அழகிய மாலை பொழுதை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது வானில் மறையும் சூரியனின் ஆரஞ்சு வண்ணக் கதிர்கள். காலை நேரத்தைப் போல் அல்லாது இப்போது மனிதத் தலைகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்தது அம்மண்டபத்தில். மணமகளின் அறையில் தங்கநிற லெஹங்காவில் ஆபரணக்குவியலாய் தயாராகியிருந்தாள் அவந்திகா.
அந்த ஆபரணங்களின் மத்தியில் மின்னியது காலையில் கழுத்தில் ஏறிய மஞ்சள் கயிற்று மாங்கல்யம். அதைக் காணும் போதே உள்ளுக்குள் குதூகலம் பொங்கி ஊற்றெடுத்தது. அதோடு கல்யாணிதேவி அன்புடன் ஆசிர்வதித்துக் கொடுத்த ஆரமும் கழுத்தைத் தழுவியிருந்தது. ரித்திமாவும் பிரதியுஷாவும் அவளுடன் இருந்து பியூட்டிசியனுக்கு யோசனைகளை வாரி வழங்கி கொண்டிருந்தனர்.
வர்ஷா அப்போது தான் வந்தவள் “வாவ்! கல்யாணப்பொண்ணு எல்லா கெட்டப்பிலயும் சூப்பரா இருக்காப்பா” என்று கேலி செய்தவாறே முக்கியக்கடமையான செல்ஃபி எடுக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தாள்.
அர்ஜுன் அம்புஜாவுடன் சேர்ந்து மண்டபத்தில் உள்ள ஜனக்கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் வெளியே கார்கள் வரும் சத்தம் கேட்கவே “அம்பு ஜீஜூ வீட்டில இருந்து வந்துட்டாங்க” என்று உற்சாகமாக உரைத்துவிட்டு ஓட அம்புஜா பேரனைத் தொடர்ந்தார்.
வாயிலில் மருமகனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல காத்திருந்த கௌசல்யா வேகமாக வந்து கொண்டிருந்த அர்ஜூனையும் அம்புஜாவையும் பார்த்தவர் ரகுவரனிடம் “உங்க மகனுக்கும் அம்மாவுக்கும் ரன்னிங் ரேஸ் நடக்குது போல” என்று கேலி செய்ய
“பேருக்குத் தான் அவன் என் மகன்… ஆனா அப்பிடியே அவன் அம்மாவோட ஜெராக்சா இருக்கான்… அதான் எல்லாரையும் பின்ன சுத்த விடுறதுல அவனுக்கு இவ்ளோ ஆர்வம்” என்று கௌசல்யாவைப் போகிற போக்கில் கலாய்க்க அதற்குள் ராகவின் குடும்பத்தார் வந்துவிடவே இருவரும் புன்னகை பூத்த முகத்தினராய் அவர்களை வரவேற்றனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ராகவ் அவந்திகாவின் உடைக்குப் பொருத்தமாகத் தங்கவண்ண ஷெர்வானியில் கம்பீரமாய் வந்து நின்றவன் மறக்காமல் மாமனார் மாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள அவனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார் கௌசல்யா.
மாலை நேரத் திருமணத்துக்கு நெருங்கிய சொந்தங்கள், தொழில்முறை நண்பர்கள், தலைமை அலுவலக ஊழியர்கள் என பெரும்படையே திரண்டு இருவரையும் வாழ்த்த வந்திருந்தது என்றால் அது மிகையில்லை.
வருணும் கிஷோரும் தத்தம் மனைவியரைத் தேடி மணமகள் அறைக்குச் சென்றவர்கள் லெஹங்கா மற்றும் ஆபரணக்குவியலுக்குள் புதைந்திருந்த அவந்திகாவைச் சற்று சிரமப்பட்டுக் கண்டுபிடித்தனர்.
“நீ கொஞ்சம் வளர்ந்திருக்கலாம் அவந்திகா” என்ற அச்சகோதரர்களின் கேலியைக் கேட்டதும் வாயைக் காது வரை இழுத்துவைத்து முப்பத்திரண்டு பற்களையும் காட்டியவள்
“இவ்ளோ சிரிச்சா போதுங்களா சார்?” என்று பதிலுக்கு அவர்களை நக்கல் செய்துவிட்டு
“ஏய்! உங்க ஹப்பிகளை இங்கே இருந்து கூட்டிட்டுப் போங்கடி… இவனுங்க குடும்பத்துல எல்லாரும் மூனு வேளையும் காம்ப்ளானா குடிச்சு வளரத் தெரியாம வளர்ந்து வைப்பாங்களாம்… கேட்டா நம்ம குள்ளம்னு கிண்டல் பண்ணுவாங்களாம்” என்று படபடக்க
சகோதரர்களைப் பின் தொடர்ந்து வந்திருந்த அமர் “நீ பத்து வயசுக்கு அப்புறம் வளராமப் போனதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும் அவந்திகா?” என்று பதிலுக்குக் கேலி செய்ய அந்த அறையில் கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் போனது.
அனைத்துமே மணப்பெண்ணை மணமேடைக்கு அழைக்கும் வரை தான். பிந்துவும் நேகாவும் வந்து அவந்திகாவைத் தங்களுடன் அழைத்துச் செல்லவும் அனைவருமே அவர்களைப் பின் தொடர்ந்து மண்டபத்தின் ஹாலுக்கு வந்துவிட்டனர்.
காலையில் அம்புஜாவின் மனம் பேத்தியின் மணக்கோலத்தைக் கண்டு நிறைந்ததென்றால் மாலையில் சுமித்ராவின் மனம் பேரனின் திருமணத்தைக் காணப்போகும் மகிழ்ச்சியில் கூத்தாடியது.
அவர்கள் பாரம்பரியப்படி நெற்றியில் செந்திலகம் மின்ன, கம்பீரத்துக்கும் ஆளுமைக்கும் இலக்கணமாய் ராகவும், அவனருகில் அவனுக்காகவே பிறந்தவளைப் போல அழகுச்சிலையாய் அவந்திகாவும் அவரது மனதில் ஆழப்பதிந்து போயினர்.
ராதிகா வீணா மற்றும் பிரியாவுடன் மணமேடையில் நின்றுகொண்டு புரோகிதர் சொல்லும் விஷயங்களை அவந்திகாவுக்குப் புரியும்படி விளக்கிக் கொண்டிருந்தார். அதே நேரம் மோகன் ரகுவரனுக்குத் தங்கள் சடங்குகளின் தாத்பரியத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
வாசந்தி மற்றும் ரவீந்தர் தம்பதியினரும் மைதிலி மற்றும் ராஜ்வர்தன் தம்பதியினரிடம் மண்டபத்தின் அலங்காரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருக்க ராஜ்வர்தனின் பார்வை அவரது புத்திரன் ரன்வீரின் மீது படிந்து மீண்டது.
அவந்திகாவின் சகோதரனாக, ராகவிற்குச் செய்யவேண்டிய சடங்குகள் அனைத்தையும் அவனே செய்து முடித்துவிட்டு மணமேடையின் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தவனின் விழிகள் அவனுக்கு எதிர்த்திசையில் நின்று பிந்துவிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்த நேகாவைத் தொட்டு மீண்டது.
இதை இரு குடும்பத்தினரும் கவனித்துவிட நிரஞ்சன் குணாலிடம் “அண்ணா! அடுத்தக் கல்யாணத்துக்கு ஜோடிகள் தயாராயிட்டாங்கனு நினைக்கிறேன்… எப்பிடியோ ரன்வீர் மாதிரி மருமகன் கிடைச்சா நானும் வீணாவும் கொஞ்சம் நிம்மதியா மூச்சு விடுவோம்” என்று சொல்லி ஆசுவாசம் அடைந்தார்.
அதே நேரம் மணமக்கள் இருவரும் தமக்குள் பேசிக்கொண்டனர்.
“அது என்ன ஆளை முழுங்குற மாதிரி பார்க்கிற ஜான்சி ராணி?”
“காலையில நீ பார்த்தியே! நான் எதாச்சும் சொன்னேனா? அதே மாதிரி நீயும் கம்முனு இருடா… கொஞ்சமாச்சும் என்னை சைட் அடிக்க விடு”
“எனக்கென்ன? நீ என்னை குறுகுறுனு பார்க்கிறதை கௌசிம்மா கவனிச்சிட்டே இருக்காங்க… எப்போ வேணும்னாலும் அவங்க உன் மாலையைச் சரி பண்ண வருவாங்க” என்று காலையில் அவள் கழுத்தில் கிடந்த மாலையைச் சரி செய்தபடி அவளுக்கு டோஸ் விட்டதை நினைவுறுத்தினான் ராகவ்.
அதன் பின்னரும் அவனைப் பார்த்துக் கொண்டேயிருக்க அவள் என்ன முட்டாளா?
அதோடு புரோகிதர் வேறு மணமக்களை மாலை மாற்றிக்கொள்ளுமாறு கூற அவனது கழுத்தில் மாலையிடும் போது கூட அவந்திகாவின் விழிகள் அவன் கழுத்துக்கு மேல் உயரவில்லை. இருவரும் மாலை மாற்றிவிட்டு அமர்ந்த பின்னர் கௌசல்யாவும் ரகுவரனும் அவளைத் தாரை வார்த்துக் கொடுக்க பிந்து இருவரின் உடைகளின் நுனியையும் முடிச்சிட்டாள்.
அடுத்து இருவரும் சுற்றியிருந்தவரகள் தூவிய மலர்த்தூவலில் நனைந்தபடி சப்தபதிக்கு ஹோமகுண்டத்தை வலம் வர ஆரம்பித்தனர். அதை முடித்து அமர்ந்தவர்கள் புரோகிதர் சொன்ன மந்திரங்களை உச்சரித்தனர் பயபக்தியுடன்.
அடுத்து மாங்கல்ய தாரணத்துக்கான நேரம். புரோகிதர் கருகமணியை எடுத்து நீட்ட அதைப் பெற்றுக் கொண்ட ராகவ் அவந்திகாவின் கழுத்தில் அதைக் கட்டி மீண்டும் தான் அவளனவனாகி விட்டதை சபையாருக்குத் தெரிவித்தான்.
திருமணம் நல்லபடியாக முடிவுற்று விருந்தினர்களின் வாழ்த்து மழையில் நனைந்த தம்பதியினர் அடுத்து கபூர் பேலஸிற்குத் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கும் நேரம். அவந்திகாவுக்குக் கௌசல்யாவையும் ரகுவரனையும் விட்டுச் செல்லப் போகும் எண்ணத்தில் மூக்கு விடைத்து அவள் அழுகைக்குத் தயாராக, அவள் காதருகில்
“ஷ்ஷ்! ஜான்சி ராணி! நானும் என் ஃபேமிலியும் சிங்கமா புலியா? எதுக்கு இப்போ அழ ஆரம்பிக்கிற?” என்று கடிந்து கொள்ள
அவந்திகா “ஷட் அப்! நீ இத்தனை வருசம் வாழ்ந்த வீட்டை விட்டு வந்தா தான் உனக்குப் புரியும் இடியட்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தை விழுங்க முயன்றாள்.
அதற்குள் இருவரது முகபாவனையும் ஏதோ போருக்குத் தயாராவது போல மாறியதால் சுதாரித்த பிரதியுஷா “ஹனிபி! லேட் ஆகுது… நீயும் ராகவும் கார்ல உக்காருங்க” என்று கட்டளையிட அதற்கு மேல் அவனை எதுவும் சொல்ல முடியாதவள் வெறும் முறைப்புடன் நிறுத்திக் கொண்டாள்.
கபூர் பேலஸை அடைந்து இன்னும் சில பல சடங்குகளும் முடிந்து ராகவின் அறையை அடைந்த பின்னரும் இருவரும் சண்டைகோழிகளாகச் சிலிர்த்துக் கொண்டபடி தான் இருந்தனர்.
ராகவ் அவளுக்கு உடைமாற்றும் இடத்தை மட்டும் கை காட்டிவிட்டுச் சென்று விட அவள் முதலில் கிலோ கணக்கில் கனத்த அந்த லெஹங்காவிலிருந்து தனது வழக்கமான இரவுடைக்கு மாறியவளின் கழுத்தை உறுத்தியது மஞ்சள்கயிறும் கருகமணியும்.
இரண்டையும் டிசர்ட்டுக்குள் போட்டுக்கொண்டபடி அவனது அறையில் தொலைக்காட்சி இருக்குமிடத்துக்குச் சென்றவள் செல்லும் வழியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மெத்தை சுத்தம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்து தொலைகாட்சியில் அதில் ஒளிபரப்பான பாடலைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
சிறிது நேரத்தில் ராகவும் அவள் அருகில் வந்து அமர்ந்து கொள்ள மீண்டும் அவள் முகம் முறைப்பைத் தத்தெடுத்துக் கொண்டது. ஆனால் அதிகநேரம் அப்படி இருக்க முடியாதவாறு தொலைக்காட்சியில் அவந்திகாவின் ஆதர்ச கதாநாயகனின் பாடல் அர்ஜித்சிங்கின் மயக்கும் குரலுடன் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
அவந்திகாவுக்கு அந்தப் பாடல் தங்களுக்காகவே எழுதப்பட்டதைப் போல தோண வாய்க்குள் முணுமுணுத்தபடி ரசிக்க ஆரம்பித்தாள்.
ராகவிற்கு மொழி புரியாவிட்டாலும் இசைக்கு மொழியில்லை என்ற கூற்றை மெய்ப்பிப்பவனாக அவனும் அப்பாடலை ரசிக்கத் தொடங்கியிருந்தான்.
“இது அர்ஜித்சிங் வாய்ஸ் தானே?” என்று இவ்வளவு நேரம் இருந்த முறைப்பெல்லாம் மாறி சாதாரணமாக வினவினான் ராகவ்.
“ம்ம்… அதுவுமில்லாம என் ஹீரோவோட சாங் வேற” என்று சிலாகித்த அவந்திகா அவனை புருவம் உயர்த்த வைத்தாள்.
“ஹவ் ஹேண்ட்சம்” என்று அவள் தொலைகாட்சியைப் பார்த்து உருகவும் அவன் கொதிநிலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.
“போதும் ஜான்சி ராணி! ஓவரா பண்ணாதே… சினிமாவை சினிமாவா நினைக்கக் கத்துக்கோ” என்று சொல்லவும் அவந்திகா அலட்சியமாகத் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.
ராகவ் புருவமுடிச்சுடன் “இரு நானும் தமிழ் கத்துக்கிறேன்.. அப்புறமா உனக்கு என்னையும் பிடிக்க ஆரம்பிச்சிடும்” என்று தீவிரக்குரலில் கூறவும் அவளுக்குச் சிரிப்பு பீறிட்டெழுந்தது.
“வாட்? நீ தமிழ் கத்துக்கப் போறியா? குட் ஜோக் ராகவ்… முதல்ல நீ தமிழ்னு திருத்தமா சொல்லு பார்ப்போம்” என்று அவனை நோக்க ராகவ் தமிழ் என்று உச்சரிக்க முயன்று ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவினான்.
“தமில் இல்ல ராகவ்… தமிழ்… எங்கே சொல்லு பார்ப்போம்” என்று எவ்வளவோ சொல்லியும் அவனது நாக்கு ழகரத்தை உச்சரிக்கவில்லை. (நம்மில் சிலர் இன்னும் ழகரத்தை முறையாக உச்சரிப்பதில்லை என்பது வேறு விஷயம்)…
ராகவ் தவறாக உச்சரிக்க அதை அவந்திகா சரி செய்ய இப்படியே அவர்கள் வாழ்க்கை ஜெகஜோதியாக ஆரம்பித்தது அந்த இரவில். ஆனால் கடைசிவரை அவனுக்கு ழகரத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. அவனுக்குச் சொல்லிக் கொடுத்துக் களைத்துப் போனச் சோர்வுடன் அவன் தோளில் சாய்ந்து உறங்க ஆரம்பித்திருந்தாள் அவந்திகா.
ஏற்கெனவே இரண்டு சம்பிரதாயங்களுடனும் நடந்து முடிந்திருந்த திருமணங்கள் ராகவிற்கும் களைப்பை உண்டாக்கியிருக்க அவளை மார்பில் சாற்றியபடி உறங்க ஆரம்பித்தான் அவனும்.
மறுநாள் அலாரம் எழுப்பியச் சத்ததில் கண் விழிக்கையில் ராகவின் அணைப்புக்குள் அடங்கியிருப்பதை அறிந்த அவந்திகா அவனது மொபைலில் அலாரத்தை நிறுத்திவிட்டு நேரத்தைப் பார்க்க அது அதிகாலை நான்கு மணியைக் காட்டியது. அவளைப் பொறுத்தவரை அது நள்ளிரவு. எனவே மீண்டும் உறங்கச் சென்றவள் ராகவ் கண் விழிப்பதைக் கண்டதும்
“நாலு மணிக்கு ஏன்டா அலார்ம் வச்ச? என் தூக்கம் கெட்டுப் போச்சு உன்னால” என்று குறைபட்டபடி படுக்கையில் விழுந்தாள்.
“நான் வழக்கமா எழுந்திருக்கிற நேரம் தான்… இப்போ ஒர்க் அவுட் பண்ணப் போறேன் ஜான்சி ராணி… நீயும் வர்றியா?” என்று கேட்டபடி முகம் கழுவச் சென்றான் அவன்.
ஆனால் அவனது மனையாளோ கும்பகர்ணனின் கொள்ளுப்பேத்தியாக போர்வையை இழுத்து மூடிக்கொண்டு மீண்டும் நித்திரையில் ஆழ்ந்திருந்தாள் அவன் திரும்பி வருகையில். அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் அவனது உடற்பயிற்சிக்கூடத்துக்குச் சென்றான்.
அதன் பின் அவன் திரும்பிவரும் போது அவந்திகா அங்கில்லை. கீழே அவளது சிரிப்புச்சதம் கிண்கிணி நாதமாய் ஒலிக்க அதைக் கேட்டபடி கீழே இறங்கினான்.
திருமணத்துக்குப் பின்னர் பாக்கியிருந்த சடங்கு சம்பிரதாயங்கள் அன்றைய நாள் முழுவதையும் எடுத்துக் கொண்டது. இன்னும் சில மணிநேரங்களில் ராகவ் திடீரென்று தானும் அவந்திகாவும் தேனிலவுக்கு வெளிநாடு செல்லவிருப்பதாகச் சொன்னவன் இன்னும் சில மணிநேரங்களில் விமானம் என்று கூறவே அனைவருக்கும் ஆச்சரியம்.
இவன் திடீரென்று அப்படி சொன்னதில் அவந்திகாவுக்கே அதிர்ச்சி தான். ஆனால் அவள் அப்படி சொல்வதை நம்பத் தான் ஆளில்லை. பிரதியுஷாவும் ரித்திமாவும் தங்கள் ஹனிபியா இப்படி என்று சொல்லி சொல்லி மாய்ந்து போக, அவளுக்குப் போன் செய்த கௌசல்யாவும் அப்படித் தான் கூறினார்.
“ஹனிமூன் விஷயத்தைச் சொன்னா நாங்க யாரும் உங்களைத் தடுக்கவா போறோம்? இன்னைக்குப் போறோம்னு மதியம் வந்து சொன்னா என்ன அர்த்தம்?”
அனைவரையும் ராகவ் பார்வையாலே சமாளித்தவன் அவந்திகாவிடம் உடைமைகளை எடுத்துவைக்கச் சொல்லி அவர்களின் அறைக்கு அனுப்பிவைத்தான். அவள் அறைக்குத் திரும்பிய சில நிமிடங்களில் அவனும் வந்துவிட அவந்திகா அவனிடம் பொரிந்து தள்ளிவிட்டாள்.
“உன்னால எவ்ளோ பெரிய ரகளை பாரு ராகவ்? இன்னைக்கே போயாகணும்னு என்னடா கட்டாயம்?”
“இங்க எனக்கு மூச்சு முட்டுது ஜான்சி ராணி… ஆளரவம் இல்லாத இடத்துக்குப் போகணும், உன் கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு ஆசைப்படுறேன்… கண்டிப்பா உனக்கும் நம்ம போற இடம் பிடிக்கும்” என்று சொல்லி அவள் வாயை அடைத்துவிட்டான்.
அதோடு சொன்னபடி சில மணித்துளிகளில் அவளை விமானநிலையத்துக்கும் கடத்திக் கொண்டு சென்றுவிட்டான் ராகவ். வழியனுப்ப வந்தவர்களை வாசலோடு நிறுத்தியவன் “நீங்க எல்லாரும் கிளம்புங்க… டாட்டா” என்று அனுப்பிவைக்கவே ராதிகா கடுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
“இதெல்லாம் ரொம்ப டூ மச் மோகன்… இந்தப் பையனுக்கு என்னாச்சு? நம்ம என்ன ஹனிமூன் போக வேண்டாம்னா சொல்லப்போறோம்? இப்பிடி ஏர்போர்ட்டுக்குள்ள கூட நுழைய விடாம அழிச்சாட்டியம் பண்ணுனா என்ன அர்த்தம்? அவன் திரும்பி வரட்டும்…காதைப் பிடிச்சுத் திருகிக் கேக்குறேன்” என்று மோகனிடம் புலம்பித் தீர்த்துவிட்டார்.
சுமித்ரா ராகவின் குடும்பத்தினரையும் அம்புஜா அவந்திகாவின் குடும்பத்தினரையும் ஒருவாறு சமாளித்துவிட்டனர். ஆனால் பிரச்சனை அன்று மாலையே மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.
ராகவ் ஏறிய விமானநேரப்படி அவனும் அவந்திகாவும் மாலையில் அவன் சொன்ன தேசத்துக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் இருவரிடம் இருந்தும் எந்தவொரு அழைப்பும் இல்லாததால் இரு குடும்பத்தினரும் பயந்துவிட்டனர்.
வருண் அனைவரையும் சமாளித்தவன் ராகவ் தங்கப் போவதாகச் சொன்ன வில்லாவின் மேனேஜரைத் தொடர்பு கொண்டான்.
“கேன் ஐ டாக் டு மிஸ்டர் ராகவ் கபூர்?” என்று கேட்டுவிட்டு ராகவின் குரலைக் கேட்க காத்திருந்தவனுக்கு
“சாரி சார்! மிஸ்டர் அண்ட் மிசஸ் கபூருக்காக வில்லாவை புக் பண்ணிருக்காங்க… பட் அவங்க வரலை” என்ற பதில் கிடைக்கவே வருண் திகைத்துவிட்டான்.
அவனோடு சேர்ந்து இரு குடும்பத்தினரும் அதிர்ந்து போய்விட பிரதியுஷாவும் ரித்திமாவும் கலங்கிப் போயினர். அவர்களின் மாமியார்களோ வயிற்றுப்பிள்ளைக்காரிகள் கலங்கக் கூடாது என்று அவர்களைச் சமாதானம் செய்தபடியே ராகவையும் அவந்திகாவையும் எங்கே போய் தேடுவது என்ற கவலைச் சூழ மனக்கலக்கத்துடன் இருந்தனர்.
இந்த கலாட்டாக்களுக்கு எல்லாம் காரணமானவன் தமிழக கர்நாடக எல்லையிலுள்ள கானகத்தின் நடுவே உள்ள வீட்டில் அவந்திகாவுடன் சேர்ந்து கதிரவன் மலைமுகடுக்குள் அடைக்கலமாகும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் அவளது வசவுகளைக் கேட்டபடியே.
“எல்லாரும் ஹனிமூனுக்கு சுவிட்சர்லாண்ட் போவாங்க… இல்லைனா காஷ்மீர், சிம்லானு போவாங்க.. அதுவும் இல்லைனா ஊட்டி, கொடைக்கானல், மூணாறுனு எவ்ளோ ப்ளேசஸ் இருக்கு… ஆனா ஹனிமூன்னு சொல்லி அத்துவானக்காட்டுக்குக் கூட்டிட்டு வந்தவன் நீ மட்டும் தான் ராகவ்” என்று முகத்தைச் சுருக்கியபடி சொன்னவளைப் பின்னோடு அணைத்துக் கொண்டிருந்தவன்
“நான் தான் சொன்னேன்ல யாருமில்லாத இடத்துல உன்னோட டைம் ஸ்பெண்ட் பண்ண ஆசையா இருக்குனு… அதான் உன்னை இங்கே கடத்திட்டு வந்துட்டேன்” என்று அவள் காதுகளின் முணுமுணுத்தவனின் ஹஸ்கி குரலில் அவளுக்குக் கன்னக்கதுப்புகளில் சிவப்பு ஏற ஆரம்பித்தது.
அந்திவானச்சிவப்போடு அவள் கன்னத்தின் சிவப்பும் போட்டியிட அவந்திகாவுக்குக் குரல் எழும்பவில்லை. அவளது பேசாத மௌனமே அவனுக்கு இன்பத்தை ஊட்ட அவந்திகாவைத் தன் புறம் திருப்பியவன் அவளது கன்னங்களைத் தனது கைகளால் ஏந்திக் கொண்டான்.
அவளது கண்களில் தெரிந்த காதலை நிதானமாகப் படித்தவன் அவளது செவ்விதழ்களில் தனது இதழ்களைக் கலக்கவிட்டான். ஒட்டுமொத்தக் காதலையும் சொல்ல ஒற்றை முத்தம் காணாதல்லவா? அவனது காதலில் நெக்குருகிப் போய் நின்றவளைத் தனது கரங்களில் ஏந்திக் கொண்டவன் அவர்களின் அறையை நோக்கிச் சென்றான்.
இதற்கு மேல் மலைமுகட்டுக்குள் இருந்து அவர்களை இரகசியமாகப் பார்க்க வெட்கியக் கதிரவன் தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டு வெண்மதியை வானில் உலா வரச் சொல்லிவிட்டான். வெண்மதியின் குளிரொலியில் நனைந்த அந்தக் கானகத்தின் நடுவிலுள்ள வீட்டில் அவந்திகா மற்றும் ராகவ் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் அழகாக எழுதப்பட்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


