“இன்ஸ்டாக்ராமில் வீடியோ பதிவிடுவதாகச் சொன்ன கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர் அவரது கணவரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அவரைக் கொளுத்திய கையோடு தானும் தீக்குளிக்க முயன்ற கணவர் நாற்பது சதவிகித தீக்காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்கொளுத்தப்பட்ட பெண் அஞ்சல் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவரும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் தனது கணவர் தான் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினார் என வாக்குமூலம் அளித்துள்ளார். இத்தம்பதியினருக்கு ஆறு மாத குழந்தை ஒன்றும் உள்ளது”
-தி நியூஸ் மினிட்ஸ், ஜூன் 11 2021
முத்துகுமரனின் மார்பில் சாய்ந்து அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. ரேஷ்மியோ கவலை பொங்க வேரற்ற மரமாய் சமையலறை கதவின் மீது சாய்ந்திருந்த ராதாவைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.
“உங்களை அந்தப் பசங்க வேற எதுவும் பண்ணலையேடா?”
ரேஷ்மியிடம் விசாரிக்கும் போதே முத்துகுமரனின் குரல் தடுமாறியது. அவளும் அவனது மகளைப் போல தானே. தன் மகளிடம் இத்தகைய கேள்வியைக் கேட்கும் போது எந்தவொரு தகப்பனும் தடுமாறத் தானே செய்வான்!
ரேஷ்மி இல்லையென மறுத்தவள் “நான் அங்க போனப்ப ஸ்ருதியை அவங்க துரத்திட்டு வந்தாங்க… அவ கீழ விழுந்ததும் ரெண்டு பேருமா சேர்ந்து தூக்குனப்ப நான் பின்னா நின்னதால அவங்க கவனிக்க அங்கிள்… அங்க இருந்த பூந்தொட்டிய வச்சு அஜய் மண்டைல அடிச்சதும் அவன் சாஞ்சுட்டான்… உடனே விஜயும் ஸ்ருதியும் பேலன்ஸ் இல்லாம விழுந்துட்டாங்க… நான் இன்னொரு தொட்டிய வச்சு விஜயை அட்டாக் பண்ணிட்டு ஸ்ருதியை கூட்டிட்டு ஓடி வந்துட்டேன்… ஆனா எங்க சைக்கில் அங்க தான் நிக்குது அங்கிள்” என்றாள் படபடப்புடன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நீ ஒன்னும் பயப்படாதடா… நான் போய் சைக்கிளை எடுத்துட்டு வந்துடுறேன்… உங்க வீட்டுல பக்குவமா பேசி புரிய வைக்க வேண்டியது என் கடமை” என்ற முத்துகுமரன் உயிரற்ற சிலையாய் நிற்கும் ராதாவை அழைத்தான்.
“போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் போயிட்டு வந்துடலாம்… வா ராதா”
காவல் நிலையம் என்றதும் ராதாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
“போ..போலீஸ் ஸ்டேசானா? ஏங்க?”
“அந்தப் பசங்க நம்ம பொண்ணு வீடியோவ வச்சு அவளை மிரட்டலாம்னு ப்ளான் பண்ணிருக்காங்க… இதே மாதிரி இன்னும் எத்தனை பொண்ணுங்களை மிரட்டி காரியம் சாதிப்பாங்கனு தெரியாது… இப்பிடி எதாச்சும் நடக்குறதுக்கு முன்னாடி நம்ம போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் கம்ப்ளைண்ட் குடுத்துட்டா நல்லது ராதா”
“அக்கம் பக்கத்துல இந்த விசயம் தெரிஞ்சா நம்மளை பத்தி கண்டபடி பேசுவாங்களேங்க”
கண்ணீருடன் ராதா கேட்கவும் முத்துகுமரனுக்குச் சுறுசுறுவென கோபம் மண்டைக்கு ஏறியது.
“இதை இப்ப யோசிச்சு என்ன பிரயோஜனம்? படிக்குற வயசுல ரீல்ஸ் பண்ணுறேன்னு ஸ்ருதி சொன்னதும் எதை பத்தியும் யோசிக்காம அவளுக்குப் பரிஞ்சு பேசுனல்ல, அப்ப யோசிச்சிருக்கணும்… அப்ப நீ பக்கத்துவீட்டுக்காரங்களை பத்தி கவலைப்பட்டியா? எனக்குப் பக்கத்துவீட்டுக்காரன் பேசுறதை விட என் பொண்ணோட ஆசை தான் முக்கியம்னு சொன்னல்ல, அதே மாதிரி எனக்கு என் பொண்ணோட பாதுகாப்பு தான் முக்கியம்… இதை இப்பிடியே விட்டுட்டா நாளைக்கு அந்தப் பசங்க ஸ்ருதியையும், அவளுக்கு உதவுனதுக்காக ரேஷ்மியையும் எதுவும் பண்ண தயங்க மாட்டாங்க… வருங்காலத்துல எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுனா இப்ப நம்ம கண்டிப்பா அந்தப் பசங்க மேல கம்ப்ளைண்ட் குடுத்தே ஆகணும்”
ராதா ரேஷ்மியையும் ஸ்ருதியையும் மாறி மாறி பார்த்தவள் காவல்நிலையத்தில் புகாரளிக்க முத்துகுமரனோடு கிளம்பினாள். அப்போது ஸ்ருதியின் மொபைல் அடித்தது.
அவள் அழைப்பை எடுக்க நடுங்க முத்துகுமரன் மகளிடமிருந்து மொபைலை வாங்கிக் கொண்டார்.
“ஹலோ”
“நான் அம்பத்தூர் T1 ஸ்டேசன் எச்.ஐ பேசுறேன்… ஸ்ருதிங்கிறது உங்க பொண்ணு தானே?”
“ஆமா சார்… என்ன விசயம்?”
“உங்க பொண்ணு மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு… கொஞ்சம் ஸ்டேசன் வரைக்கும் வாங்க”
“என்ன கம்ப்ளைண்ட் சார்?”
“எல்லாத்தையும் போன்ல தான் சொல்லணுமா? சொன்னா தான் வருவிங்களா? ஸ்டேசனுக்கு வாங்க… வந்ததும் விளக்கமா சொல்லுறேன், மறக்காம உங்க பொண்ணையும் கூட்டிட்டு வாங்க”
உதவி ஆய்வாளர் அழைப்பைத் துண்டிக்கவும் முத்துகுமரனுக்கு ஆயாசமாக இருந்தது.
“யாருங்க பேசுனது?”
“அம்பத்தூர் T1 ஸ்டேசன் எச்.ஐ… ஸ்ருதி மேல ஏதோ கம்ப்ளைண்ட் வந்திருக்குதாம்… அவளோட ஸ்டேசனுக்கு வரச் சொன்னார்”
“ஐயோ! அந்தப் பசங்க தான் கம்ப்ளைண்ட் பண்ணிருப்பாங்க… இப்ப என்னங்க செய்யுறது?”
“வேற வழி! போய் தான் ஆகணும்”
ஸ்ருதி மருண்டு விழிக்க அவளது கரத்தைப் பற்றிக் கொண்டாள் ரேஷ்மி.
“பயப்படாத… நானும் உன் கூட வர்றேன்… அவங்க என்ன சொன்னாலும் தைரியமா அதை ஃபேஸ் பண்ணுவோம்”
முத்துகுமரனுக்குத் துயரமான நேரத்திலும் சிறு நம்பிக்கையாய் ரேஷ்மி தெரிந்தாள். ஆனால் தங்கள் மகள் செய்த முட்டாள்தனத்துக்கு அந்தப் பெண்ணை ஏன் காவல்நிலையம் வரை இழுக்க வேண்டும் என்று யோசித்தவன் ரேஷ்மியைத் தங்களுடன் வரவேண்டாம் என்றான்.
ஆனால் அவளோ கேட்பது போல தெரியவில்லை.
“நான் தான் அங்கிள் அவங்க ரெண்டு பேரையும் அட்டாக் பண்ணுனேன்… அப்பிடி பாத்தா அவங்க என் மேல தானே கம்ப்ளைண்ட் குடுக்கணும்? ஆனா ஸ்ருதியை டார்கெட் பண்ணிருக்காங்க… நான் வருவேன் அங்கிள்” என்றாள் பிடிவாதமாக.
“இல்லடா! இன்னைக்குனு பார்த்து உங்கப்பாவும் அம்மாவும் வேற ஊர்ல இல்ல… யாரை கேட்டு என் பொண்ணை போலீஸ் ஸ்டேசனுக்குக் கூட்டிட்டுப் போனிங்கனு அவங்க கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்?”
“ஸ்ருதி கூட சேர்ந்தா நானும் ஃபேமஸ் ஆகிடுவேனு அடிக்கடி அம்மா சொல்லுவாங்க அங்கிள்… அவங்களுக்கு எங்க ஃப்ரெண்ட்ஷிப்பை விட நானும் ஸ்ருதி மாதிரி இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் ஆகி நிறைய சம்பாதிக்கணும்னு ஆசை… அதனால அவளுக்கு நான் என்ன ஹெல்ப் பண்ணுனாலும் அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க… ஸ்ருதி ஃபேமஸா இருக்குறப்ப அவ கூட இருந்த நான், இப்ப பிரச்சனைனு வர்றப்ப ஓடுனா நல்லா இருக்காதுல்ல அங்கிள்?”
இந்தச் சிறுபெண்ணிற்கு இருக்கும் பக்குவத்தில் பாதி கூட தன் மகளிடம் இருந்திருந்தால் மோசமானவன் என தெரிந்த பிறகும் அவனது வீட்டில் சென்று நின்றிருக்க மாட்டாளே என நொந்து கொண்டபடி ரேஷ்மியோடு தன் மனைவி மகளை அழைத்துக்கொண்டு அம்பத்தூர் காவல் நிலையத்தை அடைந்தான் முத்துகுமரன்.
ராதாவுக்குக் காவல்நிலையத்தைக் கண்டதும் மருட்சி. ஸ்ருதி தலையைக் குனிந்தபடி தந்தையுடன் உள்ளே செல்ல அங்கே எழுத்தரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி அவளைக் கண்டதும் பேச்சை நிறுத்தினார்.
உதவி ஆய்வாளரின் முன்னே நின்று கொண்டிருந்தனர் விஜயும் அஜயும்.
தலையில் கட்டுடன் நின்றவர்கள் ஸ்ருதியையும் ரேஷ்மியையும் கண்டதும் தங்களருகே கிடந்த நாற்காலியில் அமர்ந்திருந்த அவர்களின் தந்தையின் தோளைச் சுரண்டினர்.
“அப்பா அந்தப் பொண்ணு தான்”
அவன் சொன்னதும் கடுமையான முகத்துடன் திரும்பினார் அம்மனிதர்.
கோபத்துடன் எழுந்தவர் “என் பிள்ளைங்களை அடிச்சுப் போட்டுட்டு எவ்ளோ தெனாவட்டா வந்து நிக்குறா இந்தப் பொண்ணு? நீ யாரு? இவளோட அப்பனா? கூட பழகுன ஃப்ரெண்டை அடிச்சு மண்டைய உடைனு சொல்லி வளர்த்தியாய்யா?” என்று காச்மூச்சென்று கத்த ஸ்ருதி அழ ஆரம்பித்தாள்.
அதற்குள் ஏட்டு ஒருவர் வந்து அவரை அமைதியாக்கி அமர வைக்க ஸ்ருதியும் ரேஷ்மியும் உதவி ஆய்வாளர் முன்னே நிறுத்தப்பட்டனர்.
“என்னம்மா நீ தான் இவங்களை அடிச்சியா?”
அதட்டலாக அவர் கேட்கவும் அவளுக்கு முந்திக்கொண்டு ரேஷ்மி பதிலளித்தாள்.
“அவ இல்ல சார்… நான் தான் இவங்களை பூந்தொட்டியால அடிச்சேன்”
“நீ யாரும்மா?”
“நான் ரேஷ்மி… ஸ்ருதியோட க்ளோஸ் ஃப்ரெண்ட்”
“சரி… நீ ஏன் அந்த நேரத்துல அங்க போன?”
ரேஷ்மி விஜயையும் அஜயையும் பார்க்க அவர்களோ
“சார் இந்தப் பொண்ணும் அவ கூட சேர்ந்து எங்க கிட்ட இருந்து பணம் பறிக்க பார்த்தா” என்று நா கூசாது பழி பேசினர்.
“நான் பேசுறப்ப இடையில பேசாதிங்கப்பா” என்று உதவி ஆய்வாளர் அதட்டியதும் அமைதியாயினர் இருவரும்.
“நீ சொல்லும்மா” என்று அவர் ஊக்கியதும் ரேஷ்மி ஆரம்பத்திலிருந்து அன்று நடந்தது வரை ஒன்று விடாது அனைத்து சம்பவங்களையும் கூறிவிட்டாள்.
“இவங்க ரெண்டு பேரும் மோசமானவங்கனு நான் எவ்ளோவோ சொல்லியும் கேக்காம ஸ்ருதி இவங்களை பாக்க போனா… நான் அவளுக்குத் தெரியாம அங்க போனதால தான் என்னால அவளைக் காப்பாத்த முடிஞ்சுது சார்”
ரேஷ்மி கூறி முடிக்கவும் உதவி ஆய்வாளரின் பார்வை விஜய் மற்றும் அஜயிடம் இருந்து ஸ்ருதியிடம் வந்தது.
“அங்க என்ன நடந்துச்சும்மா?”
ஸ்ருதி பயந்தபடியே தனது மொபைலை நீட்டினாள்.
“இதுல என்ன இருக்கு?”
“விஜய் அண்ணா மேகி அக்காவ மிரட்டுன வீடியோ இருக்கு சார்”
இப்போது விஜய்கு வேர்வை பெருக்கெடுக்க அஜயோ ஆடு திருடிய கள்ளனை போல விழிக்க ஆரம்பித்தான்.
அதற்குள் அவனது தந்தையும் எழுத்தரிடம் புகார் அளித்துக்கொண்டிருந்த அவனது அன்னையும் பொங்கியெழுந்து பிரச்சனை செய்ய ஆரம்பிக்கவும்
“இப்ப அமைதியா இருக்கீங்களா? இல்ல உள்ள தள்ளி லாடம் கட்டவா?” என்று கடுமையாக வினவினார் உதவி ஆய்வாளர்.
“இது என்ன சார் அநியாயமா இருக்கு? எங்க பசங்களை பணத்துக்காக இந்தப் பொண்ணு கொல்ல பாத்திருக்கா… அட்டெம்ப்ட் டு மர்டர்னு இவளை உள்ள தள்ளாம கம்ப்ளைண்ட் குடுக்க வந்தவங்களை மிரட்டுறிங்க?” என்றார் விஜய் அஜயின் தாயார்.
“ஏம்மா, நீங்க சொன்னதும் அவங்களை கூப்பிட்டு விசாரிச்சேன்ல, இப்ப அவங்க சொல்லுறதையும் கேக்க விடுங்க” என்றவர் ஸ்ருதியின் மொபைலில் பதிவான வீடியோவை ஓடவிட்டார்.
நல்ல ஒளி ஒலி தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் என்பதால் விஜய் மேக்னாவை மிரட்டியது அங்கிருந்த ஒவ்வொருவரின் செவியிலும் தெளிவாக விழுந்தது.
உதவி ஆய்வாளர் முழுவதுமாக கேட்டு முடித்துவிட்டு இருவரையும் பார்த்த பார்வையில் அந்த காவல் நிலையம் தீப்பற்றி எரியாதது ஒன்று தான் குறை.
ஆனால் அப்போது கூட விஜய் அடங்கவில்லை.
“சார் இது நான் பேசுனதே இல்ல… இந்தப் பொண்ணுங்க ஏதோ டெக்னாலஜி வச்சு ஏமாத்துறாங்க”
“எப்பிடி? நீ அவங்க ட்ரஸ் மாத்துன வீடியோவ ஏதோ டெக்னாலஜி வச்சு மார்ஃபிங் பண்ணிருக்கியே, அதை மாதிரியா?” என்று இடியாய் கர்ஜித்தவர் அவனது பெற்றோரை பார்த்த பார்வையில் அருவருப்பு தேங்கி நின்றது.
“இப்பிடி ஒரு பிள்ளைய பெத்துட்டு உங்களுக்கு வீராப்பு வேற… கான்ஸ்டபிள் அந்தப் பொண்ணு மேக்னாவ ஸ்டேசனுக்கு வரச் சொல்லுங்க… இன்னைக்கு இவனுங்களை விடுறதா இல்ல நானு” என்றார்.
மேக்னாவை அழைத்ததும் விஜயும் அஜயும் திகிலடைய அவர்களின் பெற்றோரோ நடப்பது என்னவென புரியாது திக்பிரமையில் ஆழ்ந்தனர்.
மேக்னாவும் வந்தாள். தனக்கும் விஜய்குமான அறிமுகம், அவர்களின் காதல், தொழில்ரீதியான உறவு, அஜயின் தோழிகளாக ஸ்ருதியும் ரேஷ்மியும் அறிமுகமானது, தனக்கும் சிறுபெண்களுக்குமான உறவு என அனைத்தையும் கூறியவள் தங்களது காதல் பிரிவுக்கான காரணத்தைக் கூறும் போது அழுது விட்டாள்.
“காதலிக்கிறவன் கேமராவோட தான் வர்றான்னு எந்தப் பொண்ணும் நினைக்குறதில்ல சார்… முழுசா நம்பித் தான் காதலிக்கிறோம்… ஆனா இவனை மாதிரி பொறுக்கிங்களுக்கு எங்களை விட எங்களோட நியூட் பாடி மேல தான் ஆசை… அவங்கம்மா தங்கச்சிக்கு என்னென்ன பார்ட்ஸ் இருக்கோ அது தானே எங்களுக்கும் இருக்கு… அப்புறம் ஏன் ட்ரஸ் இல்லாத பொண்ணோட உடம்பு மேல இவ்ளோ வெறி? கேட்டா நல்லவனை விட்டுட்டு ஹேண்ட்சம் பாய்சா தேடிப் போய் காதலிச்சா அவன் நியூடா தான் வீடியோ எடுப்பான்னு இவனை மாதிரி பசங்க அந்தப் பழியையும் எங்களை மாதிரி பொண்ணுங்க மேல தான் போடுவாங்க சார்… எந்த பையனும் நான் ஒரு வக்கிரம் பிடிச்சவன்னு நெத்தில பச்சை குத்திட்டு வர்றதில்ல சார்… காதல்ங்கிற பேர்ல என்னை இவன் பணத்துக்காக யூஸ் பண்ணுனதை கூட மன்னிச்சிடுவேன், அசிங்கமா ரீல்ஸ் பண்ண சொன்னதை கூட மறந்துடுவேன்… ஆனா ஸ்ருதி குழந்தை சார்… அவளைக் கூட வீடியோ எடுத்தேன்னு சொன்னான் பாருங்க, அதை என்னால மன்னிக்கவே முடியாது… இவன் மேல நான் கம்ப்ளைண்ட் குடுக்குறேன் சார்… பொண்ணுங்களையும் டீனேஜ் கேர்ள்ஸையும் ஆபாசமா வீடியோ எடுக்குற இவனை மாதிரி வக்கிரம் பிடிச்சவனுங்களுக்கும், வெளியில உத்தமன் வேசம் போட்டுட்டு லிங் ப்ளீஸ்னு கேட்டு அந்த வீடியோவ ரசிக்கிற கேவலமான பிறவிகளுக்கும் இவனுங்களுக்குக் கிடைக்கப் போற தண்டனை ஒரு பாடமா இருக்கணும்”
இதற்கு மேல் கேட்பதற்கு என்ன இருக்கிறது. மேக்னா விஜய் அஜய் சகோதரர்கள் மீது புகாரளிக்க, அவர்களின் பெற்றோரிடம் எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளும்படி கறாராக கூறி அனுப்பி வைத்தார் உதவி ஆய்வாளர்.
மேக்னா அவரிடம் இந்த வழக்கில் ஸ்ருதி மற்றும் ரேஷ்மியின் பெயர் வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொண்டாள்.
உதவி ஆய்வாளர் ராதாவுக்கும் முத்துகுமரனுக்கும் அறிவுரை வழங்கவும் தவறவில்லை.
“குழந்தைங்களோட ஆசைய நிறைவேத்த நினைக்குறது தப்பில்லம்மா… ஆனா அவங்க வெளியே போய் என்ன பண்ணுறாங்க, யார் கூட பழகுறாங்கனு கண்காணிக்க மறந்துடக்கூடாது… வெளியாளுங்களை சீக்கிரமா நம்பக்கூடாதும்மா… அதுவும் பெண் குழந்தை வச்சிருக்குறவங்க ஒவ்வொரு நிமிசமும் அவங்களோட பாதுகாப்பு மேல ஒரு கண் வச்சிருக்கணும்…. அப்புறம் அம்மாக்கு மட்டும் தான் குழந்தைங்களோட வளர்ப்புல பங்கு இருக்குனு தகப்பன் ஒதுங்கிடக்கூடாது சார்… அவங்களுக்குச் சுதந்திரம் குடுக்குறது தப்புனு நான் சொல்ல வரலை… ஆனா அந்தச் சுதந்திரத்தை அவங்க சரியா பயன்படுத்துறாங்களானு செக் பண்ணிட்டே இருக்கணும்… சம்பாதிச்சுப் போடுறது மட்டும் தான் அப்பாவோட கடமைனு இருக்காதிங்க சார்… பொண்டாட்டி பிள்ளைங்களோட பாதுகாப்பும் உங்க கடமை தான்”
ராதாவும் முத்துகுமரனும் சரியென தலையசைக்க அடுத்த அறிவுரை ஸ்ருதிக்குத் தான்.
“மீடியால நுழையணும்னு இன்னைக்கு எல்லாரும் ஆசைப்படுறாங்க… அது ஒன்னும் பெரிய தப்பில்ல… ஆனா இது மீடியால நுழையுறதுக்கான வயசு இல்ல… படிக்குற வயசு… இந்த வயசுல நீ சம்பாதிச்சே தீரணும்னு அவசியம் இல்ல… உன்னோட ரீல்ஸ் ஆசை உன்னை எங்க கொண்டு வந்து விட்டுருக்குனு பார்த்தியா? இனிமே கொஞ்சம் கவனமா இருக்கணும்… ரீல்ஸ் பண்ண ஆசையா இருக்குதா? அதை நீயே பண்ணு… வெளியாளுங்களை நம்பாத… சரியா? ஆனா இதுலயே படிக்கிற காலத்தை வேஸ்ட் ஆக்கிடாத”
ஸ்ருதியோடு ரேஷ்மியும் தலையாட்ட அவர்களை செல்லும்படி பணித்தார் உதவி ஆய்வாளர்.
அவர்கள் நால்வரும் வெளியேறுகையில் ராதாவின் உள்ளம் குற்றவுணர்ச்சியில் தவித்தது. பெண்ணின் ஆசையை நிறைவேற்றும் வெறியில் அவள் இப்படிப்பட்ட வக்கிரர்களிடம் சிக்கிக்கொண்டதைக் கூட கவனிக்காத தன்னுடைய மடமையை நினைத்து கவலையோடு வீட்டுக்குக் கிளம்பினாள்.
அவள் மனமோ கண்டிப்பாக இந்த விசயம் மாமியாரின் காதுக்குப் போனால் தன்னைப் பற்றி அவர் என்ன எண்ணுவார் என்று தயங்கியது. இப்போது அவர் மாறிவிட்டாலும் பேத்தியின் இந்நிலைக்குத் தனது கவனக்குறைவு தான் காரணம் என்று தெரிந்தால் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக தன்னை மட்டம் தட்ட தொடங்குவாரோ என்ற கலக்கத்துடன் முத்துகுமரனை ஏறிட அவனோ உதவி ஆய்வாளரின் அறிவுரையை மனதில் அசை போட்டபடி தாங்கள் நால்வரும் வீட்டுக்குச் செல்ல ஆட்டோவை அழைத்தான்.
நால்வரும் வீட்டுக்குச் சென்றதும் ரேஷ்மி சொல்லிக்கொண்டு கிளம்ப கீழே நிற்கும் போதே முத்துகுமரன் மனைவி மகளிடம் நடந்த எதுவும் செண்பகவள்ளிக்குத் தெரிய வேண்டாம் என்று கூறிவிட்டான்.
கலக்கமாக பார்த்த ராதாவிடம் “இப்ப தான் அம்மா கொஞ்சம் மாறிருக்காங்க… நீயும் இப்ப தான் சந்தோசமா இருக்க… ஏன் தேவையில்லாததை பேசி மனக்கசப்பு வரணும் ராதா?” என்றான் அவன்.
அவள் பதில் கூறாது கண்ணீர் உகுத்தபடி அவனது தோளில் சாய
“நீ மேல போ ஸ்ருதி” என மகளை அனுப்பிவைத்தவன் ஆறுதலாக அவளது சிகையை வருடிக் கொடுத்தான்.
“என்னோட இன்செக்யூரிட்டிய இன்ஃபீரியாட்டி காம்ப்ளக்சை ஸ்ருதி மேல திணிச்சதால தானே இதெல்லாம் நடந்துச்சுங்க” என்று கீழ்த்தளத்தில் நின்று விசும்பியளை சமாதானம் செய்தான் முத்துகுமரன்.
“இதுல என்னோட தப்பும் இருக்கு ராதா… அந்தப் பசங்களை பார்த்து பேசச் சொல்லி நீ எத்தனையோ தடவை சொல்லிருக்க… ஆனா நான் தான் அதை கண்டுக்கல… நீயும் ஸ்ருதியும் சந்தோசமா இருந்தா போதும்னு ஒதுங்கிட்டேன்… ஒருவேளை மீட் பண்ணி பேசிருந்தா கொஞ்சமாச்சும் அந்தப் பசங்க நம்ம பொண்ணு கிட்ட வாலாட்ட பயந்திருப்பாங்க… இவங்கம்மா நம்மளை நம்புறாங்க, அப்பா கண்டுக்க மாட்டார், அதனால இந்தப் பொண்ணை என்ன வேணும்னாலும் மிரட்டலாம்னு நினைச்சுட்டாங்க ராதா… ஒரு தகப்பனா இது எனக்கும் ஒரு பாடம் தான்… வீணா உன் மேல மட்டும் பழிய போட்டுக்காத”
பெரிய துன்பத்தின் முடிவில் கணவனின் அன்பும் ஆதரவும் முழுமையாய் கிடைத்த நிம்மதியில் அவனுடன் தங்கள் வீட்டை நோக்கி படியேறினாள் ராதா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

