“கண்காணிப்பற்ற சமூக வலைதளம் மற்றும் இணைய பயன்பாடு குழந்தைகளை மனரீதியாகப் பாதிக்கிறது என்கிறார் NIMHANS மனோஜ் குமார் சர்மா. தங்களது சமீபத்திய ஆய்வுகளை வைத்து பல தருணங்களில் சமூக வலைதள பயன்பாட்டால் குழந்தைகளிடம் நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியை ஏற்படுத்துகிறது என்கிறார். காரணம் தங்களைப் போல பதிவேற்றும் மற்ற குழந்தைகளின் வீடியோக்களுக்கு இருக்கும் பார்வைகள், லைக்குள் மற்றும் கமெண்ட்களை வைத்து தங்களின் தகுதியை குறைத்து மதிப்பிட்டு மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்கிறார் அவர்”
-சாரதா, தி நியூஸ் மினிட் – 25 பிப்ரவரி 2022
ஸ்ருதிக்கு இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கிவிட்டது. அவளது ஒரு வீடியோ வைரல் ஆனதில் கிட்டத்தட்ட ஏழே நாளில் மட்டும் அவளுக்கு வந்த ஃபாலோயர்களின் எண்ணிக்கை சுமார் நாற்பத்தேழாயிரத்திற்கும் அதிகம்.
அதிலும் ‘தமிழ்ப்பொண்ணு’ அடையாளம் அவளுக்கு இன்னும் கூட்டத்தை வரவழைத்தது என்றால் மிகையில்லை. இதோ இன்னும் சில நாட்களில் எழுபத்தைந்தாயிரத்தை தொடவிருக்கும் ஃபாலோயர்களின் எண்ணிக்கையோடு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சிங்கிலும் வருமானம் வரத் துவங்கியிருந்தது.
பெரும்பாலான சிறுதொழில் செய்பவர்கள், ஆரம்பநிலை தொழில் முனைவோர் தற்போது பெரும்பாலும் தங்களின் தொழிலுக்கான விளம்பரத்தூதுவர்களாக இன்ஸ்டாகிராம் பிரபலங்களையே பயன்படுத்துகின்றனர்.
காரணம் இளையதலைமுறைக்கு முன்பு போல தொலைகாட்சி மோகமில்லை. அவர்களது ஆறாவது விரலான மொபைல் தான் அவர்களுடைய முழநேர பொழுதுபோக்கு சாதனம் ஆகிவிட்டது. எனவே அவர்களைக் கவர மொபைல் செயலிகளைக் கொண்டு இயங்கும் சமூகவலைதளங்களும் அதன் பிரபலங்களும் சிறந்த வழியாகத் தெரிந்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஸ்ருதிக்கு முதல் முறையாக பி.ஆர் பேக்கேஜை விண்ணப்பித்து பிரபல அழகுசாத விற்பனை தளத்திலிருந்து பெற்று தந்தவன் விஜய் தான்.
முதல் முறை காவி வண்ண அட்டை டப்பாகளும் கவர்களுமாக வந்து இறங்கிய போது அவள் மலைத்துப் போய்விட்டாள்.
“இவ்ளோ ப்ராடக்ட்சும் எனக்கா?” கண்கள் விரிய கேட்டவளிடம்
“ப்ராடக்ட்சை சும்மா தூக்கிக் குடுக்கல… உனக்கு இருக்குற அறுபதாயிரம் ஃபாலோயர்சுக்காக குடுத்தது… இதை வச்சு நீ ரீல்ஸ் வீடியோ பண்ணணும்… கூடவே இந்த ப்ராடக்டை புரொமோட் பண்ணணும்… கெட் ரெடி” என்று அவள் செய்ய வேண்டியவற்றை விளக்கியது மேக்னா தான்.
அதன் பின்னர் பி.ஆர் பேக்கேஜ்கள் வருவது அதிகரித்தது. ராதாவுக்கு இதை காணும் போது மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. கணவனிடம் அவற்றை காட்டி பெருமைப்பட்டுக் கொண்டாள்.
“உங்கம்மா என்னமோ சொன்னாங்களே, சும்மா போனை பாத்து என் மகள் சிரிச்சிட்டு இருக்கா, படிக்காம வெட்டிவேலை செய்யுறானு… இப்ப பார்த்திங்களா அவளை நம்பி பெரிய பெரிய ப்ராண்ட்ஸ்லாம் பேக்கேஜ் அனுப்புறாங்க”
முத்துகுமரனுக்கு அதில் கருத்து சொல்ல இஷ்டமில்லை. சமீபகாலத்தில் ஸ்ருதியைக் கவனிப்பதால் ராதா மகாலெட்சுமியை மறந்து மகிழ்ச்சியாக இருப்பது போல தெரிந்ததால் மனைவிக்கும் மகளுக்கும் எது சந்தோசமோ அதை செய்யட்டும் என்று விட்டுவிட்டான்.
ஆனால் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கத் தவறவில்லை.
வெறும் பி.ஆர் மட்டுமே செய்து பொருட்களை வாங்கி அடுக்கிவைத்தால் என்ன இலாபம்? எனவே அடுத்தக் கட்டமாக ஸ்பான்சர் வீடியோ செய்ய அவளை ஊக்கினான் விஜய்.
“ஸ்பான்சர்னா பணமும் குடுத்து ப்ராடக்ட்சும் அனுப்புவாங்க… அது தான் உன்னை மாதிரி கிரியேட்டர்சுக்கு லாபம்… நீ வில்லிங்கா இருந்தா உனக்கு வந்திருக்குற சில ஸ்பான்சர் டீல்சை காட்டுறேன்” என்று இன்ஸ்டாகிராமில் அவளது பயோவில் விளம்பரத்திற்கு அணுகும்படி கொடுக்கப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரியில் ஸ்பான்சர் செய்வதற்காக வந்திருந்த மின்னஞ்சல்களை காட்டினான் அவன்.
அவை அனைத்தும் இளம்பெண்கள் அதிகமாக உபயோகிக்கும் ப்ராண்ட்களிடமிருந்து வந்திருக்க தொகையும் அதிகமாக இருக்கவே ஸ்ருதி தயங்காமல் ஒப்புக்கொண்டாள்.
கண்டேண்டுகளை அவளும் ரேஷ்மியும் சேர்ந்து உருவாக்குவார்கள். அதை வீடியோவில் பேசிக் காட்டுவது ஸ்ருதியின் வேலை. விளம்பரம் சம்பந்தப்பட்ட வேலைகள், ப்ராண்ட்டின் பி.ஆர் மேலாளர்களிடம் தொடர்பு கொள்ளும் அலுவல் வேலைகள் அனைத்தையும் விஜய் பார்த்துக்கொண்டான்.
இப்படியாக ஸ்ருதி தமிழ்நாட்டின் ரீல்ஸ் ஸ்டார்களில் பழக்கப்பட்ட முகமாக மாற ஆரம்பித்தாள். தினமும் பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடத்தைச் செய்கிறாளோ இல்லையோ ரீல்ஸ் வீடியோ செய்வதை நிறுத்தவில்லை அவள்.
தினசரி வீடியோக்கள், அதில் வரும் கமெண்ட்கள், அதிகரிக்கும் ஃபாலோயர்கள் என அவளது வாழ்க்கையே டிஜிட்டல் உலகில் தான் என்ற ரீதியில் இருந்தவளுக்கு இப்போது ‘ப்ராண்ட் அஃப்ளூயன்ஸ் மார்க்கெட்டிங்’குக்காக சில வாய்ப்புகளும் வந்தன. அது இன்ஸ்டாகிராமை விட யூடியூபில் அவளுக்கான வருமானத்தை ஈட்டித் தர ஆரம்பித்தன.
அதாவது அவளது வீடியோவில் சில குறிப்பிட்ட ப்ராடக்ட்களை அவள் பயன்படுத்தும் போது வீடியோவின் டிஸ்க்ரிப்சனில் அந்த ப்ராடக்ட்களை விற்கும் தளமோ, அல்லது அந்த ப்ராண்டோ ஒரு கூப்பன் கோட் அல்லது டிஸ்கவுண்ட் கோட் ஒன்றினை அவளது ஃபாலோயர்கள் அல்லது சப்ஸ்கிரைபர்களுக்காக பிரத்தியேகமாக வழங்குவார்கள்.
அந்த கூப்பன் கோடை பயன்படுத்தி ஃபாலோயர்கள் அத்தளத்தில் அந்தக் குறிப்பிட்ட ப்ராடக்டை வாங்கினால் ஸ்ருதிக்கு அதில் கமிசன் செல்லும். இவ்வாறு அவள் ஈட்டியதில் நாற்பது சதவிகிதத்தை அவளுக்காக வேலை செய்யும் விஜய் எடுத்துக்கொண்டான்.
மீதமுள்ள அறுபது சதவிகிதத்தில் ரேஷ்மிக்கு பத்து சதவிகிதம் போக ஐம்பது சதவிகித வருமானம் ஸ்ருதிக்கே. பதினைந்து வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்துவிட்ட பேத்தியைக் காணும் போது செண்பகவள்ளிக்கும் பெருமையாக தான் இருந்தது.
அவ்வபோது அவரது மொபைலுக்கு அழைக்கும் மகாலெட்சுமியிடம் பேத்தியின் பிரலாபங்களை அள்ளிவிட அவர் தவறுவதில்லை.
அதை கவனித்த பிறகு ஸ்ருதியும் ராதாவும் கூட அவரிடம் முன்பு போல முகம் காட்டுவதில்லை. அத்தோடு ஸ்ருதிக்குப் பள்ளியிலும் புகழ் தான்.
முன்பெல்லாம் அவளை மட்டம் தட்டும் அஞ்சனா கூட இப்போது தோழமைக்கரம் நீட்டினாள். ஸ்ருதி அந்தக் கரத்தைப் பற்றிக்கொள்ளவும் இல்லை. தட்டிவிடவுமில்லை. சிரிப்போடு கடந்துவிட்டாள்.
அவளை கறுப்பு என யாரும் கேலி செய்யவில்லை. இந்த ஒரு காரணம் போதும், அவள் ரீல்சை தொடர்வதற்கு என தனது செய்கைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டவளின் வாழ்வில் திருப்புமுனை நடந்தது விஜய் மேக்னாவின் காதல் முறிவில் தான்.
அன்று வழக்கம் போல மேக்னாவின் வீட்டிற்கு சென்ற போது அவளுக்கும் விஜய்க்கும் இடையே கடுமையான வாக்குவாதம் போய்க்கொண்டிருந்தது. அதை கேட்காமல் திரும்பிவிடலாமா என்று எண்ணிய ரேஷ்மியையும் ஸ்ருதியையும் தடுத்து நிறுத்தியது மேக்னாவின் குரல்.
“இத்தனை நாள் டீசண்டான கண்டெண்ட் தானே நடிச்சேன்… அதுலயே எனக்கு நிறைய ஃபாலோயர்ஸ் வந்திருக்காங்க… இப்ப திடீர்னு இந்த மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு நடிக்க சொல்லுறியே விஜய்? உனக்குக் கொஞ்சமாச்சும் என் மேல லவ் இருக்குதாடா? நீ லவ் பண்ணுற பொண்ணு இந்த மாதிரி செக்சியா ட்ரஸ் பண்ணிட்டு ‘ஓ அண்டாவா’னு கண்ணுல லஸ்டை கொட்டி நடிச்சா கமெண்ட்ல ஒவ்வொருத்தனும் என்னென்ன பேசுவான் தெரியுமா? ஏன்டா விஜய் புரிஞ்சிக்க மாட்ற? நமக்குத் தேவைக்கு அதிகமா காசு வருது… ரெண்டு பெரும் கபிள்ஸ் வ்ளாக் போட்டு ப்ராங்க் பண்ணி கூட வீடியோ போடலாம்… பட் இந்த மாதிரி ஐட்டம் சாங்குக்கு என்னை ரீல்ஸ் பண்ண சொல்லாத விஜய்”
“ஏய் என்னடி பெரிய ஒழுக்கச்சீலி மாதிரி பேசுற? எப்ப கேமரா முன்னாடி ரீல்ஸ் பண்ணலாம்னு வந்து நின்னியோ அப்பவே இதுக்குலாம் தயாரா இருக்கணும்டி… கமெண்ட்ல காஜியா பேசுறவனுக்காக நீ ஏன் ஐட்டம் சாங் ரீல்ஸ் பண்ண மாட்டேன்னு சொல்லுற? நீ புடவை கட்டி ஆடுனாலும் அவனுங்க உன்னை மானசீகமா கற்பழிக்குற மாதிரி தான் கமெண்ட் பண்ணுவாங்க… இதுல்லாம் தெரிஞ்சு தானே ரீல்ஸ் பண்ண ஆரம்பிச்ச… இப்ப என்ன புதுசா நியாயம் பேசுற?”
விஜயின் வாதத்தில் பதபதைத்துப் போனாள் மேக்னா. கூடவே வெளியே நின்று இதை கேட்டுக்கொண்டிருந்த ரேஷ்மியும் ஸ்ருதியும் தான்.
உள்ளே மேக்னா விசும்ப ஆரம்பித்தாள். ஏனெனில் அவளுக்கு நன்றாகத் தெரியும் ரீல்ஸ் கமெண்ட்கள் எல்லாம் வக்கிரமனமும் பாலியல் வறட்சியும் படைத்த ஆண்களின் ஆபாச வார்த்தை கழிவுகள் நிரம்பி வழியும் சாக்கடை என்று.
கொஞ்சம் மாடர்ன் உடை அணிந்து நட்சத்திர ஓட்டலின் நீச்சல்குளமருகே எடுத்த ரீல்ஸின் கமெண்டில் “எத்தனை பேர் கூட போய் இவ்ளோ பெரிய ஹோட்டலுக்குப் போறதுக்குக் காசு சம்பாதிச்சாளோ?” என்ற ரீதியில் கமெண்டுகள் வந்திருந்தன.
இன்னும் சில அதை காட்டிலும் அருவருக்கத்தக்கவை.
“நீ எத்தனை நாள் அங்க இருப்பனு சொல்லு, நானும் வர்றேன்… அமவுண்ட் மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ”
இந்தக் கமெண்ட் செய்தவன் ஒரு பெண் குழந்தையை தோளில் தூக்கியவாறு புரொபைல் படத்தில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்த பின்னிருபதில் இருக்கும் தந்தை.
“சினிமா ஆசை வந்துடுச்சு… அதான் ஹோட்டல் ஹோட்டலா ரூம் போட ஆரம்பிச்சிட்டல்ல” என்ற ரீதியில் கமெண்ட் செய்திருந்தவன் தனது சகோதரிகளுடன் பாசமாக போஸ் கொடுத்தபடி புரொபைலில் சிரித்த வாலிபன் ஒருவன்.
‘Every man is a potential rapist’ என்ற சொல்லாடலைக் கேட்டால் ‘not all men’ என பொங்கும் ஆண்வர்க்கத்தினர் தனது மனதில் இருக்கும் ஆபாச எண்ணங்களை இவ்வாறு ரீல்ஸ் செய்யும் இளம்பெண்கள், பதின்வயது சிறுமிகளின் கமெண்ட்களில் கொட்டி தங்களது மானசீகர நரகலை கழித்துக் கொள்கின்றனர்.
இதை நன்கு அறிந்தாலும் தூற்றுபவர்களைப் பற்றிய கவலையின்றி தான் இத்தனை நாட்கள் மேக்னா தொடர்ந்து ரீல்ஸ் செய்து வந்தாள். காரணம் அவள் ஒன்றும் ஆபாசமாக நடிக்கவில்லையே என்ற எண்ணம்.
ஆனால் இன்று விஜய் அதை செய்யும்படி கட்டாயப்படுத்தவும் அவளால் பொறுக்க முடியவில்லை.
“முடிவா நீ என்ன தான் சொல்லுற மேகி?”
“என்னால நீ சொல்லுற மாதிரி அசிங்கமா ரீல்ஸ் பண்ண முடியாது விஜய்”
பிடிவாதமாக கூறிவிட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் மேக்னா.
அவளது பதிலடியைக் கேட்டதும் விஜய் வெறிபிடித்தவனைப் போல கத்த துவங்கினான்.
“ஒன்னுமில்லாம இருந்த உன்னை ரீல்ஸ் ஸ்டாரா மாத்துனது நான் தான்… நான் சொன்னதை கேக்கலைனா அதோட விளைவுகள் பயங்கரமா இருக்கும்”
அவன் மிரட்டலைக் கண்டுகொள்ளாமல் “மரியாதையா வெளியே போ… இனிமே உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல… நான் இனிமே ரீல்ஸ் பண்ணுறேன், பண்ணாம போறேன்… அதை பத்தி நீ கவலைப்படாத” என்று கடினக்குரலி கூறி வாயிலைக் காட்டினாள்.
வெளியே நின்று கொண்டிருந்த ரேஷ்மியும் ஸ்ருதியும் அவசரமாக ஓடி ஒளிந்து கொண்டனர். விஜய் அங்கிருந்து கோபாவேசத்துடன் கிளம்புவதைப் பார்த்துவிட்டு ஸ்டூடியோவிற்குள் நுழைந்தனர்.
அங்கே மேக்னா விசும்பிக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஓடி சென்று அவளருகே அமர்ந்தனர்.
“அக்கா” ரேஷ்மி அழைக்கவும் கண்களை அவசரமாகத் துடைத்தாள் மேக்னா.
“நீங்க ரெண்டு பேரும் இங்க எப்ப வந்திங்கடா”
“நீங்களும் அண்ணாவும் சண்டை போட்டப்பவே வந்துட்டோம்கா” என்றாள் ஸ்ருதி.
மேக்னா தவிப்புடன் அவர்களை ஏறிட்டாள்.
“நீங்க ரெண்டு பேரும் என்ன கேட்டிங்கனு எனக்குத் தெரியலை… ஆனா ரீல்ஸ்ங்கிற பேருல எப்பவும் உங்க வயசுக்கு மீறுன கண்டெண்டை பண்ணாதிங்கடா… எனக்கும் விஜய்கும் இனிமே சம்பந்தம் இல்ல… அதுக்காக நீங்களும் அவன் கூட கான்டாக்டை கட் பண்ணிடுங்கனு சொல்லமாட்டேன்… ஆனா அவன் சொன்னதுக்காக எப்பவும் உங்க மனசுக்குச் சரினு தோணாத எதையும் செய்யாதிங்க… உன்னோட ரீல்ஸ் உன் நடிப்புத்திறமைய டான்ஸ் திறமைய காட்டணுமே தவிர இந்தச் சின்ன வயசுலயே நீ பெரிய மனுசியாட்டம் செக்சியா நடிக்க தயாராயிட்டனு வக்கிரம் பிடிச்சவங்க பேசுற மாதிரி இருக்கக்கூடாது… சரியா?”
தன்னால் முடிந்த அறிவுரையை வழங்கினாள் அவள். ஸ்ருதியின் மனதில் ஆயிரம் கேள்விகள்.
“அக்கா! ரீல்ஸ் வீடியோல அசிங்கமா கமெண்ட் பண்ணுவாங்கனு சொன்னிங்கல்ல, அது ரொம்ப அசிங்கமாவா இருக்கும்?”
“நீ இது வரைக்கும் உன் ரீல்ஸ்ல வர்ற கமெண்ட்ஸை படிச்சதில்லையா?”
“இல்லக்கா… எனக்கு அதுக்குல்லாம் டைம் இல்ல”
“ஒன்னு தெரிஞ்சிக்க ஸ்ருதி, உன்னோட வீடியோவ நீ மட்டும் ஷேர் பண்ணுறதில்ல, நீ இன்ஸ்டால அப்லோட் பண்ணுனதும் ஆட்டோமேட்டிக்கா ஃபேஸ்புக்லயும் அது அப்டேட் ஆகிடும்… அதை சில ட்ரால் பேஜஸ் எடுத்து அவங்க சேனல் ஆர் ஃபேஸ்புக் ரீல்ஸ்ல போடுவாங்க…. அதுல வர்ற கமெண்ட்சை நீ படிச்சுப் பார்த்தேனா அடுத்த தடவை ரீல்ஸ் செய்யுறதுக்கு நீ யோசிப்ப… அவ்ளோ அசிங்கமா இருக்கும்மா… இதை நான் முன்னாடியே ஏன் உன் கிட்ட சொல்லலைனா நீயும் என்னை மாதிரி டீசண்டா தான் ரீல்ஸ் பண்ணப் போறேனு விஜய் சொன்னான்… சின்னப்பொண்ணாச்சே, உன் ஆர்வத்தை குறைக்க வேண்டாமேனு தான் நான் இந்த கமெண்ட்ஸ் ப்ராப்ளம் பத்தி பேசலை… ஆனா இப்ப ஏன் பேசுறேனா இன்னைக்கு என்னை கட்டாயப்படுத்துற மாதிரி உன்னையும் விஜய் கட்டாயப்படுத்தலாம்… அப்ப நீ ஃபேமஸ் ஆகணும்ங்கிறதுக்காக வல்கரான வீடியோ எதையும் செஞ்சுடக்கூடாது ஸ்ருதி… உங்கம்மா உனக்காக உன் ஃபாதர், க்ரானி கிட்ட எவ்ளோ சண்டை போட்டாங்கனு யோசிச்சுப் பாரு… சுதாரிப்பா இரு ஸ்ருதி… ரேஷ்மி நீ இவளை கைட் பண்ணு”
அதோடு இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர். ஸ்ருதிக்கு வீட்டுக்கு வந்த பிறகும் மேக்னா கூறிய கமெண்ட்ஸ் நினைவுகள் தான்.
ராதா அவளுக்கு தேநீர் கொடுக்கவும் வாங்கிக் கொண்டவள் “ஸ்ருதி ஆச்சி கிட்ட வர்றியா? தலைக்கு எண்ணெய் வச்சு விடுறேன்… முடி செம்பட்டையா இருக்கு பாரு” என்று அழைத்த செண்பகவள்ளியிடம் வாக்குவாதம் செய்யாமல் அவரருகே அமர்ந்தாள்.
ஆவி பறக்க இருந்த தேநீரை வாயால் ஊதி ஊதி அருந்தியபடி இன்னொரு கையால் மொபைலை நோண்ட ஆரம்பித்தாள்.
மேக்னா கூறியபடி தனது ரீல்சை பகிர்ந்திருந்த சில பக்கங்களுக்குச் சென்று கமெண்ட்களை வாசிக்க ஆரம்பித்தவள் முதல் கமெண்டை வாசித்ததும் குடித்துக் கொண்டிருந்த தேநீரை அதிர்ச்சியில் தவறவிட அது அவளது மடியிலேயே கொட்டி தொடையில் சூடு போட்டு காயப்படுத்தவே “அம்மாஆஆ” என்ற அலறலுடன் மொபைலை தரையில் போட்டுவிட்டு துடிக்க ஆரம்பித்தாள்.
ராதாவும் செண்பகவள்ளியும் பதற ஸ்ருதியோ கமெண்ட் உண்டாக்கிய அருவருப்பு கொடுத்த வலியோடு கொதிக்கிற தேநீர் உண்டாகிய காயத்தின் வலியையும் அனுபவித்தபடியே கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
முதல் புள்ளானது இத்தனை நாட்கள் பொய்கை என்று எண்ணிய கானலின் உண்மை ரூபத்தை அருகில் சென்று பார்த்த அதிர்ச்சியில் துடிக்க ஆரம்பித்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

