பிரதியுஷாவின் திருமணம் முடிந்து சில நாட்கள் கழிந்தன. அவளும் புகுந்தவீட்டின் புதுச்சொந்தங்களுடன் கலந்து விட்டாள். அதேநேரம் தேனிலவுக்காக அவளும் வருணும் வெளிநாடு சென்று விட சன் டியூவின் வேலை முழுவதையும் ரித்திமாவும் அவந்திகாவும் பார்த்துக் கொள்ள நாட்கள் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கியது.
அவந்திகா ராகவைத் தவிர்ப்பது அவனுக்குப் புரியவும் அவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தவனுக்கு அற்புதமான வாய்ப்பை அவனது நிறுமத்தின் புதிய டீல் ஒன்று அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த டீலை முடித்ததால் அவர்களுக்கு இந்தக் காலாண்டில் கணிசமான இலாபம் வந்திருக்க ராகவ் அதற்காக நிறுமத்தின் பெங்களூரு தலைமை அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் பெரியளவில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தான்.
அது தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்க சன் டியூவைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்பது அவனது எண்ணம். அதன் மூலமாக பார்ட்டியும் நல்லபடியாக நடைபெறும். அவந்திகாவும் இது தொடர்பாகத் தன்னைச் சந்தித்து தானே ஆக வேண்டும் என்று திட்டமிட்டுக் காயை நகர்த்தியவன் அதற்கான ஒப்பந்தத்தில் ரித்திமாவிடம் கையொப்பம் வாங்கிவிட்டான். இந்த விஷயம் இன்னும் அவந்திகாவுக்குத் தெரியாது.
அந்தப் பார்ட்டிக்கான திட்டவடிவை ரித்திமா தயார் செய்துவிட்டாலும் அது தொடர்பாக இன்னும் ராகவின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதற்காக அவள் அலுவலகம் வரவா என்று கேட்டதற்கு ராகவ் அவந்திகாவை அனுப்பிவைக்குமாறு சொல்லிவிட்டான் ராகவ். ரித்திமாவும் மறுநாள் அவந்திகா ஒப்பந்தம் மற்றும் திட்டவடிவுடன் வருவாள் என்று ராகவிடம் உறுதியளித்துவிட்டாள்.
ராகவ் அந்த நிம்மதியுடன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது காய்கறி மார்க்கெட் அருகே அவந்திகாவைப் பார்த்துவிட்டான். ஏன் நாளை வரை காத்திருக்கவேண்டும் என்று தன்னைத் தானே கேள்வி கேட்டபடி காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன் அவந்திகா நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான். அவள் பின்னே நின்றவன் “ஏய் ஜான்சி ராணி” என்று அழைக்கவும் அவந்திகா திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்த்தாள்.
இவனா என்று யோசித்தபடி வேண்டாவெறுப்பாக “ஹாய்’ என்றவள் மார்க்கெட்டுக்குள் செல்ல முயல அவள் கரம் பற்றி நிறுத்திவிட்டு
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“உனக்காகக் காரை நிறுத்திட்டு வந்திருக்கேன்… ஒரு ரெண்டு வார்த்தை பேச உனக்கு டைம் இல்லையா ஜான்சி ராணி?” என்று அவன் கேட்டவிதத்தில் அவளுக்குமே அவனுடன் நின்று பேசும் ஆசை உள்ளுக்குள் துளிர் விட்டது. ஆனால் அடுத்த நிமிடமே அதைக் கிள்ளி எறிந்தவள்
“டைம் இல்லையே மிஸ்டர் ராகவ்… நான் காய்கறி வாங்கிட்டு ஏழு மணிக்குள்ள வீட்டுக்குத் திரும்பணும்… உங்க கிட்ட பேசிட்டு நின்னா என்னோட வேலை கெட்டுப் போகும்” என்று பட்டு கத்தறித்தாற் போன்று பேச்சைச் சுருக்கி முடித்துக் கொண்டாள்.
ராகவ் புருவம் உயர்த்தியவன் “இஸிண்ட்? சரி வா.. நானும் உன் கூட சேர்ந்து பர்சேஸ் பண்ண வர்றேன்” என்று அவள் கையிலிருந்த பிக் ஷாப்பரை வாங்கவும்
“இந்தக் கோட்டோட வரப் போறியா?” என்று கேலி செய்தாள் அவந்திகா. ராகவ் கோட்டைக் கழற்றி அவளிடம் கொடுத்தவன் முழுக்கைச் சட்டையை முக்கால்வாசி மடித்துவிட்டு
“இப்போ போலாமா மேடம்ஜி?” என்று கேட்டவனது கோட்டைத் தனது கரத்தில் சரியவைத்தபடி அவனுடன் சேர்ந்து நடந்தாள் அவந்திகா. மனதிற்குள் “ஏன்டா காதல் கத்திரிக்காலாம் தேவையில்லைனு பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு இப்போ எதுக்கு என் கூட வர்றியாம்? இதுக்குப் பேரு என்னனு உன் மரமண்டையில இன்னுமா உறைக்கலை?” என்று அவனை அர்ச்சித்தபடி அவனுடன் சேர்ந்துடன் நடக்கத் தொடங்கினாள்.
கிட்டத்தட்ட முழு மார்க்கெட்டையும் அரைமணி நேரம் வலம் வந்ததில் ராகவ் வியர்வையில் குளித்துவிட்டான். ஏசியில் இருபத்து நான்கு மணி நேரமும் இருந்து பழகிவிட்டவனுக்கு வெளியுலகத்தின் வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஒரு வழியாக பிக் ஷாப்பர் காய்கறிகளால் நிரம்பி வழிய வெளியே வந்தவர்கள் மெதுவாக நடந்து காரை அடைந்தனர்.
“ஓகே! நான் ஆட்டோல கிளம்புறேன்” என்றபடி அவனிடமிருந்து பிக் ஷாப்பரை வாங்க முயன்றவளிடம் தர மறுத்தவன் காரின் பின் கதவைத் திறந்து அதை அங்கே வைத்துவிட்டு
“போய் கார்ல உக்காரு…. நானே டிராப் பண்ணுறேன்.. அப்புறம் உன் கிட்ட இம்பார்ட்டெண்ட் விஷயம் ஒன்னு பேசணும்” என்றதும் அவந்திகா வாதம் செய்யாமல் நல்லப்பெண்ணாக முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
ராகவ் காரினுள் அமர்ந்தவன் அவளது துப்பட்டாவை இழுத்து அதில் முகத்தைத் துடைத்துக் கொள்ளவும் அவந்திகா எரிச்சலுற்றாள்,.
“இது என்னடா பழக்கம்? என் துப்பட்டாவை விடு”
“வெயிட் ஜான்சி ராணி… கார்ல டிஸ்யூ இல்லை… சோ உன்னோட துப்பட்டாவைக் கொஞ்சம் யூஸ் பண்ணிக்க விடு” என்று சொன்னதில் அவள் பத்திரக்காளி அவதாரம் எடுக்கத் தயாரான அந்நொடியில் அவளது மொபைல் சிணுங்கி அவளது கவனத்தை ஈர்த்தது.
அதை எடுத்தவள் அழைத்தது கௌசல்யா என்று அறிந்ததும் தான் இன்னும் சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று உறுதியளித்துவிட்டுப் போனை வைத்தாள். ராகவ் இன்னும் துப்பட்டாவை விடாமல் இருக்கவே வெடுக்கென்று பிடுங்கியவள்,
“இன்னைக்குத் தான் ஃபர்ஸ்ட் டைம் இந்த சுடிதாரைப் போட்டேன்… நீ அதுல போய் உன் திருமுகத்தைத் துடைச்சு வச்சிட்டியே” என்று ராகவை அழாதக்குறையாகக் குற்றம் சாட்டினாள்.
ராகவ் அதைக் கேட்டுப் பக்கென்று நகைத்தவன் “இன்னையோட ரிசப்சன் முடிஞ்சு ஒன் வீக் ஆகுது… நான் இது வரைக்கும் உனக்கு எத்தனை தடவை கால் பண்ணிருப்பேன்? பட் நீ என் கால்ஸை அட்டெண்ட் பண்ணலை… அதோட என்னை அவாய்ட் வேற பண்ணுனேல்ல… அதுக்குப் பனிஷ்மெண்ட் குடுக்க வேண்டாமா? அதான் உன்னோட துப்பட்டாவைக் கொஞ்சநேரத்துக்கு டிஸ்யூவா யூஸ் பண்ணிக்கிட்டேன்” என்றபடி காரை எடுத்தான்.
கார் சாலையில் வேகமெடுக்க மெதுவாக பார்ட்டி பற்றிய விஷயத்தை அவளிடம் பேச ஆரம்பித்தான் ராகவ்.
“அவந்திகா! உன்னால எனக்கு ஒரு வேலை ஆகணுமே!”
“என்ன செய்யணும் சார்? சொல்லுங்க! முடிஞ்சா செய்யுறேன்”
“எங்க கம்பெனியோட இந்த குவாட்டர் என்ட்ல முடிஞ்ச டீல் ஒன்னு பயங்கரமான பிராஃபிட்டைக் குடுத்திருக்கு… அதுக்காக எம்ப்ளாயிஸ், டீலர்ஸ் அண்ட் ஷேர்ஹோல்டர்ஸுக்கு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கேன்… இஃப் யூ டோண்ட் மைண்ட், பார்ட்டியோட அரேஞ்ச்மெண்டை சன் டியூவால பார்த்துக்க முடியுமா?”
“முடியாது… வீ ஆர் பிஸி” என்று எடுத்ததும் அவளிடமிருந்து எதிர்மறையான பதில் வரவே அதை எதிர்பார்த்தவன் போல
“ஓகே! பட் ஆல்ரெடி உங்க கன்சர்னோட நான் அக்ரிமெண்ட் சைன் பண்ணிட்டேன்… டூ டேய்ஸ்கு முன்னாடி ரித்திமா அதுல சைன் பண்ணிட்டா… சோ நாளைக்கு அது பத்தி டிஸ்கஸ் பண்ணனும்… நீ ஆபிஸ்கு வந்துடு… வரணும்” என்று அழுத்தமானக் குரலில் கிட்டத்தட்ட கட்டளையிடும் பாணியில் சொல்லிமுடித்தான் ராகவ்.
அவந்திகா வாய்க்குள் “அடியே ரித்தி! என் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம இவன் கூட அக்ரிமென்ட் சைன் பண்ணிருக்கியாடி துரோகி?” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்ப அதைக் காது குளிர கேட்டபடி காரை ஓட்டினான் ராகவ்.
அவந்திகா பெருமூச்சு ஒன்றை வெளியிட்டுவிட்டு “ஆனா அதுக்கு நான் ஏன் வரணும்? எப்போவும் இது மாதிரி அக்ரிமெண்ட் சைன் பண்ணுற வேலையை உஷா தான் பார்ப்பா… அவ இல்லைனா ரித்தி தான் கவனிச்சுப்பா.. நான் ஒன்லி எக்ஸிகியூட் மட்டும் தான் பண்ணுவேன்” என்று சொல்லிவிட்டு ராகவ் முகத்தைப் பார்க்க அங்கே அவளது வார்த்தைகளை அவன் நம்பவில்லை என்பது தெளிவாக எழுதி ஒட்டப்பட்டிருந்தது.
இனி இவனிடம் பேசி பிரயோஜனமில்லை என்பது புரிந்தாலும் “நானே தான் வரணுமா?” என்று மீண்டும் ஒரு முறை கேட்டு அவனது முறைப்பைப் பதிலாகப் பெற்றுக்கொண்டாள் அவள்.
சிறிதுநேரத்தில் வீடு வந்துவிட அவந்திகா பிக் ஷாப்பருடன் இறங்கிக் கொண்டவள் வீட்டுக்குள் செல்லாமல் ராகவைக் கார்க்கதவின் வழியே வெளியில் நின்றபடி பார்க்கவும் அவனோ புருவம் உயர்த்தி என்னவென்று வினவ
“ஒன்னும் இல்லை… நான் பேசாத நாள்ல நீ என்னை மிஸ் பண்ணுனியா?” என்று கேட்டுவிட்டு அவன் கூறப்போகும் விடைக்காகத் தவிப்புடன் காத்திருக்க
ராகவ் “இல்லை” என்று தலையசைத்து மறுக்கவும் அவள் முகம் வாடிவிட்டது. ஆனால் நொடிப்பொழுதில் முகபாவத்தைச் சரி செய்து கொண்டவள்
“ஓகே! நான் உள்ளே போறேன்… குட் நைட்” என்று மிகுந்த சிரமத்துடன் சாதாரணக்குரலில் இயம்பிவிட்டு கேட்டைத் திறந்து உள்ளே சென்றாள். ராகவ் கேட் அடைக்கப்படும் சத்தம் கேட்கும் வரை அங்கே காரில் இருந்தவன் அச்சத்தம் கேட்டதும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
செல்லும் வழியில் அவன் சிந்தனை எல்லாம் அவந்திகாவின் கடைசி கேள்வியிலேயே குவிந்திருந்தது. இந்த ஏழு நாட்களில் தான் அவளைத் தேடியது, அவள் முகம் பார்க்கத் தவித்தது, அவள் குரலைக் கேட்க ஏங்கியது என எல்லாவற்றையும் அவளிடம் சொல்ல ஆசை தான் அவனுக்கு. ஆனால் தனது தொலைபேசி அழைப்புகளை அவள் துண்டித்த விதம் இன்னும் அவன் மனதில் சிறியளவில் கோபத்தைக் கிளறிக் கொண்டிருந்தது என்பது தான் உண்மை.
அதே மனநிலையுடன் வீடு திரும்பியவனைக் கண்டதும் சுமித்ரா “இன்னைக்கு ஏன் லேட் ஆயிடுச்சு ராகவ்? ஆபிஸ்ல வேலை முடிய நேரமாயிடுச்சா?” என்று கேட்க அவரருகில் சென்று அமர்ந்தவன்
“இல்லை தாதி! உங்க மருமகளை ரோட்ல பார்த்தேன்… வெஜிடபிள் பர்சேசிங்ல மேடம் பிசியா இருந்தாங்க… தனியா கஷ்டப்படுறாளேனு நான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணிட்டு வந்தேன்” என்று கூறவும் வீட்டின் பெண்மணிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இதெல்லாம் ராகவின் குணம் இல்லையே என்று யோசித்தவர்கள் மருமகள் வரும் முன்னரே மகனது மாற்றத்தை நினைத்து உள்ளுக்குள் திகைத்துப் போயினர். வீணா வாய் விட்டே சொல்லிவிட்டார் “அந்தப் பொண்ணு அவந்திகா வாயாடி மட்டுமில்லை… யாரையும் அவளுக்கு ஏத்த மாதிரி மாத்துற மேஜிக் அவ கிட்ட இருக்கும்மா”.
சுமித்ராவுக்கும் ராதிகாவுக்கும் அதில் சந்தோசமே. அந்த வீட்டில் ராகவ் அளவுக்குப் பிடிவாதம் பிடித்தவர்கள் எவருமில்லை எனலாம். அநாவசியமாகச் சிரிக்கக் கூடச் செய்யாதவன் இப்பொழுதெல்லாம் புன்னகை தவழ்ந்த முகத்தினனாய் வலம் வருவதும், வீட்டின் பணியாட்களின் சின்னச் சின்னத் தவறுகளை மன்னிப்பதும் என முற்றிலுமாக மாறிப் போனான்.
ஆனால் அவனது இம்மாற்றத்துக்குக் காரணமானவளோ தான் இத்தனை நாட்கள் பேசாமல், பார்க்காமல் இருந்தபோது கூட ராகவ் தன்னைத் தேடவில்லையே என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருந்தாள்.
அம்புஜா வேறு “ராகவ் மாதிரி தங்கமான பையன் தேடுனாலும் கிடைக்க மாட்டான்டி வாயாடி… உன் கூட மார்க்கெட்டுக்கு வந்து இதெல்லாம் சுமந்துட்டு வரணும்னு அவனுக்கு என்ன தலையெழுத்தா? ஆனா பாரேன் இவ்ளோ ஜாமானையும் ஒத்தை ஆளா தூக்கிட்டு வந்துருக்கான்… உன் மேல எவ்ளோ அக்கறை, அன்பு இருந்தா இப்பிடிலாம் பண்ணிருப்பான்?” என்று வார்த்தைக்கு வார்த்தை ஏதோ தேவலோகத்திலிருந்து குதித்த கந்தர்வனைப் போல அவனைப் புகழ்ந்து தள்ளி அவந்திகாவின் பொருமலை அதிகரிக்கச் செய்தார்.
“க்கும்! நீ தான் அம்பு மெச்சிக்கணும் உன் பேரனோட அன்பையும் அக்கறையையும்… அவனுக்கு அப்பிடி எதாவது ஒன்னு இத்துணூண்டு இருந்திருந்தா என்னைப் பார்க்காம ஒன் வீக் இருந்திருப்பானா அவன்? உன் இஷ்டத்துக்கு உளறாம இரு அம்பு… ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு முகத்தைத் தூக்கிக் கொண்டு அவளது அறையை நோக்கிச் சென்றவளுக்கு போனில் ஏதோ நோட்டிபிகேசன் வரவும் ராகவாக இருக்குமோ என்று ஆர்வத்துடன் போனைப் பார்த்தவள் ரித்திமாவின் தகவலைப் பார்த்ததும் சோர்வுற்றாள்.
அதில் பார்ட்டி ஏற்பாட்டுக்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மென்பிரதியும், திட்டவடிவும் அனுப்பப்பட்டிருந்தது. அதை வாசிக்கத் தொடங்கியவள் அதன் விதிமுறைகள் அனைத்தையும் சரி பார்த்துவிட்டுப் போனை மேஜை மீது வைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தாள்.
தூக்கத்திலும் ராகவின் நினைவு கனவாக வர உறங்கிக் கொண்டிருந்தவளின் இதழ் அவள் அறியாமல் குறுஞ்சிரிப்பில் மலர்ந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


