ராகவ் அவந்திகாவைத் தோளோடு அணைத்தபடி டிவியைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அவன் கையில் நறுக்கென்று கிள்ளவும் “ஐயோ! ஏன் இப்போ கிள்ளுன அவந்திகா?” என்று வலியில் முகம் சுருக்கியபடி திரும்பியவன் அவந்திகாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டான்.
இவளுக்கு என்னவாயிற்று என்ற ரீதியில் பார்த்தவனை முறைத்தவாறு சோபாவிலிருந்து எழுந்தவள்
“இங்கே பாரு! நீ என்னை விட்டுக் கொஞ்சம் தள்ளியே இரு… இல்லைனா உன் உயிருக்கு நான் உத்திரவாதம் கிடையாது” என்று விரல் நீட்டி எச்சரிக்க அவள் விரலைப் பற்றியவன்
“இந்த விரல் நீட்டுறப் பழக்கத்தை நீ விட மாட்றியே! இதே மாதிரி தான் நானும் உன்னை விட்டுத் தள்ளிப் போகமாட்டேன்… ஆஃப்டர் ஆல் ஒரு ஹக்ல நீ ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்ட ஜான்சிராணி” என்று கேலியாகச் சொல்ல
“ஹக்காம் ஹக்… மண்ணாங்கட்டி… பிஃபோர் மேரேஜ் நீ என்னை விட்டு மூனடி தள்ளித் தான் இருக்கணும்” என்று பிடிவாதமாக கண்ணை உருட்டி அவள் சொன்னவிதம் அவனது ரசனையைத் தூண்ட, அதற்கு மேல் அவள் கோபப்படுவது வேறு பார்ப்பதற்கு அழகாக இருந்து தொலைக்கிறதே என்று எண்ணியவன்
“வீ ஆர் என்கேஜ்ட்… தட்ஸ் ஒய் ஐ ஹக்ட் யூ! நாட் அ பிக் டீல்.. நீ தான் ஓவர் ரியாக்ட் பண்ணுற ஜான்சிராணி… இட்ஸ் ஓகே! எதுக்கு நீ ரூமுக்கு வந்த?” என்று கேட்டுவிட்டு டிவியில் கண் பதித்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நேகா உன்னோட லேப்டாப்ல இன்விடேசன் டிசைன் ரெடி பண்ணியிருக்காளாம்… அதை நான் பார்க்கணும்”
“பார்க்கலாமே! ஆனா இங்கே உக்காந்தா பார்க்கலாம்” என்று தன்னருகில் சோபாவைத் தட்டிக் காட்டிச் சொல்ல
“அங்கெல்லாம் உக்கார முடியாது” என்று வேகமாகப் பதிலடி வந்தது அவந்திகாவிடமிருந்து.
“அப்போ நீ இன்விடேசனைப் பார்க்க முடியாது” என்றான் ராகவ் அவளை விட வேகமாக.
அவந்திகா ஒரு வேளை இவன் விளையாடுகிறானோ என்று எண்ணி அவன் முகத்தைப் பார்க்க அது சாதாரணமாகத் தான் இருந்தது. இவனால் தன் வேலை கெட்டுப் போய்விடும்போல என்று மானசீகமாகப் புலம்பத் தொடங்கினாள் அவந்திகா.
“நான் அதைப் பார்த்துட்டு பிரிண்ட் பண்ண குடுக்கணும் ராகவ்… ப்ளீஸ் உன் லேப்டாப்பைக் காட்டு” என்று சிணுங்கியவளின் குரலில் அவனுக்கும் பாவமாக இருக்கவே எழுந்து தனது லேப்டாப்பை எடுத்துவந்து அவளிடம் நீட்டினான்.
“பாஸ்வேர்ட் சொல்லு” – அவந்திகா.
“ராதி1993” என்று சட்டென்று ராகவ் சொல்லவும் ஆச்சரியப்பட்ட அவந்திகா லேப்டாப்பின் டெஸ்க்டாப்பில் இருந்த இன்விடேசன் டிசைனைப் பார்த்தபடியே
“என்னடா கேட்டதும் பாஸ்வேர்டைச் சொல்லிட்ட?“ என்று வினவ
“இதுல என்ன இருக்கு? இப்போ நான் கேட்டா நீ உன் மொபைல் பாஸ்வேர்டைச் சொல்ல மாட்டியா?” என்று கேட்டுவிட்டு அவந்திகாவைப் பார்க்க அவளோ இல்லவே இல்லை என்பது போல பழிப்பு காட்டிவிட்டு இன்விடேசனில் கண் பதித்தாள்.
ராகவ் அப்போது கிடைத்த இடைவெளியில் அவளது மொபைலை எடுத்துக் கொண்டான். அவந்திகா அது தெரியாமல் இன்விடேசனை தனது மெயிலுக்கு அனுப்பிவிட்டு லேப்டாப்பை அவன் வசம் ஒப்படைத்தாள்.
“ஓகே! வந்த வேலை முடிஞ்சுது… நான் கிளம்புறேன்” என்று கிளம்ப எத்தனித்தவளை
“ஜான்சிராணிக்கு மொபைல் வேண்டாமா?” என்றவனின் கேலிக்குரல் தடுத்து நிறுத்தவே அவந்திகா தனது மூன்றாவது கையை மறந்துவிட்டோமே என்று பதறிப் போய்த் திரும்ப அது ராகவின் கையில் இருந்தது.
போனை அவனிடமிருந்து வாங்கச் சென்றவளிடம் அவன் கொடுக்காமல் விளையாட்டு காட்டவே எரிச்சலுற்று “இப்போ என் போனை தரலைனு வை! நான் போய் உங்கம்மா கிட்ட சொல்லிடுவேன் ராகவ்” என்று அவனை மிரட்ட
“அப்போ உன்னோட மொபைல் பாஸ்வேர்டைச் சொல்லு” என்று மடக்கினான் ராகவ்.
“சொல்ல முடியாதுடா”
“அப்போ போனைத் தர முடியாது…. நீ கிளம்பலாம்” என்று அவளது மொபைலை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
அவந்திகா வேறு வழியின்றி “ரவி.. இதான் பாஸ்வேர்ட்” என்றாள் வெடுக்கென.
“ம்ம்… அப்பா மேல எவ்ளோ பாசம் குழந்தைக்கு” என்று கேலி செய்தபடி அவள் மொபைலை திறந்து அதிலுள்ளவற்றைப் பார்வையிடத் தொடங்கினான் ராகவ்.
“ஆர் ஃபார் ரவி… அண்ட் அவி இஸ் மை ஷார்ட் நேம்… ரெண்டையும் சேர்த்து வைச்சிருக்கேன்” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாள் அவந்திகா.
ராகவ் அவளின் விளக்கத்தில் புருவம் சுழித்தவன் “வாட்? ஆர் ஃபார் ரவியா? நோ வே! ஆர் ஃபார் ராகவ்… அண்டர்ஸ்டாண்ட்?” என்று சொல்லவும் அவந்திகா வாயைப் பிளந்தாள்.
“இம்பாஸிபிள்… ஆர் ஃபார் ரவி தான்… யாரையும் எங்கப்பா இடத்தில வச்சுப் பார்க்க மாட்டேனாக்கும்” என்று பிடிவாதமாய்ச் சொன்ன அவந்திகாவைக் குறும்புடன் நோக்கியவன்
“அஹான்! இதுக்காகவாச்சும் கல்யாணத்தைச் சீக்கிரமா முடிக்கணும் ஜான்சிராணி” என்று கிண்டல் செய்தபடி எழுந்தவன் அவளைத் தோளோடு சேர்த்து மீண்டும் அணைக்கவே அவந்திகா விலக முயன்றாள்.
“உன் போன் வேணுமா? வேண்டாமா?” என்றவனின் கேள்வியில் அமைதியாய் நின்றவளிடம் “ஸ்மைல் பிளீஸ்” என்று சொல்லிவிட்டு இவன் என்ன செய்யப்போகிறான் என்று அவள் திகைக்கும் போதே செல்ஃபிகளைச் சுட்டுத் தள்ளியவன் புகைப்படங்களைப் பார்த்துத் திருப்தி பட்டுக்கொண்டான்.
“நாட் பேட்! போட்டோல நீ அழகா இருக்கியே! பட் நேர்ல ஏன் அப்பிடி இல்லை?” என்று கேட்டவனிடம் அவள் பதிலளிக்கும் முன்னரே அவர்களின் புகைப்படம் அவனது சமூகவலைதளப்பக்கத்தில் இடம்பிடிக்க அவளது போனில் நோட்டிபிகேசன் ஒன்று எட்டிப்பார்த்தது.
இவன் என்ன தான் செய்கிறான் என்று புரியாத குழப்பத்துடன் அவனிடமிருந்து போனைப் பிடுங்கியவள் விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினாள். வெளியே செல்வதற்கு முன்னர் ராகவின் சிரிப்பொலி அவள் காதில் விழத் தான் செய்தது.
ராகவ் அவள் சென்றதும் சிரித்தபடி சோபாவில் சாய்ந்தவன் தொலைகாட்சியைப் பார்க்க ஆரம்பித்தான். கண்கள் தான் தொலைகாட்சி திரையில் பதிந்திருந்ததே தவிர மனம் முழுவதும் சற்று முன்னர் முட்டைக்கண்ணால் அவனை முறைத்தபடி அறையை விட்டு வெளியேறியவளே நிறைந்திருந்தாள்.
சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஒன்றும் பேரழகி இல்லை தான். சொல்லப் போனால் தன்னை அழகாய்க் காட்டிக்கொள்ள முயலாதவள் என்று கூட சொல்லலாம். கேட்டால் அதை விட முக்கியமாக தனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது என்று அவளிடமிருந்து பதில் வரும் என்பதை எண்ணிக் கொண்டவன் சற்று முன்னர் எடுத்த செல்ஃபிகளைப் பார்க்கத் தொடங்கினான்.
தன்னருகில் தனது தோள் உயரத்துக்கு நின்றிருந்தவளின் முகத்தில் ஆச்சரியம், திகைப்பு, அதிர்ச்சி, வெட்கம் எல்லாம் கலந்த கலவையான உணர்வு இடம்பெற்றிருக்க அதை ரசித்தபடி போன் திரையில் தெரிந்தவளின் முகத்தை ஆசையுடன் வருடிக்கொடுத்தான் ராகவ்.
அதே நேரம் கீழே சென்ற அவந்திகாவுக்கு ரித்திமா யாரிடமோ வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டது. பொதுவாக அவள் இப்படி கத்தும் ஆள் இல்லையே என்று யோசித்தபடியே சென்றவள் ஹாலின் வலதுபக்க மூளையில் தோட்டத்தைப் பார்த்தபடி இருக்கும் பெரிய கண்ணாடி ஜன்னலின் அருகே கிடந்த இருக்கையில் அமர்ந்திருந்த ரித்திமாவிடம் சென்றாள்.
அவள் எதிரில் நின்று அவளுடன் பேசிக்கொண்டிருந்தவனைக் கண்டதும் அவந்திகாவுக்கு விஷயம் புரிந்து போனது. அவர்களிருவரையும் நோக்கிச் சென்றவள்
“கிஷோர் ஏன் என்னோட ரித்தியை கோவப்படுத்துற மேன்?” என்று நக்கலடித்தபடி அவன் தோளைத் தட்டிவிட்டு ரித்திமாவிடம் சென்று அமர்ந்தாள்.
கிஷோர் “நான் கோவப்படுத்தலை அவந்திகா… அவளோட ஹைட்டின் ரகசியம் என்னனு கேட்டிருக்கேன்… அதுக்கு ஆன்சர் பண்ண மாட்றா” என்று சொல்லிவிட்டு ரித்திமாவைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்ட
அவள் “கண்ணை சிமிட்டிறியா ராஸ்கல்? ஹனிபி நீயே சொல்லு! நான் என்ன லேம்ப்போஸ்ட் மாதிரியா உயரமா இருக்கேன்? இவனும் அமரும் என்னை லேம்ப்போஸ்ட்னு சொல்லி கிண்டல் பண்ணுறாங்க” என்று அவந்திகாவிடம் குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தாள்.
அவந்திகா யார் சார்பில் பேச என்று புரியாமல் திணறவும், கிஷோர் “உண்மையைச் சொன்னா தப்பா அவந்திகா? நீயே சொல்லு! ரதி பாபி மாதிரி கரெக்டான ஹைட் வெயிட்ல இருந்தா நான் ஏன் இவளைக் கிண்டல் பண்ணப் போறேன்? இது சரியான ஒல்லிக்குச்சி, லேம்ப்போஸ்ட்” என்று மீண்டும் கிண்டல் செய்யவே ரித்திமா கோபப்பட்டு அங்கிருந்து வெளியேற கிஷோர் அவள் பின்னே ஓடினான்.
அவந்திகா இன்விடேசன் மாதிரியைத் தனது மெயிலில் பிரிண்டிங் பிரஸ்ஸுக்கு அனுப்பிவிட்டு கிளம்பலாம் என்று எத்தனித்தவள் வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்படவே ரித்திமாவும் அவளுடன் சேர்ந்துகொண்டாள்.
அவர்கள் கிளம்பும் தருவாயில் பிரதியுஷா போன் செய்யவே அவந்திகா போனை எடுத்தவள் “என்ன உஷா?” என்று கேட்டபடி ரித்திமாவுடன் வெளியேறினாள் அவந்திகா.
“ஹனிபி! எவ்ளோ அழகா செல்ஃபிக்கு போஸ் குடுக்கிற? சான்ஸே இல்லை போ”
“வாட்? நீ என்ன சொல்லுற உஷா? எனக்குப் புரியலை”
“இன்ஸ்டால பாரு… ராகவும் நீயும் இருக்கிற செல்ஃபி தான் இப்போ ஹாட் டாபிக்” என்று பிரதியுஷா சொன்னதும் இன்ஸ்டாகிராமைப் பார்த்த அவந்திகா திகைத்துப் போய்விட்டாள். அவளருகே நின்றிருந்த ரித்திமாவும் தான்.
ராகவின் இன்ஸ்டா கணக்கிலிருந்து அவளும் ராகவும் சேர்ந்து எடுத்திருந்த செல்ஃபி பகிரப்பட்டிருந்தது. அதில் அவந்திகாவை டேக் வேறு செய்து வைத்திருந்தான் அந்த நல்லவன்.
கீழே உள்ள கமெண்டுகளை வாசித்தவளுக்கு என்ன சொல்லவென்றே புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது அவந்திகாவுக்கு. இந்த உலகத்தின் முன்னிலையில் அவளை அவனது வாழ்க்கைத்துணைவியாக நிறுத்துவதில் முனைப்புடன் செயல்படுகிறான் என்பது தான் அது. ரித்திமா வேறு அதைக் கலாய்த்து வைத்தாள்.
அதன் பின் வந்த நாட்களில் அவர்களின் உறவு இனியக் கவிதையாக அரும்பத் தொடங்கியிருந்த தருணங்களை இருவருமே வெளியே காட்டிக்கொள்ளாமல் ரசிக்கத் தொடங்கியிருந்தனர். அனைவரும் திருமணத்துக்கான பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருக்க அவந்திகாவுக்கும் ராகவுக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் நேரம் கழிந்தது.
காலைநேர ‘குட் மார்னிங்’களும், மதியத்தில் ‘லஞ்ச் ஆச்சா?’ என்ற அக்கறையான விசாரிப்புகளும் ஒவ்வொரு நாளையும் அழகாக்க, இரவில் வரும் ‘குட் நைட்’ செய்திகள் கனவுக்குள் தள்ளின இருவரையும்.
அதற்காக அவர்களிடையே சண்டைகளும், வாக்குவாதங்களும் இல்லையா என்று கேட்டால் நாம் தான் ஏமாந்து போவோம். எண்ணற்ற சண்டைகள், ஏராளமான வாக்குவாதங்கள் இவற்றிற்கிடையே அவர்களின் பெயர் சூட்டப்படாத உறவு பிரச்சனையின்று சென்றது என்றால் அதற்கு முதல் காரணம் சமீப காலங்களில் அவர்களிடையே காணப்பட்டப் புரிந்துணர்தலே.
இத்தனைக்கும் அவந்திகா இருபத்தி நான்குமணி நேரமும் ராகவின் நினைவில் மூழ்கி விடவும் இல்லை, அவனும் காதலிக்கிறேன் பேர்வழியென பத்துப் பக்கத்துக்கு காதல் வசனமும் பேசவில்லை. ஆனால் இது காதலா என்று புரியாத ஆரம்பநிலையில் இருந்த அவர்களின் உறவில் இன்னும் உரிமையுணர்வு தோன்றவில்லை.
இளையவர்கள் இவ்வாறான மனநிலையுடன் இருக்க, பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை. கௌசல்யாவுக்கும் ரகுவரனுக்கும் இன்னும் ஆறு மாதங்களே அவந்திகா தங்களுடன் இருப்பாள் என்ற வருத்தம். அம்புஜாவுக்குப் பேத்தியின் திருமணத்தைத் தங்களது வழக்கப்படி முடிக்க இயலாதோ என்ற கவலை, உபயம் சுமித்ராவின் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க முடியாத பிடிவாதம்.
அதே நேரம் பிரதியுஷாவின் பாட்டியான கல்யாணிதேவிக்கு இந்தச் சம்பந்தத்தில் பிடித்தமென்று சொல்லமுடியாது. இருந்தாலும் பேத்தி ஆசைப்பட்டுவிட்டாளே என்ற எண்ணத்துடன் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவருக்கோ நீண்டநாள் கழித்து தங்கள் குடும்பத்தில் நடக்கும் திருமணம் தங்களது பாரம்பரிய சடங்குகள் ஏதுமின்றி எளிமையாக நடைபெறப் போகிறதே என்ற ஆதங்கம்.
வருணின் குடும்பத்தினருக்கு மூத்த மருமகளைப் பற்றி எவ்வித கவலையுமில்லை. அந்தளவுக்குப் பிரதியுஷா ஒவ்வொருவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டாள் அவளது பணிவாலும், அன்பான நடத்தையாலும். ஆனால் இளைய மருமகளுக்குத் தான் தங்களைப் பிடிக்கவில்லையோ என்று எண்ணிக் கொண்டிருந்தனர் வீட்டின் பெண்மணிகள் அனைவரும்.
ஆனால் கடவுள் கொடுத்த வாய்ப்பைப் போல அவந்திகாவும் ரித்திமாவும் கல்யாணவேலை காரணமாக அடிக்கடி கபூர் பேலசுக்கு வருகை தந்ததால் வேறு வழியின்றி அவந்திகா புகுந்த வீட்டினரிடம் பழகும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டாள் என்று தான் சொல்லவேண்டும்.
ஆனால் நாளாக நாளாக அவளோடு சேர்ந்து ரித்திமாவும் அங்கிருந்தவர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டனர். இளம்பெண்களாக இருந்தாலும் இருவரும் திட்டமிட்டுப் பொறுப்புடன் அனைத்து வேலைகளையும் செய்யும் பாங்கு சுமித்ராவின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியது. கூடவே அவரது பேரன்களான ராகவ் மற்றும் கிஷோரின் கவனமும் திரும்பியது அப்பெண்களின் பால்.
வெறும் கவனயீர்ப்பாக இது நின்று விடப்போவதில்லை என்று தெரிந்துக்கொண்ட கியூபிட்டும் அம்புடன் தயாராக இருந்தது, எய்யப்போகும் நேரத்துக்காகக் காத்திருந்தபடி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


