பிரதியுஷாவின் திருமணநாள் அருகில் வந்துவிட்டது. இருவீட்டினரும் பரபரப்பாக அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த சமயம் இளம்பெண்கள் அனைவரும் மெஹந்தி போடும் நிகழ்வை எதிர்நோக்கியிருந்தனர். பிரதியுஷாவின் வீட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முந்தைய நாள் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ததாலோ என்னவோ ரித்திமாவும் அவந்திகாவும் அசந்து உறங்கிவிட்டனர்.
அவர்கள் துயிலெழுந்த வேளையில் அவர்களின் குடும்பத்தினர் மெஹந்திக்காகத் தயாராகி இருந்தனர். இரு பெண்களையும் வரச் சொல்லிவிட்டு அவர்கள் பிரதியுஷாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
திருமணத்துக்காக கல்யாணிதேவி ஏற்பாடு செய்திருந்த பூஜை ஆரம்பிக்கவும் அவர்கள் செல்லவும் சரியாக இருந்தது. மணமகன் வீட்டினர் மெஹந்தியில் கலந்து கொள்வதாகச் சொல்லிவிட்டவர்கள் அவர்கள் தரப்பு சடங்குகளில் பிசியாகி விட்டதால் பூஜையில் கலந்துகொள்ள இயலவில்லை.
வாசந்தியும் கௌசல்யாவும் மைதிலியுடன் சேர்ந்து பிரதியுஷாவுக்கு திருமண சமயத்தில் எழும் பதற்றத்தைப் போக்கும் விதமாக வாஞ்சையுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவளும் இதற்கு பிறகு இப்படியெல்லாம் பேசுவதற்கு எப்போது சமயம் வாய்க்குமோ என்ற ஏக்கத்துடன் பெரியவர்களிடம் பேசியவளின் மனம் தோழிகளைத் தேட ஆரம்பித்தது.
அவர்கள் இருவரும் ஆடி அசைந்து வந்த போது பூஜை முடிவுற்றிருந்தது. கல்யாணிதேவி வந்ததும் இருவரையும் பிடித்துக்கொண்டார்.
“பூஜைக்கு வரச் சொன்னா நீங்க மெஹந்திக்கு வந்திருக்கிங்க? அவ்ளோ பெரியமனுயா ஆகிட்டிங்களா?” என்றவரை வாதத்தில் வெல்ல இயலாது என்பது ரித்திமாவுக்கும், அவந்திகாவுக்கும் நன்கு தெரியும். அதனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டவர்கள் அடுத்த நொடி இருவரும் ஒருசேர அவரை அணைத்திருந்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“டயர்டா இருந்துச்சு தாதி! அதான் எழுந்திருக்க டைம் ஆயிடுச்சு” என்று அவரைக் கொஞ்சி சமாதானம் செய்தவர்கள் அவரிடம் ஏற்பாடுகள் திருப்தியா என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே ரன்வீர் ராஜ்வர்தனுடன் எதையோ விவாதித்துக் கொண்டு வந்தவன்
“ரெண்டு பேருக்கும் இப்போ தான் விடிஞ்சுதா மேடம்ஜி?” என்று நக்கலடிக்க
“அண்ணா! ஒரு நாள் ஒரே நாள் பத்து மணிக்கு எழுந்திருச்சதுக்கு எல்லாரும் ரவுண்ட் கட்டி அடிச்சா என்ன அர்த்தம்?” என்று பழிப்பு காட்டினாள் ரித்திமா.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் பிரதியுஷா தேவதை போல லெஹங்காவில் தயாராகி அர்ஜூனுடன் கதை பேசியபடி மாடிப்படியில் இறங்கிக் கொண்டிருந்தாள்.
இரு தோழியருக்கும் நன்கு தெரியும், பிரதியுஷா அழகி என்று. ஆனால் திருமணக்களை அவளைப் பேரழகியாகக் காட்டியது என்றால் மிகையில்லை. செய்திருந்த அலங்காரங்களை மீறி அவளது முகத்தில் எப்போதும் சுடர் விடும் அவளது இயல்பான கம்பீரம் இன்றைக்கும் அவளை விட்டு நீங்கவில்லை.
தன்னை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தோழியரை நோக்கியவள் “ஹலோ! இங்கே இருக்கிங்களா ரெண்டு பேரும்?” என்று அவர்கள் கண் முன் கையை ஆட்டி உறுதிப்படுத்தியபடி அவர்களருகில் சோபாவில் அமர அர்ஜூன் அவள் மடியில் அமர்ந்து கொண்டான்.
மைதிலியுடன் பூஜை நடந்த இடத்தைச் சுத்தம் செய்ய உதவிக்கொண்டிருந்த அம்புஜா “அஜ்ஜூ! அக்காவோட டிரஸ்ஸைக் கசக்கிடாதேடா… இங்கே வா” என்று அதட்ட
“இட்ஸ் ஓகே அம்பு! லட்டுக்குட்டி உக்காந்தா ஒன்னும் ஆகிடாது” என்ற பிரதியுஷா அவனது கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினாள்.
அதேநேரம் தன்னருகில் அமர்ந்திருந்த தோழிகளைப் புருவச்சுழிப்புடன் பார்த்துவிட்டு
“என்னடி இப்பிடி வந்திருக்கிங்க? போய் டிரஸ் சேஞ்ச் பண்ணுங்க ரெண்டு பேரும்… இன்னும் கொஞ்ச நேரத்துல வருண் ஃபேமிலி வந்துடுவாங்க” என்று தோழியரிடம் சொல்ல
அவர்களோ “ஏன் இந்த டிரஸ்ஸுக்கு என்னவாம்? நம்ம ஃபேமிலி, அவங்க ஃபேமிலி மட்டும் தானே இருக்கப் போறோம்… போட்டோகிராபர் அண்ணா, மெஹந்தி போடுற கேர்ள்சும் மட்டும் தான் வெளியாட்கள்… அப்பிடி இருக்கிறப்போ இந்த காஸ்ட்யூம் போதும் உஷா” என்று மறுக்க
“ஒழுங்கா உங்களுக்கு நான் செலக்ட் பண்ணி வச்சிருக்கிற லெஹங்கால ரெடியாகுங்க.. இல்லைனா நடக்குறதே வேற” என்று பிரதியுஷா மிரட்ட ஆரம்பிக்கவும் இருவரும் வேறு வழியின்றி பிரதியுஷாவின் அறைக்குச் சென்று அவள் அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த லெஹங்காவை அணிந்து கொண்டனர்.
ரித்திமா அதைச் சாதாரணமாக அணிந்துகொள்ள அவந்திகா ஆயிரம் குறைகளை அடுக்கத் தொடங்கினாள்.
“எனக்கு லெஹங்கானாலே சுத்தமா பிடிக்காது ரித்தி… இதைப் போட்டா ஒரு மாதிரி அன்கம்ஃபர்டபிளா ஃபீல் ஆகுது… ஐயோ இதுக்கு ஷாரி பரவால்லடி… நான் பேசவா ஒரு புடவையைச் சுத்திக்கவா? இது அங்கங்க தெரியுதுடி” என்று வருத்தப்பட
ரித்திமா “ஒன்னு பண்ணு ஹனிபி! பேசாம இதுக்கு மேல ரெயின் கோட் மாதிரி ஒன்னை போட்டு கவர் பண்ணிக்கோ” என்றதும்
“ரித்தி….” என்று சிணுங்கினாள் அவந்திகா.
“பின்ன என்னடி? ஷேரியிலயும் தான் இடுப்பு தெரியுது.. அதுக்கு என்ன பண்ண? பேசாம அங்க இங்க விலகாம இருக்க ஆணி வச்சு அறைஞ்சுருவோமா?” என்று கடுப்புடன் உரைத்துவிட்டு தனது பார்வையைக் கண்ணாடி புறம் திருப்பினாள் ரித்திமா.
அதன் பின்னர் அவந்திகா அவளிடம் வாதாடாமல் தானும் கண்ணாடி முன்னே நின்று தோற்றத்தைத் திருத்திக் கொண்டாள். இருவரும் எளிமையான அலங்காரத்துடன் கீழே வரும் போதே வருண் குடும்பத்தினரின் குரல் ஒலித்தது.
“என் மருமகள் பேருக்கேத்த மாதிரி ரதியே தான்” என்று சிலாகித்த பிரியாவின் குரலும், சுமித்ராவின் வெண்கலக்குரலும் சேர்ந்து ஒலிக்கவே அவந்திகாவும் ரித்திமாவும் வேகமாக ஹாலுக்கு வந்து வருண் குடும்பத்தினரிடம் வழக்கம் போல பேச ஆரம்பித்தனர்.
நல்ல நேரத்தில் பிரதியுஷாவின் கையில் மருதாணி போடப்பட்டது. பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்வு என்பதால் வருண் குடும்பத்தின் ஆண்கள் யாருமே அதில் கலந்துகொள்ளவில்லை. அதனால் தான் என்னவோ மருதாணி வைக்கும் நிகழ்வை பெண்களுக்கே உரித்தான ஆர்வத்துடன் கலந்துகொள்ள ஆரம்பித்தனர் அனைவரும்.
பிரியா அவந்திகாவையும் ரித்திமாவையும் மருதாணி போட்டுக் கொள்ளுமாறு அழைக்க இருவரும் அமர்ந்தனர். இருவருமே போட்டு முடிக்கும்வரை அங்கிருந்து அக்கம் பக்கம் நகராமல் அங்கேயே அமர நேகாவும் பிந்துவும் மருதாணி போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் உரையாடியபடி இருவரையும் கேலி செய்து கொண்டிருந்தனர்.
மருதாணி போட்டு முடிந்ததும் அவந்திகா அங்கிருந்து எழுந்தவள் தண்ணீர் தாகம் எடுத்ததால் மேஜையில் மூடி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரம்பிய தம்ளரை எடுக்க முடியாது தவித்துப் போய் நின்றாள். அவளது நல்ல நேரமோ என்னவோ சுமித்ரா அவரது வெண்கலத் தொண்டையை நனைப்பதற்காக அங்கே வந்தார்.
“என்னாச்சும்மா? ஏன் இங்கே நின்னிட்டிருக்க? தண்ணி குடிக்கப் போறியா?” என்று கேட்டவரிடம் ஆமென்று தலையாட்டியவள் பரிதாபமாகத் தனது இரு கரங்களையும் காட்ட சுமித்ரா தண்ணீர் தம்ளரை எடுத்தவர்
“வாயைத் திற” என்று சொல்லிவிட்டுச் சிறுகுழந்தைக்குப் புகட்டுவது போலத் தண்ணீரை அருந்த வைக்க அது அம்புஜாவின் கண்ணில் பட்டுவிட்டது.
இந்தப் பிடிவாதக்காரப் பெண்மணிக்குள் இவ்வளவு அன்பா என்று எண்ணி வியந்தபடி பேரனுடன் அங்கே வந்தவர்
“விட்டா அவளுக்கு நிலாச்சோறு ஊட்டுவிங்க போல” என்று கேலி செய்ய அதற்கு மனம் விட்டு நகைத்தார் சுமித்ரா.
“அது என் பேரனோட வேலை… அதுல நான் தலையிடக் கூடாதே!” என்று அம்புஜாவுக்கு இணையாகச் சளைக்காமல் கேலி செய்யவே முதல் முறையாக அவந்திகாவுக்கு அவரிடமிருந்த தயக்கம் மறைந்தது.
மாமனார், மாமியார், நாத்தனார்கள் வரிசையில் சுமித்ராவும் அவரது விருப்பப்பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்.
“உங்க பேரன் ஊட்டிவிட்டுத் தான் நான் சாப்பிடணும்னா என் வாழ்க்கையில முக்கால்வாசி நாள் நான் பட்டினியா தான் கிடக்கணும் தாதி… அவன் சரியான மறதி பேர்வழி” என்று அவந்திகா முகத்தைச் சுருக்கிக் கேலி செய்யவே இரண்டு முதியப்பெண்மணிகளும் அடக்கமாட்டாமல் நகைக்கத் தொடங்கினர்.
அன்றைய மெஹந்தி நிகழ்ச்சி அனைவருக்கும் மனநிறைவை அளித்ததோடு இருகுடும்பத்தினருக்கும் இடையே இருந்த சின்ன சின்ன கருத்து மோதல்களையும் சரி செய்துவிட்டது.
மறுநாள் காலையில் ஹல்தி எனும் மஞ்சள் பூசும் சடங்கு மணமக்கள் இருவர் வீட்டிலும் ஜெகஜோதியாக ஆரம்பித்தது. மாலையில் திருமணத்துக்கான ஏற்பாடுகளில் கண்ணாயிருந்த அவந்திகாவும் ரித்திமாவும் இறுதியாக வந்து மீதமுள்ள மஞ்சள் மொத்தத்தையும் பிரதியுஷா கன்னத்தில் பூசி வைத்தனர்.
வருண் குடும்பத்தினர் நீண்டநாள் கழித்து வீட்டின் மூத்தவாரிசுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தின் முக்கியச்சடங்கை நல்லபடியாக முடித்துவிட்டு இளையவனைக் கேலி செய்ய ஆரம்பித்தனர்.
“இன்னும் ஆறே மாசம் தான் மை சன்… அப்புறம் நீயும் இப்பிடி மஞ்சள்ல குளிச்சாகணும்” என்று மோகன் ராகவைக் கேலி செய்ய
“கண்டிப்பாடா! இதில இருந்து தப்பிச்சவங்கனு நம்ம குடும்பத்துல யாருமே இல்லை… நிரஞ்சனுக்கு மஞ்சள் ஸ்மெல்லே ஆகாது… அவனோட ஹல்தி ஃபங்சன் இப்போவும் எனக்கு நியாபகம் இருக்கு… அன்னைக்கு முழுக்க அவன் முகம் விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி தான் இருந்துச்சு” என்று குணால் அவரது இளையச் சகோதரரை இந்தக் கலாட்டாவுக்குள் கொண்டு வரவே
“கரெக்டா சொல்லுறிங்க… எங்கம்மா கூட மாப்பிள்ளைக்குக் கடைசி நேரத்துல கல்யாணத்துல இஷ்டமில்லையோனு ரொம்ப பயந்துட்டாங்க” என்று வீணாவும் தனக்குக் கிடைத்தப் பொன்னானச் சந்தர்ப்பத்தை வீணாக்காதவராய் கணவரைக் கிண்டல் செய்து திருப்திப்பட்டுக் கொண்டார்.
ராகவ் இதையெல்லாம் கேட்டுவிட்டு “இது எதுவுமே வேண்டாம்னு நான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டா என்ன பண்ணுவிங்க?” என்று கேட்கும் போதே ராதிகா அவனது காதைப் பிடித்துத் திருகியவர்
“எனக்குனு இருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு நீ ஒருத்தன் தான்… உன் கல்யாணத்தை கிராண்டா பண்ண முடியாத நிலமை… அட்லீஸ்ட் சிம்பிளா சில சடங்கு சம்பிரதாயத்தோட நடந்தா நல்லா இருக்கும்னு நினைச்சா நீ அதுக்கும் வேட்டு வைச்சிடுவ போல இருக்கே” என்று ஆதங்கத்தைக் கொட்ட ஆரம்பித்தார்.
“கம் ஆன் மம்மிஸ்… இப்போ இது தான் டிரெண்ட்… கெட்டிங் மேரிட் இன் அ பிரைவேட் செரிமோனினு சொல்லிக்கிறது தான் இப்போ கெத்து” என்று கிஷோர் காலரைத் தூக்கிக் காட்ட
“அப்போ உனக்கும் அதே ஐடியாவா மகனே?” என்று கேட்டு கிஷோரை வசமாக மாட்டிவைத்துவிட்டு ஒன்றும் தெரியாதப் பிள்ளையைப் போல முகத்தை வைத்துக் கொண்டார் நிரஞ்சன்.
“ஐயோ டாட்! நீங்க வேற… என் ஒன் சைட் ஃபீலிங்கை அந்தப்பொண்ணு புரிஞ்சுக்கவே மாட்றானு நான் வருத்தத்துல ஒரு சுத்து குறைஞ்சு போயிருக்கேன்… இதுல நீங்க வேற கலாய்க்காதிங்க” என்று ரித்திமாவை மனதில் வைத்துச் சொல்லிவிட்டு தோளைக் குலுக்கிக் கொண்டான்.
ராகவ் அதைக் கண்டுகொண்டவனாய் “என்னடா பண்ணுறது? உயரமான பொண்ணுங்களை லவ் பண்ண வைக்கிறது ரொம்ப கஷ்டம்” என்று அமருடன் சேர்ந்து கிஷோரை கேலி செய்ய
அவனோ “உயரமான பொண்ணுங்களை லவ் பண்ண வைக்கிறது தான் கஷ்டம் பய்யா… பட் குள்ளமான பொண்ணுங்களை சமாளிக்கிறது அதை விடக் கஷ்டம்” என்று அவந்திகாவை மனதில் வைத்து ராகவை வாரிவிட்டுச் சந்தோசப்பட்டுக் கொண்டான்.
இளையவர்கள் கேலி கிண்டலில் மூழ்கியிருக்க பிரியாவும் ராதிகாவும் மாலை நேரம் நடைபெறப் போகிற திருமணத்துக்காக தங்கள் தரப்பிலிருந்து எடுத்துச் செல்ல வேண்டியவற்றை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒருவாறாக இரு குடும்பத்தினரும் எதிர்பார்த்த அந்தப் பொன்மாலை பொழுதும் வந்துவிட்டது.
கல்யாண் நகரில் பிரதியுஷாவின் வீடு விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. ரகுவரன், ராஜ்வர்தன், ரவீந்தர் மற்றும் ரன்வீர் திருமண நிகழ்வுக்குத் தயாராகி மாப்பிள்ளை குடும்பத்தினருக்காகக் காத்திருந்தனர்.
மைதிலியும் கௌசல்யாவும் புரோகிதர் சொன்னவற்றை எடுத்துக்கொடுத்தபடி பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தனர். வாசந்தி ரித்திமாவுடன் சேர்ந்து பிரதியுஷாவுக்கு நடைபெற்ற மணப்பெண் அலங்காரத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
அலங்காரம் முடிவடைந்ததும் எழுந்து வந்தவளை நாடியைப் பிடித்துக் கொஞ்சியவர் பன்னிரெண்டு வருடங்கள் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது என்று பெருமூச்சுவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அங்கே ஆஜரான கௌசல்யாவும் மைதிலியும் கூட அதே மனநிலையுடன் தான் இருந்தனர். இன்னும் சிலமணி நேரங்களில் இந்த அழகுதேவதை இன்னொரு இல்லத்துக்குச் செல்லப் போகிறாள் என்ற ஏக்கம் சூழ்ந்தாலும் பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் அந்த ஏக்கத்தைக் கடந்து செல்லப் பழக தானே வேண்டும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


