“செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள்கோயில் பகுதியைச் சேர்ந்த அசோக் (24), மோகன் (17), பிரகாஷ் (17) என்ற மூன்று இளைஞர்களும் தாம்பரம் செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது இரயில் பாதையில் அமர்ந்து பேசுவதையும், ரீல்ஸ் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த இரயில்பாதையில் எக்ஸ்ப்ரஸ் இரயில்கள் மட்டுமே செல்லும் என்பதால் அதிகமாக இரயில் வரத்து இருக்காது. அவ்வாறு இருக்கையில் ரீல்சுக்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் இரயில் வந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை. இதில் இரயில் மோதியதால் விபத்துக்குள்ளான மூவரின் உடலும் தூக்கியெறியப்பட சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக உயிரழந்தனர். சம்பவம் அறிந்து வந்த இரயில்வே போலீஸார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-துரைராஜ் குணசேகரன், ஆனந்தவிகடன், 08.04.2022
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தாள் ஸ்ருதி. காரணம் அந்தப் பெண் ராகவி சொன்னது போல அவளது கசின்கள் ஸ்ருதியிடம் ஆர்வமாக உரையாடினர். அவளுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அவளும் க்ரீன் பொட்டிக் உடைக்கான விளம்பரத்தைச் செய்ய ஏதுவான இடமாக அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டாள்.
ரேஷ்மியை வீடியோ எடுக்குமாறு கூறிவிட்டு அதற்கு ஏற்றவாறு இனிமையான குரலில் ஏற்ற இறக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.
“ஹாய் க்யூட்டி பய்ஸ்! கொஞ்சம் பெர்ஷனல் வேலைல பிசியாயிட்டேன் கய்ஸ்… அதனால தான் நியூ வீடியோஸ் எதுவும் போட முடியல… நான் இப்ப எங்க இருக்கேன் தெரியுமா? என் ஃப்ரெண்ட் ராகவியோட பர்த்டே பார்ட்டில” என்றவள் பிறந்தநாள் கொண்டாடும் ராகவியையும் படம் பிடிக்கச் சொல்ல ரேஷ்மியும் மொபைல் கேமராவை அவள் பக்கம் காட்டினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவளும் “ஹாய்” என்க அடுத்து அவளது கசின்களை அறிமுகப்படுத்தினாள் ஸ்ருதி.
கூடவே தான் அணிந்திருந்த அனார்கலியைக் காட்டி “நான் வியர் பண்ணிருக்குற அனார்கலி க்ரீன் பொட்டிக்ல இருந்து செண்ட் பண்ணுனாங்க… இதோட நெக் மாடல் ஹேண்ட் மாடல் எல்லாமே எவ்ளோ ட்ரெண்டியா டிசைன் பண்ணிருக்காங்க பாருங்க” என்று ஆர்வமாகப் பேச வீடியோ நீண்டது.
அதன் பின்னர் ஸ்ருதி தங்களையும் வீடியோவில் இணைத்துக்கொண்ட சந்தோசத்தில் ராகவியின் கசின்கள் அவளை தலையில் தூக்கி வைத்து உபசரிக்காத குறை!
“ஸ்ருதிக்குக் கேக் குடுங்க… ஜூஸ் இல்லையா? அவங்க கிரேப் ஜூஸ் தான் பிடிக்கும்னு இன்ஸ்டால சொன்னாங்கல்ல, கொண்டு வாங்க”
அவளை ஒரு பிரபலம் போலவும் வி.ஐ.பி போலவும் நடத்தினர் என்றால் மிகையில்லை. யாருக்குத் தான் கொண்டாடப்படுவது பிடிக்காது?
ஸ்ருதிக்கும் பிடித்தது. அங்கே கிடைத்த மரியாதையிலும் நடந்த உபச்சாரத்திலும் உச்சி குளிர்ந்து போனது அவளுக்கு. இதற்கெல்லாம் காரணம் ரீல்ஸ் தானே என்ற எண்ணம் அவளுக்குள் தோன்றி மறைந்தது கணப்பொழுதிற்குள்.
ரேஷ்மியிடம் அதைப் பகிர்ந்து கொள்ள தவறவில்லை அவள்.
“இது எல்லாமே இன்ஸ்டா ரீல்சுக்குக் கிடைச்ச மரியாதை ரேஷ்… மேகி அக்காக்கு நடந்த இன்சிடென்டால நான் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேனு தோணுதுடி… அவங்களுக்கும் விஜய் அண்ணாக்கும் நடந்த பிரச்சனை அவங்களோட பெர்ஷனல்… அதை நான் ஏன் போட்டு குழப்பிக்கணும்? இங்க பாரு, எத்தனை பேர் என்னோட ரீல்சுக்காக வெயிட் பண்ணுறாங்கனு… என்னோட டி.எம் நிரம்பி வழியுது ரேஷ்… சோ நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்”
“என்னடி?” மிரட்டலாக கேட்டாள் ரேஷ்மி.
“நான் டுமாரோ விஜய் அண்ணாவ மீட் பண்ணி பழையபடி ரீல்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்”
ரேஷ்மி ஸ்ருதியை பார்த்த பார்வையில் கவலை இருந்தது.
ஆனால் அவளோ அதை கண்டுகொள்ளாது “இன்னைக்கு அஜய் சொன்னது உண்மை தான்… நீயே பாரேன், என்னோட ஃபாலோயர்ஸ் கவுண்டிங் மேகி அக்காவ விட அதிகமாயிடுச்சு… ரீஸண்ட் வீடியோஸ்ல கமெண்ட்சும் எனக்கு அவங்களை விட அதிகமா வந்திருக்கு… இது தான் அவங்க பொறாமைப்பட காரணமா இருந்திருக்கும்… அவங்க பொறாமைக்கு நான் என்ன பண்ணுறது? எனக்குக் கிடைச்ச லைம் லைட்டை நான் தியாகம் பண்ண விரும்பல” என்றாள்.
ரேஷ்மிக்குக் கடுமையாக கோபம் வந்துவிட ஸ்ருதியைத் தனியாக அழைத்துச் சென்று வறுத்தெடுக்க ஆரம்பித்தாள் அவள்.
“எப்பிடி உன்னால மேகி அக்காவ பத்தி இந்த மாதிரி பேச முடியுது? அவங்களை விஜய் அண்ணா எப்பிடிலாம் அசிங்கப்படுத்துனார்னு கேட்டதுக்கு அப்புறமும் உன்னால எப்பிடி மறுபடியும் அவரைத் தேடிப் போக முடியுது ஸ்ருதி? அவரும் அஜயும் சரியானவங்களா தோணலடி… நீ அங்க போகாத… போனா உனக்கும் மேகி அக்கா நிலமை வர்றதுக்கு ரொம்ப நாளாகாது”
தோழி தன் மீதான அக்கறையில் தான் பேசுகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இன்ஸ்டாகிராமின் டி.எம்மில் நிரம்பி வழிந்த செய்திகளும், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த உபச்சாரங்களும் ஸ்ருதியின் மூளையை உறைய வைத்திருந்தன.
அவள் கண்ணுக்கு இப்போது ரேஷ்மி கூட பொறாமையில் பொங்குபவளாக தோற்றமளித்தாள்.
கர்வம் மேலிட “உனக்கும் இன்செக்யூரிட்டி தானே ரேஷ்? இவ மட்டும் நம்மளை விட ஃபேமஸ் ஆகுறாளே, நம்ம இன்னும் இவளுக்கு மொபைல் கேமரால வீடியோ பிடிச்சிட்டுச் சுத்துறோமேனு உனக்குத் தோணுதுல்ல” என்று அவள் கேட்க ரேஷ்மியின் கண்கள் கலங்கிவிட்டது.
“ஸ்ருதி… என்னை” என்று வார்த்தைகள் தந்தியடிக்க அழப் பிடிக்காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டாள் அவள்.
ஆனால் ஸ்ருதி பாதியில் கிளம்பவில்லை. காரணம் அவளை கொண்டாடுபவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை அவளுக்கு!
அனைத்து கொண்டாட்டங்களும் முடிவடைந்த பிறகு வீட்டிற்கு கிளம்பியவள் ஆச்சி தனக்காக காத்திருக்கவும் அங்கிருந்து கொடுத்து விட்ட இனிப்புகளை அவரிடம் நீட்டினாள்.
“எனக்கு வேண்டாம்மா” என்று செண்பகவள்ளி மறுக்க
“அதுல்லாம் முடியாது… நீங்க கொஞ்சமாச்சும் சாப்பிடணும்” என்று இனிப்பில் கொஞ்சம் விண்டு அவரது வாயில் திணித்தாள்.
செண்பகவள்ளி அதை சாப்பிட்டவர் “சரி சாப்பிட்டியா?” என்று கேட்க
“இல்ல ஆச்சி” என்றவளுக்கு ரேஷ்மி இல்லாமல் அங்கே சாப்பிட பிடிக்கவில்லை என்பதே உண்மை.
செண்பகவள்ளியும் இன்னும் சாப்பிடவில்லை.
“நான் உனக்கும் எனக்கும் மோர் ஊத்தி சாதம் பிசைஞ்சு எடுத்துட்டு வரவா? தொட்டுக்க சாம்பார் இருக்கு” என்றார் தயக்கத்துடன்.
ஸ்ருதியோ மறுப்பேதும் கூறாது தலையாட்டியவள் “நான் போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன் ஆச்சி” என்று தனது அறைக்குள் சென்று மறைந்தாள்.
செண்பகவள்ளி சாதத்துடன் வரவும் அவள் உடைமாற்றிவிட்டு வரவும் சரியாக இருந்தது.
அவளின் கண்கள் பெற்றோரைத் தேட “உங்கப்பாவும் அம்மாவும் வெளிய போயிருக்காங்க” என்றபடி வராண்டாவில் சென்று அமர்ந்தார் செண்பகவள்ளி.
ஸ்ருதியும் அவரைப் பின்தொடர்ந்தவள் “ஓ! அவுட்டிங்கா?” என்று கேட்டபடி வந்து அமர்ந்தாள்.
“இது வரைக்கும் அம்மாவும் அப்பாவும் தனியா போனதே கிடையாது ஆச்சி… எனக்குத் தெரிஞ்சு இது தான் ஃபர்ஸ்ட் டைம்” என்றாள்.
செண்பகவள்ளியோ சாதத்தை உருண்டையாக உருட்டி அவள் வாயில் ஊட்டிவிட அதைச் சாப்பிட்டவள் கண்களை மூடி அதன் ருசியை அனுபவித்தாள்.
“ம்ம்ம்ம்! வெரைட்டி வெரைட்டியா சாப்பிட்டாலும் தண்ணி ஊத்துன சாதத்துல மோர் ஊத்தி பிசைஞ்சு சாம்பார் தொட்டுட்டுச் சாப்பிடுற டேஸ்டே தனி பாட்டி” என்றவளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு உணவூட்டிய சந்தோசம் செண்பகவள்ளிக்கு.
சிற்சில மாற்றங்கள் நிகழ வேண்டுமாயின் இளையவர்கள் மட்டும் தான் மாறவேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை. பெரியவர்களும் தங்கள் பிடிவாதம், பழைய கொள்கைகளை விட்டு இறங்கி வரலாம்.
செண்பகவள்ளி அவ்வாறு தான் தன்னை மாற்றிக் கொண்டார். அதன் விளைவாக அவரது பேத்தியும் மருமகளும் அவர் மீது அன்பைப் பொழிந்து தள்ளிவிட்டனர் என்றெல்லாம் கூறிவிட முடியாது.
ஆனால் யாரோ போல அவரை விலகி நின்று பார்ப்பதை நிறுத்திவிட்டு சகஜமாகப் பழக ஆரம்பித்திருந்தனர். ஸ்ருதி சாப்பிட்டு முடித்ததும் அன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்தேறிய அனைத்து நிகழ்வுகளையும் கண்கள் மின்ன அவரிடம் விளக்கியதில் நேரம் போனதே தெரியவில்லை.
ஆனால் கவனமாக ரேஷ்மியோடு நடந்த உரசலை மட்டும் மறைத்துவிட்டாள் அவள்.
பேச்சுவாக்கில் செண்பகவள்ளி மீது சாய்ந்து உறங்கியும் போனாள். வராண்டாவில் நல்ல காற்று என்பதால் செண்பகவள்ளியும் பக்கவாட்டுச்சுவரில் சாய்ந்து கண் மூடினார்.
இப்படியே நேரம் சென்றுவிட வெளியே சென்றிருந்த ராதாவும் முத்துகுமரனும் வீடு திரும்பிய போது அவர்கள் நன்றாகவே உறங்கிவிட்டிருந்தனர்.
முத்துகுமரன் மெதுவாக தாயாரை எழுப்ப அவர் அசைந்ததில் ஸ்ருதியும் உறக்கம் கலைந்து எழுந்தாள்.
“என்னத்தை வராண்டாலயே தூங்கிட்டிங்க? வாங்க உள்ள போவோம்”
நால்வரும் வீட்டிற்குள் சென்ற போது தான் செண்பகவள்ளி ராதாவின் முகத்தில் தெரிந்த சின்ன சந்தோசத்தைக் கவனித்தார். அத்தோடு எனக்கென்ன என இரவுணவுக்குப் பிறகு உறங்க சென்றுவிடும் முத்துகுமரன் அன்று அத்தி பூத்தாற்போல பாத்திரங்களை ஒதுங்க வைக்க ராதாவிற்கு உதவச் சென்றான்.
“நீங்க போய் தூங்குங்கம்மா… ஸ்ருதி நீயும் போ”
“ஆச்சி நீங்களும் என்னோட தூங்குறிங்களா?”
எப்போதும் ஹாலில் படுத்துறங்கும் செண்பகவள்ளி பேத்தியோடு அன்று உறங்க சென்றுவிட திக்குக்கு ஒருவராய் திரும்பி நின்ற ராதாவும் முத்துகுமரனும் வெகு நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் அனுசரணையாய் இருக்க அந்த வீட்டைப் பொறுத்தவரை மெல்ல மெல்ல சுமூகமான சூழல் உண்டானது.
ஆனால் ஸ்ருதியின் வாழ்க்கையில் தான் சுமூகமான சூழல் உருவாகுவதற்கு அவளே தடையாக நின்றாள். ஆம்! ரேஷ்மி எவ்வளவோ எச்சரித்தும் மறுநாளான ஞாயிறன்று விஜயின் வீட்டிற்கு செல்லும் முடிவை எடுத்தாள் அவள்.
அன்று ஞாயிறு என்பதால் ராதா மெதுவாக எழுந்திருக்க அவளுக்கு முன்னரே எழுந்து விஜயின் வீட்டுக்குச் செல்ல தயாராய் இருந்தாள்.
“இப்பவே எங்க கிளம்பி நிக்குற ஸ்ருதி?”
கேட்ட ராதாவிடம் ரீல்ஸ் வீடியோ எதுவும் கடந்த ஒரு வாரகாலமாக எடுக்காததால் அன்று குறைந்தது மூன்று வீடியோக்களாவது எடுத்தே தீரவேண்டுமென கூறினாள் அவள்.
“நீ ரெடியாயிட்ட… ரேஷ்மி எங்க காணும்?”
“அவளையும் என் கூடவே அழைச்சிட்டுப் போயிடுவேன்மா”
அன்னையிடம் ரேஷ்மி வரப்போவதில்லை என்றால் தன்னை தனியே அனுப்ப யோசிப்பார் என்பதால் பொய் கூறிவிட்டுக் கிளம்பினாள்.
ஆனால் அவள் சென்ற அரைமணி நேரத்தில் “ஸ்ருதி இருக்காளா ஆன்ட்டி?” என்ற கேள்வியோடு வந்து நின்றாள் ரேஷ்மி.
“இப்ப தான் விஜய் வீட்டுக்குக் கிளம்புனாடா… உன்னையும் கூட அழைச்சிட்டுப் போறதா சொன்னாளேடா” என்றாள் ராதா.
ரேஷ்மிக்கோ தனியாக ஸ்ருதி அங்கே சென்ற பதற்றம். அதே நேரம் தனக்கும் அவளுக்குமிடையேயான பூசலை ஸ்ருதி இன்னும் அவளது அன்னையிடம் கூறவில்லை என்பது புரிந்ததால் தனது பதற்றத்தை அவரிடம் காட்டாது மறைத்தாள்.
“அவ வந்தப்ப நான் எழுந்திரிக்கல போல… அதான் கிளம்பிட்டா… இட்ஸ் ஓகே ஆன்ட்டி… நானே அங்க டேரக்டா போயிடுவேன்”
சொன்னதோடு வீட்டுக்கு வந்தவள் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
அவள் யாருக்காக விரைகிறாளோ அந்த ஸ்ருதியோ விஜயின் வீட்டின் முன்னே நின்று கொண்டிருந்தாள். வீட்டில் அஜய் விஜயின் பெற்றோர் இல்லை போல. வீடே அமைதியாக இருந்தது.
வெளியே அழகாய் பூந்தொட்டிகள் அடுக்கப்பட்டிருக்க அதை ரசித்தபடி நின்றவள் விஜயும் அஜயும் எங்கே இருப்பார்கள் என தேடினாள்.
வீட்டின் வெளியே தனியாக கட்டப்பட்டிருந்த கெஸ்ட் ஹவுஸ் போலிருந்த இடத்திலிருந்து விஜயும் அஜயும் பேசுவது கேட்டது.
உடனே அவ்விடத்துக்கு விரைந்தாள் ஸ்ருதி.
அவர்கள் சிரித்துக் கொண்டிருக்கவும் அறைக்குள் காலடி எடுத்து வைத்தவள் “நான் நேத்து அவளை குழப்பி விட்டுட்டு வந்திருக்கேன்ணா… கண்டிப்பா ஸ்ருதி வருவா… நீ ஒன்னும் டென்சன் ஆகாத… அவ மூஞ்சிய அழகா காட்ட உன்னைத் தவிர வேற எந்தக் கொம்பனாலயும் செய்ய முடியாது… அதுக்கு நீ எடுத்துக்குற ஃபார்ட்டி பர்சென்டேஜ் கமிசன் கூட கம்மி தான்” என்ற அஜயின் அலட்சியப்பேச்சில் அதிர்ந்து போய் அறை வாயிலிலேயே நின்றாள்.
சகோதரர்கள் இருவரும் சுவரை ஒட்டிக் கிடந்த கணினியைப் பார்த்தபடி அமர்ந்திருந்ததால் வாயிலில் நின்ற ஸ்ருதியைக் கண்டுகொள்ளவில்லை.
அவர்கள் இன்னும் என்ன தான் பேசுகிறார்கள் என்று கேட்போமே என மறைவாய் நின்று கொண்டாள் ஸ்ருதி.
இப்போது விஜயின் முறை.
“நீ என்னவோ சொல்லுறடா… ஆனா அந்த ஸ்ருதி பாக்க காக்காவாட்டம் இருந்தாலும் அவ ப்ரெயின் செம ஸ்பீடா வேலை செய்யுது… எனக்கும் மேக்னாக்கும் பிரச்சனைனு தெரிஞ்சதும் நைஸா என்னை கட் பண்ணிவிட்டுட்டா… அவ ரீல்சுக்கு யூஸ் பண்ணுற ஐடி க்ரெடென்சியல்ஸ் எல்லாத்தையும் நைட்டோட நைட்டா மாத்திட்டா”
“சோ வாட் அண்ணா?”
“டேய் இனிமே அவளுக்கு நம்ம தயவு தேவையில்ல… அவளுக்கு எந்த ஆங்கில்ல வீடியோ எடுத்தா அவளை ப்ரைட்டா காட்ட முடியும்னு தெரிஞ்சுடுச்சு… ப்ளஸ் அவளுக்கு நான் யூஸ் பண்ணுற ஃபில்டர்ஸ் எல்லாமே ரேஷ்மிக்கு அத்துப்படி… அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இனிமே இன்டிபெண்டண்டா ரீல்ஸ் பண்ணி சம்பாதிப்பாங்கடா”
“அப்பிடி எதுவும் நடக்கக்கூடாதுனு தானே நம்ம முன்னேற்பாடு பண்ணி வச்சோம்” என்று கண் சிமிட்டினான் அஜய்.
விஜய் அசிங்கமாக சிரித்தவன் “அந்தப் பேக்கப் தனியா இருக்கு… இன்னைக்கு மேகியோட கோட்டா… நீ சொல்லுற மாதிரி அந்தப் பொண்ணு ஸ்ருதி வரலைனா அவளோட பேக்கப்பை வச்சு அவளை சரிகட்டுற வேலைய நீ ஆரம்பி” என்றான்.
ஸ்ருதிக்கு அது என்ன பேக்கப் என்ற கேள்வி உதித்தது. இவர்கள் இருவரும் ஏதோ மோசமான காரியத்தைச் செய்கிறார்கள். இதை இப்படியே விடக்கூடாது.
சத்தம் எழுப்பாமல் தனது மொபைல் கேமராவில் அவர்களின் செயல்பாடுகளை வீடியோ எடுக்க ஆரம்பித்தாள். முக்கியமாக அண்ணனும் தம்பியும் திரும்பும் போது அவர்களின் முகம் தெளிவாகத் தெரியும்படி வீடியோவை எடுக்க ஆரம்பித்தாள்.
விஜய் தனது மொபைலில் மேக்னாவை அழைத்தான். அவள் அழைப்பில் வரவும் தெனாவட்டாகப் பேச ஆரம்பித்தான் அவன்.
“பிரேக்கப்புக்கு அப்புறம் ரொம்ப சந்தோசமா இருக்க போல… அப்புறம் பேமெண்ட்லாம் நீயே ஹேண்டில் பண்ண ஆரம்பிச்சிட்டல்ல… உன்னை ரீல்ஸ் வேர்ல்ட்ல ஸ்டார் ஆக்குன என்னை மறந்துட்டு நீ மட்டும் சந்தோசமா இருக்கலாமா செல்லம்?”
மறுமுனையில் மேக்னா திட்டியிருப்பாள் போல. வில்லனைப் போல சிரித்தான் விஜய்.
கூடவே அஜயும் நமட்டுச்சிரிப்போடு இன்னும் பேசு என சைகை காட்டினான்.
“நீ என்ன திட்டணுமோ திட்டிக்கோ… ஆனா உன் ரீல்ஸ் ரெவன்யூல முன்ன மாதிரி ஃபார்ட்டி பர்சென்டேஜ் எனக்கு வரணும்… இல்லைனா என் கிட்ட இருக்குற உன்னோட பேக்கப் வீடியோஸ் எல்லாம் சோஷியல் மீடியால ஃப்ரீயா ரிலீஸ் பண்ணுவேன்… எப்பிடி வசதி?”
மீண்டும் பேக்கப் என்கிறானே என்று ஸ்ருதி சிந்திக்கையிலேயே அது என்னவென்பதை தன் வாயாலேயே கூறி அவளின் அருவருப்பைப் பெற்று கொண்டான் விஜய்.
“உன்னோட ஸ்டூடியோல நீ ட்ரஸ் சேஞ்ச் பண்ணுற இடம் இருக்குல்ல, அங்க குட்டியா ஒரு மைக்ரோ கேமரா வச்சு ரெக்கார்ட் பண்ணுன வீடியோஸ் மட்டும் அறுபது தேறும்… அதுல இருபது வீடியோல நீ செம செக்சியா இருக்கடி… இத்தனை நாள் நான் பெற்ற இன்பத்தை என்னை மாதிரி வயசுப்பசங்களும் அனுபவிக்கட்டுமேனு திடீர்னு ஒரு ஞானோதயம் வருது… என்ன அனானிமஸ் ஐடில அப்லோட் பண்ணட்டுமா?”
அவன் மிரட்டும் போது ஸ்ருதி அரண்டு போனாள். ஏனெனில் அவன் கூறிய அதே அறையில் தான் அவளும் ஆடை மாற்றுவது வழக்கம். அப்படி என்றால் தன்னையும் இவ்வாறு உடை மாற்றும் போது வீடியோ எடுத்திருப்பானா என்று பயத்துடன் நின்றாள் அவள்.
ஆம் என்பது போல தான் விஜயின் பேச்சும் அமைந்தது.
“நீ போனதும் அந்தக் குட்டி ஸ்ருதியும் போயிட்டா… என்னங்கடி நினைச்சிட்டிருக்கீங்க? என்னை பாத்தா இளிச்சவாயன் மாதிரி தெரியுதா? நீ மட்டும் முரண்டு பிடிச்சா உன் வீடியோ சோஷியல் மீடியால பறக்கும்… அடுத்து அவளோட வீடியோ தான்”
ஸ்ருதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இப்படிப்பட்ட கயவனையா அண்ணன் என அழைத்தோம் என மனம் குமைந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.
விஜய் பேசி முடித்த பிறகு எதேச்சையாகத் திரும்பியவன் வாயிலில் நின்றவளைப் பார்த்துவிட்டான். கூடவே அவள் வீடியோ எடுப்பதையும் பார்த்துவிட்டான்.
“ஏய்” என்று கண்களை உருட்டி கோபத்துடன் அவன் எழுந்திருக்கவும் ஸ்ருதிக்குள் படபடப்பு கூடிவிட்டது.
“டேய் அவளைப் பிடிடா” என்றபடி அவளை நோக்கி ஓடிவந்தான் விஜய். அஜயும் சகோதரனோடு ஓடி வர ஸ்ருதி மொபைலை தனது ஜூன்ஸ் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியபடியே பயந்தவளாக அங்கிருந்து வெளியே ஓடினாள்.
ஓடியவள் வெற்றிடத்தில் கிடந்த கல்லில் கால் இடித்துக் கீழே விழ அதற்குள் விஜயும் அஜயும் நெருங்கிவிட்டனர்.
ஸ்ருதி எழுவதற்கு முன்னர் அவளை ஆளுக்கொரு புறமாகப் பிடித்துக் கொண்டனர் இருவரும்.
“வீடியோவா எடுக்குற? நீ இங்க இருந்து வெளிய போனா தான?” என்று மிரட்டியபடி அவளை மீண்டும் கெஸ்ட் ஹவுசுக்குள் எடுத்துச் செல்ல முயன்ற போது இருவரில் அஜய் மட்டும் வேரற்ற மரமாகச் சரிந்தான்.
அவன் சரியவும் ஸ்ருதியும் விஜயும் உடன் சேர்ந்து சரிந்து விழுந்தனர்.
“அஜய் என்னடா ஆச்சு?” என்றபடி எழ எத்தனித்த விஜயின் தலையில் பூந்தொட்டி ஒன்று நச்சென்று விழுந்தது.
“அம்மாஆஆஆ” என்று தலையைப் பிடித்தபடி சரிந்தவன்
“எழுந்திரு ஸ்ருதி” என்று ஸ்ருதியை எழுப்பிய ரேஷ்மியைக் கண்டதும் கொலைவெறியானான்.
அவள் தான் தன்னையும் அஜயையும் தாக்கியிருக்க வேண்டுமென அனுமானித்தவன் அடுத்து எதிர்வினையாற்றுவதற்குள் அவனது நினைவு மங்கியது.
ஒருபுறம் விஜய் சரிந்து கிடக்க மறுபுறம் அஜய் மயங்கி கிடக்க ஸ்ருதியை கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டாள் ரேஷ்மி.
அவள் அழுகையோடு எதையோ சொல்ல வர “அப்புறமா பேசிக்கலாம்டி… இவனுங்க முழிக்கிறதுக்குள்ள ஓடிடுவோம்” என்று ஸ்ருதியை இழுத்துக்கொண்டு வேகமாக அந்த வீட்டின் காம்பவுண்டை விட்டு வெளியேறினாள் ரேஷ்மி.
உச்சகட்ட பயத்தை அனுபவித்தவளாக அவளுடன் கிளம்பினாள் ஸ்ருதி. மேக்னாவும் ரேஷ்மியும் இவர்களைப் பற்றி சொல்ல சொல்ல கேட்காது வந்து மாட்டிக்கொண்ட தன் மடமையை எண்ணி மனம் குமைந்தவளுக்கு காயப்பட்ட சகோதரர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமென்ற பயம். கூடவே மேக்னாவினது வீடியோவும் தனது வீடியோவும் அவர்கள் வசம் இருக்கின்றது என்ற திகில் வேறு!
அவளது பயமும் திகிலும் அகலுமா அல்லது கயமையே உருவாய் இருக்கும் அஜயும் விஜயும் மீண்டு வந்து ஸ்ருதியை மிரட்டுவார்களா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

