மாலையில் மலைமுகடுகளுக்குள் அடைக்கலமானக் கதிரவன் முகடுகளைச் சூழ்ந்திருக்கும் மஞ்சுமேகங்களைச் செல்லமாக விரட்டியபடி மீண்டும் பூமிப்பெண்ணைத் தனது வெண்கதிர்களில் நனைப்பதற்காக உதயமானான். பறவைகளின் கீச் கீச்சென்ற கானமும், தொலைவில் தொம் தொம்மென்று மத்தளம் கொட்டுவது போல ஒலித்த அருவியின் மெல்லிய இரைச்சலுமாய் அந்தக் காலை பொழுது இனிமையாய் புலர்ந்தது.
ராகவ் இந்தக் கானங்களில் கண் விழித்தவன் தனது மார்பில் மாலையாய்ச் சாய்ந்துறங்கும் அவந்திகாவின் முகத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் கூந்தலை நீவிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டதில் அவன் தாடியின் குறுகுறுப்பில் கண் விழித்தாள் அவள்.
தன்னெதிரே இருந்தவனின் அழகிய வதனத்தில் மின்னும் குறுஞ்சிரிப்பு எப்போதும் போல அன்றும் அவளை வசீகரித்தது. கூடவே நேற்றைய இரவு அவர்களின் காதலுக்கான அழகான அடையாளமாய் மாறியிருக்க நேற்றைய வெட்கம் இன்னும் மிச்சமிருந்தது அவளிடம்.
“குட் மார்னிங் ஜான்சிராணி” என்றவனைப் பார்த்துப் புன்னகைத்தவள் பதிலுக்கு ஒரு குட் மார்னிங்கைப் போட்டுவிட்டுக் கலைந்து கிடந்த கூந்தலை உச்சியில் நாட்டாகப் போட்டுவிட்டுச் சோம்பல் முறித்தாள்.
ராகவ் அவள் சோம்பல் முறிக்கும் அழகில் சொக்கிப் போனாலும் அவளைச் சீண்டாமல் ஜென்மசாபல்யம் அடையாதவனாயிற்றே அவன். குறும்பாக அவளைப் பார்த்தவன்
“சரியான சோம்பேறி நீ… கெட் அப்… போய் ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வா… நம்ம வாட்டர் ஃபால்சுக்குப் போவோம்” என்று சொல்லி அவளை அவசரப்படுத்தினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவள் சோம்பலாக உள்ளது என்று சொல்லவே கையோடு தூக்கிச் சென்றவன் பிரஷ்ஷை அவளிடம் நீட்ட அவள் கடமையே என்று பல்லைத் துளக்கினாள்.
“ஒழுங்கா பிரஷ் பண்ணு ஜான்சி ராணி”
“அதுல்லாம் போதும்.. யானை, சிங்கம்லாம் பல் தேய்க்குதா என்ன?” என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு முகத்தைக் கழுவ ஆரம்பித்தாள் அவந்திகா.
அதன் பின்னர் இருவரும் காபி போடுவதாகச் சொல்லி சமையலறையில் கலாட்டா செய்துவிட்டு வெறும் இரண்டே கோப்பை காபியை முக்கால் மணிநேரமாகப் போட்டுக் கொண்டிருந்தனர். இடையே அவந்திகாவுக்கு வீட்டு நினைவு வரவே தாங்கள் இங்கே வந்ததை குடும்பத்தினருக்கு இன்னும் சொல்லவேயில்லை என்பது அவளது புத்தியில் உறைத்தது.
ராகவிடம் வீட்டாரை அழைத்து விவரத்தைச் சொல்லுமாறு கூறவும் அவன் வருணின் எண்ணுக்கு அழைத்தான். ராகவின் அழைப்புக்காகக் காத்திருந்தது போல எடுத்தவுடனே வெடிக்க ஆரம்பித்தான் வருண்.
“என்னடா நினைச்சிட்டிருக்க? நீ அப்ராட் போயிட்டேனு நினைச்சு வில்லாக்கு கால் பண்ணுனா அங்கே நீங்க இன்னும் வரலைனு சொல்லுறாங்க… எங்கே தான் இருக்கிங்க ரெண்டு பேரும்? ரெண்டு குடும்பமும் கலங்கிப் போயிருக்காங்க ராகவ்”
“பய்யா நானும் அவந்திகாவும் நம்மளோட ஃபாரஸ்ட் சைட் கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கோம்… டோண்ட் ஒரி வீ ஆர் சேஃப்”
“அதை இப்போ சொல்லு… இங்கே ரதி, அம்மா, சித்தினு எல்லாரும் ஒரே புலம்பல்… பாட்டியும் அப்பா, சித்தப்பாவும் வெளியே காட்டிக்கலை… கௌசி ஆன்ட்டி எத்தனை தடவை கால் பண்ணிட்டாங்க தெரியுமா?” என்று படபடத்தவனிடம் ராதிகா போனைக் கேட்பது மறுமுனையில் ராகவிற்கு கேட்டது.
அடுத்து ராதிகா புலம்ப ஆரம்பித்துவிட்டார். பின்னர் ஒவ்வொருவராக வந்து பேச இறுதியாக ரித்திமாவும் பிரதியுஷாவும் அழாதக்குறையாக அவந்திகாவிடம் பேச ஆரம்பித்தனர்.
“நீயாச்சும் ஒரு கால் பண்ணிருக்கலாமே ஹனிபி” என்றவர்களின் வார்த்தையில் ஆதங்கத்துடன் அக்கறையும் அன்பும் கொட்டிக்கிடக்கவே எப்போதும் போல அவந்திகாவுக்குக் கண்கள் கலங்கிப் போனது. ஒரு வழியாக கர்ப்பவதி அழக்கூடாது என்று என்னவெல்லாமோ சொல்லி இருவரையும் சமாதானம் செய்தவள் தாமதிக்காமல் கௌசல்யாவுக்கு அழைத்து தாங்கள் இருவரும் இருக்குமிடத்தைப் பற்றிய விவரத்தைச் சொல்லிவிட்டாள்.
கூடவே நான்கு திட்டுகளையும் போனசாகப் பெற்றுவிட்டு அர்ஜூன் அம்புஜாவிடம் கொஞ்சிவிட்டுப் போனை வைத்தாள் அவள்.
தன் எதிரே நின்றபடி பால் கலக்காத காபியைச் சுவைத்துக் கொண்டிருந்தவனின் கையில் அடித்தவள் “உன்னால தான் எல்லாமே” என்று முறைத்தபடி கூறியவள் தானும் ஒரு கோப்பையில் காபியை ஊற்றிச் சுவைக்க ஆரம்பித்தாள்.
ராகவ் அதைக் கண்டுகொள்ளாமல் தோளைக் குலுக்கவே கடுப்புடன் “அடேங்கப்பா! உன்னை மாதிரி கல்லுளிமங்கன் இந்த உலகத்துல இது வரைக்கும் பிறந்திருக்கவே மாட்டான்டா… இனியும் பிறக்கிறதுக்கு வாய்ப்பில்லை” என்று சொல்லிவிட்டு காபியை அருந்த தொடங்கினாள்.
அங்கே இரு குடும்பத்தினரையும் கலங்கவைத்துவிட்டு இவ்வளவு அலட்சியமாகத் தோளைக் குலுக்குகிறானே என்ற கடுப்பு தான் அவளுக்கு.
ராகவ் குறும்புடன் அவளைப் பார்த்தவன் “இது வரைக்கும் பிறக்காம இருக்கலாம் ஜான்சி ராணி… ஆனா இனிமே பிறக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு” என்று சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்ட அவந்திகா அவனுக்குப் பழிப்பு காட்டிவிட்டு
“இந்த வாய் பேசுறதுக்கு உனக்குக் கண்டிப்பா பெண்குழந்தை தான் மகனே” என்றாள் கேலியாக.
ராகவ் தலையை மறுப்பாக அசைத்தவன் “எனக்குப் பையன் தான் பிறப்பான் ஜான்சிராணி” என்று அமர்த்தலாக மொழியவே
“நோ வே! எனக்குப் பொண்ணு தான் வேணும்… என் பொண்ணை நான் அஜ்ஜூவுக்கு மேரேஜ் பண்ணி வைக்கலாம்னு பிளான் போட்டிருக்கேன் மேன்.. நீ ஏடாகூடமா எதுவும் பேசாதே” என்று தனது வருங்காலக்கனவுகளைக் கூறினாள் அவந்திகா.
“வாட்? அது எப்பிடி சாத்தியம் ஜான்சிராணி? எங்கள்ல அப்பிடி ஒரு பழக்கமே இல்லையே”
“ஆனா எங்கள்ல இருக்கே…. அக்காப்பொண்ணைக் கட்டுறது எங்க கலாச்சாரத்துல வழக்கமா நடக்கிறது தான்” என்று சொல்லவே இன்னும் ராகவுக்கு அந்தப் பழக்கம் புரிபடவில்லை.
அதே நேரம் அவனது கனவான ஆண்குழந்தை என்பதையும் அவனால் விட இயலவில்லை.
“நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ ஜான்சிராணி! நமக்குப் பையன் தான் பிறப்பான்… நான் அவனுக்கு நேம் கூடச் செலக்ட் பண்ணி வச்சிட்டேன்” என்று ஆணித்தரமாகச் சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கோப்பைகளை அலம்பி வைத்தாள் அவந்திகா.
“என்ன நேம்னு கேக்க மாட்டியா?” என்றபடி அவளிடம் வந்தவன் அந்தக் கோப்பைகளை அவளிடமிருந்து வாங்கி அவளுக்கு உயரத்தில் உள்ள அலமாரி எட்டாது என்பதால் அவனே வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
அவந்திகாவின் பார்வையில் பெயரைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் தெரியவே “என் பையனோட நேம் அபிமன்யூ” என்று சொன்னவன் அந்தப் பெயரை உச்சரிக்கும் போதே உள்ளுக்குள் இனம்புரியா உணர்வை அனுபவித்தான் என்றால் மிகையில்லை.
அவந்திகாவுக்கும் அது மிகவும் பிடித்தமான பெயரே. எனவே அந்தப் பெயரைச் சரியென்று ஏற்றுக்கொண்டாள். அதே நேரம் ஆண்குழந்தை என்ற ராகவின் ஆணித்தரமான நம்பிக்கை அவளுக்கு விசித்திரமாக இருந்தது.
“இப்பிடியே யோசிச்சிட்டே இருக்கப்போறியா ஜான்சி ராணி? கிளம்பு! வாட்டர் ஃபால்சுக்குப் போவோம்” என்று அவளை இழுத்துக் கொண்டு வெளியேறினான் ராகவ்.
இருவரும் வீட்டை அடைத்துவிட்டு கானகத்தினுள் செல்லும் வழியை நோக்கி ஒன்றாய் கரம் கோர்த்தபடி நடக்க ஆரம்பித்தனர். அவர்களை வரவேற்கும் இனிய நாதமாய் அருவியோசை தூரத்தில் முழங்கிக் கொண்டிருந்தது.
எந்தக் கானகத்தில் அவர்களுக்கிடையே பலவிதக் கருத்துவேறுபாடுகளும், மோதலும் நிகழ்ந்ததோ அதே கானகத்தில் இன்று காதல் பறவைகளாய் நடைபோட்டனர் அவந்திகாவும் ராகவும்.
இறைவனின் கணக்கில் யாருக்கு யாரென்று இருக்கிறதோ அது தான் நடக்குமென்பதற்கு உதாரணமாய் இரு வேறு உலகங்கள், வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள் இதையெல்லாம் கடந்து ஒன்று சேர்ந்த இவ்விருவரின் வாழ்க்கைப்பயணம் இதே நம்பிக்கை மற்றும் புரிதலுடன் இனிதே தொடரும்….
நேசம் இனிதே நிறைவுற்றது!!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


