அன்று மாலை. சந்தன்பூர் அரண்மனையில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதற்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருக்க, அவந்திகா அவளது லெஹங்காவின் பிளவுஸின் பின்பகுதியில் கயிறை முடிச்சிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள்.
அந்நேரம் பார்த்து “ஹனிபி! ரெடி ஆயாச்சா” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் ரித்திமா.
“யா ரித்து பேபி! கொஞ்சம் வந்து இந்த நாட் போட்டு விடு… என்னால போடவே முடியலடி!” என்று அந்தக் கயிறைக் கையில் பிடித்து நிற்க முடியாமல் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள் அவந்திகா.
“திரும்பு கொஞ்சம்” என்று சொல்லி அவளுக்கு நாட் போட்டுவிட்டு அவளைக் கையோடு கூட்டிச் சென்றாள் ரித்திமா.
அவர்களுக்காகவே காத்திருந்தாற்போல் நின்ற பிரதியுஷா, “ஏய் நில்லுங்கடி! ஒரு மனுஷி நின்னுகிட்டு இருக்கிறது கூடக் கண்ணு தெரியலயா?” என்று கூறவும் அவந்திகா “ஹப்பா! இந்தக் கொசு தொல்லை தாங்கலப்பா!” என்று கலாய்த்தாள்.
அவளைக் கண்ணாலேயே அடக்கிய ரித்திமா உஷாவின் தோளில் கை போட்டு, “என் செல்லத்துக்கு இப்போ என்ன வேணும்?” என்று கேட்கவும் உஷா மலர்ந்த முகத்துடன் “இது வருணுக்காக நான் வாங்குன கிஃப்ட்.. இதை அவன்கிட்ட குடுத்துடுங்கடி” என்று அந்தச் சின்னப் பெட்டியை அவர்கள் கையில் கொடுத்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“கண்டிப்பா டியர்! நீயும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். ஆனா தி கிரேட் கல்யாணி தேவியோட கட்டளைய மீற யாருக்கும் தைரியம்தான் இங்க யாருக்கும் கிடையாதே” என்று கூறினாள் அவந்திகா.
தன் தோழியின் முகம் தெளிவடையாததைக் கண்டு அவந்திகா ரித்திமாவின் காதில் ஏதோ கூற அவள் தலையை ஆட்டிவிட்டுப் பிரதியுஷாவின் முன் உள்ளங்கையை நீட்ட அவள் தன்னுடைய கையை அதில் வைத்தாள். கடைசியாக கை வைத்த அவந்திகா, “எந்தச் சூழ்நிலை வந்தாலும்” என்று சொல்லிவிட்டு ரித்தியைப் பார்க்க அவள் “எந்தக் கஷ்டம் வந்தாலும்” என்று கூறிவிட்டு உஷாவைப் பார்க்க அவள் “எவ்ளோ சோதனை வந்தாலும்” என்க, பின் மூவரும் சேர்ந்து “மனசுல இருக்குற தைரியத்தையும், உதட்டுல இருக்கிற சிரிப்பையும் யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுடக் கூடாது” என்று சொல்லி ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டனர்.
பின் உஷா “ஓகே நீங்க ரெண்டு பேரும் கெளம்புங்கடி! மறக்காம வீடியோ கால்” என்று காதில் கை வைத்து நினைவூட்டினாள்.
அவளுக்கு பை சொல்லிவிட்டுக் குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து வருணின் குடும்பம் தங்கியிருக்கும் பங்களாவுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை வரவேற்கக் கபூர் குடும்பத்தின் தலைவரும் வருணின் தந்தையுமான குணால் கபூரும், அவரது மனைவி பிரியாவும் வந்து நின்றனர்.
அவந்திகாவுக்கும், ரித்திமாவுக்கும் இந்தத் திருமணச் சடங்குகள் அனைத்தும் வித்தியாசமாகத் தோன்றியது. தென்னிந்தியத் திருமணங்களை மட்டுமே பார்த்து வளர்ந்தவர்கள் அவர்கள் இருவரும்.
பிரதியுஷாவின் அண்ணன் ரன்வீர் வருணுக்குத் திலகம் வைக்க இனிதே சஹாய் என்ற நிச்சயதார்த்தம் ஆரம்பித்தது. சம்பிரதாயங்கள் நடக்கும்போது வருண் ராகவைத் தேட கிஷோர் மேலே கை காட்டினான்.
அங்கே ராகவ் தன்னுடைய மேனேஜரைப் போனில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.
“ஐ டோண்ட் வாண்ட் எனி எக்ஸ்ப்ளனேஷன். ஐ நீட் ரிசல்ட் மேன். அதைக் காமிச்சிட்டு நீ பேசு” என்று காலை கட் செய்தான். கீழே சத்தம் கேட்கவும் நிச்சயம் ஆரம்பித்துவிட்டதை உணர்ந்து வேகமாகக் கீழே இறங்கியவன் எதிரில் வந்த பணியாள் மானஸைக் கவனிக்கவில்லை.
அவன் வந்த வேகத்தில் மானஸ் கையில் இருந்த டிரேயில் இருந்த ஜூஸ் முழுவதும் ராகவின் குர்தாவில் கொட்டிவிட்டது. மானஸ் நடுங்கிக்கொண்டே “ராகவ் பாய்! என்னை மன்னிச்சிடுங்க” என்று கூறியதுதான் தாமதம், ராகவ் அவன் கன்னத்தில் அறைந்திருந்தான்.
வருணுக்கு உஷா கொடுத்த கிஃப்ட் பாக்ஸை வருணின் அறையில் வைக்க வந்த அவந்திகா அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துவிட்டாள். தவறு செய்யாத மானஸை அறைந்த ராகவின் மேல் அவளுக்குக் கொலைவெறியே வந்தது.
நேரே அவன் எதிரே சென்று, “லுக் மிஸ்டர் இப்போ எதுக்கு மானஸ் பய்யாவ அடிச்ச?” என்று கோபமாகக் கேட்க அவனோ அவளின் கோபத்தை ஒரு பொருட்டாகக் கருதாது காது கேட்காதவனைப் போல நின்று கொண்டிருந்தான்.
அவனின் இந்தச் செய்கையில் எரிச்சலுற்ற அவந்திகா, “ஹலோ ஐ யாம் டாக்கிங் டு யூ மேன். எதுக்கு மானஸ அடிச்சனு கேட்டேன்” என்று அதையே திரும்பக் கேட்டாள்.
ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தான் ராகவ். அவன் எதிரில் யாரும் நின்று இவ்வாறு பேசி அவன் இதுவரை கண்டதில்லை. ராகவிற்கு அவளின் அந்தச் செய்கை முதலில் வியப்பாக இருந்தது. பின்னர் தன்னை ஒருத்தி இவ்வாறு கேள்வி கேட்பதா என்ற அவனின் ஈகோ அவனைப் பேச வைத்தது.
மெதுவாக அடியெடுத்து அவள் அருகில் வந்தவன், “நம்பர் ஒன், என்கிட்ட இந்த மாதிரி இனிமே வாய்ஸ் ரைஸ் பண்ணிப் பேசாத. பிகாஸ் நான் எப்போவும் இதே மாதிரி கூலா பதில் சொல்ல மாட்டேன். நம்பர் டூ, மானஸ் இந்த வீட்டு சர்வெண்ட். அவனுக்கு வேலைல கவனம் இல்லாம அவன் செஞ்ச இந்தக் காரியத்தால் என்னோட ஃபங்ஷன் மூட் ஸ்பாயில் ஆயிடுச்சு. நம்பர் த்ரீ, என்னோட ஸ்டேட்டஸுக்கும் கம்மியான யாரோடவும் பேசுறது எனக்குப் பழக்கமும் இல்ல. அண்ட் அது எனக்குத் தேவையும் இல்ல. உன்னைப் பாத்தாலே தெரியுது பக்கா மிடில் கிளாஸ்னு. சோ ஸ்டே அவே ஃப்ரம் மீ. அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது” என்று சொல்லிவிட்டுச் செல்ல முயன்றவனைத் தடுத்து நிறுத்தியது அவளது குரல்.
“ஹலோ மிஸ்டர் கொஞ்சம் நில்லுங்க ப்ளீஸ். நீங்க இப்போ சொன்ன ஒன் டூ த்ரீ எல்லாமே நான் ஸ்கூல்ல படிச்சிட்டேன். தென் மானஸ் உங்க வீட்டு சர்வெண்ட்தான். அடிமை இல்ல. சோ யூ டோண்ட் ஹேவ் எனி ரைட்ஸ் டு ஸ்லாப் ஹிம்” என்றாள் அவனுக்குச் சற்றும் குறையாத கர்வம் நிறைந்த குரலில்.
அவளின் கர்வம் நிறைந்த குரலைக் கேட்டவன் மனதில், “என்கிட்டயே இந்த மாதிரி திமிரா பேசுறா, இந்த ஜான்சி ராணி” என்று தோன்ற மனதின் உணர்வதைத் தவறாமல் பிரதிபலித்தது அவனுடைய முகம்.
கோபத்தில் அவன் பற்களை நறநறக்கும் சத்தம் திவ்வியமாய்க் காதில் விழ “அப்புறம் ஸ்டேட்டஸ்னு ஏதோ ஒன்னு சொன்னீங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் கிளாஸ் பாத்துப் பழகுற மனுஷன் மனுஷனே கெடையாது. எனக்கு மனுஷங்ககிட்ட பேசித்தான் பழக்கம். அனிமல்ஸ் லாங்வேஜ் எனக்குத் தெரியாது. சோ ஐ ஆல்வேஸ் ஸ்டே அவே ஃப்ரம் தெம்… பை” என்று சொல்லிவிட்டு அந்த ஹாலை விட்டு வெளியேறியவளைக் கை முஷ்டி இறுகப் பார்ப்பதைத் தவிர ராகவால் வேறு எதுவும் செய்ய இயலவில்லை…
மணமகள் வீட்டார் அனைவரும் புறப்படும் முன் மணமகன் வீட்டார் அவர்களை வாசல் வரைக்கும் சென்று விடுவது அவர்கள் வழக்கம். அப்படி வருகையில் ரித்திமாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் ராகவின் முகம் இறுக்கமானது. அவளைக் கைகாண்பித்து வருணிடம் கேட்கவும் பிரதியுஷாவின் உயிர்த்தோழி என்று வருண் கூறியதைக் கேட்டவன், “சோ இந்த ஜான்சிராணிய அடிக்கடி பாக்கலாம். என்கிட்ட ஏண்டா மோதுனோம்னு உன்னை நெனைக்க வைக்கல என் பேரு ராகவ் இல்ல” என்று மனதிற்குள் சபதமிட்டுக் கொண்டான்.
வீட்டிற்கு வந்ததும் நேராக உஷாவின் அறைக்குச் சென்ற ரித்திமாவும், அவந்திகாவும் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் உம் கொட்டிக் கேட்ட உஷா, “இருந்தாலும் நான் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்று கூற அவளது பெருமூச்சைக் கேட்டு அவளைக் கேலி செய்தே அவளை ஒரு வழியாக்கினர்.
“இன்னும் சாப்பிட்டு தூங்காம என்ன பேச்சு? வாங்க வந்து சாப்பிட்டுட்டுத் தூங்குங்க. அப்போதான் நாளைக்குச் சங்கீத்ல நல்லா டான்ஸ் பண்ண முடியும்” என்று கேட்ட மைதிலியின் குரலில் மூவரும் டின்னர் சாப்பிடக் கீழே சென்றனர்.
அங்கு வருணின் வீட்டிலோ ராகவ் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தான். கிஷோர் எவ்வளவு முயன்றும் அவனது கோபத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. “தட் கேர்ள் இஸ் ரிடிகுலஸ் கிஷோர். ஹவ் டேர் டு ஸ்பீக் லைக் தட் இன்ஃபிரண்ட் ஆஃப் மீ?” என்று கொதித்தவனைக் கிஷோர் சாந்தப்படுத்தினான்.
திடீரென்று போன் அடிக்கவும் யாரென்று பார்த்தவன் ‘மா காலிங்’ என்று வரவும் உடனே அழைப்பை ஏற்றான்.
“மாம்! சொல்லுங்க” என்று சொல்லவும் மறுமுனையில் “என் செல்லப் பையன் என்ன பண்ணிட்டு இருக்கான்?” என்று வாஞ்சையுடன் கேட்ட அன்னையின் குரலைக் கேட்டதும் இவ்வளவு நேரம் கத்திக்கொண்டிருந்தவன் அமைதியானான். அமைதியாக அன்னையிடம் பேச ஆரம்பித்தான்.
“இப்போதான் நிச்சயதார்த்தம் முடிஞ்சுது மாம்…. நான் ரூம்ல இருக்கேன்”
“இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?”
“தூங்கணும் மாம்… நீங்க இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க? வேர் இஸ் டாட்? இவ்வளவு நேரம் நீங்க தூங்கப் போகாம என்கிட்ட அரட்டை அடிச்சிட்டு இருக்கறது மட்டும் அவருக்குத் தெரிஞ்சுதுனா அவ்வளவுதான்”
“அட போடா! உன் டாட்டுக்கு நீ பயப்படலாம்.. நான் எதுக்குடா பயப்படணும்? சரி வருண் இருக்கானா பக்கத்துல?”
“நோ மாம்! கிஷோர் இருக்கான்… அவன்கிட்ட பேசுங்க” என்று கூறிவிட்டுப் போனைக் கிஷோரிடம் கொடுத்து ராகவின் அறைக்கு அவனை அனுப்பிவிட்டான்.
அவன் சென்றதும் “அவந்திகா! என்ன சொன்ன? அனிமல்ஸ் லாங்வேஜ் புரியாதா? நீ என்னைப் பாத்து அதுவும் இந்த ராகவ் கபூரப் பாத்து அனிமல்னு சொன்னல்ல. வெயிட் அண்ட் வாட்ச். இந்த அனிமல் என்ன பண்ணப் போறான்னு” என்று கோபத்துடன் சொல்லிச் சுவற்றில் குத்திவிட்டுக் கீழே சென்றான்.
அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்தவனிடம் அவனது பெரியப்பா, “ராகவ் நீயும் கிஷோரும் நாளைக்குப் பொண்ணு வீட்டுக்குப் போய் சங்கீத் ஏற்பாட்டுக்குத் தேவையான ஹெல்ப் பண்ணுங்க. எல்லா வேலையும் வெட்டிங் பிளானரால தனியா பண்ண முடியாது” என்று கூறச் சரியென்று தலையசைத்தான்.
போன் பேசிவிட்டு வந்த வருணும் கிஷோரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். சாப்பிடும் போது பிரியா, “குணால் நீங்க கவனிச்சீங்களா? நம்ம உஷாவோட ஃப்ரெண்ட்ஸ் அந்த ரெண்டு பொண்ணுங்களும் எவ்ளோ கெட்டிகாரங்க இல்ல! இந்தச் சின்ன வயசுல எவ்ளோ பொறுப்பா எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிருக்காங்க?” என்று சிலாகித்தார்.
அதைக் கேட்டதும் ஒரு நிமிடம் யோசித்த ராகவ், “பெரியம்மா! அப்போ நாளைக்கு ஃபங்ஷனுக்கு எல்லா ஏற்பாடும் அவங்கதான் பண்ணுறாங்களா?” என்று கேட்கவும் குணால் “ஆமா ராகவ்! சங்கீத்துக்கு எதோ தீம் கூட ரெடி பண்ணிட்டோம்னு உங்க பெரியம்மா கிட்ட இப்போதான் அந்தப் பொண்ணு அவந்திகா பேசுனா… வெரி டேலண்டட் கேர்ள்!” என்று அவரது பங்குக்குப் பாராட்டிவிட்டுக் கைகளைக் கழுவச் சென்றார்.
சாப்பிட்டு விட்டு மேலே வந்தவன் எண்ணம் எல்லாமே நாளைக்கு எப்படி அவந்திகாவைத் தொல்லை செய்யலாம் என்பதிலே இருக்க அவனுக்குத் தூக்கமே வரவில்லை. நடு இரவு வரை யோசித்தவனின் மூளையில் ஒரு திட்டம் தோன்றவும் அதைச் செயல்படுத்தும் எண்ணத்தோடு நிம்மதியாக உறங்கச் சென்றான் ராகவ்.
ஆனால் அவந்திகாவின் மனமோ நாளை ஏதோ நடக்கப் போகிறது என்று அவளுக்குச் சொல்லிக்கொண்டே இருக்க அவளால் நிம்மதியாக உறங்க இயலவில்லை.
மறுநாள் பொழுது புலர்ந்தது. பிரதியுஷாவின் குடும்ப வழக்கப்படி திருமணமாகப் போகிற பெண் அவளது கையால் கணபதிபூஜை செய்தபின் தான் மற்ற திருமணச் சடங்குளை ஆரம்பிக்க வேண்டும். அதனால் கல்யாணிதேவி அதிகாலையிலேயே விழித்துப் பூஜைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யச் சிவன் கோயிலுக்கு அரண்மனைப் பணியாட்களை அனுப்பியிருந்தார்.
காலை விடிந்ததும் எழுந்த உஷா சீக்கிரமாகச் சிவன் கோயிலுக்குச் செல்லத் தயாரானாள். அவளுக்கு முன்னரே விழித்துத் தயாராகி நின்றனர் ரித்திமாவும் அவந்திகாவும். கல்யாணி தேவி வந்ததும் மூவரும் காரில் ஏறி கோவிலுக்குச் சென்றனர்.
கோவிலில் பண்டிதர் தயாராக இருந்தார். கணபதி பூஜையை முடித்து விட்டு அவந்திகாவின் கையிலும், ரித்திமாவின் கையிலும் ஆளுக்கொரு மாலையைக் கொடுத்தார் பண்டிதர். அது அவர்கள் ஊரின் வழக்கம். திருமணமாகாத கன்னிப்பெண்கள் சிவபெருமான் சிலைக்குப் பக்கத்தில் இருக்கும் பாம்புப் புற்றுக்கு மாலை சாற்றி வணங்குவது வழக்கம். அவ்வாறு வணங்கிக் கொண்டிருக்கும் போது நாகராஜா, அதுதான் அந்த பாம்புப் புற்றிலிருந்து வெளியே வந்தால் யார் மாலை சாற்றினார்களோ அவர்களுக்குத் திருமணவேளை வந்துவிட்டது என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்வார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.
பண்டிதர் இருவரையும் பார்த்து “இதைப் போலேநாத் சிலை கிட்ட இருக்கிற அந்த பாம்பு புற்றுல போடுங்கம்மா. நாகராஜா யார் மாலை போடுறப்போ வெளியே வந்து தரிசனம் கொடுக்குறாரோ அவங்களுக்குக் கல்யாண நேரம் வந்துடிச்சுனு சொல்லுறது இங்க வழக்கம்” என்று பண்டிதர் கூறவும் உஷா இருவரையும் பார்த்துப் புற்றில் மாலையைப் போடுமாறு கண்ணால் சைகை காட்டவும் ரித்திமா முதலில் சென்று மாலையைப் போட்டாள்.
அவள் திரும்பிவரும் வரை பாம்பு வெளியே வரவில்லை. அடுத்து அவந்திகாவின் முறை. அவளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றாலும் கல்யாணி தேவிக்காகச் சென்று மாலையைப் போட்ட அடுத்த நொடி பாம்பு ஒரு விதச் சீறலுடன் வெளியே வந்தது.
அதைக் கண்ட பண்டிதர், “சீக்கிரம் கல்யாணி தேவி அம்மாவோட வீட்டுல இன்னொரு கல்யாணம் நடக்கப் போகுது…. வாழ்த்துகள் அம்மா” என்று சொல்லிவிட்டுத் தட்சணையை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
கல்யாணி தேவி அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்க அவந்திகா, “ஐயோ தாதி! இந்தக் காலத்துல போய் யாராச்சும் இதலாம் நம்புவாங்களா?” என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்.
அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே மூவரும் காரில் அமர்ந்தனர். மாளிகை வந்ததும் இறங்கிய அவந்திகா கூடுதலாக ஒரு கார் நிற்பதைப் பார்த்துவிட்டு யார் வந்திருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே உள்ளே சென்றாள். தோட்டத்தில் கால் மேல் கால் போட்டுச் சட்டமாக உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தவள் அங்கு நின்றுகொண்டே இவன் எதுக்கு இங்க வந்திருக்கான் என்று சிந்தனையுடன் நின்றாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


