கோரமங்களா, கபூர் பேலஸ்…
“என் அண்ணன் மகளுக்கு உங்க பேரன் என்ன பதில் சொல்லப் போறான்மா? அவளுக்கும் அவனுக்கும் இந்த வருசக்கடைசியில என்கேஜ்மெண்ட்னு ரெண்டு குடும்பமும் பேசி வச்சிருக்கிற நேரத்துல அவன் திடீர்னு நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒருத்தியைக் காதலிக்கிறேனு சொல்லிட்டு வந்து நிக்கிறான்… அவனுக்குப் புத்தி சொல்லித் திருத்தாம அவளை இந்த வீட்டுக்கு மருமகளாக்கணும்னு சொல்லுறிங்களே! இது கொஞ்சம் கூட நல்லா இல்லைம்மா… தியாவைப் பத்தி யாருமே யோசிக்க மாட்டிங்களா?” என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார் வீணா.
சுமித்ரா அவரைத் தீர்க்கமாய் பார்த்துவிட்டு “நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா வீணா? ராகவ் நம்ம மேல உள்ள மரியாதையில அந்தப் பொண்ணைக் காதலிக்கிறேனு சொல்லிருக்கான்… அவன் குடுக்கிற மரியாதையைக் காப்பாத்திக்க வேண்டாமா? என் பேரன் இதுவரைக்கும் தப்பான முடிவெதுவும் எடுத்ததில்லை… இந்த முடிவையும் நல்லா யோசிச்சு தான் எடுத்திருப்பான்… இதுக்கு மேல இந்த வீட்டுல யாரும் ராகவ் கூட தியாவைச் சேர்த்து வச்சு பேசக்கூடாது” என்று கட்டளையிட்டு விட்டுச் செல்பவரை வீணாவால் வெறிக்கத் தான் முடிந்தது.
மனம் பொரும அண்ணனுக்குப் போன் செய்தவர் விஷயத்தைச் சொல்லவும் அவரது அண்ணன் வீணாவைக் கொஞ்சம் பொறுமை காக்கும்படி கூறவே அவரும் அமைதியானார், புயலுக்கு முன் வரும் அமைதியைப் போல.
ராதிகாவுக்கும் பிரியாவுக்கும் இதில் கருத்து சொல்ல எதுவுமில்லை. பிள்ளைகளின் நலன் கருதும் அன்னையர் அவர்கள் இருவருமே. இன்னும் வீட்டின் ஆண்கள் இந்தியா திரும்பவில்லை என்ற யோசனை அவர்களுக்கு.
ஆனால் ராகவின் இந்தக் காதலை நம்பாதவன் வருண் மட்டுமே. அவனுக்குத் தன் இளைய சகோதரனைப் பற்றி நன்றாகவே தெரியும். அவனது மனதில் காதல் என்ற மென்மையான உணர்வுக்கு இடமில்லை என்பதை வருண் நன்கு அறிவான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“பய்யா! காதல்ங்கிற ஃபீலிங் மனுசனைப் பலகீனமாக்கிடும்… என்னை வீக் ஆக்குற எந்த ஃபீலிங்குக்கும் என் மனசுல இடமே கிடையாது… ஒரு பொண்ணு பின்னாடி காதல், கத்திரிக்கானு சுத்துறதுக்குப் பதிலா நம்ம பிஸினஸ்ல என்ன புதுசா கொண்டு வரலாம்னு யோசிக்கலாம்… நம்ம நெட்வொர்த்தாச்சும் இன்கிரீஸ் ஆகும்” என்று சொல்லிவிட்டுக் கடக்கும் இளையவனுக்கு இப்போது அவந்திகா மீது காதல் என்றால் அதை அவனைப் படைத்த இறைவனால் கூட நம்ப இயலாது தான்.
இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சிந்தித்திருக்க ராகவ் அடுத்தடுத்துக் காய்களை வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டிருந்தான். இப்போது இருவீட்டாருமே அவனது பேச்சை முழுவதுமாக நம்ப ஆரம்பித்துவிட்ட நிலையில் பெரியப்பா சித்தப்பாவோடு தந்தை நாடு திரும்பும் நாளுக்காகக் காத்திருந்தான் அவன்.
இடையிடையே அவந்திகாவைச் சந்தித்து காண்போர் கண்ணுக்கெல்லாம் தாங்கள் காதலர்கள் தான் என்று நிரூபித்துக் கொண்டிருந்தான் அவன். அதில் அவள் எரிச்சலுற்றாலும் அதையெல்லாம் அவன் கண்டுகொண்டால் தானே!
இந்நிலையில் அவனது குடும்பத்துப்பெண்கள் மட்டும் ஒரு நாள் அவந்திகாவின் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர், ராகவுடன் சேர்ந்து தான். கௌசல்யாவும் ரகுவரனும் திணறிப் போனாலும் பின்னர் ஒருவாறு சமாளித்துவிட்டனர். அன்று ஞாயிறு என்பதால் அவந்திகாவும் அர்ஜூனும் வெளியே சென்றிருக்க வீட்டுக்கு வந்த நான்கு பெண்மணிகளையும் மாமியாரின் துணையுடன் உபசரித்துக் கொண்டிருந்தார் கௌசல்யா.
சில செடிகளுடன் கூடிய வராண்டா, ஒரு ஹால், சின்னப் பூஜையறை, மூன்று படுக்கையறைகள், சமையலறையுடன் கூடிய உயர்நடுத்தரவர்க்கத்தினரின் அளவான அழகான வீடு என்று எண்ணமிட்டபடி ராகவின் குடும்பத்தினர் வீட்டின் நேர்த்தியைக் கண்களால் சிலாகித்துக் கொண்டிருந்தனர்.
“அவந்திகா அவ தம்பி கூட வெளியே போயிருக்கா” என்று சங்கடத்துடன் அவர்களிடம் கூறியவர் ராகவிடம் கண்ணால் மன்னிப்பு வேண்ட அவன் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று போனுடன் வெளியே சென்றான்.
வராண்டாவுக்கு வந்தவன் அங்கே உள்ள மனிப்பிளாண்ட் அருகே கிடந்த இருக்கையில் அமர்ந்தபடி அவந்திகாவைப் போனில் அழைத்தான். அவன் எண்ணியது போல கிட்டத்தட்ட பதினைந்து முறைகளுக்கும் மேல் இணைப்பைத் துண்டித்தவள் அவனது “நம்ம ரெண்டு ஃபேமிலியும் இப்போ நம்ம மேரேஜைப் பத்தி பேசிட்டிருக்காங்க” என்ற மெசேஜ் கிடைத்தது தான் தாமதம், அடித்துப் பிடித்து அடுத்த அரைமணி நேரத்தில் அர்ஜூனுடன் வீட்டில் வந்து நின்றாள் அவள்.
அர்ஜூன் ராகவைப் பார்த்துப் புன்னகைத்தபடி உள்ளே ஓடிவிட அவந்திகா எரிச்சல் மூண்ட முகத்துடன்
“இப்போ எதுக்கு இங்கே வந்திருக்க நீ? நான் தான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேனே, எனக்கு உன்னை மாதிரி ஒருத்தனை மேரேஜ் பண்ணிக்கிறதுல துளி கூட இஷ்டமில்லைனு… அப்பிடி சொன்னதுக்கு அப்புறமும் நீ ஃபேமிலியோட வந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்க
“நம்ம கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு அர்த்தம்” என்று சட்டென்று சொல்லிவிட்டு எழுந்தான் ராகவ்.
“உள்ளே போவோமா?” என்று கேட்டபடி அவளது அனுமதியின்றி கரம் கோர்த்தவன் அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.
உள்ளே நுழைந்த அவந்திகாவை மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைப் பார்வையிடுவது போன்று பார்த்த சுமித்ராவுக்கு முதல் பார்வையில் அவள் மீது அப்படி ஒன்றும் நல்ல அபிப்ராயம் தோன்றவில்லை.
வியர்த்து வழிந்த முகத்துடன் தலைமுடி கலைந்திருக்க, வெள்ளை டிசர்ட்டும் ஜீன்சுமாக நின்றவளின் முகத்தில் துளியும் பணிவில்லை. அவளது கண்கள் எரிச்சலுடன் ராகவை அளவிடுவதை அந்த மூதாட்டி எப்படியோ கண்டுகொண்டார்.
பேரன் என்னவென்றால் இவள் மீது காதலில் கசிந்துருகாதக் குறை தான். ஆனால் இப்பெண்ணோ தன் பேரனையே எரிச்சலுடன் உறுத்து விழிக்கிறாளே என்ற எண்ணம் அவருக்கு.
ராதிகாவுக்கும் மற்ற இருவருக்கும் அவந்திகாவின் தோற்றம் ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை. தங்கள் வீட்டிலும் அவள் வயதுப்பெண்கள் இப்படித் தானே இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு அவளை வாஞ்சையுடனே பார்த்துக் கொண்டிருந்தனர். வீணாவுக்கு மட்டும் சற்று அலைக்கழிப்பு தான். அண்ணன் மகள் இருக்க வேண்டிய இடம் இப்படி அநியாயமாய் பறி போகிறதே என்ற ஆதங்கம் அவருக்கு.
உபசரிப்பு முடிந்து திருமணப்பேச்சையும் எடுத்தாயிற்று. கௌசல்யா தங்கள் குடும்பத்தினருக்கு முழுச்சம்மதம் என்று சொல்லிவிட சுமித்ரா தங்கள் பேரனின் விருப்பம் தான் தங்களுக்கும் என்று ஒற்றைவார்த்தையில் கூறிவிட்டார்.
வீட்டு ஆண்களிடம் பேசும்போது அவர்களும் சம்மதித்துவிட்டதாக அவர் கூறவே அவந்திகாவுக்கு ராகவின் மேல் கொலைவெறியே வந்தது. அவர்கள் சொல்வதைக் கேட்டுப் பூரித்து நின்ற கௌசல்யாவை எண்ணி மானசீகமாகத் தன் தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.
அவரிடம் எத்தனையோ முறை தான் ராகவைக் காதலிக்கவே இல்லை என்று பிடிவாதமாக மறுத்திருக்கிறாள். ஆனால் அவந்திகாவின் பொய் சொல்லும் பழக்கமே அவளுக்கு இப்போது எதிரியாகிவிட்டது. அவள் வழக்கமாக விளையாட்டுக்குச் சொல்லும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று என்ற ரீதியில் அவள் சொன்னதை கௌசல்யா எடுத்துக்கொள்ள, மற்றவர்களோ ராகவின் பேச்சுத்திறமையில் மதிமயங்கி இந்தச் சம்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் பேசிமுடித்துவிட்டுக் கிளம்பியதும் “சித்தி! நான் நிஜமாவே ராகவை லவ் பண்ணலை! பிளீவ் மீ” என்று கௌசல்யாவின் புடவையைப் பிடித்தபடி சொன்னவளை அப்போதும் அவர் நம்பவில்லை என்பது தான் வேடிக்கை.
வீட்டினர் எவரும் அவள் பேச்சைக் கேட்கவில்லை என்ற வருத்தத்தில் தோழியரிடம் புலம்பித் தள்ளினாள் அவந்திகா. பிரதியுஷாவும் ரித்திமாவும் தாங்கள் கௌசல்யாவிடம் பேசிப் பார்ப்பதாகச் சொல்லவும் சரியென்றாள் அவந்திகா.
அன்றைக்கு வீட்டுக்கு வந்ததுமே ரித்திமா கௌசல்யாவுடன் தனியே சென்று அமர்ந்தவள் “அக்கா! ஹனிபிக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையாம்… அவ ராகவை லவ் பண்ணலைனு சொல்லுறாக்கா… நீங்க கொஞ்சம் அவ என்ன சொல்லவர்றானு கேக்கலாம் தானே!” என்று பொறுமையுடன் பேசவே
“அவ தான் ரகு கிட்ட பண்ணுனா லவ் மேரேஜ் தான் பண்ணுவேனு சபதம் போடாதக் குறையா பேசுனா ரித்தி…. திடுதிடுப்புனு ராகவ் வந்து லவ் பண்ணுறேனு சொன்னதும் எனக்கும் ஒன்னும் புரியலை… ஆனா அவங்க ரெண்டு பேரையும் அடிக்கடி வெளியிடத்துல பார்க்கிறதா பக்கத்துவீட்டுக்காரங்க எல்லாருமே சொல்லுறாங்க… உனக்கு அவளைப் பத்தி தெரியாதா? அவளுக்கு ராகவ் மேல ஏதோ கோவம்! அதான் இப்பிடி சொல்லுறாளே தவிர அவங்க லவ் பண்ணுறது நிஜம் தான்” என்று முடித்துவிட்டார் கௌசல்யா.
இதை அவந்திகாவிடம் சொன்னபோது அவளோ “ஐயோ! நான் எங்கேடி அவன் கூட வெளியிடத்துக்குப் போனேன்? அவன் தான் நான் போற இடத்துக்கு வந்தான்… யாருமே என்னை நம்பாம இருந்தா நான் என்ன பண்ணுவேன்?” என்று புலம்பவும்
“கொஞ்சம் பொறுமையா யோசி ஹனிபி… நீயும் அவனும் ட்வென்ட்டி ஒன் டேய்ஸ் வெகேசனுக்குப் போயிருந்ததா ஒரு இண்டர்வியூவில அவனோட பெர்சனல் லைஃப் பத்தி கேட்டதுக்குச் சொல்லிருக்கான்… அதைலாம் நான் சொல்லியும் நீ இப்பிடி எடுத்தேன் கவிழ்த்தேனு பேசுனா என்ன அர்த்தம்? கௌசிக்காவைப் பத்தி யோசி… ஆல்ரெடி அந்த விக்ரமோட அம்மா அவங்களைப் பேசக் கூடாத பேச்சைலாம் பேசிட்டாங்க… இப்போ நீயும் அடம்பிடிச்சா என்ன அர்த்தம்?” என்று பிரதியுஷாவும் கௌசல்யாவைப் போல பேசவும் இருவருக்கும் அதிர்ச்சி.
“உஷா! நீயா அவனுக்குச் சப்போர்ட் பண்ணுற?” – அவந்திகா.
“நான் சப்போர்ட் பண்ணலை ஹனிபி! நிதர்சனத்தைச் சொல்லுறேன்… இன்னைக்கு உலகத்தைப் பொறுத்தவரைக்கும் ராகவ்வும் நீயும் லவ்வர்ஸ்… இப்போ உங்க ரிலேஷன்ஷிப் பிரேக் ஆச்சுனா கௌசிக்காவைத் தான் எல்லாரும் பிளேம் பண்ணுவாங்க… நீயே அவங்களோட வளர்ப்பு சரியில்லைனு சொல்லுறதுக்கு இந்த உலகத்துக்கு இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்திக் குடுக்கப் போறியா?” – பிரதியுஷா.
“அதுக்குனு இவளைக் காதலிக்காத ஒருத்தனை இவளால எப்பிடி மேரேஜ் பண்ணிக்க முடியும் உஷா? மத்தவங்களுக்காக பார்த்து ஹனிபி லைஃப் நாசமா போச்சுனா அதுக்கு அப்புறம் நீயும் நானும் நினைச்சா கூட அதை கரெக்ட் பண்ண முடியாது” – ரித்திமா.
“இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சனை? வாழ்க்கையில எல்லா நேரமும் நான், என்னோடதுனு சுயநலமா யோசிச்சிட்டிருக்க முடியாது… சில நேரங்கள்ல நமக்குப் பிடிச்சவங்களுக்காகப் பிடிக்காத விஷயத்தை நாம செய்ய வேண்டியிருக்கும்… நான் ஒன்னே ஒன்னு கேக்கவா? நீ விக்ரமை மேரேஜ் பண்ணிக்க யோசிக்காம சரினு சொன்னியே, ராகவ் விஷயத்துல மட்டும் ஏன் இவ்ளோ யோசிக்கிற?” என்று வினவிய பிரதியுஷாவுக்குச் சொல்ல அவளிடம் வார்த்தை எதுவுமில்லை.
“உன்னால இதைப் புரிஞ்சுக்க முடியாது உஷா… நீயும் வருணும் காதலிக்கலாம்… பிகாஸ் நீங்க ரெண்டு பேருமே எலைட் கிளாஸ்… ஆனா ராகவும் நானும் அப்பிடி இல்லை… நாங்க எல்லா விதத்துலயும் வேற வேற… அன்னைக்கு அவங்க பாட்டி என்னை ஒரு பார்வை பார்த்தாங்க… என் வாழ்க்கையில நான் அதை மறக்க மாட்டேன்… அவங்கலாம் ரொம்ப பெரிய இடம் உஷா… நான்னு இல்லை, என் இடத்துல யார் இருந்தாலும் இப்பிடித் தான் யோசிப்பாங்க” என்று சொல்லிமுடித்துவிட்டாள் அவந்திகா.
உண்மையும் அது தானே! தகுதிக்கு மீறிய எதுவுமே நம் கைகளில் அதிகநாட்கள் தங்குவதில்லை. அது தான் அவந்திகாவின் தயக்கத்துக்கு முதல் காரணம். இரண்டாவது காரணம் முதல் சந்திப்பிலேயே காதலைப் பற்றி அவன் சொன்ன கருத்து. காதலிப்பது முட்டாள்களின் வேலை என்று அவளிடமே சொன்னவனைத் திருமணம் செய்து காதலற்ற வாழ்வை ஆரம்பிக்க அவள் என்ன பைத்தியமா?
எண்ணி எண்ணிச் செலவளித்து வாழ்ந்தாலும் மனதுக்குப் பிடித்தவனுடன் வாழவே அனைத்துப் பெண்களும் விரும்புவர். அதை அவந்திகாவும் விரும்பியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
அவள் இவ்வளவு யோசிப்பதால் பிரதியுஷா தானே ராகவிடம் பேசுவதாக அவந்திகாவைச் சமாதானம் செய்தாள். ராகவிடம் சென்று அவந்திகாவின் மனநிலை இது தான் என்று விளக்கிவிட்டு அவளுக்குச் சிறிது காலம் அவகாசம் கொடுக்கும்படி கேட்கலாம் என்று ரித்திமாவின் எண்ணம். அதைத் தான் பிரதியுஷா அவனிடம் கேட்டுத் தெளிவு பெற விரும்பினாள்.
ராகவுக்குப் போன் செய்து அழைத்தவள் அவனிடம் பேசவேண்டும் என்று சொல்லவே அவனும் அன்றைக்குச் சென்ற அதே ஹோட்டலுக்கு மாலை வந்துவிடும்படி சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
இது தான் அவன் விரும்பியது! இன்னும் சில மணிநேரங்களில் தான் நினைத்தது நடக்கப் போகிறது என்ற எண்ணமே அவனுக்குச் சந்தோசத்தைக் கொடுக்க வருணிடம் “பய்யா! உங்களுக்குக் கூடியச் சீக்கிரமே ஒரு குட் நியூஸ் வரப்போகுது… அதுக்கு ரெடியா இருங்க” என்று போனில் தெரிவித்துவிட்டு மாலையில் பிரதியுஷாவிடம் என்ன பேசவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


