“இன்னும் ஒரு தோசை ஊத்தியிருக்குறேன். சாப்பிடணும்”
தரையில் நண்பர் குழாமுடன் அமர்ந்து தோசையைக் கபளீகரம் செய்துகொண்டிருந்த ஆதித்யனைத் தோசைதிருப்பியால் போலியாக மிரட்டிவிட்டுச் சமையலறைக்குள் போனார் பவித்ராவின் பெரியம்மா சுப்புலெட்சுமி.
ஆதித்யனும் அவனது தோழமைகளும் தென்காசியில் ஹோட்டல் அறைகளைக் காலி செய்துவிட்டு இலஞ்சியில் இருக்கும் பவித்ராவின் பெரியம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
இரு தினங்கள் கழித்து திருநெல்வேலியில் ஒரு இன்ஸ்டாக்ராம் இன்ஃப்ளூயன்சருக்குத் திருமணம். அந்த இன்ஃப்ளூயன்சரின் இன்ஸ்டாக்ராம், யூடியூப் கணக்குகளை ஃபீனிக்ஸ் நிறுவனம்தான் நிர்வகித்து வருகிறது.
அதனால் அவர்களுக்குப் பிரத்தியேக அழைப்பு விடுத்திருந்தான் மணமகனான இன்ஃப்ளூயன்சர்.
அந்த இரு நாட்களும் ஹோட்டலில் தங்கவேண்டாம், பெரியம்மா வீட்டுக்குச் சென்றால் வீட்டுச்சாப்பாடு சாப்பிடலாம். அப்படியே பெரியம்மாவுடன் சில நாட்களைக் கழிக்கலாமென இந்த யோசனையைச் சொன்னவள் பவித்ராவே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சென்னையிலிருந்து கிளம்பியபோதே சுப்புலெட்சுமியிடம் விபரத்தைப் பகிர்ந்துவிட்டாள் பவித்ரா. அவரும் தங்கை மகள் மற்றும் அவளது தோழமைகளுக்காக ருசியாக மதியவுணவைச் சமைத்துப் பரிமாறினார்.
இரவுணவுக்கு அனைவரும் அமர்ந்தபோது “கூச்சமில்லாம சாப்பிடணும். நான் தோசை சுட்டேன்னா எங்க பவி எட்டு தோசை கூட சாப்பிடுவா.” என்று சொல்லி அன்போடு கூறினார் அவர்.
நல்லெண்ணெய்யின் நறுமணத்துடன் மெத்தென்று தட்டில் விழுந்த தோசைகளைச் சாப்பிட ஆதித்யனுக்குக் கசக்குமா? தொட்டுக்கொள்ள தக்காளியும் வெங்காயமும் கொத்துமல்லி தழையுடன் வதக்கி அரைத்த சட்டினி வேறு!
சப்புக்கொட்டிச் சாப்பிட்டார்கள் அனைவரும். எல்லாம் நந்தினியைப் பற்றிய பேச்சு எழும்வரை மட்டுமே!
அவளைப் பற்றி சுப்புலெட்சுமி பவித்ராவிடம் பேசிய விபரங்கள் ஆதித்யனை யோசனையில் ஆழ்த்தின. வயிற்றுப்பசி அதனால் அடங்கிவிட மூன்று தோசையுடன் எழுந்திருக்கப்போனவனை மிரட்டி நான்காவது தோசையை உண்ணவைத்தார் சுப்புலெட்சுமி.
“பாவம் அந்தப் பொண்ணு. நம்பி ஏமாந்து போயிடுச்சு. எனக்கு மனசு தாங்கல பவி. அவளும் அவ அம்மையும் இன்னைக்கு விடிய காலையில இருந்து முற்றம் தெளிக்கக் கூட வரல. நான்தான் போய் அம்மாவையும் மவளையும் சாப்பிட வச்சேன். மனசு படபடனு இருக்குனு சொன்ன புள்ளைய தென்காசி கோயிலுக்குப் போனு சொன்னேன்”
ஓஹோ! கோவிலுக்கு வந்தவளின் கண்களில் டன் கணக்கில் கொட்டியிருந்த சோகத்திற்கான அர்த்தம் இப்போது புரிந்தது ஆதித்யனுக்கு.
முடித்து தங்களுக்கு மாடியில் ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தார்கள் ஆண்கள் மூவரும். மற்ற இருவரும் உறங்கப் போய்விட ஆதித்யனுக்கு உறக்கமே வரவில்லை.
சுப்புலெட்சுமி நந்தினியைப் பற்றி சொன்ன விபரங்கள் அவனது மனதில் ஓடிக்கொண்டிருந்தன. மாடி வராண்டாவில் நின்றவனுக்கு மஞ்சள் வண்ண பல்புடன் மினுங்கிய நந்தினியின் வீடு பார்வைக்குக் கிடைத்தது.
அந்தக் காலத்து கட்டைக்குத்துவீடு. முன்பக்கம் செம்பருத்தியும் பின்பக்கம் தென்னை, கிணறுடன் கூடிய தோட்டமுமாக இரவில் நிலவொளியில் கூட ரம்மியமாகத் தெரிந்தது அவளது வீடு.
அந்த நிலவொளி, நீர் மினுங்கிய கிணற்றடி, தென்னை இலைகளை அசைக்கும் மெல்லிய காற்று இதெல்லாம் ஆதித்யனின் ரசனையைத் தூண்டிய சமயத்தில் அவனது கருத்தைக் கவர்ந்தாள் அங்கே வந்த நந்தினி.
காட்டன் நைட்டி அணிந்திருந்தாள். கூந்தல் கொண்டை ஆகியிருந்தது. உடல்மொழியில் ஒருவித தளர்ச்சி!
இந்நேரத்தில் இங்கே இந்தப் பெண் என்ன செய்கிறாள்? ஆதித்யன் சந்தேகமாகப் பார்க்கும்போதே கிணற்றை நோக்கி சென்றாள் அவள்.
ஏதோ தவறாக நடக்கப்போகிறதென ஆதித்யனின் உள்ளுணர்வு எச்சரித்தபோதே கிணற்றின் கைப்பிடிச்சுவரில் ஏறினாள் நந்தினி.
“வாட் த ஹெல்”
வாய்விட்டுக் கத்தியவன் மடமடவென மாடிப்படிகளில் இறங்கினான். சுப்புலெட்சுமியின் வீட்டுக்கும் நந்தினியின் வீட்டுக்கும் இடையே இருந்த காம்பவுண்ட் சுவரின் உயரம் குறைவுதான்.
யோசிக்காமல் அதைத் தாண்டிக் குதித்து அதிவேகத்தில் கிணற்றை நெருங்கியவன் “நந்தினி” என்று கத்த அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தாள் அவள்.
“நீ…. நீங்களா? கிட்ட வராதிங்க. நான் குதிச்சிடுவேன்” என கண்களில் கண்ணீர் பளபளக்கக் கூறியவளை எப்படி கிணற்றின் கைப்பிடிச்சுவரிலிருந்து கீழே இறக்குவதென யோசித்தான் ஆதித்யன்.
மூளை பரபரவென யோசித்தது.
“நோ! டோண்ட் டூ திஸ். சூசைட் பண்ணிக்குறவங்க பேயா அலையுவாங்கனு நீ கேள்விப்பட்டதில்ல?”
பேசியபடியே கிணற்றின் அருகே நீண்டு வளர்ந்திருந்த தென்னையை நோக்கின அவனது விழிகள்.
“என் மனசோட வேதனை உங்களுக்குப் புரியல. ப்ளீஸ்! என்னை நிம்மதியா சாகவிடுங்க”
அழுதபடியே கண்களை மூடிக் குதிக்கத் தயாரானாள் நந்தினி.
அந்நேரத்தில் சரியாக தென்னையோலை ஒன்று மரத்திலிருந்து ‘படீர்’ என்ற சத்தத்தோடு கிணற்றடியில் விழவும் உடல் தூக்கிவாரிப்போட கைப்பிடிச்சுவரில் நின்றவள் தடுமாறி விழப்போனாள்.
அந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவளை இடையோடு இறுக்கியணைத்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்து வந்துவிட்டான் ஆதித்யன்.
நந்தினியின் திமிறல்களும், பிடிவாதமும் அவனது இறுகிய பிடியின் முன்னே தோற்றுப்போய்விட “எதுக்கு என்னைத் தடுக்குறிங்க? நான் சாகணும். விடுங்க” எனக் கதறத் துவங்கினாள் அவள்.
“ஹேய்!”
ஆதித்யன் சிம்மக்குரலில் கர்ஜிக்கவும் “ஆ!” என்ற அதிர்ச்சியோடு கதறுவதை நிறுத்தினாள் நந்தினி.
மெய்யாகவே ஆதித்யனின் குரல் சிம்மக்குரல் தான். அவன் சாதாரணமாகப் பேசினாலே அதிகாரத்தோடு பேசுவதைப் போல ஒலிக்கும். இப்போது அதிகாரமும் கோபமுமாக அதட்டியதில் பாவம், நந்தினி பயந்தே போய்விட்டாள்.
அவள் அமைதியாக விசும்பவும் “உஃப்” என்று கன்னத்தை குவித்து காற்றை வெளியிட்டான் அவன்.
தன்னை அமைதியாக்கிக்கொண்டு “என்ன நடந்துடுச்சுனு சாகுற அளவுக்குப் போன நீ? நீ செத்துட்டா உங்கம்மாவ யார் பாத்துப்பாங்க? உனக்கு அப்பா இல்லனு சுப்பு ஆன்ட்டி சொன்னாங்க. அம்மாவைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போறோமேனு உனக்கு உறுத்தல? சீ! எவ்ளோ பெரிய சுயநலவாதி நீ” என்று கை நீட்டி அவன் குற்றம் சாட்டியதில் நந்தினிக்கும் கோபம் வந்துவிட்டது.
“போதும்! நிறுத்துங்க. நான் ஒன்னும் சுயநலத்தால இந்த முடிவுக்கு வரல. என்னால எங்கம்மாவுக்கு நிம்மதியைத் தரமுடியாதுனு தான் சாக நினைச்சேன்”
“ஓஹ்! நல்ல சமாளிப்பு”
கை தட்டினான் போலியான மெச்சுதலுடன்.
“நான் ஒன்னும் சமாளிக்கல. எங்கம்மா…” என்று மூச்சு வாங்கியவளிடம் பின்வாயில் திண்ணையைக் காட்டினான்.
“அங்க உக்காந்து பொறுமையா பேசலாமா?”
நந்தினியின் கண்கள் மிரட்சியோடு அவன்மீது படிந்தன. அந்த மிரட்சிக்கானக் காரணத்தை அறிந்தவன் அலட்சியமானச் சிரிப்பை உதிர்த்தான்.
“இந்த நிலமையில உன்னை எதுவும் பண்ணுற ஐடியா எனக்கு இல்ல. எதுக்குப் பயப்படணுமோ அதைத் தைரியமா செய். தேவையில்லாததுக்குப் பயப்படு”
அவனது ஏளனச்சொற்களைப் பொறுக்காதவள் திண்ணையில் அமர்ந்துகொள்ள கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தான் ஆதித்யன்.
“உனக்கு நடந்த எல்லாத்தையும் சுப்பு ஆன்ட்டி சொன்னாங்க. வாழ்க்கைனா என்னனு நினைச்ச? ரோஜாப்பூ தூவி வச்ச சிவப்புக்கம்பளம் இல்ல வாழ்க்கை. சாதாரண பாதை அது. நம்ம எவ்ளோ ஜாக்கிரதையா நடந்தாலும் பாதையில கிடக்குற கல்லோ முள்ளோ நம்மளோட காலைப் பதம் பாக்க தான் செய்யும். அதுக்காக இந்தப் பாதைல நடக்கவே மாட்டேன்னு சொல்லுறது முட்டாள்தனம். இனிமே கவனமா இருக்கனும்னு முன்னெச்சரிக்கையோட நடக்குறதுதான் புத்திசாலித்தனம்”
சிறு குழந்தைக்குச் சொல்வது போல நந்தினிக்கு வாழ்க்கையின் தாத்பரியத்தை விளக்கினான் ஆதித்யன்.
அவள் கன்னங்களில் நிற்காமல் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
“நான் ரொம்ப உடைஞ்சு போயிருக்கேன்ங்க. உங்களுக்கு என் மனசு வேதனையில துடிக்குறது தெரியல. நான் நேசிச்ச ஒருத்தர் நிரந்தரமா இன்னொருத்திக்குச் சொந்தமாகிட்டார். என்னால தாங்கிக்க முடியல”
விசித்து அழ ஆரம்பித்தாள் நந்தினி. அவள் அழட்டும்! அழுதால் மட்டுமே வேதனை ஓயுமென நினைத்தால் அழுது தீர்க்கட்டும்!
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யன்.
நந்தினியும் இடைவிடாமல் அழுது தீர்த்தாள். தான் அழுவது அன்னைக்குக் கேட்டுவிடுமோ என்று வாயைப் பொத்தி கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பவளை ஆதுரமாகப் பார்த்தான் ஆதித்யன்.
“உன் அழுகையைக் கூட தாங்காத உன்னோட அம்மா நீ தற்கொலை பண்ணிக்குறதை மட்டும் ஈசியா கடந்துடுவாங்களா நந்தினி? ஏற்கெனவே பொண்ணுக்காக அவங்க கற்பனை வச்ச கனவு வாழ்க்கை கலைஞ்சு போன வருத்தத்துல இருக்குறவங்களை நீயும் நோகடிக்கப் போறியா?”
‘இல்லை’ என்பது போல தலையாட்டி மறுத்தாள் அவள்.
“ஆனா எனக்கு ரொம்ப வலிக்குது. எப்பிடி குமரனால எனக்குத் துரோகம் பண்ண முடிஞ்சுது? ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, எட்டு வருசக் காதல் எங்களோடது. பணக்காரச் சம்பந்தம் வந்ததும், குடும்பத்தோட பொருளாதார நிலை மாறுனதும் அதை எப்பிடி தூக்கிப்போட முடிஞ்சுது? அப்ப காதல், மனசு இதெல்லாம் விட பணம் தானே பெரிசுனு ஆகுது. நானும் பணக்காரியா இருந்திருந்தா குமரன் என்னை விட்டுட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிருக்கமாட்டார் தானே?”
சுய கழிவிரக்கத்தோடு பேசியவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது ஆதித்யனுக்கு. அவனுக்குக் காதலை இழப்பது எப்படி இருக்கும் என்றெல்லாம் தெரியாது. இருபத்து ஒன்பது வருட வாழ்க்கையில் காதல் என்ற உணர்வும், காதல் சார்ந்த உறவும் அவனது வாழ்க்கையில் வந்ததே இல்லை.
அழகானப் பெண்களை இரசனைப்பார்வையோடு கடந்திருக்கிறான். அவர்கள் நிறுவனத்தில் எத்தனையோ அழகானப் பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுடன் நட்புணர்வுடன் பழகியும் இருக்கிறான். ஏனோ ரசனை என்ற ஒன்றைத் தாண்டி யாருடனும் வேறுவிதமான உறவை வளர்த்துக்கொள்ள தோன்றியதில்லை.
காதல் எல்லாம் வேலையில்லாதவர்களின் பொழுதுபோக்கு என்ற எண்ணம் அவனுக்கு. அப்படிப்பட்டவன் காதலை இழந்த துக்கத்தில் சாகத் துணிந்தவளை எந்த மாதிரி அணுகுவதெனப் புரியாமல்தான் அதட்டி, மிரட்டி அமர வைத்திருந்தான்.
“நான் இதுவரைக்கும் யாரையும் காதலிச்சதில்ல நந்தினி. அதனால உன் மனசோட வேதனை எனக்குப் புரியாம இருக்கலாம். ஆனா உன் அம்மாவோட துடிப்பை என்னால உணர முடியும். நான் ஒரு நாள் நைட் கால் பண்ணலனா கூட எனக்கு என்னமோ ஏதோனு எங்கம்மாவும் அப்பாவும் துடிச்சுப் போயிடுவாங்க. அப்பிடித்தானே உன் அம்மாவுக்கும் இருக்கும்? நடந்ததை மறந்துட்டு அடுத்து நடக்கப்போறதை யோசி. கொஞ்சநாள் ஆச்சுனா இதுக்காகவா தற்கொலை செய்யப்போனோம்னு உனக்கே வெக்கமா இருக்கும்”
நந்தினியின் விழிகளில் ‘அப்படியா’ என்று கேட்பது போன்ற பாவனை.
‘என்னால் குமரனை மறந்துவிட முடியுமா? பதினெட்டு வயதில் என் கை பிடித்து காதல் சொன்னவனை, எட்டு ஆண்டுகள் என் இதயக்கூட்டில் வாசம் செய்தவனை எப்படி மறப்பேன் நான்?’
“அவனை மறந்துடு. இதுநாள் வரைக்கும் அவன் உன் காதலனா இருந்திருக்கலாம். இப்ப இன்னொருத்தியோட புருசன். அடுத்தவங்களுக்குச் சொந்தமான ஒருத்தனை மனசுல சுமக்குறது ரொம்ப அசிங்கமான விசயம் நந்தினி”
சாட்டையால் அடித்தது போல உணர்ந்தாள் நந்தினி.
‘மெய் தானே! முந்தைய நாள் கால் ஒன்பதரை மணியிலிருந்து அவன் வினிதாவின் கணவன் ஆகிவிட்டான். அவனை ஏன் இன்னும் நினைத்து நான் வேதனை அடைய வேண்டும்? அடுத்தவள் கணவனை என்னவன் என யோசிப்பதே மாபெரும் தவறாயிற்றே!’
முகம் கறுக்க மானசீகமாகத் தனது கன்னத்தில் அறைந்துகொண்டாள் நந்தினி. அவனது காதலை மறக்கலாம். ஆனால் அவன் செய்த நம்பிக்கை துரோகம்? அதை மறக்க முடியாதே!
அதைச் சொன்னதும் ஆதித்யன் சிரித்தான்.
“துரோகத்தைச் சந்திக்காதவரைக்கும் மனுச வாழ்க்கை முழுமை அடையுறதே இல்லனு சொல்லுவேன் நான். ஸ்கூலும், காலேஜும் கத்துக் குடுக்காத வாழ்க்கை பாடத்தை ஒரே ஒரு துரோகம் கத்துக் குடுத்துடும் நந்தினி. இனிமே யாரையும் நம்புறதுக்கு முன்னாடி நீ ஆயிரம் தடவை யோசிப்ப. நம்பிக்கைங்கிற விலைமதிக்க முடியாத உணர்வை போற வர்றவங்க மேல எல்லாம் வைக்கக்கூடாதுனு நீ இப்ப பாடம் கத்துக்கிட்ட. அதை மறந்துடாத”
நந்தினி தலையை ஆட்டினாள்.
“ம்ம்! நீங்க சொல்லுறதும் சரிதான்”
கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். கண்களை இறுக மூடித் திறந்தவள் ஆதித்யனை நன்றியோடு பார்த்தாள்.
“தேங்க்ஸ்” என்றாள் மென்மையாக.
“நீ வீடியோ ஷூட்டுக்கு ஃப்ரீயா ஒர்க் பண்ணுன. அதுக்கு என்னால முடிஞ்ச சின்ன உபகாரம் இது. தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்” என மறுத்தவன் “போய் தூங்கு நந்தினி. நாளைக்கு மானிங்ல இருந்து ஃப்ரெஷ்சா உன் வாழ்க்கைய ஆரம்பி” என்றான்.
நந்தினி எழுந்து பின்வாயில் கதவைத் தாண்டி உள்ளே போனவள் ஆதித்யன் அங்கே நகராமல் நிற்பதைப் பார்த்துவிட்டு “நீங்க போகல?” என்க
“நீ கதவைப் பூட்டுற வரைக்கும் நான் போகமாட்டேன்” என்றான் அவன் புருவங்களை ஏற்றியிறக்கியவாறு.
“நான் சூசைட் பண்ணுற முடிவை மாத்திக்கிட்டேன்”
“உன் மனசு வேகமா மாறுதே. மறுபடி தற்கொலை வந்துடுச்சுனா? அதுக்காக தான் இங்க நிக்குறேன் நான்”
நந்தினியிடம் சின்னத் தடுமாற்றம். மனம் நிலையாக இல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்தத் தீர்மானத்தை மாற்றிக்கொள்வார்கள் என்பதை அறிந்திருக்கிறான். இவனுக்கு மனோதத்துவம் தெரியுமோ என்னவோ!
“குட் நைட்” என்று சொல்லிவிட்டுக் கதவை அடைத்தாள் அவள். ஆதித்யன் சில நிமிடங்கள் அங்கேயே நின்றவன் சன்னப்புன்னகையோடு அங்கிருந்து கிளம்பினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


