“இன்ஸ்டாக்ராம் சமூக செயலியானது குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் வயது குறைந்த சிறார்களுக்கு உள்நுழைவு தடை வைத்திருப்பதை போல இண்ஸ்டாகிராமில் எத்தடையும் இல்லை என்பதால் இக்குற்றச்சாட்டு பரவலாக அனைவராலும் வைக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20 மில்லியன் குழந்தைகளின் புகைப்படங்கள் இண்ஸ்டாகிராமில் ஆபாசப்படங்களாக மாற்றி பகிரப்பட்டுள்ளதை அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான National center for missing and exploited children (NCMEC) புள்ளிவிவரத்தோடு கூறியுள்ளது. தற்போது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட வயதிற்கு கீழுள்ளவர்கள் உள் நுழைய தடை இருந்த போதிலும் பதின்வயதினர் பொய்யான பிறந்த தேதியை உள்ளிட்டு நுழைந்து விடுகின்றனர். இதனை தடுக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இதன் மூலம் 13 வயதுக்குக் கீழுள்ள பயனர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது தெரிய வந்தால் அவர்களின் கணக்கு முடக்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் செயலியின் AI தொழில்நுட்பத்தை இன்ஸ்டாகிராம் செயலி உபயோகப்படுத்துமென தெரிகிறது.
-ஜான் சேவியர் & சௌம்யா ராமசுப்பிரமணியன், தி இந்து, மார்ச் 18, 2021
விஜய் மற்றும் அஜய் மீது காவல்துறையினர் மேக்னா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். அவர்களின் கைதில் ஆரம்பித்த விசயம், அவர்கள் வீட்டு சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் இருவரின் கணினிகளைச் சோதித்த பிறகு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.
“அம்பத்தூரைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இளம்பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவருக்குப் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உதவுவது போல நடித்து அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். இதில் மூத்த சகோதரன் அப்பெண்ணை தனது காதல் வலையில் வீழ்த்தி இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சிங் மூலம் அப்பெண் சம்பாதித்த பணத்தை ஏமாற்றியது, அவரை ஆபாசமாக ரீல்சில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தியதால் அவர்களின் காதல் முறிந்ததும் தெரிய வந்துள்ளது. காதல் முறிவால் வருமானம் தடைபட்ட கோபத்தில் அந்த வாலிபர் இளம்பெண்ணின் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதாக மிரட்டியதால் அப்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் காவல்துறை ஆரம்பித்த விசாரணையில் அந்த வாலிபர் மற்றும் அவரது இளைய சகோதரனின் கணினியிலிருந்த ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இரு வாலிபர்களும் இன்னும் இரு தினங்களில் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னே ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது”
தொலைகாட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருக்க செண்பகவள்ளி அதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தான் தொழிற்சாலையிலிருந்து திரும்பியிருந்தான் முத்துகுமரன்.
ஸ்ருதி டியூசனுக்குச் சென்றிருந்தாள். ராதாவோ சமையலறையில் வழக்கம் போல உருட்டிக்கொண்டிருந்தாள். முத்துகுமரன் மெதுவாக அங்கே எட்டிப் பார்த்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவனுக்காக தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த ராதாவின் கரங்கள் இன்னும் நடுங்கியது. சம்பவங்கள் எல்லாம் நடந்தேறி இதோடு ஒரு வாரம் முடிந்துவிட்டது. இருப்பினும் ராதாவினுடைய பயத்தின் மிச்சசொச்சம் அவளை அவ்வபோது வாட்டி எடுக்க தவறவில்லை. அப்போதெல்லாம் முத்துகுமரன் அவளுக்கு ஆறுதலாக இருப்பது வழக்கமாகி விட்டது, இப்போது போல.
வந்தவன் தேநீரை வடிகட்டிக் கொண்டிருந்தவளிடம் “இன்னும் ஏன் அதையே நினைச்சிட்டிருக்க ராதா? தப்பு பண்ணுனவங்க தான் ஜெயிலுக்குப் போயிட்டாங்களே” என்க ராதா பதற்றம் குறைய புன்னகைத்தாள்.
ஹாலில் இருந்தபடி செண்பகவள்ளி போனில் பேசுவது கேட்டது.
“நான் நல்லா இருக்குறேன் லெட்சுமி… நீ உன் வீட்டுக்காரர் பசங்கல்லாம் நல்லா இருக்கீங்களா?”
லெட்சுமி என்ற பெயரைக் கேட்டதும் முத்துகுமரனுக்குள் மெதுவாய் கலக்கம் குமிழிடத் துவங்கியது. ராதாவின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தவன் அது இயல்பாக இருக்கவும் அதிசயித்தான்.
பொதுவாக மகாலெட்சுமியின் பெயரைக் கேட்டாலே முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்பவள் அன்று இயல்பாக இருக்கவே அவனுக்குத் திகைப்பு.
அப்படியே விட்டிருந்தால் கூட முத்துகுமரனின் திகைப்பு அத்தோடு நின்றிருக்கும். சிற்றுண்டியை செண்பகவள்ளிக்கு எடுத்துச் சென்றவள் தானும் மகாலெட்சுமியிடம் இரண்டு வார்த்தைகள் நலம் விசாரிக்கவும் முத்துகுமரன் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான்.
“நீங்களும் மாமாவும் சென்னைக்கு வர்றப்ப கண்டிப்பா வீட்டுக்கு வரணும் லெட்சுமிக்கா”
செண்பகவள்ளியிடம் மொபைலைக் கொடுத்தவள் மீண்டும் சமையலறைக்குள் புகுந்துகொள்ள அங்கிருந்து ஹாலுக்கு வந்த முத்துகுமரனோ அன்னையிடம் இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது என கேட்க தவறவில்லை.
செண்பகவள்ளி மகனது தோளில் தட்டிக்கொடுத்தவர் “புருசன் அனுசரனையாவும் அன்பாவும் இருக்கப்ப பொண்டாட்டிக்கு அவனோட நிகழ்காலம் தான்ங்கிற கர்வம் உண்டாகும் குமார்… அந்தக் கர்வம் கடந்தகாலத்தோட சுவடுகளை ஈசியா அழிச்சிடும்… இப்ப ராதாவுக்கு அவ தான் உன்னோட நிகழ்காலம்ங்கிற நம்பிக்கை வந்ததால லெட்சுமி கிட்ட அவளால தயக்கமில்லாம பேச முடிஞ்சுது… இவ்ளோ தான்டா பொம்பளைங்க நாங்க உங்களை மாதிரி ஆம்பளைங்க கிட்ட எதிர்பார்க்குறோம்” எனவும் முத்துகுமரனுக்கு வாழ்க்கையின் சாராம்சம் பிடிபட்டது.
பெரியவர்களின் பேச்சு தொலைகாட்சியைப் பார்த்தபடியே தொடர ஸ்ருதியும் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
வந்தவள் ராதாவிடம் “நேத்தே சொல்லணும்னு நினைச்சேன்மா… ஆக்ஷா ஹேண்டிக்ராப்ட்ஸ்ல இருந்து டி.எம் பண்ணிருந்தாங்கம்மா… அவங்களோட ப்ராடக்டை இன்ஸ்டால விளம்பரம் பண்ண முடியுமானு கேட்டிருந்தாங்க… நான் இப்போதைக்கு முடியாதுனு சொல்லிட்டேன்” என்றாள்.
ஏன் என்பது போல பார்த்தவளிடம் “போர்ட் எக்சாம் முடியுற வரைக்கும் இனிமே இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சிங்கை குறைச்சிக்கலாம்னு இருக்கேன்மா… ரேஷ் தான் இந்த ஐடியாவ சொன்னா” என்றாள் ஸ்ருதி.
“ரேஷ்மி சொன்னா சரியா தான் இருக்கும்… சரி நீ போய் பேக்கை வச்சிட்டு வா… எல்லாருமா சேர்ந்து சாப்பிடுவோம்… இன்னைக்கு முழுநிலா… வராண்டால காத்தாட உக்காந்து நிலாச்சோறு சாப்பிடலாம்னு உங்க ஆச்சி சொன்னாங்க” என்ற ராதா உணவு பாத்திரங்களை எடுத்து வைக்கச் செல்ல ஸ்ருதியும் தனது அறைக்குள் சென்றாள்.
மொபைலை வழக்கம் போல சார்ஜில் போட்டிருந்தவள் அதை எடுத்துப் பார்க்கும் போது மேக்னாவிடமிருந்து அழைப்பு வந்தது. உடனே அதை ஏற்றவள்
“சொல்லுங்க மேகி அக்கா” என்றாள் உற்சாகத்துடன்.
மறுமுனையில் மேக்னாவின் குரலிலும் உற்சாகம் கொப்பளித்தது.
“உன் கிட்ட குட் நியூஸ் சொல்லுறதுக்காக கால் பண்ணுனேன் ஸ்ருதி” என்றாள் அவள்.
“சொல்லுங்க அக்கா”
“எனக்கு ரெட் டைகர் யூடியூப் சேனலோட நியூ யூடியூப் சீரீஸ்ல ஹீரோயினா நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்கு ஸ்ருதி… இன்னைக்குத் தான் ஆடிசனுக்குப் போனேன்… என்னோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்துட்டுச் செலக்ட் பண்ணிட்டாங்க… இன்னும் டூ வீக்ஸ் கழிச்சு ஷூட் இருக்கு”
“ஐய்! சூப்பர்கா… கங்கிராட்ஸ்… யூ டிசர்வ் இட் மேகிக்கா… அப்பா அம்மா கிட்ட இந்தக் குட் நியூசை சொல்லிட்டிங்களா? அவங்க என்ன சொன்னாங்க?”
“அப்பா கிட்ட சொன்னப்ப ரொம்ப சந்தோசப்பட்டார்… விஜய் விவகாரத்தோட என்னை பிடிச்ச கெட்ட நேரம் ஒழிஞ்சிடுச்சுனு சொல்லி அம்மா ஸ்வீட் பண்ணிக் குடுத்தாங்க… ரொம்ப சந்தோசமா இருக்கு ஸ்ருதி… உன் கிட்ட இதோட சேர்த்து இன்னொரு விசயமும் சொல்லணும்னு தான் கால் பண்ணுனேன்… இந்த வீக்கெண்ட் நீங்க எல்லாரும் ஃப்ரீயா இருந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கலாம்னு இருக்கேன்… ஆன்ட்டி பாட்டி அங்கிள் மூனு பேர் கிட்டவும் கேட்டுட்டுச் சொல்லு… ரேஷ்மியை நான் கால் பண்ணி இன்வைட் பண்ணிக்குறேன்”
“நீங்க குடுக்குற ட்ரீட்டை போய் வேண்டாம்னு சொல்லுவோமா? இந்த வீக்கெண்ட்ல நாங்க ஃப்ரீயா இல்லாட்டா கூட ஃப்ரீ பண்ணிட்டு வந்துடுவோம்… ஏன்னா சோறு முக்கியம்ல”
மேக்னா அதை கேட்டு நகைத்தவள் அடுத்த நொடி தீவிரமான குரலுக்கு மாறினாள்.
“உன்னை ஸ்கூல்ல யாரும் எதுவும் சொல்லலையேடா? ஏன்னா நீயும் அஜயும் ஃப்ரெண்ட்ஸ்னு உன்னோட க்ளாஸ் ஸ்டூண்ட்சுக்கு தெரியும்னு சொன்னியே”
“கிளாஸ்மேட்ஸ் கேட்டாங்க அக்கா… ஆனா நான் எனக்கு எதுவுமே தெரியாதுனு சொல்லிட்டேன்… அப்பிடியும் சிலர் நம்பல… ஆனா இப்ப நான் அடுத்தவங்க ஒபீனியனுக்கு ரொம்ப இம்பார்டன்ஸ் குடுக்குறதில்லக்கா… மத்தவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்கனு யோசிச்சு யோசிச்சு தான் நிறைய டிசிசன்சை நான் அவசரமா எடுத்து தப்பு பண்ணுனேன்… அதான் இப்ப நிதானமா இருக்கேன்”
அவர்களின் பேச்சினூடே ராதா ஸ்ருதியை அழைப்பது கேட்டது.
“இன்னும் என்ன பண்ணுற ஸ்ருதி?”
“மேகி அக்கா கிட்ட பேசிட்டிருக்கேன்மா”
பின்னர் ராதா அவளைத் தொந்தரவு செய்யவில்லை.
ஸ்ருதி தொடர்ந்து “இப்ப நான் இன்ஸ்டா ரீல்ஸ் பண்ணுறதை குறைச்சிட்டேன்கா… ரீல்ஸ் ரீல்ஸ்னு பிரபலமாகுறதுக்காக நான் டெஸ்பரேட்டா இருந்ததால தானே அஜய் விஜய் மாதிரி கேவலமான ஜென்மங்கள் கிட்ட மாட்டுனேன்… ரீல்ஸ் ஆசை என் கண்ணை மறைச்சதால தானே உங்க கிட்ட அந்த விஜய் மோசமா பிஹேவ் பண்ணுனதுக்கு அப்புறமும் அவனை நம்பி அவன் வீட்டுக்குப் போனேன்… அன்னைக்கு நான் மட்டும் அவன் உங்க கிட்ட அசிங்கமா பேசுனதை வீடியோவா எடுக்கலைனா என்னால போலீஸ் கிட்ட அவன் மோசமானவன்னு ப்ரூவ் கூட பண்ணிருக்க முடியாது”
“ப்ச்… இப்ப எதுக்குப் பழசை பேசுற ஸ்ருதி?”
“இல்லக்கா! அந்த அஜய் பேச்சைக் கேட்டு நான் உங்களையும் ரேஷ்மியையும் கூட தப்பா நினைச்சேன்… அவனுங்க என்னைக் கொல்லணும்னு நினைச்சப்ப கூட உங்க ரெண்டு பேர் கிட்ட தான் நான் மானசீகமா மன்னிப்பு கேட்டேன் தெரியுமா?”
“விஜய் ரொம்ப அழகா நம்ம மைண்டை மேனிபுலேட் பண்ணுவான்… நீ சின்னப் பொண்ணு… அதான் ஏமாந்துட்ட… அதை மறந்துடு… உனக்கு அங்கிளும் ஆன்ட்டியும் எப்பவும் சப்போர்ட்டா இருப்பாங்க… அதுக்கு மேல ரேஷ்மி இருக்கா… இனியும் ஏன் ஃபீலிங்?”
“அது என்னவோ உண்மை தான்கா… என்னோட பேரண்ட்ஸ், ரேஷ்மி குடுத்த மாரல் சப்போர்ட் தான் இன்னைக்கு என்னைத் தைரியமா நடமாட வச்சிருக்கு… அப்புறம் எங்க பேர் வெளிய வரக்கூடாதுனு நீங்க எச்.ஐ கிட்ட சொன்னதால தான் என்னாலையும் ரேஷ்மியாலையும் நிம்மதியா ஸ்கூலுக்குப் போக முடியுது… தேங்க்ஸ்கா”
“பழசை பத்தி பேசக்கூடாது… அண்ட் இனிமே நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லக்கூடாது… சப்போஸ் சொன்னா வீக்கெண்ட் ட்ரீட் கட்”
மேக்னாவின் மிரட்டலைக் கேட்டுச் சிரித்தாள் ஸ்ருதி. அவர்கள் பேசி முடித்து இரவு வணக்கத்திற்கு பிறகு மேக்னா அழைப்பைத் துண்டித்தாள்.
ஸ்ருதி போனை மீண்டும் சார்ஜில் போட்டுவிட்டுத் திரும்பிய போது தான் செண்பகவள்ளி அந்த அறைக்குள் நிற்பதைப் பார்த்தாள்.
அவரது முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லை. ஸ்ருதிக்கோ தந்தை ஆச்சியிடம் எதையும் கூறவேண்டாமென எச்சரித்ததை மீறி இன்று விசயம் அவரது காதுக்குப் போய்விட்டதே என்ற பதற்றம்.
தனது நிறத்தைக் குறையாக எண்ணி ராதாவை வறுத்தெடுத்து பழகியவராயிற்றே! இதற்கும் தன் அன்னையைக் குறை சொல்லுவாரோ என தயக்கத்துடன் அவரை ஏறிட செண்பகவள்ளியோ பேத்தியை நிதானமாக நெருங்கினார்.
“இவ்ளோ நடந்திருக்கு… என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலையா?”
சோகமாக ஒலித்தது அவரது குரல்.
“அப்பா தான் உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க ஆச்சி” என்றாள் ஸ்ருதி பதற்றமாக.
அவ்வளவு தானா இக்குடும்பத்தில் தனக்கான இடம் என்றெண்ணியவருக்கு மனதிற்குள் சுருக்கென்றது.
சரியான நேரத்தில் அவரது மனசாட்சி விழித்துக் கொண்டது.
“உன் மகனும் மருமகளும் உன் கிட்ட இதை சொல்லாம விட்டதுக்கு நீ மட்டும் தான் காரணம் செண்பகவள்ளி… எங்க ஸ்ருதி பிரச்சனைல மாட்டுனது தெரிஞ்சா நீ ராதாவை கரிச்சு கொட்டுவியோனு பயந்து தான் குமார் இதை உன் கிட்ட சொல்லவேண்டாம்னு அவங்களை தடுத்திருப்பான்… நல்லா யோசிச்சுப் பாரு, நீ மட்டும் ராதாவ மட்டம் தட்டலைனா இது எதுவுமே நடந்திருக்காது… இந்தப் பிரச்சனை எல்லாத்துக்கும் காரணகர்த்தாவே நீ தான் செண்பகவள்ளி”
வாழ்க்கை புத்தகத்தின் பழைய பக்கங்களில் தான் செய்த சில காரியங்கள் தான் இதற்கு காரணம் என்பதை செண்பகவள்ளி ஒப்புக்கொண்டார்.
பதற்றமாக நின்ற பேத்தியிடம் “பரவாயில்லடா… இப்ப தான் உங்கம்மாவும் நீயும் என் கிட்ட நல்ல மாதிரி பேசுறிங்க… இந்தப் பிரச்சனைய சொல்லி உங்கம்மாவ நான் குறை சொல்லி திட்டிடுவேனோனு யோசிச்சிருப்பான் உங்கப்பா… ஆனா இதுல ராதாவை மட்டும் ஏன் குறை சொல்லணும்? இதுல எங்க மூனு பேர் மேலயும் தப்பு இருக்கே… நீயும் ராதாவும் மட்டும் அந்தப் பசங்களை பாத்திங்க, பேசுனிங்க… ஆனா நானோ உங்கப்பாவோ அந்தப் பசங்களை பாக்க கூட செய்யலையே… பெரியவங்க பார்த்து பேசிருந்தா அவனுங்க உன் கிட்ட பிரச்சனை பண்ணுறதுக்கு யோசிருப்பாங்கல்ல… என் மேல தப்ப வச்சிக்கிட்டு ராதாவை மட்டும் நான் எப்பிடி குறை சொல்லுவேன்? அதோட நீங்க ரெண்டு பேரும் உங்களைப் பத்தியே தாழ்வா நினைச்சதுக்கும் நான் தானே காரணம்… நான் மட்டும் நிறம் கம்மினு ராதாவைக் குத்திக்காட்டலைனா அவளுக்கு உன்னோட நிறம் குறைவா தெரிஞ்சிருக்காது… அதுக்காக ரீல்ஸ் அது இதுனு உன் கவனம் திரும்புனப்ப அவ உன்னை கண்டிச்சிருப்பா… நான் பேசுன பேச்சு தானே நீ என்ன செஞ்சாலும் கண்ணை மூடிட்டு அவளை சப்போர்ட் பண்ண வச்சது… எப்பிடி பார்த்தாலும் இது எல்லாத்துக்கும் வேர் நான் தானே ஸ்ருதி” என்றார் அவர்.
ஸ்ருதி விசும்பலுடன் ஆச்சியை அணைக்க அவரோ “அழக்கூடாது… எல்லாம் முடிஞ்சிடுச்சுல்ல, இனிமே நீ அதை பத்தி பேசவோ யோசிக்கவோ கூடாது… உங்கப்பா அம்மாவ பொறுத்தவரைக்கும் எனக்கு இந்த விசயம் தெரியாலைனே இருக்கட்டும்… சரியா?” என்று கேட்க
“சரி ஆச்சி” என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“இதுக்கு மேல இங்க நின்னா உங்கம்மா வந்துடுவா… வா சாப்பிடப்போவோம்… நீ இதுவரைக்கும் நிலாச்சோறு சாப்பிட்டதே இல்லைனு உங்கம்மா சொன்னா… வா வா… இன்னைக்கு ஆச்சி ஊட்டி விடுறேன்.. நீ சாப்பிடு” என்று அவளது தோளை அணைத்துக்கொண்டு வராண்டாவை நோக்கி சென்றார் செண்பகவள்ளி.
வராண்டாவில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த முத்துகுமரனும் ராதாவும் அவர்களைக் கண்டதும் சற்று விலகி அமர்ந்தனர்.
“சாப்பிடுவோமா?” என்றபடி அமர்ந்த செண்பகவள்ளியிடம் மூவரும் சரியென்கவும் தட்டில் சாதத்தைப் போட்டு குழம்பு ஊற்றி பிசைந்து உருண்டை பிடிக்க ஆரம்பித்தார் அவர்.
செண்பகவள்ளி முதலில் ஸ்ருதிக்கு ஊட்டியவர் பின்னர் கை நீட்டிய ராதாவுக்கும் அன்பாக ஊட்ட முத்துகுமரன் தனது தாயாரை மனைவியும் மகளும் அன்பாக ஏற்றுக்கொண்டதை எண்ணி மனம் நெகிழ்ந்து போனான்.
அன்பைத் தேடி வந்த செண்பகவள்ளி, புகழைத் தேடி சென்ற ஸ்ருதி, மகளின் கனவுகளுக்கு துணையாக நிற்கிறேன் என அபாயமான மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்த ராதா, கடந்த காலத்தில் மூழ்கி நிகழ்காலத்தைக் கொண்டாட மறந்த முத்துகுமரன்; கானலாய் தங்களை ஏமாற்றிய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் இன்று அவர்களை மெய்யான அன்பால் ஒரு கூட்டுப்பறவைகளாக ஒன்றிணைய வைத்துவிட்டது.
கானலை மட்டுமே தேடிக் களைத்த அப்புள்ளினங்கள் சிற்சில போராட்டங்களுக்குப் பின்னர் மெய்யான அன்பைக் கண்டுபிடித்துவிட்டன! இனி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே நிலைத்திருக்கும்!
இனிதே நிறைவுற்றது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

