சப்ளை செயின் மேனேஜர் தினேஷ், பில் போர்டைக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான். அவன்தான் தினசரி சப்ளை செய்யப்படும் காய்கறிகளுக்குப் பொறுப்பாளர். உள்ளூர்க்காரன்தான் அவனும். பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தவன்.
“தினேஷ், லோடு ஏறியாச்சா?”
“ஏறிட்டு இருக்குண்ணா. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ, ப்ளிங்கிட் மாதிரி ஆப்ஸ் குடோன்களுக்கும், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் போக வேண்டிய லோடு ரெடி. சரியா ஏழு மணிக்குள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில்னு நாலு மாவட்டத்துக்கும் நம்ம வண்டி போய் இறங்கிடும்ணா” என்றான் தினேஷ்.
“சரிடா! இன்னைக்குச் சாயந்திரம் எனக்குச் சென்னைக்கு ட்ரெயின். நான் ஒரு வாரம் லீவ். ஏதாவது அவசரம்னா அப்பாவ கூப்பிடு. முக்கியமான விஷயம்னா எனக்குக் கால் பண்ணு. சரியா?”
“சரிங்கண்ணா”
அவனது தோளில் தட்டிக்கொடுத்துவிட்டுப் பண்ணையின் முகப்பிற்கு வந்தான் நிலவன். அவனது மஹிந்திரா தார் ஜீப் அங்கே தயார் நிலையில் நின்றிருந்தது.
“என்னப்பா நிலவா… எல்லா வண்டியும் கிளம்பிருச்சா?” என்றபடியே அங்கே வந்தார் அவனது தந்தை வைத்தியலிங்கம். கையில் ஒரு பிளாஸ்க்கில் சூடான காபி இருந்தது.
அப்பாவைப் பார்த்ததும் நிலவனின் முகத்தில் இருந்த முதலாளிக்கான கறார்த் தன்மை சட்டென மறைந்து, ஒரு மகனுக்கான மென்மை படர்ந்தது. அவனது உலகம் மிகச் சிறியது. பெற்றோரும் உடன்பிறந்தவளும் மட்டுமே அதில் நிரந்தரமாய்க் குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் மட்டும்தான் அவனது பிரபஞ்சம். இவர்களுக்காக எதையும் செய்யத் துணியும் அன்பானவன். அதை வார்த்தைகளில் கொஞ்சாமல், தன் அரவணைப்பான செயல்களில் அழகாக வெளிக்காட்டுபவன்.
அவனது வைத்தியலிங்கம் பொறுமைசாலி! உழைப்பாளியும்கூட. இருப்பினும் மகன் அளவுக்குத் தொழில் நேர்த்தியும் வியாபார நுணுக்கமும் தந்திரமும் அவருக்குக் கிடையாது.
பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு மகன் அவரிடம் விவசாயம் பற்றிப் பேசியபோது மறுத்தவரும்கூட.
“மாசம் மும்மாரி பெய்ஞ்ச காலத்துலயே விவசாயம் நட்டம் தர்ற தொழில்தான் தம்பி. நாம நிலத்தைக் குத்தகைக்கு விட்டு வர்ற பணத்துல சௌகரியமா வாழலாம். ஏன் சகதியில இறங்கி உழைச்சு நட்டப்படணும்?”
“என் மேல நம்பிக்கை இருந்தா என்கிட்ட குடுங்க. நான் லாபமா தொழில் செஞ்சுக் காட்டுறேன்” என்று பிடிவாதமாய் நிலத்தை வாங்கிக்கொண்டவன் முதலில் செய்தது என்னவோ குறுகியகாலப் பணப்பயிர்கள் எனப்படும் காய்கறி விவசாயம்தான்.
அதுவே நல்ல லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியபோது ‘போதுமென்ற மனதோடு’ இருந்தவனை இன்னும் உழைக்கவேண்டுமென வெறியோடு ஓடவைத்தது ஒரு நிகழ்வு! எந்நாளும் அவனால் மறக்க முடியாத நிகழ்வு அது! இந்த விவசாயப் பண்ணை பிறக்கக் காரணமான நிகழ்வும்கூட!
அன்றும் இன்றும் அவன் மீது அசாத்தியமான நம்பிக்கையை வைத்தவர்கள் அவனது அன்னை வசந்தாவும் உடன்பிறந்த சகோதரி நிலாவும். அவர்களது நம்பிக்கையை எப்போதும் நிலவன் காப்பாற்றாமல் விட்டதில்லை.
“உங்களுக்கு எதுக்குச் சிரமம்? நானே வீட்டுக்கு வந்து காபி குடிப்பேனே!” என்றான் நிலவன் அக்கறையுடன்.
வைத்தியலிங்கம் அவனைக் கனிவாய்ப் பார்த்தார்.
“அப்பனா என் மவனுக்கு நான் இதையாச்சும் செய்யலாம்தானே?” என்றார் மென்மையாக.
நிலவனின் முகத்தில் மெல்லிய யோசனைப் பாவம் படர்ந்தது.
“நீங்க ஒரு அப்பாவா நிறையப் பண்ணிருக்கீங்க எனக்கு. உங்களை நீங்க குறைச்சுப் பேசக்கூடாது” என்றபோது அவனது குரலில் மெல்லிய கண்டனத் தொனி! அப்பனுக்கே பாடம் எடுக்கிறான் என்று சிரித்துக்கொண்டார் வைத்தியலிங்கம்.
ராஜா மாதிரி பிள்ளை என்பார்கள். அது வாய்ப்பேச்சில்லை. அவரது மைந்தன் அரசனேதான்! எதையும் துணிந்து முன்னின்று நடத்தும் துணிவு மிக்கவன் அரசன்தானே!
அந்த அரசனுக்குத் தொழிலில் வாய்த்த அதிர்ஷ்டம் சொந்த வாழ்க்கையிலும் வாய்த்தால் அவன் பாக்கியசாலி! இது மட்டுமே இப்போது வசந்தாவையும் வைத்தியலிங்கத்தையும் பிடித்திருக்கும் ஏக்கம்.
ஆணும் பெண்ணுமாய் இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோது அடைந்த உவகை அவர்கள் வளர்ந்து அவரவர் வாழ்க்கையில் நிலையான பிற்பாடும் தொடர்கிறதுதான்! ஆனாலும் நிலா திருமணமாகிக் கணவன், குழந்தையோடு குடும்பமாய் வாழும்போது நிலவன் இன்னும் தனியனாய் நிற்பது மாபெரும் மனக்குறையாய் இருந்தது.
அதைக் குறித்து மகனிடம் பேசும் துணிவு வைத்தியலிங்கம், வசந்தா இருவருக்கும் இல்லை. அடிக்கடி நிலாவைத் தூண்டிவிட்டுப் பேசவைப்பார்கள்.
அவள் ஒருத்தியின் பேச்சை மட்டும்தான் அவன் சால்ஜாப்பு கூறாமல் செவிமடுப்பான்.
“ஹூம்! இன்னும் ஒரு கடமை பாக்கி இருக்கு நிலவா! மெட்ராசுக்குப் போறல்ல?”
தந்தை சொன்ன விதத்தில் காபி குடிப்பதை நிறுத்தியவன் அவரை ஆழ்ந்து பார்த்தான்.
“உங்க ஃப்ரெண்ட் மகனோட கல்யாணத்துல கலந்துக்க மட்டும்தான் போறேன்” என்று அழுத்தமாய்ச் சொல்லிவைத்தான்.
மீண்டும் ஒரு பெருமூச்சு வைத்தியலிங்கத்திடம்.
“நிலா உன்கிட்ட பேசணும்னு சொன்னா” என்றார் ட்ரக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறுவதைப் பார்த்தபடி.
“அவதான் தினமும் பேசுறாளே! நேத்து மதியம்கூடப் பேசுனா. வைஷூ முன்ன மாதிரி நெய் போட்டுப் பிசைஞ்ச சாதம் சாப்பிடுறதில்லையாம். அவ வீட்டுல ஒரு குண்டூசி காணாமப்போனாலும் என்கிட்ட புலம்பணும் அவளுக்கு” எனப் பேச்சை மாற்ற முயற்சித்தான் நிலவன்.
வைத்தியலிங்கம் மகனின் தோளைத் தொட்டார்.
“நான் உன் அப்பன்யா. உன் மனசு எனக்குப் புரியும். அன்னைக்கும் இன்னைக்கும் நீ எடுக்குற முடிவுக்கு நாங்க கட்டுப்படுவோம். பிடிக்குது பிடிக்கலைனு உன்னோட எண்ணவோட்டத்தை மட்டும் யோசிக்காம அடுத்தவங்க உணர்வுகளுக்கு மரியாதை குடுக்குறவன் நீ. கொஞ்சம் இந்த அப்பன் ஆத்தா ஆசையவும் கணக்குல வச்சுக்கய்யா. புரியுதுல்ல நான் சொல்லுறது?”
நிலவன் அடர்சிகையைக் கோதிவிட்டுத் தனது மோவாயின் ரோமக்கூட்டத்தை வருடிக்கொடுத்தான். கண்களில் சில பல கணக்கீடுகள் ஓடின.

“உஃப்” எனப் பெருமூச்சுவிட்டவன் “பாக்கலாம்பா! நான் திரும்பி வர ஒரு வாரம் ஆகும். அதுவரை இங்க எல்லாம் உங்க பொறுப்புதான். உங்களுக்குச் சிரமமா இருந்தா பிரகாஷ் மாமாவையும் கூப்பிட்டுக்கோங்க. இப்ப வீட்டுக்குக் கிளம்பலாமா?” என்று சொல்ல வைத்தியலிங்கமும் தலையாட்டினார்.
அடுத்த சில நிமிடங்களில் அவரையும் அவரது மைந்தனையும் சுமந்துகொண்டு கிளம்பியது மஹிந்திரா தார்.
எப்போதுமே அடுத்தவர்களின் உணர்வுகளை மதிப்பவன் நிலவன். அவர்கள் பிடித்தவர்கள் என்றால் தனது சின்னச் சின்ன ஆசைகளைத் தியாகம் செய்யக்கூடத் தயங்காதவன். ஆனால் பாருங்கள்! இப்படிப்பட்டவர்களைத்தான் இந்த உலகம் அடிக்கடி காயப்படுத்திவிடும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


