காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது சந்தன்பூரின் ராஜகுடும்பத்து மாளிகை. அந்த மாளிகையின் இளவரசியான பிரதியுஷா சிங்கின் திருமணத்திற்கான அழகான பதற்றம் தான் அது. அன்று அவளது நிச்சயதார்த்தம் இந்தியாவின் மிகப் பெரிய பிஸினஸ்மேன் குணால் கபூரின் மகனான வருண் கபூருடன் நடக்கப்போவதற்கான இனிமையான முன்னுரை தான் அந்த பரபரப்பு.
மாளிகையின் மேல்மாடத்தில் நின்று கொண்டிருந்தாள் பிரதியூஷா. ஐந்தரையடி உயரத்தில் ராஜகுடும்பத்தின் கம்பீரம் எள்ளளவும் குறையாமல் அதே நேரம் எளிமையின் மறுவுருவாக இருப்பவள். ஒரு முறை பார்த்தவர்களை மீண்டும் பார்க்க தூண்டும் கம்பீரமான அழகுக்கு சொந்தக்காரி.
விழாவின் கதாநாயகியான அவளுக்கு
அது காதல் திருமணம் என்பதால் இன்னும் அதிகமான எதிர்பார்ப்புடன் இருந்தாள். அவளது பாட்டி திருமணத்திற்கு ஒப்பு கொள்ளும் போதே அவளது திருமணம் கண்டிப்பாக அவர்களின் பரம்பரை அரண்மனையில் அவர்கள் வழக்கப்படி தான் நடக்க வேண்டும் என்று உறுதியாக கூறியதால் இப்போது அவளுக்கு பதற்றம் வேறு.
வருணுக்கு அவர்களின் வழக்கம் எதுவும் புரியாததால் தான் அவன் அருகில் இருந்து இந்த சடங்குகளை விளக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவளிடம் காலையில் அவளது அன்னை “நிச்சயத்திற்கு கல்யாணப்பெண் வர்ரது நம்ம வழக்கம் இல்லம்மா! நாங்க உன் அண்ணா, உன்னோட பாட்டி எல்லாரும் வருண் வீட்டுக்கு போக போறோம். நீ நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மத்த சம்பிரதாயத்துக்கு தயாராகு” என்று கூறவும் அவளுக்கு பாட்டி மேல் தான் கோபம் வந்தது.
இன்னும் பழைய பழக்கங்களை பின்பற்ற வேண்டுமென்று அவர் பிடிவாதம் பிடிப்பது அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால் அவரை எதிர்த்து பேசும் தைரியம் அவர்களின் குடும்பத்தில் யாருக்குமில்லாததால் அவள் அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று.
திடீரென்று ” மாப்பிள்ளைக்கு குடுக்க வேண்டிய சீர்வரிசை எல்லாம் எங்க?” என்று யாரோ கேட்கவும் பிரதியுஷாவின் தாயான மைதிலி ” அது எல்லாமே அவந்திகா பொறுப்பில தான் இருக்கு. அவ பாத்துப்பா. அவந்திகா? இங்க கொஞ்சம் வாடா!” என்று கூப்பிடவும் மாளிகையில் பூ அலங்காரம் செய்பவரிடம் வாதம் செய்து கொண்டிருந்த அந்த ஐந்தடி பட்டாம்பூச்சி “வந்துட்டேன் மம்மி! இங்க பாருங்க, நான் மம்மி கிட்ட பேசிட்டு வரதுக்குள்ள இதை சரி பண்ணிடனும். ஓகேவா?” என்று கட்டளையிட்டு விட்டு வேகமாக ஓடி வந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
” மம்மி! வருணுக்கு குடுக்க வேண்டிய எல்லாமே உஷாவோட ரூம்ல பத்திரமா இருக்கு. டோண்ட் வொர்ரி! அப்புறம் இந்த டெக்கரேஷன் பத்தி நீங்க டென்சன் ஆகாதிங்க. பல்ராம் பய்யா கிட்ட நான் பேசி சரி பண்ணிடுறேன்” என்று படபடவென்று பொறிய மைதிலி பக்கத்தில் நின்ற பிரதியுஷாவின் பாட்டி கல்யாணி தேவி ” நீ இருக்கிறது எங்களுக்கு எவ்ளோ உதவியா இருக்கு தெரியுமா? இன்னைக்கு இங்க எல்லாரும் டென்சன் இல்லாம நிம்மதியா வேலை பாக்குறோம்னா அதுக்கு நீயும் ஒரு காரணம். அந்த போலேநாத் அருளால் உனக்கும் ஒரு நல்ல பையன் இங்கயே அமைஞ்சா நான் உன்ன என் கைக்குள்ளயே வைச்சிப்பேன்” என்று மனதாற கூறினார்.
” நானி! நீங்க கவலையே படாதிங்க. இன்னைக்கு நாள் முடியறதுக்கு முன்னாடி அப்பிடி ஒருத்தன் வந்து நிப்பான். நான் அவன் கைய பிடிச்சு உங்க கிட்ட கூட்டிட்டு வரேன். உஷாவோட சேர்த்து எனக்கும் அதே நாளில கல்யாணம் பண்ணி வச்சிடுங்க” என்று கூறியபடி கண்ணை சிமிட்டியவள் புன்னகையுடன் அவரை கட்டிக் கொண்டாள்.
அவள் தான் அவந்திகா. இந்த கதையின் நாயகி. ரொம்பவே குறும்புக்காரி. அனைவரிடமும் எந்த பாகுபாடும் காட்டாமல் அன்பு செலுத்தும் அழகிய மனதுக்கு சொந்தக்காரி அவள். யாருக்காகவும் அவளுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழ்வதே அவளுடைய குறிக்கோள். எந்த வேலையை கையில் எடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிக்கும் திறமை படைத்தவள். முக்கியமாக ஒருவரது தவறை அவர் யாராக இருந்தாலும் அவர் முன்பே சுட்டிக்காட்டும் தைரியம் கொண்டவள்.
கல்யாணி தேவி அவளது கன்னத்தில் முத்தமிட்டவர் ” ரித்திமா எங்க போனா? அவளும் இன்னைக்கு நம்ம கூட வருண் வீட்டுக்கு வரணும். அவள சீக்கிரம் ரெடியாக சொல்லு. நீயும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு. அப்போ தான் ஈவ்னிங் ஃப்ரெஸ்ஸா இருக்கும்” என்று கூறி விட்டு மருமகளை தன்னுடன் அழைத்து சென்று விட்டார்.
அங்கு வந்த பிரதியுஷா ” அப்போ ரித்தியும் என் கூட இருக்க மாட்டாளா? நீங்க வர வரைக்கும் எனக்கு போர் அடிக்கும் ஹனிபி” என்று சின்ன குழந்தை போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
” உஷா பேபி! நாங்க போயிட்டு 2 ஹவர்ஸ்ல வந்துடுவோம். சப்போஸ் பாட்டி சொன்ன மாதிரி எவனாச்சும் என் முன்னாடி வந்து நின்னா வேணா கொஞ்சம் டைம் ஆகும்” என்று கண்ணை அடிக்கவும் அங்கு வந்த ரித்திமா “அது யாரு? உன் முன்னாடி வந்து நிக்க போறவன்?” என்று புரியாமல் கேட்டாள்.
அவள் ரித்திமா. பிரதியுஷா, அவந்திகாவின் உயிர்த்தோழி. அவள் அவந்திகாவுக்கு நேரெதிரானவள். யாரேனும் தவறு செய்தாலோ, அவளை புண்படுத்தினாலோ கூட புன்னகைத்தவாறே கடந்து செல்லும் குணமுடையவள்.
அவந்திகாவையும் பிரதியுஷாவையும் புரியாமல் பார்த்தவளுக்கு விஷயத்தை விளக்கி விட்டு மூவருமாக பிரதியுஷாவின் அறைக்கு ஓய்வு எடுக்க சென்றனர்.
பிரதியுஷாவின் திருமணம் சந்தன்பூர் அரண்மனையில் நடந்தாலும் அவள் வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான். அவள் தந்தை ராஜ்வர்தன் சிங்கின் பிஸினஸ் அங்கே இருந்ததால் அவளும்
பிறந்து வளர்ந்தது எல்லாமே அங்கே தான்.
ரித்திமாவும், அவந்திகாவும் அவளுடைய பள்ளிப்பருவ தோழிகள்
ரித்திமாவின் அம்மா வங்கியில் மேலாளராகவும் அப்பா வழக்கறிஞராகவும் இருந்ததால் அவளும் வீட்டிற்கு செல்ல பெண்ணாகவே வளர்க்கப்பட்டாள்.
அவந்திகா சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் தன் சித்தி, சித்தப்பாவுடன் சென்னையை விட்டு பெங்களூருவில் வந்து இருந்தாள். அவளது சித்தி கண்டிப்பு மிக்கவர். அவர் அவள் மேல் பாசத்தை பொழிந்ததும் கிடையாது. அதற்காக அவளை வெறுத்தார் என்று அர்த்தம் இல்லை. அவள் கேட்டதை வாங்கி தருவதிலும், விருப்ப பட்டதை படிக்க வைத்ததிலும் அவர் எந்த குறையும் தன் அக்கா பெண்ணிற்கு வைத்தது இல்லை.
ஆனாலும் சித்தப்பா அளவிற்கு சித்தி அவந்திகாவிற்கு நெருக்கம் இல்லை என்றே சொல்லலாம். அதனாலேயே மைதிலி மேல் அவளுக்கு கொள்ளை பிரியம். ராஜ்வர்தனும் அவளை தன் வீட்டு பெண்ணாகவே நினைத்தார் .
வருணும், உஷாவும் விரும்புவதை வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கியதிலிருந்து இன்று திருமணத்திற்கு கூடமாட உதவி செய்வது வரை எதிலும் மூவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருந்து வந்தது கண்டு கல்யாணி தேவிக்கு பெருமையே. அதனால் தான் அவர் அவந்திகாவிற்கு இங்கேயே வரன் வந்தால் நன்றாக இருக்கும் என்று பிரியப்பட்டார்.
அவர் சொல்லும் போதே ததாஸ்து தேவதைகள் ஆசிர்வதித்தது அவர்கள் யாரும் அறியாதது. ஆம்!! அவந்திகாவின் தலையெழுத்தை மாற்ற போகும் அவன் அந்த மண்ணில் காலடி எடுத்து வைத்து விட்டான்!!
அதே நேரம் சந்தன்பூரின் எல்லையில் அந்த பங்களாவே அல்லோகலப்பட்டு கொண்டு இருந்தது. மணமகன் வருண் காலையிலேயே போனில் வருத்தப் பட்டுக்கொண்டிருந்தான் “பேசாதடா! நீ இன்னைக்கு வரேனு சொன்னதால தான் நான் இந்த டேட் ஓகே சொன்னேன். இல்லனா டேட் சேன்ஜ் பண்ணிருப்பேன். குடுத்த வாக்கை காப்பத்தனும் மேன்! இல்லனா பிராமிஸ் பண்ணவே கூடாது”
அவன் வருண். பிரதியுஷாவின் அன்பான காதலன். கபூர் குடும்பத்தின் மூத்த வாரிசு. தந்தைக்கு தப்பாத தனயன் என்ற வார்த்தை அவனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
” சோ வருண் பய்யா என் மேல செம கோவமா இருக்கார் போல… நான் வேணா அடுத்த பிளைட்ல மும்பை போய்டவா?” என்று அவன் பின்புறம் சத்தம் கேட்கவும் திரும்பிய வருண் ” ஏய் ராகவ்” என்று ஆனந்த கூச்சலுடன் அந்த நெடியவனை கட்டிக் கொண்டான்.
வந்திருந்தவன் ராகவ். நமது கதையின் நாயகன். கபூர் குடும்பத்தின் இரண்டாவது வாரிசு. அவர்களின் கபூர் குரூப் ஆஃப் கம்பெனிஸை இன்னொரு உயரத்துக்கு கொண்டு சென்றவன். ஆறடி உயரத்தில் பஞ்சாபிகளுக்கே உரித்தான நிறத்துடன் சிகரெட்டின் தொடர்பறியா சிவந்த உதட்டுடன் வருணை பார்த்து புன்னகைத்தான்.
” ஹவ் ஆர் யூ பய்யா ? நாட் பேட். காதல் கை கூடுன சந்தோசம் உங்க முகத்துல அப்பிடியே தெரியுது” என்று கூறிய அந்த ராகவ் அங்கு வந்த அனைவருக்கும் வணக்கம் சொல்லி அவர்கள் வழக்கப்படி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.
அங்கு இருந்த வேலைக்காரப் பெண்மணிகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவர்களில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் ” இந்த தம்பி யாரு? பாக்க ரொம்ப தங்கமானவரா தெரியுறாரு…” என்று கேட்கவும் பழைய ஆட்களில் ஒருவர் ” இது தான் ராகவ் தம்பி. நம்ம வருண் தம்பியோட சித்தி பையன். நம்ம முதலாளி அம்மாவோட தங்கை பையன். சிரிச்சு பேசுறத பாத்து தங்கமான பையன்னு முடிவுக்கு வந்துடாத. அவருக்கு கோவம் வந்தா யாரும் பக்கத்துல நிக்க முடியாது. அதுவுமில்லாம இவரு வருண் தம்பி மாதிரி கிடையாது. அவரோட தகுதிக்கு குறைஞ்சவங்க கிட்ட பேசவே மாட்டாரு. அதனால அவர் கிட்ட கொஞ்சம் கவனமா இரு. இல்லனா இந்த வேலை உனக்கு நிலைக்காது” என்று அறிவுரை கூறினார்.
அவர் கூறிய படியே பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்ற வாக்கியத்திற்கேற்ப செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ராகவிற்கு தன் தகுதிக்கு குறைந்த ஆட்களிடம் பழகுவது எல்லாம் பிடிக்காத விஷயம். வீட்டிற்கு செல்ல பிள்ளையாக வளர்ந்ததால் பிடிவாதமும் அதிகம். அவனிடம் போட்டியிட்டு யாரும் இது வரை ஜெயித்தது இல்லை.
அதே நேரம் அவனால் தான் ஒரு தவறு நடந்தது என்றால் அதற்கான பொறுப்பை தயங்காமல் ஏற்று கொண்டு அதற்கு தீர்வும் கண்டுவிடுவான்.
அவனை நினைத்து அவன் அன்னை எந்த அளவிற்கு பெருமை படுவாரோ அதே அளவிற்கு வருத்தமும் படுவார். ஏனெனில் அவனது கோபம் அவ்வளவு பிரசித்தி பெற்றது. அவனது இந்த
கோபம் அவனை எந்த நிலைக்கு ஆளாக்குமோ என்று எப்போதுமே அவர் வருந்துவதுண்டு.
ஆனால் ராகவ் யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொண்டது இல்லை. பெரியம்மா, பெரியப்பா, சித்தி , சித்தப்பா என்று குடும்பத்தினர் அனைவரிடம் பேசி விட்டு இப்போது சகோதர சகோதரிகள் மட்டும் ரூமில் இருந்தனர்.
கிஷோர், அமர், நேகா, பிந்து என்று அந்த அறையே நிறைந்து இருந்தது.
” ராகவ் அண்ணா! உன்னோட எக்ஸ் எப்பிடி இருக்காங்க? லாஸ்ட் டைம் ஹாலிடேக்கு நம்ம கூட வந்தப்ப நல்லா தான இருந்தாங்க. அப்புறம் எப்படி பிரேக் அப்? ” என்று கேட்டாள் பிந்து. அனைவரிலும் இளையவள். ராகவிற்கு மிகவும் செல்லம்.
” எங்க ரெண்டு பேருக்கும் வேவ் லெங்த் ஒத்து போகல குட்டிமா” என்றான் அவன் சாதாரணமாக
அவள் அவனை குழப்பத்துடன் நோக்கியவாறே ” புரியல அண்ணா”
என்று சொல்லி விழித்தாள்.
” எனக்கு வரப் போற லைஃப் பார்ட்னர் என்னை கேள்வி கேக்குறவளா இருந்தா எனக்கு சரி வராது. அதே மாதிரி 24 ஹவர்ஸும் என்னால அவ பின்னாடி சுத்த முடியாது. இந்த ரெண்டு கண்டிஷனும் என்னோட லைஃப் பார்ட்னரா வர்ர பொண்ணுக்கு கட்டாயம் பொருந்தும். இதுல ஒன்னு கூட அவளுக்கு இல்ல, அண்ட் இது எதுவுமே அவளுக்கு பிடிக்கல. சோ பிரேக் அப்” என்று சொல்லிவிட்டு சட்டையின் கையை மடித்துவிட்டான்
வருண் ” நீ நினைக்குற மாதிரி நெறைய பொண்ணுங்க நம்ம ரிலேட்டிவ்ஸ்லயே இருக்காங்க ராகவ். நான் சொல்லுறேன் உனக்கு பிராப்ளம் இல்லாத ஒரு லைஃப் பார்ட்னர் தான் கிடைப்பா ” என்று கூறினான்.
அவன் கூறிய விஷயங்களை கண் இமைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தான் கிஷோர். ராகவின் சித்தப்பா மறைந்த நிரஞ்சன் கபூரின் மகன்.
இவன் கூறியதை எல்லாம் கேட்ட கிஷோர் ” சப்போஸ் உங்களை எதிர்த்து கேள்வி கேக்குற தைரியமான பொண்ணு உங்களுக்கு லைஃப் பார்ட்னரா வந்தா நீங்க என்ன பண்ணுவிங்க ராகவ்
பய்யா?” என்று கேட்டான்.
“டிவோர்ஸ் பண்ணுவேன்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றவனுக்கு தெரியவில்லை தன் பிடிவாதத்தை காலில் போட்டு மிதிக்கும் ஒருத்தி வரப் போகிறாள் என.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


