“இருபது வயதான கல்லூரி மாணவர் பிரேம் குமார் என்பவர் ஆபாசப்புகைப்படங்களை வைத்து ஓராண்டு காலமாக மிரட்டி ரூபாய் 1.5 இலட்சம் வரை பறித்ததால் தங்களது இன்ஸ்டாகிராம் தோழன் மூலமாக பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது. மொபைலில் பேசி பழக்கமான பிறகு தங்களை தகாத முறையில் படம் பிடித்து அதை காட்டி அவர்களை பிரேம்குமார் மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் அந்த இரு பள்ளி மாணவிகளும் தங்களது இன்ஸ்டாகிராம் நண்பன் உதவியால் பிரேம்குமாரை ரெட் ஹில்சுக்கு வரவழைத்து அங்கிருந்து கும்மிடிப்பூண்டிக்குக் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அந்த இன்ஸ்டா நண்பனும் அவனது சகாக்களும் பிரேம்குமாரை அடைத்து வைத்து சித்திரவதைக்குள்ளாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரை ஈச்சங்காட்டுமேடு கிராமத்தில் காலியிடம் ஒன்றில் புதைத்துள்ளனர். இதில் கொலை செய்த வாலிபர்களுடன் அந்த இரு பள்ளி மாணவிகளும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்”
-ABP Live 20.12.2021
மேக்னாவும் விஜயும் பிரிந்த பிறகு ஸ்ருதி ரீல்ஸ் வீடியோவுக்காக விஜயை அணுகத் தயங்கினாள். அதற்கு முக்கியக் காரணம் மேக்னாவின் எச்சரிக்கை, கூடவே தனது நாகரிகமான ரீல்ஸ்களில் கூட அசிங்கமான கமெண்ட்கள் வந்திருந்த விதம் உண்டாக்கிய அருவருப்பு.
ராதாவிடம் அவர்கள் பிரிந்ததை கூறாமல் மறைத்தவள் படிப்பில் மட்டும் கவனத்தைச் செலுத்த முயன்றாள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவள் எந்த ரீல்ஸ் வீடியோவும் செய்யவில்லை.
அன்று வகுப்பில் உணவு இடைவேளையின் போது இதர மாணவிகள் கும்பலாக அவளிடம் வந்தனர்.
ரேஷ்மி முழங்கையால் ஸ்ருதியின் புஜத்தில் இடிக்கவும் தலையுயர்த்தியவள் அவர்களில் நடுநாயகமாக நின்றவளிடம் என்னவென வினவினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இன்னைக்கு எனக்கு பர்த்டே… ஈவ்னிங் எங்க வீட்டுல செலிப்ரேசன் இருக்கு… நீ கண்டிப்பா வரணும் ஸ்ருதி”
சொன்னதோடு அழைப்பிதழை நீட்ட வேறு செய்தாள் அவள். ஸ்ருதி தயக்கத்தோடு ரேஷ்மியைப் பார்த்தாள்.
அந்த மாணவியோ அவளது தயக்கத்தை விருப்பமின்மையாக எண்ணிக்கொண்டாள்.
“ப்ளீஸ் ஸ்ருதி! என்னோட கசின்ஸ் எல்லாரும் உன் ஃபேன்ஸ்… நீ என்னோட க்ளாஸ்மேட்னு சொன்னதும் எவ்ளோ பொறாமைப்பட்டாங்க தெரியுமா? உன்னை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்படுறாங்க ஸ்ருதி… நீ வந்தா எனக்கு செம கெத்தா இருக்கும்பா… ப்ளீஸ் வாயேன்!”
அவள் கெஞ்சவும் ரேஷ்மி சம்மதம் சொல் என்று கண்ணசைக்க ஸ்ருதியும் அந்த மாணவியிடம் வருவதாக வாக்களித்தாள்.
அவர்கள் அகன்றதும் “இப்ப நம்ம போயே ஆகணுமா ரேஷ்?” என்று அவளிடம் கேட்டாள்.
“நீ கொஞ்சநாளா மூட்-அவுட்டா இருக்க ஸ்ருதி… அங்க போனா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவனு தோணுது”
ரேஷ்மியின் கூற்றும் சரியென பட்டது ஸ்ருதிக்கு. அன்னையிடம் அனுமதி பெற்றுவிட்டுக் கிளம்பலாமன முடிவெடுத்தாள்.
மதியவுணவு இடைவேளை முடியும் தருவாயில் அஜய் அவளது வகுப்புக்கு வந்தான். ஸ்ருதி அவனைத் தவிர்க்க எண்ணி வெளியே செல்ல எத்தனிக்க வழியை மறித்தவன்
“நீ ஒன் வீக்கா பேசலைனு அண்ணா சொன்னான்… என்னாச்சு ஸ்ருதி? எதுவும் பிரச்சனையா?” என்று விசாரித்தான்.
ஸ்ருதி அவனுக்குப் பதிலளிக்க சங்கடப்பட்டவளாக வகுப்பிலுள்ள மற்ற மாணவர்களை நோக்கினாள். பின்னர் தயக்கத்துடன்
“இனிமே நான் ரீல்ஸ் பண்ண வரலை அஜய்… அண்ணாவும் மேக்னா அக்காவும் பிரேக்கப் பண்ணுனது எனக்குத் தெரியும்… அன்னைக்கு அவங்க பேசுனதை நானும் ரேஷ்மியும் கேட்டுட்டோம்” என்றாள்.
அஜய் ஒரு நொடி அதிர்ந்தான். இவர்கள் கேட்டுக்கொண்டிருப்பதை கூட கவனியாது சண்டையிட்ட தனது தமையனின் முட்டாள்தனத்தை எண்ணி எரிச்சலுற்றான். அதை மறைத்தபடியே
“அது அவங்க பிரச்சனை ஸ்ருதி… அதுக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே” என்றான்.
ஸ்ருதி மறுப்பாக தலையசைத்தாள்.
“உன்னோட அண்ணா பேசுன விதம் தப்பு அஜய்… அக்காவ மோசமா ரீல்ஸ் பண்ண சொன்னார் தெரியுமா? அவங்க முடியாதுனு சொன்னதும் ரொம்ப மோசமா பேசுனார் அஜய்… எனக்கு அது சுத்தமா பிடிக்கல”
“அவங்க பெரியவங்க ஸ்ருதி… சோ கொஞ்சம் செக்சியா பண்ண சொல்லிருப்பார்… உன்னையும் அப்பிடி பண்ணச் சொல்லுவாரோனு யோசிக்கிறீயா?”
“ஆமா! அக்காவும் இதை தான் சொல்லி என்னை வார்ன் பண்ணுனாங்க”
அஜய் கடுப்பை மறைத்தபடி “அவங்க கண்டிப்பா சொல்லிருப்பாங்க… ஏன்னா அவங்களுக்கு உன்னைப் பார்த்து பொறாமை ஸ்ருதி” என்றான் குயுக்தியுடன்.
ஸ்ருதி நம்பாமல் பார்க்கவும் “ப்ராமிஸ் ஸ்ருதி… உன்னோட வீடியோஸ் அவங்களை விட வைரல் ஆனது, உன்னோட ஃபாலோயர்ஸ் இன்க்ரீஸ் ஆனதுலாம் அவங்களுக்குப் பொறாமை… அண்ணா கிட்ட இதை ஓப்பனா சொல்லிருக்காங்க தெரியுமா? அதோட உனக்கு இப்ப இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சிங்ல நிறைய இன்கம் வருதுல்ல, அதுவும் அவங்களுக்கு காண்டாயிடுச்சு… உன்னோட ப்ராண்ட் பார்ட்னர்சை அவங்களுக்கு இன்ட்ரோ குடுக்கச் சொல்லி அண்ணாவ டார்ச்சர் பண்ணுனாங்க… அவங்களை அவாய்ட் பண்ணுறதுக்காக செக்சியா ரீல்ஸ் பண்ணச் சொன்னார்… அப்பிடி சொன்னா அவங்க சைலண்ட ஆகிடுவாங்கனு நினைச்சார்… ஆனா அவங்க பிரேக்கப் பண்ணிட்டாங்க… இது தான் நடந்த உண்மை… எப்பிடியோ அவங்க ஆசைப்பட்ட மாதிரி உன்னை ரீல்ஸ் பண்ண விடாம தடுத்துட்டாங்க பார்த்தியா?” என்று விலாவரியாக பேசினான்.
“நான் சொன்னதை நம்பலைனா நீ லாஸ்டா போட்ட ரீல்சோட வியூவையும் அவங்க ரீல்சோட வியூவையும் கம்பேர் பண்ணி பாரு… நீ லீட்ல இருக்குறதால அவங்க உன் மேல பொறாமைப்பட்டது உண்மைனு உனக்குப் புரியும்” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தான்.
அவன் சென்றதும் ஸ்ருதி குழம்பிவிட்டாள். ஒருவேளை அஜய் கூறியது உண்மையாக இருக்குமோ என்று ஐயம் கொண்டவள் ரேஷ்மியிடம் இதை மறைக்காது கூறிவிட்டாள்.
ரேஷ்மியோ “மேகி அக்காவ பார்த்தா பொறாமைப்படுறவங்க மாதிரியா தோணுது? இது வரைக்கும் அந்த விஜய் உன்னோட இன்கம்ல ஃபார்ட்டி பர்சென்டேஜை எடுத்துக்கிட்டான் தானே… ஆனா நீ மேகி அக்காவோட ஸ்டூடியோவ யூஸ் பண்ணுனதுக்கு ஒரு நாளாச்சும் உன் கிட்ட அவங்க பணத்தை எதிர்பார்த்திருப்பாங்களா? அவன் சொன்னானு நீயும் என் கிட்ட வந்து இப்பிடி இருக்குமோனு கேக்குற” என்று கடிந்து தள்ளிவிட்டாள்.
அதன் பின்னர் தோழியர் இருவரும் அந்தப் பேச்சை விட்டுவிட்டு அடுத்த வகுப்பிற்கு தயாராயினர்.
மாலையில் வீட்டிற்கு திரும்புகையில் ரேஷ்மியையும் தன்னோடு வரும்படி அழைத்தாள் ஸ்ருதி.
“அவ உனக்குத் தானே இன்விடேசன் குடுத்தா ஸ்ருதி?” என ரேஷ்மி தயங்க
“சோ வாட்? நீ இல்லாம நான் எங்கயும் தனியா போகமாட்டேன்” என்று அவளைச் சம்மதிக்க வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.
ராதாவிடம் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழைக் காட்டி செல்லட்டுமா என ஆசையாக கேட்டாள் ஸ்ருதி.
ஆனால் ராதாவிற்கு தயக்கம்.
“இன்விடேசனே ரொம்ப காஸ்ட்லியா இருக்கு… பணக்காரப்பொண்ணா ஸ்ருதி? அங்கல்லாம் நீ போயே ஆகணுமா?” என்றவளிடம்
“அவ ரொம்ப ப்ளீஸ் பண்ணி கேட்டாம்மா… நான் ரேஷ்மிய வேற ரெடியாகச் சொல்லிட்டேன்” என்றாள் ஸ்ருதி.
ராதாவுக்குத் தயக்கம் அகலவில்லை. ஆனால் எப்போதும் வியாக்கியானம் பேசும் செண்பகவள்ளி இம்முறை ஸ்ருதிக்கு ஆதரவாகப் பேசினார்.
“அவ கூட படிக்கிற பிள்ளை வீட்டுக்குத் தான போறா? நாளைக்கு ஞாயித்துக்கிழமை தான்… போகட்டுமே ராதா” என்று அவர் பரிந்து பேசியதும் ஸ்ருதியின் முகம் ஒளிர்ந்தது.
ராதாவும் மாமியாரே தயங்கவில்லை என்றதும் ஸ்ருதிக்கு அனுமதி கொடுத்துவிட அவளும் புதிதாக வந்த அனார்கலியை அணிந்து கொண்டு தயாரானாள்.
தயாராகி வந்தவளைக் கண்டதும் ராதாவின் வதனம் யோசனையில் ஆழ்ந்தது.
“இந்த பேபி பிங்க் விட வேற எதாச்சும் கலர் செலக்ட் பண்ணேன்”
அவள் அவ்வாறு கூறவும் ஸ்ருதியின் முகம் களையிழந்துவிட்டது. தனது நிறத்திற்கு இது ஒவ்வாத வண்ணமென தாய் எண்ணுகிறாளோ என்ற கவலை!
செண்பகவள்ளி இதை கவனித்துக் கொண்டு தான் இருந்தார். முன்பெல்லாம் அவரும் கூட இம்மாதிரி நிறத்தேர்வு பற்றி குறிப்பு கொடுத்தவர் தான். ஆனால் இங்கிருந்த சில நாட்களில் வெண்மை நிற சருமத்திற்கு ஆதரவான தனது பேச்சு தன் மருமகளையும் பேத்தியையும் எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதை கண்கூடாக தெரிந்து கொண்டதால் கொஞ்சம் கொஞ்சமாக தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார் அவர்.
ஆனால் தன்னால் உருவான தாழ்வு மனப்பான்மை இன்னும் ராதாவின் உள்ளத்தை விட்டு அகலவில்லை என்றதும் சுருக்கென்று வலித்தது செண்பகவள்ளிக்கு.
உதாசீனமாக சொல்லும் வார்த்தைகள் மரக்கட்டையில் அடிக்கப்படும் ஆணிகளைப் போன்றவை. ஆணிகளை கஷ்டப்பட்டு மரக்கட்டையிலிருந்து அகற்றுவதைப் போல அந்த வார்த்தைகளுக்கு மன்னிப்பை கேட்டுவிட்டாலும் ஆணிகள் உருவாக்கிய துளைகளைப் போல அந்த வார்த்தைகள் உருவாக்கிய எதிர்மறை உணர்வுகள் நமது வார்த்தைகளுக்குச் சாட்சியாய் காலம் முழுவதும் நிலைத்திருக்கும்.
மருமகளின் தாழ்வுணர்ச்சியை மாற்ற முடியாது. ஆனால் அது பேத்தியைப் பாதிக்காது பார்த்துக்கொள்ளலாம் அல்லவா!
ஸ்ருதியிடம் வந்தவர் அவளது அனார்கலியைத் தொட்டுப் பார்த்தார்.
“பட்டு போல இருக்கு இந்த ட்ரஸ்… உடம்பை உறுத்தாம நைட் லைட் வெளிச்சத்துக்கு ரொம்ப அழகா இருக்கும்… போட்டோ எடுப்பாங்கல்ல ஸ்ருதி? அப்ப பாக்குறதுக்கு இன்னும் அழகா இருக்கும்… இதை போட்டு நீ வீடியோவே எடுக்கலையே… அந்தப் பொட்டிக்காரம்மா இன்னுமா உன் கிட்ட பேசல?” என்று பேத்திக்கு கடந்த வாரம் பொட்டிக் ஒன்றிலிருந்து இன்ஸ்டா விளம்பரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டதை நினைவுபடுத்தினார்.
கூடவே “இப்ப போற இடத்துல வச்சு வீடியோ எடுத்து போடு… அந்தம்மாவும் குடுத்தக் காசுக்கும் ட்ரஸ்சுக்கும் வேலை நடந்துச்சுனு சந்தோசப்படும்” என்றார் செண்பகவள்ளி.
ராதாவிற்கு மயக்கம் வராத குறை. ஸ்ருதியோ ஆச்சியைக் கட்டிக்கொண்டவள்
“தேங்க்யூ ஆச்சி… இது லாஸ்ட் வீக் க்ரீன் பொட்டிக்ல இருந்து குடுத்து விட்ட ட்ரஸ்… எனக்கே அது மறந்துடுச்சு பாருங்க… பர்த்டே பார்ட்டில வச்சு வீடியோ எடுத்து இன்ஸ்டால போட்டுடுறேன்… சூப்பர் ஐடியா உங்களோடது” என்று சொல்லிவிட்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.
இந்நிகழ்வு நடந்தேறிய போது வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பினான் முத்துகுமரன். ஸ்ருதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்வதை கேள்விப்பட்டதும் தனியே செல்லக்கூடாது என தடை விதித்தவன் ராதாவை உடன் செல்லுமாறு பணித்தான்.
“அவ கூட ரேஷ்மியும் போறா… சின்னப்பசங்க விழால பெரியவங்க போய் என்ன செய்யப்போறோம்?” என்று ராதா கூற செண்பகவள்ளியும் அதை ஆமோதித்தார்.
அந்நேரம் பார்த்து ரேஷ்மியும் வந்துவிட இருவரும் கிளம்பினர்.
வீட்டில் மூவர் மட்டும் மிச்சமிருக்க முத்துகுமரன் வழக்கம் போல ராதா கொடுத்த காபியை அருந்திவிட்டு தொலைக்காட்சியில் ஆழ்ந்தான். ராதாவோ அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சமையலறைக்குள் முடங்கிக்கொள்ள இவர்களிருவரையும் கவனித்தபடி அமர்ந்திருந்தார் செண்பகவள்ளி.
அவர் இங்கே வந்த தினத்திலிருந்து ராதாவுக்கும் முத்துகுமரனுக்கும் இடையே மற்ற தம்பதிகளைப் போல அன்னியோன்யம் இல்லை என்பதை புரிந்துகொண்டார்.
முத்துகுமரனால் பழையதை மறக்க முடியவில்லை என்ற எண்ணம் ராதாவை அவனிடம் நெருங்க விடுவதில்லை என்று புரிந்து கொண்டவர் அவர்களை இயல்பான தம்பதிகளாக மாற்ற தன்னால் இயன்ற முயற்சிகளை செய்யவும் தயங்கவில்லை.
இந்தப் பூவுலகில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப் போகிறோம்? இருக்கிற கொஞ்சநாட்களிள் பேத்தியின் பாசம், மகனின் அரவணைப்பு, மருமகளின் அக்கறையை அனுபவித்துவிட்டுத் தான் செல்வோமே என்ற நப்பாசை.
கூடவே தனக்குப் பின்னால் மகனும் மருமகளும் இவ்வாறு கடனே என்று வாழாமல் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ தன்னால் இயன்றதை செய்தே தீரவேண்டுமென்ற வைராக்கியம்.
சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த ராதாவிடம் சென்றவர்
“எதுக்குப் பாத்திரத்தை உருட்டுற ராதா? இன்னைக்கு நைட் ஸ்ருதி பிறந்தநாள் வீட்டுலயே சாப்பிட்டுடுவா… எனக்கு மதியம் பொங்குன சோறும் சாம்பாரும் இருக்கு… நீயும் குமாரும் வேணும்னா வெளிய போயிட்டு வாங்களேன்” என்று கூற ஒரு நொடி ராதாவின் கண்கள் மின்னியது.
பின்னரோ சலிப்பாய் மாறியது அவளின் முகம்.
“வெளிய போகணும்னு கேட்டாலே உங்க மகனுக்கு டயர்ட் வந்துடும்… கை கால் வலிக்கும்… ப்ச்! விடுங்கத்தை” என்றாள் சோர்வாக.
ஆனால் செண்பகவள்ளி அத்துடன் விடவில்லை. மகனிடம் சென்றவர் “நானும் வந்ததுல இருந்தே கவனிக்குறேன், நீ ராதாவை வெளிய எங்கயும் கூட்டிட்டுப் போனதே இல்ல… இந்த நாலு சுவத்துக்குள்ள இருக்குறதுக்கா அவளைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த? இன்னைக்கு உன் மகளுக்கு வெளிய தான் சாப்பாடு…. எனக்குச் சோறும் குழம்பும் இருக்கு… நீயும் ராதாவும் வெளிய போயிட்டு அப்பிடியே எதாச்சும் ஹோட்டல்ல சாப்பிட்டு வாங்கடா” என்றார் கட்டளையாக.
முத்துகுமரன் முதலில் தயங்கியவன் சமையலறை வாயிலில் நின்று ராதா ஆவலாக நோக்கவும் மனைவியின் மகிழ்ச்சிக்காக சம்மதித்துவிட்டான்.
“சரிம்மா… நீங்க தனியா இருந்துப்பிங்களா?”
“டிவிய போட்டு உக்காந்தா எனக்கு நேரம் போறதே தெரியாது… ஸ்ருதியும் எட்டு மணிக்கு வந்துடுவா… எங்களுக்குத் தூக்கம் வந்துச்சுனா உள்தாழ்பாள் போட்டுக்குறோம்… நீங்க பொறுமையா வாங்க”
பின்னர் ராதாவும் முத்துகுமரனும் ஒன்றாய் கிளம்பிச் செல்லவும் கண்கள் பனிக்கப் பார்த்தவர் “நெல்லையப்பா நான் தெரிஞ்சோ தெரியாமலோ என்ன தப்பு பண்ணுனாலும் மன்னிச்சிக்க… இவங்க இப்ப போற மாதிரியே ஒற்றுமையா இருக்கணும்பா… என் காலத்துக்கு அப்புறமும் இவங்க ஒற்றுமை குலைய கூடாது” என்று வேண்டிக்கொண்டார்.
கிளம்பும் முன்னர் ராதா அவரைப் பார்த்த பார்வையில் முன்பு போல் விலகல் இல்லை. அதுவே செண்பகவள்ளிக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரேயடியாக பாசத்தில் தன்னை மூழ்கடிக்கவில்லை என்றாலும் தன்னை விட்டு ஒதுங்கி செல்லாமல் வயதான காலத்தில் ஆதரவாக மருமகள் இருப்பாள் என்ற நம்பிக்கை அவருக்குள் துளிர்த்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

